Kadhal Va..Radha! 19
- Krishnapriya Narayan
- Oct 2, 2020
- 4 min read
காதல்-19
அடுத்த இரண்டாவது நாளில் தேர்த்துறை கரிய மாணிக்க பெருமாள் சன்னதியில் சாஸ்திர சம்பிரதாயம் எதையும் குறைக்காமல் ஆனால் எளிமையாக நடந்து முடிந்தது கண்ணன் ராதா திருமணம்.
கண்ணனுடைய குடும்பம் அவனுடைய சின்னத்தாத்தா பாட்டி மற்றும் அவனுடைய தங்கைகள் இருவருடைய குடும்பம் என வெகு சிலர் மட்டுமே கலந்துகொண்டிருக்க, தங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை கூட அழைக்கவில்லை சேஷாத்ரி.
மகளைப் பத்திரமாகக் கண்ணனின் கையில் ஒப்படைப்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருந்தது சேஷாத்ரி கீதா தம்பதியருக்கு.
மேலும் இந்த திருமணம் பற்றிய செய்தி கொஞ்சம் வெளியில் கசிந்தாலும் மூத்த மகளின் வாழ்க்கையை அது பாதிக்கும் என்பதும் ஒரு காரணம்.
கண்ணனுடைய தங்கைகளான மைத்ரேயி மற்றும் சின்மயிக்குதான் அண்ணனின் கல்யாணத்தை விமரிசையாக நடத்த முடியவில்லையே என கழுத்து மட்டும் குறை.
இதில் அவர்களுடைய புக்ககத்து மனிதர்கள் முணுமுணுப்பு வேறு!
ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் முந்தைய தினம் அரக்கு நிற ஒன்பது கஜம் கூரை புடவை, திருமாங்கல்யம், மெட்டி, நாத்தனார்கள் வாங்கும் விளையாடல் தட்டு சாமான்கள் எனக் கடை கடையாக ஏறி இறங்கி பார்த்துப் பார்த்து வாங்கிவந்திருந்தனர் இருவரும்.
திருமங்கல்ய தாரணம் முடிந்து புதுமணத் தம்பதியர் சின்னத்தாத்தா பாட்டியின் கால்களில் விழுந்து சேவிக்க, "ரெண்டு பேரும் நான்னா இருங்கோ!" என்று சில மந்திரங்களைச் சொல்லி தாத்தா அவர்களை ஆசிர்வதித்தவர், “உன் கல்யாணத்தை அஞ்சு நாள் கல்யாணமா பண்ணனும்னு நினைச்சேன்!
ஆச்சா போச்சான்னு இப்படி நடந்துபோச்சு!” என அலுத்துக்கொண்டார் தாத்தா.
"பரவாயில்லை விடுங்கோன்னா!" என்ற பாட்டி கண்ணனை நோக்கி, "டேய் கண்ணா! கல்யாணம்தான் பிளான் இல்லாம நடந்துபோச்சு!
ஆனா சீமந்தத்தை நன்னா க்ராண்டா எல்லாரையும் கூப்பிட்டு பண்ணனும்!
அதுக்கு காலாகாலத்துல ஏற்பாடு பண்ணுங்கோ!" என விவகாரமாகச் சொல்ல, சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் கண்ணனும் ராதாவும்!
அடுத்த சில மணிநேரத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் செல்லவேண்டிய சூழ்நிலையில் இந்த பேச்சு ஒருசேர பயத்தைக் கொடுத்தது இருவருக்கும்!
தாத்தாவுக்கும், ஆனந்தி மற்றும் ராகவனுக்கும் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும்.
மற்ற அனைவரிடமும் ஜாதகம் தோஷம் என மழுப்பலான ஒரு காரணத்தைச் சொல்லித்தான் அந்த கல்யாணத்தை நடத்தி முடித்தனர்.
கண்ணனுடைய நவீன ரக புகைப்படக் கருவியில் மைத்ரேயியின் கணவர் அந்த திருமண வைபவங்களைப் பதிவு செய்ய, மற்றபடி கைப்பேசி மூலம் கூட படம் பிடிக்க வேறு யாரையும் அனுமதிக்கவில்லை கண்ணன்.
சம்பிரதாயப்படி கண்ணனின் இல்லத்தில் கிருஹப்ரவேசம் செய்து புதுமண தம்பதியரை வரவேற்று, பெருமாள் சன்னதியில் மாட்டுப்பெண்ணை விளக்கேற்ற வைத்து, அவர்களுக்குப் பாலும் பழமும் கொடுத்து பின் அங்கேயே மதிய விருந்தையும் முடித்துக்கொண்டு, சென்னை நோக்கிப் பயணப்பட்டனர் கண்ணன் ராதா மற்றும் கீதா சேஷாத்ரி நால்வரும்.
கண்ணனை அவனுடைய 'பிளாட்'டில் இறக்கிவிட்டுவிட்டு அம்மா அப்பாவுடன் அவளுடைய பிறந்த அகத்திற்கே சென்றாள் ராதா.
அதற்கடுத்து நாள் விடியலிலேயே அமெரிக்காவிலிருந்து வந்து குதித்தான் அரவிந்தன்.
அதன் பின், நடப்பது எதையும் அறியாமல் கண்ணன் ராதாவின் திட்டத்தில் அபிமன்யுவை அழகாகச் சிக்கவைத்தான் அவன்.
என்னதான் நோக்கம் நல்லதாக இருந்தாலும் அந்த அபிமன்யுவை எதிர்கொள்வது விஷம் என்று தெரிந்தும் அதை விழுங்கவும் முடியாமல் உமிழவும் இயலாமல் தொண்டையில் வைத்திருப்பது போன்ற வேதனையை அவளுக்குக் கொடுக்க மன அமைதி நாடி இதோ கணவனைத் தேடி ஓடி வந்திருக்கிறாள் அவள்.
தன் தோளில் சாய்ந்து கரைந்துகொண்டிருந்தவளை, "ப்ச்... அழுகையை நிறுத்து ராதா!" என்றவாறு தன்னிடமிருந்து பிரித்தவன், அவளுடைய துப்பட்டாவைக் கொண்டே அவளது முகத்தைத் துடைத்துவிட்டு, அவளை 'சோஃபா'வில் அமரச் சொல்லிவிட்டு அடுக்களைக்குள் செல்ல, அவனை பின் தொடர்ந்து வந்தாள் அவள்.
அவன் காஃபியை கலக்க முற்படுவதைக் கவனித்து 'சிங்'கில் போய் கைகளை அலம்பி வந்தவள், "தள்ளுங்கோ! நான் கலந்து தரேன்!' என அவள் சொல்ல அவன் தள்ளி வழி விட்டு நிற்க, தானே கலந்து காஃபியை 'டம்ப்ளர்'களில் நிரப்பியவள், அங்கே டபராவைத் தேட அதை எடுத்து வந்தவன், 'டம்ப்ளர்'களை அதில் வைத்து ஒன்றை அவளிடம் நீட்டினான்.
மற்றொன்றை தான் எடுத்துக்கொண்டு வரவேற்பறை 'சோஃபா'வில் போய் உட்கார, அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள் ராதா.
வேண்டுமென்றே அவளை நெருக்கி அவளுடன் ஒன்றியவன், அவளது தோளை தன் கைகளால் வளைத்து, வாகாக அவளை தன்மேல் சாய்த்துக்கொண்டு, "உனக்கு பிடிக்கலன்னா சொல்லு ராதா!
வேற எதாவது வழி இருக்கான்னு யோசிக்கலாம்.
நான் இந்த ஐடியாவை யோசிக்கும்போது நீ என் வைஃப் கிடையாது.
ஆனா உன் பிடிவாதத்தால இந்த கல்யாணம் அரக்கப்பரக்க நடந்து முடிஞ்சுடுத்து.
இப்ப என் ஆத்துகாரியை இப்படி ஒரு வேலை செய்ய வைக்க எனக்கே பிடிக்கல" என அவன் சொல்ல, மறுப்பாகத் தலை அசைத்தாள் அவள்.
"இதை ஆரம்பிக்கிறது முன்னாடி யோசிச்சிருக்கணும்!
இனிமேல் இதுல இருந்து பின்வாங்கறது சரி இல்ல!" என்றவள்,
“இதுல அனு மட்டும் சிக்காம இருந்திருந்தால் நான் நிச்சயமா இவ்வளவு மெனக்கெட மாட்டேன்!" என்று சொல்லிவிட்டு, "இதையெல்லாம் சரி பண்ண இன்னும் எத்தனை நாள் ஆகுமோ!
அதுவரைக்கும் உங்களை நேர்ல பார்க்கவோ பேசவோ முடியாதில்ல!
அதை நினைச்சாதான் கவலையா இருக்கு!
அதான் போன்ல கூட உங்க பிக்ச்சரை வெச்சுக்கக்கூடாதுனு சொல்லிடீங்களே!
இப்போதைக்கு அதுதான் என்னோட ஒரே கவலை" என அவள் சொல்ல அழுகையில் மூச்சடைத்தது அவளுக்கு.
ஏற்கனவே கசாப்புக் கடை என்று தெரிந்தே அவனது புள்ளிமானை அனுப்பும் கவலையிலிருந்தவனுக்கு, 'அவளைப் பார்க்காமல் பேசாமல் எப்படி இருக்கப்போகிறோம்?!’என்ற கவலையும் இருக்கவே செய்தது.
அவள் இப்படிச் சொல்லவும் அது விஸ்வரூபம் எடுக்க அவளை மேலும் தனக்குள் புதைத்துக்கொண்டான் கண்ணன்.
முதன்முதலாக அவளின் நறுமணத்தை உணர்ந்தவன் அதில் தன்னை மறந்திருக்க, தன்னையும் அறியாமல் முழுவதுமாக அவனது அணைப்பிற்குள் அடங்கியவளின் அறிவு விழித்துக்கொள்ள, "என்ன இந்த முற்றும் துறந்த முனிவருக்குக் கூட ஆக்சிடாக்சின் வேலை செய்யறது போலிருக்கே!" என அவனைச் சீண்டிப் பார்க்கும் ஆவலில் கிண்டலுடன் கேட்டாள் ராதா.
அதைக் கண்டுகொள்ளவே இல்லை அவன்.
அவனிடமிருந்து மிகப்பெரிய சொற்பொழிவு ஒன்றை எதிர்நோக்கி அப்படி ஒரு கேள்வியை அவள் கேட்டிருக்க, அவனுடைய அந்த மோன நிலை அவளுக்கு சிறு துணிவைக் கொடுக்க, "டாக்டர் சார்! உங்க நிலைமையைப் பார்த்தால் உள்ளுக்குள்ள இருக்கற எல்லா ஹார்மோன்சும் மொத்தமா வேலை செய்யற மாதிரி இருக்கே!
நான் உங்களை நல்லவர்ர்ர்ர்ர்னு நம்பி இப்படி தனியா வந்தது தப்பு போலிருக்கே!" என அவள் பேசிக்கொண்டே போக, அதுவரை இருந்த அழுத்தமான மனநிலை மாறி அவள் குதூகலிப்பது புரியவும் அந்த குதூகலம் அவனையும் தொற்றிக்கொள்ள, அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் அவளது முகத்தை ரசனையுடன் பார்க்க, அவனது கண்களில் மின்னிய குறுகுறுப்பை உணர்ந்தவள், "லவ் ஹார்மோன்!" என ஏதோ சொல்ல வர அவளுடைய வார்த்தைகளை அப்படியே தடை செய்தான் கண்ணன் அவள் இதழ்களை தன் இதழ்களால் சிறை செய்து.
அவர்களுக்காகக் கலந்து வரப்பட்ட காஃபீ அங்கே ஆறிக்கொண்டிருந்தது அருந்துவாரின்றி.
***
அபிமன்யு சொன்னதின் பெயரில் அடுத்த நாள் மீரா சென்று அவனுடைய காரியதரிசி சரணை சந்தித்து அவளது தகவல்களைக் கொடுக்க, திங்களன்று அதாவது அடுத்த இரண்டு தினங்களுக்குப் பிறகு அவர்களுக்கான பயிற்சியை தொடங்குவதாக முடிவானது.
அந்த இரண்டு தினங்களும் ராதா அவர்கள் இல்லத்தை விட்டு எங்கேயும் போகவில்லை.
அபிமன்யுவும் அவளைத் தொடர்புகொள்ளவில்லை.
ராதாவும் அவளது கைப்பேசியும் அபிமன்யுவின் உளவு வளையத்துக்குள் இருக்கலாம் என்ற முன் யோசனையில், இனி அவள் கண்ணனை நேரிலோ அல்லது வேறு எந்த வகையிலோ தொடர்பு கொண்டாலும் அது அவர்களுக்குத் தோல்வியைக் கொடுக்கும் என்ற எண்ணத்தில் அதைத் தவிர்க்க முடிவு செய்திருந்தனர் இருவரும்.
பொழுதுபோகாமல் ராதா தொலைக்காட்சியில் தன் கவனத்தைப் பதிக்க முயன்றுகொண்டிருக்க, அவர்கள் இல்லத்தில் தளிகை வேலை செய்யும் மாமி அவளை நோக்கி வந்து தன் கைப்பேசியை அவளிடம் கொடுத்து, "யாரோ இங்லீஷ்ல என்னமோ கேக்கறா! என்னனு கொஞ்சம் பேசி சொல்லுடாம்மா" என்று சொல்ல, அதை வாங்கி "ஹலோ!" என்றாள் ராதா!
"நான்தான்! கண்ணன்" என அவன் சொல்ல, சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு.
அதை அடக்கிக்கொண்டு, "எஸ் ப்ளீஸ்!" என்று சொல்ல, "உடனே கொஞ்சம் நம்ம விஜய் கலெக்ஷனுக்கு வா!" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் கண்ணன்.
"ஏதோ வெத்து விளம்பர கால் மாமி" என அவரிடம் சொல்லிவிட்டு உடனே கிளம்பி அங்கே சென்றாள் ராதா!
அவளுக்காக அங்கே கண்ணன் காத்திருக்க, அவளைப் பார்த்ததும் நலம் விசாரித்தார் அந்த கடையின் உரிமையாளர் கௌதம்.
மரியாதை நிமித்தம் அவரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு கண்ணனை நெருங்கி வந்தாள் அவள்.
"நேத்தே இதையெல்லாம் உன் கிட்ட கொடுத்திருக்கணும்; எங்க; எல்லாமே மொத்தமா மறந்துபோச்சு" என்று ஏக்கம் கலந்த மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே, அழகிய பேனா ஒன்றை அவளிடம் நீட்டினான் அவன்.
அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்து அந்த பேனா.
"செம்ம க்யூட்டா இருக்கு கண்ணன்" என்று சொல்லிவிட்டு தன் நாக்கை கடித்துக்கொண்டவள், "ன்னா" என்று சொல்ல, "உரிமை! ம்ம்" என்றவாறு அவளைப் பார்வையால் அளந்தான் கண்ணன்.
"இப்படி கூப்பிட்டு பழகிக்க சொல்லி உங்க மாமியாரோட ஆர்டர்!" என்று சொல்லியவாறு அவள் அந்த பேனாவை ஆசையுடன் பார்க்க, "இது சாதாரண பென் இல்ல ராதா! இது ஒரு கேமரா!" என்றவன் அதில் பொருத்தப்பட்டிருந்த கடுகளவே ஆன ஒரு விசையை சுட்டிக்காட்டி, "இதை லேசா டச் பண்ணா கூட போட்டோஸ் கேப்ச்சர் பண்ணிடும்.
அதே மாதிரி டச் பண்ணிண்டே இருந்தா; வீடியோ பண்ணலாம்!
இது ஆன்லைன்ல கனக்ட் ஆகாததால சிக்னல் பிரச்சனையெல்லாம் இல்ல!" என அவன் விளக்கிக்கொண்டே போக, விழி விரித்து வியப்புடன் அவனைப் பார்த்தாள் ராதா!
"இதுக்கே இப்படி பார்தால்" எனக் கிண்டலாகச் சொன்னவன், "இது மெட்டல் டிடெக்டர்ல மாட்டும்! அதனால" என்று சொல்லிவிட்டு, பெண்கள் 'ஹாண்ட் பாக்'கில் மாட்டும், அழகிய 'டெட்டி பியர் கீ செயின்' அவளிடம் கொடுத்தான் கண்ணன்.
"ஐயோ செம்ம க்யூட்டா இருக்கு" என அதற்கும் அவள் மகிழ, "இது உனக்கில்லை! மீராவுக்கு" என அவன் சொல்லவும், ரௌத்திரமானாள் ராதா!
"ஏய்! அவசர குடுக்க!" என அவளை முறைத்தவன், "இது ஒரு டிவைஸ்!
இதை எடுத்துண்டு மெட்டல் டிடெக்டர் போல் குள்ள போனா; அது ஒரு தர்டி செகண்ட்ஸ்க்கு ஒர்க் ஆகாது!
அதனால இதை மீரா கிட்ட கொடு!
அவளை முன்னாடி போக சொல்லிட்டு; நீ பின்னாடி போ!
பட் தர்டி செகண்ட்ஸ் குள்ள" என விளக்கமாகச் சொன்னான் கண்ணன்!
அசந்துதான் போனாள் ராதா!
அவனுடைய அலுவலகத்திற்குள் செல்லவேண்டும் என்றால் இந்த 'மெட்டல் டிடெக்டர் போல்'கள் சிலவற்றைக் கடந்துதான் போக வேண்டும்.
அவனது முன்னெச்சரிக்கை அவளை அதிசயிக்க வைத்தது.
மேலும் அந்த இரண்டு கருவிகளுக்குமான 'சார்ஜர்'களையும் அவளிடம் கொடுத்து, ஆயிரம் முறை அவளை எச்சரித்து அவளை அங்கிருந்து அனுப்பினான் கண்ணன்.
வீட்டிற்குள் நுழைந்தவள் கைப்பேசி மூலம் தன் முகப்புத்தகத்திற்குள் நுழைந்து வார்த்தைகளைக் கோர்க்கத் தொடங்கினாள் ராதா.
"இரக்கமற்ற பகலும்...
இன்னும் கொஞ்சம் நீளவில்லையே என ஏங்க வைக்கும் மாலையும்...
குளிர் பரப்பும் சாதனம் கூட குளிர்விக்க இயலாத இந்த இரவுமாக...
கொஞ்சம் கொடும் காலம்தான் இந்த கோடைக் காலம்.
இது என் வாழ்வின் கோடை நேரம்!"
அவள் இங்கே அதைப் பதிவேற்றம் செய்ய, அங்கே ராதா பத்திரம் எனப் புரிந்துகொண்டான் கண்ணன்.
அவளுடைய மனதையும்தான்!
Comments