top of page

Isaithene - 3

3. முதல்முறை பார்த்த ஞாபகம்!


"நீ இங்கதான் இருக்கியா பாலா?" என்று கேட்டுக் கொண்டே தேவபாலனைத் தேடிக் கொண்டு அங்கேயே வந்துவிட்டார் சீதா.


அருகில் நின்றிருந்த தேன்மொழியைப் பார்த்துவிட்டு, "நல்லதா போச்சு தேனு, நீயும் இங்கயே இருக்க… பை த வே, இவர நான் உனக்கு இண்ட்ரடியூஸ் பண்ணனும்னு அவசியமே இல்ல… பிரபல இசையமைப்பாளர் தேவபாலன்" என்று சொல்லவும், மையமாகப் புன்னகைத்தாள்.


"பாலா, இவங்கதான் தேன்மொழி! நம்ம அகாடமி கர்நாடிக் மியூசிக் பிரிவோட வி.பி! உள்ளத சொல்லனும்னா, நம்ம அகாடமிய பொறுத்தவரைக்கும் எனக்கு அடுத்தது இவங்கதான் எல்லாம்” எனப் பெருமையாக, அவனுக்கு அவளை அறிமுகப்படுத்தினார்.


இருவரையும் பார்த்தபடி மீண்டும் மௌனமாகப் புன்னகைத்தாள்.


கண்கள் வரை எட்டாமல் ஜீவனே இல்லாத, அதீத தயக்கத்துடன் கூடிய அவளது சிரிப்பை உணர்ந்து சீதா அவனை ஒரு பொருள் பொதிந்த பார்வை பார்க்க, புரிந்தது என்பதாக விழி மூடித் திறந்து அதை அமோதித்தான் பாலா.


“தேனு, பாலாவோட அம்மா தேவமனோகரி என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட். ஏதோ காலத்தின் கோலமா, எங்க ரெண்டு பேருக்கும் தொடர்பே இல்லாம போயிருந்துது. இப்ப, ரீசன்ட்டா ஒரு மியூசிக் கான்சர்ட்ல அவங்கள எதேச்சையா மீட் பண்ணேன். அப்பத்தான் பாலா அவங்க பையன்னே தெரிஞ்சுது” என மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே போனவருக்குப் பெருமை பிடிபடவில்லை.


“வாவ் மேம், சூப்பர்”


“அதோட இல்ல தேனு, நம்ம அகடமிய சேல் பண்ணப் பாத்துட்டு இருக்கேன்னு சொன்னனா? கொஞ்சம் கூட யோசிக்காம, பாலா அவரே வாங்கிக்கறேன்னு சொல்லிட்டாரு. அவங்க அம்மாவுக்கு கிஃப்ட் பண்ணப்போறாராம்”


சீதா இப்படிச் சொல்லவும், முகத்தில் படர்ந்த அதிர்ச்சியை மறைக்கவே இயலவில்லை தேனுவால். சீதாவுக்கு அவளது மனநிலை பிடிபட, அவரது முகமும் கூட கூம்பியது. பாலா அதை நன்றாகவே கவனித்தான்.


“சரி வா ஆஃபீஸ் ரூம்ல போய் பேசிக்கலாம்” என்றபடி அவர் அங்கிருந்து வெளியேற, கூடவே இணைந்து நடந்தான் பாலா.


“என்ன பாலா, ஃபுல்லா சுத்தி பார்த்துட்டியா? உனக்குப் பிடிச்சிருக்கா?”


“ஐம் மச் சாட்டிஸ்ஃபைட், ஆன்ட்டி. இந்த அகடமிய பார்க்கும்போது, இத இந்த நிலைமைக்கு வளர்த்து விட நீங்க எவ்வளவு உழைச்சிருப்பீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. இப்படி ஒரு மியூசிக் ஸ்கூல உருவாக்கணுங்கறது அம்மாவோட பல வருஷக் கனவு. அதுக்கு வடிவம் கொடுத்த மாதிரியே இந்த ஸ்கூல் அமைஞ்சிருக்கு. உண்மைய சொல்லணும்னா நாங்கதான் ஆன்ட்டி ரொம்ப லக்கி. அம்மா ஒரு தடவ பார்த்து ஓகே சொல்லிட்டா உடனே ரெஜிஸ்ட்ரேஷன வெச்சிக்கலாம்! அது கூட ஒரு பார்மாலிட்டிக்குதான்”


மனம் நிறைந்து சொன்னவனின் வார்த்தைகள் சீதாவின் மனதையும் குளிர்வித்தது.


“உண்மைய சொல்லனும்னா, நானும் உங்கம்மாவும் சேர்ந்தேதான் இப்படி ஒரு கனவ கண்டோம் பாலா. கடவுள், எல்லாருக்கும் ஒரே மாதிரியான வரத்தைக் கொடுக்கறதில்லயே. மேடு பள்ளங்கள் இல்லாம, என் பாதை ரொம்ப ஸ்மூத்தா இருந்ததால என்னால அந்தக் கனவுக்கு வடிவம் கொடுக்க முடிஞ்சுது!” என்றவருக்கு அதற்குமேல் பேச்சே வரவில்லை. பழைய நினைவுகளில் கண்களில் நீர் திரண்டது.


“அவங்க கனவுக்கு வடிவம் கொடுக்கத்தான் ஆன்ட்டி நான் இருக்கேன்! நீங்க ஏன் ஃபீல் பண்றீங்க”


“ரொம்ப நல்லது, பாலா! அவளுக்கு ஒரு மோசமான குடும்பத்தைக் குடுத்த கடவுள்தான், உன்ன மாதிரி ஒரு நல்ல மகனையும் கொடுத்திருக்கார்”


‘கடவுள்தான் எல்லாமே கொடுக்கறார்ன்னு சொன்னா, அவர் எல்லாருக்குமே எல்லாத்தையுமே நல்லதா மட்டுமே கொடுக்கலாமே! இதெல்லாம் மனுஷ மனங்களின் வக்கிரம்’ என்ற எண்ணத்துடன் ஒரு புன்னகையை மட்டும் அவருக்கு பதிலாகக் கொடுத்தான்.


‘தேனு எங்கே?’ என்ற கேள்வியுடன் அவர் பின்னால் திரும்பிப் பார்க்க, இவர்கள் இருவருக்கும் இடையில் வர விரும்பாமல், அவர்களது அலுவலகச் சிப்பந்தி சரோஜாவிடம் தீவிரமாகப் பேசியபடி தொலைவாக நின்றிருந்தாள்.


சீதாவுக்கு அதுவும் ஒருவிதத்தில் நல்லதாகப்பட்டது.


“தேனுவ பத்தி உன்கிட்ட சொன்னேன் இல்ல, பாலா? தகவல சொன்னதும் அவ முகமே எப்படி மாறிப் போச்சுன்னு பார்த்த இல்ல! பாவம், ரொம்ப பயந்துட்டா போலிருக்கு”


‘அவ பயம் எதுக்குன்னு எனக்குதான தெரியும்?’ என்றுதான் பாலாவுக்குத் தோன்றியது.


“இட்ஸ் நேச்சுரல், ஆன்ட்டி. அவங்க சூழ்நிலைல இப்படித்தான் யோசிக்க முடியும்”


“ரொம்ப நல்ல பொண்ணு, பாலா! ஃபியூச்சர்ல அவளுக்கு எந்த ஒரு சங்கடமும் இல்லாம, இப்ப இருக்கற மாதிரியே அவ இங்க இருக்கணும். அதுக்கு நீதான் பாலா பொறுப்பு! என்னடா ஆன்ட்டி திரும்பத் திரும்ப இதையே சொல்றாங்களேன்னு தப்பா நினைக்காத”


“நாட் அட் ஆல் ஆன்ட்டி! உண்மைல தேனுவ என் கண்ணுல காமிச்சதுக்கு நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும், ஐ மீன்… இப்படி ஒரு பொறுப்பான ஸ்டாஃப”


“ரொம்ப நல்லதுப்பா”


பேசிக்கொண்டே அலுவலகப் பகுதிக்குள் நுழைந்து, தனது கேபினுக்குள் அவனை அழைத்து வந்தார்.


அந்த இசைப்பள்ளியைப் பற்றிய பேச்சில் தீவிரமாக சில நிமிடங்கள் கழிய, ஃகாபியைக் கொண்டு வந்து கொடுத்தாள் சரோஜா.


“சரோஜா, தேனுகிட்ட சொல்லி, போன வருஷ இன்கம் டேக்ஸ் ஃபயில எடுத்துட்டு வரச் சொல்லு” என்று சீதா அவளிடம் சொல்லி அனுப்ப, சில நிமிடங்களில் அவர் கேட்ட கோப்புடன் அங்கே வந்தாள் தேனு. “உக்காரு தேனு” என்றபடி அவர் அதை வாங்கி பாலாவிடம் கொடுத்தார்.


சிறு தயக்கத்துடன் அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.


அதைப் புரட்டி மேலோட்டமாகப் படித்தவன், சில சந்தேகங்களைக் கேட்க, “சங்கீதத்த பத்தி கேளு, பதில் சொல்றேன்! மத்தபடி இதையெல்லாம் அங்கிளும் தேனுவும்தான் பார்க்கறாங்க. அதனால் இதுல எனக்கு ஆனா ஆவன்னா கூட தெரியாது” என்று சொல்லிவிட்டு அவளை ஒரு பார்வை பார்க்க, தேனுதான் அவனுக்குப் பதில் சொல்ல வேண்டியதாகிப் போனது.


அதற்குள் அவனுக்கு ஏதோ அழைப்பு வர, வெளியில் சென்று பேசிவிட்டு வந்தவன், “அர்ஜன்ட்டா ஒரு வேல வந்துடுச்சு. நான் இப்ப கிளம்பறேன்! அம்மா வந்து பார்த்த பிறகு மத்த எல்லா டீடைல்சும் என்னோட லீகல் டீம் பேசிப்பாங்க! ரேட் பத்தி பிரச்சன இல்ல! நீங்க சொல்றதுதான்”எனச் சொல்லிவிட்டான்.


அப்படியே உச்சி குளிர்ந்து போய்விட்டார் சீதா.


ஒருவழியாகப் பேசி முடித்து அவன் அங்கிருந்து கிளம்பிச் சென்ற பிறகுதான், தேனுவால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.


அப்பாவின் பென்ஷன் தொகை மொத்தம் அம்மாவின் மருத்துவ செலவுக்கே போய்விடுகிறது. மற்றபடி வீட்டு வாடகை, மளிகை, பால், காய்கறிகள், கூடவே திடீர் திடீர் என வந்து விழும் தங்கைக்கான சீராடல் செலவுகள் என அனைத்தயும் சமாளிப்பது இங்கே வேலை செய்வதால் கிடைக்கும் ஊதியத்தில்தான். இனி இங்கே நிம்மதியாக தன்னால் வேலை செய்ய இயலுமா என்ற கேள்வியில் தன் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் அவளது மனம் முழுவதும் படர்ந்தது.


ஒருவித படபடப்பும் களைப்பும் வந்து ஒட்டிக்கொள்ள, அங்கிருந்து சென்றால் போதும் என்றிருந்தது.


“மேம், இன்னைக்குதான் பெருசா வேலை எதுவும் இல்லையே, நான் வீட்டுக்குப் போகட்டுமா?”


தயக்கத்துடன் அவள் கேட்ட நொடி, “ஏன் தேனு, பயந்துட்டியா? உன்ன பத்தி நான் பாலாகிட்ட சொல்லிட்டேன் தேனு. அவர் நிச்சயமா உனக்கு ஃபேவரா இருப்பார்” என்றார் சீதா.


ஐயோ என்றிருந்தது தேனுவுக்கு!


அவர் என்னவோ அவளுக்கு அறுதல் சொல்வதாக நினைத்து இப்படி சொல்ல, தன்னுடைய இந்த இழிநிலை அவன் வரை தெரியும்படி ஆகிவிட்டதே என, அது அவளை இன்னும் மோசமாக வேதனைப் படுத்தியது.


“அதான் நீங்க ஏற்கனவே சொல்லியிருந்தீங்க இல்ல? அதனால பயமெல்லாம் ஒண்ணும் இல்ல மேம்! மைல்டா ஃபீவர் மாதிரி அனத்தலா இருக்கு, அதான்” என்றாள். அதுதான் உண்மையும் கூட. ஒருவித அதிர்ச்சிக் கொடுத்த அனற்றல்தான் இது.


“அப்படின்னா சரி, நீ கெளம்பு!”


அதன்பிறகு ஒரு நொடி கூட அங்கே நிற்கவில்லை தேன்மொழி. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு நேராக வந்து தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.


அதிசயமாக அந்த நேரத்தில் வீடு திரும்பிய மகளிடம், ‘என்ன ஆச்சு? ஏதாச்சு?’ என ஆயிரம் கேள்வி கேட்டார் செல்வி.


“ஐயோ, ஒண்ணும் இல்லம்மா, லேசா தலைய வலிக்குது. நீ சாப்ட்டு மத்தரையெல்லாம் போட்டுட்டியா” எனப் பதிலுக்கு இரண்டு கேள்விகளைக் கேட்டுவிட்டு, “ஆச்சு… ஆச்சு…” என அலுப்புடன் அவர் சொன்ன பதிலைக் காதில் வாங்கியபடி, ஒரு பாராசிட்டமல் மாத்திரையை அலமாரியிலிருந்து தேடி எடுத்து விழுங்கினாள்.


“ஏய்… என்னடி, சட்டுன்னு மாத்தரல்லாம் இப்படி போடமாட்டியே! ஒடம்புக்கு ரொம்பவும் முடியலியா?” எனப் பதறினார் செல்வி.


“ம்மா… அதான் சாதா தலவலின்னு சொல்றேன் இல்ல! இன்ஸ்டன்ட் ரிலீஃப்க்காக ஒரு மாத்தர போட்டா, இவ்வளவு கேள்வி கேப்பியா?”


“ஒரு அக்கறைல கேட்டா, அதுக்கு ஏன்டீ எரிஞ்சு விழற”


“ம்மா… நீயும் பேசாம வந்து படு! சாயங்காலம் வீடியோ கால் போட்டு கனிகிட்ட பேசலாம்”


“ஆமான்டீ, புள்ளைங்க ரெண்டும் கண்ணுலேயே நிக்குது” என்றபடி வந்து கட்டிலில் படுத்தார் செல்வி.


போய், கதவைத் தாளிட்டு வந்தவள், அறை ஜன்னலை மூடிவிட்டுக் கீழே பாய் விரித்துப் படுத்தாள்.


‘பாவம், ரொம்ப தலவலி போலிருக்கு! அதான் இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்கு’ என்ற எண்ணம் தோன்ற அவளிடம் பேச்சுக் கொடுக்காமல் அமைதியாக கண்களை மூடிக் கொண்டார் செல்வி. மருந்துகளின் வீரியத்தில் உடனே உறங்கியும் போனார்.


நினைவுகள் சுழற்றி அடித்த வேகத்தில் தேனுவுக்குதான் உறக்கமே வரவில்லை.


அவளது நாட்கள் பின்னோக்கி நகர்ந்தன.


பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேறியிருந்தாள் தேனு.


“ப்பா… ப்பா… ப்ளீஸ் ப்பா! ஜஸ்ட் மூணே மூணு வருஷம்தான்! திரும்பிப் பார்க்கறதுக்குள்ள ஓடியே போயிடும்”


தமிழ்நாடு இசைக் கல்லூரியில் மூன்றாண்டு பட்டப் படிப்பில் சேர்த்துவிடச் சொல்லிக் கெஞ்சும் மகளைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவசாமி!


சென்னைக்கு அனுப்பி அவளைப் படிக்க வைக்க பயந்துகொண்டு மகளின் விருப்பத்துக்குத் தடையாகச் செல்வி ஒரு புறம் முறைத்துக் கொண்டு நிற்கிறார். செல்வியின் தமையன் மகன் செல்வவிநாயகத்துக்கு இவளைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவருடைய மாமனார் மாமியார் இருந்தபொழுதே பேசி முடிவு செய்து வைத்திருக்கிறார்கள்.


அவன் இப்பொழுது பீ.ஈ மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படிப்பில் இருக்கிறான். அவனுக்கும் சரி அவனுடைய அப்பாவுக்கும் சரி, இவளை வெளியூர் அனுப்பி படிக்க வைப்பதில் உடன்பாடில்லை. அதை செல்வியின் மண்டைக்குள்ளும் திணித்துவிட்டனர். அவருக்கு அவரது அண்ணன் வாக்கு வேதவாக்கு.


“எதிர்கலத்துல இவ ஏதாவது வேலைக்குப் போகணும்னு சொன்னதான நாம மெனக்கெடனும். இல்ல பீஈ, பீடெக்ன்னு உருப்படியான படிப்பு படிக்கப் போறாளான்னா, அதுவும் இல்ல! மியூசிக்காம், மண்ணாங்கட்டியாம்! நம்ம ஊர்ல இல்லாத காலேஜா! இங்கயே பேருக்கு ஏதாவது ஒரு படிப்புல சேர்த்துவிடுங்க மாப்ள! நம்ம விநாயகத்துக்கு வேல கிடைச்சதும் கல்யாணத்த முடிச்சிடலாம்” எனத் தீர்மானமாகச் சொன்னார், அங்கே வந்து சட்டமாக அமர்ந்திருந்த அவரது மைத்துனர்.


தாய்மாமனின் இந்தச் சர்வாதிகாரத்தில் தேன்மொழிக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. இயலாமையுடனான அந்த ஆத்திரத்தில் அழுகை வந்துவிட, மிக முயன்று அதை அடக்கினாள்.


சிவசாமிக்கு மகளின் நிலை மனதைப் பிசைந்தது. பிள்ளைகளின் மகிழ்ச்சியை விட வேறென்ன வேண்டிக் கிடக்கிறது என்கிற எண்ணம்தான் வந்தது.


இவர்கள் சொல்வது போல எதையாவது படிக்கவேண்டும் என இவள் இதைத் தேர்ந்தெடுக்கவில்லை. தேன்மொழியின் உணர்வுகளுடன் இரண்டறக் கலந்துபோன ஒரு உன்னதம், இசை.


இசையில் அதீத ஆர்வம். ஐந்து வருடங்களாக கர்நாடக சங்கீதம் பயின்று வருகிறாள். அதன் அடுத்தகட்ட வளர்ச்சிதான் இந்தப் பட்டப் படிப்பு. அவளது கனவு இலட்சியம் இது! அதுவும் தேனு பாடிக் கேட்க வேண்டும்! இன்பத் தேன் வந்து செவிகளை நனைக்கும் இனிமையான குரல் அவளுடையது.


இதை மறுப்பது பாவச் செயல் என்றே தோன்றியது!


“புள்ள மனச பாக்காம, முரட்டுத்தனமா நாம மறுப்பு சொல்றது தப்பு மச்சான்! தேனு குட்டி சொல்ற மாதிரி, ஜஸ்ட் மூணு வருஷம்தான? படிச்சிட்டு வரட்டும்! நான் இவள அந்தப் படிப்புல சேர்த்துவிடறதா முடிவு பண்ணிட்டேன்”


“என்ன மாப்ள, அவதான் புரியாம அடம் பிடிக்கறான்னு சொன்னா, நீங்களுமா?’


“உங்களுக்கு நல்லாவே தெரியும், பிள்ளைங்க விருப்பம்தான் என்னோட விருப்பமும்! இது சம்பந்தமா இனிமேல் யார் என்ன சொன்னாலும் நான் என் மனச மாத்திக்க மாட்டேன்! செல்வி, நீயும் உன் மனச தயார் பண்ணிக்கோ”


ஒரு கட்டளைப் போல அவர் சொன்ன நொடி, மறுத்துப் பேச நா எழவில்லை… செல்விக்கு மட்டுமல்ல, அவளுடைய உடன்பிறப்புக்குமே!


மகிழ்ச்சிப் பொங்க ஓடிவந்து அப்பாவை அணைத்துக்கொண்டாள் தேன்மொழி.


“பாரு கண்ணு, உன் மேல அப்பா வெச்சிருக்கற நம்பிக்கைய நீ காப்பத்தனும்” என்று அன்புக் கட்டளை விடுத்த தகப்பனைப் பார்த்து, உறுதியுடன் தலை அசைத்தாள் மகள்.


அவள் விருப்பம்போலவே சென்னை, தமிழ்நாடு இசைக் கல்லூரியில் அவளைச் சேர்த்துவிட்டார் சிவசாமி.


தனியார் விடுதி ஒன்றில் தங்கிக் கொண்டு, கல்லூரிக்குச் சென்றுவரத் தொடங்கினாள் தேனு.


அங்கே புதிதாக நிறைய நண்பர்கள் கிடைக்க, உயிர்தொழியானாள் நிரஞ்சனா.


விடுமுறை சமயங்களில் திருச்சிப் போய் அப்பா, அம்மா, தங்கையுடன் இன்பமாக இருந்துவிட்டு திரும்ப வருவாள்.


இப்படியாகவே, அவள் சொன்னது போல... கண் மூடித் திறப்பதற்குள் இரண்டு வருடங்கள் இனிதாகவே உருண்டோடின.


*******


எப்பொழுதுமே உற்சாகப் பந்தாகச் சிரித்த முகத்துடன் சுழன்று கொண்டிருப்பது தேன்மொழியின் இயல்பு. கலகலப்பாகப் பேசும் சுபாவம் கொண்டவள். அதே சமயம் யார்யாரிடம் எப்படிப் பழகவேண்டும் என்ற நேக்குப் போக்கும் தெரிந்தவள்.


அவளுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம். அவளுடைய மாநிறத்துக்குப் பொருத்தமாகப் பளிச்சென்ற அடர் வண்ண ஆடைகளையே விரும்பி அணிவாள்.


எப்பொழுது எந்த உடை எடுத்தாலும் அதற்கு மேட்சாக வளையல் தோடு என அனைத்தையும் வாங்கி விடுவாள். பாவாடை தாவணியோ சுடிதாரோ புடவையோ, எந்த உடை அணிந்தாலும் திருத்தமாக அணிவாள்.


கோவிலுக்குச் சென்றாலும் சரி, திருமணம் உள்ளிட்ட எந்த விழாக்களுக்குச் சென்றாலும் சரி தலையில் ஒரு முழம் பூ இல்லாமல் எங்கும் செல்ல மாட்டாள்.


இதனாலேயே எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்தாலும் தனியாகத் தெரிவாள் தேன்மொழி.


அன்றும் அப்படித்தான், மதுபானி ஓவியத்துடனான முந்தானையுடன் கூடிய அடர் நீலத்தில் சிறு சிறு பூக்கள் போட்ட பிங்க் நிற சேலையும், அதற்குப் பொருத்தமான அடர் நீல கற்கள் பதித்த நகைகளும் அணிந்து, நிரஞ்சனாவுடைய அக்காவின் நிச்சயதார்த்த விழாவுக்காகக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.


“அக்கா… கூடுமான வரைக்கும் எட்டு மணிக்குள்ள வந்துடுவேன்! ஒருவேள லேட் ஆச்சுன்னா… நிரூ கூட அவ வீட்டுக்குப் போயிட்டு, நாளைக்கு அங்க இருந்தே காலேஜ் போயிடுவேன்” என அவளுடைய ரூம் மேட் பூரணியிடம் சொல்லியபடியே பேக் பேக்கை எடுத்து மாட்டிகொண்டாள்.


அதுவரை போர்வையை முகம் வரை மூடிக்கொண்டு கைப்பேசியில் யாருடனோ கடலை வறுத்துக் கொண்டிருந்த பூரணி தலையை வெளியில் நீட்டி அவளைப் பார்த்ததும், “வாவ்!” எனச் சத்தமாக விசில் அடித்தாள்.


“அக்காஆஆ” என வெட்கப்பட்டு முகம் சிவந்தாள் தேனு.


“ஓய் அழகி…”


”கோயிலுக்கு நீயும் போகாதே கோபுரங்கள் சாஞ்சி பாக்குமடி… பாக்குமடி…


காட்டுக்குள்ள நீயும் போகாதே…


கொட்டுகிற தேனீக்கூட்டம் தேனெடுக்க உதட்டைச் சுத்துமடி…


பூப்பறிக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே


பூக்களுக்குள் கத்திச் சண்டையடி” (திரைப்பாடல்) என அவளைக் கிண்டல் செய்து பாடவே தொடங்கிவிட்டாள்.


“ஐயோ அக்கா… நீங்க வேற! எனக்கு டைம் ஆச்சு நான் வரேன்” என தேனு அங்கிருந்து ஓட்டம் பிடிக்க,


“அங்க மண்டபத்துல எவன் எவனெல்லாம் தலைச் சுத்தி விழப்போறானோ! ஓய் தேனு… எதுக்கும் நீ கொஞ்சம் உன்னோட அழக குறைச்சிக்கோ!” என்று பூரணி கத்தியது அறை வாயில் தாண்டிக் கேட்க, பார்வையைச் சுழலவிட்டாள்.


நீண்டு கிடந்த அந்த நடைக்கூடத்தில் நல்லவேளையாக யாரும் இல்லை. ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு வெளியில் வந்து, தன் ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றாள் தேன்மொழி.


*******


எங்கிருந்து பார்த்தாளோ, திபுதிபுவென்று ஓட்டமும் நடையுமாக தேனுவை நோக்கி வந்தாள், அவளுக்காகவே காத்திருந்த நிரஞ்சனா. அவள் வாகனத்தை நிறுத்திப் பூட்டும் வரையில் கூட பொறுமையில்லாமல், “ஏய் பக்கி, எப்ப வரச் சொன்னா, ஆடி அசங்கிட்டு எப்படி வந்திருக்க? உன்ன கெஸ்ட் மாதிரி ட்ரீட் பண்ணுமா?” எனக் கையைப் பிடித்து இழுத்தபடி நடக்கத் தொடங்கினாள்.


“ரொம்ப ஓவரா பண்ணாதடி, எரும! தீம் ட்ரெஸ்ன்னு சொல்லிப் பொடவ கட்ட சொல்லிட்டு! அங்க பின்ன குத்தி, இங்க பின்ன குத்தி, இதுக்கே முழுசா ஒரு மணிநேரம் ஆயிடுச்சு”


“இங்க வந்து கட்டிட்டு இருக்கலாம் இல்ல? அக்காவுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கறவங்க கூட சேர்த்து இன்னும் ரெண்டு ப்யூடிஷியன்ஸ் வந்திருக்காங்க!”


“மத்தவங்க பொடவ கட்டி விடரதெல்லாம் எனக்கு செட்டே ஆகாது! நமக்கு நாமேதான் எல்லாம்”


“ம்கும் ரொம்பதான்… உனக்கு கல்யாணம்னு வந்தா என்ன செய்யபோறன்னு பறக்கத்தான போறேன்”


“அப்பவும் பொடவய மட்டும் நானேதான் கட்டிப்பேன்., போடீ”


உடனே தேனுவின் காதில் நிரஞ்சனா ஏதோ கிசுகிசுக்க முகம் சிவந்துபோய், “போடீ… வெக்கங்கெட்டவளே” என அவளது முதுகில் நன்றாக அடித்தாள்..


“ஆவ்… பன்னி” என்று முகத்தை சுருக்கினாள் நிரஞ்சனா. இவள் பதிலுக்கு பழிப்பு காண்பிக்க, அதே நேரம் அவர்களை உரசுவதுபோல வந்து நின்றது ஒரு இரு சக்கர வாகனம். அதிர்த்து, தேனு ஓரடி பின்னால் நகர்ந்தாள்.


“ஷ்…ப்பா… ஆனந்த், என்ன இப்படி ஷாக் குடுக்கற” என மூச்சை இழுத்துவிட்டாள் நிரஞ்சனா.


அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்தவனைப் பார்த்து அவள் மையமாய் புன்னைகைக்க, கஞ்சன் போல மெல்லிய கீற்றான ஒரு புன்னகையைப் பதிலாகக் கொடுத்தான் அவன்.


“நான் அன்னைக்குச் சொன்னேன் இல்ல நிரூ, அந்த பாலா இவன்தான்!” எனத் தன் நண்பனை அவளுக்கு அறிமுகப் படுத்தினான் ஆனந்த், நிரஞ்சனாவின் அத்தை மகன். அவனுடைய அண்ணனுக்குத்தான் அவளுடைய அக்காவைத் திருமணம் செய்துகொடுக்கப் போகிறார்கள்.


அனிச்சையாக தேனுவின் கண்கள் பாலாவை நோக்க, அவனது தெளிவான முகமும், அழுத்தமான பார்வையும், ஒரு நொடி அவளைச் சிலிர்க்க வைத்தது.


“ஹாய், ப்ளீஸ் வெல்கம், உங்களப் பத்தி ஆனந்த் ரொம்ப ஹையா சொல்லிட்டு இருந்தாரு” என்ற நிரஞ்சனா, “வண்டிய பார்க் பண்ணிட்டு உன் ஃப்ரெண்ட உள்ள கூட்டிட்டு வா ஆனந்த்” என அங்கிருந்து நகர எத்தனித்தாள்.


“ஓய், நான் என் ஃப்ரெண்ட இன்ட்ரடியூஸ் பண்ண மாதிரி, நீயும் உன் ஃப்ரெண்ட இன்ட்ரடியூஸ் பண்ணும்! அந்த ஒரு மேனர்ஸ் கூட தெரியலியே உனக்கு” என்றான் ஆனந்த் வெகு சகஜமாக.


ஒருவித நட்பும் அன்னியோன்னியமும் புலப்பட்டதே தவிர, அதில் கொஞ்சமும் விரசமில்லை. எனவே இயல்பாகப் புன்னகைததாள் தேனு. ஆனால் அதில் பாலாவுக்குதான் எரிச்சல் மூண்டது. ஆனந்தின் தோள்களை அழுத்திப் பிடிக்கவும், நெளிந்தான் அவன்.


“அட நீங்க விடுங்க பாலாண்ணா, இவன் சின்ன வயசுல இருந்தே இப்படித்தான். பை த வே, ஆனந்த், இவதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் தேன்மொழி! திருச்சிக் காரி. என்கூட ம்யூசிக் காலேஜ்ல பி.ஏ மியூசிக் தேட் இயர் படிக்கறா!”


“தேனு, இவன்தான் ஆனந்த்”


“ஹாங்… உங்கள தெரியும், நிரூ உங்களப் பத்தி ஒரு நாளைக்கு ஒரு தடவயாவது பேசிடுவா”


“ஆனா பாருங்க இந்த வன்ம குடோன், இவளுக்கு இவ்வளவு அழகா ஒரு ஃப்ரெண்ட் இருக்கறத பத்தி என்கிட்ட மூச்சு கூட விடல"


"நீ என்னை இப்படி எல்லாம் பேசற இல்ல, அதனாலதான் இவள பத்தி நான் மூச்சு கூட விடல" என இடைப் புகுந்தாள் நிரஞ்சனா.


தேனுவோ பக்கென்று சிரித்து விட, பாலா மீண்டும் ஒருமுறை அவன் தோளை அழுத்த, வலித்தாலும் அதை வெளிக் காண்பிக்காமல் சிரித்த முகமாக இருந்தான் ஆனந்த்.


"இவங்க பாலா அண்ணா. ஆனந்தோட பெஸ்ட் ஃப்ரெண்ட். சூப்பரா பாடுவாங்க. 'தேவராகம் மெல்லிசை மழை'ங்கற பேர்ல ஆர்கெஸ்ட்ரா வெச்சிருக்காங்க. அக்கா கல்யாண ரிசப்ஷனுக்குக் கூட இவங்களதான் புக் பண்ணி இருக்கோம்" என அவனையும் தேனுவுக்கு அறிமுகப்படுத்தினாள் நிரஞ்சனா.


"ஹாய்" என அவன் முகம் பார்த்து அவள் புன்னகைக்க, அவன் பதிலுக்கு "ஹாய்" என்று புன்னகைக்கவும், வேகமாக வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு அங்கிருந்து அகன்றான் ஆனந்த்.


அதன் பின் அவளை நேராக இழுத்துக் கொண்டு அவளுடைய அக்கா ஒப்பனை செய்து கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தாள் நிரஞ்சனா.


அழகு நிலையைப் பெண்கள் அவளுக்கு அலங்காரம் செய்துகொண்டிருக்க, அவர்கள் குடும்பத்துப் பெண்கள் அனைவரும் அங்கேதான் குழுமி இருந்தனர்.


“அக்கா, செமையா இருக்கீங்க!” என்றபடி அவளை நோக்கிப் போனாள் தேனு. "தேனு, வா… வா…" என அவளை வாயார வரவேற்றார் நிரஞ்சனாவின் அம்மா.


"ஹேய்… இப்படி சூப்பரா டிரஸ் பண்ணிட்டு வந்து நீ என்ன எனக்கே டஃப் கொடுக்கற!" என நிரஞ்சனாவின் அக்கா அவளை வாரினாள்.


"ஐயோ அக்கா அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல" என்றபடி குதூகலமாக அந்த ஜோதியில் ஐக்கியமானாள் தேன்மொழி.


சில நிமிடங்களில், பெண்ணை மேடைக்கு அழைத்து வரச்சொல்லி ஆள் வர, விழா களைகட்டியது.


இலக்கிணப் பத்திரிக்கை வாசித்து முடித்து, பாக்கு, வெற்றிலை மாற்றி, பெண்ணும் பிள்ளையும் மோதிரம் மாற்றிக்கொண்டதுடன் விழா முடிய, ஒரு பாட்டுப் பாடச் சொல்லி, நிரஞ்சனாவை அழைத்தார் அவளது அத்தை.


“சினிமா பாட்டெல்லாம் வேணாம் தேனு, அத்தை ஏதாவது சொல்லுவாங்க. பேசாம, சாமி பாட்டுப் பாடலாம்” என விடாப்பிடியாக தேனுவையும் கூடவே இழுத்துக் கொண்டுபோய் மேடையில் அவளுடைய அக்காவுக்கு அருகில் நின்றுவிட்டாள்.


என்ன பாடல், என்ன ஏது எனத் தயாராவதற்குள்ளாகவே,


‘ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி


சுகஸ்வரூபினி மதுரவாணி


சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி…’


என ஓர் ஆர்வக் கோளாரில் பாடவே தொடங்கிவிட்டாள் நிரஞ்சனா.


அந்தப் பாடலின் முதல் சில வரிகள் மட்டுமே தெரியும் தேனுவுக்கு!


கூகுள் துணையுடன் கைப்பேசியில் அந்தப் பாடல் வரிகளைக் கொண்டுவந்து, தெரிந்தவரையில் பாடி, ஒருவாறு சமாளிக்க முயன்றவளை, ஏற்றி இறக்கிப் பாடி, நிரஞ்சனா வேறு வெகு மோசமாகப் படுத்தியெடுத்து வைக்க, இடையிடையில் அவளை முறைத்தபடி அவளுடன் ஒன்றிப் பாடி முடித்தாள்.


நன்றாகவே சொதப்பிவிட்டது என்று மனதிற்குப் புரிந்து, அவள் வெறுத்துப் போயிருக்க, ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பதாக, நிரஞ்சனாவின் அப்பா கைத் தட்டி, ஆஹா… ஓஹோ… என ஆர்பரிக்க, மற்ற உறவினரும் அவருடன் சேர்ந்துகொண்டனர்.


“ஏய், இது உனக்கே ஓவரா தெரியல… உங்கப்பா ரொம்பதான் அதிகபடியா போறாங்கடீ” என அவளது காதருகில் கிசுகிசுத்தாள் தேனு.


“கண்டுக்காதடீ, நானே இவ்வளவு சொதப்பும்னு நினைக்கல! எங்கத்த இப்படி செய்வாங்கன்னு தெரிஞ்சிருந்தா, ஏதாவது ப்ராக்டிஸ் செஞ்சிருக்கலாம்! திடீர்னு சொல்லவும், எப்படியும் உனக்கு இந்தப் பாட்டு தெரிஞ்சிருக்கும், மேனேஜ் பண்ணிடலாம்னு நம்பிட்டேன்” என அசடு வழிந்தாள் நிரூ.


அதற்குள், “பொண்ணு வீட்டு சார்பா, நிரூவும், தேனுவும் பாடி அசத்திட்டாங்க, மாப்பிள்ள வீட்டுச் சார்பா யார் பாடப் போறாங்க?” என நிரூவின் அம்மா இழுத்துவிட, பட்டெனப் பாலாவை இழுத்து முன்னிருத்திவிட்டான் ஆனந்த்.


சற்றே தடுமாறினாலும், அவனும் வேறு வழி இல்லாமல், பாடத் தொடங்கினான்.


‘வந்தாள் மகாலக்ஷ்மியே


என்றும் அவள் ஆட்சியே…


வந்தாள் மகாலக்ஷ்மியே


உன் வீட்டில்…


என்றும் அவள் ஆட்சியே… (திரைப்பாடல்)’


குரலா அது? காற்றோடு கட்டி இழுக்கும் காந்தம் என இழுத்து தழுவிக்கொண்டது தேன்மொழியை!


மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பைப்போல, விழியெடுக்காமல் பாலாவின் முகத்தையே பார்த்திருந்தாள்!


அந்தப் பாடலின் வரிகளை அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்தவனின் விழிகளில் வழிந்த பாவங்களில் கலந்து கரைந்தேபோனாள்.


இந்த உலகத்தில் இதுவரை யாரையுமே பிடித்திராத அளவுக்கு அவனைப் பிடித்துத் தொலைத்தது.


அருகில் உறங்கிக் கொண்டிருந்த அம்மாவிடமிருந்து கிளம்பிய இருமல் சத்தம், அவளை நிகழ்காலத்திற்குப் பிடித்து இழுத்து வந்தது!


தன் உண்மைநிலை உரைக்க, பாலாவின் நினைவில் அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. உப்புக் கரிக்கும் அந்தக் கண்ணீர்த்துளிகளில் அவளுக்கு அவன் மீதிருக்கும் காதல் வழிந்து கொண்டிருந்தது.

Recent Posts

See All

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Rated 5 out of 5 stars.

Beautiful episode. Keep rocking


Like
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page