top of page
Writer's pictureMonisha Selvaraj

Kanavar Thozha - 1

1

மார்கழி மாத பனிச்சாரல் பாதைகளே தெரியாத வண்ணம் வெள்ளை புகை மூட்டத்தால் மறைத்திருந்தன. இன்னும் இருள் முழுவதுமாக வடிந்திருக்கவில்லை. சூரியன் மெதுவாக வெளியே எட்டி பார்த்து கொண்டிருந்த சமயம்.


வீட்டு வாயிலில் தண்ணீர் தெளித்து அந்த சிமெண்ட் தரையை துப்புரவாக பெருக்கிவிட்டு கோலக் கிண்ணத்துடன் குனிந்த மகேஸ்வரி புள்ளிகள் வைக்க ஆரம்பித்ததுதான் தெரியும்.


அவள் எப்போது அதை வளைத்து நெளிந்து வரைந்து முடித்து அவற்றிற்கு ஏற்றார் போல் வண்ணங்களை தீட்டினால் என்பதை உணர்வதற்கு முன்பாக ஓர் அழகான கோலம் அவ்வாயிலை நிறைத்திருந்தது. அவ்விடத்தை கடந்து ஒவ்வொருவரின் பார்வையும் ஒரு நொடி அக்கோலத்தின் மீது விழுந்து விட்டுதான் கடந்தன.


நாலாபுறமும் மயில்கள் தோகை விரித்து ஆடுவது போல அத்தனை தத்ரூபமாக இருந்த அந்த கோலத்தை பார்த்த பக்கத்து வீட்டு யசோதா பாட்டி, “எப்படிறி நீ மட்டும் இவ்வளவு அழகா கோலம் போடுற” என்று கன்னத்தில் கை வைத்து அவள் கை வண்ணத்தை வியக்க,


“நல்லா இருக்குல ஆயா” என்று தன் நைட்டியை சரி செய்து கொண்டே நிமிர்ந்து புன்னகை செய்தாள் இளம் பெண் மகேஸ்வரி. அவளுக்கு வயது இருபத்து மூன்று தொடங்கி இருந்த நிலையில் செழித்த அழகான முகமும் சிறு இடையும் அளவான உயரமும் கொண்டிருந்தாள்.


யசோ பாட்டி மேலும், “நல்லா இருக்காவா... இந்த வாரத்துல போட்ட கோலத்துல இதுதான் கண்ணு டாப்பு” என்று இன்னும் உயர்வாக பேச, மகேஸ்வரிக்கு பெருமை தாங்கவில்லை.


அந்தக் காலை கதிரொளியின் பிரகாசம் அவள் கருத்த முகத்தில் பட்டு மின்னியது. நேரான தடித்த புருவங்கள் கூரிய விழிகள் நீட்டமான நாசி படர்ந்த சிவந்த இதழ்கள் என அவள் முகவடிவமே பார்த்து பார்த்து செதுக்கப்பட்டது போலிருந்தன. அதிலும் அவளின் வெண் பற்கள் பளிச்சிடும் போது அவள் பேரழகியாய் தெரிவாள். தற்சமயம் தான் வரைந்த கோலத்தை பார்த்தவளுக்கு அப்படியொரு பெருமிதமும் பேரழகும் பொங்கியது.


அந்தத் தெருவில் அவளுக்கு போட்டியாக யாரும் கோலம் போட முடியாது. அப்படியே யாராவது அவள் கோலத்தை விட அழகாக போட்டுவிட்டது தெரிந்தால் அடுத்த நாள் அதை விடவும் சிறப்பாக ஒரு கோலம் அவள் வாசலில் நிறைத்திருக்கும். மார்கழி மாதங்கள் மட்டும் இல்லை. மற்ற மாதங்களிலும் கூட அவளது கோலம் தனி அழகுடன் அந்தத் தெருவில் மின்னும்.


மகேஸ்வரி மூலைக்கு ஒன்றாக கிடந்த வண்ண கோலப்பொடிகிண்ணங்களை எல்லாம் தட்டில் அடுக்கி வைத்து கொண்டிருந்தாள்.


அப்போது, “டேய் பச்சை கலர்ல காக்கா பார்த்திருக்கியா... அங்க பாரு” என்ற குரல் கேட்டு மகேஸு கடுப்புடன் திரும்பவும் அவளின் எதிர் வீட்டு எதிரி நின்றிருந்தாள். பூரணி.


தன் பத்து வயது சித்தப்பா மகன் அருணை அருகில் அழைத்து நிற்க வைத்து அவள் மகேஸ்வரியின் கோலத்தை கலாய்த்து கொண்டிருக்க,


“குருட்டு முண்டங்களா இதை பார்த்தா காக்கா மாதிரியா இருக்கு” என்று இவள் கடுகடுத்தாள்.


“ஆமா க்கா எனக்கும் காகா மாதிரி இல்ல” என்று அருண் பூரணி காதோடு சொல்ல அவனை திரும்பி முறைத்தவள் அவன் சொன்னதை அப்படியே மாற்றி போட்டு,


“ஆமான்டா இது வெறும் காகா இல்ல... கரன்ட்ல அடிப்பட்ட காகா” என்று கோலத்தோடு சேர்த்து மகேஸ்வரியையும் வாரி வைத்தாள்.


“அடிங்க பிச்சிருவன் இரண்டு பேரையும்” என்று மகேஸு ஓரமாக நிற்க வைத்த துடைப்பத்தை கையிலெடுத்து கொள்ள,


“அக்கா ஓடிடலாம்க்கா” அருண் மிரட்சியாக.


“ஏய் அவ சும்மா உதார் வுடுறாடா” என்ற பூரணி கொஞ்சமும் அசரவில்லை. துடைப்பத்தை எடுத்த மகேஸும் பதில் முறைப்பை செய்து விட்டு தன் வீட்டு வாயிலை தாண்டிய நொடி,


“கா கா... கா க்கா” என்று கத்தி வைத்தாள். அந்த நொடியே மகேஸ்வரிக்கு சுர்ரென்று ஏறி விட அவள் மீண்டும் துடைப்பத்தை தூக்கி கொண்டு திரும்புவதற்குள் அருணும் பூரணியும் அடித்து பிடித்து உள்ளே ஓடிவிட்டார்கள்.


‘ஒரு நாள் என் கைல வசமா சிக்குவீங்க... அப்ப வைச்சுக்கிறேன்’ என்று கையிலிருந்த துடைப்பத்தை ஓரமாக தூக்கி கடாசி விட்டு கோலப் பொடியுடன் உள்ளே வந்தவளுக்கு தகித்து கொண்டிருந்த கோபம் அடங்கவே இல்லை.


ஒரு நாள் இரண்டு நாள் கோபமா அவர்களுடையது. பல வருட கோபம். பிறந்ததிலிருந்தே இரண்டும் சண்டை கோழிகள்தான்.


‘நீ முதலா நான் முதலா’ என்று வயிற்றுக்குள் இருக்கும் போதே போட்டி போட்டு கொண்டே ஒரே நாளில் வயிற்றிலிருந்து வெளியே குதித்தவர்கள்.


பூரணியின் குடும்பமோ சித்தப்பா பெரியப்பா மாமா என்று பெரிய குடும்பம். அதேநேரம் வீடு வாசல் கார் என்று மிகவும் வசதியான குடும்பமும் கூட.


ஆனால் மகேஸ்வரியின் குடும்பத்தின் நிலையோ அப்படியே அவர்களுக்கு நேர் எதிர். அவள் வீடு மிக சிறிய ஓட்டு வீடு மற்றும் வீட்டில் அவள் அம்மா அண்ணன் மட்டும்தான். அதுவும் வீடும் அவர்கள் தாத்தா காலத்தில் கட்டிய வீடு.


சமையலறையுடன் இணைந்தார் போல சிறிய முகப்பறையும் தனியாக உள்ளே ஒரு படுக்கையறையும் இருந்தது. வீட்டிற்கு தேவையான சில பல உபகணரங்கள் தவிர பெரிதாக அந்த வீட்டில் சொல்லி கொள்ளுமளவுக்கு எதுவும் இல்லை.


மகேஸின் அம்மா லதா ஒரு சிறிய டெயிலர் கடையும் உதவிக்கு இருவரையும் கடையில் வேலைக்கு வைத்திருந்தார். அதுதான் இன்று வரையில் பசி பட்டினி இல்லாமல் அவர்கள் ஜீவனத்தை ஓட்ட உதவி கொண்டிருக்கிறது. பிள்ளைகளை படிக்க வைக்கவும் உதவியது. இன்று அருளும் மகேஸும் படிப்பை முடித்து ஆளுக்கு பத்து பதினைந்தாயிரம் வரை சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் சம்பாத்தியத்தை எல்லாம் லதா மகள் கல்யாணத்திற்காக அப்படியே சேமிப்பில் போட்டு வைத்திருக்கிறார். ஆதலால் அன்றும் இன்றும் அவர்கள் நிலைமை ஒன்றுதான்.


பூரணிக்கும் மகேஸுக்கும் இடையில் உள்ள இந்த ஸ்டேட்டஸ் இடைவெளிதான் இருவரையும் ஒன்றாக விளையாடவும் பேசவும் கூட விடாமல் தள்ளி நிறுத்தியது. வளர வளர அந்த இடைவெளி ஒருவருக்கு மற்றவர் மீதான போட்டியும் பொறாமையுமாக மாறிவிட்டது.


பூரணி குடும்ப பின்னணியால் அவள் நடை உடை பேச்சுக்கள் அனைத்திலும் தெரியும் பணக்காரத்தனம் மகேஸ்வரியை பொறாமை கொள்ள செய்தது உண்டு. ஒரே வயதில் இருக்கும் இரு பெண்களின் மனநிலை அது.


ஆனால் உடை நடையில் எல்லாம் மகேஸ்வரியை தோற்று போக செய்த பூரணியால் படிப்பில் முடியவில்லை. இருவரும் ஒரே காலக்கட்டத்தில்தான் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.


மகேஸ்வரி எல்லாவற்றிலும் எழுபது சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். ஆனால் பூரணியோ இரண்டு பாடத்தில் தோற்றுவிட அங்குதான் மகேஸுக்கும் பூரணிக்கும் வெறும் புகையாக இருந்த பகை நெருப்பாக பற்றி கொண்டது.


“சீவி சிங்காரிச்சு சிலுப்பிட்டு போவ... கடைசில இரண்டு சப்ஜெக்ட் பெயிலா நீ” என்று முகத்திற்கு நேராகவே நக்கலடித்து சிரித்தாள் மகேஸ்வரி. அன்று பூரணியால் ஒன்றுமே பேச முடியவில்லை. ஆனால் உள்ளுர தாங்க முடியாமல் புழுங்கினாள்.


அந்த கோபத்துடன் அடுத்து வந்த மாதத்திலேயே தேர்வு எழுதி பாஸாகிவிட்ட கையோடு தன் தந்தையின் காசை கரைத்து பொறியியல் படிப்பிலும் சேர்ந்துவிட்டாள்.


ஆனால் மகேஸின் வசதிக்கு அரசு கல்லூரியில் பி காம்தான் சேர முடிந்தது. இப்போது பூரணி அவளை திருப்பி கொண்டாள். நீ என்னை காலை வாருகிறாயா நான் பதிலுக்கு உன்னை வாருகிறேன் என்று மானாவாரியாக வாரி கொள்ள ஆரம்பித்தவர்களுக்கு இதுவே தொடர் கதையாகி போனது. சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் சண்டை போட ஆரம்பித்தார்கள்.


அதில் ஒன்றுதான் இந்த மார்கழி மாத கோலம். மகேஸ் இடுப்பு ஒடிய கோலம் போட்டால் அப்போதுதான் வந்து தண்ணீர் தெளிக்கிறேன் பேர் வழி என்று பூரணி தங்கள் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பது போல மகேஸின் கோலத்தின் மீதும் தெளித்து கொஞ்சத்தை களைத்து வைப்பாள்.


இந்த பிரச்சனையில் இரண்டு நாள் முன்பு முடியை பிடித்து கொண்டு இருவரும் அடித்து கொள்ள போய்விட்டார்கள். பக்கத்து வீட்டு ஆயா பார்க்கவில்லை என்றால் அடிதடியாகி போயிருக்கும். ஆனால் அந்த ரவுடி ராக்கம்மாக்கள் இருவரையும் எப்படியோ இருபுறமாக பிடித்து இழுத்து தடுத்துவிட்டார்கள். ஆனால் இரண்டுமே அடங்கும் ரகம் இல்லை.


இன்றும் இதே காண்டுடன் வீட்டிற்குள் சென்ற மகேஸ்வரி, “ம்மா அந்த பூரான் நான் போட்ட மயில் கோலத்தை பார்த்து கரன்ட்ல அடிச்ச காகானு கிண்டல் பண்றா” என,


“ஏன் டி... உங்க இரண்டு பேருக்கும் வேற புழைப்பே இல்லயா” என்று சலித்து கொண்ட லதா மேலும்,


“சின்னதா ஒரு கம்பி கோலம் போடுறதை விட்டுட்டு உன்னை யாரு இப்போ மயிலு மானெல்லாம் வரைய சொன்னது... வீட்டுல அவ்வளவு வேலை கிடக்கு... அதை எல்லாம் வுட்டுட்டு கோலம் போடுறன்னு நேரத்தை வீணடிச்சிட்டு” என்று இவளிடமே பதிலுக்கு ஏறியும் வைத்தார்.


“ம்மா கோலம் போடுறதும் ஒரு வேலைதான்மா”


“ஆமான்டி அதுவும் ஒரு வேலைதான்... ஆனா அது மட்டுமே வேலை இல்லடி... இங்க வீட்டுல ஆயிரெத்து எட்டு வேலை இருக்கு... தச்ச வைச்ச பிளவுஸ்கு எல்லாம் கொக்கி போட சொன்னேனே... போட்டியாடி நீ” என்றதும் மகேஸ்வரி முகம் சுண்டிவிட,


“அதெல்லாம் நான் சாயந்திரம் வந்து போட்டு தர்றேன்” என, வகையாக அவளை முறைத்த வைத்த லதா தேநீரை போட்டு கொடுத்து, “போ போய் குடிச்சிட்டு வேலைக்கு கிளம்பு” என்றாள்.


அதனை அமைதியாக வாங்கி கொண்டு வந்து முகப்பறையில் அமர்ந்து குடித்து கொண்டிருக்க அங்கே போர்வைக்குள் புரண்டு கொண்டிருந்த அவள் அண்ணன் அருள்நம்பி வாயை மூடி சிரித்து கொண்டிருந்தான்.


“முழிச்சுட்டுதான் படுத்திருக்கியா எருமை நீ” என்று கடுப்பான மகேஸ்வரி,


“ஆமா ஆமா... உன் காகா கதை எல்லாம் கேட்டுட்டுதான் படுத்திருக்கேன்” என்று சொல்லி அவன் படுத்த வாக்கிலேயே அப்படியே திரும்பி அவளை பார்த்து கிண்டல் செய்து சிரிக்க,


“நான் எவ்வளவு அழகா மயில் கோலம் போட்டேன் தெரியுமா?” என்றவள் முதலில் இருந்து அவனிடமும் குற்றப்பத்திரிக்கை வாசித்தாள்.


அவன் உதட்டை சுழித்து, “ஆமா கோலம் போடுறாளாம் கோலம்... இவ போடுற கோலத்துலதான் குபேர லக்ஷ்மி கூரையை பிச்சிக்கிட்டு வந்து நம்ம வீட்டுக்குள்ள குதிக்க போறாளாக்கும்... அம்மா சொன்ன மாதிரி ஏதாவது சின்ன கோலத்தை போட்டுட்டு போவியா... அதை வுட்டுட்டு காக்கா குருவி எல்லாம் உன்னை யாரு வரைய சொன்னது” என்று அவன் பங்குக்கு வேறு அவளை வாரி வைக்க அவள் முகம் கன்றி சிவந்தது.


“அது ஒன்னும் காகா குருவி இல்ல... மயிலு”


“ரொம்ப முக்கியம்” என்றவன் எள்ளியபடி எழுந்து பாயை மடிக்க போக தேநீர் டம்ளரை ஓரமாக வைத்து விட்டு,


“உன்னை” என்று அப்படியே குப்புற அவனை கவிழ்த்து போட்டு அவன் மீது ஏறி பூரணி மீதிருந்த கோபத்தையும் சேர்த்து வைத்து அவன் முடியை பிடித்து ஆட்டோ என்று ஆட்டி வைக்கவும், “ஏய் விடுறி... வலிக்குது டி... ஆ அஅம்மா... அம்மா இங்க வாயேன்” என்றவன் வலியில் கத்தி கதறினான்.


“ஏய் விடுடி அவனை” என்று லதா வந்து அவர்கள் இருவரையும் பிரித்து விடுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. அருள் தலையை பிடித்து கொண்டு, “ம்மா பயங்கரமா வலிக்குது ம்மா... பேய் மாதிரி பிடிச்சு ஆட்டிட்டா” என்று பரிதாபமாக கூற,


“யாரு பேய்... நீதான்டா பேயி நாயி எல்லாம்” என்று சொல்லி கொண்டே அவள் தன் தேநீர் டம்ளரை எடுத்தபடி எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.


“அவளே அந்த எதிர்வீட்டு பொண்ணோட சண்டை போட்டுட்டு வந்து காண்டுல உட்காந்திருக்கா.. நீயும் ஏன் டா” லதா மகனிடம் சொல்ல,


“நான் ஒண்ணுமே சொல்லல ம்மா... அவதான்மா தேவை இல்லாம் கத்திட்டு போறா... பைத்தியம் லூசு” என்றவனுக்கு இன்னும் வலி தாங்க முடியவில்லை. தலையை தேய்த்து கொண்டான்.


தமையன் சொன்னதை கேட்டபடி மாற்று உடையுடன் அறையை விட்டு வெளியே வந்தவள் குளிக்க சென்று கொண்டே,


“நீதான் டா லூசு... நீதான் பைத்தியம்” என்று விட்டு செல்ல,


“போடி எருமை” என்றவன் பாயை மடித்து கொண்டே எழ இவர்களின் சண்டையை பார்த்த லதாவிற்குதான் ஐயோ என்றாகிவிட்டது.


“நான் பெத்தது இரண்டுமேவா இப்படி அரை லூசா இருக்கணும்... எல்லாம் என் தலையெழுத்து” என்றவர் தலையிலடித்து கொண்டே சமையலறைக்குள் சென்று பழையபடி தன் சமையல் பணிகளை தொடர்ந்தார்.

1 comment

1 comentario

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
Invitado
23 dic 2023

Nice

Me gusta
© KPN NOVELS COPY PROTECT
bottom of page