மித்ர-விகா-18
மாளவிகா, அக்மி ரீடைல்ஸ் நிறுவனத்தில் வேலையில் இணைந்து அப்படி இப்படி என்று ஒரு மாதம் முடிந்திருந்தது. அவளது முதல் மாத சம்பளம் அவளுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்க வீட்டில் அனைவருமே மகிழ்ச்சியிலிருந்தனர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. மதிய உணவை எல்லோருமாக ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். "அக்கா... ஃபர்ஸ்ட் மந்த் சேலரி வாங்கியிருக்க. எப்ப ட்ரீட்? எனக்கு என்ன வாங்கி கொடுக்கப் போற?" என வெகு தீவிரமாகக் கேட்டாள் சாத்விகா.
'அம்மாவுக்கு அது, அப்பாவுக்கு இது... மது அக்காவுக்கும் மாமாவுக்கும் சாத்விகாவுக்கும் என விதவிதமாக மகள் உற்சாகமாக ஏதாவது பட்டியல் போடுவாள்' என எதிர்பார்த்து துளசி மாளவிகாவின் முகத்தை ஏறிட, "இல்ல சாவி, இப்ப அந்தப் பணத்துல கை வைக்க வேண்டாம். அப்படியே அக்கௌண்ட்ல இருக்கட்டும். மூணு மாசம் முடிஞ்ச பிறகு உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ வித் அம்மா அப்பா பெர்மிஷன்" என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள் மாளவிகா.
சாத்விகா அவளை ஒரு புரியாத பார்வை பார்த்து வைக்க, "என்ன துளசி உன் செல்லப் பொண்ணு இவ்வளவு பொறுப்பா பேசறா?" என்றார் மூர்த்தி.
"என் செல்ல பொண்ணுதான அவ… அதான் அப்படி பேசறா. இதோ உங்க செல்லமும்தான் இருக்கே, எப்ப என்ன செலவை இழுத்துவிடலாம்னு காத்துகிட்டு" என சாத்விகாவை துளசி வாற, "இவங்க ஒரு புடவை கூட தேவை இல்லாம வாங்க மாட்டாங்க. அப்படியே சிக்கனத்தின் சிகரம் பாருங்கப்பா” என நொடித்து எழுந்து போனாள் சாத்விகா.
"ம்கும்... எது எப்படியோ இந்த வீட்டுல பொம்பளைங்க ராஜ்ஜியம்தான் நடக்குது. நான்தான் பாவம், மைனாரிட்டி!" என்று சொல்லிச் சிரித்தார் மூர்த்தி.
அனைத்தையும் காதில் வாங்கியவாறே அறைக்குள் நுழைந்தவள் புதிதாக வாங்கி வந்திருந்த 'கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்' புத்தகத்தை விரித்து அதில் தன் கவனத்தைப் பதிக்க முயன்றாள் மாளவிகா.
ஆனாலும் அவளால் அதைக் கொஞ்சம் கூட செயல்படுத்த இயலவில்லை. காரணம் ஒரு வரி கூட படிக்க இயலாமல் அவள் சிந்தனை முழுவதையும் அக்னிமித்ரனே ஆக்கிரமித்திருந்தான்.
அன்று சாமிக்கண்ணு அய்யாவின் கலைக்கூடத்திற்குச் சென்று வந்தது முதல் அக்னிமித்ரனிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. ஆனால் அது எந்த மாதிரியான மாற்றம் என்பதைத்தான் அவளால் விளங்கிக்கொள்ள இயலவில்லை.
அடுத்த நாள் வேலைக்கு வந்ததும், எதற்காகவோ இயல்பு போல் 'அமித்' என்று அவள் அவனை அழைக்க, "அஜூபா... இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாத" என்றான் அவன் சற்றுக் கடுப்புடன்.
"நீங்கதானே அப்படி கூப்பிட சொன்னீங்க அமீஈஈஈத்" என அவள் வேண்டுமென்றே வம்பிழுக்க, "ப்ச்... எனக்குப் பிடிக்கல! அப்படி கூப்பிடாதான்னு சொன்னா விட்டுடு. மித்ரன்னே கூப்பிடு. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே என்னை மித்ரன்னுதான் கூப்பிடுவாங்க" என அவன் விளக்கம் சொல்ல,
"நான் ஒன்னும் உங்க ஃப்ரெண்ட் இல்ல. ஜஸ்ட் எ ஸ்டாஃப். அதனால அமித்னே கூப்பிடறேன். அதான் எனக்கு கம்ஃபர்டபிளா இருக்கு" என்றாள் விடாப்பிடியாக.
"ப்ச்... அதான் பிடிக்கும்னா அப்படியே கூப்பிட்டுக்கோ. எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. ஆனா என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான்… ம்ம் லைக் ரூபா, என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க. உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
"என்ன?" என அவனை அதிர்ந்து ஒரு பார்வை பார்க்க அவன் மிகவும் முயன்று தன் சிரிப்பை அடக்குவது புரிந்தது. "ஓ மை காட். இது தெரியாம இத்தனை நாளா நான்... கடவுளே” எனப் பற்களைக் கடித்தவள் அவனை நன்றாக முறைத்துவிட்டு தன் இருக்கையில் போய் உட்கார்ந்துகொண்டாள்.
தொடர்ந்து வந்த நாட்களில் தேவையில்லாமல் அவளை வம்பிழுப்பதை சுத்தமாக நிறுத்தியிருந்தான் அவன். ஆனால் இப்பொழுதெல்லாம் மாளவிகாவுக்கு, அவன் அவளைப் பார்க்கும் பார்வையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் உள்ளுக்குள் சற்றுக் கிலியைப் பரப்பிக்கொண்டே இருந்தது.
அது நிச்சயமாக வேட்கை பார்வை இல்லைதான். ஆனால் ஒருவித ரசனையுடனான பார்வை. தன்னை மீறி அவளை-அவனை ரசிக்க வைக்கும் ஒரு பார்வை. இது நிச்சயம் நல்லதிற்கில்லை என உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
ஒரு மனம் 'பெட்டவாது? ஒண்ணாவது. தோல்வியை ஒத்துட்டு வேலையை விட்டுடு... அதுதான் உனக்கு நல்லது' என்று எடுத்துச்சொல்ல, மற்றொரு மனமோ, "இல்ல ஏற்கனவே சாத்விகாவுக்கு காலேஜ்கே ஃபீஸ் அது இதுன்னு நிறைய செலவாகுது. அக்கா கல்யாண கடன் வேற கொஞ்சம் இருக்கு.
இந்த நிலைமையில் ஒண்ணேகால் லட்சம்ங்கறது அப்பாவுக்குப் பெரிய சுமையைக் கொடுக்கும். வேண்டாம்' எனப் பொறுமையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. அந்த இரண்டாவது மனம்தான் எதையெதையோ சொல்லி பயப்படுத்தி தன்னை ஏமாற்றுகிறதோ என்ற மிரட்சி உண்டானது அவளுக்கு.
அவளுடைய அக்கா மதுவைக் கல்லூரி படிப்பு முடித்த உடனே திருமணம் செய்து கொடுத்துவிட்டார் மூர்த்தி. அடுத்து இரண்டு பெண் குழந்தைகள் வீட்டில் இருக்கின்றனரே, அவர்களை வேறு நல்லபடியாகக் கரை சேர்க்க வேண்டுமே என்ற கவலைதான் காரணம்.
மதுவிகாவுக்கும் பெரிதாக லட்சியம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்பதால், அவளது விருப்பத்திற்குத் தகுந்தாற்போன்று நல்ல இடமாக அமையவும் யோசிக்காமல் முடித்துவிட்டனர்.
ஆனால் மாளவிகா மேற்கொண்டு படிக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டும் என்று தீவிரமாக இருக்கவே, அடுத்தவள் சாத்விகாவும் திருமண வயதை எட்டவில்லை என்பதால் அவளுடைய விருப்பத்திற்குக் குறுக்கே நிற்கவில்லை பெற்றவர்கள்.
காலை ஆறு மணிக்கு மூர்த்தி கடையைத் திறந்தார் என்றால் இரவு பன்னிரண்டு ஆகும் அவர் வீடு வந்து சேர. பல சந்தர்ப்பங்களில் உணவைக் கூட கடையிலேயே முடித்துக்கொள்வார். இடையிடையே கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வெளியில் வேறு சென்று வருவார்.
அப்பொழுதெல்லாம் கடையைத் துளசிதான் கவனித்துக்கொள்வார். அவர்களுக்குச் சேமிப்பு என்று பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அரும்பாடு பட்டு பிள்ளைகளைப் படிக்கவைத்துக்கொண்டு அங்கேயே இடம் வாங்கி வீட்டையும் கட்டி ஒரு மகளுக்குத் திருமணம் செய்துகொடுத்திருக்கிறார்கள் என்றால் அது அவர்களைப் பொருத்தமட்டும் ஒரு மிகப்பெரிய வாழ்நாள் சாதனைதான்.
அப்பா அம்மா இருவரின் அயராத உழைப்பைப் பார்த்துக்கொண்டே வளர்ந்ததாலோ என்னவோ மாளவிகாவைப் பொறுத்தவரை அவர்கள் பாடுபட்டு உருவாக்கிய அந்தக் கடை என்பது அவளுடைய நேசத்துக்குரிய ஒரு உன்னதமான விஷயம்.
கொஞ்சம் விவரம் புரிய ஆரம்பித்த பிறகு விடுமுறை நாட்களில் அவளும் கடைக்குச் சென்று வியாபாரத்தைக் கவனிக்க முனைவதுண்டு. அவர்களது அந்தக் கடை முக்கிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூட கடைக்கு வந்து போவதால் அவள் அங்கே வருவதை மூர்த்தி விரும்புவதில்லை. திட்டவட்டமாக மறுத்துவிடுவார்.
சிறு வயது முதலே அவளால் அடுத்தவர்களின் உணர்வுகளை அழகாகப் படிக்க முடியும் என்பதால் அதற்குப் பின் இருக்கும் உண்மையான காரணம் புரிய, அது என்ன மாதிரியான தாக்கத்தை மாளவிகாவிடம் விதைத்திருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
அவள் படிப்புக்குத் தகுந்த வேலைக்குச் செல்ல விரும்புகிறாள் என்பது மட்டுமே அவர்களுடைய பெற்றவர்களின் புரிதலாக இருந்தது. ஆனால் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாலும் அவளுடைய குறிக்கோள் வேறு மாதிரி இருந்தது.
அதை நோக்கித்தான் அவளுடைய ஒவ்வொரு அடியையும் அவள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள் என்பது அன்புவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. பலவிதமான யோசனையில் ஆழ்ந்திருந்தவளை அவளுடைய அக்கா மதுவின் படம் திரையில் ஒளிர, ஒலியெழுப்பிய அவளுடைய கைப்பேசி கலைத்தது.
"ஹை... யக்கோவ் எப்படி இருக்க?"
அறைக்குள் நுழைத்த சாத்விகா கைப்பேசியைக் கைப்பற்றி உற்சாகத்துடன் தமக்கையை விசாரிக்க, "ஹை... சாவி நீயா” என்றவள், “நான் நல்லா இருக்கேன். அம்மா ஃபோன் ஏண்டி சுவிட்ச் ஆஃப்ல இருக்கு? ஃபோனை கொஞ்சம் அவங்க கிட்ட குடு" என்று சொல்ல, "ஏன் கா... அம்மா கிட்டதான் பேசுவியா? எங்க கூடலாம் பேச மாட்டியா?" என்று அவளை வம்புக்கு இழுத்தாள் சாத்விகா.
’என்ன பேசுகிறார்கள்?’ என அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் மாளவிகா. "அப்படியெல்லாம் இல்லடி குட்டி" என்றவள் சிறு தயக்கத்துடன், “ஒரு குட் ந்யூஸ் ம்... உங்க கிட்ட எப்படி..டீ சொல்றது" என அவள் தயங்க,
எதிர்முனையில் அவர்களுடைய மாமா வேறு உரக்கச் சிரிப்பது ஸ்பீக்கரில் ஒலிக்க, கைப்பேசியைப் பிடுங்கிய மாளவிகா, "ஹேய் அக்கா... நாங்க சித்தி ஆகப் போறோமா? சொல்லு சொல்லு சீக்கிரமா சொல்லு" எனக் குதூகலிக்க,
"ஹுர்ரே" எனத் துள்ளி குதித்தாள் சாத்விகா.
"அடியேய்" என்ற மதுவின் குரலில் வெட்கம் எட்டிப் பார்க்க,
"அம்மா கிட்ட குடு மாலு, ப்ளீஸ்" என்று அவள் கெஞ்சவே கைப்பேசியை எடுத்துக்கொண்டு அன்னையை நோக்கி ஓடினாள் மாளவிகா.
துளசியிடம், "மா... ப்ரக்னன்சி கிட் வெச்சு டெஸ்ட் பண்ணேன். பாசிட்டிவ்னு வந்திருக்கு. அதான் உங்க கிட்ட சொல்லலாம்னு கால் பண்ணேன்" என அவள் மூச்சு விடாமல் சொல்ல,
"சந்தோஷம் மது... உன் மாமியாருக்கு தகவல் சொல்லிட்டியா" என கேட்டார் துளசி மகிழ்ச்சித் ததும்ப.
"ம்ம்... அவங்க கால் பண்ணி சொன்னாங்க. இப்பதான் பேசிட்டு கட் பண்ணோம்" என்றாள் மது.
பின் கைப்பேசி ஒவ்வொருவருடைய கைகளாக மாற, அவள் சொன்ன செய்தியில் குதூகலித்து அவர்கள் வீட்டையே அதிரச்செய்தனர் சகோதரிகள் இருவரும்.
உடனே தமக்கையை நேரில் போய் பார்க்கும் ஆவல் தங்கைகள் இருவருக்கும் தொற்றிக்கொள்ள, "ம்மா... மா... ப்ளீஸ் இதுக்கு பிறகு நெக்ஸ்ட் வீக் எண்ட்தான் ஃப்ரீ ஆவோம். இன்னைக்கே போய் அக்காவைப் பார்த்துட்டு வந்துடலாமா?" என சாத்விகா அன்னையைக் கெஞ்ச தொடங்க,
"இல்லம்மா... நாள் நட்சத்திரம் பார்க்காம நாம அப்படிப் போகக் கூடாது. அவங்க மாமனார் மாமியார் வேற நார்த் டூர் போயிருக்காங்க. அவங்க இல்லாத அப்ப நாம போனா நல்லா இருக்காது" என நிலைமையை விளக்கிய துளசி,
“கொஞ்சம் சொல்லுங்க" என கணவரைத் துணைக்கு அழைக்க, சாத்விகாவின் முகம் சுண்டிப் போனது. மாளவிகாவுக்குமே சற்று ஏமாற்றமாக இருந்தது.
அவர்களுடைய ஆவலைப் புரிந்துகொண்டவருக்கு மறுக்க மனமில்லாமல் போக, "விடு துளசி... நாம போகணும்னாதான் இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம். சின்ன பிள்ளைங்களுக்கு என்ன? இவங்க ரெண்டுபேரும் போய் பார்த்துட்டு வரட்டும் விடு. ஒண்ணும் தப்பில்ல. நீ இன்னைக்கு கடைக்கு வரவேண்டாம். இவங்க கிட்ட ஏதாவது ஸ்வீட் செய்து கொடுத்து அனுப்பு" என்றார் மூர்த்தி.
அன்று மாலையே அம்மா செய்து கொடுத்த மைசூர்பாகையும் முறுக்கையும் எடுத்துக்கொண்டு இருவருமாக தமக்கையின் வீட்டிற்கு சென்றனர்.
அவர்கள் வீட்டிற்குள் நுழையும் நேரம் மது சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். அன்று விடுமுறை என்பதினால் அவளுடைய மாமா விக்னேசுஷும் அவனுடைய தம்பி சரவணனும் வீட்டிலிருந்தனர்.
மாளவிகாவையும் சாத்விகாவையும் கண்டவுடன் இருவரும் அவர்களைக் குதூகலமாக வரவேற்க, உள்ளே இருந்து ஓடி வந்தாள் மது. "அக்கா மெதுவா" என மாளவிகா சொல்ல,
அதற்குள்ளாகவே, "பார்த்து வாங்க அண்ணி" எனப் பதறினான் சரவணன் அனிச்சைச் செயலாக.
அவனது செயல் அனைவருக்குமே நிறைவைக் கொடுக்க, வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு, அவள் கொண்டு வந்த பலகாரங்களை எல்லோருமாக ஒரு கைப் பார்க்கத் தொடங்கினர்.
"அத்தையும் பெரிய மாமாவும் எப்ப வராங்க மாம்ஸ்?" என மாளவிகா கேட்க,
விக்னேஷ் பதில் சொல்வதற்கு முன் முந்திக்கொண்டு, "இன்னும் டூ டேஸ்ல வந்திடுவாங்க மாலு" என்ற சரவணன்,
"உன்னோட வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?" எனக் கேட்கவும்,
'அந்த டீடீயை இப்பதான் கொஞ்சம் மறந்திருதோம். இவர் ஞாபக படுத்திட்டாரா, போச்சு…' என்ற எண்ணத்தில் "நல்லா போய்ட்டு இருக்கு" என்றாள் மாளவிகா சிறு தடுமாற்றத்துடன்.
மது கணவனின் முகத்தை குறுகுறுவென ஏறிட, மற்றவர் அறியாவண்ணம் ஒரு முறைப்பால் தம்பியை அடக்கினான் விக்னேஷ்.
அண்ணனைப் பார்த்து, 'நான் அடங்குவேனா?' என்பதுபோல ஒரு நமட்டு சிரிப்பு சிரித்த சரவணன், "மாலு நாம ரெண்டுபேரும் சித்தப்பா சித்தி ஆக போறோம் இல்ல" என வேண்டுமென்றே கேட்டு வைக்க, மாளவிகா அவனை ஒரு மாதிரியாகப் பார்க்கவும், மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டான் விக்னேஷ்.
"ப்ச்... அம்மாவோட லிட்டில் சிஸ் சித்தி. அப்பாவோட லில் ப்ரோ சித்தப்பா. அதைத்தானே சொன்னேன்" என அவன் தத்துவ முத்துக்களை உதிர்க்க, 'ஈ' என்று சிரித்து வைத்தாள் மாளவிகா.
"சின்ன மாம்ஸ், நாங்களும் பாப்பாக்குச் சித்திதான் என்னை மறந்துடீங்க பார்தீங்களா" என அவனை சாத்விகா வார,
அடுக்களை நோக்கி சென்ற மது, "சரோ கொஞ்சம் வந்து மேல இருக்கற அந்த டப்பாவை எடுத்துகுடுங்க ப்ளீஸ்" என்று அவனை அழைக்க,
உள்ளே சென்ற சரவணன் அவள் சொன்னதைச் செய்ய, "ப்ச்... உங்களுக்கு ஏன் இவ்வளவு அவசரம்? அவ இப்பதான வேலைல சேர்ந்திருக்கா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரோ. எங்க வீட்டுலயே அவ கொஞ்சம் வேற மாதிரி. எதையாவது பேசிக் காரியத்தைக் கெடுத்துடாதீங்க” என அவனை நாசூக்காகக் கடிந்துகொள்ள,
"அண்ணி... என்ன செய்வீங்களோ தெரியாது. அம்மா அப்பா ஊர்ல இருந்து வந்த உடனே நீங்கதான் அண்ணா கிட்ட சொல்லி கல்யாண பேச்சை ஆரம்பிக்கணும். கம்பெனில ஆன்சைட் போட்டுட்டாங்கன்னா இன்னும் கஷ்டம் அண்ணி. புரிஞ்சிக்கோங்க" எனக் கிட்டத்தட்ட அவளிடம் கெஞ்சலாகச் சொல்லிவிட்டு வெளியில் வந்தான் சரவணன்.
சரவணன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறான். வேளச்சேரியில் அவர்களுடைய அப்பா வாங்கி போட்டிருந்த இடத்தில் அண்ணனும் தம்பியுமாகச் சேர்ந்து, எல்லா வசதிகளையும் உள்ளடக்கி அந்த வீட்டைக் கட்டியிருக்கின்றனர்.
இவர்கள் திருமணத்தின்போதே மாளவிகாவை அவனுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது போலும். சில மாதங்களுக்கு முன்பாக அதை தன் அண்ணன் மற்றும் அண்ணியிடம் அவன் தெரியப்படுத்த, அவனிடம் குறை என்று சொல்லுமளவிற்கு எதுவும் இல்லை என்பதினால், அவளுடைய அம்மா அப்பாவும் இதற்குக் கட்டாயம் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கவே மது அதற்கு சம்மதித்தாலும், தங்கையின் குணம் தெரிந்திருந்ததால் அவனை சில நாட்கள் பொறுத்திருக்கும்படி சொல்லியிருந்தாள் அவள்.
அவனும் அவளுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு மாளவிகாவை நேரடியாக அணுக முற்படவில்லை. அவன் இப்பொழுது இப்படிச் சொல்லவும், இனிமேல் இவனைக் காத்திருக்க வைப்பது கொஞ்சம் கடினம் என்றே அவளுக்குத் தோன்றியது.
"கண்டிப்பா செய்யலாம் சரோ, அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ்" என்றவள் மாமனார் மாமியார் திரும்ப வந்தவுடன் பேசி முடிவு செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
'சொந்த தங்கையே தனக்கு ஓரகத்தியாக வந்தால்!' என்ற எண்ணமே அவளுக்கு அவ்வளவு தித்தித்தது.
அவளுடைய தங்கையைச் சுற்றித்தான் ஒருவனுடைய ஒட்டுமொத்த உலகமும் சுழன்று கொண்டிருக்கிறது. அவன் இவளுடைய இந்த ஆசையை ஒருபொழுதும் நிறைவேற விடமாட்டான் என்பதை இக்கணம் அவள் அறிந்திருக்கவில்லை பாவம்.
அதன் பின் சரவணன் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ள, மாளவிகாவுக்கும் எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. சில மணித்துளிகள் அவர்களுக்குக் கலகலப்பாகக் கடந்தது.
பின் லேசாக இருட்டத் தொடங்கவும், சீக்கிரம் அவர்களைக் கிளம்பி வரச்சொல்லி துளசியிடமிருந்து அழைப்பு வேறு வந்துவிட, மாளவிகாவும் சாத்விகாவும் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, தன் கார் சாவியை எடுத்து வந்தவன், "இந்த நேரத்துல இவங்க தனியா போக வேண்டாம். நானே இவங்களை ட்ராப் பண்ணிட்டு வரேன்" என்றான் சரவணன்.
அவன் உண்மையான அக்கறையில் சொல்வது புரியவும், மதுவும் அவர்கள் இருவரையும் வற்புறுத்தி அவனுடன் அனுப்பி வைத்தாள். அவன் காரை ஓட்டி வந்து நிறுத்த, மாளவிகா பின் இருக்கையில் போய் உட்காரவும் அவனுக்கு அருகில் போய் உட்கார்ந்தாள் சாத்விகா.
விக்னேஷ் தம்பியைப் பார்த்து ஒரு கிண்டல் சிரிப்பை உதிர்க்க மதுவும் கணவனுக்குத் துணைப் போக, அவர்களை முறைத்துக்கொண்டே காரை கிளப்பிக்கொண்டு போனான் சரவணன்.
அதன் பின் அவர்களுடைய வீட்டிற்கு மூவரும் வந்து சேர, சரவணனைப் பார்த்து ஒரு ஆச்சரியத்துடன் அவனை வரவேற்றார் துளசி. அவர் செய்த பலகாரத்தின் சுவையைப் பற்றிப் புகழ்ந்து தள்ளிவிட்டு அவர் கொடுத்த காஃபியை வாங்கிப் பருகிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அவன்.
அதன்பின் ஒரு ஆயாசத்துடன் சகோதரிகள் இருவரும் அவர்களுடைய அறைக்கு வர, "யக்கோவ்... என்னக்கா நடக்குது இங்க. அவர் என்னக்கா உன்னை இப்படி தாறுமாறா சைட் அடிக்கறாரு?" என அதுவரை அடக்கி வைத்திருந்த தன் வியப்பையெல்லாம் சாத்விகா கொட்ட, மாளவிகாவுக்கு சரவணனைப் பற்றிய நினைவே வரவில்லை.
மாறாக அவளுடைய மனக்கண்ணில் அக்னிமித்ரனின் உருவம் மட்டுமே அனுமதியில்லாமல் சட்டமாக வந்து அமர்ந்துகொண்டு 'ஹை லயன்னஸ்' என அவளைப் பார்த்து புன்னகையோடே கண் சிமிட்ட, "ஏய்... என்னடி உளற்ற" எனப் பதறினாள் மாளவிகா.
இந்த நேரத்தில் 'அவனை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது' எனச் சொல்லும் மாளவிகாவுக்கு அக்னிமித்ரனின் நினைவு ஏன் வரவேண்டும்?
விடை காலத்தின் கைகளில்.
Adapavi agni nalla irunda ponna enna da panna, saravana nee ninaikardu nadaka vaaipu illa rasa