top of page

Anbenum Idhazhgal Malarattume! 5

Updated: Mar 30, 2023

அணிமா 5


பாட்டியின் முகம் சட்டென மாறிப்போகவும், கதவு வரை சென்ற மலர் மீண்டும் திரும்ப வந்து செங்கமலம் பாட்டியின் கன்னங்களைக் கிள்ளி, "க்யூட் பாட்டி! உம்மா!" என்று சொல்லிவிட்டு,


"பாட்டி, பொண்ணுங்க அவங்கள அழகு படுத்திக்கிறதே மத்தவங்கள அட்ராக்ட் பண்ணத்தானு நினைக்கறவ நான். ஸோ... நான் போடற டிரஸ் என்னோட சௌகரியத்த பேஸ் பண்ணிதான் இருக்கும். அதனால நான் இப்படித்தான் இருப்பேன். நீங்க தப்பா நினைக்காதீங்க. பை பாட்டீஸ்! பை ஆல்!" என்றவாறு சாருமதியைப் பார்த்துப் புன்னகைத்து தலை அசைத்து விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றாள் மலர்.


அவள் சென்ற திசையையே சில நொடிகள் கண் இமைக்காமல் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் செங்கமலம் பாட்டி.


பிறகு மதிய உணவை உண்டுவிட்டு பழைய கதைகளை மாலை வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு அதன் பின் அங்கிருந்து கிளம்பிச்சென்றனர் செங்கமலம் பாட்டியும் சாருமதியும்.


பழைய சொந்தங்களை சந்தித்த மகிழ்ச்சியில் இரு குடும்பத்தினருமே திளைத்திருந்தனர்.


***


சில தினங்கள் கடந்த நிலையில், அங்கே வருவதாக முன்னதாகவே தகவல் கொடுத்துவிட்டு வெங்கடேசனின் வீட்டிற்கு வந்திருந்தார் ஈஸ்வரின் சித்தப்பாவான கோல்டன் குமார்.


பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு, சூடாமணி அவரை அன்புடன் உபசரிக்க, தனது சொந்த தமக்கையின் நினைவில் அவரது கண்கள் கலங்கின. உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டவர், அவரது வழக்கமான கலகலப்பான பாணியில், அவரது சித்தப்பா மற்றும் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தார்.


அப்பொழுது மலர் வீட்டிற்குள் நுழையவும் அவளைப் பார்த்தவர், "என்னம்மா பொண்ணு நீ எப்படி இருக்க?” என்று எதார்த்தமாய் விசாரிக்க, அவள் அடையாளம் புரியாமல் திகைத்து விழிக்கவும், "மலர்! குமார் மாமாடா. செங்கமலம் பாட்டி நம்ம எல்லாரைப் பத்தியும் சொல்லியிருக்காங்க, அதான் பல நாள் பழகின மாதிரி உங்கிட்ட இவ்ளோ உரிமையா பேசறான்" என்று சரோஜா பாட்டி சொல்ல, கரம் குவித்து, "நல்லா இருக்கேன் மாமா!" என்று பதில் சொன்னாள்.


பின்பு அவள் சென்று சுந்தரம் தாத்தாவின் அருகில் உட்கார்ந்துகொள்ள, தொண்டையைச் செருமிக்கொண்ட குமார், "சித்தப்பா! ஒரு முக்கியமான விஷயம். அதைப் பேசத்தான் நான் இன்னைக்கு இங்க வந்ததே" என்று பீடிகையுடன் ஆரம்பித்தவர், சுந்தரம் அவரைக் கூர்ந்து கவனிக்கவும் தொடர்ந்தார்.


"நம்ம செங்கமலம் பெரியம்மா வீட்டுல அவங்க பேத்தி ஜீவிதாவுக்கு வரன் பார்த்துட்டு இருக்காங்க. அன்னைக்கு இங்க வந்துட்டுப் போன பிறகு உங்க எல்லாரையும் சந்திச்சதுல, விட்டுப்போன சொந்தம் மறுபடியும் சேர்ந்ததுல பெரியம்மாவுக்கு ரொம்பவே திருப்தி. அதனால அவங்கப் பேத்தியை உங்கப் பேரன் பிரபாகருக்குப் பேசலாமான்னு கேட்டாங்க? எனக்குமே அது சந்தோஷம்தான்! பரந்தாமன் அண்ணா இறந்த பிறகு பெரியம்மா வீட்டுல எல்லா நல்லது கெட்டதும் நான்தான் முன்ன நின்னு செய்யறது”


குமார் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அவரது பார்வை அவ்வப்பொழுது அங்கே கைப்பேசியைக் குடைந்து கொண்டு உட்கார்ந்திருந்த மலரிடம் சென்று மீண்டது.


தொடர்ந்தார் குமார், "அதனாலதான் நானே நேர்லயே கேட்கலாம்னு வந்தேன்! உங்க எல்லாருக்கும் சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்!" என்று ஒருவாறு கோர்வையாகப் பேசி முடித்தார்.


அடுத்த நொடி சொல்லி வைத்தாற்போல சுந்தரம், சரோஜா, சூடாமணி, மலர் நால்வரும் சம்மதத்திற்காக வெங்கடேசனுடைய முகத்தைப் பார்க்கவும் யோசனையுடன் அவர்களைப் பார்த்தவர், "அவங்க ரொம்ப பெரிய இடம். எதுக்கும் எனக்கு ஒரு நாலு நாள் யோசிக்க டைம் கொடுங்க மச்சான்!" என்று அப்போதைக்கு அந்தப் பேச்சுக்குத் தொடரும் போட்டுவிட அங்கிருந்து கிளம்பிப் போனார் குமார்.


அடுத்த நாளே மாமனாரைத் தனியே அழைத்துச் சென்ற வெங்கடேசன், "தெரிஞ்சவங்க மூலமா விசாரிச்சேன் மாமா! உங்க ஊருதான அவங்க! அவங்க வீட்டுப் பெரிய பொண்ணு, எல்லா ஏற்படும் செஞ்ச பிறகு கல்யாணத்துக்கு முதல் நாள் பணம் நகை எல்லாத்தையும் எடுத்துட்டு யாரோடவோ ஓடிப் போயிட்டாளாமே. ஊருக்குள்ள அவங்களுக்குப் பெரிய தலை குனிவா போய், ஊரை விட்டே வந்துட்டாங்களாம்! இது வரைக்குமே திரும்ப ஊர் பக்கமே போகலியாமே! இப்ப வசதி வந்துட்டதால எல்லாத்தையும் பூசி மொழுகறாங்களோன்னு தோணுது! அதனாலதான் கொஞ்சம் யோசனையா இருக்கு!" என்று சொல்ல,


தொண்டையைச் செருமிக்கொண்ட சுந்தரம், "இங்க வந்த அன்னைக்கே செங்கமலம் எல்லாத்தையுமே எங்ககிட்ட சொல்லிட்டா மாப்ள! பரந்தாமன் கூட அந்தப் பிரச்சினையாலதான் உயிரையே விட்டானாம். அதுக்குப் பிறகு குமார்தான் ஈஸ்வருக்கு சினிமால நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கான். ஏதோ கஷ்டப்பட்டு அவனும் முன்னுக்கு வந்துட்டான். தங்கைக்கு கல்யாணம் செஞ்சிட்டுதான் தன்னுடைய கல்யாணப் பேச்சையே எடுக்கணும்ன்னு ஈஸ்வர் சொல்லிட்டானாம். நடந்து போனதையெல்லாம் கிளறாத இடமா பேத்திக்கு பார்க்கணும்னுதான் செங்கமலம் சொல்லிட்டு இருந்தா! ஆனா இப்படி நம்மக்கிட்டயே சம்பந்தம் பேசுவான்னு நான் எதிர்ப்பார்க்கல.


அதனால மேற்கொண்டு நல்ல விஷயம் பேசறதுல எந்தத் தப்பும் இல்லைன்னுதான் நினைக்கிறேன் மாப்ள!" என விளக்கினார் பெரியவர்.


அவர் அவ்வளவு தெளிவாகச் சொல்லவும் வெங்கடேசனுக்கு மறுத்துக் கூற மனம் எழவில்லை. உடனே மகனுடன் கலந்து பேசி ஒருவாறாக தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.


முதல் கட்டமாக பிரபா மற்றும் ஜீவிதா இருவரின் ஜாதகமும் கைமாற, அதுவும் நன்றாகப் பொருந்தி வந்தது. முதலில் மார்கழி மாதம் என்று அனைவரும் தயங்கவும், "பெருமாளுக்கு உகந்த மாசம், அதனால தப்பு ஒண்ணும் இல்ல" என்று சுந்தரம் தாத்தா சொல்லிவிடவே முதலில் அவர்கள் வீட்டிற்குச் சென்று பெண்ணை நேரில் பார்த்துவிட்டு ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்று முடிவு செய்யப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக வளசரவாக்கத்தில் இருக்கும் ஜெகதீஸ்வரனின் வீட்டிற்கு சுந்தரம் தாத்தா சரோஜா பாட்டி சகிதம் பெண் பார்க்கவென வந்திருந்தனர் வெங்கடேசன் குடும்பத்தினர். உடன் அச்சுதன் மற்றும் சாவித்ரி. பிரபா மற்றும் ஜெய் இருவரின் கார்களிலும் வந்து இறங்கினார் அனைவரும்.


எல்லோரையும் வரவேற்கவென பாட்டியுடன் போர்டிகோவிற்கு வந்தான் ஈஸ்வர். ஜெய்யின் காரை ஓட்டி வந்த மலர் அதை நிறுத்தி விட்டுக் கடைசியாக வந்துகொண்டிருந்தாள்.


மிகவும் எளிய சந்தன நிற பருத்தியினால் ஆன சுடிதாரில் ஒப்பனையே இன்றி இருந்தாலும் அசர வைக்கும் அழகில் வந்து கொண்டிருந்தவளைப் பார்த்த ஈஸ்வர் வியப்பின் உச்சிக்கே சென்றான்!


இருவரும் சேர்ந்து வரவேற்று உள்ளே அழைத்துச்செல்ல அங்கே அவர்களுக்காகக் காத்திருந்த குமாரும் அவரது மனைவியும் அனைவரையும் உட்காரச் சொல்லி உபசரிக்கவும், சாருமதி எல்லோரின் விருப்பத்திற்கேற்ப விசாரித்து காஃபி முதலிய பானங்களைக் கொடுத்து கவனித்தார்.


பின்பு ஜீவிதா அழைத்து வரப்பட பச்சை நிறப் பட்டுப்புடவையில் மிதமான நகைகள் அணிந்து, எளிய ஒப்பனையுடன் குடும்பப்பாங்காக இருந்த ஜீவிதாவை அனைவருக்கும் பிடித்துப்போனது.


ஜீவிதாவும் பிரபாவும் தனிமையில் பேசிக்கொள்ள, பெரியவர்கள் திருமண பேச்சைத் தொடங்கினர். தனியாகச் சென்று அங்கே இருந்த ஜன்னல் அருகில் நின்றுகொண்டு தனது கைப்பேசியில் மூழ்கியிருந்தாள் மலர்.


அவளையே பார்த்துக்கொண்டிருந்த செங்கமலம் பாட்டி அவளை நெருங்கி வரவும், அதைக் கவனித்தவள் ‘பட்டென’கைப்பேசியை லாக் செய்தாள்.


"என்ன மலரு! அண்ணனுக்கு பொண்ணு பார்க்க வந்திருக்க. இன்னைக்கு ஒரு நாளாவது புடவைக் கட்டிட்டு வந்திருக்கலாமில்ல? ம்ப்ச்!" என்று வேண்டுமென்றே பாட்டி அவளை வம்புக்கு இழுக்க,


"நீங்க கூடத்தான், காலத்துக்குத் தகுந்த மாதிரி ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட், அட்லீஸ்ட் ஒரு சுடிதாராவது போட்டிருக்கலாமில்ல? ஏன் இப்படி புடவைக் கட்டியிருக்கீங்கன்னு நான் கேட்டேனா என்ன?" என மலர் பதில் கொடுக்கவும்,


"ம்க்கும்! ஆமாண்டியம்மா! கிழ குதிரைக்கு கில்ட் சாமான் மாட்டின மாதிரி நான் இப்படியெல்லாம் சிங்காரிச்சிட்டாலும்!" என்று நொடித்துகொண்டவர், "கல்யாணம் நல்லபடியா முடியட்டும் அப்பறம் இருக்கு உனக்கு" என்று அவளை மிரட்ட,


"பாட்டி உங்களுக்கு முழுசா என்னைப் பத்தி தெரியாது. என்கிட்ட சவால் விடாதீங்க" என்ற மலரின் பதிலில், "அதையும்தான் பார்க்கலாம், என் வயசுக்கு உன்னை மாதிரி ஆயிரம் ராங்கியைப் பார்த்திருக்கேன்!" என்று கூறிவிட்டு குமார் அவரை அழைக்கவும் அங்கிருந்து சென்றார் செங்கமலம் பாட்டி.


அவர்களையே கவனித்துக்கொண்டிருந்த ஈஸ்வருக்கு சிரிப்பே வந்துவிட்டது. மலர் அங்கே வந்த சில நிமிடங்களிலேயே அதுவரை அவன் மனதில் இருந்த துளி சந்தேகமும் நீங்கி அவள்தான் அந்த மாமியை ஒரு வழி செய்துவிட்டுச் சென்ற அணிமாமலர் என்பது அவனுக்குத் தெளிவாக புரிந்துபோனது.


அதுவும் அந்த பைபாஸ் சாலையில் ஒரு ஆடவனை மலர் வெளுத்து வாங்கியது அவனது நினைவில் வரவும், 'பாட்டி அன்னைக்கே சொன்னேன் அது ஒரு பொண்ணுன்னு! அது இவதான்னு உங்களுக்குத் தெரிஞ்சா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க!' என்று மனதில் நினைத்தவனுக்கு மேலும் சிரிப்பு வர மிகவும் முயன்று அதை அடக்கினான் ஈஸ்வர்.


தன்னை யாராவது பார்க்கிறார்களா என அவன் சுற்றும் முற்றும் பார்க்க மலர் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு அவனது அருகில் வந்தவள், "ஹீரோ! சிரிப்பு வந்தா வாய்விட்டு சிரிக்கணும். வர சிரிப்பை இப்படி கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்தக் கூடாது" என்று சொல்லி புன்னகைக்க,


"ஹாய்! கிரேட்டல்! நீ கூட இப்படி வயசானவங்க கிட்ட சரிக்கு சமமா நிற்க கூடாது" என அவன் சொல்லவும்,


"யாரு, உங்க பாட்டியா... அவங்களா வயசானவங்க? என்ன எனர்ஜியோட பேசறாங்க. சும்மா கிண்டல் பண்ணாதீங்க ஹீரோ!" என்று அவள் சொல்லவும் அவன் புன்னகை மேலும் விரிந்தது.


ஆமாம்! அது என்ன என்னை கிரேட்டல் கூப்பி..!" என அவள் பாதி கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே அதற்கான காரணம் அவளுக்குப் புரிய நாக்கைக் கடித்து, தலையில் தட்டிக்கொண்டாள் மலர்.


"பல்பு எரிஞ்சிடுச்சுப் போல இருக்கு!" என அவன் புருவத்தை உயர்த்திச் சிரிக்க, , "இப்படி பக்கத்துல நிக்காதீங்க. உங்களுக்கு ஷாக் அடிச்சுட போகுது!" கிசுகிசுப்பாக இரகசியம் போல் சொல்வதுபோல் அவள் சொல்லவும்,


கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டு, "உண்மையிலேயே ஷாக் அடிச்சாலும் ஆச்சரியப்பட்றதுக்கில்ல" என்று சொன்ன ஈஸ்வர்,


"அது இருக்கட்டும், நீ என்ன அடிக்கடி இந்த வில்லனை ஹீரோன்னு கூப்பிட்டுட்டு இருக்க?" என்று அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட, என்ன பதில் சொல்வது புரியாமல் ஒரு நொடி திகைத்தவள், "அது சும்மாதான் அப்படிக் கூப்பிட்டேன்" என்று சமாளிப்பாகப் பதில் சொல்லவும், சின்னதாக மலர்ந்த புன்னகையுடன் அங்கிருந்து சென்றான் ஈஸ்வர்.


வியப்புடன் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார் செங்கமலம் பாட்டி. அதைக் கவனித்த சரோஜா பாட்டி, "எங்க குடும்பத்துல இவ ஒருத்திதான் பெண் குழந்தை. சின்ன வயசுல இருந்தே சுத்தி சுத்தி என் பேரனுங்க கூடவே வளந்துட்டா. அதுவும் ஜெய் கூட சேர்ந்துட்டு குங்க்ஃபூ வேற கத்துக்கிட்டாளா. அதனாலதானோ என்னவோ இந்தத் தயக்கம் பயம் இதெல்லாம் அவளுக்குக் கொஞ்சமும் இல்லாம போச்சு. அவ ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டு. அதே மாதிரி ரொம்ப ரொம்ப நேர்மையா இருப்பா!" என்று பேத்தியின் புகழ் பாடினார்.


பேத்தியைத் தவறாகப் புரிந்துகொள்வார்களோ என்ற கவலையில் சரோஜா பாட்டி பேசிக்கொண்டிருக்க, பேரனின் சிரிப்பில் திகைத்து, மின்னல் வெட்டும்பொழுது மலரும் தாழம்பூவின் நிலையில் இருந்தார் செங்கமலம் பாட்டி அவனைப் பற்றிய சிந்தனையோடே.


பெரியதாக எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாததால் அப்பொழுதே எளிய முறையில் நிச்சயதாம்பூலம் செய்துகொண்டனர். மணப்பெண் வீட்டின் சார்பில் குமார் அவரது மனைவி பூங்கொடியுடன் சேர்ந்து வெங்கடேசன் சூடாமணியுடன் தாம்பூலம் மாற்றிக் கொண்டார்.


வீட்டிற்கு வந்தது முதல் அண்ணனைக் கிண்டல் செய்து அவனை ஒரு வழி செய்துகொண்டிருந்த மலர், "அம்மா அந்த ஜீவிதா நம்ம வீட்டுக்கு வந்தவுடனே என்னை மிரட்டுற மாதிரியே அவளையும் மிரட்டுவீங்களா?" எனத் தனது மிகப்பெரிய சந்தேகத்தை சூடாமணியிடம் கேட்க,


"என் மருமகள நான் மிரட்டவே மாட்டேன். அவ உன்ன மாதிரி இல்ல ரொம்பவே சாஃப்டான பொண்ணு!" என்ற சூடாமணி, "அது என்ன அண்ணனுக்குப் பெண்டாட்டியா வரபோற பொண்ண பேர் சொல்லி பேசற, அண்ணின்னு சொல்லி பழகு!" என்று கொஞ்சம் அழுத்திச் சொல்ல,


"என்னாதூ அண்ணியா? அம்மா! அவ என்னைவிட ரெண்..டு வயசு சின்னவம்மா. அவளை நான் எப்படி அண்ணின்னு கூப்பிட முடியும்?" என்று மலர் பொங்கிவிட,


அதைக் கேட்டுக்கொண்டே அங்கே வந்த சுந்தரம், "முறைனு ஒண்ணு இருக்கு இல்லையா மலரு? அண்ணனுக்குக் கொடுக்கற மரியாதையை அவன் மனைவிக்கும் கொடுக்கணும் கண்ணு!" என்று சொல்ல,


"ராசா! நீங்க சொல்றதால அக்சப்ட் பண்ணிக்கறேன்" என்றவள் அவருடைய காதின் அருகில் குனிந்து இரகசியமாக, "ராசா! ஆழாக்கு மாதிரி குட்டியா இருக்கா ராசா! அவளைப் போய் என்னை அண்ணின்னு கூப்பிட சொல்றீங்களே! அவளோட அண்ணனை மாதிரி வளர்த்து இருந்தா எனக்கும் கொஞ்சம் கெத்தா இருந்திருக்கும்!" என்று அலுத்துக்கொண்டாள் மலர்.


***


தை மாதத்தின் முதல் முஹுர்த்தத்திலேயே பிரபாகரன் ஜீவிதா திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.


முதல் நாள் நடந்த வரவேற்பின் பொழுது மெல்லிசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அங்கே வந்திருந்த, மலருடன் கல்லூரியில் படித்த தோழர்கள் அனைவரும் அவளை ஒரு பாடல் பாடச்சொல்லி வற்புறுத்த, அவள் மறுக்கவும் சுசீலா மாமியும் கோபாலன் மாமாவும் வேறு அவளைப் பாடச்சொல்ல வேறு வழி இன்றி மேடை ஏறி, "மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் மங்கலமே மங்கலமே!" எனப் பாடத்தொடங்கினாள்.


மிகவும் இனிய குரலில் சுத்தமான உச்சரிப்புடன் அவள் பாடி முடிக்கவும் அவளது நண்பர்கள் கைத் தட்டி ஆர்ப்பரிக்க, அதுவரை பாடலில் லயித்திருந்த ஈஸ்வர் அப்பொழுதுதான் அவளைக் கவனித்தான்.


மிக அழகாக பிங்க் நிறத்தில் வயலட் பார்டர் போட்ட எளியப் பட்டுப்புடவையில், நீளமாகப் பின்னிய கூந்தலில் மல்லிகைச் சூடி, காதுகளில் ஜிமிக்கி ஊஞ்சல் ஆட, மேடையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தாள் மலர்.


அவன் ஒரு நொடி உறைந்து நிற்கவும் அவனைக் கடந்து மேடையை நோக்கிச் சென்ற ஜெய், "மச்சி! அஸ் யூசுவல் கலக்கிட்டடி” என்றவாறு அவளது கையைப் பற்றி இழுத்துக்கொண்டு செல்லவும் அதிர்ந்துதான் போனான் ஈஸ்வர்.


அடுத்த நாள் காலை நிச்சயித்த முஹூர்த்ததில் அவர்கள் வழக்கப்படி பருத்தியில் நெய்யப்பட்டு மஞ்சள் நீரில் நனைத்துக் காய வைத்த அரக்கு நிற ஒன்பது கஜம் புடவையில் வைணவ சம்பிரதாய மடிசார் அணிந்து அழகுற ஜீவிதா மேடையில் வீற்றிருக்க பிரபாகர் அவளது கழுத்தில் மங்கலநாணைப் பூட்டினான். நாத்தனார் முடிச்சைப் போட்டு, அதை நிறைவு செய்தாள் மலர்.


முதல் நாளே நடந்து முடிந்த வரவேற்பில் தொடங்கி திருமணம் முடியும் வரை உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவரையும் வரவேற்று உபசரித்து களைத்து ஓய்ந்துபோய் அந்தப் பிரம்மாண்ட திருமண மாளிகையில், ஒரு ஓரமாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் கண்கள் மூடி உட்கார்ந்திருந்தான் ஈஸ்வர்.


அவனை அங்கே கண்டவுடன் என்ன உணர்ந்தாளோ அணிமாமலர்! உடனே சென்று ஒரு குவளையில் இளநீரை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க, மறுக்காமல் அதை வாங்கிப் பருகியவன், "தேங்க்ஸ் நான் ரொம்ப டயர்டா இருந்தா இளநீர்தான் குடிப்பேன்" எனக்கூற,


ஒரு வேகத்தில், "தெரியுமே!" என்றவள், நாக்கைக் கடித்துக்கொண்டு, சட்டென, "டீ.வீ இன்டெர்வியூல பார்த்தேன்!" எனச் சமாளிப்பாகச் சொல்லிவிட்டு, அவனைத் திசைதிருப்ப, "ஹீரோ! நீங்க இதுக்கே இவ்ளோ டயர்ட் ஆனா எப்படி? இன்னும் நீங்க செய்ய வேண்டிய வேலையெல்லாம் நிறைய இருக்கே! இன்னும் கொஞ்ச நாள்ல தாய்மாமன் முறையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும். தயாரா இருங்க!" என்று கூறிவிட்டு, அங்கே நின்றிருந்த சில தோழிகளைச் சுட்டிக் காட்டியவள், “அவங்க எல்லாரும் உங்கக் கிட்ட பேசணுமாம், இங்க வரச் சொல்லட்டுமா?" என்று அவனிடம் அனுமதி கேட்க, "வித் ப்ளெஷர்!" என்றான் ஈஸ்வர் எந்த வித அலட்டலும் இல்லாமல்.


அவனது இந்தச் சின்ன செய்கை அவளை அதிகம் கவர, பூரிப்படன் மலர் உடனே அவர்களை அருகில் வருமாறு ஜாடை செய்யவும் அனைவரும் அங்கே வர, "அனிதா, ரஞ்சனி இவங்க ரெண்டு பேரும் என்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ். இவங்க ஷானா, ஜென்னி, அண்ட் பர்தா போட்டிருக்காங்களே இவங்க பானு! ஐ மீன் ஹம்சத் பானு! இவங்க எல்லாரும் எங்க பிளாட் டெனன்ட்" என அனைவரையும் அறிமுகம் செய்தவள் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தவர்களைச் சுட்டிக் காண்பித்து,


"அவங்கதான் சுசீலா மாமி அண்ட் கோபாலன் மாமா! என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்! உங்கக் கிட்ட பேசக் கூச்சப்பட்டுட்டு அங்கேயே நிக்கறாங்க” எனக் கூறவும், அனைவரிடமும் மரியாதை நிமித்தம் சில வார்த்தைகள் பேசிய ஈஸ்வர் மாமி மாமாவை நோக்கிச் சென்று, அவர்களிடமும் இயல்பாகப் பேசினான்.


மகிழ்ச்சியில் தன்னை மறந்து, "டீ பூக்காரி! ஈஸ்வரைப் பாரேன்! நிஜத்துல ரொம்பவே நல்லவரா இருக்கார்டி!" என்று சொல்லிவிட்டு மாமி அங்கிருந்து அகன்றார்.


மாமி சொன்ன பூக்காரியின் விளக்கத்தை அவன் ஏற்கனவே அறிந்திருக்க, அது ஒரு வித பரவசத்தை அவனுக்குக் கொடுக்க, சட்டென ஞாபகம் வந்தவனாக மலரை நோக்கி. "தாங் யூ வெரி மச் பூஊஊஊக்காரி! நேத்து என் தங்கைய உங்க வீட்டுக்கு வரவேற்கற விதமா நீ பாடின இனிமையான பாட்டுக்கு!" என்றான் கிண்டலுடன்.


ஈஈஈஈ.. என அவனைப் பார்த்துச் சிரித்தவள், 'பத்த வச்சிட்டயே பரட்ட!' என மனதிற்குள் எண்ணிக்கொண்டு, "மாமீஈஈஈஈ!" என்றவாறு சுசீலா மாமியை நோக்கி ஓடினாள் அணிமாமலர் மாமியை ஒரு வழி செய்ய.

Recent Posts

See All
Anima - 30

அணிமா-30 அங்கே கூடி இருந்த அனைவருமே நெகிழ்ச்சியில் உறைந்துபோயிருந்தனர். அந்த உறைநிலையை ஜெய்தான் கலைத்தான் தன் உரை மூலமாக. "கிட்டத்தட்ட...

 
 
 
Anbenum Idhazhgal Malarattume 39 & 40 [Final Episodes]

அணிமா-39 ஆரம்பக்கட்ட மகப்பேறு காலத்தில் மிகவும் பத்திரமாக இருக்க வேண்டிய காரணத்தால் ஆபத்தை எதிர்கொள்ளும் எந்த வேலையிலும் ஈடுபட அவளை...

 
 
 
Anbenum Idhazhgal Malarattume 35 & 36

அணிமா-35 ஒரு வருடத்திற்கு முன்... மல்லிகார்ஜூன் மும்பையில் இருக்கும் பிரபல க்ளப் ஒன்றில் பார் பவுன்சராக வேலை செய்துகொண்டிருந்த சமயம்...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page