௧௦. வெப்பச்சலன மழை
(உயரம் செல்லச் செல்ல வெப்பநிலை படிப்படியாக குறைவதால் காற்று குளிர்ச்சியடைந்து முகில்கள் உருவாகின்றன. இந்த முகில்கள் பனி விழும் நிலையை அடையும்போது மழைப்பொழிவு உருவாகிறது. இதுவே வெப்பச் சலன மழை எனப்படுகிறது.)
என்னதான் அவனிடம் வீராவேசமாக பேசிவிட்டாலும், இருவரும் இணைந்திருக்கும் அந்த படத்தை எங்கே அவன் யாரிடமாவது பகிர்ந்துவிடுவானோ என்கிற பயம் அவளுக்கு நீண்ட நாட்கள் வரை இருந்தது.
ரஞ்சனியின் திருமணப் புகைப்பட ஆல்பத்தை பார்த்தால் கூட அது அந்த சம்பவத்தை அவளுக்கு நினைவு படுத்த, அதை கையால் தொடுவதைக் கூட வெறுத்தாள்.
காலத்தின் ஓட்டத்தில் மிகவும் போராடி அந்த நினைவுகளை விரட்டி அடித்தாள். மறந்தும் அதை பற்றி நினைப்பதில்லை என்ற நிலையில், இப்பொழுது அவன் மீண்டும் அதை நினைவுபடுத்திவிட்டான்.
வேண்டாம், இனி அவன் தன் வாழக்கையில் வேண்டவே வேண்டாம் என்கிற எண்ணத்துடன் அவனது எண்ணை ப்ளாக் செய்த பிறகுதான் அவளுக்கு நிம்மதியே உண்டானது.
சரியான உறக்கமில்லாமல், இரவில் விழித்து, விடிந்து உறங்கி நடைப்பயிற்சியையும் ஓரிரு தினங்களாகக் கைவிட்டிருந்தாள்.
அன்றும் அதே போல தாமதமாக விழித்ததில் குளித்து, ஏதோ ஒன்றை சமைத்தது சாப்பிட்டுவிட்டு அலுவலகம் கிளம்பிச் செல்லவே நேரம் சரியாக இருந்தது.
மாலை வீடு திரும்பியதும் சுத்தப்படுத்திக்கொண்டு வேறு உடை மாற்றிக்கொண்டு, காஃபியுடன் வந்து கூடை ஊஞ்சலில் அமர்ந்தாள்.
அம்மாவை அழைத்து பேசிவிட்டு, ரஞ்சனியின் எண்ணை அழுத்துவதற்குள் அவளே அழைத்தாள்.
"என்னடி, ரெண்டு மூணு நாளா போனையும் காணும் ஒண்ணையும் காணும். இவளுக வேற வரூ... வரூன்னு என் உயிர எடுக்கறாளுக. இதுக்கு மேல என்னால இவளுகள சமாளிக்க முடியாது" என அவள் படபடவெனப் பொரிய அதற்குள் கைப்பேசியைக் கைப்பறியிருந்தாள் சக்தி.
"போ வரூ! நான் உன் மேல கோவமா இருக்கேன்! உன் பேச்சுக் கா" என அவள் செல்லமாகக் கோபப்பட, மற்ற இருவரும் அவளுடன் கோரஸ் பாடினார்கள்.
அதில் அப்படி ஒரு உவகை உண்டாக, அவளது சஞ்சலங்களெல்லாம் கரைந்து காணாமல் போனது.
"சாரி புஜ்ஜீஸ், வரூக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை அதிகம். உங்களுக்குத்தான் என் வேலை பத்தி தெரியும் இல்ல! நீங்க எம்மேல கோவப்படலாமா பாட்டுகுட்டீஸ்" என செல்லம் கொஞ்சினாள்.
"ம்ம்... ம்ம்..." என அரை மனதாக அவள் சொல்வதை ஏற்றுக்கொண்டனர் குட்டிப்பெண்கள்.
"சரி சொல்லுங்க! இன்னைக்கு ஈவினிங் ஸ்னேக்ஸ் என்ன சாப்டீங்க"
"ம்ம்... பால் கொழுக்கட்டை! சூப்பரா இருந்துச்சு வரூ" என்றாள் ஷிவா.
"ஆவ்... என்னோட பேவரைட்! என்ன விட்டுட்டு நீங்க மட்டும் சாப்டீங்க இல்ல" என முனகினாள் வர்ஷிணி.
"நீ இங்க வா வரூ! அம்மா உனக்கும் செஞ்சு குடுப்பா" என்றாள் ஸ்ரீ.
இப்படியே செல்லக் கொஞ்சல்கள் தொடர, சில நிமிடங்கள் கடந்தது.
"கொஞ்சினது போதும் வங்கடீ! உங்கப்பா வரதுக்குள்ள ஹோம் ஒர்க் எல்லாம் முடிக்கணும்" என விடாப்பிடியாக அவர்களிடமிருந்து கைப்பேசியைப் பிடுங்கி, "பை டீ, உங்க கொஞ்சல் குலாவால் எல்லாத்தையும் நாளைக்கு கன்டின்யூ பண்ணிக்கோ" என அழைப்பைத் துண்டித்தாள் ரஞ்சனி.
வயிறு பசித்து தனக்கும் சிறிது கவனம் கொடுக்க வேண்டிய அவசியத்தை அவளுக்கு நினைவு படுத்த எதையாவது சமைக்கலாமா இல்லை ஆர்டர் செய்து வரவழைக்கலாமா என மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தியவள், தானே செய்துகொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து சமையலறை நோக்கிப் போனாள்.
தொட்டுக்கொள்ள, சித்ரா செய்து கொடுத்திருந்த மாங்காய் தொக்கு இருக்கும் தைரியத்தில், சேமியா உப்புமா செய்யலாம் எனக் காய்களை பொடிபொடியாக நறுக்கி வைத்துவிட்டு, அடுப்பைப் பற்றவைத்து, வாணலியை போட்டாள்.
அழைப்பு மணி ஒலிக்க, 'ப்ச்' என சலித்தபடி அடுப்பை சிம்மில் வைத்துவிட்டுப்போய் கதவைத் திறந்தாள்.
கிருஷ்ணா நின்றிருந்தான்.
அவசரமாக கதவை அடைக்க அவள் எத்தனிக்க, கதவுடன் சேர்த்து அவளையும் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
முதன் முதலாக அவனை சந்தித்த நிகழ்வு நினைவில் வந்து தொலைத்து அவளது கோபத்தை மிகைப்படுத்தியது.
"வேணாம் கிருஷ்ணா, வெளியில போங்க" என்றாள் கொஞ்சமும் யோசிக்காமல்.
"போகலன்னா" என அவனும் விடாக்கொண்டனாக பதில் கேள்வி கேட்டான்.
"செக்யூரிடிய கூப்பிடுவேன்"
"தாராளமா கூப்பிடு"
தெனாவெட்டாக சொல்லிக்கொண்டே போய் வரவேற்பறையில் போடப்பட்டிருந்த திவானில் சட்டமாக அமர்ந்துகொண்டான்.
"கிருஷ்ணா" என பற்களைக் கடித்தாள்.
"ப்ச்... நானும் வந்ததுல இருந்து பார்க்கறேன், கிருஷ்ணா... கிருஷ்ணான்னு, கிருஷ்ணஜபம் ஜெபிச்சிட்டு இருக்க"
"வேணாம் சொல்லிட்டேன்"
"இப்ப நான் உனக்கு என்ன கொடுத்தேன், நீ வேணாம்னு சொல்ல"
கோபத்துடன் அவனை பார்வையால் எரித்தாள்.
“இது என்ன லுக்கு... ஆமா, ஏன் வாக்கிங் வரல, உடம்பு எதுவும் சரியில்லையா?"
"அத பத்தி உங்களுக்கு என்ன?"
"ரைட்டு... உன்ன பத்தி நான் எதுக்கு கவல படணும்? அத விடு, என்ன பத்தி ஒரு கேள்வி கேக்கறேன், அதுக்கு பதில் சொல்லு" என்றபடி அவளை ஏறிட, அவளது கண்களில் கேள்விக்குறி தென்பட்டது.
“ம்ம்… எம்மேல உனக்கு என்ன கோவம்?"
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல! நான் ஏன் உங்க மேல கோவப் படணும்"
"ரைட்டு, அப்பறம் ஏன், என் மெசேஜஸ் எதையும் பாக்கல அன்ட் கால் பண்ணாலும் எடுக்கல"
பதிலின்றி திகைத்தாள் வர்ஷிணி.
"என்னோட நம்பர பிளாக் பண்ணிட்டதான"
அடுப்பில் வாணலி காய்வது நினைவில் வந்து, "ஓ மை காட், கிருஷ்ணா! உங்க எந்த கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல! முதல்ல இங்க இருந்து கிளம்புங்க, எனக்கு கிச்சன்ல வேல இருக்கு" என்றபடி சமையலறை நோக்கிப் போனாள்.
பின்னோடே வந்தவனின் பார்வையில், மேடை மேல் அவள் நறுக்கி வைத்திருந்த காய்கறிகளும் சேமியா பாக்கெட்டும் பட்டது.
"உப்புமாவா செய்யப்போற" எனக்கேட்டான் ஒரு மாதிரியான குரலில்.
"கிருஷ்ணா" என அவள் அதட்ட, கண்கள் மூடி, உதட்டை அசைத்து முணுமுணுத்தபடி கையை தூக்கி ஜெப மாலையை உருட்டுவது போல அவன் பாவலா செய்ய, சட்டென மூண்ட சிரிப்பை வலுக்கட்டாயமாக அடக்கினாள்.
ஆனால் அவளது இதழ்களின் துடிப்பில் அவளது பாசாங்கு அவனுக்கு புரிந்துபோனது.
"செய்யறதுதான் செய்யற, அப்படியே எனக்கும் சேர்த்து செஞ்சிடு, ரொம்ப பசிக்குது. ஆமாம், தொட்டுக்க என்ன செய்யப் போற! ரஞ்சனி அண்ணி காரசாரமா ஒரு பூண்டு சட்டினி செய்வாங்க இல்ல, அத செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும்"
அவன் ரசித்து சொல்லவும், மறுபடியும் 'கிருஷ்ணா' என அழைக்க வந்து, அதை அப்படியே விழுங்கி, "ஐயோ, நான் பாட்டுக்கு, நான் உண்டு என் வேலை உண்டுன்னு நிம்மதியா இருக்கேன். ஏன் இங்க வந்து என்ன டார்ச்சர் பண்றீங்க?" என்றாள் கெஞ்சலாக.
"ப்ச்... உனக்கு என்னதான் பிரச்சன வாரூ! என்ன ஏன் பிளாக் பண்ண? மொதல்ல அதுக்கு பதில் சொல்லு" என மறுபடியும் அங்கேயே வந்தான்.
"ஐயோ, வரூன்னு கூபிடதீங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல"
"அப்படித்தான் கூப்பிடுவேன், எனக்கு அதுதான் ஈஸியா இருக்குன்னு நானும் அன்னைக்கே பதில் சொல்லிட்டேன் இல்ல? அத விடு, என்ன ஏன் பிளாக் பண்ண, அதுக்கு பதில் சொல்லு"
"ஆமாம், தெரியாமத்தான் கேக்கறேன், என்ன பத்தி நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நீங்க நினைச்சா வருவீங்க, நினைச்சா போவீங்க! நீங்க வருவீங்க, வருவீங்கன்னு நான் உங்களுக்காக காத்துட்டு இருக்கணுமா? உங்க போதைக்கு நான் ஊறுகாயா?" என படபடவென பொறித்தாள்.
"ஆங்... அத சொல்லு! ஸோ... நான் சொன்ன மாதிரி, உன்ன வந்து பாக்கல, அதான உனக்கு கோவம்" என தணிவாகவே கேட்டான்.
"ப்ச்... நீங்க வந்தா என்ன, இல்ல வராம போனா எனக்கென்ன! அக்கா கல்யாணத்தப்ப நடந்த எதையும் நான் மறக்கல! ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் வந்திருக்கீங்களே, முகத்த திருப்பிட்டு போகக் கூடாதேன்னு, உங்க கிட்ட சுமுகமா பேசினேன். அதனால ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க, ஓகே" என்றாள் கறாராக.
அவனது முகம் பேய் அறைந்தார்போன்று ஆனது.
"வாட், அதெல்லாம் உனக்கு நியாபகம் இருக்கா? ஆனா, சென்னைல என்ன பார்த்தப்ப நீ பெருசா ஒண்ணும் காமிச்சுக்கலையே! மறுபடியும் இங்க பார்க்ல மீட் பண்ணப்ப கூட எதுவும் ரியாக்ட் பண்ணலையே" எனக் கேட்டான் குழப்பமாக.
"நான் ரியாக்ட் பண்ணலன்னா, எல்லாத்தையும் மறந்துட்டேன்னு அர்த்தமா" என பதில் கேள்வி கேட்டாள்.
முகம் முழுவதும் ஒரு வியந்த பாவத்தை தேக்கி அவளை ஆழ்ந்து நோக்கினான்.
"என்ன?" என புருவத்தை உயர்த்தினாள்.
சட்டென தலையை குலுக்கி தன்னை மீட்டுக் கொண்டவன், "சாரி, என் பிரெண்ட் வர்கீஸ் தெரியும் இல்ல"
அவன் கேட்டுக்கும் போதே, 'தெரியாது' என தலை அசைத்தாள்.
"ஆமாம், என் பிரெண்ட உனக்கு எப்படி தெரியும்" என்று சமாளித்து, "அவன் கொஞ்சம் சொதப்பிட்டான், அதான் நான் சொன்ன படி என்னால உன்ன வந்து பாக்க முடியல, என் கழுத்துல பெல்ட் போடாத கொறையா கட்டி மாஸ்க்கோக்கு இழுத்துட்டு போயிட்டான்" என நீண்ட விளக்கத்தை கொடுத்தவன், "இரு, இதோ வரேன்" என வெளியில் சென்று, உடனே திரும்ப வந்தான்.
அவனது கையில் சில காகிதப் பைகள் இருந்தன.
"இதையெல்லாம் உனக்காக வாங்கிட்டு வந்தேன், வேல்டு பேமஸ் காஃபி பவுடர் அன்ட் பியூர் கோகோ சாக்லேட்ஸ்" என்றபடி அவளிடம் நீட்டினான்.
"இதையெல்லாம் எனக்கு எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க? எடுத்துட்டு போய் நம்ம புஜ்ஜீஸ்க்கு குடுங்க" என்றாள் பிகுவுடன்.
'போடி சர்தான், நீ சொல்லலன்னா எனக்கு தெரியாது பாரு' என மனதிற்குள்ளேயே அவளை கடித்துவைத்தவன், "அவங்களுக்கு வாங்காம உனக்கு மட்டும் வாங்கிட்டு வருவானா! ஓவர் ஸீன் போடாம வாங்கிக்கோ சரியா! சாரி கேட்டதுக்கு அப்பறம் இவ்வளவு ஆட்டிட்யூட் காமிக்கக் கூடாது, நாம சமாதானமா போயிடலாம்" என்றான் குழைவாக.
அதற்கு மேலும் கோபத்தை இழுத்துப் பிடிக்க இயலாமல், அவன் கொடுத்ததை வாங்கி பிரிட்ஜில் அடுக்கிவைத்துவிட்டு வந்து, உப்புமாவுக்கு தாளிக்க வாணலியில் எண்ணையை ஊற்றினாள்.
"எனக்கும் சேர்த்துதான செய்யப்போற?" எனக் கொஞ்சம் கூட சங்கோஜப் படாமல் கேட்டான்.
'ஐய' என்பதாக வர்ஷிணி அவனை விஷமப் பார்வை பார்த்துவைக்க, "ஓய், அன்னைக்கு நீதான ஷேர் பண்ணி சாப்பிடலாம் வான்னு கூப்ட? அன்னைக்கு முடியல, ஆனாலும் நான் சொன்ன மாதிரி உன் கையால சாப்பிட இன்னைக்கு வந்திருக்கேன்" என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.
"ஷ்... அப்பா" என அவள் கண்களை உருட்டி பெருமூச்சு விட, அவளது அந்த பாவனையில் சொக்கித்தான் போனான்.
"நீ இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட" என அவளை தாண்டிச் சென்றவன், உப்புமாவுக்கு தாளிக்கத் தொடங்கினான்.
"ஐய... என்ன செய்யறீங்க நீங்க" என அவள் பதறவும், "தெரியல, உப்புமாதான். நான் இத ரெடி செய்யறதுக்குள்ள பூண்ட உறிச்சி வை, சட்னி செஞ்சிடலாம்" என அவளை விரட்டினான்.
'இவன் என்ன இப்படி நம்மள வெச்சி காமடி பண்ணிட்டு இருக்கான்' என விழித்தவள், "எல்லாம் என் நேரம்" என்று கடுப்படித்தபடி புளியை ஊற வைத்துவிட்டு, பூண்டை தோலுரித்து எடுத்து வைத்தாள்.
அவளை அடுப்பின் அருகிலேயே வரவிடாமல் தானே சட்டினியையும் செய்து முடித்தான்.
கமகமவென கமழ்ந்த சட்டினியின் மணம் பசியை மிகைப்படுத்த, இரண்டு தட்டை எடுத்து அதில் உப்புமாவையும் சட்டினியையும் பரிமாறி, ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு திவானில் வந்து அமர்ந்தாள்.
அவன் வந்து அருகில் உட்கார்ந்ததைக் கூட கவனிக்காத பாவத்தில் கொதிக்க கொதிக்க இருந்த உப்புமாவை சட்டினியில் தொட்டு ஊதி ஊதி வாயில் போட்டுவிட்டு, "வாவ், செம்ம டேஸ்ட்" என்றாள் சுவையில் கரைந்து.
"பிடிச்சிருக்கா?"
"ம்ம்... ரொம்ப?"
"நான் என்ன கேட்டேன்"
"நான் உப்புமாவையும் சட்டினியையும்தான் சொன்னேன்"
அவளது பதிலில் பக்கென சிரித்து, "ஸோ சேட்" என்றான் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு.
அதில் அவளுக்குமே சிரிப்பு வந்துவிட, கலகலவென சிரித்தாள்.
"ஓய் சிடுமூஞ்சி அமிர்தவர்ஷிணி... நீ இப்படி சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்க, அதனால எப்பவுமே இதே மாதிரி சிரிச்சிட்டே இரு" என்றான் கிருஷ்ணா அவளது மலர்ந்த சிரிப்பில் தன்னைத் தொலைத்து.
"இப்படியே சிரிச்சிட்டே இருந்தா, ஊர்ல வேற பேர் சொல்லுவாங்க" என அவள் உதட்டை சுழிக்க, அவனுக்கு மூச்சடைத்துப் போனது.
அப்படியே அவளை தன்னருகில் கொண்டுவந்து, சுழித்த அந்த இதழ்களை சிறைபிடிக்கச் சொல்லி குபுகுபுவென உள்ளிருந்து பொங்கிய உணர்வை கட்டுப்படுத்த இயலாமல், வேகமாக எழுத்துப்போய், டீப்பாயின் மீது கண்ணாடி ஜாடியில் அவள் நிரப்பி வைத்திருந்த தண்ணீரைப் பருகினான்.
"சட்டினி கொஞ்சம் காரமா இருக்கில்ல" எனக் கேட்டுக்கொண்டே அவள் மும்முரமாக சாப்பிட, தன் நிலையை எண்ணி நொந்தபடி அமைதியாகிப் போனான் கிருஷ்ணா.
அவனது மவுனம் அவளை தொல்லை செய்தாலும் அதற்கான காரணத்தைக் கேட்டு தெரிந்துகொள்ள அவள் முற்படவில்லை.
சாப்பிட்டு முடித்த நொடி, "கொஞ்சம் வேல இருக்கு. நான் கிளம்பறேன். மொதல்ல என் நம்பரை அன்பிளாக் பண்ணு. நாளைக்கு மார்னிங் பார்க்ல உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன், வந்து சேரு" என அழுத்திச் சொல்லிவிட்டு அங்கிருந்தே ஓடியே போனான்.
என்னதான் அவன் மீது கோபம் கொண்டாலும், அவன் நீங்கிய நொடி அவள் மனதில் சூழும் வெறுமையை விரட்டியடிக்கவே இயலவில்லை வர்ஷிணியால்.
அதே போல அவன் சொன்னது சொன்னபடி செய்து முடிக்க அவள் தயாராவே இல்லை.
அவனுடைய எண்ணை அன்பிளாக் செய்யவும் இல்லை, காலை நடை பயிற்சிக்காக என்று கூட பூங்காவின் பக்கம் செல்லவும் இல்லை. ஆனால் அவன் வாங்கிவந்த சாக்லேட்டை மட்டும் சாப்பிடாமல் ஒதுக்க அவளால் இயலவில்லை.
மாலை நேரமானால், அவன் நேரில் வருவானோ என்கிற எதிர்பார்ப்பு மட்டும் அவளை விட்டு விலகவில்லை.
எதிர்பார்த்து ஏமாந்துபோய் கழிவிரக்கத்தில் கரைவதையும் அவள் விட்டுத்தொலைத்தபாடில்லை.
இப்படியே மூன்று தினங்கள் கடந்துபோனது.
அன்று ஒரு திங்கள் கிழமை.
மாலை அலுவலகத்திலிருந்து வந்து குளித்து உடைமாற்றி, அவன் வாங்கிவந்திருந்த காஃபிப்பொடியில் தயாரித்த காஃபி கலந்துவந்து தொலைக்காட்சி முன் அமர்ந்தாள்.
வீட்டிற்கு அழைத்து அம்மாவிடம் பேசக்கூட மனமில்லாமல் சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தாள்.
அழைப்பு மணி ஒலித்தது.
'அவனாக இருக்குமோ?' என ஒரு மனம் பரபரப்பப்படைய, 'அவனில்லை, வரமாட்டன், நம்பாதே' என மற்றொரு மனம் தருமியாக மாறி புலம்பித்தீர்த்தது.
சிந்தனையின் போக்கில் அவள் அப்படியே உறைந்து உட்கார்ந்திருக்க, பொறுமை இழந்து அழைப்புமணி தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கவும், 'ஐயையோ, அந்த குட்டி பிசாசு மட்டும்தான இப்படி செய்யும்' என்கிற வியப்புடன் வேகமாக வந்து கதவைத் திறந்தாள்.
ஸ்ரீ, சக்தி, ஷிவா மூன்று தளிர்களும் அவள் வீட்டு வாயிலை நிறைத்திருந்தன.
கூட வேறு யாரும் இல்லாமல் போக, "ஹேய்... யாருடி உங்கள கூட்டிட்டு வந்தாங்க?" என கூவியபடி அவள் சக்தியை அள்ளிக்கொள்ள, "கிஷ்ணா சித்தா" என்றபடி அவள்மீது தாவினாள் ஸ்ரீ.
"நானு" என அவளது உடையை பிடித்து இழுத்தாள் ஷிவா.
"ஏய்... விட்டா என்ன குட்டிக்கரணம் அடிக்க வெச்சுடுவீங்க" என செல்லமாய் சலித்தப்படி அவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு வந்தவள், "எங்கடி உங்க சித்தப்பன்? எப்படிடி ஒரே ஆளா உங்க மூணு பேரையும் மேய்ச்சு இங்க கூட்டிட்டு வந்தான்?" என வியப்புடன் கேள்வி கேட்டாள்.
அவள் பேசியதை கேட்டுக்கொண்டே, ஒரு முறைப்புடன் உள்ளே நுழைந்தான் கிருஷ்ணா.
"இதோ சித்தா" என கத்தியபடி அவனை நோக்கி ஓடினாள் சக்தி.
அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி அப்படியே அவன் தன் தோளில் போட்டுக்கொள்ள, வியந்து அவனைப் பார்த்தபடி சிலையாகி நின்றாள் வர்ஷிணி.
Comments