top of page

Anbenum Idhazhgal Malarattume 31 & 32

Updated: Apr 13, 2023

அணிமா-31


கோபாலன் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டியதாக இருந்ததால் குழந்தைகள் காப்பகத்திலிருந்து மலர் நேராக மாம்பலம் சென்றுவிட ஜெய் அவனது அலுவலகத்திற்கு வந்திருந்தான்.


ஸ்ரீபுரம் கிராமத்தை உள்ளடக்கிய ரம்பசோடவரம் வட்டத்தில் இருக்கும் தலைமை காவல்நிலையத்தை அவன் தொடர்பு கொண்ட பொழுதுதான் டிப்பு பற்றிய தகவல்கள் அவனுக்குக் கிடைத்தன.


அவன் தகவல் கொடுத்த சில மணி நேரத்திலேயே, காப்பகத்தில் இருக்கும் அந்தக் குழந்தை, ஸ்ரீபுரத்தில் இருக்கும் ஒரு தம்பதியருடையதுதான் என்பதை மட்டும் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார் அங்கே பணியிலிருந்த ஆய்வாளர்.


ஆனால் டிப்பு பற்றி ஓரளவிற்கு மேல் அங்கே எந்தத் தகவலும் கிடைக்காமல் போக, அவனுடன் ஐ.பி.எஸ் பயிற்சி எடுத்து ஆந்திராவில் பணியில் இருக்கும் அவனுடைய தோழி ஒருவரிடம் தனிப்பட்ட முறையில், இது தொடர்பாக விசாரிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டான் ஜெய்.


ஆண், பெண், குழந்தைகள் என மொத்தமே இருநூறு பேருக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஆந்திர - ஒரிசா எல்லையில் அமைந்திருக்கும் கிராமம்தான் ஸ்ரீபுரம்.


அந்தப் பகுதிகளைச் சுற்றி உள்ள பல கிராமங்களில் இதுபோல் குழந்தைகள் கடத்தப்படுவது வெகு சாதாரணமாக நடக்கிறது. பெரும்பாலான கடத்தல்கள் புகார் அளிக்கப்படாமல் வெளியே தெரியாமலேயே போய்விடுகின்றன.


ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு டிப்பு காணாமல் போன அடுத்த தினமே அவனுடைய தந்தை சோமய்யா அதைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


தனிப்பட்ட முறையில் சோமய்யா பல இடங்களில் மகனைத் தேடி அலைய, நாள் முழுதும் காவல்நிலையமே பழி எனக் கிடந்தாள் சக்ரேஸ்வரி.


மூன்று மாதங்கள் கடந்தும் அவனைப் பற்றிய தகவல்கள் எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் காவலர்களின் அலட்சியப்போக்கிலும், அவர்கள் செய்த அவமரியாதையிலும் நம்பிக்கை இழந்து 'மகனை இனி காணவே முடியாது' என்ற எண்ணத்தில் மனம் உடைந்துபோன சக்ரேஸ்வரி காவல் நிலையத்தின் வாயிலிலேயே தீயிட்டுத் தற்கொலைக்கு முயல உடலில் ஒரு பகுதி எரிந்த நிலையில் எப்படியோ போராடி அவளது உயிரைக் காப்பாற்றினான் சோமய்யா.


இருந்தாலும் அவளுக்கு ஏற்பட்ட தீக் காயம் நன்கு ஆறாமல் அவள் அதிகம் அவதிப்பட மருத்துவ வசதிக்காக அவளை அங்கிருந்து அழைத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டான். இதற்கு மேல் அவர்களைப் பற்றி அங்கே யாருக்கும் எதுவும் தெரியவில்லை.


தான் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் அன்று மாலையே ஜெய்யிடம் தெரிவித்தார் அவனது தோழி. அதற்குள்ளாகவே, சந்தியா என்ற பெயர் கொண்ட அந்தச் சிறுமியை அவளுடைய பெற்றோரிடம் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தான் ஜெய்.


கோபாலன் மாமா, மாமி இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, மறுபடியும் அவர்களைப் பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு மலர் தங்களுடைய வீட்டிற்கு வந்து சேரவே மாலை ஆகிப்போனது.


***


ஜீவனுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவி செய்துகொண்டிருந்தாள் மலர். அப்பொழுது, அவர்களுடைய திருமண ஆல்பம் வந்து சேரவே குதூகலமாக அனைவருடனும் உட்கார்ந்து அதைப் பார்த்துக்கொண்டே தனக்குப் பிடித்த படங்களை ஒவ்வொன்றாக ஈஸ்வருக்கு வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பினாள்.


இரவு உணவு உண்டு முடித்து அவர்களுடைய அறைக்கு வந்தவள் மடிக்கணினியை உயிர்ப்பித்து வீடியோ கால் மூலமாக ஈஸ்வரை அழைக்கவும் திரையில் தோன்றிய அடுத்த நொடி அங்கே ஜீவன் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு உதடு குவித்து மலர் சொல்வதைப் போன்றே, "உம்மா!" என்றான் ஈஸ்வர்.


அவனது விழிகளில் வழிந்த மோகத்தைக் கண்டு முகம் சிவந்த மலர், "என்ன வில்லன் சார்! ரொமான்டிக் லுக்கெல்லாம் பலமா இருக்கு?" என்று அவனைச் சீண்டும் விதமாய் கேட்க, "வில்லனா? சொல்லுவடி சொல்லுவ! பொழுதுவிடிய வீடியோ கால் பண்ணி இந்தக் கோழிமுட்ட கண்ணை உருட்டி உருட்டிப் பேசிட்டு அதையும் பாதியிலேயே விட்டுட்டு போனவ, இப்பதான என்னைக் கூப்பிடுற! போறாத குறைக்கு கல்யாண ஃபோட்டோஸ்லாம் அனுப்பி மனுஷனை வெறுப்பேத்திட்டு” என அவன் அலுத்துக்கொள்ள,


"ப்ச்... என்ன பண்ண ஹீரோ! வேற வழி இல்லையே! அதுவும் ஃபோட்டோஸ்லாம் பார்க்கும்போது உங்களை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? ஜீவன் வேற உங்களை கேக்க ஆரம்பிச்சுட்டான்" என்று மலர் ஏக்கத்துடன் சொல்லவும்,


நினைவு வந்தவனாக, "ஆமாம்... அது என்ன, நீ எப்ப ஜீவனைப் பத்தி பேசினாலும், உன் முகம் அப்படி பிரைட் ஆகுது. குரல் அப்படியே குழைஞ்சு போகுது. அவன் மட்டும் ஏன் உனக்கு அவ்வளவு ஸ்பெஷல்?" என்று கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்க்கக் கேட்டான் ஈஸ்வர்.


அவனது மனதை உணர்ந்தவளாக, காதலுடன், "ஏன்னா, அவன் அச்சு அசல் என்னோட ஹீரோ ஜெகதீஸ்வரன் மாதிரியே இருக்கான் இல்ல அதனாலதான்!" கொஞ்சமும் யோசிக்காமல் சொல்லிவிட்டாள் மலர்.


அவளது பதில் தந்த உவகையில் அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தவாறே, "ம்ஹும்! அப்படியா! நிஜமாவா!?" என்று ஈஸ்வர் கண்கள் மின்ன கேலியுடன் கேட்கவும்,


அப்பொழுதுதான் தான் சொன்ன வார்த்தைகளை உணர்ந்த மலர் நாக்கைக் கடித்துக்கொண்டு அவளது நாணத்தை மறைக்க வேறுபுறமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.


அவளது பாவனையில் தொலைந்தவன், "யூ நோ சம்திங் மலர்! இங்க பிரான்ஸ்ல இப்ப ஸ்பிரிங் சீசன். இங்க இதை மோஸ்ட் ரொமான்டிக் சீசன்னு சொல்றாங்க! பெரும்பாலான கல்யாணங்களை இந்த சீஸன்லதான் நடத்தறாங்க.


கலர் ஃபுல் ஃப்ளவர்ஸ், அப்படியே கண்ணைப் பறிக்குது. அதுவும் ஆப்பிள் மரங்கள் மொத்தமும் பூக்களாலேயே மூடி இருக்கு. அமேஸிங்! வெதர் அவ்வளவு பிளேசண்டா இருக்கு. சான்ஸே இல்ல மலர்!”


”ஆட்டம்... பாட்டம்... கேளிக்கைன்னு இந்த பாரிஸ் சிட்டியே எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா மலர்!" என்று இரசனையுடன் சொல்லிக்கொண்டே வந்தவன், ஒரு நொடி நிறுத்தி, ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு,


"நான் சினிமால நடிக்க ஆரம்பிச்சு, இந்த அஞ்சு ஆறு வருஷத்துல பல கன்ட்ரிஸ் போயிருக்கேன். எத்தனையோ இடங்களைப் பார்த்திருக்கேன். ஏன் இதே பாரிஸ்கு கூட ஒரு தடவ வந்திருக்கேன். ஆனா இப்ப இரசிக்கிற மாதிரி எப்பவுமே எதையுமே மனம் நிறைஞ்சு இரசிக்கல மலர். நான் இருந்த மனநிலைல, என்னால எதையும் இரசிக்க முடியல. அதுதான் உண்மை. ஆனா இப்ப... இந்த நொடி இதெல்லாம் எனக்குச் சாத்தியமா இருக்குன்னா அதுக்கு முழு காரணம் நீதான்! தேங்க்ஸ்!" என்றான் ஈஸ்வர் மனதிலிருந்தது.


அவனுடைய வர்ணனைகளிலும் ஆழ்ந்த இரசனையில் கரைந்து போனவளாக குறும்புடன், "என்ன ஹீரோ! விட்டா இந்த ஸ்க்ரீன் வழியாவே என்னை இழுத்துட்டுப் போயிடுவீங்க போல இருக்கே! இப்படிலாம் சொல்லி என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணாதீங்க! மீ பாவம்!" என்றாள் மலர் விழிகளை அகல விரித்து.


"ப்ச்! இந்தக் கடத்தல், போலீஸ் கேஸ் இதெல்லாம் இல்லாம இருந்தா, உன்னை அப்படியே இங்க அள்ளிட்டு வந்திருப்பேன் நம்ம ஹனி மூனுக்கு! இப்ப என்னோட ஹனி லேப்டாப் ஸ்க்ரீனுக்குள்ளேயும் மூன் எங்கேயோ வானத்துலயும் இருக்கு" என்று பெருமூச்சு எழ அலுத்துக்கொண்டான் ஈஸ்வர்.


உடனே, "இதுக்குதான், கல்யாணத்தை மூணு மாசம் கழிச்சி வெச்சுக்கலாம்னு சொன்னேன். இப்ப நல்லா புலம்புங்க!" என்று மலர் கோபத்துடன் பொங்கவும்,


"அதுக்கு நான் உன்னை சந்திக்காமலேயே இருந்திருக்கணும், கல்யாணம் ஆகலன்னாலும் இதே நிலைதான் ஹனி!" என்றான் ஈஸ்வர் கண்களைச் சிமிட்டியவாறே.


அவன் பாடிய முழுமதி அவளது முகமாகும் பாடல் நினைவில் வரவும், அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்தவளாகப் புன்னகைத்துக் கொண்டாள் மலர்.


"என்னனு என்கிட்ட சொன்னால் நானும் சிரிப்பேன் இல்ல?!" என்று அவன் கேட்க,


"ம்! அந்த ஜீவன்தான் அணிமாக்கும் ஹனிமாவுக்கும் வித்தியாசம் தெரியாம என்னை ஹனி ஹனின்னு கூப்பிட்றான். நீங்களும் ஏன் ஹீரோ அப்படி கூப்பிடறீங்க? எனக்குப் பிடிக்கல! அணிமான்னா என்ன தெரியுமா?" அர்த்தத்தையே மாத்தறீங்களே!" என்று மலர் கடுப்புடன் கூறவும்,


"எல்லாம் எனக்குத் தெரியும். அர்த்தம் தெரிஞ்சுதான் கூப்பிடறேன்! நீ எல்லாருக்கும் அணிமா! ஜீவனுக்கு ஹனிமா! ஆனா எனக்கு மட்டும் நீ என்னோட ஹனி... ம்மா ஹனி!" என்று உல்லாசமாகச் சொல்லி முடித்தான். அதில் நாணப்பூக்கள் முகத்தில் பூக்கப் புன்னகைத்தாள் மலர்.


அப்பொழுது மலருடைய கைப்பேசி ஒலிக்கவும் அதை எடுத்துப்பார்த்தவள், திரையை நோக்கி, "ஜெய் பேசறான். என்னனு கேட்டுட்டு வந்துடறேன் ப்ளீஸ்!" என்று சொல்லிவிட்டு, "சொல்லு ஜெய்!" என்றவாறே அழைப்பை ஏற்றாள்.


"இல்லம்மா! உன் வேலையெல்லாம் முடிச்சிட்டுப் பத்திரமா வீட்டுக்குப் போயிட்டியான்னு கேக்கத்தான் பண்ணேன்!" என்றான் ஜெய். மலர் நேரத்தை பார்க்க இரவு பதினொன்றைக் கடந்திருந்தது.


அவனுடைய குரலில் இருந்த சோர்வை கவனித்தவள், "இன்னும் வீட்டுக்குப் போகலியா ஜெய்! நீ இன்னும் சாப்பிடக்கூட இல்ல... இல்ல? ஏண்டா இப்படி உடம்பைக் கெடுத்துக்கற?" என்று அங்கலாய்ப்புடன் கேட்டுக்கொண்டே போனாள் மலர்.


அவளது முக பாவனைகளையே கவனித்துக்கொண்டிருந்தான் ஈஸ்வர் திரையில்.


"இல்ல மலர்! திடீர்னு அந்தக் கொலைகளை உடனே கண்டுபிடிக்கச் சொல்லி, எனக்கு ப்ரெஷர் கொடுக்கறாங்க மலர். இந்தக் குழந்தைகள் கடத்தல் வழக்கை வேறு ஒரு ஆஃபீஸருக்குக் கொடுக்கப்போறாங்க! அதுவும் அவர் எங்க டிபார்ட்மெண்ட்லேயே ஃபுல்லி கரப்டட். அது எல்லாருக்குமே தெரியும்.


இன்னும் ஒன் ஆர் டூ டேஸ் டைம் கொடுத்தாக்கூட போதும். மீதம் இருக்கற குழந்தைகளையும் அவங்கப் பெத்தவங்க கிட்ட ஒப்படைச்சிடுவேன். ஏனோ அதை செய்ய விடாம தடுக்கறாங்க!


ரெண்டு கேஸுமே ஒண்ணோட ஒண்ணு தொடர்புடையதுன்னு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறாங்க. மனசு வலிக்குது மலர்!" ஆற்றாமையுடன் சொல்லிக்கொண்டே போனான் ஜெய்!


அதுவரையிலும் இருந்த இலகு நிலை மாறி, அவளுடைய முகம் இருண்டு போனது. அதைக் கவனித்த ஈஸ்வர், 'என்ன?' என்பதுபோல் ஜாடை செய்யவும், "ஜஸ்ட் அ செகன்ட்!" என்று ஈஸ்வரிடம் உதட்டை அசைத்தவள், "ஈஸ்வர் மாமா வீடியோ கால்ல இருகாங்க நீயும் ஜாயின் பண்ணிக்கோ ஜெய்!" என்றாள் மலர்.


"பைவ் மினிட்ஸ்ல, ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் ஜெய்.


"எங்கிட்ட நேரில் பேசும்போது ஹீரோ! பின்னால ஈஈஈஈஈஸ்வர் மாமாவா! ம்ம்!" என்று ஈஸ்வர் மலரை வம்புக்கு இழுக்க, அதை இரசிக்கும் மனநிலை மாறிப்போயிருந்து அவளுக்கு.


"ப்ச்! ஹீரோ விளையாடாதீங்க ப்ளீஸ்!" என்று தீவிரமாகச் சொன்ன மலர், ஜெய் அந்த அழைப்பில் சேர்ந்துகொள்ளுவதற்கு முன், அவன் சொன்ன அனைத்தையும் ஈஸ்வரிடம் சொல்லிமுடித்தாள்.


அதன் பின், கையில் உணவு பொட்டலத்துடன், அவர்களுடன் இணைத்துக்கொண்ட ஜெய், அன்று நடந்த அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தான்.


"நினைச்சா இது மாதிரி க்ரைம்ஸ் நடக்காமலேயே தடுக்க முடியும் அண்ணா! அந்த அளவிற்கு எங்க டிபார்ட்மென்டுக்கு பவர் அன்ட் எபிலிட்டி இருக்கு. வேணும்னுதான் இப்படியெல்லாம் செய்யறங்க. திறமையில்லாதவங்களா, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கூஜா தூக்கறவங்களா, அவங்க ஊழலுக்கு ஒத்துழைக்கறவங்களா பார்த்து, பதவியைக் கொடுக்கறாங்க. திறமைசாலியா நேர்மையா இருக்கறவங்கள, இங்கயும் அங்கேயும் தூக்கி அடிச்சு, அலைக்கழிக்கறாங்க.”


”எங்க ஏடிஜிபி... ரொம்ப நல்லவர்ண்ணா! நேர்மையானவர்! ஆனா அரசியல் தலையீடு அதிகமா இருக்கு. அவராலயும் ஓரளவிற்குமேல எங்களுக்கு சப்போர்ட் பண்ண முடியல!" என்றான் ஜெய் வருத்தத்துடன். சொல்லிக்கொண்டே வந்தவன், டிப்புவைப் பற்றியும் ஈஸ்வரிடம் சொல்ல, முதலில் சாதாரணமாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், ஸ்ரீபுரம், டிப்பு என்ற பெயர்களைக் கேட்டதும் உடல் அதிர்ந்து போனான்.



அணிமா-32


"டிப்புவோட அப்பா பேர் என்ன சொன்ன ஜெய்!" என்று அதிர்வுடன் ஈஸ்வர் கேட்க, "ஏண்ணா?! அவர் பேரு சோமய்யா!" என்றான் ஜெய் நிதானமாக, ஈஸ்வரின் முக மாறுதல்களை ஆராய்ந்தவாறே.


"ஒண்ணுமில்ல ஜெய்! சும்மாதான் கேட்டேன்" என்றான், முயன்று இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈஸ்வர். ஆனாலும் அவனது முகத்தில் சொல்லொணா துயர் படர்ந்திருந்தது. அது மலருக்கு நன்றாக விளங்கவும்,


"என்ன ஆச்சு ஹீரோ! அவங்களை உங்களுக்கு தெரியுமா?" என்று அவள் கேட்க, "இல்ல மலர், ஆனா இதுமாதிரி விஷயங்களைக் கேள்விப்படும்போது மனசுக்கு வேதனையாக இருக்கும்தான!" என்ற ஈஸ்வர், "எனக்கு டயர்டா இருக்கு. நான் நாளைக்குப் பேசறேன் பை!" என்று சொல்லிவிட்டு அழைப்பிலிருந்து விலகினான்.


அந்த நேரத்திற்கு மலர், ஈஸ்வர் சொன்னவற்றை நம்பினாலும், "பை! குட் நைட்!" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்த ஜெய்யின் மனதில் சந்தேகம் எழத்தான் செய்தது.


***


அடுத்த நாளே, விசாரணைக்காகச் சென்ற நேரத்தில், அருகில் சென்ற வாகனத்தில் உரசி ஜெய்யின் கை, கால்கள் என ஆழ்ந்த சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்க, அது விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்ற ஐயம் எழுந்து அவனுக்கு.


வேலைக்குச் செல்ல இயலாமல் மனதில் எழுந்த புழுக்கத்துடன் ஜெய் வீட்டில் இருக்க அண்ணனுடன் மலர் அங்கே வந்து அவனைப் பார்த்துவிட்டுச் சென்றாள்.


அடுத்து வந்த தினங்களில் ஈஸ்வர் முழு நேரமும் படப்பிடிப்பில் மூழ்கிவிட மலரால் அவனைத் தொடர்புகொள்ளவே இயலவில்லை.


எந்தவித சுவாரஸ்யமும் இன்றி வெறுமையுடன் கழிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு அலுவலகம் வந்தான் ஜெய்.


அவனை அழைத்த அவனுடைய மேலதிகாரி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் அவனை நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்து அத்துடன் அதற்கான அலுவலக ரீதியான கடிதத்தையும் அவனிடம் கொடுத்தார்.


அன்று மாலையே, அவரை சந்திக்க ஜெய்க்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கான காரணங்கள் எதுவுமே அதில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் காரணம் என்னவென்று ஓரளவிற்கு அவனால் ஊகிக்க முடிந்தது.


அடுத்த விமானத்திலேயே டெல்லி நோக்கிப் பயணப்பட்டான் ஜெய். அவன் நேரே சென்றது மத்திய அமைச்சர் கருணாகரனின் அலுவலகத்திற்குதான். அவனை மலர் திருமண வரவேற்பில் ஒரே ஒரு முறை சந்திருக்கிறான். செங்கமலம் பாட்டி இருவரையும் பரஸ்பரமாக அறிமுகம் செய்திருந்தார். அன்று ஒரு கைக்குலுக்கலுடன் விலகிக்கொண்டான் ஜெய்.


இன்று அவர் இவனைச் சந்திக்க அழைப்பு விடுத்த பொழுதே இதற்குப்பின் ஈஸ்வர்தான் இருக்க வேண்டும் என்பது புரிந்தாலும், முழுமையான காரணம் விளங்கவில்லை ஜெய்க்கு.


அவனை அன்பான புன்னகையுடன் வரவேற்ற கருணாகரன், "ஈஸ்வர் எனக்குக் கால் பண்ணியிருந்தார் மிஸ்டர் ஜெய்!" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.


"இப்ப இந்தக் குழந்தைகள் கடத்தல் நம்ம நாட்டுல அதிக அளவில் நடந்துட்டு இருக்கு. உண்மைதான்! அதைக் கட்டுப்படுத்தற வேலைகளும் நடத்துட்டுதான் இருக்கு. இருந்தாலும் போதுமான அளவுக்கு இல்லைன்னுதான் சொல்லணும். ஈஸ்வர் உங்களைப் பற்றிச் சொன்னான்" என்று சொல்லிவிட்டு, "சொன்னார்!" என்று அதைத் திருத்தியவன்,


"இண்டியா லெவல்ல, ஒரு தனிப்படை அமைக்கலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். அதுக்கு தலைமைப் பொறுப்பில் நேர்மையான சீனியர் ஆஃபீஸர்ஸ் மூணு பேரை செலக்ட் பண்ணியிருக்கோம். அவங்களுக்கு கீழ பனிரெண்டு ஆஃபீசர்சை செலக்ட் பண்ணியிருக்கோம். அதுல சவுத் இண்டியால நாலு ஸ்டேட்டுக்கும் சேர்த்து உங்களை அப்பாய்ண்ட் பண்ணி இருக்கோம்.


அதுவும் நேரடியாக எஸ்.எஸ்.பியா உங்களை ப்ரமோட் பண்ணியிருக்கேன், வித் அன் லிமிடெட் பவர்ஸ். நீங்க நேரடியா எப்ப வேணாலும் என்னை காண்டாக்ட் பண்ணலாம். உங்களோட ஒர்க் ப்ரோட்டாகால் எல்லாம் கிளியரா உங்களுக்கு வந்துசேரும்." என்று தெளிவாக கம்பீரமாக சொல்லி முடித்தான் கருணாகரன்.


பிறகு சில நிமிட அலுவலக ரீதியான உரையாடலுக்குப் பிறகு, நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஜெய்.


ஈஸ்வர் அவனை கைப்பேசியில் அழைத்த அந்த நிகழ்வு, கருணாகரனின் மனக்கண்ணில் வந்து மறைந்தது.


ஈஸ்வருடைய தனிப்பட்ட எண்ணை அவனது கைப்பேசியில் பதிந்து வைத்திருந்தான் கருணாகரன். அந்த எண் அவனது கைப்பேசியில் ஒளிரவும், தயங்காமல் அந்த அழைப்பை ஏற்றான்.


எதிர் முனையில் வழிந்த மௌனத்தில் தொண்டையைச் செருமிக்கொண்டு, "சொல்லு ஜகா! நான் என்ன பண்ணனும்! காத்துட்டு இருக்கேன்டா!" என்று கருணா நெகிழ்ச்சியுடன் கேட்கவும்,


"எனக்குன்னு தனிப்பட்ட முறைல நீ எதுவும் செய்ய வேண்டாம். நீ உட்கார்ந்துட்டு இருக்கற பதவிக்கு உண்மையா ஒரு நல்ல காரியத்தை செய், அது போதும்!" என்றான் ஈஸ்வர் அவனது கெத்து குறையாமல்.


"என்ன சொல்ல வர புரியல!" என்று உணர்வற்று கருணா கேட்கவும்,


"நீதானே சைல்ட் வெல்ஃபேர் மினிஸ்டர்? நம்ம நாட்டுல எந்த ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் நீதான பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பிய ஈஸ்வர், அனைத்தையும் அவனிடம் சொல்ல,


"என்ன பண்றது ஜகா! நானும் என்னால ஆனதைச் செஞ்சிட்டுதான் இருக்கேன். ஓரளவுக்கு மேல செய்ய முடியாம என் கையைக் கட்டிப்போட்டுடறாங்க" என்றான் கருணாகரன் அவனது உண்மை நிலையை மறைக்காமல்.


"அப்படினா... பதவியை காப்பாத்திக்க நீயும் பயப்படுறேன்னு சொல்லு" என்று ஈஸ்வர் காரமாகக் கேட்கவும்,


அதில் அவனது தன்மானம் சீண்டப்பட, "யாரு... நானா? என்னைப் பகைச்சிட்டு இங்க எவனும் ஆட்சி பண்ண முடியாது, அது உனக்கும் நல்லாவே தெரியும்?" என்றான் கருணா சவாலாக.


"அப்படினா நீயே நியாயமா என்ன பண்ணணுமோ பண்ணு... பை!" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் ஈஸ்வர்.


அவன் வார்த்தைகளில் பொதிந்திருந்த நியாயம் மனதைச் சுட மூன்றே நாட்களில் அனைத்தையும் செயலாற்றி முடித்திருந்தான் கருணாகரன், பலமான எதிர்ப்புகளுக்கு நடுவே.


நள்ளிரவு ஒரு மணி வாக்கில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தான் ஜெய், நிறைவான மனதுடன்.


அதே நேரம் அவர்களுடைய படுக்கை அறைக் கதவைத் தள்ளிக்கொண்டு சத்தம் எழுப்பாமல் உள்ளே நுழைந்த ஈஸ்வர் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த இரவு விளக்கின் மெல்லிய ஒளியில் கட்டிலில் பார்க்க, அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் மலர். அவள்மேல் காலைப் போட்டவாறு உறங்கிக்கொண்டிருந்தான் ஜீவன். அந்தக் காட்சி அவனது மனதை நெகிழச்செய்ய, ஜீவனின் தலையை மெதுவாக வருடி, அவனது உச்சியில் மென்மையாக முத்தமிட்டான் ஈஸ்வர்.


அவனது அந்த மெல்லிய தீண்டலில் கூட அவனது தாய்மாமனை உணர்ந்தவன், ஏற்கனவே நெகிழ்ந்திருந்த ஈஸ்வரின் மனதை மேலும் இளக வைக்கும் விதமாக 'ஹீரோ!' என்று முனகியவாறு திரும்பி படுக்க,


அவனது அசைவினால் உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்த மலர், அங்கே ஈஸ்வரைக் காணவும் அந்த நேரத்தில் அவன் வரவைத் துளியும் எதிர்பார்க்காததால் அது கனவோ என்று திகைத்து விழித்தாள்.


"நான்தான் ஹனி! உன்னோட ஹீரோ!" என்று மெல்லிய குரலில் சொல்லி, அவளுடைய கன்னத்தை ஆதுரமாக வருடினான் ஈஸ்வர்.


அவனது கண்கள் கலங்கி, பளபளத்தது அந்த மெல்லிய வெளிச்சத்திலும் நன்றாகவே மலரின் விழிகளுக்கு தப்பாமல் புலப்பட்டது.


ஈஸ்வருடைய கலங்கிய முகத்தைப் பார்த்து திடுக்கிட்டவள் திட்டமிட்டதை விட பத்து நாட்கள் முன்னதாகவே அவன் திரும்பி விடவும் அவனது உடல்நிலைதான் சரியில்லையோ எனப் பயந்துதான் போனாள்.


அதனால் ஏற்பட்ட பதட்டத்துடன், அவனது நெற்றியில் கை வைத்து பார்த்தவாறே, "உடம்பு ஏதாவது சரியில்லையா? இல்ல வேற ஏதாவது ப்ராப்ளமா?! ஷூட்டிங் கேன்சல் ஆயிடுச்சா?" என்று அவள் கேட்டுக்கொண்டே போக,


"ப்ச்! ஒண்ணுமில்லமா. என் பார்ட் வரைக்கும் சீக்கிரமே எடுக்கச்சொல்லி, முடிச்சிட்டு உடனே கிளம்பி வந்துட்டேன். என்னவோ எல்லார்கூடயும் டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோனிச்சு" என்ற ஈஸ்வர் குளியறைக்குள் நுழைந்துகொண்டான்.


அவன் குளித்து வேறு உடைக்கு மாறி வரவும், "ஏதாவது சாப்பிடறீங்களா?" என்று கேட்டாள் மலர்.


"வேண்டாம், எனக்கு தூக்கம் வருது, நீயம் தூங்கு!" என்று சொன்ன ஈஸ்வர், ஜீவனின் பக்கத்தில் போய் படுத்துக்கொண்டு, அவனுடன் சேர்த்து மலரையும் அணைத்தவாறு, உறங்கிப்போனான்.


***


அடுத்தநாள் கண் விழிக்கும் பொழுதே, அருகினில் உறங்கிக்கொண்டிருந்த மாமனைக் கண்ட ஜீவன், மகிழ்ச்சியில், "ஹனீமா! ஹீரோ வந்துட்டாங்க!" என்று குரல் எழுப்பிக்கொண்டே குளியலறைக்குள் போனவன் பல் துலக்கிவிட்டு வெளியே வந்து ஈஸ்வரை இறுக்க அணைத்து அவன் முகமெங்கும் முத்தம் கொடுக்க, அதை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தனர் சுபாவும் ஜீவிதாவும்.


சகோதரனுக்கு இரு புறமும் அவர்கள் இருவரும் வந்து அமர்ந்துகொள்ள, "ஏன் சுபா மாடி ஏறி வந்த நானே வந்திருப்பேனே!" என்றான் ஈஸ்வர்.


"பரவாயில்லை ஜகா! இப்ப நான் கொஞ்சம் ஓகேதான்" என்றவள், "நீ வந்துட்டன்னு மலர் சொன்னா. உன்னைப் பார்க்கணும்னு தோனுச்சு, அதான் ஜீவியை அழைச்சிட்டு மெதுவா படி ஏறி வந்தேன்!" என்று அவனுக்கு அருகில் படுத்துக்கொண்டிருந்த மகனுடைய தலையைக் கோதியவாறே,


"இவன் உன்கிட்ட நல்லாவே ஓட்டிகிட்டான் இல்ல?!" என்று அதிசயித்தவள், "இனிமேல் எனக்கு என்ன ஆனாலும் கவலை இல்ல ஜகா!" என்று வேதனையுடன் முடித்தாள்.


"அக்கா!" என்று ஜீவிதா பற்களைக் கடிக்க,


"அறைஞ்சேன்னா தெரியுமா? குழந்தையைப் பக்கத்துல வெச்சிட்டு பேசுற பேச்சையா பேசுற நீ!" என்று ஈஸ்வர் அவளைக் கடியவும், மூவருடைய முகத்தையும் மிரட்சியுடன் மாற்றி மாற்றிப் பார்த்தான் ஜீவன்.


அதை உணர்ந்தவன் போன்று, வரவழைத்த புன்னகையுடன், "நம்ம ஜீவன் சீக்கிரமே பெரிய்ய்யவனா வளர்ந்து, உன்னை என்னை நம்ம எல்லாரையும் பத்திரமா பார்த்துப்பான்!" என்று சொன்ன ஈஸ்வர்,


ஜீவனின் முகத்தைப் பார்த்து, "கரெக்ட் தானே ஜீவன்?!" என்று கேட்கவும்,


"ஆமாம்மா! நம்ம ஹீரோ மாதிரி, அம்மா, பாட்டீஸ், ஹனி எல்லாரையும் பத்திரமா பார்த்துப்பேன்!" என்றான் ஜீவன்.


"ஓகே குட் பாய்! நீ போய் உன் ஹனி என்ன செய்யறான்னு பார்த்துட்டு, அப்படியே எனக்கு காஃபி எடுத்துட்டு வர சொல்லு என்ன!" என்று சொல்லி ஜீவனை அங்கிருந்து அனுப்பிய ஈஸ்வர், பின்பு சுபாவை நோக்கி,


"நீங்க ரெண்டுபேரும் இந்த மட்டுமாவது என் கிட்ட வந்து சேர்ந்தீங்களேன்னு, நிம்மதியில் இருக்கேன் சுபா! நீ ஏன் இப்படி பேசற? அவன் சின்ன குழந்தைமா! சுத்தி எத்தனை பேர் இருந்தாலும், அவனுக்கு அம்மா வேணும்!”


”உனக்கு தெரியாது சுபா ஒரு குழந்தையை உயிருடன் பறிகொடுத்துட்டு ஒரு தாய் என்ன துன்பப்படுவான்னு உனக்குத் தெரியாது! அம்மா, அப்பாவோட நிழல் இல்லாம குழந்தைகள் தவிக்கும் தவிப்பை நீ நேர்ல பார்க்கல! இனிமேல் இப்படியெல்லாம் பேசாத" என்றான் அதன் வலியை முழுவதும் உணர்ந்தவனாக.


"தெரியும் ஜகா! நல்லாவே தெரியும்! குடும்பத்தை இழந்து நான் இதை அனுபவிச்சிருக்கேன்!" என்றவளுக்குப் பழைய நினைவுகள் தந்த வலியில், மூச்சு திணற ஆரம்பித்தது.


"சுபா என்ன ஆச்சும்மா?" என்று ஈஸ்வர் பதற அதைக்கண்டு பதறியவாறு தமக்கையைப் பிடித்துக்கொண்டாள் ஜீவிதா.


அப்பொழுது கையில் காஃபியுடன் அங்கே வந்த மலர் அதைக் கவனிக்கவும், கீழே ஓடிச்சென்று, மாத்திரையை எடுத்து வந்து சுபாவை உட்கொள்ளச்செய்து, "ஏன் அண்ணி இப்படி உணர்ச்சிவசப்படுறீங்க? அதுதான் எல்லா பிரச்சினையும் முடிஞ்சுபோச்சே!” என்று கடிந்துகொண்டு, அவளைப் படுக்க வைத்தாள்.


ஜீவன் அன்னையின் அருகில் அமர்ந்துகொண்டு, அவளது நெஞ்சை நீவி விட, சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பினாள் சுபா.


பின்பு அவர்களுடைய அறைக்குப் போகவேண்டும் என்று அவள் சொல்லவே, சகோதரியைத் தனது கைகளில் தூக்கிச்சென்று பாட்டியின் அறையில், அவளைப் படுக்க வைத்தான் ஈஸ்வர்.


***


காலை உணவு முடித்து, மலர் அவர்களுடைய அறைக்கு வரவும், அப்பொழுது அவளுடைய கைப்பேசி ஒலிக்க அதை ஏற்ற மலர், ஸ்பீக்கரில் போட்டுவிட்டு "சொல்லு ஜெய்!" என்றாள்.


"செம்ம ந்யூஸ் டா மச்சி! மீதம் இருந்த குழந்தைங்களோட பேரண்ட்ஸையும் ட்ரேஸ் பண்ணிட்டோம் தெரியுமா? சீக்கிரமே அவங்க அப்பா அம்மாவைப் பார்க்க போறாங்க!" என்று மகிழ்ச்சியுடன் சொன்னவன்,


ஈஸ்வரும் அவன் பேசுவதை கவனிக்கிறான் என்பதை உணர்ந்து, "ஹாய் அண்ணா! இன்னும் ஒண்ணு இருக்கு! அது எங்க டிபார்ட்மென்ட் சீக்ரட்! இருந்தாலும் உங்க ரெண்டுபேர் கிட்ட மட்டும் சொல்றேன்!" என்று சொல்லிவிட்டு,


"அந்த மர்டரர் யாருன்னு ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. அவன் அந்த டிப்புவோட சித்தப்பாவா இருக்கும்னு ஒரு டௌட்! அவன் பேரு மல்லிகார்ஜுனா!" என்றான் ஜெய். அவனது குரல் அவனுடைய உற்சாகத்தின் அளவைப் பறைச் சாற்றியது.


அவன் அதைச் சொன்ன அடுத்த நொடி கடினமாக மாறிப்போன தனது முகத்தை மலருக்குக் காண்பிக்க விரும்பாமல் அதை மறைக்க சட்டென அங்கிருந்து வெளியேறிச் சென்றான் ஈஸ்வர்! காரணம் புரியாமல் ஜெய் அழைப்பிலேயே இருப்பதையும் மறந்து திகைத்து நின்றாள் மலர்.



Recent Posts

See All
Anima - 30

அணிமா-30 அங்கே கூடி இருந்த அனைவருமே நெகிழ்ச்சியில் உறைந்துபோயிருந்தனர். அந்த உறைநிலையை ஜெய்தான் கலைத்தான் தன் உரை மூலமாக. "கிட்டத்தட்ட...

 
 
 
Anbenum Idhazhgal Malarattume 39 & 40 [Final Episodes]

அணிமா-39 ஆரம்பக்கட்ட மகப்பேறு காலத்தில் மிகவும் பத்திரமாக இருக்க வேண்டிய காரணத்தால் ஆபத்தை எதிர்கொள்ளும் எந்த வேலையிலும் ஈடுபட அவளை...

 
 
 
Anbenum Idhazhgal Malarattume 35 & 36

அணிமா-35 ஒரு வருடத்திற்கு முன்... மல்லிகார்ஜூன் மும்பையில் இருக்கும் பிரபல க்ளப் ஒன்றில் பார் பவுன்சராக வேலை செய்துகொண்டிருந்த சமயம்...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page