21. நம்பிக்கை நட்சத்திரம்.
நிதரிசனத்தில்...
அவர்களது அறைக்குள் நுழைந்த அடுத்த நொடியே அடக்கி வைத்திருந்த உணர்வுகள் வெடிக்க, மங்கையை அப்படியே சுவருடன் பதித்து அவள் அங்கிருந்து நகர முடியாதபடி தடுப்பாக நின்றவன், “அன்னைக்கு நடந்த கொலை முயற்சி, யார குறிவெச்சு நடந்துது? உன்னையா இல்ல என்னையா?” என எரிமலையாகக் குமுறினான் தாமோதரன்.
முன்னமே ஓரளவுக்கு இதை எதிர்பார்த்தே வந்ததால் சற்றும் நிதானம் தவறாமல் அவனது விழிகளை ஆழ்ந்து ஊடுருவிப் பார்த்தவள், "அதான் உனக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சே! அத நான் வேற உனக்கு சொல்லனுமா, தாமு?" எனக் கேட்டாள் சிறு தயக்கமும் இன்றி.
ஏற்கனவே நிதானமிழந்து கொதித்துக் கொண்டிருந்தவனின் கொஞ்ச நஞ்சப் பொறுமையும் காற்றில் பறக்க, "அதையும் நீ உன் வாயாலேயே சொல்லு, காது குளிரக் கேட்டுப் பெருமைப்பட்டுக்கறேன்" என்றான் எகத்தாளமாக.
“என்ன குறி வெச்சு நடந்த அட்டாக்தான் அது, நோ டவுட்” என்றாள் அவனை ஏறெடுத்தும் பார்க்கத் தயங்கி.
"உன்னோட போராளி புத்தி உன்னை விட்டு எப்படி போகும்னு சொல்லி முதல்ல இருந்தே எனக்கு சந்தேகம் இருந்துட்டே இருந்துச்சுடீ! இங்க வந்ததும் வராதுமா, அதுவும் வனா கல்யாணம் முடியறதுக்குள்ள பெருசா என்ன செஞ்சுடப்போறன்னு சொல்லி கொஞ்சம் மெதப்பா இருந்துட்டேன். ஆனா நீ இங்க வந்திருக்கிறது வனா கல்யாணத்துக்காக இல்லன்னு இப்பதான புரியுது!”
”எவ்வளவு நெஞ்சழுத்தன்டீ ஒனக்கு. எங்கிட்டயிருந்தே உன்னோட ஒரிஜினல் ஐடென்டிடிய மறச்சிட்டு, சாமானியப்பட்டவ மாதிரி நடமாடிட்டு இருக்கல்ல? உண்மைய சொல்லு, இப்ப நீ என்ன செஞ்சுட்டு இருக்க?" என்று கர்ஜித்தான் தாமோதரன்.
நிச்சயமாக இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் வரை அவளை விடமாட்டான் என்பது புரிய, "இவ்வளவு தூரம் நீ கேக்கறதுனால சொல்றேன், தெரிஞ்சுக்க" என்றவள்,
"நான் ஒரு என்விரான்மென்டலிஸ்ட்! தட் இஸ், ஐம் ஆஃப்டர் ஆல் அ என்விரான்மென்டல் டிஃபெண்டர். இன்டர்நேஷனல் லெவல்ல இயங்கிக்கிட்டு இருக்கிற, 'பீப்பிள் ஃபார் என்விரான்மென்டல் ஜஸ்டிஸ் எனிவேர்'ங்கற என்-ஜி-ஓ. வோட இன்டியன் பிரசிடெண்ட். வி.நிலமங்கைங்கற பேர சுருக்கி எங்க இயக்கத்துல எல்லாரும் என்ன 'வெனம்'ன்னுதான் கூப்பிடுவாங்க. அந்தப் பேர்லதான் நான் ஃப்ளோரா அன்ட் ஃபௌனா சம்பந்தமா நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிட்டு இருக்கேன். அதெல்லாம் தொகுத்துத்தான் புத்தகமா வெளியிட்டுட்டு இருக்காங்க, போதுமா?" என்று முடித்தாள்.
அவள் சொன்ன மற்ற அனைத்தையுமே அவன் தெரிந்து வைத்திருந்தாலும், அவள்தான் 'வெனம்' என்பது இப்பொழுது அவள் சொல்லித்தான் தாமோதரனுக்கே தெரிய வந்தது.
இந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் அவரை எண்ணி அவன் பெருமைப்பட்டிருப்பானோ என்னவோ! ஆனால் இந்த நொடி அவனால் இதை இலகுவாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.
“நாம இங்க தொடங்கப்போற கெமிக்கல் பேக்டரிய முடக்க, இன்டர் நேஷனல் லெவல்ல சமூக ஆர்வலர்னு சொல்லிட்டு ஒரு கும்பல் நம்ம நாட்டுக்குள்ள வந்து இறங்கியிருக்காம், மேலிடத்துல இருந்து தகவல்! அதுவும் அது ஒரு சீக்ரட் சொசைட்டிங்கறாங்க. அதுல முக்கியமானவங்க எட்டு பேர் இருக்காங்களாம். என்ன பிரச்சனன்னா, அவனுங்க யாரு... என்ன...ன்னு யாருக்கும் தெரியாது. அதுல ஒருத்தன் சோஷியல் மீடியால வாயைத் திறந்தா கூட, இங்க பத்திட்டு எரியும்! அவங்கள அடையாளம் கண்டுபிடிச்சு அடக்கி வைக்கணும், டீ.ஜே. முடிஞ்சா போட்டுத் தள்ளினாக் கூட சரி! மத்த டீடைல்ஸ் எல்லாம் ஒவ்வொண்ணா நமக்கு வரும். நீங்கதான் இந்த விஷயத்தை டீல் பண்ணனும், டீ.ஜே. இதை மட்டும் சரியா செஞ்சிட்டோம்னா, அடுத்த எலெக்ஷன்ல முதல்வர் சீட்டு எனக்குதான்" என அரசியல்வாதி அருட்பிரகாசத்தைச் சிறைச்சாலையில் சந்திக்கச் சென்ற தினம் அவர் சொன்ன தகவல் நினைவுக்கு வர, அதுவும் அவர் குறிப்பிட்ட அந்த எட்டுப்பேரில் இவள்தான் முதல் நபர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்க, இன்னும் அதிகம் கொதித்துப் போனான்.
"ஸோ, நீ தெரிஞ்சேதான் உன் உசுர ஆபத்துல வச்சிருக்க, அப்படித்தான?” எனக் கேட்டவனின் கண்களில் கனல் தெறித்தது. அவனது உணர்வுகளை உள்வாங்கியவளாக மௌனமாக அவனைப் பார்த்திருந்தாள் மங்கை.
சலனமற்ற அவளது பார்வையை எதிர்கொள்ள முடியாதவனாக, தன் சக்தியெல்லாம் வடிந்து போனதுபோல தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தவன், "உனக்கு என் மேல இருக்கிற காதலையும் பொசசிவ்நஸ்ஸையும் முழுசா புரிஞ்சுட்டதுனாலதான் ஒன்ன கட்டிக்கிட்டு உன் கூட குடும்பம் நடத்தனும்னு முடிவு செஞ்சேன். தொடக்கத்துல என்னோட பிடிவாதத்தாலையும் திமிராலயும் உன்னை என் இஷ்டப்படி வளைக்க முயற்சி செஞ்சேன்தான். ஆனா அதனால கண்ணு முன்னால நடந்து போன இழப்பை எல்லாம் பார்த்த பிறகு, உணர்ந்து திருந்தி என்ன முழுசா மாத்திக்கிட்டேன்.”
”அதனாலதான்டீ, உன்னோட வார்த்தைக்குக் கட்டுப்பட்டு ஏழு வருஷத்துக்கும் மேல ஒன்ன விட்டு விலகியே இருந்தேன். எந்த விதத்திலும் உன்கிட்ட நெருங்க நான் முயற்சி செய்யல.”
”அதே மாதிரிதான் நீயும் என்ன புரிஞ்சுகிட்டு உன் மனசு மாறி என்ன நெருங்கினன்னு நெனச்சேன். ஆனா நீ என்னடீ செஞ்சு வச்சிருக்க? உன் உசுரு போவறதுக்குள்ள, எனக்கு வாழ்க்க பிச்சைப் போடணும்னுதான் ஒன்ன நீ தொடவுட்டியா?”
”சீச்சீ… என்ன எவ்வளவு கேவலமா நினைச்சிட்டடீ நீ? அசிங்கமா இருக்குடீ எனக்கு! உன்னோட உடம்பு மட்டுமே எனக்குத் தேவையா இருந்திருந்தா இவ்வளவு வருஷம் இதுக்காக நான் காத்துட்டு இருந்திருப்பனா? என்ன உசுரோட கொன்னுட்ட மங்க நீ!" என ஆற்றாமையுடன் அனற்றியவனின் கண்களில் கோபத்திலும் இயலாமையிலும் நீர் கோர்த்தது.
அவனுடைய பேச்சில் உறைந்து போய் நின்றவள் தன்னை மீட்டுக் கொண்டு அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.
அவனது முகத்தைத் திருப்பி தன் முகம் காணச் செய்தவள், "ஒரு நாளானாலும் உன் கூட வாழ்ந்து உசுர விட்டுட்டா போதும்னு சொன்னியே, இப்படி ஒரு எண்ணம் உனக்கு மட்டும்தான் இருக்கணுமா? ஏன் எனக்கு இருக்கக் கூடாதா? இந்த தாமோதரன தாண்டி என் வாழ்க்கையில எனக்குன்னு வேற யாராவது இருக்காங்கன்னு நீ நெனைக்கிறியா, தாமு? என்னோட இந்தப் போராட்டத்துல என் உசுரு போனாலும் போவலாம்! இல்ல, இதுல இருந்தெல்லாம் மீண்டு வந்து உன் கூட நான் இன்னும் ஒரு அரை நூற்றாண்டு வாழவும் செய்யலாம்! ஆனா, எதிர்காலத்த நெனச்சு இப்பவே என்னால பகல் கனவு காண முடியாது, தாமு!”
”ஏன்னா… ஏழு வருஷத்துக்கு முன்னால நான் நெனச்சு பயந்த என்னோட எதிர்காலம், இன்னைக்கு என்னோட நிகழ்காலமா இருக்கும்போது, எல்லாமே பாஸிட்டிவா மாறி இருக்கு! முக்கியமா என்னோட தாமு, நான் கனவுல கூட நினைச்சு பாக்காத அளவுக்கு மாறி நிக்கறான்!”
”அதனாலதானோ என்னவோ இந்த நிகழ் காலத்துல, நமக்கு கிடைச்சிருக்கிற இந்தக் கொஞ்சம் அவகாசத்த, நம்ம ரெண்டு பேருக்குமே ஒரு சந்தோஷமான தருணமா அமைச்சிக்க ஆசப்பட்டேன். மத்தபடி நீ சொல்ற மாதிரி எதையுமே திட்டம் போட்டுச் செய்யல. மனசு அமைதியாவும் சந்தோஷமாகவும் இருக்கிற ஒரு நொடிப்பொழுதுகுள்ள எல்லாமே இயற்கையா நடந்து போச்சு அவ்வளவுதான். இத தயவு செஞ்சு கொச்சைப்படுத்திப் பேசி நம்ம ரெண்டு பேரையுமே அசிங்கப்படுத்தாத" என்றாள் தெளிவாக.
"இதெல்லாம் நல்லா, வக்கணையா பேசு! அதுக்காக நீ உன் உசுர பணயம் வைக்கிறத வேடிக்கைப் பார்த்துட்டு என்ன மொக்கையா உக்காந்திருக்க சொல்றியா?" என்று கேட்டான் கொஞ்சம் கூட இறங்கி வராமல்.
"ஸோ… என்னோட உசுர காப்பாத்தறதுக்காக என்ன செய்யப் போற, தாமு? முன்ன செஞ்சியே அதே மாதிரி இதோ இந்த ரூமுக்குள்ள என்ன போட்டுப் பூட்டி வெக்கப்போறியா?" என்று அவள் குத்தலாகக் கேள்வி கேட்க, உண்மையில் உயிர்வரை அடி வாங்கிப்போனான்.
அவளுக்குப் பதில் சொல்ல முடியாத தவிப்புடன் அமர்ந்திருந்தவனின் கண்களில் கசிந்த வலியை உணர்ந்தவளாக, "சாவுங்கறது யாருக்கு வேணாலும் எப்ப வேணாலும் ஏற்படும் தாமு! ஆனா அது அர்த்தம் உள்ளதா இருக்கணும், அதுதான் முக்கியம்!" என்றவள் "இந்தக் காடுகள்ல கூட்டம் கூட்டமா வசிக்கிற காட்டெருமை வரிக்குதிரை இதுபோல அனிமல்ஸ் கிட்ட எல்லாம் ஒரு வினோதமான பழக்கம் இருக்கு உனக்குத் தெரியுமா?" என்று கேட்டாள்.
"ஐயோ மங்க, நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ என்ன இப்படி வழக்கம்போல கத சொல்லி என்ன டைவர்ட் பண்ண ட்ரை பண்ற?" என்றான் ஆற்றாமையுடன்.
"ப்ளீஸ் தாமு நான் என்ன சொல்ல வரேன்னு தயவு செஞ்சு முழுசா கேளு" என்று சொல்ல அவளை எரிப்பது போல பார்த்தபடி 'சொல்லித்தொல' என்பதாக மௌனம் காத்தான்.
"இந்த மாதிரி விலங்குகளோட ஒரு மந்தைலயே ஆயிரக்கணக்கான காட்டெருமையோ இல்ல வரிகுதரையோ இருக்கும். ஒரே மந்தைக்குள்ளேயே அதுங்க மூணு விதமான குழுக்களா பிரிஞ்சிருக்கும்.
பொதுவா இந்த மாதிரி விலங்குகள் எல்லாமே நிறைய புல்லு இருக்கிற சமவெளியிலதான் வாழும். இதுல ஒரு குழு நுனிப்புல்ல மட்டும்தான் சாப்புடும். இன்னொரு குழு நடுப்பகுதியில் இருக்கிற புல்ல சாப்புடும். கடைசியா இருக்கிற இன்னொரு குழு அடிப்பகுதியில இருக்கிற புல்ல சாப்புடும்" என்று சொல்லிக் கொண்டே வந்தவள் அவனுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி, "நம்ம பாழாப்போன மனித இனத்த தவிர இங்க இருக்கிற ஒவ்வொரு உயிரினமும் அதுக்கான அறத்தை மீறாமத்தான் வாழ்ந்துட்டு இருக்கு" என்று சொல்லி நிறுத்தப் புதிதாக கேள்விப்படும் இந்த தகவல் வியப்பளிக்கவே அவள் கூற்றை ஆமோதிப்பது போல தலையசைத்தான்.
"ஒரு கட்டத்துல அந்த பர்டிகுலர் இடத்துல இருக்குற புல்லெல்லாம் தீர்ந்து போயிடும். அந்த இடத்துல புது புல்லு முளைச்சு வளர்ந்து வர வரைக்கும் அந்தக் கூட்டத்தால அங்க வாழ முடியாது. உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமா செத்துப் போற சூழ்நிலை உண்டாகும், ஸோ… அந்த மந்தை முழுசும் கூட்டத்தோட வேற ஒரு பகுதிக்கு மைகிரேட் ஆவும்.”
”அந்த மாதிரி சமயத்துல முதலைகள் கூட்டம் கூட்டமா வாழற ஆபத்தான நீர் நிலைகளைக் கடக்கிற நிர்பந்தமும் அதுங்களுக்கு ஏற்படும். ஒரு ஆத்த கடக்கணும்னு சொன்னா, அங்க ஏதாவது ஆபத்து இருக்கான்னு சொல்லிக் கூட்டமா கரையிலேயே நின்னு கவனமா பார்த்துட்டு இருக்கும்”
"என்ன, இதுங்கல்லாம் இப்படி கும்பலா வேடிக்கை பார்த்துட்டு நிக்கும்போது, மொதல அப்படியே பாஞ்சு ஒவ்வொன்னா இழுத்துட்டு போயிரும், அதான" என்றான் அவள் சொல்லும் கதையைக் கேட்கும் பொறுமை இல்லாதவனாக.
"அதுதான் இல்ல, காரணம்… உணவு கிடைக்காம ரொம்ப நாளா பட்டினி கிடக்கற முதலைங்களுக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். மொத்தமா ஒரு ஜாக்பாட் அடிச்ச மாதிரின்னு வச்சுக்கோ! அதனால தந்திரமா தலையை வெளியில காட்டவே காட்டாதுங்க"
"ஓ"
"இந்த வரிக்குதிரை கூட்டமும் பாவம் எவ்வளவு நேரம்தான் இப்படியே நிக்குங்க? கொஞ்ச நேரம் வரைக்கும் பொறுமையா பார்த்துட்டு, வேற வழி இல்லாம முதல் வரிசையில் நிக்கிற ஒரு அனிமல் வேகமா தண்ணிக்குள்ள பாயும்.”
கொஞ்சம் கூட கேப்பே கொடுக்காம அடுத்த நொடி மொத்தக் கூட்டமும் தண்ணில பாஞ்சு அசுர வேகத்துல நீந்த ஆரம்பிக்கும்"
"ஓ மை காட்! ஃபர்ஸ்ட்டா பாஞ்ச அந்த வரிக்குதிரையை ஆர் எருமைய இந்த மொதலைங்க புடிச்சு தின்னுடும் அப்படித்தான?" எனக் கேட்டான் எள்ளளாக, அவளை அந்த முன் வரிசையில் நிற்கும் வரிக்குதிரையுடன் ஒப்பிட்டு.
"தாமு!" என முறைத்தவள்,
"அவசர குடுக்க மாதிரி பேசற… முதல்ல குதிக்கிற அந்த அனிமல அட்டாக் பண்ணா மொத்த கூட்டமும் உஷாராகி கரைக்கே திரும்பப் போனாலும் போயிடும் இல்லையா? அதனால அதுங்கள கொஞ்ச தூரம் போக விட்டுட்டு இந்த முதலைங்க கூட்டமா சேர்ந்து அட்டாக் பண்ணிடும்.
இதுல சிக்குற விலங்குகள்ல சிலது செத்துப்போகும். மீதம் இருக்கிற விலங்குகள் மொத்தமா தப்பிச்சு கரை சேர்ந்துரும். ஒரு சேஃப்பான இடத்துக்குப் போயி இனப்பெருக்கம் செஞ்சு தங்களோட இனத்த தக்க வெச்சுக்கும்" என்று முடித்தவள்,
"என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம குருட்டாம்போக்குல எல்லாம் இத செய்யல. தன்னோட உயிருக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லன்னு அந்தக் கூட்டத்தில் இருக்கிற ஒவ்வொரு காட்டெருமையோ இல்ல வரிக்குதிரையோ, அதுங்களுக்கு நல்லாவே தெரியும், தாமு. ஆனா இது நடந்தாதான் தன்னுடைய இனம் உயிர் வாழ முடியும்னு மனப்பூர்வமா இத செய்யுதுங்க! நானும் இது மாதிரியான கூட்டத்துல ஒருத்திதான், தாமு.
அன்பு.. பாசம்… காதல்… இது எல்லாத்தையும் என் மனசுக்குள்ளயே ஒரு பக்கமா பத்திரப்படுத்தி வெச்சிட்டு, நான் என்னோட பயணத்துல ரொம்ப தொலைவு போயிட்டேன். இனிமேல் என்னால இதுல இருந்து பின் வாங்க முடியாது. என்ன நம்பி, என் பின்னால நின்னு, அறத்துக்காகப் போராடற ஒரு கூட்டத்தோட நம்பிக்க நானு! நான் உசுரோட இருந்து இந்தப் போராட்டத்துல ஜெயிச்சாலும் அது வெற்றிதான்! நடக்கக் கூடாத ஏதோ ஒண்ணு நடந்து செத்தாலும், அது எனக்குத் தோல்வி கிடையாது. அப்படிப்பட்ட மரணம் கூட ஒரு புரட்சியின் ஆரம்பப்புள்ளிதான். எனக்கு என்னோட இந்தப் பூமி ரொம்ப ரொம்ப முக்கியம். இதுல வாழற ஒவ்வொரு உயிரினமும் எனக்கு ரொம்ப முக்கியம். அதனால என்னோட உசுர பத்தி கவலப்படற நெலையில நான் இல்ல. தயவு செஞ்சு இதைப் புரிஞ்சுக்க முயற்சி செய்!" என்றாள் நிலமங்கை வைராக்கியத்துடன்!
அவனுடைய இதழ்கள் கோணலாக வளைய, "யாருடி சொன்னா, உனக்குன்னு தனியா ஒரு உசுரு இருக்குன்னு? அது என்னோட உசுரு! அத பணையம் வெக்கற உரிம உனக்குக் கிடையாது. அத நீ செய்ய நான் ஒன்ன விடவும் மாட்டேன்" என்றான் தாமோதரன் அடாவடியாக.
தாமுவுடன் வாதிட்டுப் பயனில்லை என்பதை உணர்ந்து, "போ தாமு, ஒன்ன திருத்தவே முடியாது! இப்புடியே பேசிக்கினு கெடந்தா வேலைக்கே ஆவாது! எனக்கு தூக்கமா வருது" என்று கொட்டாவி விட்டபடி குளியலறை நோக்கி போனவள் முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு வந்து கட்டிலில் அப்படியே சரிந்தாள்.
தானும் அவளுக்கு அருகில் வந்து சரிந்த படி வேகமாக அவளைத் தன்னை நோக்கி திருப்பியவன், "ஒடம்பு மொத்தம் கொழுப்புதான்டி ஒனக்கு, ஃபுல்லா பிரஷர் ஏறி போய் ஒருத்தன் கத்திக்கினு கெடக்கேன், எரும கதை குதர கதையெல்லாம் சொல்லி இன்னும் கடுப்பேத்தி வுட்டுட்டு நீ பாட்டுக்கு வந்து படுத்துகினியா?" என்று ஏகிறினான்.
உண்மையில் அலுத்து களைத்துப் போயிருக்க, உறக்கம் கண்ணைச் சுழற்றியது.
"ஐயோ இப்ப என்ன என்ன செய்ய சொல்ற தாமு?"
"ஒழுங்கு மரியாதையா என்ன சமாதானப்படுத்திட்டு அப்பால நீ தூங்குடீ"
"தோ பாரு, எனக்கு சண்டைப் போடத்தான் வரும் சமாதானப்படுத்தலாம் வராது, ஆள வுடு"
"அது எப்படி வராம பூடும்னு நானும் பார்க்கிறேன்!" என்று அவன் விடாப்பிடியாகப் பேச, "ப்ளீஸ் தாமு, படுத்தாத" என்று கெஞ்சினாள்.
அப்படியே இழுத்து அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், "ஒண்ணு வேணாம் செய்யலாமா?" என்று நிதானமாகக் கேட்க, அவனது பாவனையில் அவளுடைய உடலும் மனமும் இளகத் தொடங்க, அவனுடைய சொல்பேச்சைக் கேட்கும் பாவனையில் அவனது விழிகளுக்குள் ஆழமாக ஊடுருவினாள்.
"கோச்சுட்டா எப்புடி சமாதானம் செய்யணும்னு நான் உனக்குச் சொல்லித்தரேன்! நீ அப்படியே செய்யி" என்றதோடு, கோபித்துக் கொண்டால் எப்படி எப்படி எல்லாம் சமாதானம் செய்யலாம் என ஊடல் வகையில் அவளுக்குச் செய்முறை விளக்கம் அளித்தான் தாமோதரன்.
ஒருவராக இவன் அவளைச் சமாதானப்படுத்த அவள் இவனைச் சமாதானப்படுத்த, ஊடலில் தொடங்கி கூடலில் முடிந்தது அவர்களது அன்றைய இரவு.
great narration.....so inspired with this part....great going, waiting for DJ's actions in Mangai's plan.