காதல்-17
அடுத்த நாள் வழக்கம் போல மருத்துவமனைக்கு வந்திருந்தான் கண்ணன்.
"நம்ம மீட்டிங் ஹால்ல இருக்கேன்! சித்த இங்க வா கண்ணா!" என அவனைக் கைப்பேசியில் அழைத்தார் சேஷாத்ரி.
பணி மருத்துவர்கள் மற்றும் அவர்கள் மருத்துவமனையின் அலுவலகர்களுடன் முக்கிய விஷயங்களைக் கலந்தாலோசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கலந்தாய்வு கூடம் அது.
எதோ ஒரு மருத்துவ சம்பந்தமான அலுவலக ரீதியான சந்திப்பு என்ற எண்ணத்துடன் என்ன ஏது எனறு கூட கேட்காமல் கண்ணன் அங்கே வர, கீதாவுடன் ராதாவும் அங்கிருப்பதைக் கண்டு அதிர்ந்தான் அவன்.
தான் வந்த காரியத்தைச் சாதித்துக்கொண்ட நிம்மதியில் அனுபமா இரண்டு மூன்று தினங்கள் புக்ககத்தில் தங்கிவிட்டுவருவதற்காகச் சென்றுவிட, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில விஷயங்களைப் பேசி முடிக்க எண்ணியிருந்த ராதா, அவளுடைய அம்மா அப்பா மருத்துவமனை கிளம்பவும் அவர்களுடன் அங்கே வந்துவிட்டாள்.
தங்கள் அபிப்ராயத்தை கேட்காமல் அபிமன்யுவை திருமணம் செய்துகொள்ள அனுபமாவிடம் ராதா சம்மதம் சொல்லியிருக்க, அதற்குப்பின்னால் கண்ணன்தான் இருக்கிறான் என்பதை அவர்கள் அறியாத காரணத்தால், அவள்மேல் கடும் அதிருப்தியில் இருந்தனர் சேஷாத்ரி மற்றும் கீதா இருவரும்.
அனுவை வைத்துக்கொண்டு அவளிடம் எதையும் பேச இயலாத நிலையிலிருத்தவர்கள் அவளுடைய மனதை மாற்ற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள எண்ணி அவளை உடன் அழைத்துவந்திருந்தனர்.
உள்ளே நுழைந்ததுமே, "போயும் போயும் அந்த அபிமன்யுவை கல்யாணம் பண்ணிக்க ஒத்துண்டு இருக்கியே ஏன் ராதா!
உனக்கு புத்தி கெட்டு போச்சா?
இல்ல அம்மா அப்பா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என கீதா படபடக்க, தந்தையின் முகத்தைப் பார்த்தாள் ராதா.
மனைவியின் பேச்சை ஆமோதிப்பது போல மௌனமாக இருந்தார் அவர்.
"உங்க கேள்விக்கு நான் கட்டாயம் பதில் சொல்றேன்! ஆனா கொஞ்சம் கண்ணனை இங்க வரச்சொல்லுங்கோ..பா!" என்றாள் ராதா.
அவள் ‘சொல்லவந்திருக்கும் விஷயத்தை கண்ணனின் முன்னிலையில்தான் சொல்லுவேன்' என்று சொல்லவும், மகளின் முகத்தில் தளும்பிக்கொண்டிருந்த கோபத்தையும் பிடிவாதத்தையும் பார்த்த பிறகு அவருக்கு நடந்து கொண்டிருக்கும் நாடகம் கொஞ்சம் பிடிபட, 'தீர்ந்தடா கண்ணா நீ!' என மனதிற்குள் நகைத்தவாறு அவனை அங்கே வரச்சொல்லி அழைத்திருந்தார் சேஷாத்ரி.
அவளை அங்கே பார்த்ததும், 'அதான் அன்னைக்கு அவ்வளவு தூரம் படிச்சு படிச்சு சொன்னனே; இப்ப எதுக்கு சீன் கிரியேட் பண்ற!' என்கிற ரீதியில் அவளைக் கண்களால் எரித்தவன் ராதாவுக்கு நேர் எதிராகப் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவனாக, "எதாவது முக்கியமான விஷயமா குரு?" எனக் கேட்டான் கண்ணன் இயல்பாக.
அவனைப் பார்த்து ஒரு கிண்டல் சிரிப்பு சிரித்தவர், "ராதாதான் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை டிஸ்கஸ் பண்ணனும்னு சொன்னா!
அதான் கூப்பிட்டேன்" என்றார் சேஷாத்ரி.
மகள் என்ன பேசப்போகிறாளோ என்ற ஆவலுடன் அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார் கீதா!
"இது பெர்சனல் விஷயம் பேசற இடம் இல்ல! நம்ம ஹாஸ்பிடல் விவகாரம் எதாவது இருந்தால் மட்டும் டிஸ்கஸ் பண்ணலாம்னு உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்கோ குரு!" என்றான் கண்ணன் ராதாவை முறைத்துக்கொண்டே.
"பா! நான் பேச வந்திருக்கிற விஷயமும் ஒரு வகைல நம்ம ஹாஸ்பிடல் சம்பந்தப் பட்டதுதான்.
அதனால உங்க சிஷ்யரை கொஞ்சம் காது கொடுத்து கேக்க சொல்லுங்கோ" என்றாள் அவள் அவனது முறைப்பையெல்லாம் கண்டுகொள்ளாமல்.
'ஹாஸ்பிடல் பத்தி இவ என்ன பேசப்போறா?' என்ற கேள்வியுடன் அவன் அவளை கூர்மையாக கவனிக்க,
"அப்பா நேத்து அனு கிட்ட என்ன சொன்னீங்கோ?" என தீவிரமாகக் கேட்டாள் ராதா!
புரியாமல் விழித்தவர், "ராதா! எதைப் பத்தி கேக்கற! சொல்ல வரதை நேரடியா சொல்லு" என அவர் கடுகடுக்க, அவள் கேட்கும் கேள்வியின் அர்த்தம் புரியவும் கீதாவின் முகம் பிரகாசித்தது.
"ஏன்னா! 'ராதாவையும் ஹாஸ்பிடலையும் கண்ணனுக்குத்தான் கொடுக்கணும் நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்!
அவன் கைல ஒப்படைச்சதான் ராதாவுக்கும் நல்லது; என் ஹாஸ்பிடலுக்கும் நல்லது'ன்னு நேத்து சொன்னீங்களோல்லியோ" என கணவரிடம் அவரது வார்த்தைகளை நினைவுபடுத்தியவள், "அதை பத்திதானடி சொல்ற" என மகளைப் பார்த்துக் கேட்டார் கீதா உற்சாகம் கரைபுரண்டு ஓட.
"செம்ம ஷார்ப் மா நீ" என அன்னையை மெச்சியவள் அப்பாவை நோக்கி, "ஏம்பா! இதை இவரோட சின்ன தாத்தா என்னைப் பெண் கேட்ட உடனே சொல்லியிருக்கலாமோல்லியோ?" எனக் கேட்டாள் ராதா தந்தையைக் குற்றம்சாட்டும் வகையில்.
கொஞ்சம் கடுமையான குரலில், "ராதா!" எனக் கண்ணன் இடைப்புக, "நீ இரு கண்ணா!" என்ற கீதா, "அப்பாவைப் பத்தி என்ன நினைச்சிண்டு இருக்க ராதா நீ?!
என்கிட்டே அன்னைக்கே அவர் இதுக்கு சம்மதம் சொல்லிட்டார் தெரியுமா?
ஆனா முறைப்படி பேசறதுக்குள்ள அவ்வளவு பிரச்சனை குறுக்க வந்துடுத்து" எனக் கணவரை விட்டுக்கொடுக்காமல் பதில் சொன்னார் கீதா.
கண்ணனை ஊடுருவும் பார்வை பார்த்த ராதா, 'எப்படி?' என்பதுபோல் புருவத்தைத் தூக்க, 'என்னோட குரு...டீ' என உதட்டசைவில் அவளுக்குப் பதில் சொன்னவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான் கண்ணன்.
அம்மா அப்பாவுடைய பார்வை அவள் மீதே படிந்திருக்கவும் அவனுடைய செய்கைக்கு எதிர்வினை ஆற்ற இயலாமல் அவள் பொறுமை காக்க, "இதுதான் நீ சொன்ன ஹாஸ்பிடல் விவகாரமா ராதா" எனக் கிண்டல் வழிந்தோட அவளிடம் கேட்டான் கண்ணன்.
"ம்.. நான் சொல்ல வர விஷயத்தைக் கொஞ்சம் சொல்ல விடறீங்களா?" என அவனிடம் நொடிந்துகொண்டவள், தந்தையை நோக்கி, "அப்படினா நீங்க சொன்ன மாதிரியே இப்பவே ஹாஸ்பிடலை கண்ணன் பேருக்கு மாத்தி எழுதுங்கோ!
மத்தபடி நம்ம மத்த ப்ராபர்ட்டி மொத்தத்தையும் நீங்க அனுவுக்கு கொடுத்தாக்கூட எனக்கு கவலை இல்ல!" என்றவள், "எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கரம், காதும் காதும் வெச்ச மாதிரி எங்க கல்யாணத்துக்கும் ஏற்பாடு பண்ணுங்கோ!" என முடித்தாள் ராதா சர்வ சாதாரணமாக.
சேஷாத்ரியும் கீதாவும் அவளை அதிர்ந்துபோய் பார்க்க, "ஏய் ராதா! லூசா நீ!" எனப் பதறினான் கண்ணன்.
நிதானமாகத் தந்தை மீது வைத்திருந்த பார்வையைக் கண்ணனை நோக்கித் திரும்பியவள், “நான் லூசா டைட்டாங்கற ஆராய்ச்சியெல்லாம் அப்பறம் பண்ணிக்கலாம்.
பட் நான் சொன்னதெல்லாம் இப்பவே நடந்தாகனும்” என்றவள், "நீங்க என்ன சொன்னாலும் செய்யறதுக்கு நான் ரெடியா இருக்கேன் கண்ணன்! ஆனா அனுராதா சேஷாத்ரியா இல்ல!
அனுராதா ஆனந்தகிருஷ்ணனா!" என்றாள் அவள் ஒரு பிடிவாத குரலில்.
"திருட்டு கொட்டுகளா! நீங்க ரெண்டுபேரும் சேர்ந்துண்டு எங்களை முட்டாளடிச்சிண்டு இருக்கீங்களா!" எனச் சலிப்பாகச் சொல்வதுபோல் மகிழ்வாகவே சொன்ன சேஷாத்ரி, "கண்ணா! ஏற்கனவே அந்த எக்ஸ்பயரி மெடிசின் விவகாரத்துல பண்ண மாதிரி இப்பவும் ஏதோ முடிவோட இருக்கேன்னு தெரியறது!
அது என்னன்னு என்ட்ட சொல்லலாம்னு தோணினா சொல்லு!
இல்லனா ஆளை விடு" என முறுக்கிக்கொள்ள ராதாவைப் பார்த்து முறைதான் கண்ணன்.
அவள் அதை கண்டும் காணாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவனுக்குக் கோபம் வந்தாலும் அதை அவனுடைய குருவுக்கு முன்பாக வெளிப்படுத்த விரும்பாமல், "உங்களுக்கு தெரியாம நான் ஏதாவது பண்ணுவேனா குரு?!" என்றான் தன்மையான குரலில்.
அதில் அவர் முகம் மலரவும், "இவ நேத்து என்ன சொன்னான்னு தெரியுமா கண்ணா!
அந்த அபிமன்யுவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிட்டா கடங்காரி!
நாங்க அப்படியே ஆடி போயிட்டோம் டா!
இப்ப வந்து இப்படி பேசறா!
என்னடா நடக்கறது இங்க" அவர் கெஞ்சலில் இறங்கவும்,
"தெரியும் மாமி! அனு கூட நீங்க பேசிண்டு இருந்தப்ப நான் அங்கதான் இருந்தேன்" எனச் சொல்லவிட்டு அவரது அதிர்ந்த முகத்தைப் பார்த்தவன்,"சாரி!" என்ற நமுட்டு சிரிப்புடன், "நான் சொல்லித்தான் ராதா அப்படி பேசினா" என்று முடித்தான் கண்ணன்.
அவன் தோளில் உரிமையுடன் தட்டியவர், "பாவிகளா! நான் பயந்தே போயிட்டேன் தெரியுமா?
ராத்திரி முழுக்க பொட்டு கூட தூங்கல" எனப் பாவமாகச் சொன்னார் கீதா.
"இல்ல மாமி! அனுவையும் அரவிந்தன் அண்ணாவையும் இதுல இருந்து வெளில கொண்டுவரது ரொம்ப முக்கியம் இல்லையா!
அந்த அபிமன்யுவை வகையா சிக்க வெக்க வேண்டாமா!
இப்போதைக்கு அந்த நல்ல காரியத்தை நம்ம ராதாவால மட்டும்தான் செய்ய முடியும்" என்றவன், தன் திட்டத்தை நிதானமாக விளக்கினான் கண்ணன்.
"கண்ணா! இதுல ரொம்ப ரிஸ்க் இருக்கும் போலிருக்கேடா!
எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு" என சேஷாத்ரி மகளைப் பற்றிய கவலையில் சொல்ல, "வேற வழி இல்ல; பயப்படாதீங்கோ குரு!
ராதாவுக்கு எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு" என்றவன், "பார்க்கலாம்! அதிர்ஷ்டம் நம்ம பக்கம் இருந்தால் இந்த பிரச்னையெல்லாம் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்திடும்" என்றான் கண்ணன் அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக.
"அதெல்லாம் சரிதான்!
நீங்க சொல்றதை நான் பண்ணனும்னா உடனே நம்ம கல்யாணம் நடக்கணும்!" என ராதா மறுபடியும் அங்கேயே வர, "ஏய்! எவ்வளவு சீரியசான விஷயம் போயிண்டு இருக்கு!
நீ என்னடானா இப்படி பேசற?
விட்டா நாளைக்கே தாலியை காட்டுன்னு சொல்லுவ போலிருக்கே" என்றான் கண்ணன் எரிச்சலுடன்.
"சொன்னாலும் சொல்லாட்டியும் அதைத்தான் சொல்றேன்!
இன்னும் ரெண்டு மூணு நாளைக்குள்ள அத்திம்பேர் இங்க வந்துடுவார்.
அதுக்குள்ள நம்ம கல்யாணம் முடிஞ்சாகனும்" என்றவள், அவளுடைய அப்பாவை பார்த்து, "நீங்களும் அம்மாவும்தான்ப்பா இதை எப்படியாவது சாத்தியப்படுத்தணும்!
விட்டா இவர் சொல்றதையே சொல்லிண்டு இருப்பார்" என்றாள் ராதா.
அவள் பேச்சில் அப்படியே உறைந்துபோனான் கண்ணன்.
"கீதா பாருடி உன் பொண்ணை! இப்பவே இவனை அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுட்டா!
இன்னும் கல்யாணம் வேற முடிஞ்சுதுன்னா இவன் பாடு அவ்வளவுதான்" என்றார் சேஷாத்ரி கிண்டலாக.
"அவன் அவளை நன்னா டீல் பண்ணிப்பான்! நமக்கு அந்த கவலை எதுக்கு" என கீதா சொல்ல, "எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்கோ போலிருக்கு" எனச் சலித்துக்கொண்டான் கண்ணன்.
"ஆமாம் ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகணும்" என்ற கீதா, "ஏன்னா! உடனே கிளப்புங்கோ! போய் பேசிட்டு வந்துடலாம்" என கணவரை அவசரப்படுத்த, "ஏய்! இப்ப என்னை எங்க கூப்பிட்ற?" எனப் பதறினார் அவர்.
"நாமதான பொண்ணாத்துக்காரா! சம்பிரதாயப்படி நாமதான் முதல்ல போய் பேசணும்!
இப்பவே தேர்த்துறைக்கு போய் கண்ணணோட சின்னத்தாத்தா கிட்ட பேசிட்டு, இவனோட அம்மா அப்பா கிட்டேயும் பேசி முடிவு பண்ணிடலாம்!" என விளக்கமாகச் சொன்னவர், ஏதோ பேச வந்த கண்ணனையும் தடுத்துவிட்டு, "நாங்க வர வரைக்கும் ஹாஸ்பிடலை பத்திரமா பார்த்துக்கோடா கண்ணா" எனக் கிண்டலாகவே சொல்லவிட்டு கணவருடன் அங்கிருந்து சென்றார்.
இவ்வளவு நாட்களாக முரட்டுத்தனமாகத் திருமணத்தை ராதா மறுத்துவந்ததன் காரணம் புரியாமல் தவித்துக்கொண்டிருந்தார் கீதா.
அவள் கண்ணனை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்படிச் செய்கிறாளோ என்ற சந்தேகம் சிறிது நாட்களாக அவருக்கு இருந்துகொண்டே இருந்தது.
அது இன்று திண்ணமாக விளங்க, இதற்கு மேலும் காலத்தைக் கடத்த விரும்பவில்லை அவர்.
மேலும் அவர்கள் குடும்பத்தையும் மருத்துவ மனையையும் குறிவைத்து நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகள் வேறு பூதாகரமாக அவரை மிரட்டிக்கொண்டிருக்கக் கண்ணன் சொல்வதுதான் சிறந்த தீர்வு என்பது புரிய, ராதாவின் நிபந்தனையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினார் அவர்.
கணவரின் எண்ணம் ஏற்கனவே அவருக்குத் தெரிந்ததால் இந்த முடிவை எடுத்தவர், முதல் வேலையாகக் கண்ணனின் சின்னத்தாத்தா மூலமாக அந்த சுப காரியத்தை நடத்தி முடிக்க எண்ணி அவரது இல்லம் நோக்கி பயணப்பட்டார் கீதா சேஷாத்ரியுடன்.
அவர்கள் கிளம்பியதும் நடப்பதை நம்ப முடியாமல், "கண்ணன்! இது கனவா? இல்ல நிஜமா?
எதுக்கும் என்னைக் கொஞ்சம் கிள்ளுங்கோளேன்!" என அவனை நோக்கி தன் கையை நீட்டினாள் ராதா!
ஒரு பக்கம் அவனது பொறுப்புகள் அவனை அழுத்தினாலும் அவனுக்குமே சிறு மகிழ்ச்சி மனதில் மலர்ந்திருக்க, அவளுடனான தனிமையும் இந்த நெருக்கமும் அவனை வேறு உலகிற்கு இட்டுச்செல்ல ஒரு படபடப்பு உண்டானது கண்ணனுக்கு.
தன் நிலையை மறைத்து உணர்வற்ற பார்வையால் அவளை நோக்கியவன், "நீ இதுவும் சொல்லுவ! இன்னமும் சொல்லுவ!
ஆளை விடு தாயே!
எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றவாறு அவன் அங்கிருந்து செல்ல எத்தனிக்க அது வேறு விதமாக அவளை பாதிக்கவும், "கண்ணன் உங்க கிட்ட நான் முக்கியமா பேசணும்!
ஒரு அஞ்சு நிமிஷம் இருங்கோ" என்றாள் ராதா.
அவன் கேள்வியாக அவளைப் பார்க்க, "நானா உங்ககிட்ட வந்து என் காதலைச் சொன்னேனே! அதனாலையா?
இப்ப நானா இந்த கல்யாணத்துக்கு அவசர படறேனே! அதனாலையா?
ஏன் கண்ணன் உங்களுக்கு என்னைப் பார்த்தால் இவ்வளவு அலட்சியம்?!" என்று கேட்டாள் ராதா கலங்கிய குரலில்.
அதீத கோபத்தாலோ, அவமானத்தாலோ அல்லது குற்ற உணர்ச்சியாலோ அவளது கண்களில் கண்ணீர் திரையிட அவள் முகம் செந்தணலைப் போன்று சிவந்துபோயிருந்தது.
அவளது கலக்கம் அவனை வெகுவாக பாதிக்க அந்த நொடியே அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொள்ளத் தூண்டிய மனதை தடுத்து, அதற்கான உரிமை இன்னும் தனக்கு வழங்கப்படவில்லை என்பதை உணர்ந்து சிலையென நின்றான் கண்ணன்.
'நீ எனதின்னுயிர் கண்ணம்மா! எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்!
துயர் போயின போயின துன்பங்கள்.
நின்னைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே!
என்றன் வாயினிலே அமுதூறுதே!
கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே!'
பாரதியின் வரிகளில் அவன் சிந்தை நிறைத்தது.
Comments