மீதிக் கதையைக் கேட்க அடுத்த நாள் காலை வழக்கம்போல் அவள் அங்கு வந்து விட, அவளைப் பார்த்த மாத்திரம், "நீ இங்க கிளம்பி வந்துருக்கறத பார்த்தா, நான் நேத்து சொன்னதுக்கு நீ ஒத்துக்கிட்டன்னு எடுத்துக்கலாமா?" என்றுதான் பேச்சையே தொடங்கினான் வல்லரசு.
அதில் நன்றாகத் திணறிப் போனவளாக, "ஐயோ, அத பத்தி எல்லாம் நெனச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உண்மையா நான் அதுக்காக வரல, மின்சார கனவு படத்தோட மீதி கதைய கேட்கத்தான்" என்றாள் ஒப்பிப்பது போல.
அவனுடைய இதழ்கள் கோணலாக வளைய, இயல்பாக தோளைக் குலுக்கியபடி போய் படிக்கட்டில் அமர்ந்தான். இப்படியாக விட்டுவிட்டு, இந்தக் கதை அந்த வாரம் முழுதும் தொடர்ந்தது. கதையின் முடிவு கேட்டு கண்கள் சிவக்க அழுதவளை ஒரு பக்கமாகத் தலை சாய்த்து, உதடு கடித்துச் சிரித்தபடி பார்த்திருந்தான் வல்லரசு.
அவனது அந்தக் கள்ளச் சிரிப்பு அவளைப் பித்தம் கொள்ளச் செய்தாலும், பொய் கோபத்துடன், "இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி சிரிக்கிறீர்களாம்" என்று அவனைச் செல்லமாகக் கடிய, "கதை ஹாப்பி என்டிங்தான, லவ் பண்ணவங்க சேர்ந்துட்டாங்க இல்ல? அப்பறம் என்ன?" என்று கிண்டலாகக் கேட்டான்.