மாயா-10
"ப்ளீஸ்! சொன்னா புரிஞ்சிக்கோங்க; நெக்ஸ்ட் மந்த் எனக்கு கல்யாணம்.
அதனால இந்த மாதிரியெல்லாம் பேசாதீங்க!" என மூச்சை இழுத்துப்பிடித்து யாமினி சொல்ல வீராவின் முகம் விகாரமாக மாறிப்போனது.
அதற்குள் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த நரேன், அங்கே அவர்கள் இருவர் மட்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு கேவலமான சிரிப்பு சிரிக்க, அதில் தடுமாறினான் வீரா.
தோன்றிய அருவருப்புடன் கிடைத்த அந்த சிறு இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு அந்த அலுவலக அறையை விட்டு வெளியில் வந்த யாமினி வேகமாக அவளுடைய வகுப்பறை நோக்கிப் போனாள்.
அப்பொழுதுதான் ஒவ்வொரு மாணவர்களாக அங்கே வந்துகொண்டிருந்தனர்.
அதைக் கவனித்தவாறே முதல் வரிசையில் மாணவர்கள் அமரும் இருக்கையில் போய் அமர்ந்தவள் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள முயன்று தோற்றாள்.
அவளுக்குள் கிளம்பிய பயமும் அதனால் ஏற்பட்ட படபடப்பும் அடங்கவே இல்லை அவளுக்கு.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்றுகொண்டே அவள் பாடம் எடுக்கவேண்டும்.
அது முடியாது என மனம் சொல்ல, உடல்நிலை சரி இல்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போய்விடலாம் என்று தோன்றியது அவளுக்கு.
அவளுடைய வகுப்பை ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தது.
இப்பொழுதே கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் அவள் எழ, திடீரென்று அங்கே இருந்த பெண்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
அவள் அருகில் சென்று பார்க்கவும் அங்கே ஒரு மாணவி அரை மயக்கத்தில் இருக்க அவள் மூக்கில் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது.
'ஐயோ! இது வேறா?' என்று ஆயாசமாக இருந்தது அவளுக்கு.
ஆனாலும் அவளை அப்படியே விட்டுவிட்டுப் போகவும் யாமினியின் மனம் இடம் கொடுக்கவில்லை.
எப்படியும் தானும் கிளம்பத்தானே போகிறோம் என்ற எண்ணத்தில் அந்த பெண்ணை கைதாங்கலாக முதல் உதவி அறை நோக்கி அழைத்துச்சென்றாள்.
அங்கே இருந்த செவிலியர் அவளுடைய ரத்தத்தைத் துடைத்துவிட்டு அவளை மேலோட்டமாக பரிசோதனை செய்த பின், "இவங்கள உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது நல்லது.
அட்மிஷன் போட வேண்டியதா இருக்கலாம்!" எனப் பயத்தைக் கிளப்பி விட்டுவிட்டு, அவளுடைய கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையை எடுத்துப் பார்த்து, "சுனிதாதான உங்களோட நேம்! நீங்க ஹாஸ்டல் ஸ்டுடென்ட்டா இல்ல டே ஸ்காலரா?" என்று அந்த செவிலியர் கேட்க, 'ஹாஸ்டல் ஸ்டூடெண்ட் சிஸ்டர்" என மிக முயன்று பதிலளித்தாள் அவள்.
யாமினியின் நிலை புரியாமல், "சரி பிரின்சிபல் சார் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு வரேன்! நீங்க அதுவரைக்கும் கொஞ்சம் கூட இருங்க மேம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் அந்த செவிலியர்.
முள்ளின் மேல் நிற்பதுபோல் யாமினி நின்றுகொண்டிருக்க, கிடைத்த அந்த தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு, "மேம்! ப்ளீஸ் என்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க!
இங்க இருந்தால் ட்ரீட்மெண்ட் குடுக்காம என்னை கொன்னுடுவாங்க" என்றாள் அந்த பெண் பீதியுடன்!
ஏற்கனவே படபடப்பிலிருந்தவள் மேலும் பதறிப்போனாள்.
"ஐயோ! என்ன சொல்ற நீ!" என யாமினி நடுங்கும் குரலில் கேட்க, "எஸ் மேம்! ப்ளீஸ்! இப்ப எதுவும் கேக்காதீங்க! என்னை எப்படியாவது வெளியில கூட்டிட்டு போயிடுங்க!" எனக் கெஞ்சத்தொடங்கினாள் அவள்.
அந்த நொடி பயத்துடனே, மாதினியை அழைத்து ஆலோசனை கேட்கலாம் என்று எண்ணியவளாக தன் கைப்பேசியை எடுத்து அவளது எண்னை அழுத்த முற்பட, "மேம் ப்ளீஸ்! இங்க இருந்து கால் பண்ணாதீங்க!
யாராவது வந்தால் பிரச்சனை ஆகிடும்!" என்று அந்த சுனிதா சொல்லவும், தயக்கத்துடன் அதை 'லாக்' செய்தாள் அவள்.
தான் படுக்கவைக்கப்பட்டிருந்த சிகிச்சை பலகையிலிருந்து மெல்ல தன் தலையைத் தூக்கி சுற்றிலும் பார்த்தவாறு, மெல்லிய குரலில், "மேம்! நம்ம சேர்மென் ரொம்ப மோசமானவரு! சரியான பொம்பளை பொறுக்கி!
அந்த வீரா அவரோட வேட்டை நாய் மாதிரி!" என்றாள் அச்சத்துடன்.
அவர்களது பெயர்களைக் கேட்டதும் உதறல் எடுத்தது யாமினிக்கு.
சற்று முன் நடந்த ஒரு நிகழ்வு போதும் அவளது அச்சத்தை உச்சத்தில் கொண்டு நிறுத்த.
"இப்ப என்ன செய்ய சொல்ற!" என அவள் அதே அச்சத்துடன் கேட்க, "மேம்! அந்த சிஸ்டர் வரதுக்குள்ள என்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க ப்ளீஸ்!
இந்த கேம்பசை விட்டு வெளியில போனால் போதும்.
எங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு எப்படியாவது எங்க ஊருக்கு போயிடுவேன்" என்றவள் முயன்று எழுந்து உட்கார, தனக்குமே இங்கே இருந்து போனால் போதும் என்று இருக்கவும், அவளை கை தாங்கலாகப் பற்றித் தூக்கியவள், அவளது கரத்தை தன் தோளைச் சுற்றிப் போட்டவாறு நடக்கத் தொடங்கினாள் யாமினி.
அந்த நொடி பதறி அடித்துக்கொண்டு அவர்களை நோக்கி ஓடி வந்த அந்த செவிலியர், "என்ன மேடம் இவங்கள எங்க கூட்டிட்டு போறீங்க!" என்று கேட்க, என்ன சொல்வதென்று புரியாமல், "இல்ல; ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்னு" என இழுத்தாள் அவள்.
அவள் சொல்வதைக் காதில் வாங்கியவாறு அந்த செவிலியரைப் பின்தொடர்ந்து வந்த வீரா, "உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலையெல்லாம்?" என்றான் மிரட்டலாக.
"இல்ல பாவம் இந்த பொண்ணுக்கு ரொம்ப உடம்பு சரியில்ல!" என அவள் தட்டுத்தடுமாறிச் சொல்ல, "சொல்லிட்ட இல்ல; நீ கிளம்பு; நான் பார்த்துக்கறேன்" என்றான் அவன்.
அதைக் கேட்டதும் மேலும் மிரண்டுபோய் அவளை இறுகப் பற்றிக்கொண்டு, "ப்ளீஸ் மேம்! என்னை தனியா விட்டுட்டு போயிடாதீங்க!" எனக் கெஞ்சினாள் அந்த பெண். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
என்ன செய்வது, எப்படி அந்த சூழ்நிலையைக் கையாள்வது எனப் புரியாமல் தவித்தவள், “இல்ல; பரவாயில்ல; நான் இவங்க கூடவே இருக்கேன்.
நீங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக அரேஞ்ச் பண்ணுங்க” என்றாள் யாமினி.
அவனுடைய இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது.
ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என அவள் சொன்ன விஷயம் அவனை வெகுவாக கொதிப்படையச் செய்திருந்தது.
அதுவும் அவள் அந்தப் பெண்ணுக்குப் பரிந்து கொண்டு இவ்வாறாகப் பேசவும் அவனுடைய வன்மம் மேலும் அதிகரித்தது.
“தென் ஃபைன்” என்றவன் “அப்படின்னா நீயும் இவ கூடவே இங்கயே கிட!” என்றவாறு அந்த செவிலியரிடம் ஏதோ ஜாடை செய்துவிட்டு அவன் அங்கிருந்து அகன்று விட, மின்னலென அவனைத் தொடர்ந்து தானாக மூடிக்கொள்ளும் அந்தக் கதவைத் தள்ளிக்கொண்டு வெளியேறினாள் அந்தப் பெண்.
மூடிய கதவையே சில நொடிகள் பார்த்துக் கொண்டு உறைந்து போய் நின்ற யாமினி பின்பு சுனிதாவைப் பற்றியவாறே அந்தக் கதவைத் திறக்க முயல, அந்த கதவு வெளிப் பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.
ஏதோ சரியில்லை என்பது அவளது உணர்வுகளுக்குப் புரிய உடனேகைப்பைசியில் மாதினியை தொடர்பு கொள்ள முயன்றாள் அவள்.
அங்கே சுத்தமாக ‘சிக்னல்’ இல்லாமல் இருக்கவே இணைப்பு கிடைக்கவேயில்லை.
பின் அவள் வேகமாக அந்தக் கதவைத் தட்டிப்பார்த்தும் பலவாறு போராடிப் பார்த்தும் எந்தப் பயனும் இல்லை.
நேரம் வேறு கடந்துகொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவள் சுனிதாவின் அருகில் போய் உட்கார, அதுவரை அனைத்தையும் ஒரு இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தவள், “மேம்! என்னால நீங்களும் மாட்டிக்கிட்டீங்களே!
எப்படியாவது தப்பிச்சு போயிடுங்க மேம்! ப்ளீஸ்” என்றாள் அவள்.
அங்கிருந்து எப்படித் தப்பித்துப் போவது என்பது புரியாமல் தன் கையை பிசைந்தவள், “என்ன நடக்குதுன்னே புரியலயே; உனக்கு உடம்புதான சரியில்லை. உன்னை ஏன் இப்படி லாக் செஞ்சு வெச்சிருக்காங்க.
உன்னோட சேர்த்து என்னை வேற ஏன் இப்படிப் பூட்டி வெச்சிருக்காங்க?” என அவளிடம் பரிதாபமாகக் கேட்டாள் யாமினி.
உங்களை ஏன் லாக் பண்ணியிருக்காங்கன்னு எனக்கு புரியல மேடம்.
ஆனா என்னை இப்படி அடைச்சு வைக்கக் காரணம் இவங்க செய்யற ஹாப்பி பில்ஸ் அப்படிங்கற ட்ரக் டீலிங் வெளியில லீக் ஆகிடுமோங்கற பயத்துலதான்” என்றாள் சுனிதா மூச்சு வாங்க.
“என்ன சொல்ற; எனக்கு ஒண்ணுமே புரியல!” சொல்லும்பொழுதே அவளுடைய முகம் முழுவதும் கலவரத்தை பூசி இருந்தது.
தொய்வான குரலில் ஏதோ சொல்லத் தொடங்கினாள் சுனிதா.
அவள் மேலும் மேலும் பலகீனம் ஆகிக் கொண்டே செல்வது போல் தோன்றியது அதைக் கேட்டுக் கொண்டிருந்த யாமினிக்கு.
“நம்ம கிளாஸ்ல இருக்கிற வந்தனா தெரியும் இல்ல உங்களுக்கு”
சில தினங்களுக்கு முன் வகுப்பில் மயங்கி விழுந்த பெண் அவள் என்பது நினைவில் வந்து ஆம் என்பது போல் தலையை ஆட்டினாள்.
"அவங்க அப்பா ஒரு பிசினஸ்மேன். அவ கேக்குற போதெல்லாம் நிறையப் பணமும் கிடைக்கும் வித் அன்லிமிட்டட் ஃப்ரீடம்.
அவதான் என்னோட பெஸ்ட் பிரண்ட்.
இன்னும் சில பேர் சேர்ந்து நாங்க எல்லாம் ஒரு கேங்க்.
ஆக்சுவலி இங்க படிக்க வந்திருக்கோம் என்பதைவிட ஜாலியா என்ஜாய் பண்ண வந்திருக்கோம் அப்படிங்கிற மாதிரி ஹாப்பியா சுத்திட்டு இருப்போம்.
நாங்க எல்லாரும் சேர்ந்து வீக்எண்ட் ஆனா ஈசிஆர்ல இருக்கிற ஒரு பப்புக்கு போவோம்.
அப்பல்லாம் பியர் இல்லன்னா வைன் சாப்பிடுவோம்.
அவள் வெகு இயல்பாகச் சொல்ல, அதிர்ந்து அவளைப் பார்த்தாள் யாமினி.
“சாரி மேம்” என்றவள் தொடர்ந்தாள்.
“எங்களுக்குன்னு ஒரு செட் ஆஃப் புக் கலெக்ஷன்ஸ் இருக்கு.
அதே மாதிரி லேட்டஸ்ட் மூவிஸ் லாம் நிறைய பார்ப்போம்.
சில கொரியன் சீரியல்ஸ் எங்களோட ஃபேவரைட். அதுல எல்லாம் லவ்வை விட லஸ்ட் ரொம்பவே தூக்கலா இருக்கும்.
இப்ப ரீசன்ட்டா வந்த ஒரு தமிழ் படத்துல கூட ஹீரோயின் ட்ரிங்க் பண்ற மாதிரி வருதில்ல? அதுக்கு பிறகு வர டையலாக்கெல்லாம் வேற ஒரு லெவெல்ல இருக்கும்"
ஆமாம்! மிகப் பிரபல நடிகர் நடித்த படம்தான் அது.
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்.
சில நாட்களுக்கு முன் ஜெய்யுடன் போய் பார்த்திருக்கிறாள் யாமினி. அவள் சொல்ல வருவது புரிந்தது.
"அதனால ட்ரிங்க் பண்றது தப்புன்னே நாங்க நினைக்கல.
அது எங்களுக்கு ஒரு பேஷன் மாதிரி.
அதுவும் இப்படியெல்லாம் செய்யலன்னா எங்க கேங்ல அவங்கள குட்டி பாப்பான்னு ட்ரோல் பண்ணி ஓட்டுவாங்க.
அதனாலதான் அறிவு கெட்டுப்போய் இவ்வளவு பெரிய ஸ்கேம்ல மாட்டியகருக்கோம்” என்று சொல்லி மூச்சு வாங்கியவள் தொடர்ந்தாள்.
வந்தனாவும் இன்னும் ஒரு பொண்ணும் மட்டும் டே ஸ்காலர்ஸ்.
அவங்க ரெண்டுபேருக்கும் பாய் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க.
டேட்டிங்லாம் அவங்களுக்கு ரொம்ப சகஜம்.
இந்த சந்தர்ப்பத்துலதான் ஒரு நாள் ட்ரிங்க் பண்ணிட்டு எங்க வார்டன் கிட்ட மாட்டினோம்.
அப்ப கூட அவங்க எங்க பேரண்ட்ஸ்கிட்ட போட்டுக் குடுப்பாங்க.
அவங்கள ஈஸியா ஹேண்டில் பண்ணிக்கலாம்னுதான் நினைச்சோம்.
ஆனா நெக்ஸ்ட் டே அவங்க நேரா சேர்மேன் கிட்ட கொண்டுபோய் நிறுத்தினாங்க.
அவர் அதை கேஷூவலா எடுத்துகிட்ட மாதிரித்தான் பேசினார்.
‘இதெல்லாம் ரொம்ப தப்பு. இந்த ஹாபிட்ல இருந்து நீங்க சீக்கிரம் வெளியில வரணும்.
இது தொடர்பா ஏதாவது ஹெல்ப் வேணும்னா நீங்க எப்ப வேணும்னாலும் என்னை அணுகலாம்’ அப்படின்னு எங்களுக்கு அட்வைஸ் பண்ணி விட்டுட்டார்.
ஆனா ஹாஸ்ட்டல்ல எங்கள மார்க் பண்ணிட்டாங்க.
ஸ்ரிடிக்டா வெளியில எங்கயும் போக முடியாதபடி செக்யூரிட்டிய டைட் பண்ணிட்டாங்க.
அந்த வீக் ஃபுல்லா எங்களுக்கு எந்த பிரச்சனையும் வரல.
பட் வீக் எண்ட்ல எங்களால ட்ரிங்க் பண்ணாம இருக்க முடியல.
ஒரு மாதிரி டிப்ரஸ்டா இருந்தது.
நரேன் சார் ஹெல்ப் பண்றேன் சொன்னதை நம்பி அவர்கிட்ட போய் எங்க நிலைமையைச் சொன்னோம்.
அப்பதான் அவரு எங்ககிட்ட ஒரு டேப்லட்டை கொடுத்து, ‘இதை டெய்லி நைட்ல எடுத்துக்கிட்டீங்கன்னா இந்த பிராப்ளம் உங்களுக்குச் சீக்கிரம் சரியா போயிடும்’னு சொன்னார்.
அவர் சொன்னதை நம்பி ஒரு வாரம் தொடர்ந்து அந்த டேப்லட்டை நாங்க எடுத்துகிட்டோம்.
அந்த ஒரே வாரத்தோடு அவர் கொடுத்த அந்த டேப்லெட் முடிஞ்சு போச்சு.
ஆனா அடுத்த நாள் அந்த டேப்லட்டை போட்டுக்காம எங்களால இருக்க முடியல கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுருச்சு.
வேற வழி தெரியாமல் மறுபடியும் நரேன் கிட்ட போய் நின்னோம்.
ஆனா அந்த டேப்லெட்டை கொடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டார்.
அந்த டேப்லெட் காக அவர்கிட்ட ரொம்பவே கெஞ்ச ஆரம்பிச்ச அப்பதான் அவர் எங்களை பிளாக்மெயில் பணணத் தொடங்கினார்.
எங்களை மிரட்டி மிரட்டி அவருடைய விருப்பத்திற்கு எங்க எல்லாரையுமே இணங்க வெச்சார்.
நாங்க அதுவரைக்கும் ஜாலியா நினைச்ச பல விஷயங்கள் எங்களுக்கு நரகத்தை காண்பிச்சது.
அவருக்கு சொந்தமான பப்லதான் அந்த டேப்லட் அவைலபிலா இருக்கும்.
அதனால அவர் கூட நாங்க அங்க எல்லாம் போக வேண்டியதாயிருந்தது.
அந்த ஹாப்பி பில் டேப்லெட்டை மார்க்கெட்டிங் செய்யறது வீரா.
இது எல்லாத்துக்கும் அடியாள் மாதிரி வேலை செய்கிறது அந்த நந்தாவும் சதாவும்.
இங்க பெண்கள் போகும் பல பப்ல இந்த மாத்திரை புழக்கத்துல இருக்கு.
அங்க பெண்கள் குடிக்கற ட்ரிங்க்ல அவங்களுக்கே தெரியாம அதை கலந்து கொடுத்து அவங்களை அதுக்கு அடிமை ஆக்கறாங்க!
நரேன் மாதிரி பெரிய ஆளுங்க நிறையபேர் இதுல சம்பந்தப்பட்டிருக்காங்க. அவங்களுக்கு அந்த பெண்களை பலி கொடுக்கறாங்க.
அந்த டேப்லட்டை பத்தி போகப்போகத்தான் எங்களுக்கு புரிய வந்தது.
அது ஒரு போதை பொருள் மட்டுமல்ல. பெண்களின் அந்தரங்க உணர்ச்சிகளை அதிகம் தூண்டக்கூடிய மாத்திரை அது.
அதை அதிகமாக எடுக்கும் போது அது உயிருக்கே ஆபத்தாகப் போய் முடியும்.
அந்த நரேனோட தேவைக்காக எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதோட டோசேஜை அதிகமாக்கிட்டே போனான் வீரா.
இப்ப அது எங்க ஹெல்த்தை ரொம்பவே பாதிச்சிருக்கு.
நாங்க இதுக்கான ட்ரீட்மெண்ட் எடுக்க போனால் இவங்க மாட்டிப்பாங்க.
அதனால எங்களை ட்ரீட்மெண்ட் எடுக்க விடாம தடுக்கறாங்க.
நான் அல்மோஸ்ட் ஃபைனல் ஸ்டேஜ்க்கு வந்துட்டேன்!
சும்மா ஜாலிக்காகன்னு ட்ரிங்க் பண்ணப் போக அந்த பழக்கம் அப்படியே தனக்குள்ள எங்களை போட்டு உயிரோட புதைச்சிடுச்சு.
அதோட இல்லாம ஏற்கனவே மன வக்கிரம் பிடிச்ச ஆண்கள், என்னை மாதிரி பொண்ணுங்கள கேவலமான கண்ணோட்டத்துல பார்க்கறாங்க .
அவங்களோட வக்கிரங்களை தீர்த்துக்க இந்த மாதிரி செக்ஸுவலா யூஸ் பண்ணிட்டு எங்களை அடையாளம் தெரியாம அழிச்சிடறாங்க.
அதையெல்லாம் புரிஞ்சிட்டு இந்த நிலைமையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் அந்த கெட்ட பழக்கங்களையெல்லாம் செஞ்சிருக்கவே கூடாதுனு நான் யோசிக்கும்போது காலம் ரொம்பவே கடந்து போச்சு மேம்"” என முடித்தாள் சுனிதா.
பேசிக்கொண்டே இருந்தவளின் நாசியிலிருந்து மறுபடி குருதி வழிய, கண்கள் நிலைக்குத்தி உணர்விழந்துபோனாள் அவள்.
குலை நடுங்கிப்போனது யாமினிக்கு
மதியம் வந்து மாலையும் ஆகிவிட நேரம் கடந்து கொண்டே இருந்ததே ஒழிய அவளைத்தேடி யாரும் வரவில்லை அங்கே.
அவளது கைப்பேசியில் தொடர்பு கிடைக்கவேயில்லை.
‘ஆஃப்லைன் மெசேஜ்’ஆவது செய்யலாம் என எண்ணி மாதினியின் எண்ணைத் தேர்ந்தெடுத்து எப்படித் தொடங்குவது எனப் புரியாமல் ‘ஹேப்பி பில்ஸ்” என அவள் ‘டைப்’ செய்யத் தொடங்க, தடதடவென அந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு வீரா நந்தா மற்றும் சதா பின் தொடர உள்ளே நுழைந்தான் நரேன்.
சட்டென கைப்பேசியை அவள் அணைக்க அவளைப் பார்த்துச் சிரித்த நரேன், “இங்க ஜாமர் வெச்சிருக்கோம்; இங்கே இருந்து ஒரு கால் கூட உன்னால பண்ண முடியாது.
வீணா ட்ரை பண்ணாத” என்று சொல்லிவிட்டு, நேராக சுனிதாவை நோக்கிப் போய் அவளை ஆராய்ந்தவாறு அவளுடைய தலையை இப்படி அப்படி திருப்பிப் பார்த்துவிட்டு, “கோமாக்கு போயிட்டான்னு நினைக்கறேன்.
நம்ம டாக்டர வெச்சு கன்ஃபார்ம் பண்ணிடு.
இவளுக்கு ஏதாவது ஆனா நாம மீடியாவுக்கு எல்லாம் நிறைய பதில் சொல்லணும். அதனால பிரச்சினையாகம அவங்க பேரண்ட்ஸ் கிட்ட ஒப்படைச்சிடு” என்று சொன்னான்.
அதைக் கேட்டு, “ஜி என் ஆளு ஜி!” என வீரா இழுக்கவும், "இன்னுமா அவளை உன் ஆளுன்னு சொல்லிட்டு இருக்க?" என அவனைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தவன் “இவதான் ரொம்ப டேஞ்சரஸ். முதல்ல இவளோட மேட்டர முடிச்சிருங்க” என்றான் வெகு சகஜமாக.
அதிர்ந்தான் வீரா.
“ஜி! ஏன் இப்படி சொல்றீங்க?” என அவன் கேட்க, “இந்த நேரம் நம்ம ரகசியம் மொத்தமும் இவளுக்குத் தெரிந்திருக்கும்” என்று நரேன் சொல்ல,
“ஜி! எனக்காக!” என இழுத்தான் வீரா.
“இவளாள உனக்கு எந்த பிரயோஜனமும் இல்ல. அதனால முடிச்சிடு: என்றான் நரேன் கட்டளையாக.
அடுத்த நொடி சதாவும் நந்தாவும் அவளை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வெளியில் வர, ஆள் அரவமே இல்லாமல் லேசாக இருள் சூழ்ந்து இருந்தது அந்த கல்லூரி வளாகம்.
ஆங்காங்கே ஒருசிலர் மட்டுமே இருந்தனர்.
அவர்களுமே நரேனுடைய நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக
இருக்கக்கூடும்.
காலை முதல் பாதித்திருக்கும் அதிர்ச்சியும் நடுக்கமும் பசியுடன் சேர்ந்து அவளைச் சோர்வடையச் செய்திருக்க, அவர்களைக் கொஞ்சமும் எதிர்க்க முடியாத நிலையிலிருந்தாள் யாமினி.
மிக எளிதாக அவளை இழுத்து வந்தவர்கள் அங்கே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய பேருந்துக்குள் அவளைத் தள்ளி அதைப் பூட்டினர்.
அதிலிருந்து வெளியேற அவள் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிய அதன் மீது பெட்ரோலை ஊற்றினர் நந்தாவும் சதாவும்.
வீரா தீக்குச்சியைக் கொளுத்தி அந்த பேருந்தின் மீது வீசக் கொழுத்துவிட்டு எரியத் தொடங்கியது அந்த பேருந்து.
பேருந்துடன் சேர்த்து யாமினியையும் தன் கோரப் பசிக்கு இறையாக்கியது அந்த பொல்லாத நெருப்பு.
அதே நேரம் மாதினியின் கைப்பேசி தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்ப யாமினியிடமிருந்து வந்திருந்த அந்த குறுந்தகவலை பார்த்தாள் அவள்.
அந்த நொடி ‘ஹாப்பி பில்ஸ்’ என்ற இரண்டே வார்த்தைகள் மட்டுமே யாமினியிடமிருந்து அவளுக்கு எஞ்சியிருக்கிறது என அறியவில்லை மாதினி.
மிரட்டுவாள் மாயா!
Comentarios