மடல் - 13
பள்ளிப்பையைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்த மல்லி, சற்றுத் தூரத்தில் வரும் பொழுதே அந்த இடம் வெறிச்சோடி கிடப்பதைப் பார்த்துவிட்டு அப்படியே கலங்கிப் போனாள். வந்த வேகத்தில் அப்படியே திரும்பி மறுபடியும் வல்லரசுவை நோக்கி வர, "ஏன் மல்லி, என்ன ஆச்சு? திரும்பி வந்துட்ட?" என்று அவன் கேட்கவும், "எட்டற பஸ் போயிடுச்சு" என்றாள் கலவரத்துடன்.
பட்டெனக் கையைத் திருப்பி கடிகாரத்தை பார்த்தவன், "ஓ மை காட், மணி எட்டு முப்பத்தெட்டாயிடுச்சு. பேசிட்டு இருந்ததுல டைம் போனதே தெரியல. நீயாவது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்திருக்கலாம் இல்ல" என அவனும் அவளது பதற்றத்தைக் கூட்ட, அவளது முகமே சிவந்துபோய் கண்களில் கண்ணீர் பெருகியது.
"இன்னைக்கு முக்கியமான ரிவிஷன் டெஸ்ட் இருக்கு, இல்லன்னா உடம்பு சரியில்லன்னு சொல்லி வீட்டுக்காவது திரும்பிப் போயிடலாம். இதோட அடுத்த பஸ் ஒம்பது மணிக்குதான் வரும். இந்த பஸ்ல நான் ஏறலைன்னு தெரிஞ்சா, பிரியா வேற வீட்டுல போட்டுக் கொடுத்துருவா. ஆளாளுக்குக் கேள்வி மேல கேள்வி கேப்பாங்க. என்ன செய்யப் போறேன்னு தெரியலையே" என விசும்ப,
"கவலைப்படாத, நானே உன்ன டயத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்" என்றபடி அவளது கையைப் பற்றித் தன்னுடன் அவன் இழுத்துச் செல்ல, ஒன்றுமே புரியாமல் அவனுடைய இழுப்புக்குச் சென்றாள். அங்கே சற்றுத் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த அவனது காரைப் பார்த்ததும் அவளது மூச்சே நின்று போனது போலானது.
"கடவுளே, கார்லயா வந்திங்க, அப்ப நீங்க இங்க வந்தத இந்த ஊரே பார்த்திருக்குமே. நானும் இங்கதான் இருக்கேன்னு தெரிஞ்சா தேவையில்லாத கதை கட்டி விடுவாங்களே" என்று அவள் புலம்பித் தள்ள,
"ஏய் என்ன, என்ன லூசுன்னு நினைச்சியா? நீயே இவ்வளவு யோசிக்கும்போது நான் யோசிக்க மாட்டனா? மெயின் ரோடால வராம குறுக்கு வழியாதான் கார எடுத்துட்டு வந்தேன். ஒருத்தன் கண்ணுல கூட படல. தேவை இல்லாம நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தாத" என்றான் கண்டனமாக.
"ஐயய்யோ, அப்ப கூட என்னால உங்க கூட கார்ல எல்லாம் வர முடியாது. அதவிட ஏதாவது சொல்லிட்டு வீட்ல போயி அம்மாகிட்ட அடி கூட வாங்கிக்கிறேன். இதெல்லாம் யார் கண்ணுலயாவது பட்டா தேவையில்லாத பேச்செல்லாம் வரும்" என்று பதறியள் பதறியபடியே இருக்க, அதையெல்லாம் சற்றும் காதில் வாங்காமல் பின் கதவைத் திறந்து அவளை உள்ளே தள்ளிப் பூட்டினான்.
அதே வேகத்தில் ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்து காரைக் கிளப்பிக் கொண்டே, "கண்ணாடியில தெரியாம அப்படியே குனிஞ்சு உட்காரு, மெயின் ரோடு எடுத்து ஊரைத் தாண்டினதும், சாதாரணமா உட்காரலாம்" என்று கட்டளை தொனிக்க அவன் சொல்ல, வாகனம் வேறு சீறிக் கொண்டு செல்லவும், அவன் சொல்வதைக் கேட்பது தவிர அவளுக்கு வேறு வழியே இல்லை.
சற்றுத் தூரம் சென்றதும் வேகத்தை மட்டுப்படுத்தியவன், "இப்ப நிமிர்ந்து உட்காரு" என்று சொல்ல, நேராக அமர்ந்தவள், "எனக்கு ரொம்ப பயமா இருக்கு அரசு, ஊர் பசங்க யாரு கண்ணுலயாவது மாட்டினா பிரச்சனை ஆயிடும், பிரியாவை நினைச்சாலே எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது” என்றவளின் குரலிலும் அவ்வளவு நடுக்கம்.
"இதோ பாரு, அந்த பஸ்ஸு ஒவ்வொரு ஊர்லயும் நின்னு நின்னு டவுனுக்குப் போறதுக்குள்ள யாருக்கும் தெரியாம நான் உன்ன பஸ் ஸ்டாண்டுக்கு வெளிய டிராப் பண்ணிட்றேன். சரியா அந்த பஸ் நிக்கிற நேரத்துல நீ கூட்டத்தோட கலந்துடு, உன் தங்கச்சிக் கேட்டா நீ பின்னால ஏறினதா சொல்லி சமாளிச்சுக்க" என்று அவள் அந்தச் சூழ்நிலையைக் கடக்க அவன் குறுக்கு வழி சொல்லிக் கொடுக்க, அவளால் பயத்தைப் புறந்தள்ளவே முடியவில்லை.
தினமும் அவர்கள் ஊர் வருவதற்குள் அந்தப் பேருந்தில் கூட்டம் முண்டியடிக்கும். எப்படியும் அந்தக் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டுதான் பேருந்திற்குள் ஏறிச் செல்ல முடியும். பெண் பிள்ளைகள் முன் பக்கமும் ஆண் பிள்ளைகளெல்லாம் பின்பக்கமுமாக ஏறுவதுதான் வழக்கம்.
வண்டி புறப்படும் நேரம் பார்த்து அவசரமாக ஓடிவந்து ஏறும்பொழுது எப்பொழுதாவது மாறிப் போய் இப்படி நடப்பதும் உண்டு.
கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு நகர்ந்து வந்து ஒருவரை ஒருவர் தேடிக் கண்டுபிடிப்பதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என்பதால் அதை யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால் இவன் சொன்னதை நடைமுறைப் படுத்துகிற வரையில் இந்தப் பயம் அவளுக்கு இருக்கவே செய்யும்.
அவர்கள் ஊரைத் தள்ளி மூன்றாவது ஊர் நிறுத்தத்தில் அந்தப் பேருந்து நிற்பதைக் காற்றைக் கிழித்துச் செல்லும் அவனுடைய மாருதி எஸ்டீமில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். 'பேருந்திலிருப்பவர் யாராவது தன்னைப் பார்த்திருந்தால்?' என்கிற பதற்றமும் தன்னிச்சையாக எழ அதை வாய்விட்டு அவனிடம் சொல்லவும் செய்தாள்.
"இந்த வண்டிப் போற வேகத்துல யாராலயும் அப்படி எல்லாம் பார்க்க முடியாது. நீ தேவை இல்லாம டென்ஷனாகாத" என அவளுக்குத் தைரியம் சொன்னவன், "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மல்லி, நான் என் ஃப்ரெண்டோட அப்பா கிட்ட சொல்லி வச்சு வெளிநாட்டுலயிருந்து லேட்டஸ்ட் மாடல் ஹேண்டி கேமரா ஒண்ணு வாங்கி இருக்கேன்! அதுல நினைச்சது நெனச்சபடி வீடியோ எடுக்க முடியும். அதோட கனெக்ட் ஆகி இருக்கிற ஒரு குட்டி ஸ்கிரீன்ல, ஐ மீன் டிவில உடனுக்குடனே எடுத்தப் படத்தைப் பார்க்கவும் முடியும். அதுல விடாது கருப்போட கிளைமாக்ஸ் ரெக்கார்ட் பண்ணி உனக்கு காமிக்கலாம்னு இருக்கேன் தெரியுமா?" என்று அவன் ஆசையுடன் சொல்ல,
உண்டான வியப்பில் மற்றதை மறந்து, “நிஜமாவா… அப்படியெல்லாம் கூட கேமரா இருக்கா?” என அவள் வாய் பிளக்க,
“இல்லையா பின்ன, சும்மாவா? அதோட விலை என்ன தெரியுமா?” என அதைச் சொல்ல, அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலானது. தொடர்ந்து அதை இயகுவதைப் பற்றி அவன் விளக்கமாகச் சொல்லச்சொல்ல, அவளுடைய பயம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்து ஒருவாறு இலகு நிலைக்குத் திரும்பினாள் மல்லி. அதே நேரம் டவுனில் இருக்கும் பேருந்து நிலையத்தையும் அடைந்துவிட்டனர்.
அவன் சொன்னது போலவே ஒரு பொருத்தமான இடத்தைப் பார்த்து அவளை இறக்கி விட, வேகமாகப் பேருந்து நிலையத்திற்குள் சென்று கூட்டத்துடன் கலந்து போனாள்.
வழக்கமாக அவர்கள் பயணம் செய்யும் பேருந்து உள்ளே நுழையவும் தானும் அந்தப் பேருந்திலிருந்து இறங்கியது போல பிரியாவிடம் போய் சகஜமாகப் பேசத் தொடங்கி ஒரு வழியாக அந்த நாடகத்தை நல்லபடியாக நடத்தி முடித்தாள் மல்லி.
பாதியில் நின்று போன மின்சார கனவின் கதையே அவள் மண்டையைக் குடைந்து கொண்டிருக்க, அன்றைய பரிட்சையை எந்தளவுக்கு நல்லபடியாக எழுதி முடித்தாள் என்பது அவளுக்கே வெளிச்சம்!
மீதிக் கதையைக் கேட்க அடுத்த நாள் காலை வழக்கம்போல் அவள் அங்கு வந்து விட, அவளைப் பார்த்த மாத்திரம், "நீ இங்க கிளம்பி வந்துருக்கறத பார்த்தா, நான் நேத்து சொன்னதுக்கு நீ ஒத்துக்கிட்டன்னு எடுத்துக்கலாமா?" என்றுதான் பேச்சையே தொடங்கினான் வல்லரசு.
அதில் நன்றாகத் திணறிப் போனவளாக, "ஐயோ, அத பத்தி எல்லாம் நெனச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உண்மையா நான் அதுக்காக வரல, மின்சார கனவு படத்தோட மீதி கதைய கேட்கத்தான்" என்றாள் ஒப்பிப்பது போல.
அவனுடைய இதழ்கள் கோணலாக வளைய, இயல்பாக தோளைக் குலுக்கியபடி போய் படிக்கட்டில் அமர்ந்தான். இப்படியாக விட்டுவிட்டு, இந்தக் கதை அந்த வாரம் முழுதும் தொடர்ந்தது. கதையின் முடிவு கேட்டு கண்கள் சிவக்க அழுதவளை ஒரு பக்கமாகத் தலை சாய்த்து, உதடு கடித்துச் சிரித்தபடி பார்த்திருந்தான் வல்லரசு.
அவனது அந்தக் கள்ளச் சிரிப்பு அவளைப் பித்தம் கொள்ளச் செய்தாலும், பொய் கோபத்துடன், "இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி சிரிக்கிறீர்களாம்" என்று அவனைச் செல்லமாகக் கடிய, "கதை ஹாப்பி என்டிங்தான, லவ் பண்ணவங்க சேர்ந்துட்டாங்க இல்ல? அப்பறம் என்ன?" என்று கிண்டலாகக் கேட்க,
"பிரபுதேவாவ விட அரவிந்த்சாமியதான எனக்குப் பிடிக்கும். அவ*க்கு சோக முடிவு கொடுத்துட்டாங்களே" என்றாள் வருத்தம் மேலிட.
அதில் வாய் விட்டுச் சிரித்தவன், "காதலிச்சா போறாது மல்லி, அத விரும்பறவங்க கிட்ட நேரடியா சொல்ற தைரியம் இருக்கணும், இல்லனா இப்படி சோக முடிவுதான் கிடைக்கும்" என்றான் விளையாட்டு போலவே.
அவன் தன்னைத்தான் சொல்கிறான் என்பது நன்றாகவே புரிந்தது அவளுக்கு. இது ஒரு விபரீத விளையாட்டு என்பதை உணர்ந்திருந்தாலும் அது அவளது மண்டைக்குள் கொடுக்கும் ஒரு வித சுளீர் என்கிற கிளர்ச்சியை அவள் அதிகம் ரசித்து விரும்பவும் செய்தாள்.
அவன் சொன்னது போல தன் மனதை வெளிப்படையாக அவனிடம் சொல்லாமல் போனால் இவனுடன் அமையவிருக்கும் ஒரு பொன்னான எதிர்காலத்தைத்தான் இழந்து விடுவோமோ என்கிற ஒரு மிகப் பெரிய பயம் மனதிற்குள் எழுந்து அவளை மிரட்டியது.
என்றைக்காவது ஒரு நாளாவது, தன்னுடைய அப்பா தன் அம்மாவிடம் இவனைப்போல இவ்வளவு அன்புடனும் அக்கறையுடனும் நடந்திருப்பாரா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
அவர்களாகப் பார்த்து தனக்கு ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தாலும், அப்பாவைப் போன்ற ஒரு சராசரி புத்தியுள்ள ஆண்மகனைதான் கொண்டு வந்து நிறுத்த முடியும் என்று அவளது மனம் அடித்துச் சொன்னது.
ஆனாலும் கூட அவனிடம் கேட்டு தெரியப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய கேள்வி அவளிடம் இருந்தது.
"ஆமா' எனக்கு உங்கள பிடிச்சிருக்கு, நான் உங்களைக் காதலிக்கிறேன்! அப்படின்னு நான் ஒத்துக்கறேன்னு வெச்சுக்கோங்க, இதெல்லாம் நமக்குள்ள சரிப்பட்டு வருமா? உங்க அந்தஸ்து என்ன? எங்க நெலம என்ன? உங்க அப்பா இதுக்கெல்லாம் நிச்சயம் ஒத்துக்க மாட்டாருன்னு எனக்குத் தெரியும்" என்று அவள் அதை உடைத்து அவனிடம் கேட்க,
சட்டென அவனது முகம் கடினமுற, "அஹ்… அவரு யாரு என் லைஃபை டிசைட் பண்றதுக்கு?" என அகங்காரத்துடன் கேட்டவன், "என்ன பொறுத்த வரைக்கும் இதுக்கு மேல நீ சரின்னு சொன்னாலும் சரி, உனக்கு இஷ்டம் இல்லனாலும் சரி உன்னால என் வாழ்க்கைய விட்டுப் போக முடியாது. நான் உன்ன போகவும் விட மாட்டேன். என் ஆயுளுக்கும் நீ என் கூடதான் இருந்தாகணும். என் அப்பன்னு இல்ல வேற எவன் குறுக்க வந்தாலும் என்ன எதுவும் புடுங்க முடியாது" என முடித்தான் ஒரு வெறியுடன்.
அவனுடைய இந்தப் பரிணாமத்தைப் பார்த்து அரண்டுதான் போனாள் மல்லிகா. அவளுடைய வெளிரிய முகத்தைப் பார்த்து சட்டெனச் சுதாரித்தவன், "உனக்கும் எனக்கும் நடுவுல யார் வரதையும் நான் விரும்பல மல்லி. அப்படி ஒரு பேச்சு நீ பேசவும்தான் நான் டென்ஷன் ஆயிட்டேன். நீ பயப்படாத" என அவனே அவளை சமாதானம் செய்ய, சற்றே இலகுவானாள்.
அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் அவர்களுக்குள்ளான நெருக்கம் சகஜமாகத் தொட்டு பேசும் அளவிற்குச் சற்றுக் கூடித்தான் போனது. மேலே உள்ள படியில் அவன் உட்கார்ந்து கதை சொல்வதும் அதற்கு அடுத்த படியில் அமர்ந்தபடி அவன் மடியில் தலை சாய்ந்து அவள் கதை கேட்பதும், அவனது விரல்கள் அவளுடைய தலை கோதியபடியே இருப்பதும் வெகு சகஜமாகிப் போயிருந்தது.
"நீ கடைசியா என்ன புது படம் பார்த்த?"
"அரங்கேற்ற வேளை"
"ஏய், அது போய் உனக்கு புது படமாடி, அந்தப் படம் வந்து ஏழு எட்டு வருஷம் ஆகுது"
"இதுதான் ஒரு மூணு நாலு மாசம் முன்னால, நான் கடைசியா டிவில பார்த்த படம்"
"அப்படின்னா புது படம் எதையுமே நீ தியேட்டர்ல போய் பாக்கலையா?"
"இல்லையே" என்று ஏக்கம் ததும்பச் சொன்னவள், "ஆனா போன வருஷம் மாசி மகத் திருவிழா கடைசி நாள் அம்மன் ஊர்வலத்தன்னைக்கு, நம்ம ஊர்ல ஸ்கிரீன் கட்டிப் படம் போடுவாங்க இல்ல, அதுல பாட்ஷா, சிங்காரவேலன் ரெண்டு படமும் பார்த்தேன்" என்றாள் பெருமையாக.
"கிட்டத்தட்ட சிங்காரவேலன் கமல் மாதிரிதான், இருக்கிற வேலை வெட்டி எல்லாத்தையும் விட்டுட்டு நானும் உன்ன உஷார் பண்ண உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேன், உன்னையெல்லாம்" என மெல்லியதாக முணுமுணுத்தான்.
அவன் என்ன சொல்கிறான் எனப் புரியாமல் அவள் விழிக்க, "அரவிந்த் சாமி பிடிக்கும்னு சொன்னியே, நீ இன்னும் ரோஜா படம் பாக்கலையா?" எனக் கேட்டான் குழப்பத்துடன்.
"இல்லையே, ஆனாலும் மெட்ரோ சேனல்ல ரோஜா, இந்திரா பட சீன்ஸ் எல்லாம் போடுவாங்க இல்ல, அத பார்த்தே பிடிச்சுப் போச்சு" என்றாள் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு.
ஏதோ நினைப்பில், "சரி விடு, ரொம்ப நல்லதா போச்சு” என்றவன், “அன்னைக்கு எங்க வீட்டுக்கு வரும்போது ஒரு ஷர்ட் போட்டுட்டு இருந்தியே, அதயே அடிக்கடி போட்றியே, அது உனக்கு ரொம்ப பிடிக்குமா" என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டான்.
இவன் ஏன் இதைக் கேட்கிறான் என்று தோன்றினாலும், "ஆமா எனக்கு ரொம்ப பிடிக்கும், அதோட கலர், அப்புறம் மெத்து மெத்துன்னு இருக்கற அந்தத் துணி எல்லாமே" என்றாள் ரசித்து.
"அது யாருதுன்னு தெரியுமா" என்று கேட்க, "ஆமாம், வனிதா அக்காவுது" என்றாள் விவரம் இல்லாமல்.
"இதை யார் உன்கிட்ட சொன்னாங்க" என்று அவன் விஷமமாகக் கேட்க,
"அவங்க இந்த ஷர்ட் போட்டு நானே பார்த்திருக்கனே" என்றாள் அவன் சொல்ல வருவதை விளங்கிக் கொள்ளாமல்.
"ஆனாலும் நீ ரொம்ப அப்பாவியா இருக்க மல்லி" என்று அவளைப் பரிகாசம் செய்தவன், "அது என்னோட சட்ட, நான் ரொம்ப ஆசைப்பட்டு வாங்கினது. போன வருஷம் லீவுக்கு வரும்போது மறந்து இங்கே வச்சுட்டுப் போயிட்டேன். அத அவ எடுத்து போட்டுக்கிட்டா போல இருக்கு" என்று அவளுக்கு அதிர்ச்சிக் கொடுத்தானவன்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், "அன்னைக்கு நீ அந்தச் சட்டையைப் போட்டு இருக்கிற பார்த்தப்ப எனக்கு என்ன தோனுச்சு தெரியுமா?" என்று தன் விஷமப் பேச்சைத் தொடர, அவளுடைய இதயம் டும் டும் என்று வேகமாக அடித்துக் கொண்டது.
பதில் பேச முடியாத மௌனத்தில் அவள் இருக்க, "நீ என்ன அப்படியே கட்டிப்பிடிச்சுட்டு இருக்கிற மாதிரி ஃபீலாச்சு" என்று அவன் சொன்ன விதத்தில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போலாகி அவளது முகத்தில் சிவப்பேரிப்போனது.
கண்கள் முழுவதும் ரசனையைத் தேக்கி அவன் அவளை ரசிக்க, நாணத்தில் மேலும் சிவந்தவள் அப்படியே தன் முகத்தை ஆழமாக அவன் மடியில் புதைத்தாள். பட்டெனக் குனிந்து பட்டும் படாமல் அவளது உச்சியில் தன் இதழைப் பதித்து, "என்னைக்காவது ஒரு நாள் நீ ரோஜா படம் பார்த்தன்னா, அன்னைக்கு இத நான் ஏன் சொன்னேனனு புரிஞ்சுப்ப, என் அரும பட்டிக்காடே" என்றான் வல்லரசு தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியபடி.
சீற்றமாகத் தலை நிமிர்ந்தவள், “யார பார்த்து பட்டிகாடுன்னு சொன்னீங்க! நீங்களும் இந்த ஊர்ல பிறந்த ஆளுதான், நியாபகம் வெச்சுக்கோங்க! மெட்ராஸ்ல போய் படிச்சிட்டு வந்தா பட்டினத்தார் ஆகிட மாட்டீங்க” என ரோஷத்துடன் பொரிந்து தள்ள,
“நீ புரிஞ்சு சொல்றியோ புரியாம சொல்றியோ தெரியல மல்லி, முற்றும் துறந்து பட்டினத்தார் மாதிரியெல்லாம் என்னால ஆக முடியாது” என்று ஒரு கிறக்கமான குரலில் சொல்லி அவன் அவளைப் பார்த்தப் பார்வையின் பொருள் அவளுக்கு விளங்கவே இல்லை.
பெண்ணின் சிறு தொடுகை கூட, காமத்தைக் கட்டுப்படுத்தி இயல்பு நிலை போர்த்தி நடிக்கும் ஒரு ஆணின் உடலில் எந்த அளவுக்குத் தீயை மூட்டும் என்பதை, எதையும் அறிந்தும் அறியாத இரண்டும் கெட்டான் வயதிலிருக்கும் இந்தப் பெண் சற்றுக் கூட அறிந்து வைத்திருக்கவில்லை என்பதே அவல நிலைதான்.
***
So pitty for malli.. Many becoming victim in this way..
Malli became easy prey for him.wow awesome