top of page

kadhal Va..Radha-13

காதல்-13


அடுத்து வந்த நாட்களில் ராதா எல்லோரிடமும் இயல்பாக இருப்பது போல் தோன்றினாலும் அவனிடமிருந்து அவள் விலகிச்செல்வது போன்ற எண்ணம் உருவானது கண்ணனுக்கு.


பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்த பிறகு கீதாவிடம் அடம் பிடித்து மின்சாரத்தில் ஓடும் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கி அதிலேயே பள்ளி செல்ல தொடங்கியிருந்தாள்.


எனவே அதற்கும் கூட அவனது உதவி தேவைப்படவில்லை அவளுக்கு.


கூர்மையாகக் கவனிக்க, அவள் வேண்டுமென்றே அவனைத் தவிர்ப்பது புரிந்தது.


அவனை நேருக்கு நேர் பார்ப்பதே இல்லை அவள். தவறி எப்பொழுதாவது பார்க்க நேர்ந்தால் ரத்தம் மொத்தமும் முகத்தில் பாய்வதுபோல் அவள் முகம் செக்கச்சிவந்து போகும்.


அந்த அளவுக்கு அவனிடம் கோபமாக இருக்கிறாள் என்றே நினைத்தான் கண்ணன்.


அன்று அதிகப்படியாக அவளிடம் கோபத்தைக் காண்பித்ததாலோ என்னவோ என்ற எண்ணம் தோன்றினாலும் இறங்கி வந்து அவளிடம் விளக்கம் கொடுக்கவோ அவளைச் சமாதான படுத்தவோ விரும்பவில்லை அவன்.


'அப்படி என்ன தப்பா சொல்லிட்டோம்?" என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.


நீண்ட விடுமுறை வந்ததால் அப்படியே ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டான் கண்ணன்.


ஆனால் அவளது மாற்றத்திற்கு காரணம் கோபமில்லை அது அவளது வயதுக்கோளாறு என்பது புரிந்தபோது அதாவது பின்னொரு நாளில் அவள் தன் காதலை அவனிடம் சொல்லிக்கொண்டு வந்து நின்ற பொழுது சற்று தடுமாறித்தான் போனான் கண்ணன்.


கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு அன்றுதான் அங்கே திரும்ப வந்திருந்தான் கண்ணன்.


அடுத்த நாள் முக்கிய பரீட்சை இருந்ததால் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான் அவன்.


மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பியவள் அவன் வந்திருப்பது தெரிந்து அவனைக் காணும் ஆவலில் அங்கே வந்தாள் ராதா.


அவனது கவனம் மொத்தமும் புத்தகத்திலிருக்க அவனது அருகில் அவள் வந்து நின்றதை கூட கவனிக்கவில்லை கண்ணன்.


அவனது கவனத்தை தன் புறம் திருப்ப 'ம்க்கும்' என அவள் தொண்டையை செரும, நிமிர்த்து அவளைப் பார்த்தவன் மெலிதாக புன்னகைத்தவாறு, "ஹை ராதா! எப்படி இருக்க?" என்று கேட்டுவிட்டு அவளது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் புத்தகத்திற்குள் தன்னை புதைத்துக்கொண்டான்.


அதில் கொஞ்சம் எரிச்சல் உண்டானாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், "நான் நன்னா இருக்கேன் கண்ணன்! நீங்க எப்படி இருக்கீங்கோ?" என்று அவள் கேட்க, "பிரமாதம்" என்றான் புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பாமல்.


"நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் கண்ணன்! நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்தது" என்றாள் அவள் ஒரு தீவிர பாவத்துடன்.


எப்பொழுதுமே அவன் ஊருக்குச் சென்று வந்தால் அவள் சொல்வதுதான்.


வழக்கமாக, "நீங்க இல்லாம எனக்கு ரொம்ப போர் அடிச்சுது கண்ணன்" என்று சொல்லுவாள், அதையே வேறுவிதமாகச் சொல்கிறாள் என்றே எண்ணினான் அவன்.


அவனது கவனம் மொத்தமும் அடுத்த நாள் நடக்கவிருக்கும் பரிட்சையிலேயே இருக்க அவள் குரலிலிருந்த மாற்றத்தை உணரவில்லை கண்ணன்.


எப்படியும் அவன் தன்னை கண்டுகொள்ளமாட்டான் என்பதை உணர்ந்தவள், "என் ஃப்ரெண்ஸ்லாம் 'கண்ணன் உன்னோட பாய் ஃப்ரண்ட்டா'ன்னு கேக்கறாங்க" என்றாள் அவள் தான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடும் ஆவலுடன்.


புத்தகம் கையிலிருந்து கழன்று கீழே விழ விதிர் விதிர்த்துப் போனான் கண்ணன்.


"என்ன ராதா இப்படியெல்லாம் பேசற? லூசா நீ!" என அவன் பதட்டத்துடன் கேட்க,


"ஐயோ கண்ணன்! நான் அப்படி சொல்லல!


உங்களைப் பத்தி என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிண்டே இருப்பேனா!


அதனால அவா எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்.


அதனால அவா எல்லாரும்தான் அப்படி கேட்டா!


உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறவா ரொம்ப லக்கியாம்!


நீங்க ரொம்ப நன்னா கேர் பண்ணுவீங்களாம்! எல்லாரும் சொல்றா கண்ணன்' என்றாள் அவள் சிறு பிள்ளை போல!


அவன் ஒரு மருத்துவ மாணவன். அவளைப் போலச் சிறுபிள்ளைத்தனமாக இல்லாமல் அவனது வயதிற்கே உரிய முதிர்ச்சியுடன், "இப்படியெல்லாம் பேச கூடாது ராதா!


இந்த வயசுல படிப்பில்தான் கவனம் செலுத்தணும்!


இந்த மாதிரி மனசை அலை பாய விட கூடாது!


நான் யாரோ ஒருத்தன்தானே! ஆனா என்னையே டாக்டர் ஆக்கி பார்க்கணும்னு எவ்வளவு அக்கறை எடுத்தகறார் உங்க அப்பா!


அப்ப உன் விஷயத்துல எவ்வளவு கேர் எடுத்துப்பார்?


அதனால பிளஸ் டூல நல்ல மார்க் வாங்க ட்ரை பண்ணு.


உங்க அக்கா பண்ண தப்பை நீயும் பண்ணாத.


மெடிக்கல் படிச்சு அவரோட ஆசையை நிறைவேத்து!" எனப் பக்குவமாகச் சொல்லி முடித்தான் கண்ணன்.


"ஐயோ! கண்ணன்! அட்வைஸ் போதும்! என்னால முடியல!


இனிமேல் இப்படி பேசவே மாட்டேன்" என்றவள், "ஆனா ஒண்ணு! எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்! அதனால நீங்க எப்பவுமே என் கூட இருக்கனும்" என்று சொல்லிவிட்டு வேகமாகக் கீழே இறங்கிச் சென்றுவிட்டாள் அவள்.


என்னதான் அவ்வளவு முதிர்ச்சியுடன் அவன் பேசினாலும் அந்த சம்பவத்திற்குப் பிறகு அவனால் அவளிடம் இயல்பாக இருக்க இயலவில்லை.


அவன் மனதிலும் சிறு சலனம் ஏற்பட்டிருந்தது என்பதுதான் உண்மை.


அதற்கு மேல் அவர்கள் வீட்டில் தங்கி இருப்பது வம்பை விலை கொடுத்து வாங்குவதுபோல் ஆகும் என்ற எண்ணத்தில் இறுதி ஆண்டு 'ஹவுஸ் சர்ஜன்ஸி'யை காரணம் காட்டி மேலும் எதையெதையோ சொல்லி விடுதியில் தங்கிப் படித்துக்கொள்ள சேஷாத்ரியிடம் அவன் அனுமதி கேட்க, அரை மனதுடன் அதற்கு சம்மதித்தார் சேஷாத்ரி!


கீதாவை சம்மதிக்க வைப்பதுதான் பெரும் சவாலாக இருந்தது அவனுக்கு.


ராதாவால் அதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.


தனிமையில் அவனிடம், "என்னாலதான கண்ணன் நீங்க ஹாஸ்டலுக்கு போறீங்கோ" என ராதா வருத்தத்துடன் கேட்க, அதை மறுத்தவன், "உண்மையாவே ஃபைனல் இயர் அங்கேயே தங்கி இருந்து படிச்சா எனக்கு ஈஸியா இருக்கும்; அதனாலதான்" என்று சொல்லிவிட்டான் அவன்.


ஆனால் ராதா அதை நம்பவில்லை என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது!


எல்லாரையும் சமாளித்து எப்படியோ விடுதியில் தங்கியவாறு படிப்பைத் தொடர்ந்தான் கண்ணன்.


ராதா மட்டும் அவன் மனதின் ஒரு ஓரத்தில் வந்து ஒட்டிக்கொண்டு அவனை உறுத்திக்கொண்டே இருந்தாள்.


எல்லோரையும் பிரிந்து தனித் தீவில் இருப்பது போல் உணர்ந்தாலும் நண்பர்களால் சில நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தான் கண்ணன்.


அவ்வப்பொழுது சேஷாத்ரியையும் கீதாவையும் அவர்களுடைய மருத்துவமனையில் போய் சந்தித்துவிட்டு வருவான்.


ஆனால் தவறியும் ஒரு முறை கூட ராதாவை நேரில் பார்க்கவில்லை அவன்.


அவன் விடுதிக்கு வந்த புதிதில் அவள் தொலைப்பேசியில் அழைத்தாலும் அதை அவன் ஏற்காமலிருக்க அவனை அழைப்பதையே விட்டுவிட்டாள் அவள்.


இப்படியே கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்திருந்தது.


ராதா அவனைப் பற்றிய எண்ணங்களிலிருந்து வெளியில் வந்திருப்பாள் என நம்பிக்கொண்டிருந்தான் கண்ணன்.


ஆனால் அப்படி இல்லை என்பதைப்போல ஒரு நாள் காலை அவளது எண்ணிலிருந்து, "நான் உங்க ஹாஸ்பிடல் காம்பஸ்ல இருக்கற கான்டீன்ல உங்களுக்காக வெயிட் பண்ணிண்டு இருக்கேன்" எனக் குறுஞ்செய்தி வந்திருக்க, வியப்புடன் அங்கே வந்தான் கண்ணன்.


ஆரஞ்சு நிறத்தில் கருப்பு பூவேலை செய்யப்பட்டிருந்த அனார்கலி உடையில், மிதமான ஒப்பனையுடன் அவனுக்காக அங்கே காத்திருந்தாள் ராதா.


அவனது கண்களுக்கு எப்பொழுதையும் விட மிக அழகாகத் தெரிந்தவளின் புன்னகை அவனைப் பார்த்ததும் அழகாக விரிய, எதோ ஒருவித படபடப்பு வந்து ஒட்டிக்கொண்டது அவனுக்கு.


அவனை நெருங்கி வந்தவள், "உங்க கிட்ட முக்கியமா பேசணும்!


இங்க வேண்டாம்! வெளியில ஒரு மரம் இருக்கு இல்ல! அங்க போகலாம்" என்று சொல்ல, "அப்படி என்ன முக்கியமான விஷயம்" என்றான் அவன் கடுமையுடன்.


"ஏன் கண்ணன்! இவ்வளவு நான் கழிச்சு பார்த்திருக்கோம்! எப்படி இருக்கன்னு கேக்க மாட்டீங்களா!


இப்படி மூஞ்சியை காமிக்கறீங்களே" என வெகு இயல்பாகச் சொன்னவள், அங்கிருந்து செல்ல வேறு வழி இல்லாமல் அவளைப் பின்தொடர்ந்து வந்தான் அவன்.


அங்கே இருந்த மிகப் பெரிய குல்மோஹர் மரத்தின் அடியில் வந்து இருவரும் நிற்க, இளம் காலை வேளை என்பதால் அங்கே சற்று வெறிச்சோடி கிடந்தது.


"சொல்லு என்ன விஷயம்! எனக்கு ட்யூட்டி இருக்கு" என அவன் அவளை அவசரப் படுத்த, "எனக்கு எக்ஸாம் முடிஞ்சு போச்சு! தெரியுமா' எனக் கேட்டாள் அவள்.


"ம்" என அவன் ஒற்றை வார்த்தையில் பதில் கொடுக்க, "நான் நன்னா பண்ணியிருக்கேன் கண்ணன்" என்றாள் அவள்.


"ஓ! குட்" என்றவனை ஆழமாகப் பார்த்தவள், "நான் இன்ஃபாக்சுவேஷன்ல இப்படி பேசறேன்னு நினைக்காதீங்கோ கண்ணன்!


எனக்கு உண்மையாவே உங்களை பிடிச்சிருக்கு!


நான் உங்களை சின்சியரா லவ் பண்றேன் கண்ணன்! புரிஞ்சுகொங்கோ!" என்றாள் அவள் சுற்றி வளைக்காமல்.


அடுத்த நொடி அவனது கரம் அவளது கன்னத்தில் இடியென இறங்க, "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் கிட்டேயே வந்து இப்படி சொல்லுவ!


நீ நினைக்கறது கனவுல கூட நடக்காது! எனக்கு உன்னைக் கொஞ்சம் கூட பிடிக்கல!


இங்க வரதுக்கு முன்னாடி உனக்கு எவ்வளவு அட்வைஸ் பண்ணேன்!


எல்லாம் மறந்துபோச்சில்ல!


உங்க அக்கா புத்திதானே உனக்கும் இருக்கும்!


உன்கிட்ட இதுக்கு மேலே எக்ஸ்பெக்ட் பண்ண முடியமா என்ன?" என அவன் வார்த்தைகளை உமிழ, அவளது தன்மானம் சீண்டப்பட, "போதும் கண்ணன்! இனிமேல் எதுவும் சொல்லாதீங்கோ!


என்னால தாங்கிக்க முடியாது!


உங்களுக்கு என்னை பிடிக்கும்னு நினைச்சுதான் என் மனசுல இருக்கறத சொன்னேன்.


வேற யாரா இருந்தாலும் எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்காது.


என்னைக்கா இருத்தலும்; எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்த அது உங்க கூட மட்டும்தான்!


நீங்க இப்ப சம்மதிச்சா நீங்க சொல்ற மாதிரி நான் டாக்டருக்கு படிப்பேன்!


இல்லனா அத்திம்பேர் சொல்ற படிப்பைத்தான் படிக்க போறேன்!


முடிவு உங்க கைல" என சொல்லவிட்டு அவனைத் திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றாள் அவள்.


'சாரி ராதா! எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்! ஆனா இதுக்கு எந்த காரணம் கொண்டும் என்னால சம்மதிக்க முடியாது!


இது நம்பிக்கை துரோகம்! குரு துரோகம்!


இதை நான் செய்ய மாட்டேன்' என மனதிற்குள் தவித்துப்போனான் கண்ணன்.


அதன் பின் மேற்படிப்புக்களை முடித்து அவன் சிறந்த மருத்துவராக வளர்ந்த பின் கூட கண்ணன் அவனது இந்த பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க அவளும் தன் பிடிவாதத்தில் அவனுக்கு இணையாக நின்றாள்.


ஏதோ ஒரு நூலிழையில் நட்பு என்கிற சாயத்தை பூசிக்கொண்டு அவர்கள் எண்ணத்திலும் செயல்களிலும் ஒன்றாக பயணிக்க தொடங்கிய பொழுதும் இருவருக்குள்ளும் ஒரு பனிப்போர் நடந்துகொண்டே இருக்கிறது.


ஏதேதோ எண்ணங்களில் அவன் உழன்றுகொண்டிருக்க, அவனுடைய கைப்பேசி தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்பவும் அனிச்சையாக அதனை எடுத்துப்பார்த்தான் கண்ணன்.


அதைப் பார்த்ததும் அவனது விழிகள் கோபத்தில் சிவந்தது.


அபிமன்யுவுடன் ஒரு 'செல்ஃபி'யை எடுத்து அதை அவனுக்கு அனுப்பியிருந்தாள் ராதா!


'இந்த போட்டோவை பார்த்த உடனே கண்ணனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்' என்ற எண்ணம் தோன்ற, எழுந்த சிரிப்பை மிக முயன்று அடக்கினாள் நட்சத்திர விடுதியின் உணவகத்தில் அபிமன்யுவுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த ராதா!


Recent Posts

See All
Kadhal Va..Radha? 17

காதல்-17 அடுத்த நாள் வழக்கம் போல மருத்துவமனைக்கு வந்திருந்தான் கண்ணன். "நம்ம மீட்டிங் ஹால்ல இருக்கேன்! சித்த இங்க வா கண்ணா!" என அவனைக்...

 
 
 
Kadhal Va..Radha! 19

காதல்-19 அடுத்த இரண்டாவது நாளில் தேர்த்துறை கரிய மாணிக்க பெருமாள் சன்னதியில் சாஸ்திர சம்பிரதாயம் எதையும் குறைக்காமல் ஆனால் எளிமையாக...

 
 
 
Kadhal Va..Radha? 3*

காதல்-3 சொல்லிவிட்டு கிளம்பலாம் எனச் சேஷாத்ரியை தேடி சாப்பாட்டு அறைக்குள் கண்ணன் நுழைய, அங்கே இருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பத்தை...

 
 
 

Commentaires

Noté 0 étoile sur 5.
Pas encore de note

Ajouter une note
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page