top of page

Isaithene - 4

4. சூழ்நிலைக் கைதி


"எங்கிட்ட என்ன தயக்கம் தேன்மொழி, முக்கியமா பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படி? சொல்ல வந்தத ஓபனா சொல்லிடு"


இரு கை விரல்களையும் கோர்த்தபடி சங்கடத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்த தேன்மொழியைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் சீதா.


அதற்கு மேல் மௌனம் காப்பது சரியில்லை என்பதை உணர்ந்து, "மேம், நான் இங்க இருந்து ரிசைன் பண்ணிடலாம்னு இருக்கேன். நீங்க நம்ம அகாடமிய அவங்க கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு ஆஸ்திரேலியா போற வரைக்கும், இங்கயே இருந்து உங்களுக்கு உதவியா என்னென்ன செய்ய முடியுமோ எல்லாமே செஞ்சு குடுக்கறேன். அதுக்கு அப்புறம் என்ன ரிலீவ் பண்ணா கூட போதும்" என தான் சொல்ல நினைத்ததைக் கோர்வையாகச் சொல்லி முடித்தாள்.


"ஏன் தேனு, இப்படி ஒரு முடிவ எடுத்த? தேவாவ பத்தி எனக்கு நல்லாவே தெரியும்! உனக்கு இங்க எந்தச் சங்கடமும் வரவிட மாட்டாங்க"


"அப்படி கிடையாது மேம்… ஒரு புது செட்டப்ல வேலை செய்ய எனக்குத்தான் அன்கம்ஃபர்டபுலா இருக்கு! நீங்க சொல்ற மாதிரி அவங்க என்ன நல்லாவே ட்ரீட் பண்ணலாம். ஆனா என்னால உங்க கிட்ட இப்ப இருக்கிற மாதிரி அவங்க கிட்டயும் டெடிகேட்டடா வேல செய்ய முடியும்னு தோணல! ஏன்னா என் மனசுலதான் ஒரு மாதிரி வெற்றிடம் உருவாயிடுச்சு"


"ப்சுச்சு… இதெல்லாம் ஒரு மாதிரியான ஸ்டுப்பிட் தாட், தேனு! இந்த மாதிரியான எண்ணங்களுக்கெல்லாம் மனசுல இடம் கொடுக்காத! இது ஒரு மாதிரியா உன்னை முடக்கி போட்டுடும்! அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நாம போயிட்டே இருக்கிறது ரொம்ப முக்கியம்"


"நான் மறுத்துப் பேசறேன்னு தப்பா நினைக்காதீங்க மேம்! என்னால அது முடியும்ன்னு தோனல"


"அது எப்படி தேனு முடியாம போகும்! நம்மதான் நம்ம மனச தயார் செய்யணும். இவ்வளவு ஆசை ஆசையா தொடங்கி இவ்வளவு பெருசா உருவாக்கி விட்ட நம்ம அகடமிய இவ்வளவு ஈஸியா ஒருத்தர் கிட்ட தூக்கிக் கொடுக்க என்னால மட்டும் முடியும் என்று நினைக்கிறாயா? ஆனா என்னோட சூழ்நிலை என்ன இத செய்ய வெக்குது! நாமதான் நம்மளோட நிதர்சனத்த புரிஞ்சுக்கணும்"


அவர் இவ்வளவு தூரம் தெளிவாக எடுத்துச் சொல்லியும் அவள் மௌனம் காக்கவே, "ஓகே தென்மொழி, நீ சொல்றத நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்னே வெச்சுக்கோ… வாட் நெக்ஸ்ட்? இதுக்கு அப்புறமா நீ என்ன செய்யலாம்னு இருக்க?"


"ஹவுஸ் விசிட் மாதிரி செஞ்சு, மியூசிக் சொல்லிக் கொடுக்கலாம் இல்ல? அது மாதிரி ஏதாவது செய்யலாம்னு இருக்கேன் மேம்!"


அவள் இப்படிச் சொல்லவும் சீதாவுக்குச் சுள்ளெனக் கோபம் வந்தது.


"புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா உனக்கு? இதெல்லாம் பிராக்டிகலா எவ்வளவு தூரம் சாத்தியம்னு கொஞ்சமாவது யோசிச்சியா? இப்ப நீ வாங்கற சம்பளத்துக்கு ஈக்குவலா அதுல சம்பாதிக்க முடியும் நினைக்கிறாயா? இப்படி மெச்சூரிட்டி இல்லாம திங்க் பண்றத விட்டுட்டு பிராக்டிகலா நடந்துக்க பாரு. யார் கண்டா, நாளைக்கே உன்னோட வாய்ஸ்ல இம்ப்ரஸ் ஆகி, பாலாவே சினிமால பாட உனக்கு ஒரு நல்ல சான்ச ஏற்படுத்திக் கொடுக்கலாம்!"


இப்படி அவர் சொல்லி முடிக்கக்கூட இல்லை, "நோ மேம்… எனக்கு அதெல்லாம் தேவையே இல்ல. கையில பெருசா பணம் காசு, பேரு புகழ் இதெல்லாம் இல்லனா கூட பரவால்ல, நிம்மதியா இருந்தா போதும்" எனப் பதற்றத்துடன் குரலை உயர்த்தினாள் தேனு.


அவளுடைய முகமே கன்றி போய், உடலில் ஒரு வித நடுக்கம் தெரியவே, மனதளவில் அவள் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருகிறாள் என்பது அவருக்குப் புரிந்தது. ஆனால் அதன் காரணம்தான் பிடிபடவில்லை.


"ஓகே… ஓகே… டென்ஷனாகாத… நான் இங்க இருக்கிற வரைக்கும் நீ என் கூட இரு… எதுவா இருந்தாலும் அப்பறமா டிசைட் பண்ணிக்கலாம்" என்று சொல்லிவிட்டார் சீதா.


அதன் பிறகு அவள் சற்று ஆசுவாசமடைய, "சரி… இப்பவே இத பத்தியெல்லாம் யோசிச்சு மண்டைய போட்டுக் குழப்பிக்காம போய் உன் வேலையப் பாரு" என அவர் சொல்லிக்கொண்டிருகும்போதே கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த சரோஜா, “மேடம், பாலா சார் அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க” என்றாள்.


“தேனு, நீ இங்கயே இரு”என்று சொல்லிக்கொண்டே, ஒரு நொடி கூட தாமதிக்காமல் வேகமாக வெளியில் சென்று தானே அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தார்.


பாலாவின் அம்மா முன்னே வர, பின்னே அவர்களுடைய ஓட்டுனர் தள்ளிக்கொண்டு வந்த சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவனுடைய அப்பா.


பொருத்தமான இடமாகப் பார்த்து அந்தச் சக்கரநாற்காலியை நிறுத்திவிட்டு அவர் அங்கிருந்து அகன்றுவிட, வியப்புடன் அவர்களைப் பார்த்தபடி எழுந்து ஓரமாக நின்றாள் தேன்மொழி.


“இவங்கதான் பாலாவோட அம்மா, அப்பா. தேவா அன்ட் தனபாலன்” என சீதா அவர்களை அவளுக்கு அறிமுகப்படுத்த, கரம் குவித்துப் புன்னகைத்தாள்.


பாலாவின் அம்மாவுக்கு ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்து வயதுக்குள் இருக்கலாம். காதிலும் மூக்கிலும் வைரம் டாலடிக்க, மெல்லிய சரிகையிட்ட பட்டுப்புடவை உடுத்தி, நல்ல ரோஜா நிறத்தில் மிகவும் அழகாக இருந்தார்.


மாநிறத்துடன் அவனுடைய அப்பா, களையாக கம்பீரமாக தோற்றமளித்தார். இப்படி சக்கர நாற்காலியில் அமர நேராமல் நிமிர்ந்து நின்றார் என்றால், பாலாவைப் போலவே ஆறடிக்கும் குறையாமல் இருப்பார்! இருந்தாலும் அவனுடைய அம்மாவுடன் ஒப்பிடும்பொழுது, அவரது அழகுக்கும் நிறத்துக்கும் இவர் ஒட்டாமல் இருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது.


பலா அப்படியே அவனுடைய அப்பாவின் ஜாடை, அவருடைய நிறமும்! அவரைப் பார்த்ததும் அவளுக்கு தன் அப்பாவின் நினைவு வந்து மனம் கசிந்தது.


“இவங்கதான் தேன்மொழி, கர்நாடிக் மியூசிக் டிவிஷனோட வீ.பி” என அவளையும் அவர்களுக்கு அறிமுகப் படுத்தினார்.


“இவங்களப் பத்தி பாலா சொன்னான்!” என தேவா சொல்ல, விழி விரித்து அவரை ஏறிட்டாள் தேனு.


“பரவயில்லையே, தேனுவ பத்தி உன்கிட்ட சொன்னனா!?”


“பின்ன, இவங்க ரொம்ப டேலன்டடாமே! ரொம்ப நல்லா படறாங்க அதே சமயம் அட்மின்ஸ்ட்ரேஷன் சைட்லயும் வெல் எக்ஸ்பீரியன்ஸ்ட், உனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருப்பாங்கன்னு சொன்னான்! உனக்குத் தெரியுமா சீதா, அவன் அவ்வளவு சுலபத்துலயெல்லாம் யாரையும் வாய்விட்டுப் பாராட்டிட மாட்டான்! நானே சர்ப்ரைஸ் ஆயிட்டேன்னா பாரேன்!”


“பரவாயில்லியே தேவா, நேத்து இவங்க அக்கௌண்ட்ஸ் டீடைல்ஸ் எல்லாம் பாலா கிட்ட தெளிவா எக்ஸ்ப்ளைன் பண்ணாங்க, அதுல கெஸ் பண்ணியிருப்பார்! ஆனா தேனு பாடி பாலா எப்ப கேட்டார்ன்னு தெரியலியே!”


கேள்வியாகத் தேனுவைப் பார்த்தபடி சொன்னார் சீதா.


“நேத்து அவர் நம்ம பிரேயர் ஹாலுக்கு வந்தார் இல்ல, அப்ப நான் அங்க பாடிட்டுதான் இருந்தேன் மேம்”


“ஓ அதான் அவ்வளவு தெளிவா சொல்லியிருக்கார் போலிருக்கு! உண்மையாவே தேனு வாய்ஸ் அப்படியே ஐஸ்க்ரீம் மாதிரி கரையும் தேவா! ஒரு தடவ இவங்க பாடி நீ கேட்கணும்”


“பாலாவே சொன்னதும், எனக்கே இவங்க குரல கேட்கனும்னு ஆசை வந்துடுச்சு, சீதா! ஒருநாள் ரிலாக்ஸ்டா உட்கார்ந்து கேட்கணும்” என்று சொல்லிவிட்டு, “நீங்க ஏன்ம்மா நின்னுட்டே இருக்கீங்க? உட்காருங்க” என தனக்கு அருகிலிருந்த இருக்கையை சுட்டிக் காண்பிக்க, தயக்கத்துடன் வந்து அங்கே அமர்ந்தாள் தேனு.


“என்ன தனா அண்ணா! நாங்களே பேசிட்டு இருக்கோம், நீங்க அமைதியாவே உட்கார்ந்திருக்கீங்க” என சீதா அவரையும் பேச்சில் இழுக்க,


“நீங்க லேடிஸ் எல்லாரும் ஒன்னு கூடிட்டா பேச்சுக்குக் கொறைச்சலா என்ன! அதுவும் இங்க மேஜாரிட்டி நீங்கதான். நான் என்ன பேச?” என்றார் தனபாலன் சிரித்த முகமாகவே!


பாசாங்கில்லாமல் அவர் பேசிய விதத்தில் தேனுவுக்கு அவரை பிடித்துவிட்டது.


சரோஜா எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுக்க, பருகியபடி பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.


“தேனு, இவங்க ரெண்டு பேருக்கும் நம்ம அகாடமிய சுத்தி காமிக்கறியா? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு வந்து ஜாயின் பண்ணிகறேன்” எனக் கேட்டார் சீதா.


சரியென அவள் எழுந்து நிற்க, தானும் எழுந்து தனபாலன் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை நோக்கிப் போனார் தேவா.


“இரு தேவா, ஹெல்புக்கு சரோஜாவ வரசொல்றேன்” என அவரைத் தடுத்தார் சீதா.


“பரவாயில்ல மேம், நானே ஹெல்ப் பண்றேன்” எனச் சொன்னதுடன் நிற்காமல், அந்தச் சக்கர நாற்காலியைத் தானே தள்ளிக்கொண்டு வெளியில் வந்தாள் தேனு.


“என்னால எப்பவுமே எல்லாருக்கும் தொந்தரவு! ரொம்ப சாரிம்மா, இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்றோம், அதுக்குள்ள உன்ன இப்படி வேலை வாங்கறேன்” என வருந்தினார் தனபாலன்.


“இதுல என்ன இருக்கு சார்! நம்ம சக மனுஷங்களுக்கு இப்படி சின்னச்சின்ன சப்போர்ட் கூட கொடுக்கலன்னா, நாமெல்லாம் பிறவியெடுத்து என்ன பயன் சொல்லுங்க?”


“உதவின்னு சொல்லாம, சப்போர்ட்ன்னு சொல்ற பாரு, அதுலயே உன்னோட நல்ல மனசு தெரியுதும்மா, உன்ன மீட் பண்ணதுல உண்மையிலேயே சந்தோஷப்படறேன்” என்றார் மனத்தார.


அதற்குள் தேவாவும் வந்துவிட, அவர்கள் அகாடமியைப் பற்றி விவரித்தபடியே அங்கிருந்த ஒவ்வொரு வகுப்பறையாக அவர்களை அழைத்துச் சென்றாள். அப்படி இப்படி, அவர்களது வழிபாட்டு அரங்கிற்கு வரவும், தன் வேலையை முடித்துக் கொண்டு அங்கே சீதாவும் வந்துவிட்டார்.


அங்கிருந்த இசைக் கருவிகளைப் பார்த்ததும் தேவாவுக்குக் கண்களில் நீர் கோர்த்துவிட்டது. காரணம், சிறுவயதில் அவரும் சீதாவுமாக வாசித்துப் பழகிய வீணையும் கூட அங்கேதான் இருந்தது.


மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அதைத் தீண்டியவர், சூடு பட்டதுபோல கையை பின்னால் இழுத்தபடி“அடேய் சீத்து, நம்ம ஆனந்திதான இது! எனக்காக ஒரு தடவ உன்னால இத மீட்ட முடியுமா?” எனக்கேட்டார் சிறுபிள்ளை போல.


“அடேய், நீ என்ன இப்படி ரெக்வஸ்ட் பண்ற, வாசின்னா வாசிச்சிட்டு போறேன்” என நெகிழ்ந்தவர், “தேனு, உனக்கு தெரியுமா, இந்த வீணைய இவளோட அப்பாதான் ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி, கஸ்டமைஸ்டா செஞ்சு வாங்கிக் கொடுத்தார்! இது என்னோடது. இதுக்கு நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து ‘ஆனந்தி’ன்னு பேர் வெச்சோம். இவங்களோட வீணைக்கு பேர் மதுவந்தி”எனக் குதூகலித்தார்.


தன் வீணையின் நினைவில் சற்றே முகம் மாறினாலும் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “நீ வாசி, சீதா” என்றார் தேவா. அங்கிருந்த ஆனந்தியை கைகளில் ஏந்தி, அங்கே போடப்பட்டிருந்த சிறு மேடைமேல் அமர்ந்தபடி மடியில் இருத்திக் கொண்டார் சீதா.

“தேனு, எனக்கு உன் குரலைக் கேக்கனும்னு ஆசையா இருக்கு, கூட சேர்ந்து நீயும் பாடேன்” என தேவா விரும்பிக் கேட்க, அவளுடைய பார்வை சீதாவிடம் சென்றது. அவர் ‘பாடு’ எனும் விதமாகக் கண்களை மூடித் திறந்தார்.


“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ… பாரதிதாசன் பாட்டு, இது என்னோட நேயர் விருப்பம்” என்றார் தனபாலன்.


சற்றும் தாமதிக்காமல், சீதா வீணையில் இலயம் சேர்க்க, அந்த இசைக்குத் தன் தேனினும் இனிய குரலைத் துணைச் சேர்த்தாள் தேன்மொழி.


புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே

புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்

புலவர் கண்ட நூலின் - நல்

திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்

செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்

செல்வம் ஆக மாட்டாயா?


துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்

கின்பம் சேர்க்க மாட்டாயா? - (பாரதிதாசனாரின் பாடல்)


இருவரும் சேர்ந்து அந்தப் பாடலை முடித்தபோது, அவரவர் காரணங்களுக்காக சங்கடத்தில் மூழ்கியிருந்த அங்கிருந்த நால்வர் மனமும் ஒருசேர அமைதியில் திளைத்தது.


இரசிப்பவர் மனங்களை மட்டுமல்ல, இசைப்பவர் மனங்களையும் அமைதிபடுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டல்லவா? அதுவும் பாவேந்தரின் வரிகள் இனிமையும் அமைதியும் கொடுப்பதுடன் கூட தன்னம்பிக்கையும் விதைக்கும் வல்லமை பொருந்தியதாயிற்றே!


*******


தேவாவுக்கு அவர்களது இசைப்பள்ளியை மிகவும் பிடித்துப்போய்விட்டது. “நாம கண்ட கனவ, அப்படியே நிறைவேத்தியிருக்கடா, சீத்து” என நெக்குருகிப் போய்விட்டார்.


அதை அவர்கள் வாங்கிக்கொள்வதை உறுதி செய்துவிட்டு, அவர்கள் அங்கிருந்து கிளப்பிச் சென்றதும், பழைய நினைவுகளில் மூழ்கிப்போய் அமைதியாகிவிட்டார் சீதா. அவரது ஓய்ந்த தோற்றம் தேன்மொழியின் மனதைப் பிசைந்தது.


“என்னாச்சு மேம், அகடமி கைமாறப் போறதால, ரொம்ப ஃபீல் பண்றீங்களா?”


“ச்சச்ச… வேற யாருக்கு சேல் பண்ணியிருந்தாலும் நிச்சயமா ஃபீல் பண்ணியிருப்பேன்! இப்ப என் தேவாகிட்டதான கொடுக்கப்போறேன்! உண்மையாவே மனம் நிறைஞ்சு போயிருக்கு”


“அப்பறம் ஏன் மேம் இவ்வளவு சோகமா இருக்கீங்க?”


“அதில்ல தேனு! தேவா எப்படி இருந்தவ தெரியுமா? இந்த மனுஷன காதலிச்சு கல்யாணம் பண்ணிட்ட ஒரே காரணத்தால டு த கோர் கஷ்டப்பட்டுட்டா”


“ஓ” என வியந்தாள் தேனு.


“ஆமாம் தேனு! தேவா யார் தெரியுமா?” என்று கேட்க, தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அவரை நோக்கினாள்.


“கர்நாடக சங்கீத மேதை, சிவபுரம் விஸ்வநாதன் இருக்கார் இல்ல, அவரோட ஒரே பொண்ணு”


அவருடைய பெயரைக் கேட்டதுமே அவளது உடல் சிலிர்த்தது. அவரது புகழைப் பற்றி அறிந்தவளாயிற்றே! ‘அப்படினா பாலா, அவரோட பேரனா?’ என்ற எண்ணமும் கூடவே தோன்ற மனதிற்குள் நெருஞ்சிமுள் தைத்தது போல வலித்தது.


“இவ இல்லாம, அவருக்கு நாலு மகன்கள். இவ நாலாம் பொறவு. அதாவது இவளுக்கு மூணு அண்ணன், ஒரு தம்பி” எனச் சொல்லிக்கொண்டே போனார்.


“அப்படின்னா. ஏன் மேம் இது வெளியுலகத்துக்குத் தெரியவே இல்ல” - தயங்கித் தயங்கிதான் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.


“அதான் சொன்னனே, இவளோட காதல்தான் அதுக்குக் காரணம்! அப்பா, தாத்தான்னு இவங்க பரம்பரையா இசைக் குடும்பம். அவளோட அண்ணன்களுக்கு சங்கீதத்துல நாட்டம் இல்ல. ரெண்டு பேர் டாக்டர், ஒருத்தர் எஞ்சினியர். இதுல மூணாவது அண்ணா வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டாரு. இவளுக்கும் இவளோட தம்பிக்கும் மட்டும்தான் இசைல ஆர்வம் இருந்துது.”


”அவங்க அப்பாகிட்டயே முறைப்படி சங்கீதம் கத்துகிட்டாங்க. நானும் தேவாவும் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்ல இருந்து ப்ளஸ் டூ வரைக்கும் ஸ்கூல்ல ஒண்ணாதான் படிச்சோம். அவ அப்பா கிட்ட சொல்லி எனக்கும் பாட்டு கத்துக்கொடுக்க சொன்னா!”


”இவன்னா இவ அப்பாவுக்கு உயிர், இவ சொன்ன ஒரே காரணத்துக்காக எனக்கு சங்கீதம் கத்துக்கொடுக்க ஒத்துண்டார்ன்னா பார்த்துக்கோ! ரொம்ப சின்ன வயசுல இருந்தே இவளையும் இவளோட தம்பியையும் கச்சேரிக்குக் கூட்டிட்டுப் போவார்”


”ஒரு ஸ்டேஜ்ல தனியா கச்சேரி பண்ற அளவுக்குத் திறமைசாலியா ஆகிட்டா. அதனால ப்ளஸ் டூவோட படிப்ப நிறுத்திட்டு, முழு நேரமும், சாதகம் கச்சேரின்னு பிசி ஆகிட்டா. வெளிநாடெல்லாம் போக வாய்ப்பு வந்து, கொஞ்சம் கொஞ்சமா ஃபேமஸ் ஆகிட்டு இருந்தா! எங்க குரு விஸ்வநாதன் அய்யாவுக்குப் பெருமை பிடிபடல.”


“நான் காலேஜ்ல பிஏ இங்கிலீஷ் லிட்டரேச்சர் சேர்ந்துட்டு, நேரம் கிடக்கும்போது சந்கீதம்னு இருந்தேன். அப்பத்தான் ஒரு அரசாங்க விழாவுல தனா அண்ணாவ மீட் பண்ணா. சவுத் சைட் ஒரு ரிமோட் வில்லேஜ்ல இருந்து வாய்ப்பு தேடி மெட்ராஸ் வந்த ஒரு நாட்டுபுற இசைக் கலைஞர் அவர். ஏதோ ஒரு இசைகுழுவுல பாடகரா இருந்தார்”


”ஏதோ ஒரு பயின்ட்ல ரெண்டு பேருக்கும் பிடிச்சு போய், லவ் வந்துடுச்சு! தைரியமா அத வீட்டுல வந்து சொல்லவும் செய்தா. பண வசதி அந்தஸ்துலயும் சரி, ஜாதிலயும் சரி, இவங்களுக்கு அவர் பொருத்தம் இல்லாம போக, அவங்க அப்பாவும் சரி, குடும்பத்துல மத்தவங்களும் சரி அதுக்கு ஒத்துக்கல. இவளும் பிடிவாதமா, எல்லாரயும் எதுத்து கல்யாணம் செஞ்சுட்டா”


”மாலையும் கழுத்துமா போய் நின்னப்ப, இவளை வீடுக்குள்ள கூட விடல! அதோடக்கூட, ‘நம்ம பரம்பரை ஞானத்தாலயும், எனக்கு மகளா பொறந்த ஒரே காரணத்தாலயும் நீ கத்துட்ட சங்கீதத்த உன்னோட வருமானத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும், பேர் புகழ் எதுக்காகவும் பயன்படுத்தக் கூடாது, என் மகள்னு இனிமேல் நீ வெளியில சொல்லிக்கவே கூடாது. இதுதான் நீ எனக்குக் கொடுக்கற குருதக்ஷனை’ன்னு சொல்லி, அவளோட அப்பா அவகிட்ட சத்தியம் வாங்கிட்டார் ”


“அதுக்கு பிறகு வறுமைல ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டா. எங்களோடது ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்தான். கல்யாணம், குடும்பம்னு ஆனதுல என்னாலையும் அவளுக்குப் பெருசா சப்போர்ட் பண்ண முடியல. கொஞ்சம் கொஞ்சமா தொடர்பு விட்டுப் போய், ஒரு ஸ்டேஜ்ல என்னோட வாழ்கைல இருந்து மறைஞ்சு போனவதான், அதுக்குப் பிறகு இவ்வளவு வருஷம் கழிச்சு இப்பதான் மீட் பண்ணேன். அதுவும் பலா இவ்வளவு பெரிய மியூசிக் டைரக்டர் ஆனப் பிறகு, இப்ப சில மாசமாத்தான் அவங்க குடும்பத்துல இவள ஏத்துட்டு இருக்காங்க”


”ஒரு உண்மையான உண்மை என்னன்னா, இன்னைக்கு நான் இருக்கற இந்த நிலைமைக்கு இவளும், இவ மூலமா எனக்கு சாத்தியப்பட்ட சந்கீதமும், இவ என் மனசுல விதைச்ச இலட்சியமும்தான் காரணம். அந்த நன்றி எனக்கு எப்பவுமே இவகிட்ட இருக்கு. அதனால நம்ம அகடமிய தேவாவுக்குக் கொடுக்க எனக்கு எந்த வருத்தமும் இல்ல! நான் வருத்தப்படறதெல்லாம் இவ இழந்த வளமான வாழ்க்கைய நினைச்சுதான்” என சீதா கண்களில் நீர் திரையிடச் சொல்லி முடிக்கும்போது, தேன்மொழிக்கு அவரது மனநிலை புரிந்தது.


“அவங்க இழந்த வாழ்கைய அவங்க மகன் மீட்டுக் கொடுத்துட்டாரே, அதை நினைச்சு நீங்க மனச தேத்திக்கோங்க மேம்” என்றாள் அவரை ஆறுதல்படுத்தும் விதமாக.


“உண்மைதான், போனத நினைச்சு வருத்தப்பட்டு என்ன பயன்? இருக்கற நிம்மதியும் போகும்” என முடித்தார் சீதா.


நாட்கள் வேகமாக உருண்டோட, அவர்களது இசைப்பள்ளி தேவாவின் பெயருக்கு மாற்றப்பட்டது.


மூன்றே மாதத்தில் எல்லா நடைமுறைகளும் முடித்து, மொத்தப் பொறுப்பையும் அவர்களிடம் ஒப்படைதுவிட்டு சீதா அவரது கணவருடன் ஆஸ்திரேலியா கிளம்பினார்.


ஆனால், செல்வியின் உடல்நிலை மேலும் மோசமாகி மருத்துவச் செலவுகள் இரு மடங்கானதால், அவரிடம் சொன்னதுபோல தேனுவால்தான் அந்த வேலையை விட்டு விலக இயலவில்லை.


சூழ்நிலைக் கைதியாக பாலாவிடம் வசமாகச் சிக்கிக்கொண்டாள்.


*******

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page