காதல்-7
அகத்துக்குள் நுழைந்ததும் சேஷாத்ரியை பிடி பிடி எனப் பிடித்துக்கொண்டார் கீதா!
"நீங்க சிட்டிலேயே பெரிய டாக்டர் இல்ல; அதான் இப்படி பட்டும்படாம பேசிட்டு வந்திருக்கீங்கோ!
நம்ம கண்ணன் மட்டும் நமக்கு மாப்பிள்ளையா வந்தா; அவன் மாப்பிள்ளையா இருக்க மாட்டான்; நமக்கு பிள்ளையாவே இருப்பான்!
என்ன அவன் சாதாரண டாக்டர் தான! அதுவும் அவனோட திறமையை பணம் பண்ண தெரியாத டாக்டர்!
அதான் அவளுக்கு ரொம்ப பெரிய இடமா பாக்கற உத்தேசத்துல இருக்கீங்கோ போல இருக்கு!
அதனாலதான ஆறுமாசம் ஒரு வருஷம்னு சாக்கு சொல்லிட்டு வந்திருக்கீங்கோ!
ஏன்னா! உங்களுக்கு கூடவா பணம் பிரதானமா போச்சு!" எனப் பொரிந்து தள்ளினார் அவர்.
அவரது பொறுமை காற்றில் பறக்க, "கீதா!" என்றார் அவர் அதட்டலாக.
அவரது கண்டன பார்வையில் கீதா மவுனமாகிவிட, "நீயே இப்படி பேசினா மத்தவா என்ன பேசுவா?” என்றார் அவர் மனைவியின் முத்தை பார்த்து சற்று தணிந்தவராக.
"இல்லன்னா!" என கீதா ஏதோ சொல்ல வர, "ப்ச்! நம்ம ராதவை கொஞ்சம் ஓவர் டோசா செல்லம் கொடுத்து வளர்த்து வெச்சிருக்க!
உடம்பு வணங்கி எந்த வேலையாவது செஞ்சு பழக்கம் இருக்கா அவளுக்கு!
நம்மாத்துல எல்லா வேலைக்கும் ஆள் போட்டிருக்கோம்! தினப்படி தளிகைக்கு கூட குக் வெச்சிருக்கோம்!
ஆனா அவாத்துல அப்படியா?
கண்ணனோட அப்பா சித்தப்பான்னு எல்லாரும் இன்னும் கூட்டு குடும்பமா இருக்கா!
பக்கத்துலயே அவரோட சித்தியா இருக்கார்!
அவா எல்லாரும் பழைய பழவழக்கத்துலேயே ஊறி போனவா!
கண்ணனுக்கு ஆம்படையாளா வரவளை தினபடிக்கே மடிசார் கட்டிக்க சொன்னாலும் சொல்லுவா!
இவளால அவா கூடலாம் அட்ஜஸ்ட் பண்ணிண்டு போக முடியுமா!" என தன் செய்கைக்குப் பொறுமையாக விளக்கமளித்தார் அவர்.
சேஷாத்ரி தீவிரமாய் பேசிக்கொண்டே போகச் சிரிப்பே வந்துவிட்டது கீதாவுக்கு.
"அட ராமா! இதுதான் உங்களோட ப்ராப்ளமா?
அவ என்ன சின்ன குழந்தையா! அதெல்லாம் சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி சமயோசிதமா நடந்துப்பா உங்க சின்ன பொண்ணு!
அதோட அவ என்ன அவாளோட கிராமத்து ஆத்துலேயேவா இருக்க போறா?
பெரும்பாலும் இங்கதான் இருப்பா?
அவாளுக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு.
அன்னைக்கு அவாத்து ஃபங்க்ஷன்ல பார்த்தேனே!
எவ்வளவு சமத்தா இருக்கா தெரியுமா?
அவா புக்ககத்து மனுஷாளோட அவ்வளவு அனுசரிச்சுண்டு போறா!
நம்ம ராதாவும் அதே மாதிரி இருப்பா" என விட்டுக்கொடுக்காமல் பேசினார் அவர்.
"அப்படியா சொல்ற!" என்றவர், "எதுக்கும் நம்ம ராதாகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுடலாம்!
அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கணுமோல்லியோ" எனச் சேஷாத்ரி சொல்ல, "எல்லாம் அவ மனசுல கண்ணன்தான் இருக்கான்! இத கேட்டு வேற தெரிஞ்சுக்கணுமா!" என்றார் கீதா தெளிவாக.
"என்ன! உளர்ர; அவா ரெண்டுபேரும் எலியும் பூனையுமா பொழுதன்னைக்கும் சண்டை போட்டுண்டுன்னா இருக்கா!" என அவர் குழப்பமாகக் கேட்க, "நம்ம ரெண்டுபேரும் இப்ப என்ன பண்ணிண்டு இருக்கோமாம்! அதனால நம்மள ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காதுன்னு அர்த்தமா?" எனப் பதில் கேள்வி கேட்டர் கீதா.
"சரி! இப்போதைக்கு இதை ஆறப்போடுவோம்! அவளை இப்ப குழப்ப வேண்டாம்; அவளோட படிப்பு முடியட்டும்; நல்லபடியா பேசி முடிக்கலாம்!" என்று சொல்லிவிட்டார் சேஷாத்ரி ஒரே முடிவாக.
அவரது அந்த பதிலில் சற்று அமைதியானார் கீதா!
***
அதன்பின் வந்த நாட்கள் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகச் சென்றது.
அன்று கண்ணன் ராதா திருமண பேச்சு எழுந்ததுடன் சரி அதன் பின் அதைப் பற்றி யாருமே பேசவில்லை.
அதுவும் சேஷாத்ரி மறந்தும் கூட கண்ணனிடம் அதைப் பற்றிப் பேசவே இல்லை!
ஏதாவது பேசப்போய் இருவருக்குள்ளும் மன சங்கடம் ஏற்பட்டுவிடக்கூடாதே என்று இருந்தது அவருக்கு.
மற்றபடி அவர்களுடைய மருத்துவமனை சார்ந்த அலுவல்கள் எப்பொழுதும் போலவே சென்றுகொண்டிருந்தன.
இதற்கிடையில் கண்ணனின் தங்கை மைத்ரேயியின் சீமந்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
கீதாவை அழைத்துக்கொண்டு சேஷாத்திரியும் அதற்கு வந்துவிட்டுப் போனார்.
***
அன்று திங்கட்கிழமை.
சீமந்தம் முடித்து கண்ணனின் அம்மா அப்பா தாத்தா மாறும் பாட்டி எல்லோரும் ஊருக்குக் கிளம்ப, அவர்களை அழைத்துச்செல்லவேண்டி அன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தான் கண்ணன்.
அடுத்த நாளே அவன் செய்யவேண்டிய முக்கியமான ஒரு அறுவை சிகிச்சை இருந்ததால் அவர்களைப் பத்திரமாக ஊரில் விட்டுவிட்டு அன்றே சென்னை திருப்பிவிட்டான் அவன்.
மணி இரவு பத்தை தொட்டிருந்தது.
வாகனத்தை நிறுத்திப் பூட்டிவிட்டு வீட்டைத் திறந்துகொண்டு அவன் உள்ளே நுழைய, கீதாவிடமிருந்து ஒரு அழைப்பு வரவும், "என்ன மாமி! எதாவது முக்கியமான விஷயமா! இந்த நேரத்துல கால் பண்றீங்கோ?" என்றபடியே அதை ஏற்றான் கண்ணன்.
"கண்ணா!' என்ற மாமியின் குரல் தழுதழுத்தது.
எதிர்முனையில் அவர் அழுவது புரியவும், "மாமி! குருவுக்கு எதாவது ப்ராப்ளமா?
பதட்டப்படாம என்னனு சொல்லுங்கோ!" என அவன் நிதானம் தவறாமல் கேட்க, "கண்ணா! அவர் இன்னைக்கு கார்த்தால ஏதோ ஒரு ப்ரொசீஜர் பண்ணாராம்!
அந்த பேஷண்டுக்கு ஃபிட்ஸ் வந்துடுதுடா கண்ணா!
இவர்தான் தப்பா ட்ரீட்மெண்ட் பண்ணிட்டார்னு சொல்லி அவா வேற ஹாஸ்பிடலுக்கு அந்த பேஷன்டை கொண்டு போயிட்டா!
அங்கே அந்த ஆள் செத்துப்போயிட்டாராம்டா!
இங்க நம்ம ஹாஸ்பிடல் ரிசப்ஷன் எல்லாம் அடிச்சு நொறுக்கி கலாட்டா பண்ணிண்டு இருக்காடா!
உன்னால உடனே வர முடியுமா?" எனத் தேம்பலுடன் கேட்டார் மாமி!
"நீங்க எங்க இருக்கீங்கோ மாமி!" என அவன் கேட்க, "ஹாஸ்பிடல்லதான்! ஃபர்ஸ்ட் ப்ளோர்ல! உன் கன்சல்டன்சி ரூம்லதான். உன்னோட குருவும் இங்கதான் இருக்கார்.
இங்க யாரையும் உள்ள வர முடியாதபடிக்கு க்ரில்லை லாக் பண்ணிண்டு இருக்கோம்; அவர் வேற ரொம்ப டென்க்ஷனா இருக்கார்; கொஞ்சம் சீக்கரம் வா கண்ணா ப்ளீஸ்!" என்றார் அவர் பயத்துடன்.
அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மருத்துவமனையிலிருந்தான் கண்ணன்.
அந்த இடமே போர்க்கோலம் பூண்டிருந்தது.
ஓரிரு ஊடக நிருபர்கள் வேறு அங்கே கேமராவுடன் ஆஜராகி இருக்க, சரியாக அதே நேரம் ராதாவும் அங்கே வரவும், "நீ ஏன் இப்ப இங்க வந்த?” என பற்களை கடித்தான் அவன்.
"இல்ல என்னால ஆத்துல இருக்க முடியல!" என்றாள் அவள் கலவரமாக.
ஏற்கனவே அவள் பதட்டத்துடன் இருக்க அவளை மேலும் கேள்வி கேட்க விரும்பாமல், முதல் தளம் நோக்கிச் சென்றான் அவன்.
"என்ன இது ஹாஸ்ப்பிடலா இல்ல கசாப்பு கடையா! ஒரு சாதாரண பிரச்சனைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வந்தா கொலை செஞ்சு குடுத்திருக்கீங்க!" என இறந்தவரின் உறவினர் ஒருவர் ஆக்ரோஷத்துடன் கேள்வி கேட்க, "ஒரு டென் மினிட்ஸ் டைம் குடுங்க! நான் உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்றேன்!" என அவரிடம் சமாதானமாகப் பேசியவன், ராதாவுக்கு அரணாக அவளுடன் மாடிப்படி நோக்கி போனான் கண்ணன்.
அவனைப் பார்த்ததும் அங்கே இருந்த காவலாளி 'க்ரில்'லை திறக்க, உள்ளே நுழைந்தான் கண்ணன்.
அவனைப் கண்டதும் மிக முயன்று அழுகையை அடக்கியவாறு, "கண்ணா!' என்று கேவினார் கீதா.
உணர்வற்ற முகத்துடன் உட்கார்ந்திருந்தார் சேஷாத்திரி!
அவரை இப்படி ஒரு தோற்றத்தில் பார்க்க முடியாமல், "என்ன ஆச்சு குரு?" எனக் கேட்டான் கண்ணன் அக்கறையுடன்.
"இயர் ட்ரம்ல இருக்கற ஃபுளூயிட் கலெக்க்ஷனை ரிமூவ் பண்றதுக்காக பண்ற சின்ன ப்ரொசீஜர்தான் கண்ணா!
மைரிங்காடமி!
இன்சிஷன் அண்ட் ட்ரைனேஜ்!
அடல்ட் அப்டிங்கறதால லோக்கல் அனஸ்தீஷியாதான் கொடுத்தேன்!
நாம யூஷுவலா கொடுக்கற ஐ வீ அன்டிபயாடிக்ஸ்தான் போச்சு!
இந்தநேரத்துக்கு அவர் நார்மலா டிஸ்சார்ஜ் ஆகியே போயிருக்கலாம்.
ஏன் ஃபிட்ஸ் வந்துதுன்னே புரியலடா!" என்றார் சேஷாத்திரி குழப்பத்துடன்.
"பாஸ்ட் மெடிக்கல் ஹிஸ்டரி!' என அவன் கேட்க, "கிளியர் ஹிஸ்டரி! நோ பீ.பீ; நோ டயாபெடிக்ஸ்!" என அவர் சொல்ல, "என்ன ஆன்டிபயாட்டிக்ஸ் போச்சு?' எனக் கேட்டவன் அவர் தயாராக வைத்திருந்த கோப்பை நீட்டவும் அதை வாங்கி ஆராய்ந்தான்.
உடனே, "மாமி! எதாவது புது ட்ரக் ஏஜென்சியா?' எனக் கேட்டான் அவன் கீதாவிடம்.
காரணம் அந்த மருத்துவனை நிர்வாகம் மொத்தமும் கீதாவின் கட்டுப்பாட்டிலிருந்தது.
"இல்ல! எப்பவும் கொடுக்கறவாதான்!" என்றவர் திடுக்கிட்டு, "கண்ணா! ஆனா இந்த தடவ கொடுத்த மருந்தெல்லாம் ஒரு புது மேன்யுபாக்சரர் கிட்ட இருந்து வந்தது.
டீலரை கேட்டதுக்கு நல்ல ஆத்தன்டிகேட்டட் கம்பெனிதான்!
ஏற்கனவே இருக்கற கம்பெனியோட சிஸ்டர் கம்பெனின்னு சொன்னாடா!' என அவர் உள்ளே போன குரலில் சொல்ல, அங்கே இருந்த பணியாளரை அழைத்து சில மருந்துகளை எடுத்துவரச்சொல்லி அதை ஆராய்ந்தவன், "அனுவிந்த் பார்மாஸ் பிரைவேட் லிமிடெட்! புதுசா இருக்கே!
இதை எப்படி வாங்கினீங்கோ மாமி!" எனக் கொஞ்சம் கடுமையாகக் கேட்டவன் யோசனையுடன் அப்படியே அமர்ந்துவிட்டான்.
சில நிமிடங்களில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு நிமிர்ந்து நின்றவன், அந்த மருந்துகளை ராதாவின் கைகளில் திணித்துவிட்டு, "இதோட சேர்த்து, இன்னும் அந்த பேஷண்ட்டுக்கு கொடுத்த மெடிசின்ஸ் மிச்சம் இருக்கறதும் ஈவன் டஸ்ட்பின்ல போட்டதுகூட விடாமல் எடுத்து லேபுக்கு அனுப்பு!" எனக் கட்டளையாகச் சொன்னவன், "என்ன சொல்ல வரேன்னு புரியறதில்ல" என அவன் அவளது முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே சொல்லவும், அவன் சொல்ல வருவதை உள்வாங்கியவளின் கண்கள் மின்னியது.
உடனே தன் வக்கீல் நண்பன் ஒருவனை அழைத்தவன், "மனோ! எனக்கு உடனே பெயிலுக்கு ஏற்பாடு பண்ணு! டீடெயில்ஸ் வாட்ஸாப்ப் பண்றேன்' என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு அவனது ஒப்புதலான பதிலைப் பெற்றுக்கொண்டு அழைப்பை துண்டித்தான்.
மற்ற மூவரும் அதிர்ந்துபோய் அவனைப் பார்க்க, அதைக் கண்டுகொள்ளாமல், "ராதா! உன் கைலதான் என் கேரியரே இருக்கு! பீ அலர்ட்!' என்று சொல்லிவிட்டு கீழே சென்றான் கண்ணன்.
அதற்குள் அவன் எதிர்பார்த்தபடி அங்கே காவல் துறையினர் வேறு வந்திருக்க, அவர்களை நோக்கிச் சென்றவன், "ஐ ஆம் டாகடர் ஆனந்த கிருஷ்ணன்" எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
"யார் சார் அந்த ஆபரேஷனை செஞ்சது" என அங்கே வந்திருந்த காவல்துறை ஆய்வாளர் அலட்சியத்துடன் அவனிடம் கேட்க, "அது ஆபரேஷன்லாம் இல்ல சார்! ஒரு சின்ன ப்ரொசீஜர் அவ்வளவுதான்!
அதனால உயிர் போக சான்ஸே இல்ல" என்றான் அவன் பொறுமையாக.
"என்ன டாக்டர்னு கெத்து காமிக்கறீங்களா!" என்றவர், "ப்ரொசீஜர்னே வெச்சுப்போம்; யார் அதை செஞ்சது" எனக் கேட்டார் அந்த காவல்துறை அதிகாரி தன் அதிகாரத்தை நிலைநாட்டும் விதமாக..
சிறிதும் தயங்காமல் அவரை எதிர்கொண்டவன், "நான்தான் செஞ்சேன்" என்றான் கண்ணன் தெளிவான குரலில்.
Comentarios