மித்ர-விகா-9
மாளவிகாவை விட உடல் பலத்தில் சிறந்தவன்தான் அக்னிமித்ரன். அதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. ஆனால் தன் பலத்தை அவளிடம் பிரயோகிக்கும் நிலையிலில்லை அவன். காரணம் அவன் ஒரு துளி அசைந்தாலும் அது அவனது உயிருக்கு உலை வைத்துவிடும். அவன் தொண்டைக்குக் குறைந்தபட்ச சேதாரமாவது ஏற்படுவது உறுதி. அடுத்து என்ன என அவன் யோசிப்பதற்குள்ளாகவே அவளது பிடி தளர, "சாரி” என்றவாறு பின் வாங்கினாள் மாளவிகா.
அவனுடைய சட்டையில் ரத்தத்தின் கரையைப் பார்த்தவன் அவசரமாக தன் கழுத்தைத் தடவ, ஒரே ஒரு இடத்தில் முகச்சவரம் செய்யும் போது உண்டாவது போல் சிறு கீற்றாகக் காயம் ஏற்பட்டிருந்தது அவ்வளவுதான். ஆனால் அவளது கையில்தான் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அதிர்ந்தவனாக அவன் அவளது கரத்தைப் பிடிக்க மணிக்கட்டிலிருந்து உள்ளங்கை வரை கீறி ரத்தம் வந்துகொண்டிருந்தது. அவளது கரத்திலிருந்து தளர்ந்து கீழே விழுந்தது பாதியாக உடைந்திருந்த கண்ணாடி வளையல்.
அவள் கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையலைத்தான் ஆயுதமாக மாற்றியிருந்தாள். ஏனோ அவளிடம் கோபம் கொள்ள இயலவில்லை, "வாட். பேங்கிளா” என வியக்கத்தான் செய்தான் மித்ரன்.
இதுவரை அவன் பார்த்த பெண்களெல்லாம் சிங்கம் வேட்டையாடிய இரையை நேரம் பார்த்துப் பிடுங்கித் தின்னக் காத்திருக்கும் ஓநாய்களாகவும் இவள் மட்டும்தான் சிங்கத்தின் பெண்பால் போலவும் தோன்றியது அவனுக்கு.
அங்கே இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தவன், அவள் கைக் காயத்தைத் துடைத்து மருந்து போட்டான். அது வரையிலும் மவுனமாக இருந்தவள், "இது நான் பிளான் பண்ணி பண்ணதில்ல. இது ஒரு ரிஃப்ளெக்ஸ் ஆக்ஷன். ஸோ நீங்க விளையாட்டுக்குச் செஞ்சாலும் சரி. உண்மையாவே உங்க நோக்கம் இதுவா இருந்தாலும் சரி. டோன்ட் ட்ரை டு டூ திஸ் அகைன் டு மீ. ஒரு சமயம் மாதிரி ஒரு சமயம் இருக்காது" என வெகு தீவிரமாகச் சொன்னாள் அவள்.
"ஓஹ் அவ்வளவு நம்பிக்கை ஹ்ம்ம்" என்றவன், "நான் இதை உன் கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணல. சோ கொஞ்சம் ஏமாந்துட்டேன். பட் இனிமேல் இப்படி அசால்ட்டா இருக்க மாட்டேன் இல்ல" அவன் கேட்க,
"ப்ச்... எந்த மாதிரி சிச்சுவேஷனையும் என்னால ஹாண்டில் பண்ண முடியும் அமித்” எனக் கொஞ்சம் தெனாவெட்டாகவே பதில் சொன்னாள்.
"சரி. இப்ப நான் ஒருத்தன், ஸோ, ஈஸியா சமாளிசிட்டுட்ட. நாலஞ்சு பேர்னா?" உண்மையாகவே தெரிந்துகொள்ளும் ஆவலில்தான் கேட்டான்.
"ஐ கேன்” அசாதாரணமாக அவள் சொன்ன விதத்தில் கொஞ்சம் அசந்துதான் போனான் மித்ரன்.
ஆனாலும் விட்டுக்கொடுக்காமல், "ஏழெட்டு பேர்னா" அவன் கேட்கவும்,
"முடியும்னுதான் நினைக்கறேன். அதுக்கெல்லாம் டெக்னிக்ஸ் இருக்கு. பட் ப்ராக்டிகலா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணாத்தான் தெரியும்" என்றாள் அவள் சர்வ சாதாரணமாக.
'பொண்ணா இல்ல குட்டிப் பிசாசாடி நீ?' என மனதில் எண்ணிக்கொண்டவன், "கொஞ்ச நேரத்துக்கு முன்னால என் கூட உட்கார்ந்து தான சாப்ட. ஒரு வேளை ட்ரிங்க்ல ஏதாவது கலந்து குடுத்து உன்னை அப்யூஸ் பண்ணிட்டா என்ன பண்ணுவ?" அவன் எகத்தாளம் தொனிக்கக் கேட்க, அற்பமாய் அவனைப் பார்த்தவள், "நெக்ரோபிலியான்னா தெரியுமா” எனக் கேட்டுவிட்டு, "நீங்கதான் ஹாட் சீட்ல உட்கார்ந்து ஃபேமஸ் க்விஸ் ப்ரோக்ராம் நடத்தினவராச்சே. உங்களுக்குத் தெரியாம இருக்குமா?" அவள் கேட்கும்போதே வயிற்றைப் புரட்டிக்கொண்டு வந்தது மித்ரனுக்கு.
சத்தியமாகக் கற்பனையில் கூட இப்படி ஒரு செயலை அவனால் எண்ணிப்பார்க்க முடியாது. அவனால் என்றில்லை நல்ல மனநிலையில் இருக்கும் பேராண்மை மிக்க அசல் ஆண்மகன் யாரும் இப்படிப் பட்ட இழிச் செயலைக் கற்பனை கூட செய்ய மாட்டான்.
'ஏண்டா இவ கிட்ட இப்படி கேட்டோம்' என நொந்துபோய் அவன் மௌனம் காக்க, அவன் முகத்தில் தெரிந்த அருவருப்பைப் பார்த்து பூரணமாகத் திருப்தியற்றவள், "ஒரு பெண்ணை மயக்கமாக்கி அவ உணர்வுல இல்லாத நேரத்துல அவ கூட பாலியல் உறவில் ஈடுபடறதும் ஒரு பிணத்திடம் அப்படி நடந்துக்கறதும் ஒண்ணுதான். ஒரு பர்ஃபக்ட் ஆண் மகன்னா... பூரணமா உரிமையிருந்தாலும், கட்டின பொண்டாட்டியாவே இருந்தாலும் அவளோட விருப்பம் இல்லாமல அவளைத் தொட மாட்டான். ரைட்”
அவ்வளவு கோபம் தொனித்தது அவளது குரலில். அவன் அசந்துபோய் அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்க, "பட்... எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் நம்பிக்கை இருக்கு அமித். நீங்கதானே சொன்னீங்க... ஃபோர்ஸ் பண்ணி ஒரு விஷயத்தை அடையறது உங்களுக்குப் பிடிக்காதுன்னு. அந்த வார்த்தை எனக்கு ஞாபகம் வந்ததாலதான் இப்ப எந்த சேதாரமும் இல்லாம நீங்க முழுசா நிக்கறீங்க. அந்த நம்பிக்கைலதான் நீங்க கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டேன். அதை உடைக்கமாட்டீங்கன்னு நம்பறேன்” என மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே போனவள், பின் ஒரு நொடி கூட நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட, 'இப்படி பயங்கரமா அவ கிட்ட தோத்துட்டே இருக்கோம். ஆனாலும் அது நம்மள பாதிக்கலையே ஏன்?' எனத் தன்னையே கேட்டுக்கொண்டான் மித்ரன்.
'அவளைப் பொறுத்தவரை ஆரம்பத்துல இருந்து நீ பண்ற ஒவ்வொரு விஷயமும் தப்புதான. அதான் உனக்கு கோபம் வரல. நீ புலி வால... இல்லல்ல சிங்கத்தோட வாலைப் பிடிச்சிருக்க. இது எங்கப் போய் முடியப்போகுதோ. ம்ம்... நடத்து... நடத்து...' என அவனது மனசாட்சி அவனை எள்ளி நகையாடியது.
ஆனாலும் கூட அவளிடம் மூண்டிருந்த அவனது மோகத் தீக் கொஞ்சம் கூட தணியவில்லை. மாறாக அவளுடைய இந்தச் செய்கை அதில் எண்ணை ஊற்றி அதை மேலும் கொழுந்துவிட்டு ஏறியவே வைத்தது. மாளவிகா மட்டுமே அவனது சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தாள்.
‘லயன்னஸ்’ என ரசனையுடன் சொல்லிப்பார்த்தான் உணர்ந்து.
***
அடுத்த நாளே கவி வேலைக்கு வந்துவிட, "ஒரு டீடைல் விசாரிச்சு சொல்ல சொன்னா, எவ்வளவு ராங் இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்க” என்று தொடங்கி அவனைக் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சி எடுத்தான் மித்ரன்.
"என்ன பாஸ். புரியல?" என அவன் தயங்க, "ஆமாம். மாள்விய பத்தி யார் கிட்ட விசாரிச்ச?" எனக் கேட்டான் மித்ரன்.
"அவங்களோட பெஸ்ட் ஃப்ரெண்ட் ரஞ்சனின்னு ஒரு பொண்ணு. அவங்க கிட்டதான் விசாரிச்சோம். எல்லா டீடைல்ஸும் உண்மைதான் பாஸ்” அவன் உள்ளே போன குரலில் பதில் சொல்ல,
"விசாரிச்சோம்னா?" மித்ரன் அழுத்தமாகக் கேட்க, "நம்ம ரிஸப்ஷன்ல வேலை செய்யறாங்க இல்ல ரீமா. அவங்களை விட்டுத்தான் விசாரிக்கச் சொன்னேன். அந்தப் பொண்ணோட எஃப்.பில பார்க்கும் போது ரீமாவை மியூச்சுவல் ஃப்ரெண்ட்ல காமிச்சுது. அதான் அவங்களை சூஸ் பண்ணேன்" அவன் சொல்லவும்,
"ஓ" என்றான் மித்ரன்.
"அந்தப் பொண்ணும் அவங்களும் ஒரே ஏரியா. விசாரிச்சதுல அவங்க ரெண்டு பேரும் ஒரே ஜிம்முக்குப் போறாங்களாம். அந்த காலேஜ் பங்க்ஷனை யுட்யூப்ல அப்லோட் பண்ணியிருந்தாங்கல்ல, அதான் அந்த மலையாள சந்திரமுகி டான்ஸை வெச்சுப் பேச்சை ஆரம்பிக்கச் சொன்னேன்"
அவன் சொல்லவும், "என்ன மலையாள சந்திரமுகியா? அது தமிழ்நாட்டு நாகவல்லி. அது தெரியாதா உனக்கு" தீவிரமாக மித்ரன் கேட்கவும், அசந்தே போனான் கவி.
அவன் அந்த கேரக்டரில் எந்த அளவுக்கு மூழ்கிப்போயிருக்கிறான் என்பதை இவன் அறிந்திருக்க நியாயமில்லையே. 'எங்க விட்டோம்?' என அவன் யோசிக்க, "சொல்லு அந்த யுட்யூப் வீடியோ பத்தி என்ன பேசினாங்க?" மித்ரனே எடுத்துக்கொடுக்க,
"ம்... ‘செம்ம அழகா இருக்காங்களே. அவங்களை உனக்குத் தெரியுமா?'ன்னு ஒரே ஒரு கேள்விதான் கேட்டாங்களாம் ரீமா. அதுக்கு 'அந்த டேன்ஸ் நான்தான் ஆடி இருக்கணும்? ஆனா எனக்கு கால்ல சின்ன மசில் கிராம்ப் ஆயிடுச்சு. என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன். அதனாலதான் மாளவிகா ஆடினா'ன்னு ஆரம்பிச்சு அந்தப் பொண்ணு சொன்ன அத்தனை டீடைல்ஸையும் ரீமா என் கிட்ட சொன்னாங்க" என முடித்தான் அவன்.
"அங்கதான் நீ தப்பு பண்ணியிருக்க. ஏன்னா... ஒரு பொண்ணைப் பத்தி இன்னொரு பொண்ணுகிட்ட விசாரிச்சா இப்படி அவங்களை பத்தின நெகட்டிவ் கமெண்ட்ஸ் மட்டும்தான் சொல்லுவாங்க. அதுவும் அவளை அழகா இருக்கானு வேற சொல்லி வெச்சிருக்கீங்க” என்றவன்,
"நான் நினைக்கறேன்; அந்த ரஞ்சனிக்கு இந்த லயன்னஸ் மேல செம்ம காண்டு போலிருக்கு. அதான் அவளைப் பத்தி தப்புத்தப்பா சொல்லியிருக்கா. மொத்தத்துல நீ என்னை ராங்கா கைட் பண்ணியிருக்க"
தன் கழுத்தைத் தடவிக்கொண்டே மித்ரன் கொஞ்சம் கடுப்புடன் சொல்ல, "சாரி பாஸ். நான் வேணா ஏதாவது டிடெக்ட்டிவ் ஏஜென்சி மூலமா விசாரிக்க சொல்லவா?" அவன் அடக்கத்துடன் கேட்க, 'அவளைப் பத்தி என்ன தெரிஞ்சிக்கணுமோ அதை நானே டைரக்டா தெரிஞ்சுக்கறேன்' என்று எண்ணிக்கொண்டு, "நீ ஆணியே பிடுங்க வேணாம். இம்மீடியட்டா மோனாவை மீட் பண்ண அரேஞ் பண்ணு”
மித்ரன் சொல்ல, "யாரு பாஸ். போன மாசம் உங்க கிட்ட சான்ஸ் கேட்டு வந்தங்களே அவங்களா?" என கவி கேட்க, "அவங்கதான்... மேக் இட் பாஸ்ட்" என்று முடித்துக்கொண்டான் மித்ரன்.
சில வருடங்களுக்கு முன் முன்னணியில் இருந்த நடிகை அவள். இப்பொழுது வாய்ப்பில்லாமல் இருக்கிறாள். அது புரிய, மனதிற்குள் எழும் அசூயையை வெளிக்காண்பிக்காமல், ஒரு இயலாமையுடன் அங்கிருந்து சென்றான் கவி.
***
அதற்கடுத்து வந்த நான்கு நாட்களும் அமைதியாகச் சென்றன.
அலுவலக வேலைகள் சம்பந்தமான பேச்சுக்கள் மட்டுமே அவர்களுக்கு இடையிலிருந்ததே தவிர மாளவிகாவை எந்த விதத்திலும் சீண்டிப் பார்க்கவில்லை மித்ரன்.
அவள் அலுவலகம் வந்து போக, மற்ற பணியாளர்கள் உபயோகிக்கும் அவர்களுடைய அலுவலக 'கேப்'பையே அவளுக்கு எற்பாடு செய்யச் சொல்லிவிட அதுவும் அவளுக்கு வசதியாகவே இருந்தது.
ஆனாலும் கூட 'என்ன இந்தப் புலி இப்படிப் பதுங்குது?' என்ற ரீதியில்தான் இருந்தாள் மாளவிகா. ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் அவன் ஏன் அவளிடம் கவனம் செலுத்தவில்லை என்பதை அப்பட்டமாகச் சொல்லியது.
***
அன்று ஞாயிற்றுக் கிழமை, வாரம் முழுதும் சேர்த்து வைத்திருந்த வீட்டு வேலைகளெல்லாம் முடித்து, அம்மா செய்த அருமையான மதிய உணவை எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து ஒரு கைப் பார்த்துவிட்டு, அவர்களுடைய அறையில் அக்காவும் தங்கையும் ஓய்வாக உட்கார்ந்திருக்க,
"அக்கா இந்த மோனா ஒரு ட்வீட் பண்ணியிருக்கா பாரேன். அதான் இன்னைக்கு செம்ம வைரல்” என்றாள் சாத்விகா.
"ரொம்ப முக்கியம்" என மாளவிகா கொஞ்சம் அசட்டையாய் சொல்ல, "அதில்ல கா... அவ எட்டு வருஷத்துக்கு முன்னால நடிச்ச படத்துக்கு அந்த ப்ரொடியூசர் இன்னும் கூட பேமெண்ட் பண்ணலயாம். அதை இவ்வளவு வருஷம் கழிச்சு இப்ப வந்து அவங்க அசோஷியேஷன்ல கம்பிளைன்ட் பண்ணியிருக்கா” என அவள் அதைப் பற்றியே பேச, "ப்ச்.. சாது இப்ப என்ன இதைப் பத்தி பேச்சு" என மாளவிகா கேட்க,
"அது மட்டும் இல்லகா; அவ அந்த கௌதம் பத்தி கண்ணா பின்னான்னு ட்வீட் பண்ணியிருக்கா. அவ ஒரு தடவ சூசைட் அட்டம்ப்ட் பண்ணா இல்ல; அதுக்கும் அந்த கௌதம்தான் காரணமாம்" அவள் விடாப்பிடியாகச் சொல்ல,
கௌதம் என்ற பெயரைக் கேட்டதும் அவசரமாகத் தங்கையின் கையிலிருந்த பேசியைப் பறித்தவள், அதில் அந்தப் பதிவைப் பார்க்க, அந்த நடிகையுடன் கௌதம் இணைந்திருக்கும் ஒரு படத்தைப் போட்டு அந்த ட்விட்டர் பதிவைப் பற்றி விளக்கியிருந்தார்கள்.
அவளுக்கு நன்றாகவே புரிந்துபோனது இது அக்னிமித்ரனின் வேலைதான் என்று.
அதோடு நிற்காமல் செய்தியாளர் சந்திப்பு ஒன்றைக் கூட்டி அதில் அவள் கௌதமின் கேவலமான நடத்தையைப் பற்றிக் கதை கதையாகச் சொல்ல, 'தயாரிப்பாளர் கௌதமின் மன்மத லீலைகள்' என்ற தலைப்பில் அன்றைய பொழுதிற்கு அதுதான் அனைத்து தொலைக்காட்சிகளையும் ஆக்கிரமித்திருந்தது.
அனைத்து விவாத நிகழ்ச்சிகளிலும் அன்றைய பேசு பொருளானான் கௌதம். கௌதமை பொதுவெளியில் தலைக்காட்ட இயலாமல் செய்துவிட்டு அந்த இடைவெளிக்குள் 'கதிர் காம்ப்ளெக்ஸ்' திரையரங்க வளாகத்தை தன் பெயருக்கு முறையாகப் பதிவு செய்துவிட்டான் மித்ரன்.
கவி உடன் இருந்ததால் அந்தப் பத்திரப் பதிவுகள் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு மாளவிகாவை அழைக்கவில்லை. ஆனால் அவன் கூடவே இருப்பதால் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் மாளவிகா.
***
அவன் நினைத்தது நடந்து முடிந்த மகிழ்ச்சியிலிருந்தான் அக்னிமித்ரன்.
"ஹேய் லயன்னஸ். சீக்கிரம் கிளம்பு. இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன். ஸோ, உனக்கும் கவிக்கும் ஒரு சின்ன ட்ரீட்" இயல்பாகத்தான் அவளை அழைத்தான்.
நினைத்தால் அஜூபா என்பான். லயன்னஸ் என்பான். மாள்வி என்பான். அப்பொழுதெல்லாம் மானசீகமாகத் தலையில் அடித்துக்கொள்வாள் மாளவிகா. ஆனாலும் அவனுடன் செல்ல அவளுக்குத் தயக்கமாக இருக்க, "பரவாயில்ல, நீங்க மிஸ்டர் கவியை மட்டும் கூட்டிட்டுப் போங்களேன் ப்ளீஸ்” அவள் தயக்கத்துடன் செல்ல,
"உன்னை என்ன டேட் பண்ணவா கூப்பிட்டேன். லஞ்சுக்குதான கூப்பிட்டேன். அதுக்கு ஏன் இவ்வளவு சீன கிரியேட் பண்ற” நான்கைந்து நாட்களாக அவளைக் கண்டும் காணாமலும் இருந்தவன், 'உன் விஷயத்தில் நான் மாறவே இல்லை' என்பதை நிரூபித்தான் அக்னிமித்ரன்.
"ப்ச்... அமித்” அவள் அலுத்துக்கொள்ள, "நீதான் வீராங்கனையாச்சே. என் கூட வர உனக்கு என்ன பயம்? அதான் கவியும் கூட வரான் இல்ல" மித்ரன் அவன் நிலையிலேயே பேச, அதற்குள் கவியும் அங்கு வந்துவிட, அவனுக்கு முன்பாக மித்ரனிடம் மறுத்துப் பேச இயலாமல் அவர்களுடன் கிளம்பினாள்.
கவியின் முன் தான் ஏதாவது பேசி அவனுடைய பிடிவாதத்தை மேலும் வளர்க்க விரும்பவில்லை அவள், அவ்வளவுதான்.
காரை ஓட்டுநர் ஓட்ட, கவி போய் முன் இருக்கையில் உட்காரவும், வேறு வழியில்லாமல் மித்ரனுக்கு அருகிலேயே உட்கார வேண்டிய சூழல் உண்டானது அவளுக்கு. அவர்கள் அந்த நட்சத்திர விடுதியை அடையும் வரையில் அவனுடைய கிண்டல் பார்வை அவளைத் தொடர்ந்துகொண்டே இருந்தது. பதிலுக்கு அவள் சிந்திய முறைப்பையெல்லாம் அவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
மூவரும் இறங்கி உள்ளே செல்ல, மித்ரனை நோக்கி வேகமாக வந்து, எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கொஞ்சமும் கவலைபடாமல், "தேங்க்ஸ் எ லாட் அமித்" என்றவாறு அவனை அணைத்துக்கொண்டாள், அதுவரை அந்த வரவேற்பு பகுதியில் அவனுக்காகக் காத்திருந்த மோனா.
தான் நினைத்ததை சாதிக்க எந்த எல்லை வரையிலும் செல்வான் அக்னிமித்ரன் என்பது புரியவும் முதுகுத்தண்டு சில்லிட்டது மாளவிகாவுக்கு.
Eagerly waiting for the next update Krishna.