top of page
Writer's pictureKrishnapriya Narayan

Aalangatti Mazhai - 13

௧௩. பெயல்


பிள்ளைகள் விழித்து விட்ட பிறகு, கிருஷ்ணா, வர்ஷிணி இரண்டு பேருக்குமே அவர்களுடனேயே நேரம் சரியாக இருந்தது. பல் துலக்க வைத்து, பால் ஆற்றிக் கொடுத்து, அவர்கள் காலைக்கடன்களைக் கழிக்க உதவி செய்து, அவர்களைக் குளிக்க வைத்து இப்படியே போனது.


இதற்கு நடுவில் காலை உணவையும் தயாரித்து அவர்களைச் சாப்பிட வைத்தாகிவிட்டது. அதற்கு மேல் வேறு எதற்கும் நேரமில்லை. அன்று அலுவலகத்தில் முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கவே, நான்குபேருமாக எதையோ செய்துகொள்ளுங்கள் என, நேராகக் கிளம்பி வந்துவிட்டாள். அவளுடைய டீம் ஹெட் சரோஜாவை நேரில் பார்த்து, இரண்டு நாள் விடுப்பு எடுக்கப் போவதைப் பற்றிச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் வேலையில் குளறுபடியாகும், கோபித்துக் கொள்வார்.


அங்கே வந்த பிறகும் கூட கிருஷ்ணாவைப் பற்றிய நினைவுகள் உன்னை விட்டேனா என்றது! ‘அப்பப்பா என்னென்ன செய்கிறான்! பதில் பேச இயலாத அளவுக்கு எப்படி எப்படியெல்லாம் நைச்சியமாகப் பேசுகிறான்! பெயருக்கேற்ற மாதிரியே சரியான ஜாலக்காரன்! அவனை நன்றாக ஒரு கை பார்க்கலாம் என்றாலும் இந்தப் பிள்ளைகள் வேறு குறுக்கப் பாய்ந்து இவளை முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள்! அப்படி என்ன ஊரில் இல்லாத அதிசய சித்தப்பனைக் கண்டார்களோ!’


அவனைப் பற்றி நினைத்துக்கொண்டே இருக்கையில், ‘ஒரு வேளை, தன்னை சுலபமாக அணுக ஒரு கருவியாகத்தான் இந்தப் பிள்ளைகளை, வேண்டுமென்றே இங்கே அழைத்து வந்திருக்கிறானோ?!’ என்ற கேள்வி திட்டுமெனத் தோன்ற, ஒரு நொடி அவளது உடல் அதிர்ந்தது.


அதற்குள் அலுவலக தொலைப்பேசி ஒலித்து அவளுடைய யோசனையைக் கலைத்தது. எடுத்து காதில் வைக்க, "ஃப்ரீயா இருந்தா கொஞ்சம் என்னோட கோபினுக்கு வா, முக்கியமா பேசணும்" என சரோஜா அவளைக் கூப்பிட்டார்.


தனது கணினியை ஸ்லீப்பில் போட்டுவிட்டு அவருடைய பிரத்தியேக அறைக்குச் சென்றாள்.


அவளைப் பார்த்த உடனேயே, "ஏம்மா அந்த சர்வர் மேனேஜ்மென்ட் பிரோக்ராம முடிச்சு ரன் பண்ணிட்டியா இல்லையா, இன்னும் ஏன் அனுப்பலன்னு செந்தமிழ் சிடுசிடுக்கறாரு” எனக்கேட்டார் காரமாக.


அவர் இப்படிச் சொன்ன விதம் எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றினாலும், “இப்பதான் மேம் உங்களுக்கு அனுப்பினேன், நீங்க இன்னும் பார்க்கலன்னு நினைக்கறேன்” என்றாள் பொறுமையாகவே.


உடனே தனது கணினியை இயக்கி அவள் அனுப்பியதைச் சரி பார்த்தவர், “வெல் டன், பர்ஃபெக்ட்” என அவளைத் தட்டிக்கொடுக்கவும் செய்தார்.


அதில் முகம் மலர்ந்தவள், “மேம், இன்னும் டூ டேஸ்க்கு எனக்கு எந்த வேலையும் அசைன் பண்ணாதீங்க, நான் லீவ் அப்ளை பண்ணியிருக்கேன்” என்றாள்.


“நினைச்சேன்”


“என்ன மேம்”


“இல்ல, காலைல உன் வீடே கலகலத்துதே”


“ஹா… ஹா… உங்க வீடு வரைக்கும் சத்தம் கேட்டுச்சா”


“ம்… மூணு குட்டிங்க இல்ல, கேட்காம இருக்குமா? உன் அம்மா அப்பா வந்திருக்கற மாதிரி தெரியலியே! அக்கா மாமா மட்டும் வந்திருக்காங்களோ!”


அவர் தேவையில்லாமல் வம்பு பேசும் இரகமில்லை என்பதால், "இல்ல மேம், யாரும் வரல, அவங்க சித்தப்பாதான் அவங்கள கூட்டிட்டு வந்திருக்காரு!” என எதார்த்தமாகப் பதில் சொன்னாள் வர்ஷிணி.


அவள் சொன்ன விஷயத்தை வேறு விதமாகப் புரிந்துகொண்டு, “என்னாது சித்தப்பாவா! இது எப்ப நடந்துது… நீ என்கிட்டக் கூட சொல்லவே இல்ல” என வியப்பு மேலிடக் கேட்டுவிட்டார் சரோஜா.


“அய்யய்யோ மேம், நீங்க வேற! அவங்க சித்தப்பான்னா எங்க அத்தானோட தம்பி! அதுமட்டும் இல்ல, அவர் நம்ம செந்தமிழ் சாரோட கிளாஸ் மெட். அவங்க வீட்டுலதான் ஸ்டே பண்ணியிருக்கார்” எனப் பதறி விளக்கம் கொடுத்தாள். மேற்கொண்டு அவர் எந்தக் கேள்வியும் கேட்டுத் தோண்டித் துருவக் கூடாதல்லவா?


“என்ன டென்ஷன் பண்ணிட்ட போ! நீ இத மொதல்லையே தெளிவா சொல்லியிருக்கலாம்!” என்றார் காற்று போன பலூனாக!


“மேம், குட்டிங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும். எனக்கும் நிறைய லீவ் இருக்கு, அதான் அவைல் பண்ணிக்கலாம்னு! இனி எந்த வேலையா இருந்தாலும் நெக்ஸ்ட் வீக் மிட்லதான்” என்று அவள் விஷயத்துக்கு வரவும், “சரி எஞ்சாய் பண்ணு” என அவரும் முடித்துக் கொண்டார்.


மிச்சச் சொச்ச வேலைகளையும் முடித்துக் கொண்டு அவள் வீடு திரும்பும்போது, மணி ஆறைக் கடந்திருந்தது.


பிள்ளைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருப்பார்கள், தன்னைப் பார்த்ததும் ஆர்ப்பரித்து ஓடி வந்து கட்டிக்கொள்வார்கள் என எதிர்பார்த்து வந்திருக்க, அப்படி எதுவும் நடக்கவில்லை.


வீட்டின் கதவு மூடியே கிடக்க, உள்ளுக்குள்ளே பிள்ளைகள் இருப்பதற்கான அடையாளமே இல்லை, ஒரே அமைதியோ அமைதி!


யோசனையுடன் வந்து கதவில் கை வைக்க, அப்படியே திறந்து கொண்டது. மின்விளக்குள் போடப்படாமல், வீட்டின் உள்ளே இருள் சூழ்ந்திருக்க, வீட்டைக் கூட பூட்டாமல் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு எங்கே போய் தொலைந்தான் இந்த கிருஷ்ணா என எரிச்சல் மூள, அவள் உள்ளே நுழையவும், அவர்கள் வீட்டு முகப்பறை அப்படியே பிரகாசமாக ஒளிர்ந்தது. திடீரென சூழ்ந்த வெளிச்சத்தில் கண்கள் கூச, அவளுடைய இமைகள் அழுத்தமாக மூடிக்கொண்டன.


அதே நொடி, “ஹாப்பி பர்த்டே வரூ” என பிள்ளைகள் மூவரும் ஒரே குரலில் ஆர்ப்பரித்தனர். மனம் முழுவதும் மகிழ்ச்சி மழையாகப் பொழிய, அவளது உடல் சிலிர்த்துப் போனது.


விழிகளைத் திறந்து பார்த்தாள். அங்கிருந்த தேநீர் மேசை முழுவதும் பரப்பிவைக்கப்பட்டிருந்த ரோஜா இதழ்களுக்கு நடுவில் இருந்த கேக்கை கண்டதும்தான், அன்று தனது பிறந்தநாள் என்பதே அவளுக்கு நினைவுக்கு வந்தது.


மனதிற்குள் மகிழ்ச்சி ஊற்றாகக் கொப்பளித்தது. வேகமாக அருகில் வந்து பார்த்தாள்.


அந்த கேக்கின் மேல் நீல நிற உடையில் ‘எல்சா’ சிரித்துக் கொண்டிருந்தாள். ஆங்காங்கே வெள்ளி போன்ற மணிகள் மின்ன, பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. கூடவே ‘ஹாப்பி பரத் டே டியர் வரூ’ என்று எழுதப் பட்டிருக்க, விழிகளில் நீர் தளும்பியது வர்ஷிணிக்கு.


கேக், நிச்சயமாக குட்டிகளின் தேர்வாகத்தான் இருக்கவேண்டும், அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதில் எழுதப் பட்டிருந்த வாசகம், அவளைச் சஞ்சலப் படுத்தியது. அந்த ‘டியர்’ என்கிற அன்பின் அடைமொழி யாருடையது, யாருக்கானது?


அதற்கு மேல் அதிகம் சிந்திக்க விடாமல், “வா வரூ, வந்து கேக்க கட் பண்ணு” என சக்தி கத்த, அதற்குள் அந்த கேக்கை அழகு படுத்த ஆங்காங்கே சொருகி வைக்கப்பட்டிருந்த சாகலேட் செதில்களில் ஒன்றிரண்டைப் பிடுங்கியிருந்தாள் ஷிவா. அதன் ஓரங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த செர்ரிப் பழங்களைப் பார்த்துச் சப்புக் கொட்டியபடி குதித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.


அதற்குமேல் பிள்ளைகளை வைத்துத் தாக்குப் பிடிக்க இயலாது என்பதால், “ஹாப்பி பர்த்டே வரூ, இந்தா கேக்க கட் பண்ணு” என மரத்தால் ஆன கத்தியை அவளிடம் நீட்டினான் கிருஷ்ணா.


பிள்ளைகள் அவளைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் ‘ஹாப்பி பரத் டே டூ யூ’ பாட. அவனிடமிருந்து கத்தியை வாங்கி அந்தத் தேநீர் மேசை அருகில் பிள்ளைகளின் உயரத்துக்கு மண்டியிட்டபடி கேக்கை வெட்டினாள். அதைக் கைப்பேசியில் காணொலியாக பதிவுசெய்தவாறு, அந்த அழகிய காட்சியைப் புன்னகையுடன் இரசித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.


அவள் கேக்கை வெட்டியதும், தாய்ப் பறவை உணவைப் புகட்டும் நேரத்தில் குஞ்சுப் பறவைகள் செய்வதைப் போல, ‘எனக்குதான் பாரஸ்ட்’ என்று தனக்கு ஊட்டச் சொல்லி ஒரே நேரத்தில் மூவரும் வாய் திறக்க, ஒருத்தியை விட்டு மற்றவளுக்கு எப்படிக் கொடுப்பது என ஒரு நொடி தயங்கினாள்.


சட்டென உதித்த யோசனையில், கேக்கை முக்கோண வடிவில் ஒரு பெரிய துண்டாக வெட்டி எடுத்து, “மூணு பேருக்குமே பர்ஸ்ட், ஓகே. ஆளுக்கு ஒரு எட்ஜ், எங்க ஸ்டார்ட்” என அவர்களது வாய்க்கு அருகில் நீட்டினாள்.


ஆளுக்கு ஒரு பக்கமாகக் கடித்து இழுத்து, கீழே கொஞ்சம் மேலே கொஞ்சம் சிந்தி, அதிலிருந்த கிரீமை முகம் முழுவதும் அப்பிக்கொண்டு, கேக்குகுடன் சேர்த்து வர்ஷிணியின் விரலையும் கடித்து, அவளை அலற வைத்துத்தான் விட்டனர் மூவரும்.


“ஹேய், பார்த்து” என்றபடி ஓடி வந்த கிருஷ்ணா கையைப் பற்றி அவளுடைய விரல்களை ஆராய, “ஒண்ணும் இல்ல” என்று தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள்.


வலி தாங்காமல் வீலென அவள் அலறியதில் திகைத்து நின்ற பிள்ளைகள் தங்களை மீட்டுக்கொண்டு இயல்புக்குத் திரும்பிவிட, “சித்துக்கு கேக் குடு வரூ” என ஆரம்பித்தாள் ஸ்ரீ.


வழக்கம் போல சக்தி கேள்வியுடன் அவனது முகத்தைப் பார்த்தபடி அமைதியாகிவிட, ‘அய்யயோ, இந்தக் குட்டிப் பிசாசு, கேக்க அவனுக்கு ஊட்டுன்னு இழுத்துவிடக் கூடாதே’ என வர்ஷிணி உள்ளுக்குள்ளே பதைக்க, ‘சித்துக்கு கேக்க ஊட்டு வரூன்னு சொல்லுடி என் செல்லக் குட்டி’ என அதற்கு நேர்மாறாக எண்ணிக் காத்திருந்தான் கிருஷ்ணா!


அவன் சட்டையைப் பிடித்து இழுத்து மண்டியிட வைத்தவள்,

தானே கேக்கை எடுத்து அவனுக்கு ஊட்டிவிட, அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘ஷ் அப்பா’ என்பதாக அவள் நிம்மதிப் பெருமூச்சு விடவும், அதைக் கண்டுகொண்டவனின் ஏமாற்றம் இரட்டிப்பாகிப்போனது.


கூடவே, அவனது காதருகில், “சித்து, கிஃப்ட்” என அவள் ரகசியம் பேசியது வர்ஷிணிக்கு கேட்டுவிட, பக்கெனச் சிரித்துவைத்தாள்.


தானும் அவளுடன் சேர்ந்து சிரித்தபடி, “ரூம் குள்ள வெச்சிருக்கேன், நீயே போய் எடுத்துட்டு வா” எனக் குட்டியைப் போலவே இரகசியத்தை அவன் உரக்கச் சொல்லவும், அவள் மேலும் சிரித்துவைக்க, காரணம் புரியாமல் போனாலும், தாங்களும் உடன் சேர்ந்து சிரித்தன பிள்ளைகள்.


குடுகுடுவென ஓடிப் போய் சக்தி ஒரு பரிசுப் பொட்டலத்தை எடுத்துவந்து கிருஷ்ணாவிடம் நீட்டினாள்.


அதை வாங்கி நேரடியாக அவளிடம் கொடுக்கக் கூட துணிச்சல் இல்லை அவனுக்கு. “ரஞ்சனி அண்ணி குடுத்து விட்டிருக்காங்க” என்று முன்னெச்சரிக்கையுடன் சொல்லிவிட்டு, “உங்க வரூக்கு நீங்களே குடுங்க புஜ்ஜீஸ்” என அவன் பிள்ளைகளிடம் சொல்ல, அவனுடைய குரலில் உண்டாகியிருந்த ஒருவித மாறுபாட்டை உணர்ந்தாள் வர்ஷிணி.


பிள்ளைகளோ, அவனுடைய பேச்சை மறுக்காமல் அந்தப் பரிசை அவளிடம் கொடுத்துவிட்டு, “சீக்கிரம் ஓப்பன் பண்ணு வரூ” என்று பரபரக்க, அதைப்பற்றி அதிகம் சிந்திக்க அவளுக்கு அவகாசம் இல்லாமல் போனது.


அவளுக்குமே உள்ளே இருப்பதைப் பார்க்க அதீத ஆர்வம் உண்டாகியிருக்க அதை வேகமாகப் பிரித்தாள்.


மஞ்சள் நிறத்தில் பச்சை கரையிட்ட பட்டுப்புடவையும் கூடவே ஒரு சிறிய நகைப் பெட்டியும் இருந்தது. புடவையைப் பார்த்ததுமே மனம் சற்று துணுக்குற, அந்த நகைப் பெட்டியைத் திறந்தாள். அதிலிருந்த, முத்துக்கள் கோர்க்கப்பட்ட வெள்ளைக்கல் பதித்த ஒரு ஜோடி பெரிய ஜிமிக்கியைப் பார்த்ததும் உள்ளுக்குள்ளே திகில் பரவியது.


ரஞ்சனி இவற்றை வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை! ரஞ்சனி மட்டுமில்லை வேறு யாரும் கூட இவற்றை வாங்கியிருக்க இயலாது!


இவையிரண்டும் அவளது இரசனைப் பட்டியலில் முதன்மையாக இடம்பிடித்திருப்பவை. திருமணம் என்று வரும்போது, தனக்காக வாங்கிக்கொள்ள வேண்டும் என மனதிற்குள்ளேயே பொத்தி வைத்திருக்கும் ஆசைப் புதையலின் ஓர் அங்கம். இதுவரை யாரிடமும் பகிரப்படாத அந்தரங்கத்தின் அத்தாட்சி! தன் மனப்பேழையின் பூட்டுடைத்து தானே சொன்னாலொழிய, யாரொருவராலும் காட்சிப்படுத்த முடியாத கனமான கற்பனை!


யோசனையுடன் கிருஷ்ணாவை ஏறிட்டாள். அவனது முகத்தில் படர்ந்திருந்த பரிதவிப்பு அவளைக் குழப்ப, மூளைக்குள்ளே மிக்ஸி ஓடும் சத்தம் கேட்டது. கட்டுப்பாட்டை இழந்து அவளுடைய கையிலிருந்த புடவை நழுவி கீழே விழுந்தது. அதில் குட்டி குட்டியாக நெய்யப்பட்டிருந்த தங்க நிற அன்னப்பறவைகள் உயிர்பெற்று அவளது தலையைச் சுற்றிப் பறக்கத் தொடங்குவது போன்ற பிரமை உண்டாக, அப்படியே மயங்கிச் சரிந்தாள்.


அப்படியே அவளைத் தன் மடியில் தாங்கியபடி “உன்ன சந்தோஷப் படுத்தத்தான் இதையெல்லாம் செஞ்சேன்! நான் இத செஞ்சா அது உன்ன இப்படி பாதிக்கும்னு தெரியும்! ஆனா எனக்கு வேற ஆப்ஷனே இல்ல, ஐம் சாரிடி அராத்து” என முணுமுணுத்தான் கிருஷ்ணா வேதனையுடன்!


அவனுடைய தீண்டல் செய்த மாயமோ, குரல் செய்த மந்திரமோ ஏதோ ஒன்று அவளது ஆழ்மன ஆழியில் அதிர்வலைகளை உண்டாக்க, “கே.கே” என முனகினாள் அவனுடைய அராத்து!


பிள்ளைகள் மூவரும் அவர்களை மிரட்சியுடன் பார்த்துகொண்டு நின்றனர்.


என் கதைக்கான Updates உடனுக்குடன் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் எனது பிரத்தியேக முகநூல் குழுவில் இணையலாம்.


link


1 comment

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jun 11
Rated 5 out of 5 stars.

Nice

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page