Kadhal Va..Radha?! 20
- Krishnapriya Narayan
- Mar 6, 2020
- 5 min read
காதல்-20
ராதா திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டாள் என்பதை அரவிந்தன் மூலம் அறிந்தவுடன், அதை நம்பவே இயலவில்லை அபிமன்யுவால்.
மருத்துவ உலகில் இந்த உயரத்தை அடையச் செய்த செயல்களினால் கண்ணுக்குத் தெரியாத பல எதிரிகளை உருவாக்கி வைத்திருந்தான் அவன்.
அதனால் அவன் மேல் காழ்ப்புணர்ச்சியில் எத்தனையோபேர் இருக்கக்கூடும்.
எனவே எப்பொழுதுமே ஒரு எச்சரிக்கை உணர்வோடுதான் இருப்பான் அவன்.
அதே உணர்வு தலைதூக்க ராதாவின் விஷயத்தில் அவன் மனதில் ஓரத்தில் சிறு சந்தேகம் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருந்தது.
அவனுடைய மிரட்டலுக்காகப் பயந்து அவள் இந்த திருமண ஏற்பாட்டிற்குச் சம்மதித்திருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை அவனது அறிவு.
அவன் அவளைத் தனிமையில் சந்தித்த அன்று அவள் முகத்தில் தெரிந்த தெளிவும் அவள் பேச்சில் தொனித்த உறுதியும்தான் காரணம்.
அடுத்த நாளே ராதாவின் கைப்பேசி அழைப்புகள் முதல் அவளுடைய ஒவ்வொரு சிறு அசைவையும் தன்னுடைய கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தான் அபிமன்யு.
ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் அவள் கண்ணனை நேரிலும் சரி தொலைப்பேசியிலும் சரி தொடர்புகொள்ளாமல் இருக்க, சற்று ஆறுதலாக இருந்தது அவனுக்கு.
அனுகிரஹா மருத்துவமனை தன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் முதல் வேலையாகக் கண்ணனை அதிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தான்.
கண்ணன் விஷயத்தில் அவனால் உடனே ஒரு முடிவை எடுக்க இயலவில்லை.
காரணம் சேஷாத்ரி.
மூத்த மகள் மற்றும் மாப்பிள்ளையை வைத்து அவரை அதிகம் மிரட்ட இயலாது.
நடப்பது நடக்கட்டும் என அவர் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது.
திருமணம் முடியட்டும் மொத்தமாக கவனித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையிலிருந்தான் அவன்.
அபிமன்யுவை பொருத்தமட்டும் அவனுடைய திட்டப்படி ஆனால் உண்மையில் கண்ணனின் திட்டப்படி அவனுடைய நிறுவனத்தில் ராதாவும் மீராவும் பயிற்சிக்காக இணைந்தனர்.
பொதுவாக அவர்கள் நிறுவனத்தில் கொடுக்கப்படும் 'இன்டென்ஷிப்' பயிற்சிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கே இருக்கும்.
இவர்கள் இரண்டுபேரும் ஆராய்ச்சி படிப்பில் இருக்கவே அவர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக அந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தான் அபிமன்யு.
அந்த பயிச்சி அவனை பொறுத்தவரைக்கும் ஒரு கண்துடைப்பு என்பது புரிந்தது அவளுக்கு.
அவன் எண்ணப்படி திருமணம் முடியும்வரை அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவன் இந்த பயிற்சியை பயன்படுத்திக்கொண்டான் என்பதை உணர்ந்தே இருந்தாள் ராதா.
அவர்கள் அந்த வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னமே அவர்கள் இருவருடைய கைப்பேசிகளையும் அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டியதாக இருந்து.
அவர்களுடைய கைப்பைகளும் சோதனைகளைக் கடந்தே உள்ளே அனுமதிக்கப்பட்டது.
இதில் அபிமன்யுவுக்கு ராதாவின்மேல் இருந்த அவநம்பிக்கை துல்லியமாக வெளிப்படக் கண்ணன் இதையெல்லாம் முன்னமே கணித்து வைத்திருப்பது வியப்பைக் கொடுத்தது ராதாவுக்கு.
முதல் மூன்று நாட்கள், முதன்முறை அபிமன்யு அவளை அழைத்துச் சென்ற அலுவலகத்திலேயே அவர்களுடைய பொதுவான செயல்பாடுகள் பற்றிய அறிமுக பயிற்சி இருந்தது.
அந்த மூன்று நாட்களும் அபிமன்யு அங்கேதான் இருந்தான்.
ஆனாலும் நேரடியாக அவன் அவர்களை அணுகவில்லை. அவனை அடிக்கடி சந்திக்கும் பிரச்சினையும் ராதாவுக்கு எழவில்லை.
அதன் பின் அவன் அமெரிக்கா கிளம்பிச் சென்றுவிட நிம்மதியாக உணர்ந்தாள் ராதா.
அவர்கள் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளை வெளிக்கொணரும் படியான எந்த ஒரு ஆதாரமும் அந்த அலுவலகத்தில் கிடைக்காமல் போக அப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தாள் ராதா.
அதன் பின்பான பயிற்சிகள் அவர்களுடைய தொழிற்சாலையுடன் இணைந்த அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி கூடங்களிலிருந்தது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரிவில் பயிற்சி என்று சென்றுகொண்டிருக்க, ராதாவின் மூன்று மாத பயிற்சியில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் முடிந்துவிட்டிருந்தது.
நாட்கள் விரயமானதே தவிர உருப்படியாக ஒரு தடயமும் சிக்கவில்லை.
கொஞ்சம் அதிகமாகவே ஆபத்தை முன்னிறுத்தி, அவளுக்குச் சந்தேகம் ஏற்படுத்தும் மருத்துகளின் மாதிரிகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் என எடுத்து அவளுடைய அப்பா மூலமாகக் கண்ணனிடம் சேர்த்தாள் அவள்.
ஆனால் அவையெல்லாம் போதுமானதாக இருக்கவில்லை.
எல்லாமே புதிதாகத் தயாராகும் மருந்துகள் சம்பந்தப்பட்டவையாகவே இருந்ததே ஒழியக் காலாவதியான மருந்துகளை எங்கே எப்படி மாற்றுகிறார்கள் என்பதே புரியவில்லை அவளுக்கு.
கண்ணனின் தங்கை மைத்ரேயியின் பிரசவத்திற்கு வேறு நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்தது.
மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லாததால் கிராமத்தில் பிரசவத்தை வைத்துக்கொள்வது சரிவராது என்ற காரணத்தினால் ஆனந்தி கண்ணனுடன் வந்து தங்கிக்கொண்டு மகளையும் அங்கேயே அழைத்துவந்துவிட்டார்.
தங்கைகள் இருவரும் தமையனையும் மன்னியையும் ஆசையுடன் திருமணத்திற்கு பின்னான விருந்துக்கு அழைக்க, அவளது படிப்பு, 'இன்டென்ஷிப்’ எனக் காரணம் சொல்லி அவற்றை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தான் கண்ணன்.
ஏற்கனவே அந்த குறையுடன் இருந்தவர்களுக்கு ராதா கண்ணனுடன் இல்லை, அதுவும் குறைந்தபட்சம் அவள் அவனுடைய அகத்துக்கு வந்துபோவதுகூட இல்லை என்பது தெரியவரவும் கொதித்துத்தான் போனார்கள் இருவரும்.
ஆனந்திதான் அவர்களைச் சமாதானம் செய்துவைத்திருந்தார்.
நிலைமை இப்படி இருக்க, குழந்தை பிறந்து புண்யாகவசனம் என்று வந்தால் ராதா முன்னே நின்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை வேறு.
அதற்குள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வராதா என்று இருந்தது கண்ணனுக்கு.
***
ஒரு நாள் மாலை அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் விடுதிக்கு அரவிந்தனை அழைத்திருந்தான் அபிமன்யு.
அவனுடைய விடுப்புகள் முடிந்திருக்கவே அனுவையும் குழந்தையையும் சென்னையிலேயே விட்டுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்ப வந்திருந்தான் அரவிந்தன்.
எப்பொழுதுமே அவன் சொல்வதற்கெல்லாம் பூம் பூம் மாடாகத் தலையை ஆட்டும் அனுபமா கொஞ்ச நாட்களாக மாறிப்போயிருந்தாள்.
அவனிடம் அவளுக்கிருந்த மரியாதையை மட்டுமல்ல அன்பும் அக்கறையும் கூட குறைந்திருப்பதுபோல் உணர்ந்தான் அவன்.
அபிமன்யுவை நம்பி தான் அவன் வலையில் விழுந்ததோடு இல்லாமல் அனுவையும் அதில் மாட்டி வைத்து இப்பொழுது அவள் மொத்த குடும்பத்தையும் சிக்க வைத்ததில் குற்ற உணர்ச்சி மேலோங்கி இருந்தது அவனுக்கு.
அபிமன்யு அவனை வரச்சொல்லி அழைக்கவும் அது எரிச்சலைக் கொடுக்க, ஆனாலும் வேறு வழி இல்லாமல் அவனைச் சந்திக்க வந்தான் அவன்.
அவனுடைய விருப்பமின்மை அவன் முகத்தில் அப்பட்டமாய் எழுதி ஒட்டி இருக்க, அவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்தவன், "என்ன மிஸ்டர் சகல; உங்க முகம் இப்படி இஞ்சி தின்ன டேஷ் மாதிரி இருக்கு" நக்கல் வழிந்தோட அபிமன்யு கேட்க, "குரங்குன்னு சொல்லிட்டு போயேன்.
உன்னை நம்பினதுக்கு எனக்கு இது தேவைதான்" என அவன் காய, "சில் ப்ரோ! இதுக்கே இப்படி டென்ஷன் ஆனா" என்று சொல்லிவிட்டு, எய்டீன்த் அண்ட் டுவென்டிபோர்த் ஆஃப் திஸ் மந்த்" என்றான் அபிமன்யு.
அவனைக் கேள்வியாகப் பார்த்தவன், "இப்படி மொட்டையா சொன்னா?" என்று கேட்க, "ப்ச்... நிச்சயதார்த்தம் செய்ய டேட்ஸ்!
இதுல உன் மாமனாருக்கும் மச்சினிக்கும் கம்பர்டபிளா ஒரு நாளை முடிவு பண்ணிச் சொல்ல சொல்லு!
அன்னைக்கு வெச்சுக்கலாம்" என்று அவன் சொல்ல, "இதுல ஏன் என்னை இழுக்கிற.
அதான் அவ கூட காண்டாக்ட்ல இருக்க இல்ல?
உன் கம்பனிலதான அவ இப்ப இன்டென்ஷிப்ல இருக்கா?
அவ கிட்டேயே பேச வேண்டியதுதானே?" என அரவிந்தன் படபடக்க, "இதை நீ சொன்னாதான் அவங்களுக்கு ஒரு பயம் வரும்.
அதான்" என வஞ்சமாக உரைத்தவன், "நீயே பேசிட்டு ஒரு முடிவை சொல்லு!" என்று முடித்தான் அபிமன்யு.
"உண்மையை சொல்லு அபி; ஹாஸ்ப்பிட்டல்தான உன்னோட முக்கியமான எய்ம்!
இதுல ராதாவை என் இழுத்து விட்டிருக்க!
சும்மா ஒரு பொண்ணு கிட்ட இப்படி மயங்கிப்போற ஆள் நீ கிடையாது"
அரவிந்தன் இறங்கிய குரலில் கேட்க, "பரவாயில்ல; நீ கூட கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசிக்கற" என்றான் அபிமன்யு அவமானத்தில் அவனது முகம் கன்றுவதை ரசித்துக்கொண்டே.
அவனுடைய மருத்துவமனைகளிலும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் அவன் என்னென்ன முறைகேடுகள் செய்கிறானோ அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது ராதா முன்பு எழுதியிருந்த கட்டுரை.
அந்த போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகள் ஒன்று கூட இப்படி இல்லை.
இவளைப் போன்ற ஒருத்தியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் என்ற எண்ணத்தில்தான் அவளை மணக்கும் முடிவுக்கு வந்தான் அபிமன்யு அவளுடைய புகைப்படங்களைப் பார்ப்பதற்கும் முன்பாகவே.
அவளுடைய எளிமையான அழகு அந்த எண்ணத்தை வலுப்படுத்தியது அவ்வளவே.
இதையெல்லாம் விளக்கும் மனநிலையில் இல்லை அபிமன்யு.
"ப்ச்... முதல்ல நிச்சயதார்தத்துக்கு அவங்க கிட்ட ஏற்பாடு பண்ண சொல்லு!" என்று அவன் இத்துடன் முடிந்தது என்ற ஒரு பார்வை பார்க்க, அதை உணர்ந்து அங்கிருந்து கிளம்பினான் அரவிந்தன்.
***
அன்றைய பணி முடிந்து, பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து தங்கள் கைப்பேசிகளைப் பெற்றுக்கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினார்கள் ராதா மற்றும் மீரா இருவரும்.
ராதா காரை ஓட்டி வர அவளுக்கு அருகில் அமர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள் மீரா.
மீரா அவளுடன் இருக்கிறாளே ஒழிய எந்த ஒரு விஷயமும் அவளுக்குத் தெரியாது.
இயல்பாக அவள் ராதாவிடம் பேசிக்கொண்ட வர, 'ம்' கொட்டிக்கொண்டே வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தாள் ராதா.
'ஏ அண்ட் பீ பார்மா' வின் தொழிற்சாலை அமைந்திருக்கும் வீதியின் திருப்பத்தை அவளது வாகனம் கடந்துகொண்டிருக்க, அவளது கைப்பேசி ஒலித்தது.
அதில் ஒளிர்ந்த எண் அரவிந்துடையதாக இருக்க யோசனையில் புருவத்தைச் சுருக்கியவாறு வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, "ம்... சொல்லுங்கோ" என்றவாறு அந்த அழைப்பை ஏற்றாள் அவள்.
அவர்கள் குடும்பத்தில் மற்றவர் எப்படியோ ராதா அவனிடம் நன்றாகவே நடந்துகொள்வாள்.
அவளுடைய அக்காவின் மேல் இருப்பதுபோல் ஒரு பிரியமும் கூடவே மரியாதையும் அவன்பேரில் உண்டு அவளுக்கு.
இன்று அவளது குரலில் தெரிந்த ஒதுக்கம் அவன் மனதிற்கு வருத்தத்தைக் கொடுக்க, தேதிகளைக் குறிப்பிட்டு அபிமன்யு சொன்ன தகவலை அவளிடம் சொல்லிவிட்டு அந்த அழைப்பைத் துண்டித்தான் அரவிந்த்.
இருக்கும் குழப்பங்களில் இது வேரா என்றிருந்தது அவளுக்கு.
அவன் பார்த்து வைத்திருந்த தேதிகளுக்கு இன்னும் பத்து முதல் பதினைந்து நாட்களே இருந்தன.
அவள் குழப்பத்துடனே கைப்பேசியை அணைக்க அது மறுபடியும் அழைத்தது.
இந்த முறை கீதா அழைத்திருந்தார்.
அதை ஏற்று, "சொல்லும்மா" என்றாள் ராதா.
"ராதா! மைத்துக்கு இடுப்பு வலி எடுத்துடுத்தாண்டி! ஆனந்தி மாமி போன் பண்ணா!
இந்த நேரத்துல நீ கூட இல்லாம இருந்தா நன்னா இருக்காது!
ஆத்துக்கு வா! நாம போய் பார்த்துட்டு வந்துடலாம்" என்று அவர் சொல்ல, "சரிம்மா!" என்று அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
அனைத்தும் சேர்ந்து அவளுக்கு அதீத படபடப்பைக் கொடுக்க, மேற்கொண்டு வாகனத்தைச் செலுத்த முடியுமா என்றே புரியவில்லை அவளுக்கு.
அப்படியே அசைவற்று உட்கார்ந்திருந்தாள் ராதா.
அப்பொழுது அவர்களைக் கடந்து போன 'ட்ரக்' ஒன்று அங்கே இருக்கும் ஒரு மிகப்பெரிய கிடங்குக்குள் நுழைய அவளது பார்வை கூர்மை அடைந்தது.
அபிமன்யுவின் மருந்து தயாரிப்பு தொழிற்சாலைக்குள் அந்த 'ட்ரக்'கை அடிக்கடி பார்த்திருக்கிறாள் அவள்.
அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மிகப்பெரிய வளாகத்திற்குள் சற்று உள்ளடங்கினாற்போல் அமைந்திருக்கும் கிடங்கு அது.
தினமும் அதைக் கடந்துதான் அவள் அலுவலகத்திற்கு போய் வரவேண்டும்.
அந்த 'ட்ரக்' அந்த கொடௌனுக்குள் நுழையவும், அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழ, "உன்னோட மொபைல குடு" என்றாள் மீராவிடம்.
குழப்பத்துடன் அவள் முகத்தை ஏறிட்டவாறே அதைத் தன் தோழியிடம் நீட்டினாள் மீரா.
அதில் கண்ணனுடைய கைப்பேசி எண்ணைப் பதிவு செய்தவள், "இன்னும் கொஞ்சம் தள்ளி ஒரு ரெசிடென்ஷியல் ஏரியா இருக்கில்ல; காரை அங்க போய் பார்க் பண்ணிட்டு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு!
கொஞ்சநேரத்துல நான் அங்க வந்துடறேன்!
ஒரு வேளை நான் வர லேட் ஆச்சுன்னா; இந்த நம்பருக்குக் கால் பண்ணி! நான் இங்க இருக்கற தகவலைக் கண்ணன் கிட்ட சொல்லிடு!" என அவசரமாகச் சொல்லிவிட்டு அந்த கிடங்கை நோக்கிப் போனவள், ஒரு நொடி நின்று வேகமாகத் திரும்ப வந்து தன் கைப்பையிலிருந்த பேனா வடிவிலான புகைப்படக் கருவியை எடுத்துக்கொண்டு, மீராவின் கைப்பையில் கோர்க்கப்பட்டிருந்த கருவியையும் எடுத்துக்கொண்டு அந்த கிடங்கை நோக்கிப் போனாள் ராதா.
"ராதா! அப்படி அவசரமா எங்க போயிட்டு இருக்க?" என மீரா கலவரத்துடன் கேட்க, அழுத்தமாக அவளைப் பார்த்தவள், "கண்ணன் என் கிட்ட ஒப்படைச்சிருக்கற முக்கியமான பொறுப்பை நிறைவேத்த போறேன் மீரா.
உனக்கு சொன்னா புரியாது.
ப்ளீஸ் நான் சொன்னதை மட்டும் செய்" என்று அவள் உறுதியான குரலில் சொல்ல, அவள் சொல்வதைச் செய்வதைத் தவிர வேறு வழி தெரியாமல் ஓட்டுநர் இருக்கைக்கு இடம் மாறிய மீரா அந்த வாகனத்தைக் கிளப்பினாள்.
அந்த கிடங்குக்குள் எப்படி நுழைவது என்ற யோசனையுடன் அதை நோக்கிப் போன ராதா, அந்த கிடங்கைப் பற்றிய தகவல் எதாவது இருக்கிறதா என ஆராய, 'வெளி ஆட்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை' என்ற வாசகங்களைத் தாங்கிய பலகை தவிர வேறு எந்த பெயர்ப் பலகையும் இல்லை அங்கே.
அங்கே இருந்த மிகப்பெரிய இரும்பு ‘கேட்’டில் கூட காவலாளிகள் யாரும் இல்லை.
அந்த 'ட்ரக்'கிலிருந்து இறங்கிய ஒரு நபர் அந்த 'கேட்'டை திறந்து பின் அந்த வாகனம் உள்ளே சென்றதும் மூடிவிட்டு அதனைத் தொடர்ந்து சென்றது அவள் கவனத்தில் வந்தது.
அவள் அந்த 'கேட்'டை பிடித்துக்கொண்டு உறைந்து நிற்க, அவளைப் பார்த்துக்கொண்டே வாகனத்தை ஓட்டிச்சென்றாள் மீரா.
ராதாவின் நடவடிக்கை அவளுக்குப் பீதியை ஏற்படுத்த அவள் சொன்னதுபோல சிறிதுநேரம் காத்திருக்கும் பெருமையெல்லாம் அவளுக்கு இல்லாமல் போனது.
ராதா சொன்ன குடியிருப்பு பகுதியை அடைந்து ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்தியவன் உடனேயே கண்ணனைக் கைப்பேசியில் அழைத்தாள்.
"சொல்லுங்க மீரா! ஏதாவது பிரச்சனையா?!"
முதல் 'ரிங்'கிலேயே அழைப்பை ஏற்றவன் தெளிவற்ற குரலில் இப்படிக் கேட்கவும் அவளுடைய அச்சம் அதிகரிக்க ராதாவைப் பற்றி அவனிடம் சொல்லிவிட்டாள் அவள்.
"ஓகே; மீரா! நான் உடனே அங்க போறேன்! நீங்க ஒரு டென் மினிட்ஸ் பார்த்துட்டு வீட்டுக்கு போயிடுங்க!" என்றவன், "தனியா போவீங்க இல்ல! இல்ல ஹெல்ப் வேணுமா?" என அக்கறையுடன் கேட்க, "போயிடுவேன் டாக்டர்! பிரச்சனை இல்ல; நீங்க ராதாவை பாருங்க" என மீரா சொல்லவும் நொடியும் தாமதிக்காமல் ராதாவைத் தேடி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான் கண்ணன்.
அப்படியும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்க, வேகமாக வேகமாக தன் இருசக்கர வாகனத்தை இயக்கி அவன் அந்த கிடங்கை நோக்கி வரவும் அதிர்ந்தான் கண்ணன்.
அந்த கிடங்கின் ஒரு பகுதி தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது.
துடிதுடித்துப்போனான் கண்ணன்.
Comments