top of page

Anbenum Idhazhgal Malarattume! 1

Updated: Mar 28, 2023

அணிமா 1


அன்றாயர் குலக்கொடி யோடு


அணிமாமலர்மங்கையொடு அன்பளாவி அவுணர்க்கு


என்றானும் இரக்கம் இலாதவனுக்கு


உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்


நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை


தடந்திகழ் கோவல் நகர்


நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்


மாமலையாவது நீர்மலையே.


திருமங்கை ஆழ்வாரால் பாடல்பெற்ற திருத்தலமாகிய திருநீர்மலையில், கோவில் அமைந்திருந்த திக்கை நோக்கி கரம் குவித்து, அந்தப் பாசுரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தார் சுசீலா மாமி.


"கிளம்ப மனசே வரல இல்ல மாமி, ம்ப்ச்! ஆனா இப்பவே கிளம்பினாதான் இங்க பெருமாளை சேவிச்ச மாதிரி மத்த எல்லா கோவில்லையும் சேவிக்க முடியும் இல்ல.. ம்!" என்ற அவரது தோழி ராஜி மாமியின் கருத்தை கவர்ந்த்து அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த திரைப்பட படப்பிடிப்பு குழுவினரின் வாகனங்கள்.


உடனே ஈ என்று எல்லாப் பற்களும் தெரியும்படி சிரித்தவாறே அவர், "அட மாமீஈஈஈ, இங்க பாருங்களேன், ஏதோ சினிமா ஷூட்டிங் நடக்கற்து போலிருக்கே!" என அதிசயிக்கவும்,


"என்னடி ஷூட்டிங் பாக்கணும்கற மாதிரி இழுக்கற, டீ ராஜி! இப்ப கிளம்பினாதான் இன்னும் சித்த நேரத்துல திருமழிசை போய்ச் சேர முடியும். பேசாம கிளம்பற வழியைப் பாரு!" என்று சொல்லிக்கொண்டே சுசீலா மாமி நடக்கத் தொடங்க, சர்ர்ர்ர்... என வேகமாக வந்த பைக் ஒன்று அவரை இடிப்பது போல் உரசியவாறு நின்றது.


அதில் பயந்துபோனவர், தலைக்கவசம் அணிந்திருந்த அந்த பைக்கை ஓட்டிவந்தவனைப் பார்த்து, "அடக் கடன்காரா, உனக்குக் கண்ணு மண்ணே தெரியலையா? இப்படியா வண்டியை ஓட்டிண்டு வருவ? உனக்கு அறிவு இல்ல?" என திட்டத் தொடங்கினார்.


தலைக்கவசத்தைக் கழற்றியவாறே தொண்டையைச் செருமிக்கொண்டு, கரகரப்பான குரலில், "கடன்காரா இல்ல மாமி, கடன்காரி! சும்மா உங்களுக்கு ஒரு ஷாக் கொடுக்கலாம்னுதான்!" என்றாள் பைக்கை ஓட்டி வந்த அந்தப் பெண்.


அதில் முகம் மலர்ந்தவர், "அடிப்பாவி! பூக்காரி நீயா? முகமூடி கொள்ளைக்காரி மாதிரி இப்படி மூஞ்சியை மூடிண்டு வந்தா நான் யாருன்னு நினைக்கற்து. ஒரு நிமிஷத்துல எனக்கு மூச்சே நின்னு போச்சு தெரியுமா?" என்று கேட்டார் சுசீலா மாமி.


தொண்டையைச் செருமிக்கொண்டே,"மார்கழி மாச குளிருல அதுவும் இந்த எர்லி மார்னிங்க்ல உங்களை இங்கப் பார்த்ததுல எனக்குக் கூடதான் மூச்சே நின்னு போச்சு! இவ்ளோ தூரம் அதுவும் என்கிட்ட சொல்லாம கொள்ளாம இங்க வந்துட்டு எங்க வீட்டுக்கு வராமலேயே எஸ் ஆகப் பாக்கறீங்க இல்ல? உங்க…ளை!" என உரிமையாக மிரட்டவும்,


"ஏண்டி ஃபிரெண்ட்ஸ் கூட சேர்ந்துண்டு கிரேப் ஜூஸ் சாப்டியா? ஏன் இப்படி குரல் கரகரனு இருக்கு?" என்று மாமி பேச்சை மாற்ற, "எப்பவாவது நடக்கறதுதானே மாமி! இதெல்லாம் கண்டுக்காதிங்க!" என்றாள்.


"நீ எவ்ளோ நன்னா பாட்டு படுறவ. உன் குரலைக் கொஞ்சம் கவனிச்சுக்க வேண்டாமா? உனக்குதான் கிரேப் ஜூஸ் அலர்ஜி ஆச்சே! அதை ஏன் சாப்பிட்ட?" எனச் சண்டைக்குக் கிளம்பினார் மாமி. அதில் அவரது அக்கறையே மேலோங்கி இருந்தது.


"மாமிஈஈஈ! பேச்சை மாத்தாதீங்க. நீங்க ஏன் எங்க வீட்டுக்கு வராம கிளம்பறீங்க? அம்மா ஃபீல் பண்ணுவாங்கன்னு உங்களுக்குத் தெரியும் இல்ல?" என அவள் மறுபடியும் அதற்கே வரவும்,


"இல்லடி கொழந்த, நாங்க ஒரு க்ரூப்பா கிளம்பி சென்னையைச் சுத்தி இருக்கற கோவிலுக்கெல்லாம் ஒரு ஒன் டே டூர் போறோம்டீ. அங்க பாரு" என்று அங்கே சற்றுத் தள்ளி நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தைச் சுட்டிக் காட்டி, "அதனாலதாண்டிம்மா வர முடில. நீ கோச்சிக்காத" என்று கூறி, அருகில் இருந்த ராஜி மாமியிடம், "நான் சொல்லுவேனோல்லியோ அணிமாமலர்னு இவதான் அது” என்று சொல்லிவிட்டு, "இவா ராஜி மாமி. என்னோட கோவில் ஃபிரெண்டு" என அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் சுசீலா மாமி.


அணிமாமலர் அவரை நோக்கி கரம் குவிக்க, "டீ அந்த கர்ச்சீப்பை முகத்துலேந்து கழட்டு. ராஜி உன் முகத்தை நன்னா பார்க்கட்டும்!" என்று சொல்லவும்,


"மாமி! மாமி! ப்ளீஸ் அது மட்டும் வேண்டாமே. ஏற்கனவே தொண்டை கொஞ்சம் சரியில்ல. இப்ப இந்தப் பனி காத்து, காதுல மூக்குல போச்சுன்னா நான் மொத்தமா காலி!" என்று சொல்லியபடி தலைக்கவசத்தை மறுபடி அணிந்துகொண்டாள் அணிமாமலர்.


"அப்படின்னா எதுக்குடி ஆம்பள பையன் மாதிரி, நன்னா இந்த பைக்கை எடுத்துண்டு கொட்டற பனில ஊர் சுத்திண்டு இருக்க. பேசாம வீட்டிலேயே இருக்கலாம் இல்ல?" என்று மாமி கேட்கவும்,


தொண்டையைச் செருமிக்கொண்டே, "இல்ல மாமி ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு அதனாலதான். பெருமாளுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு அப்படியே கிளம்பளாம்னு. சாயங்காலம் வேற முக்கியமா” என்று தொடங்கியவள், ஏதோ நினைவு வந்தவளாக, "மாமி! நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே!"என்று தீவிரக் குரலில் சொல்ல,


"நான் என்ன முடியாதுன்னா சொல்லப் போறேன்? நீட்டி முழக்காம என்னனு சொல்லு" என்றார் மாமி.


"இல்ல மாமி, நடு ரோட்டுல வெச்சு இப்படி ஹர்ரி பர்ரியால்லாம் சொல்ல முடியாது. நாளைக்கு உங்க வீட்டுக்கு வரட்டுமா?" என்று கேட்டாள் மலர்.


"கட்டாயம் வாடீ! மாமாவும் உன்ன பத்திதான் கேட்டுண்டே இருக்கார்!" என்றார் மாமி வாஞ்சையுடன்.


செல்லமாக அவருடைய இரு கன்னங்களையும் பிடித்துக் கிள்ளி, குவித்த கைகளை உதடுகளில் வைத்து அழுத்தமாக, "உம்மா!" என்றவள், "சோ ஸ்வீட் மாமி! பை!" என்று இருவருக்கும் பொதுவாகக் கையை ஆட்டிக் காண்பித்து பைக்கைக் கிளப்பிக்கொண்டே,


"ராஜி மாமி! எங்க சுசீ மாமிய பத்திரமா பாத்துக்கோங்க. எங்கேயாவது கூட்டத்துல காணாம போயிடப்போறாங்க. அப்பறம் மாமாவுக்கு நீங்கதான் பதில் சொல்லணும், சொல்லிட்டேன்" என்று சொல்ல,


"அடியேய் பூக்காரி! நாளைக்கு வாடி. உன்னைக் கவனிக்க வேண்டிய விதத்துல நன்னா கவனிக்கறேன்" என்று சுசீலா மாமி பதில்கொடுக்க, அது அவளது காதுகளை எட்டுவதற்கு முன்பாகவே சர்ரென அங்கிருந்து பறந்திருந்தாள் மலர்.


"அம்மாடி புயலே அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு மாமி. இவளை எப்படி இவாத்துல சமாளிக்கறாளோ!" என்ற ராஜி மாமி, "அழகா இந்த ஊர் தாயார் பேரை வெச்சிருக்கா இல்ல! அது என்ன அவளைப் பூக்காரின்னு கூப்பிடறீங்கோ?" என்று கேட்க,


"அது ஒண்ணுமில்ல ராஜி, நாம நாள் கிழமைன்னா எப்படி பூக்காரிக்கு வெயிட் பண்ணுவோமோ, அதுமாதிரி இவளுக்காக நானும் மாமாவும் வெயிட் பண்ணிண்டிருப்போம். பூக்காரி வந்துட்டு போனதுக்கு அப்புறமும் அங்கே எப்படி பூக்களோட வாசனை அந்த இடத்துலயே சுத்திண்டே இருக்குமோ, அது மாதிரியே இவ வந்துட்டு போன பிறகும் ஒரு ப்ளெசன்ட் ஃபீல் எங்களுக்கு இருந்துண்டே இருக்கும். நான் பெத்ததுகள் ரெண்டும் அதை இதை சொல்லிண்டு ஃபாரின்லேந்து இங்க வந்தே நாலு வருஷம் ஆச்சு. ஆனா இவ மாசத்துக்கு ஒரு தடவையாவது எங்களை வந்து பார்த்துட்டுப் போய்டுவாடி.


அடிக்கடி வாட்ஸ் ஆப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிண்டே இருப்பா. அவ எங்க தனிமையைப் போக்க வந்த தேவதை. அதனால அவ எங்களுக்கு எப்பவுமே மலர்க்காரிகை தான்!" என அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டே, வாஞ்சையுடன் சுசீலா மாமி சொல்லிக்கொண்டிருக்க,


"ஐயோ மாமி! ரொம்ப நாழி ஆயிடுத்து. எல்லாரும் நமக்காகதான் வெயிட் பண்ணிண்டிருக்கா, வாங்கோ கிளம்பலாம்" என்ற ராஜி மாமி அவரது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே பேருந்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்.


அதே நேரம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரவனில் இருந்தபடி ஒருவன் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்ததையோ, இவர்கள் உரையாடல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்ததையோ, அந்தப் பெண்கள் மூவருமே அறிந்திருக்கவில்லை.


***


மணி இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. சத்தம் எழுப்பாமல் மெதுவாக கதவைத் திறந்த அணிமாமலர், தலையை மட்டும் உள்ளே நீட்டிப் பார்வையைச் சுழற்றினாள்.


வரவேற்பறை சோஃபாவில் உட்கார்ந்து அப்பா வெங்கடேசன் மட்டுமே தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தார். அம்மா சூடாமணியோ அண்ணன் பிரபாகரனோ அங்கே இருப்பதற்கான அடையாளமே இல்லை.


‘ஷ் அப்பாடா! தப்பிச்சோம்!’ என்று எண்ணியவாறே ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள், பூனை போல தந்தையின் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டாள்.


தொலைக்காட்சியில், வில்லன் நடிகர் ஜெகதீஸ்வரன் பத்திரிகை நிருபர் ஒருவரை கிழி கிழி என்று கிழித்துத் தொங்கவிட்டுக்கொண்டிருந்தார்.


திரையில் அவரைக் கண்டதும், ஆச்சரியத்தில் அவளது புருவம் மேலே உயர்ந்தது.


மகள் அருகில் வந்து அமர்ந்ததை உணர்ந்த வெங்கட், "வாடா கண்ணம்மா! சாப்பிடுறியா?" எனக் கேட்க, "நான் சாப்பிட்டுட்டேன், அம்மா எங்கப்பா?" என்ற மகளின் கேள்விக்கு,


"அம்மா இப்பதான் தூங்கப் போனா. உன்மேல செம்ம காண்டுல இருக்கா. அவ கிட்ட மாட்டாம போய் தூங்கிடு சொல்லிட்டேன்!" என அவர் மகளை எச்சரிக்கவும், "என்ன நடந்தது ப்பா?" எனக் கேட்டாள் மலர் தீவிரமாக.


"நீ லேட்டா வந்ததுதான் காரணம், வேறென்ன?" என்று அவர் பதிலளிக்கவும், "ப்ச் அதில்ல பா! இந்த ஜெகதீஸ்வரன் பிரஸ் மீட்ல எதுக்கு இப்படி சண்டைப் போட்டுட்டு இருக்கார்?" என்று மலர் கேட்க,


"அடிப்பாவி!” என்றவர், “பயங்கரமா மேக்-அப் போட்டிருக்குமே உன்கூட வேல செய்யற அந்தப் பொண்ணு, நீ நாலு மணிக்கே ஆஃபீஸ்ல இருந்து கிளம்பிட்டேன்னு அம்மா கிட்ட வத்தி வெச்சிடுச்சு. அவ கோவமா இருக்கறது உனக்குப் பெருசில்ல. இப்ப இவன் பேசுறதுதான் உனக்கு முக்கியமா போச்சா?" என்றார் கிண்டலாக.


"யாரு அந்த லாவண்யாவா?" என ஒரு நொடி அதிர்ந்தவள் பின்பு தோளைக் குலுக்கி, "அம்மாவை நான் டீல் பண்ணிக்கறேன். இந்த ஜெகதீஸ்வரன் பிரச்சினையைப் பத்தி நீங்க முதல்ல சொல்லுங்கப்பா ப்ளீஸ்!"


மகள் கெஞ்சலில் இறங்கவும், ரிமோட்டை அவளிடம் கொடுத்தவர், "இந்தா, வேற சேனல் மாத்து. முதல்ல இருந்து மறுபடியும் போடுவான். நீயே பார்த்து தெரிஞ்சிக்கோ. எனக்குத் தூக்கம் வருது. நான் போறேன், குட் நைட்!" என்று கூறிவிட்டு, தனது அறைக்குள் புகுந்துகொண்டார் மலரப்பா.


அவர் சொன்னது போலவே வேறு தொலைக்காட்சி சானலில் ஜெகதீஸ்வரனுடைய பத்திரிகையாளர் சந்திப்பை முதலிலிருந்து ஒளிபரப்பினார்கள்.


அவன் நடித்துக்கொண்டிருக்கும் படம் முடிவடையும் தருவாயில், படத்தின் தயாரிப்பாளருக்கு அந்தப் படத்தை வெளியிட ஜெகதீஸ்வரன் பண உதவி செய்தது எப்படியோ வெளியில் கசிந்திருந்தது.


"தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அவர்கள் சங்கங்களில் பிரச்சினைகள் போய்க்கொண்டிருக்க, அதைச் சரிசெய்யாத நிலையில் நீங்க பண உதவி செய்தது ஏன்?" என அந்த நிருபர் கேள்விகேட்க,


"அது மிகப் பெரிய பிரச்சினை. அதற்கான தீர்வையெல்லாம் என்னால் கொடுக்க முடியாது. ஆனா நட்பு அடிப்படையில் நான் தயாரிப்பாளருக்கு உதவ முடியும். அதில் எந்தத் தப்பும் இல்ல..ல்ல!" என ஈஸ்வர் கொஞ்சமும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் புன்னகை முகமாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.


"பெரிய ஹீரோ நடிகர்களெல்லாம் சும்மா இருக்கும்போது நீங்க ஏன் இப்படி செஞ்சீங்க? இதே போல இன்னும் எத்தனைப் படத்துக்கு பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணுவீங்க?" என்று சரமாரியாக நிருபர் கேட்க,


கொஞ்சமும் முகத்தை மாற்றிக்கொள்ளாமல், எல்லா ஒலிவாங்கிகளையும், ஒரு ‘சாரி’ என்ற வார்த்தையுடன் நகர்த்திவிட்டு அந்த நிருபரின் தோளில் கையைப் போட்டுக்கொண்டே,


"அங்கிருந்து நீங்கக் கேக்கறது ரொம்ப சுலபம். ஒரு படம் எடுத்து முடிக்க இங்க நாங்க ஃபேஸ்பண்ற பிரச்சினையெல்லாம் அதிகம். உங்க டி.ஆர்.பிய ஏத்தறதுக்காக நீங்க எந்தக் கேள்வி வேணாலும் கேட்கலாம். ஆனா எல்லாத்துக்கும் பதில் சொல்ல எனக்கும் கொஞ்சம் டைம் இருக்கணும் இல்லை ப்ரோ!" என அழகாக முடித்துக்கொண்டு கம்பீரமாக அங்கிருந்து சென்றான் ஜெகதீஸ்வரன்.


"ஏய் ஹாண்ட்சம்! நீ வில்லனெல்லாம் இல்ல! உண்மையிலேயே நீ ஒரு ஹீரோ!" என்றவாறு அவனது பிம்பத்தை நோக்கி ஒரு பறக்கும் முத்தத்தை மலர் வீச, சரியாக அவளது அன்னையின் கண்களில் சிக்கினாள்.


'மகள் என்ன செய்கிறாள்?' எனப் பார்ப்பதற்காக சூடாமணி அறையிலிருந்து வரவும், மகளது அந்தச் செயலைப் பார்த்தவர், "அடிப்பாவி உனக்கு வரவரப் பைத்தியம் ரொம்பவே முத்திப் போச்சு. கருமம்! கருமம்! முதல்ல அப்பாகிட்ட சொல்லி உனக்கு ஒரு மாப்பிளையை பார்க்கச் சொல்லனும்" என அவர் பொரிந்து தள்ளவும்,


"அம்மா ப்ளீஸ் அண்ணா!" என மலர் தொடங்க,


"அண்ணாவுக்குக் கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் உனக்குக் கல்யாணம் பண்ணனும்னா நான் ஒரு வழி ஆயிடுவேன், அதனால உனக்குதான் முதலில் கல்யாணம் பண்ணப் போறோம். நீ கொஞ்சம் அடங்கு" என்றார் சூடாமணி.


'ஹ்ம் யாருக்கு எனக்கா? கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லம்மா, நான் அணிமா! அஷ்டமாசித்திகளில் முதல் சித்தி! என்னை ஒரு வட்டத்துக்குள்ள யாராலயும் அடக்க முடியாது! நான் காத்துலயே கரைஞ்சு காணாம போயிடுவேன்! உங்க மகனோட கல்யாணம்தான் முதலில் நடக்கும். அதையும் நீங்களே நடத்தப் போறீங்க!' என மனதிற்குள் எண்ணிச் சிரித்துக்கொண்டாள் அணிமாமலர்.


"என்னடி சாப்பிட்டுட்டு வந்துட்டியாமே. எங்கடி சாப்ட?" என அவர் அடுத்த கேள்விக்கு தாவவும்,


"ச்சூடா! நீங்க ரொம்ப சூடா இருக்கீங்க. கொஞ்சம் கூலாகுங்க. நான் மாம்பலம் போயிருந்தேன். சுசீலா மாமி வீட்டுலதான் சாப்பிட்டேன். ஓகேவா!" என்று கூறிவிட்டு, தனது கைப்பையிலிருந்து பணத்தை எடுத்து அன்னையிடம் நீட்டியவள், "நம்ம ஃபிளாட்டோட இந்த மாசத்து வாடகை" என்றாள் மலர்.


அதற்குள் கொஞ்சம் தணிந்த சூடாமணி அந்தப் பணத்தை கையில் வாங்கியபடி, "போரவ முன்னாடியே சொல்லிட்டுப் போயிருக்கலாமே" என்று முணுமுணுத்துகொண்டே, "எனக்குத் தூக்கம் வருது. நீயும் போய் தூங்கு போ" என்று மகளிடம் சொல்லிவிட்டு அவரது அறைக்குச் சென்றார்.


தனது அறையில் நுழைந்து படுக்கையில் விழுந்த மலருக்குதான் தூக்கம் எங்கோ சென்றிருந்தது. அவளது எண்ணம் முழுதும் ஜெகதீஸ்வரனே நிறைந்திருந்தான்.


மனதில் ஏதோ நினைவு வந்தவளாக அவளது தோழி லாவண்யாவைக் கைப்பேசியில் அழைத்து, "ஏய் என்ன எங்க அம்மாகிட்ட என்னைப் போட்டு கொடுத்துட்டியா?" என்று அவளை மிரட்ட, பதறியபடி, "இல்ல மலர். தெரியாம உளறிட்டேன். சாரி!" என்றாள் லாவண்யா.


"சரி! போனா போகுதுன்னு விட்டுடறேன். ஆனா நீ எனக்கு ஒரு வேலை செய்யனுமே!" என்று மலர் தூண்டில் வீசவும், அதை உணராமல், "சொல்லுப்பா கண்டிப்பா செய்யறேன்” என்றாள் லாவண்யா.


"ஒண்ணுமில்ல, உங்க மாஸ் ஹீரோ படம் ஒண்ணு அடுத்த வாரம் ரிலீஸ் ஆகப் போகுது இல்ல?" என்று கேட்க, "ஹேய்! ஆமாம். ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவுக்கு நம்ம டீம்ல இருபது பேருக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கோமே" கேட்காமலேயே மாட்டிகொண்டாள் லாவண்யா.


"ஹ்ம் அதேதான். யாரையாவது கட் பண்ணிட்டு. என்னை அந்த லிஸ்ட்ல சேர்த்துடு" என அசராமல் அவளுக்கு ஆப்பு வைத்தாள் மலர்.


"ஹேய் என்னப்பா! நீ வரலேன்னு சொன்னல்ல. அதனாலதான் உனக்கு டிக்கெட் எடுக்கல. அந்த ஹீரோவை வேற உனக்குப் பிடிக்காதே!" என லாவண்யா பாவமாகச் சொல்லவும்,


"ஆனா... அந்த வில்லனை எனக்கு ரொம்பவும் பிடிக்குமே! நீ ஏதாவது பண்ணு. நான் அந்தப் படத்தை பார்த்தே ஆகணும். அதுவும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ" என்று அடாவடியாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் மலர்.


***


அன்றைய படப்பிடிப்பு முடிந்து கேரவனில் போடப்பட்டிருந்த இருக்கையில் கண்மூடி சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் ஜெகதீஸ்வரன்.


பனிவிழும் மார்கழி அதிகாலையில், நவரசங்களைக் காட்டும் கருவண்டு கண்களுடன், குறும்புக் கூத்தாட, காட்டாற்று வெள்ளமென அவனது மனதை அடித்துச் சென்ற அந்த மலர்க்காரிகையையே சுற்றி அவனது சிந்தனை முழுவதும் சுழன்றுகொண்டிருந்தது.



Recent Posts

See All
Anima - 30

அணிமா-30 அங்கே கூடி இருந்த அனைவருமே நெகிழ்ச்சியில் உறைந்துபோயிருந்தனர். அந்த உறைநிலையை ஜெய்தான் கலைத்தான் தன் உரை மூலமாக. "கிட்டத்தட்ட...

 
 
 
Anbenum Idhazhgal Malarattume 39 & 40 [Final Episodes]

அணிமா-39 ஆரம்பக்கட்ட மகப்பேறு காலத்தில் மிகவும் பத்திரமாக இருக்க வேண்டிய காரணத்தால் ஆபத்தை எதிர்கொள்ளும் எந்த வேலையிலும் ஈடுபட அவளை...

 
 
 
Anbenum Idhazhgal Malarattume 35 & 36

அணிமா-35 ஒரு வருடத்திற்கு முன்... மல்லிகார்ஜூன் மும்பையில் இருக்கும் பிரபல க்ளப் ஒன்றில் பார் பவுன்சராக வேலை செய்துகொண்டிருந்த சமயம்...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page