top of page

Nilamangai-2 (FB)

Updated: Feb 7, 2024

2. இறுமாப்பு.

நினைவுகளில்…


நிலமங்கையின் பார்வை தாமோதரனின் மீது மோதி அவன் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அடுத்த நொடி அனிச்சையாக தன் கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தை மேலே உயர்த்தி அசைத்தான் தாமு.


அது, ஒரு அழகிய பறவை தன் சிறகுகளை விரித்துப் பறப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை அவளுக்குக் கொடுக்க, அதற்குமேல் கொஞ்சம் கூட தாமதிக்காமல் சேற்றில் கால்கள் புதையப் புதைய அவனை நோக்கிக் கிட்டத்தட்ட ஓடினாள்.


"ஏ... மங்க!  அப்படி என்னடி அவசரம்? சேத்துல விழுந்து வாறப்போற. கொஞ்சம் நிதானமா போ. தாமு நேத்து இராவுக்குத்தான் வந்திருக்குப் போல. அதுக்குள்ள பட்ணம் வண்டிய புடிக்க ஒண்ணும் ஓடிப்போயிடாது" எனக் கத்திக்கொண்டிருந்தார் பூங்காவனம் கிழவி.


அதையெல்லாமல் காதில் வாங்காமல் வேக வேகமாக அவள் தாமுவை நோக்கி வரவும், அவளது அந்த வேகம், அவள் தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்த, கூடவே அத்தகைய பரவசம் அவளுக்குத் தன்னைப் பார்த்ததால் வந்ததா அல்லது தான் கையில் வைத்திருக்கும் புத்தகத்தைப் பார்த்துவிட்டதினால் வந்ததா என்ற குழப்பம் மேலோங்க பார்வையை விலக்காமல் அவளையே பார்த்திருந்தான் தாமு.


மூச்சு வாங்க அவனருகில் வந்து நின்றவள், "நான் கேட்ட புக்குதான தாமு? நீ அன்னைக்கு அப்படி சொல்லிட்டுப் போனத பார்த்து எங்க வாங்கிட்டு வர மாட்டியோன்னு பயந்துட்டே இருந்தேன் தெரியுமா?" என்றவாறே தன் பாவாடையில் கைகளைத் துடைத்துக்கொண்டு அந்தப் புத்தகத்தை அவனுடைய கையிலிருந்து பிடுங்காத குறையாக அவள் இழுக்கவும், அவளது மொத்த பரவசத்திற்குமான காரணம் அந்தப் புத்தகம்தான்! புத்தகம் மட்டுமேதான்! தான் இல்லை! என்பது தெளிவாக விளங்கவே அவனுக்கு எரிச்சல்தான் உண்டானது.


புத்தகத்தை அழுத்தமாகப் பற்றியவன், "என்ன மங்க... ஒருத்தன் வேலை வெட்டியெல்லாத்தையும் விட்டுட்டு, உனக்காக, நீ கேட்ட புக்க வாங்கிட்டு வந்திருக்கேன். அத்தான் எப்படி இருக்கன்னு ஒரு வார்த்த கூட விசாரிக்கணும்னு தோணல இல்ல உனக்கு? ஸோ, ஒனக்கு நான் முக்கியமே இல்ல, அப்படித்தான?" எனக் காரமாகக் கேட்டான். 


தன் தவறை உணர்ந்து ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிந்தியவள், "சாரி தாமு! புக்க பார்த்ததும் எனக்கு இந்த உலகமே மறந்து போச்சு. பாரு, நட்டுட்டு இருந்த நாத்த கூட அப்படியே வுட்டுட்டு ஓடியாந்துட்டேன்" என்றவள், "சொல்லு தாமு நீ எப்படி இருக்க?" எனக் கேட்டுவைத்தாள். 


அதுவும் கூட அவனுக்குத் திருப்தி அளிக்காமல் போக, "அது என்ன ஓரொண்ணு ஒண்ணுன்னு ஒண்ணாங்கிளாஸ் பசங்க வாய்ப்பாடு ஒப்பிக்கற மாதிரி இப்படி ஒப்பிக்கற. ஒரு அக்கற வேணாம்? அதோட விடாம, தலைல அடிக்கற மாதிரி பேரச் சொல்லி வேற கூப்பிடற!" எனக் கொஞ்சம் அதிகப்படியாகவே அவளைக் கடிந்துகொண்டான்.


உண்மையிலேயே அவளிடம் என்னதான் எதிர்பார்க்கிறான் என்பது கொஞ்சம் கூட புரியவில்லை. 'ஐயோ தாமு இப்படியெல்லாம் பேசாதே! இன்னைக்கு என்ன ஆச்சு இதுக்கு?' எனப் பரிதாபமாக விழித்தாள். 


"பொழுது விடிய என்னை ரொம்பவே இரிட்டேட் பண்ணிட்ட. ஸோ, இந்த புக்க இப்ப உங்கிட்ட குடுக்க மாட்டேன். வேணும்னா வூட்டுக்கு வந்து வாங்கிக்க" என்று சொல்லிவிட்டு, ஒரு நொடி கூட நிற்காமல் விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டான்.


முகம் ஏமாற்றத்திலும் கோபத்திலும் சிவந்து போக, சுரத்தே இல்லாமல் மீண்டும் தன் வேலையைத் தொடரச் சென்றாள் நிலமங்கை.


கூட வேலை செய்துகொண்டிருந்த பெண்களுக்கு அங்கே என்ன நடந்தது என்பது புரியாமல் போனாலும் மங்கை முகத்தைத் தொங்கபோட்டவாறு வரவும் ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.


ஆனாலும் அவளிடம் விளக்கம் கேட்டு ஏதாவது ஒரு இடக்கான பதிலை வாங்கிக் கட்டிக்கொள்ள அங்கே யாரும் தயாராக இல்லை. 


பூங்காவனத்தம்மாள் கூட சற்று தயங்கியே இருக்க, "ஏய் மங்க... என்னாடி ஆச்சு? மூஞ்சிய தூக்கி வெச்சிருக்க" என தேவி கிசுகிசுக்கவும், "ப்ச்... தாமு கிட்ட 'எந்நாடுடைய இயற்கையே போற்றி' புக்கு கேட்டிருந்தேன்னு சொல்லிட்டு இருந்தேன்ல. அந்த புக்கதான் வாங்கிட்டு வந்திருக்கு. நீ எப்படி இருக்க மகராசான்னு நானு விசாரிக்கலியாம். அதான் அந்த புக்க கண்ணுல கூட காமிக்காம வீட்டுக்கு வந்து வாங்கிக்கன்னு சொல்லி முறுக்கிக்கினு போயிடுச்சு" என்றாள் மங்கை இறங்கிய குரலில்.


"அதான் வாங்கிட்டு வந்துடுச்சு இல்ல. அப்பறம் எதுக்கு இந்தப் பொலம்பல் பொலம்பற. பேசாம நடவு முடிஞ்சதும் நேர போய் அத வாங்கிக்கினு உங்கூட்டுக்குப் போ. உன் தாத்தா வக்கணையா சோறாக்கி வெச்சிருக்கும். நல்ல கொட்டிக்கிட்னு, கயித்து கட்டில வேப்பமரத்தடில இஸ்த்துப் போட்டுகினு படுத்துட்டே படிச்சி முடி" என தேவி அவள் அடுத்து செய்ய வேண்டியனவற்றை பட்டியலிட்டாள்.


"அடி போடி இவளே. எங்கத்த வூட்டுக்குப் போனா, தாமு வண்டி வண்டியா அட்வைஸ் மழையே பெய்யும். ‘உனக்குத்தான் மேத்ஸ் பிசிக்ஸ் ரெண்டும் நல்லா வருது இல்ல. ஐ.ஐ.டீ என்ட்ரன்ஸ்கு ப்ரிப்பேர் பண்ண புக்ஸ் வாங்கிட்டு வரேன். டைம் வேஸ்ட் பண்ணாம அதைப் படி. அத வுட்டுட்டு இந்த புக்கெல்லாம் கேக்கற. இனிமேல் வர காலகட்டத்துல நம்ம ஊர்ல வெவசாயம் செஞ்சு பொழைக்க முடியாது’ அப்புடி இப்புடினு, இந்த புக்க வாங்கிட்டு வர சொன்னதுக்கே என்னென்னலாம் சொல்லிச்சு தெரியுமா? அது அன்னைக்குப் பேசிட்டுப்போன தினுச பார்த்தா, எங்க வாங்கிட்டே வராதோன்னு நெனச்சேன்”


”இனிமே அதுங்கைல எதுவுமே கேக்கக் கூடாது தேவி. எதானா வேணும்னா பேசாம நாம ரெண்டு பேரும் பட்ணத்துக்கே போய் வாங்கினு வந்துரலாம். காலைல ஒம்பது மணி பஸ்ஸ புடிச்சா சாயங்காலம் வூட்டுக்கு வந்துடலாம் இல்ல" என்றாள் மங்கை.


“சொல்ல மாட்டடி நீயி, பஸ் ஏற மெயின் ரோட்ட புடிக்கவே ஊர தாண்டி அஞ்சு கிலோமீட்டர் போவணும்!. இதுல அப்படியே தனியா... அதுவும் மெட்ராசுக்குப்... போக உட்டுட்டாலும்... தோ...ருக்கற காஞ்சீவரத்துக்கே உடாதுங்க. ஏதோ உள்ளூர்லயே பள்ளிக்கூடம் இருக்கவே காட்டியும் படிக்கவாவது விட்டுவெச்சிருக்குதுங்க. நீ வேற" என நொடித்து, "நடக்கற கதையா பேசு மங்க” என முடித்தாள் தேவி.


அவள் சொல்வதும் உண்மைதான் என்பது விளங்க, பல வித சிந்தனைகள் மனதிற்குள்ளே சுழன்றடிக்கவும் வேலையில் மூழ்கிப்போனாள் மங்கை.


முந்தைய தலைமுறை வரை அவர்களது சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்திலுமே பெண் கல்வி என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாகக் கருதப்படவில்லை. பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடனேயே படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். நிலமங்கையின் அம்மா இராஜேஸ்வரியும் கூட அதற்கு விதிவிலக்கில்லை. அவள் தனது சொந்த தாய்மாமனான வேலுமணியை மணக்கும் பொழுது அவளுடைய வயது வெறும் பதினாறு மட்டுமே.


திருமணம் முடிந்த அடுத்த வருடமே, உலக நியதிப்படி அவள் நிலமங்கையைப் பெற்றெடுத்தாள். அடுத்ததாகக் குறைப்பிரசவத்தில் மற்றொரு பெண் குழந்தையையும் பெற்று அதையும் பறிகொடுத்துக் கூடவே அதிக உதிரப்போக்கு உண்டாகி ஜன்னி கண்டு இராஜேஸ்வரி இறந்த சமயம் மங்கைக்கு முழுதாக மூன்று வயது கூட நிரம்பியிருக்கவில்லை.


நிலமங்கையின் தாத்தா சந்தானமும் பாட்டி பூங்கொடியும்,  அந்தச் சின்னஞ்சிறு குழந்தையை வைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் வற்றும் வரை அழுது ஓய்ந்தார்கள்.


பூங்கொடிக்கோ மகளுடைய இழப்பையும் கடந்து, தன் ஒரே தம்பியின் வாழ்க்கையும் உலகமே அறியாத பேத்தியின் எதிர்காலமும் மட்டுமே கண்களுக்குப் பெரியதாகத் தெரிந்தது.


ஆகவே, அவர்களை எந்தக் குறையுமின்றி கவனித்துக் கொள்ளும் பொருட்டு, வேறு எதைப் பற்றியும் கொஞ்சம் கூட யோசனை செய்யாமல், மூத்த மகளின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்த கையுடன் தனது இளைய மகளான மகேஸ்வரியை வேலுமணிக்கு மறுமணம் செய்து வைத்தார், அவளுடைய படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி.


வீடு, கணவன், மக்கள், வருடத்திற்கு இரண்டு மூன்று புடவைகள், விளைச்சல் கைகொடுக்கும் சமயத்தில் தங்கத்தாலான ஏதோ ஒரு நகை, என சின்னஞ்சிறு வட்டத்திற்குள் மட்டுமே தங்கள் கனவுகளை அடைத்து வைத்திருக்கும் பூங்கொடிக்கும் இராஜேஸ்வரிக்கும் வேண்டுமானால் இது போன்ற வாழ்க்கை முறை நியாயமாகப் படலாம்.


திரைப்படத்தையும் தொலைக்காட்சித் தொடர்களையும் பார்த்து, கல்லூரி படிப்பு, 'ஏசி' அறையில் பெரிய சம்பளத்துடன் வேலை, நகரத்து வாழ்க்கை, குறைந்தபட்சம் 'பேண்ட்-சட்டை' அணிந்த நாகரிக தோற்றத்தில் கணவன் என வண்ண வண்ண கனவுகளை வளர்த்து அவற்றை மூளை முழுவதும் நிரப்பி வைத்திருக்கும் மகேஸ்வரி என்ற அந்த பதின்ம வயது பெண்ணிற்கு இதனால் கிடைத்ததெல்லாம் ஏமாற்றம்... ஏமாற்றம்... ஏமாற்றம் மட்டுமே.


அவளைப் பெற்றவர்களையும் தாண்டி, ஊர் வாய்க்கு வேறு பயந்து,  சொந்தத் தாய்மாமனுமான அக்காவின் கணவனையும், அவள் பெற்றுப்போட்ட இரத்தினத்தையும் வேண்டவே வேண்டாம் என்று மறுக்க இயலவில்லை.


ஒரு வேளை தமக்கை இறந்து போகாமலிருந்தால் அவள் கனவு கண்ட அத்தகைய வாழ்க்கை அவளுக்குக் கிடைத்திருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவள் மனதில் வேரூன்றிப்போயிருக்க, தமக்கையின் கணவனிடமும் அவள் பெற்ற குழந்தையிடமும், அவளால் எப்படி முழு மனதுடன் அக்கறை பாராட்ட இயலும்?


என்னதான் பிள்ளையைக் குறை இல்லாமல் கவனித்துக்கொண்டாலும் அவளுடைய ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் அந்த ஆற்றாமை வெளிப்படாமல் இருக்வே இருக்காது.


அன்னையையும் தமக்கையையும் கூடவே கணவனையும் திட்டிக்கொண்டே அந்தப் பிள்ளைக்குச் செய்வாள். அல்லது செய்துகொண்டே திட்டித் தீர்ப்பாள்.


நடுவிலிருந்து அவளுடைய கடுஞ்சொற்களுக்குத் தடுப்பணை போட்டுக்கொண்டே இருந்த பூங்கொடியும் நோய்வாய் பட்டு இறந்து போக, அவளுடைய மொத்த வடிகாலாகவும் ஆகிப்போனாள் நிலமங்கை.


இதற்கெல்லாம் நடுவில் பெண்ணொன்று ஆணொன்றுமாக அவளுக்கென்று இரண்டு பிள்ளைகள் வேறு பிறந்தன.


விவரம் புரிய ஆரம்பித்த பிறகு, அதுவும் சித்தி அவளைப் பெற்றவளைத் தினமும் குறை கூறிக்கொண்டிருக்க, தந்தையும் குற்ற உணர்ச்சியில் அவளை எதுவும் கேட்கும் நிலையில் இல்லாமல் போக,  நிலமங்கையால் மகேஸ்வரியுடன் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்க இயலவில்லை.


அவளுக்குப் பன்னிரண்டு வயதாக இருக்கும்போது ஒரு நாள், அவர்கள் வீட்டிற்குப் பின் இருக்கும் வீதியில்  எதிர் திசையிலிருக்கும் அவளுடைய பாட்டன் வீட்டுக்கு வந்தவள், அவளுடைய வீடு என்று சொல்லப்படும் இடத்திற்குத் திரும்பிப் போக மறுத்துவிட்டாள்.


பெற்றவன் சொன்ன சொல்லிற்குக் கட்டுப்பட்டோ, மறுபடியும் ஊருக்கு அஞ்சியோ இல்லை உண்மையிலேயே தன் தவறை உணர்ந்தோ மகேஸ்வரி அங்கே வந்து, அவளை தங்களுடன் வருமாறு  எவ்வளவு கெஞ்சிப் பார்த்தும் கொஞ்சம் கூட அசைந்துகொடுக்கவில்லை நிலமங்கை.


அதன்பின் அப்பா, தாத்தா என இருவரின் கண்டிப்பும் கவனமும் அவள் மீதிருந்தாலும், தன் வாழ்க்கை தன் கையில் என்ற மனநிலையிலேயே வளர்ந்தாள் மங்கை.


பள்ளிப்படிப்பு ஒருபக்கம் இருந்தாலும் அவளுக்கு சிறு வயது முதலே விவசாயத்தில் அதிக நாட்டம் உண்டு. இந்த விஷயத்தில் தன்னைப் போன்றே தன் பேத்தியும் இருப்பதால், சந்தானத்துக்கு அப்படி ஒரு பெருமிதம்.


அந்த மண்ணை தன் உயிராக நேசிப்பவர் அவர். அதனால்தான் தன் பேத்திக்கு அப்படி ஒரு பெயரையே வைத்தார். மனைவி மகள் என இருவரையும் இழந்த பின்னரும் அவரை உயிர்ப்புடன் வைத்திருப்பது அவர் விவசாயம் செய்யும் இந்தப் பூமிதான்.


எனவே பாட்டன் பேத்தி இருவரையும் தன்னோடு பிணைத்து வைத்திருந்தது இந்தப் பூமி என்றால் அது மிகையில்லை.


அந்த நிலத்தையும் அதில் விளையும் பயிர்களையும், அவளைச் சுற்றி எங்கும் பசுமையைப் பூசி நிறைந்திருக்கும் மரம் செடி கொடிகளையும், மாசற்ற அன்பை வாரி வழங்கும் தொழுவம் நிறைந்த மாடு கன்றுகளையும் தவிர இந்த உலகில் வேறு எதையும் மிக உயர்ந்ததாக எண்ணவில்லை நிலமங்கை.


ஒருவாராக அனைவருமாகச் சேர்ந்து அந்த நாற்றுகள் முழுவதையும் நட்டு முடித்துத் தலை நிமிர மதியம் இரண்டாகியிருந்தது. 'எப்பொழுதடா முடியும்?' எனக் காத்திருந்தவள் அங்கே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.


***


தனது அறையில் உட்கார்ந்து, ஹெட்ஃபோனை காதில் மாட்டியவாறு தன் மடிக்கணினியைத் தட்டிக் கொண்டிருந்தான் தாமோதரன். அப்பொழுது தன் பின்புறமாக நிழலாடவும், அங்கே வந்திருப்பது யார் என்று உணர்ந்ததால் அவனது இதழ்களில் மென் புன்னகை அரும்பியது.


"என்ன மங்க! உனக்கு உடனே அந்த புக் வேணும்... அதுக்குதான இவ்ளோ வேகமா அடிச்சுப் புடிச்சு இங்க ஓடியாந்திருக்க?" எனக் கேட்டான்  உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலியுடன் திரும்பியவாறு.


"ஒக்காந்த எடத்திலேயே இராட்டனத்துல சுத்திட்டு... கேக்கற பாரு கேள்வி" என நொடித்துக் கொண்டவள், "புக்குக்காக இல்லன்னா... வேற எதுக்காக வருவாங்களாம், அதுவும் இந்த நேரத்துல" எனக் கேட்டாள் கடுப்புடன். 


"ஏன் உன் அத்த இருக்கு... அத பாக்க வரலாம். இல்ல மாமா இருக்காங்க... அவங்கள பாக்க வரலாம். ஒரு சண்டக்கார கெழவி இருக்கு... அத பாக்கக்கூட வரலாம். எல்லாத்துக்கும் மேல இந்த அத்தான் இருக்கேன்... என்ன பாக்கவும் வராலாமில்ல."  எனக் கேட்டான் கிண்டலாக.


"புதுசா வேல கிடைச்சு வெளியூர்ல போயி ஒக்காந்துட்டு இருக்கற நீ இதைச் சொல்லக் கூடாது. நீயி உன் அப்பன் ஆத்தாவ வந்து பார்த்துட்டுப் போறத விட அதிகமா அவங்கள வந்து பாக்கறவ நானு. அதே மாதிரி ஒன்ன வந்து பாக்கணும்னு எனக்கே தோணிச்சுன்னா நானே வருவேன். ஆனா இப்ப தோணல" என்றவள் ஒரு சலிப்புடன், "ஏன் தாமு இந்த தடவ இப்புடி வித்தியாசமா நடந்துக்கிற. எனக்கு புரியவே இல்ல போ" என்று சொல்ல, அவள் மறுபடியும் பெயரிட்டு அழைத்ததால் கோபமாக முறைப்பது போல் ஒரு கள்ளச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.


"இந்தா பாரு... இப்படி புதுசு புதுசா அத்தான் பொத்தான்னு எல்லாம் கூப்புட சொன்னா அது எனக்கு வரவே மாட்டேங்குது. என்ன வுட்டுடு" என்று அவள் சிரித்துக்கொண்டே கெஞ்சலாகச் சொல்ல, "வரலன்னா அப்படியே வுட்டுடுவியா? ஃபார் எக்ஸாம்பிள்...  உனக்கு ஏதாவது ஒரு ஃபார்முலா இல்லன்னா தியரம் வரலனா அப்படியே வுட்டுடுவியா? மறுபடி மறுபடி உருப்போட்டு அத வர வெச்சுடுவ இல்ல. அது மாதிரி இதையும் பழகிக்க" என்றான் அவனும் அசராமல். 


"அதான் எதுக்குன்னு கேக்கறேன். காரணம் சொல்லு" எனறு முறுக்கிக்கொண்டாள் மங்கை.


‘உன்னிடம் புதியதாக ஏற்பட்டிருக்கும் சிறு ஈர்ப்புதானடி காரணம் பெண்ணே!’ என அவளிடம் சொல்ல நா எழவில்லை தாமோதரனுக்கு. குறைந்தபட்சம் அவள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை, தானும் ஒரு உறுதியான முடிவுக்கு வரும் வரை எதையும் சொல்லக்கூடாது என்ற எண்ணத்திலிருந்தவன், "இப்போதைக்கு எந்தக் காரணத்தையும் நான் உங்கிட்ட சொல்லனும்னு அவசியமில்ல... உன்னோட வயசுல பெரியவந்தான நானு, மரியாதையோட கூப்பிடறதுல என்ன தப்பிருக்கு" என்று சொல்லிக்கொண்டே அந்த புத்தகத்தை தன் மடிக்கணினிப் பையிலிருந்து எடுத்தவன் அதை மேசை மீது வைத்தான். 


"காரணத்தை என்னைக்குச் சொல்றியோ அன்னைக்கு இந்த அத்தான் பொத்தான்னெல்லாம் கூப்பிடுறேன். அது வரைக்கும் நீ எனக்கு தாமுதான்" என சளைக்காமல் பதில் கொடுத்தாள். 


அதில் அவனுடைய வீம்பு அதிகமாகிப்போக,  "நீ என்ன அத்தான்னு சொல்லி கூப்ட்டுட்டு இந்த புக்க எடுத்துட்டுப் போ. இல்லன்னா இத நீ தொடக் கூட கூடாது" என்றான் கண்டிப்புடன்.


அதில் உண்டான கோபத்தில் அவளுடைய முகம் சிவந்துபோய், "அப்படின்னா எனக்கு இந்த புக்கு  தேவையே இல்ல. நீயே வெச்சுக்க" என்று சொல்லிவிட்டு ஒரு நொடி கூட நிற்காமல் விறுவிறுவென அவள் அங்கிருந்து அகன்றாள். 


"ஏய் மங்க! இந்த புக்க வெச்சிட்டு நான் என்ன செய்ய போறேன். சும்மா விளையாட்டுக்குதான் சொன்னேன். நீயே எடுத்துட்டுப் போடி" எனச் சொல்லிக்கொண்டே அவன் அவளைப் பின் தொடர்ந்து வரவும் அதற்குள்ளாகவே வேகமாக மாடிப்படிகளிலிருந்து இறங்கிச் சென்றே இருந்தாள் நிலமங்கை.


அவன் மறுபடியும் தனது அறைக்குள் வர, சில நிமிடங்களில் அங்கே வந்த அவனுடைய அம்மா புஷ்பா, "ஏன்டா... இந்த மங்க பொண்ண என்னடா சொன்ன? அது ஏன் இப்படி கோச்சிட்டுப் போகுது" எனக் கேட்டாள் கவலையுடன். 


"அவ ஒடம்பு முழுக்க திமிரும்மா, அதுதான்" என்றான் கிண்டலாக.


"பாவன்டா அந்தப் பொண்ணு... காலையிலிருந்து கழனி வேலை செஞ்சுட்டு நேரா இங்கதான் வந்திருக்குப் போல. பசியோட வேற இருந்திருக்கும்" என மங்கைக்காக வருந்தினாள். 


"எல்லாம் அவங்க தாத்தா... வூட்ல ஏதாவது ஆக்கி வெச்சிருக்கும். இது நேரா அங்க போய், நல்லா ஒரு கட்டுக் கட்டும். நீ ஒண்ணியும் அங்கலாய்க்காத" என்று சொன்னவனின் பார்வை மேசையிலிருந்த புத்தகத்தின் மீது விழுந்தது.


உடனே அனிச்சையாக அதைத் திறந்து, 'இந்த நூல்...அறுத்த தானியத்தில் ஒரு பகுதியை நிலத்தில் விதைத்த முதல் பெண்ணுக்கு...' என அதன் முதல் பக்கத்தில்

அச்சடிக்கப்பட்டிருந்த வரிகளைப் படித்தவன், "ஓஹோ அதுதான்... இந்த புக்குக்காக இந்த மகாராணி உசுரையே விடுதா?! போகட்டும், எங்க போயிட போகுது இது? திரும்பவும் இந்த புக்க வாங்க என்னத் தேடி இங்கதான் வரும்" என இறுமாப்புடன், அந்த புத்தகத்தை அப்படியே மூடி அங்கிருந்த அலமாரியில் வைத்தான் தாமோதரன், ஒரு சிறிய புத்தகம் இந்த உலகத்தைப் பற்றிய அவனுடைய பார்வையே புரட்டிப்போடப் போவதை அறியாமலேயே.


Recent Posts

See All
Nilamangai - 25

25. மக்கள் சக்தி நிதரிசனத்தில்… அவளறியாத கடந்த காலத்தை அறிந்த பிறகு, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உணர்ச்சிக்குவியலாக சிலை போல...

 
 
 
Nilamangai - 24

24. பரிகாரம் நினைவுகளில்… மங்கையை சமாதானப்படுத்தி இயல்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இனி நடவாத காரியம் என்பது நன்றாகவே புரிந்து...

 
 
 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Sumathi Siva
Sumathi Siva
Jan 04, 2023

Wow awesome

Like
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page