Anbenum Idhazhgal Malarattume! 16
- Krishnapriya Narayan
- Sep 9, 2020
- 6 min read
Updated: Apr 5, 2023
அணிமா-16
பதறி அடித்துக்கொண்டு குமார் ஈஸ்வரின் வீட்டின் நுழைவாயிலில் இருக்கும் பாதுகாப்பு அறைக்கு அருகில் வரவும் அதன் உள்ளே உட்கார்ந்திருந்தாள் மலர். அதுவும் அவளது திருமண உடையான மடிசார் புடவையில்.
"கண்ணம்மா வாடா உள்ள போயிடலாம். யாராவது பார்த்தாக பிரச்சனை ஆயிடும். அதுவும் செங்கமலம் பெரியம்மா கிட்ட மாட்டினேன் என்னைப் பிரிச்சி மேஞ்சிடுவாங்க" என்றார் பதட்டத்துடன்.
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், "சில் மாம்ஸ்! நான் அங்க இல்லைனு ஒருத்தராலையும் கண்டு பிடிக்க முடியாது. நான் தூங்கற மாதிரி செட் பண்ணி வெச்சுட்டுதான் வந்திருக்கேன். பார்த்தீங்க இல்ல, இந்த டிரஸ்ல நான் எப்படி பைக் ஓட்ட முடியும்? அதனால இப்ப நீங்கதான் எனக்கு டிரைவர்! ஓகே வா?" என்றாள் அடாவடியாக.
அவருடைய பதிலை எதிர்பார்க்காமல் அருகே நின்றுகொண்டிருந்த அவர்கள் வீட்டுக் காவலாளியிடம், "என்ன பூங்காவனம் அண்ணா! நீங்க எங்களை மாட்டி விட மாட்டிங்க இல்ல?" என்று வேறு கேட்டு வைக்க, அதிர்ச்சியிலும் வியப்பிலும் அவரது தலை தானாக ஆடியது.
"அப்ப சரி உங்க பைக் சாவியைக் கொடுங்க, நான் இன்னும் ஒரு மணி நேரத்துல பத்திரமா உங்க பைக்கைக் கொண்டுவந்து விட்டுடறேன்!" என்று மலர் சொல்லவும் அவரது கை தானாக நீண்டு சாவியைக் கொடுக்க அனைத்தையும் வாயைப் பிளந்தவாறு பார்த்துக்கொண்டிருந்தார் குமார்.
சாவியை அவருடைய கையில் திணித்து "மாம்ஸ் வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க" என்று மலர் கட்டளையாகக் கூற, "இந்த அடாவடி ராட்சசிய கட்டிக்கிட்டு இந்த ஈஸ்வர் என்ன பாடெல்லாம் படப்போறானோ?" என்று முணுமுணுத்தவாறு குமார் பைக்கைக் கிளப்ப அவருக்குப் பின்னல் ஏறி உட்கார்ந்து, "என்ன சொன்னீங்க சரியா புரியல!" என்று மலர் தன் அடாவடியைத் தொடர,
"ஒண்ணுமில்ல உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க ஈஸ்வர் கொடுத்து வெச்சிருக்கணும்ன்னு சொன்னேன்!" என்றார் நக்கல் தொனிக்க.
"எனக்கு என்னவோ நீங்க வேற ஏதோ சொன்ன மாதிரி இல்ல இருந்துது! அதெல்லாம் சரி, உங்களுக்கு பைக் ஓட்டத் தெரியும்தான?" என்று வேறு கேட்டு வைக்க,
அதில் கடுப்பின் உச்சிக்கே சென்றவர் காலை ஊன்றிப் பைக்கை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பி, "யாரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்ட. நான் ஸ்டண்ட் மாஸ்டர் மா! ஞாபகம் இருக்கட்டும்" என்றார் குமார் கெத்துடன்.
"அதெல்லாம் சரிதான், அதுக்காக உங்க வீர சாகசத்தையெல்லாம் இந்த ரோட்டுல காட்டிடாதீங்க!" என்று மலர் நொடித்துக்கொள்ளவும் அதில் நொந்தே போனார் மனிதர்.
சரியாக இருபது நிமிட பயணத்தில் அண்ணா நகரில் இருக்கும் மத்திய அமைச்சர் கருணாகரனின் வீட்டிற்கு வந்திருந்தனர் இருவரும்.
வீதியிலே நின்று கொண்ட குமார், "என்னை உள்ள கூப்பிடாத. எனக்கு என்னவோ மதிச்சு உங்கிட்ட அவன் பேசுவான்னு தோனல. தேவை இல்லாம அசிங்க படாத!" என்றார் அவளுக்கு நிலைமையை உணர்த்திடும் பொருட்டு.
அதற்கு மலர் மவுனம் காக்கவும், "உன் இஷ்டம். ஆனா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்திடு" என்று சொல்லி அவளை உள்ளே அனுப்பினார்.
உள்ளே நுழையவும், கருணாகரனுடைய வீட்டு வாயிலில் கட்சித் தொண்டர்கள் பத்திரிகை நிருபர்கள் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் என அனைவரும் திரண்டிருக்க, அனைவரின் பார்வையும் அவள் மீது படிந்தது. அவள் யார் என்பது புரிந்ததால் ஓரிருவரின் விழிகள் வியப்பில் அவளை விழுங்கியது. கேமராவின் கண்கள் தன் பக்கம் திரும்பும் முன், மலர் வேகமாக வெளியே நின்றிருந்த குமாரிடம் வந்து, "மாம்ஸ்! உங்க செல்ஃபோனைக் கொஞ்சம் குடுங்க!" என்று கேட்க, தயக்கத்துடன் அதை அவளிடம் நீட்டினார்.
அதை வாங்கிய மலர் அதில் ‘நிம்மிக்கா!' என்று பதிந்து வைக்கப்பட்டிருந்த எண்ணுக்கு அழைக்க, எதிர் புறம் "சொல்லு குமாரு!" என்று தயக்கத்துடன் ஒலித்தது குமாருடைய தமக்கையின் குரல்.
"பெரியம்மா! நான் மலர், அதாவது மிஸ்ஸர்ஸ் அணிமாமலர் ஜெகதீஸ்வரன். நான் இப்ப உங்க வீட்டு வாசல்ல நின்னுட்டு இருக்கேன். உடனே என்னை உங்க வீட்டுக்குள்ள அழைச்சிட்டுப் போங்க" என்று தீவிரமாய் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
சில நிமிடங்களில் படபடக்க வெளியில் வந்த நிர்மலா, புது மஞ்சள் தாலியுடன் முகூர்த்தப் புடவையில் மலர் நின்றிருந்த கோலத்தைக் கண்டு மனம் இளகியவராக குமாரை நோக்கி, "இந்த நேரத்துல இவளை ஏன் இங்க அழைச்சிட்டு வந்த குமாரு?" என்று கேட்க,
"பெரியம்மா அவர் என்னை அழைச்சிட்டு வரல. நாந்தான் உங்க தம்பியை இங்க கடத்திட்டு வந்திருக்கேன்!" என்ற மலர் தொடர்ந்து, "எனக்கு இப்பவே உங்க மகனை நேரில் பார்த்து சில விஷயங்களைத் தெளிவுபடுத்தணும். ப்ளீஸ் என்னை உள்ள கூட்டிட்டுப் போங்க!" என்றாள் இறைஞ்சலாக.
மறுக்க முடியாமல் அவளை அவர்கள் வீட்டு வளாகத்திற்குள் அழைத்து வந்தவர் வீட்டின் வாயிலிலேயே அவளை நிற்குமாறு பணித்துவிட்டு உள்ளே சென்றார் நிர்மலா.
சில நிமிடங்களில் ஆரத்தித் தட்டுடன் திரும்ப வந்தவர், "நீ! எங்க வீட்டுப் பொண்ணுடா, ஆனா என் மகனோட கோபத்தை நினைச்சாதான் பயமா இருக்கு" என்று சொல்லியவாறு ஆலம் சுற்றி அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.
வீட்டிற்குள் வந்து அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் மலர் அமரவும், ஒரு அமைச்சருக்கே உண்டான மிடுக்குடன் மாடிப்படியில் இறங்கி வந்துகொண்டிருந்தான் கருணாகரன்.
கேள்வியில் நெற்றி சுருங்க அங்கே உட்கார்ந்திருந்த மலரைப் பார்த்தவன் அவள் யார் என்பது விளங்கவும், "அம்மா!" என்று ஆத்திரத்துடன் கர்ஜித்தான்.
அவளுக்காகப் பழரசத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அங்கே வந்த நிர்மலா மிரட்சியுடன் மகனைப் பார்க்க, மற்ற இருவரும் பேசத் தொடங்கும் முன்பாக கருணாகரனை நோக்கி, மெல்லிய குரலில் ஆனால் உறுதியுடன் "என்னால இங்க எந்த சீனும் கிரியேட் ஆக வேணாம். எனக்கு ஜஸ்ட் ஃபிப்டீன் மினிட்ஸ் மட்டும் டைம் கொடுங்க போதும். நான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிட்டுப் போயிட்டே இருக்கேன். இதுக்கு அப்பறமா மறந்தும் கூட நீங்க இருக்கற திசைக்கே வரமாட்டேன்!" என்று சொல்லி முடித்தாள் மலர்.
அன்னையை ஒரு குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக்கொண்டே ஏதும் பேசாமல் அவன் தன்னுடைய அலுவலக அறை நோக்கிச் செல்ல, மலரை அங்கே போகுமாறு ஜாடை செய்தார் நிர்மலா.
அவனைப் பின் தொடர்ந்து சென்ற மலர் திரும்ப வரவேற்பறைக்கு வரும்பொழுது அவள் சொன்னதை விட பத்து நிமிடங்கள் அதிகம் கடந்திருந்தன.
"நீங்க செஞ்ச உதவிக்கு தேங்க்ஸ் பெரியம்மா. நான் கிளம்பறேன்" என்று சொல்லிவிட்டு மலர் அங்கிருந்து செல்ல எத்தனிக்கவும், அங்கே வந்த கருணா, "மா... கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வந்தவளை இப்படித்தான் வெறும் கையோட அனுப்புவீங்களா?" என்று கேட்க, ஏதோ அதிசய ஜந்துவைப் பார்ப்பதுபோல் அவனைப் பார்த்து வைத்தார் அவனது அம்மா.
மகன் வாயாலேயே அப்படி ஒரு வார்த்தை வரவும் அவசரமாக உள்ளே சென்றவர் தாம்பூலத்துடன் ஒரு புடவையும் வைத்து மலருக்குக் கொடுத்தார் நிர்மலா. அவரை வணங்கி அதை வாங்கிக்கொண்டாள் மலர்.
அப்பொழுது மகனைக் கவனித்த நிர்மலாவுக்கு அவன் கண்கள் கலங்கி இருப்பது போல் தோன்ற, என்ன என்பது போல் தலையை ஆட்டி அவனிடம் கேட்கவும், மறுப்பாக ஒன்றுமில்லை என்பதுபோல் தோளைக் குலுக்கினான்.
பின்பு ஏதும் பேசாமல் வீதியில் நின்று கொண்டிருந்த குமாரை நோக்கி மலர் வரவும் அவளைப் பின் தொடர்ந்து ஓடி வந்தான் கருணா. அங்கே எதிர்பாராமல் குமாரைப் பார்த்தவன் தயக்கத்துடன் அவரிடம், "சாரி மாமா! நீங்களும் வந்திருக்கீங்களா? உள்ள வந்திருக்கலாமே!" என்று கேட்டுவிட்டு மேலும் மலரை நோக்கி,
"ஏன்மா இந்தக் கோலத்துல பைக்லயா வந்த? இரு என் கார்ல ட்ராப் பண்ண சொல்றேன்" என்று உரிமையுடன் சொல்ல, மருமகனைப் புரியாத பார்வை பார்த்த குமார் மலரின் முகத்தைப் ஏறிட, கட்டை விரலைத் தூக்கி "டன்!" என்றாள் மலர்.
மகிழ்ச்சியில் கண்களில் நீர் கோர்க்க ஆசிர்வதிப்பது போல் அவள் தலையில் தனது கையை வைத்து அழுத்தியவர், மருமகனை நோக்கி, "எங்க பொண்ண அழைச்சிட்டு வந்த எனக்கு மறுபடியும் கூட்டிட்டுப் போகவும் தெரியும். நீ ஓவர் சீன் போடாத!" என்று நக்கலாகச் சொல்லிவிட்டு பைக்கைக் கிளப்ப, அவருக்குப் பின்பாக ஏறி உட்கார்ந்தாள் மலர். கருணா "பை!" என்று சொல்லி கையை ஆட்ட எந்த உணர்ச்சியும் காண்பிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
வீட்டிற்குள் திரும்ப வந்த கருணாகரன் அங்கே நின்றிருந்த பத்திரிகை நிருபர்களை நோக்கி, "இதெல்லாம் மோஸ்ட் பர்சனல். ஒரு சின்ன கிளிப் கூட வெளியில் வரக்கூடாது. இது என்னோட அன்பான கோரிக்கை" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றான்.
அவன் சொன்னதையும் மீறி இது வெளியில் வந்தால் அவனது செயல்பாடு எப்படி இருக்கும் என்பது அவன் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து சொன்ன விதத்தில் நன்றாகவே புரிந்தது அனைவருக்கும்.
***
எப்படி பூனை போல் வீட்டை விட்டு வெளியில் வந்தாளோ, அப்படியே வீட்டிற்குள் சென்று இயல்பாகப் பதுங்கினாள் அணிமாமலர்.
குமார் மட்டுமே தன்னை இயல்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள அரும்பாடு பட்டுப்போனார்.
அதன் பிறகு மதிய விருந்து முடிந்து அழகு நிலைய பெண்கள் மலரைத் தயார்படுத்தவென நேரம் இறக்கைக் கட்டிப் பறந்தது.
கோவளம் கடற்கரையை ஒட்டி இருக்கும் மிகப் பிரபலமான ஒரு நட்சத்திர விடுதியில் அணிமாமலர் ஜெகதீஸ்வரன் திருமண வரவேற்பு கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
மதியம் உணவு நேரத்தில் மலரைப் பார்த்ததுடன் சரி, அதன் பின் வரவேற்பு மேடையில்தான் அவளை மறுபடி பார்த்தான் ஈஸ்வர்.
எப்பொழுதுமே தன்னை அழகு படுத்திக்கொள்வதில் அதிக நாட்டம் இல்லை மலருக்கு.
ஆனால் இயல்பாகவே ஓவியம் போன்று இருப்பவள் வரவேற்புக்கென்று அவளுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த பொன்னிற புடவையில் எளிய ஒப்பனையுடன் அன்று மேலும் அழகுற சிற்பம் போன்றே தோன்றினாள்.
அவளிடமிருந்து கண்களைப் பிரிக்க முயன்று தோற்றுத்தான் போனான் ஈஸ்வர்.
"ஹீரோ! இன்னைக்கு இந்த ப்ளாக் அண்ட் ஒயிட் சூட்ல கூல் லுக்ல இருக்கீங்க!" என்று சொல்லி ஏற்கனவே படர்ந்திருந்த அவனது புன்னகையை மேலும் விரிய வைத்தாள் மலர்.
அவன் இருக்கும் திரைத் துறை காரணமாக பல முக்கிய புள்ளிகளும் அங்கே வந்த வண்ணம் இருந்தனர்.
பிரபல இசைக் குழுவின் திரை இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்க கையில் மைக்குடன் மேடை நோக்கி வந்த ஜெய் மணமக்கள் இருவரையும் ஒரு பாடல் பாடச் சொல்லி வற்புறுத்த, மலர்தான் தொடங்கினாள்.
தூங்காத விழிகள் ரெண்டு.
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று.
அவனுக்கு மிகவும் பிடித்த அந்தப் பாடலை அவள் தொடங்கவும் வியப்பில் புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான் ஈஸ்வர், தொடர்ந்தாள் மலர்.
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
அந்த வரிகளைத் தொடர்ந்து இயல்பாக ஈஸ்வர் பாடவும் அனைவருமே ஆர்ப்பரித்தனர்.
மாமர இல்லை மேலே.. அஹ.. அஹ
மாமர இல்லை மேலே, மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இல்லை மேலே, மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கை ஏந்தித் தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
சரியாக ஈஸ்வர் அந்த வரிகளைப் பாடிக்கொண்டிருக்கும் நேரம் அந்த அரங்கத்தினுள் நுழைந்தான் கருணாகரன் அவனது அன்னையுடன்.
பேச்சற்று நின்றான் ஈஸ்வர், அவனது உயிர் நண்பன் அவனை நாடி வந்த ஆனந்த அதிர்ச்சியில்.
மேலே பாட முடியாமல் பாடலை ஈஸ்வர் அப்படியே நிறுத்திவிட அவனது மனதை உணர்ந்தவள் கண்களில் மகிழ்ச்சி மின்ன மீதம் இருந்த வரிகள் மொத்தமும் தானே பாடி முடித்தாள்.
அடுத்த நிமிடமே மேடை ஏறிவந்து வாஞ்சையுடன் ஈஸ்வரை அணைத்துக் கொண்ட கருணாகரன், "சாரிடா ஜகா, உன்னை நான் ரொம்பவே தப்பா நினைச்சுட்டேன் ரியலி ரியலி சாரி!" என்று அவன் மறுபடி மறுபடி ஈஸ்வரிடம் மன்னிப்பு வேண்டவும்,
"என்ன ஹீரோ! கல்யாணத்துக்கு வந்தா விஷ் பண்ணனும். சாரி சொல்ல கூடாது. இது கூட தெரியாதா உங்க நண்பருக்கு?" என்று கிண்டலுடன் மலர் ஈஸ்வரிடம் கேட்க வியந்துபோய் அவளைப் பார்த்தனர் நண்பர்கள் இருவருமே.
அதற்குள் சுதாரித்தவன், "ஜகா, உண்மையாவே மலர் கிடைக்க நீ ரொம்பவே கொடுத்து வெச்சிருக்கணும். இப்ப நான் உண்மையை உணர்ந்து இங்க வந்திருக்கேன்னா அதுக்கு இவதான் காரணம்!" என்றான் கருணாகரன் ஆத்மார்த்தமாக.
ஈஸ்வர் அவளை ஒரு புரியாத பார்வை பார்க்கவும் மெல்லிய குரலில் கருணாவை நோக்கி, "பத்த வெச்சிட்டியே பரட்ட!" என அவள் சொல்ல அதற்கு அவன் சிரித்துக்கொண்டே, "ஜகா, மத்ததெல்லாம் பொறுமையா நீ என் தங்கைகிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கோ" என்றும் சொல்லிவிட்டான்.
நீண்ட நாட்களாக அவன் மனதில் தைத்திருந்த முள் நீங்கிய மகிழ்ச்சியில் அனைத்திற்கும் அவள்தான் காரணம் என்ற திளைப்பில் காதல் பொங்க மலரைப் பார்த்தான் ஈஸ்வர்.
அவனது பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் மலரின் இமைகள் தழைந்தன.
கருணாகரன் வந்த செய்தி அறிந்து தனது முதுமை நிலையையும் பொருட்படுத்தாமல் ஓட்டமாக மேடை ஏறி வந்த செங்கமலம் பாட்டி கண்களில் நீர் கோர்க்க அவனைத் தழுவிக்கொண்டு, "நீ கீழே வா இத்தனை வருஷமா எங்க எல்லாரையும், அதுவும் ஈஸ்வரைத் தவிக்க விட்டத்துக்கு உனக்கு இருக்கு" என்று அவனை மிரட்டுவதுபோல் சொல்ல,
"பாட்டி நீங்க என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் வாங்கிக்க தயாரா இருக்கேன்" என்றான் கருணா மனதிலிருந்து.
***
அவர்களுக்கே அவர்களுக்கு என்ற இனிய தனிமையில் அணிமாமலர் ஜெகதீஸ்வரன் இருவரும்.
மிக மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருக்கும் அவனது அறைக்குள் அவள் நுழைந்த அடுத்த நொடி அவளது எலும்புகளெல்லாம் நொறுங்குவதுபோல் அவளை அணைத்தவன், "தேங்க்ஸ்! தேங்க்ஸ்!" என்றவாறு மகிழ்ச்சியில் அவளது முகமெங்கும் முத்தக் கோலம் வரைந்தான். அவனது செய்கையில் பேச்சற்றுப் போய் நின்றாள் மலர்.
"எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு, ஸ்டேஜ்லயே இப்படி செஞ்சிருப்பேன். எவ்வளவு கஷ்டப்பட்டு அடக்கி வாசிச்சேன் தெரியுமா?" என்று கேட்டு அவளை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தினான் ஈஸ்வர். சில நிமிடங்கள் பிடித்தது மலர் தனது இயல்பு நிலைக்குத் திரும்ப.
"என்ன நடந்தது மலர்? நீ எப்ப கருணாவை மீட் பண்ண?" என்று ஈஸ்வர் கேட்க, அன்று நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் மலர்.
"அடிப்பாவி, உனக்குக்கு பயம்னா என்னன்னே தெரியாதா? இப்படியெல்லாம் கூடவா செய்வ நீ?" என்று வியப்புடன் கேட்டவன், "அப்படி என்ன சொன்ன கருணா கிட்ட?" என்றான் ஈஸ்வர் அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடன்.
"உண்மையைச் சொன்னேன்!" என்றாள் மலர் ரஜினி ஸ்டைலில். "ம்ப்ச்! மழுப்பாத, உண்மையைச் சொல்லு!" என ஈஸ்வர் விடாமல் கேட்க, "இந்த நேரத்துல பேசர பேச்சா ஹீரோ இது?" என மலர் விஷமமாகக் கேட்கவும்,
“அப்படிங்கிற!" என்று சொல்லி சத்தமாகச் சிரித்த ஈஸ்வரை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மலர் மகிழ்ச்சிப் பொங்க காதலுடன்.
பெண்ணவளின் மீன்விழிகள்
போர் கொடியாய் படபடக்க!
மன்னவனின் உயிர் காதல்
மலர் மீது போர் தொடுக்க!
போரென்றால்உயிர் குடிக்கும் போரல்ல!இப்போர்
வாழையடி வாழையாக உயிர் வளர்க்கும் நற்போர்!
அவளவனின் பார்வையது கூர் வாளாய் துளைத்ததென்றால்!
அவனவளோ நாணமெனும் கேடயத்தால் தடுத்துவிட்டாள்!
தடுத்ததையே சம்மதத்தின் அறிகுறியாய் தான் ஏற்று!
இலக்கின்றி மலர் ஏவும் கணையாக... அவன் இதழ்கள்!
முத்தத்தால் அவளை தீ மூட்ட!
தடை தகர்ந்து மலரவளின் செவ்விதழும் தான் மலர!
மது கொண்ட மலராக அவளிதழும்...
மதுவுண்ணும் வண்டாக அவனிழும்... தான் திகழ...
சித்தம் பித்தாகி...
தித்ததே அத்தீயுமே!
Comments