13
மருத்துவமனையிலிருந்து கிளம்பிய விஜய் எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. பூட்டை திறந்தவன் அப்படியே சுவற்றில் சாய்ந்து தரையில் சரிந்து விட்டான்.
சில மணி நேரங்களுக்கு முன்பாக இதே இடத்திலிருந்து மகியுடன் எத்தனை சந்தோஷமாக புறப்பட்டோம். எவ்வளவு கனவுகள் எவ்வளவு ஆசைகள்... எல்லாவற்றையும் ஒரே ஒரு விஷயம் இப்படி சுக்கு நூறாக போட்டு உடைத்துவிடுவானேன்.
பூரணி என்பவள் தன் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம். அவளை தான் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் ஏற்கனவே நடந்து முடிந்து போன விஷயங்களை யாரும் மாற்றி அமைக்க முடியாது.
துவண்ட நிலையில் அவளை அந்த மருத்துவமனை அறையில் பார்த்த போது அவன் உள்ளம் துடித்துதான் போனது.
‘ஐயோ தன்னால்தானா... தான் நேற்று பேசியதால்தானா? இவள் இப்படி செய்துவிட்டாள்’ என்று அவன் குற்றவுணர்வில் மூழ்கி போயிருக்க,
“வா விஜய்” என்று உடனிருந்த இளைஞன், “ரிப்போர்ட் கொடுத்துட்டு வரலாம்” என்று அழைக்க அவன் தயங்கிய பார்வையுடன்,
“இல்ல நான் வரல... நீங்க மட்டும் போங்களேன்” என்றான்.
“வரலனா என்ன அர்த்தம்... இதெல்லாம் நம்ம வேலை... இப்போ உங்க வேலை... இதை நீங்கதான் செய்யணும்” என்று திடமாக கூற விஜயிற்கு சங்கடமானது.
இப்படியொரு சிக்கலில் தான் சிக்கி கொள்ள வேண்டுமா என்றவன் அப்போதும், “இந்த ஒரு ரூமுகுள்ள மட்டும் வேண்டாம்... நான் வேற எங்கனாலும் வரேன்” என, அவனை ஆழ்ந்து பார்த்தவன்,
“என்ன பிரச்சனை உங்களுக்கு விஜய்?” என்று விசாரித்தான்.
“ப்ளீஸ் நான் வேண்டாம்னு சொல்றேன்னா புரிஞ்சுக்கோங்க” என்று விஜய் கிட்டத்தட்ட கெஞ்சினான். அதிருப்தியுடன் பார்த்தவன் பின் தான் மட்டும் உள்ளே சென்று ரிப்போர்ட்களை கொடுத்து பேசி விட்டு திரும்ப விஜய் அவர்கள் யார் கணங்களிலும் படாமல் ஓரமாக சென்று நின்றிருந்தான்.
‘பூரணி ஏன் இப்படி செய்தாள்?’ என்று அவன் மனம் வேதனையில் ஆழ்ந்த சமயம் தோளில் கை வைத்த அந்த இளைஞன், “கொடுத்துட்டன்... ஆமா அந்த ரூம்ல இருக்கவங்க கூட உங்களுக்கு பிரச்சனையா?” என்று விசாரிக்க,
“கொஞ்சம் அப்படிதான்” என்றான். அதன் பின் அவன் எதுவும் கேட்டு கொள்ளவில்லை.
விஜயும் அவர்கள் யார் கண்ணிலும் பட்டுவிடாமல் இருக்க முயன்றான். முக்கியமாக அந்த அறை பக்கம் போகாமல் தவிர்த்தான். ஆனால் அவர்கள் உறவினர் கூட்டம் மொத்தமும் மருத்துவமனை முழுக்க சுற்றி கொண்டிருந்தனர்.
எப்படியாவது இந்த நாளை கடத்தி விட வேண்டுமென்று அவனும் ஒதுங்கி ஒளிந்து கொண்டே சுற்றினான். அன்று மாலை போல டிஸ்சார்ஜாகி போக இருந்த சமயத்தில் அவன் தெரிந்தும் தெரியாமலும் அவனாகவே அவர்கள் கண்களில் சிக்கிவிட்டான்.
அவர்கள் லிப்ட் அருகே காத்திருக்கவும் அவன் உள்ளிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. அவ்வளவுதான்.
“நீ எதுக்குடா இங்க வந்த... எல்லாத்துக்கும் நீதான்டா காரணம்... உன்னாலதான்டா எங்க பொண்ணு இப்படி பண்ணிட்டா” என்று சீற்றமான பூரணியின் சித்தப்பா யுகேந்திரன் அவன் சட்டையை பிடித்து தள்ளி முகத்தில் குத்திவிட அவனுக்கு கோபம் சரமாரியாக ஏறியது.
ஆனால் தனக்கு இந்த வேலை முக்கியம் என்பதால் அவன் அந்த அடியை வாங்கி கொண்டு அமைதியாகவே இருந்தான். பதில் தாக்குதல் எதுவும் செய்யவில்லை.
அங்கிருந்து பணியாளர்கள் யுகேந்திரனை தடுத்து பிடித்த போது அவர்கள் எல்லோர் முன்னிலையிலும், “ஓடுகாலி பெத்தவதானே நீ” என்று வார்த்தையை விட்டுவிட, அவனுக்கு சுர்ரென்று ஏறிவிட்டது. சுற்றுபுறம் மறந்தது.
அவனும் திருப்பி அவர் முகத்தில் குத்திவிட்டான். அத்துடன் வேலையும் போய்விட்டது. எது நடக்கவே கூடாது என்று எண்ணினானோ அது செவ்வனே நடந்து முடிந்து விட அவன் அதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல் தன் வீட்டிற்கு திரும்பி விட்டான்.
அங்கிருந்த அம்மாவின் படத்தை வேதனையுடன் பார்த்தவன்,
“நான் என்னமா தப்பு செஞ்சேன்... ஏன் மா எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது” என்று புலம்பி அழும் போது அவனுடைய செல்பேசி ரீங்காரமிட்டது. மகிதான் அழைத்திருந்தாள்.
அவளை தவிர வேறு யார் தனக்கு அழைப்பார்கள் என்று எண்ணியவனுக்கு அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை. இந்த வேலையும் போய்விட்டது என்று எப்படி அவளிடம் சொல்வது.
ஒரு வேளை அவளை தோழியாக மட்டுமே பார்க்க முடிந்திருந்தால் சொல்லி இருப்பான். தன்னுடைய தோல்வி வெற்றி என ஏதையும் அவளிடம் பகிர்ந்து கொள்ள அவனுக்கு எப்போதும் தயக்கம் இருந்ததில்லை.
ஆனால் அவளை நேசிக்க ஆரம்பித்த பின் அவளை தன் உறவாக மாற்றி கொள்ள எண்ணிய பின் இப்படி அவள் முன்பாக தோற்று போய் அழுது கொண்டிருக்க அவன் விரும்பவில்லை. அவமானமாக இருந்தது.
அவள் இரண்டு முறை அழைத்து விட்டு அதன் பின் அழைப்பதை நிறுத்திவிட்டாள். நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டான். ஆனால் அடுத்த சில நிமிடங்களில், “விஜி” என்று அவள் வீட்டு வாசலில் வந்து நிற்க, அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
“என்னடா ஆச்சு ஏன் ஒரு மாதிரியா உட்கார்ந்திருக்க” என்று தூரத்தில் நடந்து வரும் போதே அவன் உணர்வை படித்து விட்டவள் போல கேட்டு கொண்டே வந்தாள்.
எப்படி அவளை எதிர்கொள்வது என்றவன் தவித்து போய் முகத்தை வேறு புறமாக திருப்பி கொண்டான். தான் அடி வாங்கிய காயத்தை அவள் பார்த்துவிட கூடாது என்று எண்ணி மறைத்தபடி,
“நான் வீட்டுல இருக்கணு உனக்கு யார் சொன்னது” என்று கேட்க,
“நான் காலேஜ்ல இருந்து என் வீட்டுக்கு போனேன்... அப்பத்தான் பூரணி விஷயம் தெரியும்... அதுவும் நீ வேலை பார்க்குற ஹாஸ்பெட்டில அட்மிட் பண்ணி இருந்தாங்களாமே
அதான் உனக்கு ஏதாவது தெரிஞ்சிருக்குமோனு கேட்கலாம்னு நினைச்சுதான் ஃபோன் அடிச்சேன்... ஆனா நீ ஃ போனை எடுக்கல....
நீ போனை எடுக்கலன்னுதான் எனக்கு என்னவோ மனசுக்கு சரியா படல... அதான் உன்னை பார்க்கலாம்னு வந்தேன்... என்னடா ஏதாவது பிரச்சனையா?” என்றவள் கேட்டு கொண்டே அவன் அருகில் வந்து அமர அவன் மனம் கரைந்துருகி போனது.
‘ஏன் இந்த பெண் தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள்... அந்த அன்பில் பாதியையாவது தன்னால் திருப்பி கொடுக்க முடியுமா... உண்மையில் அவள் அன்பிற்கு தகுதியானவன்தானா?’
இப்படியாக சிந்தத்தவன் கண்களின் வழியாக ஒரு துளி கண்ணீர் வெளியே வந்து விழுந்தது. அதனை அவள் கவனிப்பதற்கு முன்பாக அவசரமாக துடைத்து கொள்ள அவளோ அவன் மௌனத்தின் காரணம் புரியாமல்,
“விஜி என்னாச்சு... ஏன் இப்படி இருக்க... பூரணி இப்படி பண்ணிட்டாளேனு கவலை படுறியா?” என்று கேட்டாள். அந்த தகவலை அறிந்து அவள் மனமும் தவித்துதான் போனது.
எதிரியாகவே பாவித்தாலும் அவள் இப்படியொரு காரியத்தை செய்துவிட்டது கஷ்டமாக இருந்தது. அதேநேரம் அவள் வருத்தத்தை மீறி அவன் மனம் என்ன யோசிக்கிறது என்று அவள் தெரிந்து கொள்ள விழைந்தாள்.
அவனிடமிருந்து என்ன பதில் வர போகிறது என்று அவள் ஆர்வமாக பார்த்திருக்க அவனோ அவளின் அந்த கேள்வியில் கோபத்துடன் பொங்க விட்டான்.
“முட்டாள்தனமா அவ செஞ்ச காரியத்துக்கு நான் ஏன் கவலை படணும்... அவ ஒரு சரியான சுயநலவாதி... தன்னை பத்தி மட்டுமே யோசிக்கிற சுயநலவாதி... ஒரு விஷயத்தை செய்றதுக்கு முன்னாடி அது யாரை எப்படி எல்லாம் பாதிக்கும்னு கொஞ்சமாச்சும் யோசிக்க வேண்டாம்” என,
அவன் குரலிலிருந்தது கோபமா இல்லை தான் நேசித்தவளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற வலியின் பிரதிபலிப்பா. அவளால் பிரித்தரிய முடியவில்லை.
அவனோ மேலும், “அவ செஞ்சது யாரை பாதிச்சுதோ இல்லையோ... என்னை பாதிச்சுது” என மகேஸ்வரியின் முகம் மொத்தமாக விழுந்துவிட்டது.
அவன் பூரணியை வெளியே நிராகரிப்பது போல நடித்து விட்டு மனதிற்குள் அவளை ஆழமாக நேசிக்கிறானோ என்ற எண்ணம் எழ அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. யாரோ அவள் நெஞ்சை கசக்கி பிழிவது போல வலித்தது.
ஆனால் அந்த நிலையிலும் அவள் தன் வலியை மறைத்து கொண்டு அவனுக்கு ஆறுதல் கூறினாள்.
“சரி விடு விஜி... எல்லாம் சரியாயிடும்” என்று தரையில் ஊன்றி இருந்த அவன் கரத்தின் மீது கரம் பதித்து தேறுதல் வார்த்தைகள் உரைத்தாள்.
எப்போதும் அவள் கை அபப்டி அவன் கையை பிடித்து கொள்வது வழக்கமாக அவள் செய்வதுதான். விரசமே இல்லாமல் அந்த பிடியில் அவளது பூரணமான நட்பு மட்டுமே இருக்கும்.
ஆனால் இன்று அவளின் அந்த பிடியில் அவனால் நட்பை மட்டுமே உணர முடியவில்லை. அவள் நட்போடே பிடித்திருந்தாலோ என்னவோ. அவன் மனம் நட்பென்று எல்லைகளை தாண்டி யோசித்தது.
அவள் கை பிடியை தன் நெஞ்சோடு அணைத்து பிடித்து கொள்ள வேண்டும் போலவும் முத்தமிட வேண்டும் போல தோன்றியது. ஆனால் அவன் இது எதுவுமே செய்ய முடியாத தவிப்பில் இருந்தான்.
வேலை போய்விட்ட நிலையில் அவளிடம் காதலை சொல்லும் துணிவும் அவனுக்கு இல்லை. அந்த இயலாமையே அவனை அணு அணுவாக கொன்றது.
பட்டென்று தன் கரத்தை அவள் பிடியிலிருந்து உருவி கொண்டவன், “மகி நீ வீட்டுக்கு போ” என்றான்.
“ஒன்னும் அவசரம் இல்ல... நான் கொஞ்ச நேரம் இருக்கேன்... நீ ரொம்ப மனசு கஷ்டத்துல இருக்க” என்று அவனுக்காக யோசித்து அவள் பேச பேச அவனுக்கு இன்னும் அவள் மீதான நெருக்கம் கூடி கொண்டே போனது.
“மகிஈஈஈ... ப்ளீஸ் போ” என்று அழுத்தி கூறியபடி கால்களில் முகத்தை புதைத்து கொண்டு, “என்னை கொஞ்ச நேரம் தனியா விடு... போடி” என்று சத்தமிட அவள் மிரண்டுவிட்டாள்.
அவள் முகம் வாடியது. அந்த நொடியே எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
அவன் உள்ளம் அடித்து கொண்டது. ‘சை சை’ என்று அவன் தன் கைகளால் தரையில் குத்தி, ‘சாரி மகி சாரி சாரி சாரி சாரி என் இயலாமையை மறைக்க உன்கிட்ட கோபப்பட்டுட்டேன்... நீ என் பக்கத்துல கொஞ்ச நேரம் இருந்திருந்தாலும் உன் மடில படுத்து அழுதிருவேன்டி
எனக்கு வேலை போயிடுச்சுனு சொல்லி தொலைச்சிருவேன்... நீ அதை பெருசா எடுத்துக்க மாட்டத்தான்... அப்பவும் கூட எனக்கு எல்லாம் சரியாயிடும்னு ஆறுதல் சொல்லுவ...
ஒரு பிரண்டா மட்டும் இருக்குறதா இருந்தா அந்த ஆறுதல் எனக்கு போதுமா இருக்கலாம்... ஆனா எனக்கு நீ பிரண்டா மட்டும் இருக்க வேண்டாம் மகி... அதுக்கு மேல எனக்கு எல்லாமுமா நீ வேணும்... என்னோட எல்லாமுமா... அதுக்கு எனக்கு ஒரு நல்ல வேலை வேணும்... உன் பக்கத்துல நிற்குறதுக்கான தகுதி வேணும்” என்று தனக்குதானே சொல்லி புழுங்கி கொண்டிருந்தவனின் மனவேதனையை மகி வேறு மாதிரியாக புரிந்து கொண்டாள்.
பூரணியின் தற்கொலைக்கு ஒரு வகையில் தான் காரணம் என்று தன் மீது விஜய் கோபம் கொள்கிறானோ, தன்னை நிராகரிக்கிறானோ என்று ஏறுக்க மாறாக யோசித்தவளுக்கு அழுகையாக வந்தது.
அழுது கொண்டே தன் வீட்டை அவள் அடைய அங்கே அம்மாவின் கடையில் வேலை பார்க்கும் இருவர் வாயிலில் காத்திருப்பதை பார்த்து அவசரமாக தன் கண்ணீர் தடங்களை துடைத்து கொண்டு, “என்ன ஆன்டி... எப்படி இருக்கீங்க” என்று இயல்பாக விசாரிக்க, அவர்கள் முகமும் அப்போது வாட்டமுற்று இருந்தது.
“அம்மா எப்போ ம்மா வருவாங்க... ஃபோன் பண்ணா கூட ஸ்விட்ச் ஆப்னு வருது” என,
“அம்மாவா” என்று இழுத்தவள், “இன்னும் இரண்டு நாள்ல வந்திருவாங்க” என்று சொல்லி வைக்க இருவரும் கவலையுடன் தங்கள் பார்வையை பரிமாறி கொள்ள,
“என்ன விஷயம் ஆன்டி... என்கிட்ட சொல்லுங்க” என்றாள்.
“இல்லமா ஒரு கல்யாண ஆர்டரு... இந்த வாரத்துல தச்சு கொடுக்கணும்... சாதா ப்ளவுஸ் எல்லாம் நாங்க தச்சிருவோம்” என்று அவர்கள் இழுத்த விதத்தில் அவளுக்கு பிரச்சனை என்னவென்று புரிந்துவிட்டது.
அம்மாவிடம் எல்லோரும் துணி கொடுப்பதற்கு காரணமே அவருடைய நாணயம்தான். சரியாக சொன்னது சொன்னபடி தைத்து தருவார். அதேபோல குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே தைத்து கொடுத்து விடுவார். அந்த நம்பிக்கைகாகவே இந்த ஏரியாவிலிருந்து வீடு மாற்றி சென்றால் கூட அம்மாவையே தேடி வந்து பலரும் துணி கொடுப்பார்கள்.
அந்த அளவு லதா தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அப்படிப்பட்டவர் இன்று தன் வேலை எல்லாம் மறந்து விரக்தியுடன் எங்கேயோ சென்று உட்கார்ந்திருக்க காரணம் தன் முட்டாள்தனம்தான் என்று அவள் குற்றவுணர்வு கொள்ள,
“அம்மா வர்றதுக்கு லேட்டாகும்னா... தைக்க முடியாதுன்னு துணியை திருப்பி கொடுத்துடலாம்” என்று அவர்கள் சொன்னது அவள் சிந்தனையை களைத்தது.
“ஐயய்யோ அப்படி கொடுத்தா கல்யாண நெருக்கத்துல யார்கிட்ட கொடுப்பாங்க” என்று மகேஸ்வரி வினவ,
“இல்ல மகேஸ் இப்பவே திருப்பி கொடுத்திறதுதான் நல்லது” என்று இருவருமே முடிவாக கூற அவர்களை ஆழமாக பார்த்து யோசித்தவள்,
“கடைக்கு வந்து என்கிட்ட அந்த துணியை காண்பிங்க... பார்க்கலாம்” என, அவர்களும் சரி என்றனர். அவள் தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அவர்களுடன் நடக்க, கடையின் பூட்டை திறந்து அந்த துணியை அவளிடம் காட்டினார்கள்.
அதனை சில நிமிடங்கள் ஆராய்ந்து பார்த்தவளுக்கு ,
“இது ஒன்னும் பிரச்சனை இல்ல... நான் இதை தச்சு கொடுத்துடுறேன்... மெஸர்மென்ட் எதுல இருக்குனு சொல்லுங்க” என்று கேட்க அவர்கள் அவளை சந்தேகமாக பார்த்தார்கள்.
“இல்லமா அது விலை ஜாஸ்தியான துணி” என,
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்... நீங்க மெஸர்மென்ட் மட்டும் கொடுங்க” என அவர்கள் இருவரும் அவள் தைக்கிறேன் என்று சொன்னதில் இன்னும் கவலையாகிவிட்டார்கள்.
“வேண்டாம்ம்மா ஏதாவது தப்பாகிட்டா” என்று பதட்டம் கொள்ள,
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது... நான் பார்த்துக்கிறேன்... நீங்க அளவை எடுத்து கொடுங்க” என, அவர்கள் நம்பிக்கையே இல்லாமல்தான் அளவை கொடுத்தார்கள்.
அவள் அதனை வாங்கி கொண்டு புறப்பட்டு விட, “இந்த பொண்ணு துணியை ஏதாவது பண்ணிட்டா நம்ம அக்காகிட்டயும் வாங்கி கட்டிக்கணும்... துணி கொடுத்தவங்களுக்கும் பதில் சொல்லணும்” என்று புலம்பி கொண்டே கடையை மூடினர்.
ஆனால் மகிக்கு அவர்களை போல கவலை எல்லாம் இல்லை. அவள் ஒன்றும் புதிதாக துணி தைக்கவில்லை. கல்லூரி படிக்கும் போதே அம்மாவிடம் தைக்க ஆர்வமாக கற்று கொண்டாள். அதற்கு ஒரே காரணம் தன்னுடைய உடைகளை தன் விருப்பத்திற்கு ஏற்ப தைத்து கொள்ள வேண்டுமென்றுதான்.
அவள் தைக்க கற்று கொண்ட பின் இணையத்தில் இருந்து தேடி தேடி எடுத்து லேட்டஸ்ட் டிசைன்கள் டிரண்ட்களை எல்லாம் பார்த்து அவள் தைத்து கொள்வதில் சிலதை சொதப்பியும் இருக்கிறாள். சிலவற்றை எதிர்பார்க்காதளவுக்கு மிக சிறப்பாக தைத்து கொண்டும் இருக்கிறாள்.
அவள் பெரியம்மா மகள் திருமணத்திற்கு அவள் தைத்து கொண்ட உடையை பார்த்து லதாவே ஆச்சரியப்பட்டு போனார்.
“இவ்வளவு நல்லா தைக்கிற... இதே போல மத்தவங்க துணி எல்லாம் தைச்சு கொடுத்தா என்ன” என்று கேட்க,
“அதெல்லாம் மத்த துணிக்கு வராதுமா” என்பாள்.
“உனக்கு தைக்கும் போது... ஏன் டி அது மத்தவங்களுக்கு வராது?”
“வாரதுமா... சொதிப்பிருவேன்” என்று வம்படியாக மறுப்பாளே ஒழிய வேறொருவருக்கு அவள் தைத்து கொடுக்கவே மாட்டாள்.
அதற்கு காரணம் செய்ய முடியாது என்று எல்லாம் இல்லை. அவளுக்கு தைத்து கொள்வது போல பார்த்து பார்த்து மற்றவர்களுக்கு தைக்க அவளுக்கு சுத்தமாக பொறுமையும் கிடையாது. விருப்பமும் கிடையாது.
தனக்கு என்று மட்டும்தான் அவள் மிஷினில் கை வைப்பாள். அந்தளவு சுயகாதல் கொண்டவள். தன்னைதானே அதிகமாக நேசிப்பவள் அவள். ஆனால் இன்று விஜய் காட்டிய வெறுப்பை அவள் மீதான சுயகாதலை கேள்விகுறியாக்கிவிட்டது. அதோடு அம்மா அண்ணா எல்லோரும் தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள் என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள அவள் உள்ளம் வேதனையில் ஆழ்ந்தது.
அந்த வேதனையில் அப்படியே மூழ்கி போய்விடாமல் இருக்க இப்போதைக்கு அவளுக்கு இதுதான் ஒரே வழி என்று தோன்றியது.
வீட்டிற்கு சென்றவள் அம்மாவின் தையல் இயந்திரத்தை எடுத்து வைத்து கொண்டாள். அதன் பின் அந்த துணியை அளவெடுத்து கத்தரித்து என்று வேலையை ஆரம்பித்த பின் கொஞ்சம் கொஞ்சமாக தன் பிரச்சனைகளை எல்லாம் அவள் மறந்து விட்டாள்.
அவ்வப்போது அவள் உடல் ஓய்ந்து போகும் போது மனம் விஜயை நினைவூட்டும். அவன் காட்டிய நிராகரிப்பை நினைவூட்டும். பின் மீண்டும் அவள் வேலை செய்ய துவங்கிவிடுவாள். அவனை மறக்க... அவன் காட்டிய அந்த நிராகரிப்பை மறக்க...
வேறு எதையும் தாங்கி கொள்ள அவளால் முடியும். ஆனால் அவனுடைய அந்த நிராகரிப்பை... உயிரின் அடி ஆழம் வரை வலித்தது. அந்த வலி அவள் உடல் வலியை மறக்கடித்தது.
தன்னைத்தானே வருத்தி கொண்டுதான் அந்த வேலையை செய்தாள். கிட்டத்தட்ட மணி மூன்றை நெருங்கும் போது அவளுக்கு கண்களை சுழற்றி கொண்டு வந்தது. அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை.
தைக்கும் வேலையும் கிட்டத்தட்ட அப்போது முடிந்திருந்தது. இன்னும் மேலோட்டமான சில டிசைன் வேலைகள் இருந்தன.
அப்படியே போய் படுக்கையில் விழுந்த அவளை அலாரச் சத்தம் என்ன உலுக்கியும் மரக்கட்டை போலவே கிடந்தாள்.
வேலைக்கு போக வேண்டும் என்று அவள் மூளை அடித்த அலாரம் கொஞ்சம் வேலை செய்ததது. ஆனாலும் அவளால் எழ முடியவில்லை. அப்போது எங்கிருந்தோ படபடவென்ற வந்த ஏதோவொரு சத்தம் அவள் உறக்கத்தை கொஞ்சம் களைத்துவிட சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தாள். ஆனாலும் தலை சுழன்றது.
மீண்டும் அதே படபட சத்தம். இம்முறை அது கதவு தட்டும் சத்தம் என்பது விளங்க மெதுவாக போர்வையை விலக்கி படுக்கையை விட்டு தன்னை உந்தி தள்ளி கொண்டு எழுந்தாள்.
‘யார் கதவை தட்டுவாங்க... எல்லாம் அந்த பக்கக்த்து வீட்டு பாட்டியாத்தான் இருக்கும்... வாச தெளிச்சு கோலம் போடலயான்னு கேட்க வந்திருக்கும்... லூசு கெழவி’ என்று தூக்க கலக்கத்தில் உளறி கொண்டே நடக்க மீண்டும் அதே சத்தம் கேட்டது.
“ஆ வரேன் பாட்டி” என்றவள் கதவை திறக்க அவள் எதிர்பாரா வண்ணம் அவள் அண்ணனும் அம்மாவும் நின்றிருந்தார்கள். இது கனவில்லையே என்பது போல விழிகளை விரித்து பார்க்க அவர்களுமே அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அவளோ நொடி நேரத்தில் இன்ப அதிர்ச்சியிலிருந்து மீண்டவளாக, “அம்மா அருளு” என்று விட்டு புன்னகை செய்தாள். அதேநேரம், “அம்மா” என்று லதாவின் கழுத்தை உத்வேகத்துடன் கட்டி கொள்ள அவர் ஒன்றும் புரியாமல் அருளை திரும்பி பார்த்தார்.
மகளை விலக்கி விடவும் இல்லை. அதேநேரம் அணைத்து கொள்ளவும் இல்லை. ஆனால் கண்களில் கண்ணீர் பெருகியது.
அம்மாவின் மனநிலையை உணர்ந்த அருள், “மகேஸு” என்று இறுக்கமான குரலில் அழைத்து,
“இப்போ நாங்க உள்ள வர்றதா வேண்டாமா?” என்று கேட்க அவள் சட்டென்று விலகி நிற்க இருவரும் உள்ளே வந்தார்கள். முகப்பறை முழுக்கவும் துணிகள் வெட்டபட்டு சிதறி கிடந்தன. அதனை லதாவின் கண்கள் கூர்மையாக பார்க்கவும் உதட்டை கடித்து கொண்ட மகேஸ்வரி அவசர அவசரமாக கீழே குனிந்து கையில் கிடைத்ததை எல்லாம் வாரி கொண்டதோடு,
“நான் டீ போட்டுட்டு வரேன்” என்று சமையலறைக்குள் ஓடிவிட்டாள்.
லதா அருளை பார்த்து, “என்னடா இவ எதுவுமே நடக்காத மாதிரி இருக்கா?” என்று கேட்க,
“எனக்கும் என்ன கதைன்னு புரியல” என்று அவன் சொல்ல லதா தையல் இயந்திரத்தின் மீதிருந்த துணியை எடுத்து பார்த்து,
“ஐயோ... இதை தைச்சு கொடுக்கணும்னு தான் நான் அடிச்சு பிடிச்சு ஓடி வந்தேன்” என்று அவர் அதிர்ச்சியுற அருள் உடனே,
“என்னம்மா ஏதாவது சொதப்பி வைச்சுட்டாளா?” என்றான்.
“இல்ல என்னை விட நல்லாவே தைச்சு இருக்கா?” என்று அவர் புருவங்கள் மெச்சுதலாக உயர அவனும் தன் அம்மா சொன்னதை வியப்புடன்தான் கேட்டான்.
மகேஸ்வரி தேநீரை தயாரித்து கொண்டு வந்த போது அம்மா கையிலிருந்த துணியை பார்த்து, “இல்ல நேத்து கடைல வேலை பார்க்குற ஆன்டிங்க இரண்டு பேரும் இந்த துணியை தைச்சு கொடுக்குறதை பத்தி என்கிட்ட சொன்னாங்க... அதான் நானே” என்று தயங்கி தயங்கி சொல்லி கொண்டே தேநீரை அவரிடம் நீட்டினாள்.
ஆனால் அவர் அதனை எடுத்து கொள்ளவில்லை.
“எனக்கு கசகசன்னு இருக்கு நான் போய் கை கால் முகமெல்லாம் கழுவிட்டு வர்றேன்” என்று அவளை கண்டும் காணாதது போல பையை எடுத்து கொண்டு அறைக்குள் சென்றுவிட,
“அம்மா” என்று அழைத்தாள். அவர் திரும்பி கூட பார்க்கவில்லை. துண்டை எடுத்து கொண்டு வெளியே இருந்த குளியலறைக்குள் சென்றுவிட, அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
அருள் புறம் திரும்பி, “நீயும் என்கிட்ட பேச மாட்டியா?” என்று கேட்க அவன்,
“ஆமா நீ இன்னும் இங்கதான் இருக்கியா? உன் புருஷன் வீட்டுக்கு போயிருப்பேனு பார்த்தேன்” என்று எகத்தாளமாக வினவவும் சீற்றமானவள்,
“இப்படி எல்லாம் பேசுனனா... டீ எடுத்து மூஞ்சில ஊத்திடுவேன் பார்த்துக்கோ” என அவன் பக்கென்று சிரித்துவிட்டு,
“அது மூஞ்சில ஊத்துறளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல... கொடு நான் வாயில ஊத்துக்கிறேன்” என்று சொல்லி கொண்டே தேநீரை எடுத்து கொண்டான்.
அவள் தாள முடியாமல் அந்த தட்டிலிருந்த டீயை ஓரமாக வைத்துவிட்டு அதாலேயே அவன் தோளில் அடிக்க, “ஏய் ஏய் டீ ஊத்திக்க போகுதுடி... ஆ வலிக்க வேற வலிக்குதுடி” என்று அவன் பதறவும் கதறவும் செய்ய அவள் அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. அவனை சராமரியாக அடித்துவிட்டு அந்த தட்டையும் தூக்கி எரிந்து விட்டு தள்ளி வந்து அழுது கொண்டே தரையில் அமர்ந்தாள்.
அவள் அழுவதை பார்த்ததும் மனம் இறங்கியவன் அந்த தேநீரை ஓரமாக வைத்து விட்டு அவள் அருகில் வந்து அமர்ந்து, “மகேஸு” என்று அழைத்ததுதான் தாமதம். அவன் தோளில் சாய்ந்து கொண்டு,
“நீ கூட என்னை நம்பல இல்ல... உங்ககிட்ட எல்லாம் சொல்லாம நான் பாட்டுக்கு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்குவேனா என்ன? அதெப்படி என்னை பத்தி உன்னால நினைக்க முடிஞ்சுது... அவ்வளவு பெரிய சுயநலவாதியாடா நானு” என்று கேட்டு அவள் அழுத போது அவன் என்ன மாதிரியாக உணர்ந்தான் என்று புரியவில்லை.
அவள் தன்னிடம் சொல்லவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் அவன் கோபப்பட்டானே ஒழிய அவளை வெறுக்க எல்லாம் அவனால் முடியாது.
தோளில் சாய்ந்த தங்கையின் தோள் மீது கை போட்டு கொள்ள அவளோ கண்ணீருடன் மேலும், “ஒரு வீடியோ... அதுவும் யாரோ அனுப்பின வீடியோ... அதை வைச்சு நான் இப்படிதான் பண்ணுவேன்னு நீயா எப்படி முடிவு பண்ண” என்ற கேள்விக்கு அவன் முகம் யோசனையாக மாறியது.
“வேற யாராவது அந்த வீடியோல இருந்தா நம்பி இருக்க மாட்டேன்டி... ஆனா விஜயும் உன்னையும் பார்த்த போது ஒரு வேளை” என்றவன் தயக்கத்துடன் நிறுத்த அவனை முறைப்பாக ஏறிட்டு,
“ஆமான்டா... நான் விஜயை காதலிக்கிறேன்தான்... அன்னைக்கு நீ சொன்னது நூத்துக்கு நூறு உண்மை... ஆனா அப்ப நான் அதை உணரவே இல்லை... என் மனசுல யாராச்சும் இருக்காங்களானு நீ கேட்ட போது கூட நான் ஒரு மாதிரி குழப்பத்துலதான் இருந்தேனே ஒழிய எனக்கு அப்பவும் நான் விஜயை காதலிக்கிறேனு தெளிவா சொல்ல முடியல... ஆனா இப்போ சொல்றேன்... நான் விஜயை லவ் பண்றேன்... என்னால அவன் இல்லாம இருக்க முடியாது
ஆனா அதுக்காக திருட்டுத்தனமா உங்க யார்கிட்டயும் சொல்லாம நான் அவனை கல்யாணம் பண்ணிக்குவேன்னு நீ நினைச்சது தப்பு அருளு... பெரிய தப்பு... நான் அப்படி செய்யல... செய்யவும் மாட்டேன்” என்றவள் உறுதியாக சொன்னதில் குழப்பமடைந்தவன்,
“அப்போ நாங்க பார்த்த அந்த வீடியோ பொய்யா மகேஸு?” என்று வினவ,
“இல்ல உண்மைதான்... ஆனா நீங்க நினைக்குற மாதிரி நாங்க ஒன்னும் திட்டம் போட்டு அத பண்ணல” என்றாள்.
“அப்படினா?” என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க அன்று நடந்ததை எல்லாம் அவள் அதன் பின் விவரமாக கூறியதை எல்லாம் பின்புறமிருந்து கேட்ட லதா உடனடியாக உள்ளே வந்து மகள் முன்னே நின்று,
“இப்போ என்ன சொன்ன... திரும்ப சொல்லு” என்றார்.
மகேஸ்வரி பதறி துடித்து எழுந்து நின்று மீண்டும் நடந்ததை எல்லாம் ஆரம்பத்திலிருந்த விவரிக்க அதனை கேட்டு முடித்த கணமே லதா மகள் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். அவள் அதிர்ந்து நிற்க அவரோ, “தாலி கட்டிக்குறது என்ன உனக்கு விளையாட்டு காரியமா போச்சா” என்று கோபமானார்.
“அம்மா” என்றவள் வலியுடன் கன்னத்தை பிடித்து கொண்டு நிற்க,
“ம்மா அடிக்காதீங்க... அவ அந்த நேரத்தில என்ன செய்றதனு தெரியமாதான்” என்று அருள் சொல்ல, “நீ சும்மா இருடா... அவளுக்கு சப்போர்ட் பண்ணாத... அவ அந்த விஜயை பத்தி பொய் சொன்னது... அவன் வீட்டுக்கு போனதுனு.... உன் தங்கச்சி பேர்லயும் அவ்வளவு தப்பு இருக்கு” என்று மூச்சு வாங்க கூற மகி தலையை குனிந்து நின்றாள். மறுத்து ஒரு வார்த்தை பேசவில்லை.
லதா மேலும், “ஆனா இந்த தாலி விஷயத்துல அவ தப்பு மட்டுமே இல்ல... அந்த விஜயேந்திரனோட சூழ்ச்சியும் இருக்கு... மனசுக்குள்ளயே இத்தனை நாளா என் மேல வைச்ச இருந்த வன்மத்தை இவ மேல கொட்டிட்டான்
பாம்பு விஷத்தை கக்குற மாதிரி விஷத்தை கக்கிட்டான்... படுபாவி” என்று சரமாரியாக திட்டி தீர்த்தவர் கண்களில் அவ்வளவு வெறியும் கோபமும் இருந்தது.
“என்னம்மா... என்னன்னமோ சொல்றீங்க?” என்று அருள் புரியாமல் பார்க்க,
“ஆமான்டா... இத்தனை நாளா உங்ககிட்ட எல்லாம் இதை பத்தி சொன்னது இல்ல” என்றவர் அதன் பின் தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் அதே கோபத்துடனும் வலியுடனும் கூற அருளுக்கு கொதித்தது. மகேஸ்வரி அத்தனையும் நம்ப முடியாமல் கேட்டு கொண்டு நின்றாள்.
“வேணும்டே அந்த ஆளு தங்கச்சிக்கு இப்படி பண்ணி இருக்கானா... அவனை” என்ற அருள் கொந்தளிப்புடன் அவர்கள் வீட்டை நோக்கி செல்ல அவன் கரத்தை கெட்டியாக பிடித்து தடுத்த லதா,
“நீ போக வேண்டாம்... நான் போறேன்... நான் போய் கேக்குறேன்” என்றார்.
“ம்மா நானும் வரேன்” என்று அருள் சொல்ல,
“ஒன்னும் தேவை இல்ல... நீ இருக்க கோபத்துல கையை நீட்டிடுவ”
“ம்ம்ம் இல்லமா”
“வேண்டாம் அருளு... நான் மட்டும் போய் கேட்டுட்டு வரேன்... நீங்க இரண்டு பேரும் இங்கேயே இருங்க” என்று மகனை அதட்டி அங்கேயே நிறுத்திவிட்டு விறுவிறுவென்று எதிர் வீட்டிற்கு நடந்தார் லதா.
Commentaires