மாயா-8
'பிரபு ஏன் இப்படிப் பிதற்றுகிறான்' என்ற யோசனையுடன் தடதடவென அவனுடைய அடியாட்கள் சகிதாம் வீரா அங்கிருந்து வேகமாக அகன்றுவிட, அப்படியே துவண்டு போய் அங்கிருந்த 'சோஃபா'வில் சரிந்தாள் மாதினி!
அரை மணி நேரம் கடந்தபின்னும் தன்னை மறந்து அவள் அப்படியே கிடக்க, தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து நிறுத்தியவன், அகலத் திறந்தே கிடந்த கதவை யோசனையுடன் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் ஜெய்.
அவளது கோலம் மனதைக் கரைக்க அவளுக்கு அருகில் போய் உட்கார்ந்தவன், "ஏன் மாதினி! உடம்பு சரி இல்லையா? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என அக்கரையுடன் அவன் கேட்க,
"ப்ச்" எனச் சலித்துக்கொண்டவள், வீரா அங்கே வந்ததை பற்றிச் சொல்ல, அவசரமாக அவனுடைய கைப்பேசியில் கண்காணிப்பு 'கேமரா'வின் பதிவுகளை ஆராய, அதுவும் அவள் சர்வ சாதாரணமாக ஒருவனைத் தூக்கி வீசியதைப் பார்த்து அவன் முகம் கோபத்திலும் வியப்பிலும் இறுகிச் சிவந்தது.
"நீ ஊருக்கு போகாம; தனியா இங்க என்ன பண்ற?" என அவன் அவளிடம் கண்டனமாகக் கேட்க,
"இல்ல ஜெய் ஊருக்குத்தான் போயிருந்தேன்!" என்றவள், "தப்பா நினைக்கதீங்க ஜெய்" என்று சொல்லிவிட்டு "அன்னைக்குத் தாத்தா மாப்பிளை போட்டோஸ் எல்லாத்தையும் கடைவிரிச்சு வெச்சிருந்ததை பார்த்ததும் ஏனோ எனக்கு உங்க நினைவுதான் வந்தது!
எனக்கு இப்போதைக்கு கல்யாணத்தில் எல்லாம் பெரிய இன்ட்ரெஸ்ட் இல்ல.
அதை சொன்னா அங்க யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க.
அவங்க கம்பல்ஷனுக்கு ஒத்துக்கிட்டு புதுசா யாரோ ஒரு முன்ன பின்ன தெரியாதவனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கறது எனக்கு என்னவோ செட் ஆகும்னு தோணல.
உங்களைப் பத்தி நினைச்சதும் ஒரு கம்பஃர்டபுல் பீல் வந்தது.
அதான் கொஞ்சம் கூட யோசனையே இல்லாம டக்குனு உங்க பேரை சொல்லிட்டேன்!
உங்க எண்ணத்தை கேக்காம சொன்னதுக்கு ரியலி சாரி!" என அவள் சொல்ல,
"நான் என்ன கேட்டா நீ என்ன பதில் சொல்லிட்டு இருக்க! இப்ப இந்த பேச்சு தேவையா?" என அவன் கேட்க, "அவசியம் தேவைதான்" என்றவள், "உங்களுக்கு விருப்பம் இல்லனா பரவாயில்ல!
நானே எதையாவது சொல்லி இந்த பேச்சை நிறுத்தறேன்!" என்றாள் அவள் கொஞ்சம் கரகரத்த குரலில்.
அதற்கு என்ன பதில் சொல்வது என்ற தயக்கத்தில் சற்று மௌனமானவன், "மறுபடியும் எதையாவது பேசி குழப்பி வெக்காத!" என்றவன், " நேத்து பேசும்போதுகூட என் மனச மாத்திக்க சொல்லி சொன்ன; இப்ப இப்படி பேசற;
ஏன் மாது நீ எப்பவுமே ரொம்ப தெளிவா இருப்ப இல்ல; இப்ப ஏன் இப்படி நடந்துக்கற" என அவன் சலிப்புடன் கேட்கவும்,
"என்ன நேத்து நாம மீட் பண்ணி பேசினோமா?" எனக் கேட்டாள் அவள் அதிர்வுடன்.
"சுத்தம்" என்று அவன் தலையில் கையை வைத்துக்கொள்ள, "சீரியஸ்லி எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல ஜெய்!
புதுப்பாக்கம் கோவிலுக்கு போகலாம்னு நேத்து மார்னிங் விளங்காட்டிலிருந்து கிளம்பினதுதான் நினைவில் இருக்கு! அப்பறம் எப்படி இங்க வந்தேன்னு கூட தெரியல" என உள்ளே போன குரலில் சொன்னாள் மாதினி!
அவன் முகத்தில் யோசனை படர, "நீ சொல்றதெல்லாம் உண்மையா மாது!" என அவன் இளகிய குரல் கேட்க, "என்னைப் பார்த்தால் பைத்தியம் மாரி தோணுதா?" என்றவள், "உங்களை பிடிச்சிருக்குன்னு வீட்டுல சொல்ற வரைக்கும் தெளிவாத்தான் இருந்தேன்!
பிறகுதான் இந்த குழப்பமெல்லாம்! எங்க போனாலும் யாமினி என் கூடவே வர மாதிரி ஒரு பீல்!
எப்ப பாரு என்னைச் சுத்தி மகிழம்பூ வாசனை வந்துட்டே இருக்கு!
முன்னால எல்லாம் எப்பவாவதுதான் அப்படி இருக்கும்; ஆனா இப்ப பர்மனெண்டா இருக்கு!
முந்தாநாள் எனக்கு ஒரு கனவு வந்தது! அதுக்கு பிறகுதான் பிரச்சனையே!" என்றவள் அதைப் பற்றிச் சொல்லத் தயங்கி அவள் முகம் சிவந்துபோனது.
அவன் கூர்மையாக அவளைக் கவனிப்பதை உணர்ந்தவள் பேச்சை மாற்ற எண்ணி, "இப்ப கூட அந்த வீரா வந்ததெல்லாம் தெளிவா ஞாபகம் இருக்கு.
ஆனா ஒரே நிமிஷத்துக்குள்ள என்ன நடந்ததுன்னு புரியல. அவன் கூட வந்த அந்த அடியாள் ஒருத்தன் கீழ விழுந்து கிடக்கிறான்!
அவன் என்னை பார்த்துட்டு அலறிட்டு ஓடறான்! நடுவில் நடந்தது அப்படியே ப்ளாங்கா இருக்கு!" என அவள் புலம்ப,
"ப்ச்! புத்திசாலி! ஒரே மீட்டிங்கில் புரிஞ்சிக்கிட்டான்!" என்றான் ஜெய்.
தான் இலகுவாக இருப்பது போலக் காண்பிக்கவே அவன் அப்படிக் கிண்டலாகப் பேசினானே ஒழிய உண்மையில் அவனுக்குள்ளும் பல கேள்விகள் எழுந்தது.
என்னதான் ஆரோக்கியமானவளாக இருந்தாலும் ஒரு மெல்லிய தேகம் கொண்டவள் வாட்டசாட்டமான அடியாள் ஒருவனை, அதுவும் கிட்டத்தட்ட அரை அடிவரை மேலே தூக்கி வீசுவதென்றால் வேறு ஏதோ உந்துதல் இருக்கவேண்டும் என நம்பினான் அவன்.
அதுவும் முந்தைய தினம் மாதினியின் கண்கள் அவனிடம் ஒரு புது மொழியை பேசியது.
இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அவளுக்குள் அவன் தேடிக் கொண்டிருக்கும் யாமினி சில நிமிடங்கள் அவனுக்குத் தரிசனம் கொடுத்ததுபோலவே உணர்ந்தான் ஜெய்.
அதை அவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
தங்கையின் பிரிவு அவள் மனதில் எதாவது பாதிப்பை ஏற்படுத்திவிட்டதா அல்லது வேறு எதாவது காரணம் இருக்குமா என்ற ஐயம் தோன்ற, அவனுடைய அம்மாவிடம் அவளை ஒரு 'கௌன்சிலிங்' அழைத்துப் போகலாம் என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு.
ஆனால் அதைச் சொல்லாமல், "வீட்டுக்கு வரியா மாது! அம்மா உன்னை பார்க்கணும்னு சொல்லிட்டே இருந்தாங்க!" என அவன் அவளை இயல்பாக அழைப்பது போல் அழைக்க, "எனக்கும் அவங்களை நேர்ல வந்து பார்க்கணும்னு ஆசையாத்தான் இருக்கு; ஆனா நான் ஊருக்கு போயே ஆகணும்! கனகா பாட்டி வரச்சொல்லி போனே பண்ணிட்டாங்க! நாளன்னைக்கு இங்க வந்துடுவேன். வீக் எண்ட்ல வரட்டுமா?" என அவள் உண்மை நிலையைச் விளக்க, அதற்கு உடன்பட்டவன் இந்த நிலையில் அவளைத் தனியே அனுப்ப மனமில்லாமல் தானும் அவளுடன் கிளம்பினான் ஜெய்.
வாகனத்தை ஓட்ட முனைந்தவளைத் தடுத்துத் தானே ஓட்டினான். ஒரு வார்த்தை கூட பேசாமல் அதற்கு ஒப்புக்கொண்டாள் மாதினி!
மாதினி பொதுப்படையாக ஏதேதோ பேசிக்கொண்டே வர, அவள் சொல்வதைக் கேட்டபடி வாகனத்தைச் செலுத்தியவன், வண்டி செங்கல்பட்டைக் கடக்கும் நேரம் அங்கே குடிகொண்ட நிசப்தத்தை உணர்ந்து, திரும்பி அவளைப் பார்க்க, அப்படியே உறங்கியிருந்தாள் அவள்.
எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியில் அவள் முகம் பளிங்கு போல இருக்க, அவளுடைய தலை ஒரு பக்கமாகச் சரிந்து பற்றுதலைத் தேடவும், அதுவரை அவனுக்கு இருந்த சஞ்சலமெல்லாம் மறைந்து மனம் ஒருநிலை பட்டவனாக, இடதுகையால் அவளை இழுத்து தன் தோள் மேல் சாய்த்துக்கொண்டான் ஜெய் கிருஷ்ணா! அதைக்கூட உணராத ஒரு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் மாதினி.
***
சில நிமிடங்களில் அவர்கள் விளாங்காட்டை அடைந்திருக்க, ஓட்டி வந்த வாகனத்தை அவன் ஓரமாகப் போய் நிறுத்தவும், அவனைக் கவனித்துவிட்டு அங்கே வந்த அவளுடைய பெரியம்மா, "வாங்க மாப்ள! எப்படி இருக்கீங்க! அம்மா அப்பாலாம் சௌக்கியமா!' என முகம் மலர்ந்து அவனை வரவேற்க, "எல்லாரும் நல்லா இருக்கோம் அத்தை! நீங்க எப்படி இருக்கீங்க!" எனக் கேட்டுக்கொண்டே அவன் இறங்கிவரவும், மறுபுறமாக இறங்கியவள் சுற்றுப்புறம் பார்க்காமல் மின்னல் போல வீட்டிற்குள் போனாள் மாதினி!
அவளது அந்த செயலை பார்த்து, "இவ என்ன இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கா!" என்றவர், "நேத்து காலைல போனவதான் மாப்ள! சாயங்காலம் எங்கம்மாவுக்கு போன் பண்ணி ‘மாம்பலம் வீட்டுக்கு போயிட்டேன்! நாளைக்குத்தான் வருவேன்’னு ரெண்டே வார்த்தை பேசிட்டு கட் பண்ணிட்டா!
இவளை நீங்கதான் அடக்கி வெக்கணும்!" எனப் பொரிந்தார் அவர்.
அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தவன், "நான் எல்லாரையும் பார்த்துட்டு உடனே கிளம்பனும்! இவளை தனியா விட மனசில்லாம வந்தேன்!" எனச் சொல்லிக்கொண்டே அவன் உள்ளே நுழைய, சிவராமன் தாத்தா கூடத்தில் உட்கார்ந்திருந்தார்.
அதற்குள் இவன் வந்திருப்பதை அறிந்து மாதினியின் அப்பாவும் பெரியப்பாவும் அங்கே வர, முகம் கழுவி வந்தாள் மாதினி!
ஸ்வர்ணா தாத்தாவுக்கும் ஜெய்க்கும் காஃபீ கொண்டுவந்து கொடுக்க, வழக்கம்போல அதை ஆற்றி டபராவுடன் மதினியிடம் நீட்டினார் தாத்தா!
"தாத்தா! எனக்கு காஃபீ பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா?" என அவள் எதார்த்தமாகக் கேட்க, அவளை ஒரு விசித்திர பார்வை பார்த்தார் தாத்தா.
யாமினிதான் காஃபீ சாப்பிடமாட்டாள். ஆனால் மாதினி உடன் இருக்கும் பட்சத்தில் தாத்தா எப்பொழுதெல்லாம் காஃபீ சாப்பிடுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் அவளுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.
இது சிறு வயது முதலே அவர்களுடைய பழக்கம்.
தாத்தா பார்த்த பார்வையில், "இல்ல தாத்தா! இப்ப காஃபீ வேண்டாம்; பசிக்குது! எதாவது டிஃபன் இருந்தா சாப்பிடலாம்னு" என அவள் சமாளிக்க, "ப்ச்... எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல நீ ஜெய்யை கல்யாணம் பண்ணிட்டு போயிடுவ! அப்பறம் இந்த தாத்தா உனக்கு எப்படி இந்த மாதிரி காஃபில ஷேர் கொடுக்க முடியும் மாதுகுட்டி!" என வருத்தத்துடன் அவர் சொல்ல, "தாத்தா!" என உறுமினாள் அவள்.
அவளது செய்கை பிடிக்காமல், "மாது என்ன இது! தாத்தாவுக்கு எதிரா குரலை உசத்தரது?" என அவளுடைய அப்பா அவளைக் கண்டிக்க, "விடுங்க மாப்ள! குழந்தைதானே!" என்றார் தாத்தா.
"அப்பா இவ ஒண்ணும் பச்சை குழந்தை இல்ல! வர வர ரொம்ப ஓவரா பண்றா!" என அவளுடைய அம்மா ஸ்வர்ணா மகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க,
"ப்ச்... விடுங்க அத்தை! தாத்தா பிரிவை பத்தி பேசவும்; அவளால தங்க முடியல போலிருக்கு" என சமாதானம் பேசினான் ஜெய்!
அவள் பதில் ஏதும் பேசாமல் தலை குனிந்தவாறு அங்கிருந்து சென்றுவிட, அதைக் கவனிக்காதவன் போல, "தாத்தா! நீங்கக் கவலையே படாதீங்க! மாதினி இப்ப வர மாதிரி எல்லா வீக் எண்ட்ஸுக்கும் நாங்க ரெண்டுபேருமே இங்க வந்துடுவோம்!" என்றான் ஜெய்.
"ரொம்ப சந்தோஷம் கண்ணா!" என்றவர், "நான் என் பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி கொடுத்து கூட தனியா அனுப்பல!
அதுவும் மாது என் கூடவே இருந்துட்டா இல்ல! அதான் அப்படி பேசிட்டேன்" என்றார் தாத்தா சங்கடமாக.
"புரியது தாத்தா! வருத்தப்படாதிங்க!" என்றான் ஜெய்.
சில நிமிடங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தவன், மாதினியை தேடிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் வர, அங்கே மகிழ மரத்தடியில் நின்றுகொண்டு கையில் சில மலர்களை வைத்து அதை முகர்ந்துகொண்டிருந்தாள் மாதினி.
"எல்லாரும் அங்க பேசிட்டு இருக்கும்போது தனியா இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்க?" என ஜெய் அவளைக் கண்டிப்பது போலக் கேட்க,
"அவங்க பேசற டாபிக் எனக்கு பிடிக்கல ஜெய்!" என்றாள் அவள்.
"என்ன பிடிக்கல! உன் மேல இருக்கற அன்புலத்தான தாத்தா அப்படி சொன்னார்!" என அவன் கேட்க,
"தாத்தாவுக்கு என் மேல அன்பு கிடையாது ஜெய்! அந்த மாதினி மேலதான் அதிக பாசம்!" எனத் தெளிவாக அவள் குழப்பவும், "ஏய் லூசு! நீதானே மாதினி!" என அவன் கேட்க, "நான் மாதினி இல்ல! நான் யாமினி! உங்களோட யாமினி! நான் இருக்கும்போது நீங்க எப்படி அவளைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிங்க?
தாத்தா கல்யாணத்தை பத்தி பேசும்போது அதை அக்சப்ட் பண்ற மாதிரி பேசாம இருக்கீங்க!
நேத்து என்கிட்டே அப்படி சொல்லிட்டு இன்னைக்கு அவளை தேடி ஏன் அங்க வந்தீங்க! அவளை உங்க தோள்ல ஏன் சாய்ச்சுகிட்டீங்க!" என அவள் சீற்றமாய் கேட்க,
"மாதினி!" என்றான் ஜெய் பதட்டத்துடன்.
"என்னை அப்படி கூப்பிடாதிங்க! நான் சொல்றது புரியல! நான் யாமினி!" என்றாள் அவள் உருமலாக.
ஜெய் கேள்வியாக அவளுடைய கண்களைப் பார்க்க, காதலுக்கு பதில் அவை கனலைச் சிந்தின!
மிரட்டுவாள் மாயா!
Comentarios