top of page

Nee Sonna Orr Vaarthaikaga! 3

Updated: Mar 17, 2023

பகுதி -3


ஹரி விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே நேரம், அதிகாலை மூன்று மணியை நெருங்கியிருந்தது. அவனுக்காக ஓட்டுநருடன் காத்திருந்த மகிழ்வுந்தில் ஏறியவன், திருவள்ளுரில் இருக்கும் வீட்டிற்குச் செல்வதை விடக் கிண்டியிலுள்ள அலுவலகத்திற்கே சென்று விடலாம் என முடிவு செய்து அங்கேயே வந்து சேர்ந்திருந்தான். அந்தப் பலமாடிக் கட்டடத்தில் இரண்டு தளங்களில் அவனுடைய அலுவலகம் இயங்கி வந்தது.


அங்கேயே தங்கி வேலை செய்வதற்காகப் பிரத்தியேகமாக ஒரு அறையைத் தனக்காக தயார் செய்து வைத்திருந்தான்.


ரெஃப்ரஷ் செய்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தவனின் நினைவுகள் கடந்த காலதிலிருந்து வெளிவர முடியாமல் அதிலேயே சிக்கிச் சுழன்றன.


***


ஸ்வேதாவுடனான அந்த அறிமுகத்திற்குப் பிறகு, பாலுவுடன் சேர்ந்து ஹரியும் அடிக்கடி அவர்களைச் சந்திக்க வருவான்.


பெரும்பாலும் மதிய உணவு அனைவரும் ஒன்றாகவே சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தார்கள். நாட்கள் அதன் வேகத்தில் ஓட, ஹரியும் அவர்களுள் ஒருவனாகிப் போனான்.


ஸ்வேதாவை தன் இதயம் முழுவதிலும் நிறைத்து வைத்திருந்தாலும், நட்பு என்னும் எல்லைக் கோட்டைத் தாண்டி அவளை நெருங்க விரும்பவில்லை ஹரி.


அவள் மற்ற எல்லோரிடமும் எப்படிப் பழகுகிறாளோ அப்படியேதான் தன்னிடமும் பழகுகிறாள் என்பதையும் நன்றாக அறிந்திருந்தான்.


இப்பொழுது போன்றே படித்தாள் என்றால் கோல்ட் மெடல் வாங்கும் வாய்ப்பும் அவளுக்கு உள்ளதால் அவள் மனதைக் குழப்ப அவன் விரும்பவில்லை.


பாலு உடனில்லாமல் தனிமையில் அவளை அவன் சந்தித்ததும் இல்லை, சந்திக்க முயன்றதுமில்லை. ஆனால், ஒருநாள் அப்படி ஒரு வாய்ப்பு தானாகவே அவனுக்கு அமைந்தது. அந்த நாள்தான் அவனை முழுவதுமாக மாற்றிப்போட்டது.


***


ஒருநாள் மதியம் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நேரம் அவர்களுக்கு அருகில் வராமல், சற்றுத் தூரத்திலேயே நின்றுகொண்டு ஸ்வேதவைத் தன்னருகில் வருமாறு ஜாடை செய்தாள், வசுதா.


அவள் ஸ்வேதாவைத் தனியாக அழைத்ததில் சற்றுக் கோபம் கொண்ட பாலு, "ஏன் மகாராணி நாங்கல்லாம் இருந்தால் இங்க வர மட்டாங்களாமா? ரொம்ப ஓவரா பண்றா" என்று எகிற,


அவளிடம் வருவதாக ஜாடை செய்துவிட்டு, "ஐயோ பாலுண்ணா, அவ நிலமதான் உங்களுக்குத் தெரியும் இல்ல? ப்ளீஸ் கோவப்படாதீங்க. நான் அவகிட்ட என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்" என்று பாலுவிடம் அவள் சொல்லிவிட்டுப் போக,


"இவ அடங்கவே மாட்டாடா, இவள பார்த்தா மட்டும் நம்மளயே கட் பண்ணி விட்டுட்டுப் போயிடுவா" என்று அவன் ஹரியிடம் அங்கலாய்க்கவும்,


"அவளப் பத்திதான் உனக்குத் தெரியுமில்ல, அந்தப் பொண்ணுக்கு ஏதாவது உதவி தேவையா இருக்கும், அதுதான் போயிருப்பா. நீ விடு மச்சான்" என்று அவனை சமாதானப்படுத்த முயன்றான் ஹரி.


இதையெல்லாம் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷினியோ, "இனிமே ஸ்வேதா மேடம் நேரா கிளாஸுக்குதான் வருவாங்க, நான் போறேன்" எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட,


"பெருசா ஒண்ணுமில்லடா, இந்தம்மாதான் சரியான படிப்பாளி ஆச்சே! அந்த வசுதா இவகிட்ட லசன்ல ஏதாவது டவுட் கேட்டிருப்பா, ஆனா எதுக்கு இவள தனியா அழைச்சிட்டுப் போகணும்? அதத்தான் கேட்கறேன். இங்க நம்ம முன்னாலயே சகஜமாகக் கேட்கலாமா இல்லையா? காலேஜ் வரும்போதும் சரி திரும்பிப் போகும்போதும் சரி ஸ்வேதாவோட ஒட்டிட்டே திரிவாளாம், ஆனா நம்ம யாரோடவும், ஏன் வர்ஷினியோடக் கூட சகஜமா பேசமாட்டாளாம்! இவ இப்படி இன்சல்ட் பண்றா, ஆனா இவ விஷயத்துல மட்டும் ஸ்வேதா நம்ம பக்கம் இருக்கவேமாட்டா" என புலம்ப,


"சரி விடுடா, அவளே ஒரு நாள் புரிஞ்சிப்பா" என்று முடித்தான் ஹரி.


ஆனால் அப்படி ஒருநாள் அவளது வாழ்வில் வரும்பொழுது காலம் கடந்து போயிருக்கும் எனபதை அறிவானா ஹரி?


***


இப்படியே சில தினங்கள் கடந்திருந்த நிலையில் ஒருநாள், ஏதோ விசேஷம் என்று பாலு கோவைக்குச் சென்றதால் கல்லூரிக்கு வரவில்லை. முதல் பகுதி வகுப்புகள் முடிந்தவுடன் வகுப்பிலிருந்து வெளியில் வந்த ஹரி எப்பொழுதும் அவர்கள் அமரும் சரக்கொன்றை மரத்தடியில் ஸ்வேதா மட்டும் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.


அவள் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்து அதில் ஆழ்ந்திருந்தாள். சத்தம் செய்யாமல் அருகில் வந்தவன் அவள் காதருகில் ஒரு சொடுக்குப் போட அதிர்ந்து திரும்பியவள், "ஓஹ்,. ஹரி! நீங்கதானா" என்று சிலிர்க்க,


"நானேதான், இதுல என்ன சந்தேகம்" என்றவன், "ஆமாம் நீ என்ன இந்த நேரத்துல, அதுவும் உன் தலை வாலு இதெல்லாம் இல்லாம தனியா உட்கார்ந்து இருக்க?" என்று கேட்க,


அதற்கு அவள், "என்ன தல? என்ன வாலு?" என விழிக்கவும்,


"வர்ஷினியும், வசுதாவும்தான்" என்று அவன் சொல்லவுமே காண்டானவள்,


"ஹரிஈஈஈ" என்று பல்லைக் கடிக்க,


"ஹேய், சும்மாதான் சொன்னேன், கூல், கூல்" என்றவன்,


"எங்க அவங்க யாரையும் ஆளக்காணும்?" என்று கேட்க,


"ஒரு இன்டர் காலேஜ் மீட், டான்ஸ் காம்பெடிஷன். ரெண்டு பேருமே கலந்துக்கறாங்க, அதுக்கான ரிகர்சல் போயிட்டு இருக்கு. க்ளாஸ்ல பாதிபேர் அதுக்குப் போயிட்டதால இந்த ஹவர் ஃப்ரீ, அதுதான் இங்க வந்து உட்கார்ந்துட்டேன்." என்று அவள் நீளமாகக் கூற,


"என்ன புக் படிக்கற" எனக் கேட்டான் ஹரி.


"ஜூ.ஆர்.ஈ எக்ஸாம் கைட், பிஈ முடிச்ச உடனே எம்.எஸ். பண்ணலாம்னு ஒரு ஐடியா இருக்கு, அதான்" என்று அவள் கூறவும்,


"அப்படின்னா மேடமும் யூ.எஸ். போற பிளான்லதான் இருக்காங்களா? ம்ம்" என்று நினைத்த ஹரி, ‘பரவால்ல, ஃபியூச்சர்ல நம்ம ப்ளேஸ்மென்ட் ஆகி அங்க போகும்போது வசதியாத்தான் இருக்கும்’ என்று எண்ணியவாறே,


"அப்ப அங்கயே வேலை செய்யற ஒரு பையனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டா வசதியா போய்டும் இல்ல?" என்று கேட்க,


"என்னாதூ...! கல்யாணமா? சான்ஸே இல்ல ஹரி, நான் எம்.எஸ். படிக்க நினைக்கறதே கல்யாணத்துல இருந்து தப்பிக்கத்தான்" என்று ஸ்வேதா கூறவும்,


கேள்வியில் நெற்றி சுருங்க, "புரியல" என்றவனுக்கு,


"இல்ல ஹரி, உண்மையா சொல்லணும்னா எனக்கு ஸ்கூல் டீச்சர் ஆகணும்னுதான் ஆச, அதுவும் கிண்டர் கார்டன் லெவல்ல. ஆனா, நான் ஸ்கூலிங் முடிச்ச உடனே இதை அப்பா கிட்ட சொன்னப்ப அவர் ஒத்துக்கவே இல்ல" என்று குறைப்பட்டுக்கொள்ள,


"ஏன்?" என்று கேட்டவனிடம் வழக்கம் போல ஒரு கதையையே சொன்னாள் ஸ்வேதா.


"அப்பாவோட பிறந்தவங்க நாலு பேர், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பி. அப்பா ஸ்கூல் படிப்பு முடிக்கற சமயமா பார்த்துதான் அத்தைகளுக்குக் கல்யாணம் நடந்தது. சித்தப்பாங்க ரெண்டு பேரும் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தாங்க. ரெண்டு மாமாவுமே பெரிய இடம். அதுக்குத் தகுந்தபடி கல்யாணத்தை கிராண்டா செஞ்சதால தாத்தா ஃபினான்சியலி கொஞ்சம் சிரமத்துல இருந்தாங்க. ஸோ, அப்பாவால அவர் ஆசைப்பட்ட இன்ஜினியரிங் படிப்பைப் படிக்கமுடியாம போயிடுச்சாம்.


தென், அப்பா படிச்சு முடிச்சு வேலைக்குப் போன பிறகு நிலைமை சரியாகி சித்தப்பாக்களை நல்லா படிக்கவெச்சாங்க. பெரிய சித்தப்பா ஆடிட்டர், சின்ன சித்தப்பா கம்ப்யூட்டர் என்ஜினியர். அதுவும் யூ.எஸ்.ல க்ரீன் கார்டு வாங்கி செட்டில் ஆயிட்டார். ஸோ, அவங்க படிப்புக்குத் தகுந்த மாதிரி, படிச்சு நல்ல வேலைல இருக்கறவங்களா பார்த்து கல்யாணம் செஞ்சு வெச்சாங்க.


ரெண்டு அத்தைக்கும் சேர்த்து மொத்தம் அஞ்சு பசங்க. அதுல ஃபோர் என்ஜினயர்ஸ் அண்ட் ஒரு அக்கா டாக்டர். கேட்கணுமா, நாங்களும் அதே மாதிரி படிக்கலன்னா அப்பாவுக்குத் தலைகுனிவாகிடுமாம். ஸோ, எங்களையும் இந்தப் படிப்புல தள்ளிவிட்டுட்டார்.


அண்ணா இஷ்டமாத்தான் படிச்சான். ஆனா அவனுக்கு பி.ஜி. பண்ண இன்ட்ரெஸ்ட் இல்ல. கேம்பஸ்ல செலக்ட் ஆகி வேலைல ஜாயின் பண்ணிட்டான்.


நானும் பி.ஈ முடிச்சுட்டு, உடனே வேலைக்கு வேற போயிட்டேன்னு வைங்க, நீங்க சொன்ன மாதிரியே ஒரு அமெரிக்க மாப்பிள்ளையைப் பார்த்து எங்கப்பா என்னைத் தள்ளிவிட்டுடுவாரு" என்று ஸ்வேதா விளாவரியாகச் சொல்லிக் கொண்டே வர, "அதனாலதான் இந்த எம்.எஸ். படிக்கற ஐடியாவா?" என்று கேட்டான் ஹரி.


"இல்லையா பின்ன? இங்க இருந்தே படிக்கலாம்னா, கல்யாணம் பண்ணிட்டு படின்னு சொன்னாலும் சொல்லிடுவார். அத்தைங்க வேற எப்பவும் கல்யாணத்தப் பத்தி பேசிப்பேசியே டென்ஷன் செய்யறாங்க" என்று அவள் சொல்லவுமே,


மனதிற்க்குள் ‘ஐயோ’ என்று அதிர்ந்தவன், "மேல படிக்கறது நல்ல விஷயம்தான்! ஆனா, என்னைக்கா இருந்தாலும் நீ கல்யாணம் செஞ்சிட்டுதான ஆகணும்" என்று கேட்க,


"அது இல்ல ஹரி, என்னால ஸ்கூல் டீச்சராத்தான் ஆக முடியல. ஆனாலும் டீச்சிங் லைன்லதான் வரணும்னு ஒரு சின்ன ஆசை. முதல்ல எம்.எஸ்ஸ நல்லபடியா முடிச்சிட்டு இங்க வந்து ஏதாவது காலேஜ்ல, லெக்சரர்ராக வேலைப் பார்க்கணும். அப்பறம்தான் கல்யாணத்த பத்தியே யோசிப்பேன்" என்று ஸ்வேதா சொல்லவும்தான் சற்று ஆசுவாசம் அடைந்தான்.


மனதிற்குள் எதுவோ குறுகுறுத்துக்கொண்டே இருக்க, தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற ஆவலில் கேட்டான், "அப்படின்னா, உனக்கு எந்த மாதிரி மாப்பிளை வேணும்?" என்று.


"சரி, நீங்க சொல்லுங்க, உங்க கெரியர் பிளான் என்ன?" என்று பட்டெனக் கேட்டவளிடம், "நாங்கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லலையே" என்றான் கறாராக.


"நீங்க முதல்ல சொல்லுங்க, நான் என் பதிலைச் சொல்றேன்" என்றாள் அவளும் விடாப்பிடியாக.


"ம், எப்படியும் கேம்பஸ்ல ரெண்டு மூணு கம்பெனிலயாவது செலக்ட் ஆகும். இருக்கறதிலேயே பெஸ்ட்டா பார்த்து ச்சூஸ் பண்ணி வேலையில ஜாயின் பண்ணிடுவேன். தென், நல்ல சேலரி, ஆன்சைட்ன்னு செட்டிலாக வேண்டியதுதான்" என்று ஹரி இலகுவாகப் பதில் கூறவும் ஸ்வேதாவின் உதடுகள் இகழ்ச்சியுடன் வளைந்தன.


"இப்படி திங்க் பண்ற ஒருத்தர கண்டிப்பா நான் செலக்ட் பண்ண மாட்டேன்!" என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திராதப் பதிலைச் சொல்லி அவனை அதிர வைத்தாள் அவனுடைய மனதுக்கினியவள்.


மிகவும் பாடுபட்டு முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு, "அப்பறம், வேற எப்படிப்பட்டவன எதிர்பார்க்கறீங்க மேடம்? வானத்துல இருந்து வந்து குதிக்கணுமா?" என்று சிரித்துக்கொண்டே கேட்பதுபோல் ஹரி கேட்க,


"ஏன், எனக்காக ஒருத்தன் வானத்துல இருந்து வந்து குதிக்க மாட்டானா என்ன?" என்று சிரித்தவாறே பதில் கொடுத்தாள் ஸ்வேதாவும்.


"வருவாம்மா வருவான், நீ மேல சொல்லு" என்று அவன் தன் காரியத்திலேயே கண்ணாக இருக்க,


"அது!” என்று கெத்தாகச் சொன்னவள், “எனக்கு பெருசா எந்த எதிர்பார்ப்ப்பும் இல்ல ஹரி, அவன் ஏதாவது ஒரு பிசினஸ் செய்யறவனா இருக்கணும். பெரிய லெவல்ல இல்லன்னாலும், சொந்த தொழிலா இருக்கணும், ஒரு பத்து குடும்பத்தையாவது அவன் வாழ வைக்கணும். எல்லாத்துக்கும் மேல, எங்கப்பா மாதிரி, நான் விரும்பி செய்யற எதுக்கும் எனக்குத் தடையா இருக்கவே கூடாது, அவ்வளவுதான்" என்று முடித்தாள்.


அவனோ அத்துடன் விடாமல், "மத்ததெல்லாம் ஓகே, அது என்ன சொந்த பிசினஸ், ஏன்?" என்று கேட்க,


"சொல்லுவாங்க இல்ல 'சிங்கத்துக்கு வாலா இருக்கறத விட எலிக்குத் தலையா இருக்கறதுதான் உயர்வு'ன்னு அது மாதிரி, பத்தோட பதினொன்னா இல்லாம அவனோட இடத்துல அவன்தான் உயர்ந்து இருக்கணும். சாரி! இது என்னோட மைன்ட் செட், நான் அதுக்காக உங்கள மாதிரி ஒரு ஆம்பிஷன்ல இருகறவங்களக் குறைவா சொல்லல. எனக்கு என்ன விருப்பம்னு சொன்னேன் அவ்வளவுதான்" என்றவள்,


"இங்க நிறைய பேர் இருக்காங்க ஹரி! பெரிய பின்புலம் இல்லாம, ரொம்பவும் கஷ்டப்பட்டு பேங்க்ல லோன் வாங்கிப் படிச்சு, அதை அடைக்க உடனே நல்ல சம்பளத்துல ஒரு வேலைல சேர்ந்து ஒரு கட்டத்துல குடும்பத்தைக் காப்பாத்தறதுக்காக அதுல இருந்து வெளியிலயே வரமுடியாம திணறிட்டு இருகாங்க. உண்மைல அவங்க நிலமைல இருக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம்தான்.


ஆனா, உங்களப் மாதிரி, பாலு அண்ணா மாதிரி வசதியான குடும்பப் பின்னணியில இருக்கறவங்க ஏன் இந்தப் பாதையை சூஸ் பண்ணனும்? உலகத்துலயே இவர்தான் நம்பர் ஒன் பணக்காரர், இவர்தான் நம்பர் டூன்னு சொல்லிக்கறாங்க இல்ல, அவங்கள மாதிரி மோனோபாலி ஆட்களால மட்டும் நம்ம நாட்டோட பொருளாதாரம் உசந்துடாது, சின்ன சின்னதா நூத்துக்கணக்கான, ஆயிரக்கணக்கான மைக்ரோ இண்டஸ்ட்ரீஸ்தான ஒரு நாட்டோட பெரிய லெவல் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான காரணமா இருக்க முடியும்?" என்று கேட்டுக்கொண்டே போனவள் வகுப்பிற்கு நேரமாவதையே அப்பொழுதுதான் கவனித்தாள்.


உடனே பரபரப்பானவளாக, "ஐயோ கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு, அப்பறமா பார்க்கலாம் பை" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, அவள் பேசிய வார்த்தைகளின் தாக்கத்தில் கல்போல் இறுகி உட்கார்ந்திருந்தான் ஹரி. யுகங்கள் போன்று நகர்த்த சில நொடிகளில், மெசேஜ் வந்ததைத் தெரிவித்த கைப்பேசியின் ஒலியில் திடுக்கிட்டு தன் நினைவுக்கு வந்தவன், வகுப்பறை நோக்கிச் சென்றான்.


ஆனால் பாடத்தில் கவனம் செலுத்த இயலாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு விடுதி அறைக்கு வந்தவனை அவளுடைய ஒவொரு வார்த்தைகளும் ஊசிப் போல் குத்திக்கொண்டிருந்தது.


இவ்வளவு நாட்களாக அவனுக்கும் அவனுடைய தந்தைக்கும் இடையில் பெரும் சுவராய் எழுந்து நிற்கும் பிரச்சினையும் இதுதானே! அவரோ, தான் நடத்தி வரும், இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் சிறிய அளவிலான நிறுவனத்தை மகன் தொடர்ந்து நடத்தமாட்டானா என்று ஏங்கிக்கொண்டிருக்க, ஹரியோ வெளிநாட்டில் வேலை என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தான்,


குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது அதைத் தள்ளிப்போடுவதால் ஒரு வேளை அவன் மனம் மாறக்கூடுமோ என்றுதான் அவர் அவனை வற்புறுத்தி எம்.ஈ. படிக்க அனுப்பியதே.


இந்த நிமிடம் வரை தன் மனதில் தந்தையின் தொழிலைக் கவனிப்பது பற்றிய எண்ணமே இல்லாதிருந்த ஹரி, அவள் சொன்ன ஒரு வார்த்தைக்காக... அவளே அறியாத அவன் அவளிடம் கொண்ட அளவற்ற காதலுக்காக... அவனுடைய தந்தையின் தொழிலை முயன்று பார்க்கலாமென்று, முடிவெடுத்தான்.


அந்த நொடி அவன் நினைத்திருக்கவில்லை அந்தத் தொழில் அவனை அவ்வளவு ஈர்க்குமென்று!


ஒரு சுழலாய் மாறி தன்னை முழுவதுமாக உள்ளே இழுத்துக்கொள்ளுமென்று!


சிற்சில சறுக்கல்களைத் தாண்டிய அளப்பரிய வெற்றிகளைக் கொண்டுவந்து குவிக்கும் என்று!


இலட்சத்தில் ஒருவனாக மிகப் பெரிய உயரத்தில் அவனைக் கொண்டுபோய் வைக்குமென்று!


Recent Posts

See All
Nee Sonna Oor Vaarthaikaga! 14

பகுதி - 14 ஏழு மணிக்கு வந்து சேர வேண்டிய இரயில் மாழையினால் தாமதமாக ஏழு நாற்பதுக்குத்தான் பழவந்தாங்கல் இரயில் நிலையத்தை அடைந்தது! மழை...

 
 
 
Nee Sonna Oor Vaarthaikaaga! 13

பகுதி - 13 ஹரியுடனான அந்தத் தருணம் தந்த இனிமையை அனுபவித்தவாறே சொல்லத் தொடங்கினாள் ஸ்வேதா வசுதாவுடனான அவளது பிணைப்பிற்கான காரணத்தையும்...

 
 
 
Nee Sonna Oor Vaarthaikaga! 12

பகுதி -12 ஸ்வேதா பி.ஈ. படிப்பின் முதலாம் ஆண்டிலும், நந்தகுமார் மற்றும் பாலசரவணன் இருவரும் நான்காம் ஆண்டிலும் அதே கல்லூரியில் படித்துக்...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page