top of page

Nilamangai - 8 (FB)

Updated: Feb 14, 2024

8. மாய ஒளிச்சிதறல்


நினைவுகளில்…


விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் கூரை மேல் ஏறி நின்று கூவிக்கொண்டிருக்கும் சேவலையும், இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் துள்ளிக்கொண்டு ஓடும், பிறந்து சில தினங்களே ஆன கன்றுக்குட்டியையும், கூட்டை விட்டு இறை தேடிக் கிளம்பும் புள்ளின கூட்டங்களையும், தன் கேமராவில் சிறைப்படுத்திக்கொண்டே நடந்தவன், அவர்கள் கழனியை அடைய, சந்தானத்தின் விளைநிலத்தில் நிலமங்கையின் கைகளால்தான் முதல் பூஜையைத் தொடங்கியிருந்தனர்.


ஒரு நீண்ட பிரிவிற்குப் பிறகு மீண்டும் அங்கே அவளைப் பார்த்த நொடி அவனுடைய பகுத்தாராயும் அறிவு முற்றிலும் பணிநிறுத்தம் செய்துவிட தாமோதரனுக்கு இந்த உலகமே மறந்துபோனது.


முன்பு பிறை நிலவாக அவனுடைய பார்வைக்குத் தெரிந்தவள் ஒரு சில மாதங்களில் முழுமதியாக மாறியிருந்தாள்.


தேன் நிறத்தில் அடர் நீல சரிகைப் போட்ட பாவாடை, அடர் நீல ரவிக்கை அதே நிறத்தில் தாவணி அணிந்து அதன் முந்தானையை இழுத்து சொருகியிருந்தாள் நிலமங்கை.


ஈரக் கூந்தலைத் தளர்ச்சியாகப் பின்னலிட்டு மல்லிகை மலர்ச் சரத்தைச் சூடியிருந்தாள்.


மஞ்சள் குங்குமம் வைத்து, அறுகம்புல்லால் அலங்கரித்து வைத்திருந்த பசுஞ்சாணப் பிள்ளையாருக்கு தேங்காயை உடைத்து வைத்து, கற்பூர ஆரத்திக் காண்பித்து பூஜை செய்து, ஏர் கலப்பையில் பூட்டப்பட்டிருந்த காளைகளுக்குப் பொட்டு வைத்து, அவற்றுக்கும் கற்பூரம் சுற்றி உழவைத் தொடங்கிய அந்த மண்ணின் மங்கையிடம் மட்டுமே அவனுடைய ஜீவனின் தேடல் முற்றுப்பெறும் போலும்.


முத்து முத்தாக வியர்வைப் பூத்திருந்த அவளுடைய பிறை நெற்றியை வட்டமான பொட்டு அலங்கரிக்க, வில்லென வளைந்த புருவமும் கூர் நாசியும் கோடி கவிதைகள் படைக்கும் ஆற்றல் மிகுந்தவையாகத் தோன்றியது தாமோதரனுக்கு.


ஏனோ அவளுடைய மூக்கின் நுனியில் ஒரு மூக்குத்தி இல்லாமல் போனது நிலவின் களங்கமாக அவனுடைய மனதிற்குத் தோன்ற, அவளிடம் குறை என எதை எதையெல்லாம் நினைத்தானோ அவை அனைத்தும் மறந்தே போனது.


அதன் பின் அவனுடைய கையிலிருந்த கேமரா நிலமங்கையைத் தவிர வேறு எந்தக் கோணத்திலும் திரும்பவே இல்லை.


வருடா வருடம் தாமுவின் கழனியிலும் மங்கை பூஜை செய்து, ஏர் உழுது அந்த வருடத்தின் உழவைத் தொடங்கி வைப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் அவனுடைய அம்மாவே பூஜை செய்து முடிக்க, ஜனார்த்தனன் ஏர் ஓட்ட, அவள் அந்த நிலத்திற்குள் காலை கூட வைக்கவில்லை. அது ஒரு மாதிரி மனதைச் சுட, அங்கே நிற்கவே மனமில்லாமல் வீட்டுக்குக் கிளம்பினான் தாமு.


அந்த நேரம் பார்த்து பவ்யா அழைக்க, அவளுடன் பேசக் கொஞ்சம் கூட ஆர்வமில்லாமல் போக, அந்த அழைப்பை அவன் ஏற்கவில்லை. விடாமல்  அவளும் மீண்டும் மீண்டும் அழைத்தபடியே இருக்க, அவளது அந்தப் பிடிவாதம் ஒரு வித எரிச்சலைக் கொடுக்கவே கைப்பேசியை சைலண்டில் போட்டுவிட்டான். ஆனாலும் விட்டு விட்டு அழைப்பு வருவதை அவன் உணராமல் இல்லை.


அடுத்து என்ன என்பதாகக் குழம்பிய மனதுடன் அவன் வரப்பின் மீது நடக்க, வேகமாக வந்து மூச்சு வாங்க அவன் எதிரில் வழி மறித்து நின்றாள் மங்கை.


சட்டென ஓரடி பின்னால் நகர்ந்தவன், "ஹேய், அறிவில்ல உனக்கு? கொஞ்சம் இருந்தா மோதி ரெண்டுபேருமே வாய்க்கால விழுந்திருப்போம்." என அவன் எரிந்து விழ, அவளுடைய சுபாவத்திற்கு மாறாகச் சட்டென அவளது கண்கள் கலங்கிப் போனது.


"எவ்ளோ நாள் கழிச்சுப் பார்க்கறோம், ஏன் தாமு இப்படி எரிஞ்சு விழற?" என வருத்தத்துடன் கேட்டுவிட்டு, "உனக்கு கல்யாணம் முடிவாயிருக்கு இல்ல, அதுக்கு வாழ்த்துச் சொல்லிட்டு, அப்படியே இதை உனக்குக் கொடுக்கலாம்னுதான் வந்தேன். இனிமே உங்கூட்டுக்குப் போகக்கூடாதுன்னு தாத்தா கண்டிஷனா சொல்லிடுச்சு தெரியுமா? அதான் இங்க வெச்சாவது சொல்லிடலாம்னு ஓடியாந்தேன்" என்றபடி ஒரு குவளையை நீட்டினாள் மங்கை.


பொன்னேர் பூட்டும்போது, அந்தப் பூஜையில் தேங்காய் உடைத்து வைத்து, அரிசியும் வெல்லமும் கலந்து வாழை இலையில் படையல் போடுவார்கள். பின் அந்தத் தேங்காயைத் துண்டுத் துண்டாக நறுக்கி வெல்ல அரிசியுடன் கலந்து அங்கே வந்திருக்கும் அனைவருடனும் பகிர்ந்து சாப்பிடுவார்கள். அதைத்தான் அந்தக் குவளையில் நிரப்பி அவனுக்காக எடுத்து வந்திருந்தாள்.


வெல்லத்துடன் ஊறிய அரிசியும் தேங்காய் துண்டங்களும் சேர்ந்து அந்தக் கலவை அவ்வளவு ருசியாக இருக்கும். அவனுக்கு அது மிகவும் பிடித்தமான ஒன்றும் கூட. அதை அறிந்தே வைத்திருப்பவள் என்பதால், பொன்னேர் பூட்டும் சமயங்களில் அவன் அங்கே இல்லாமல் போனாலும் கூட, அவனுக்காக எடுத்து வைத்து அவன் அங்கே வந்தவுடன் கொண்டு வந்து கொடுப்பாள் இம்மங்கை.


அந்தக் கரிசனத்தை எண்ணியபடியே, அனிச்சையாக அதை வாங்கி, கொஞ்சமாக உள்ளங்கையில் சரித்து வாயில் போட்டு மென்றபடி, "வர வர கிழவன் ரொம்ப ஓவராதான் போகுது! ஏன், எங்கூட்டுக்கு நீ வந்தா இப்ப என்ன கொறஞ்சு பூடுமாம்?" என்று அபத்தம் எனத் தெரிந்தே அப்படி ஒரு கேள்வியை அவன் கேட்டு வைத்தான். 


"எங்கூட்டு கிழவனை மட்டும் கொற சொல்லு, உங்க கிழவி அப்படியே அப்பாவி பாரு? நல்ல நாள்லயே நான் அங்க வந்தா அது ஜாடையா ஏதாவது சுருக்குனு சொல்லும். புஷ்பா அத்தைக்காக நானும் கண்டும் காணாம போயிட்டு இருந்தேன். உங்கூட்டுப் பொல்லாத கிழவி எங்க தாத்தாவாண்ட என்ன சொல்லிச்சோ ஏது சொல்லிச்சோ யாரு கண்டா? அது எனக்கு முட்டுக்கட்ட போடுது. நான் வூட்டுக்குதான் வரதில்லையே, வழியில தெருவுல பார்த்தாக்க உங்காத்தா கூட என்ன ஏதுன்னு ஒரு வார்த்த கேக்காம, பார்த்தும் பார்க்காத மாதிரி மூஞ்ச திருப்பிக்கினு போகுது. புத்தி தெரிஞ்ச நாளா உங்க கழனில நான்தான பொன்னேர் பூட்டிப் பூஜப் போட்டுட்டு இருக்கேன்? இன்னைக்கு அதுக்கு கூட புஷ்பா அத்த என்ன கூப்புடல! தெரியாமத்தான் கேக்கறேன் தாமு, நான் உன் குடுபத்துக்கு என்ன கெடுதல் செஞ்சுப்புட்டேன்னு எல்லாரும் இப்படி என்ன ஓரங்கட்றீங்க?" எனத் தொண்டை அடைக்க அவள் கேள்வி கேட்க, விக்கித்துப் போனான் தாமு.


'காலில் அணிந்திருக்கும் கெட்டிக் கொலுசின் ஓசை கலீர் கலீர் என எதிரொலிக்க, உரிமையுடன் அவனது வீட்டிற்குள் வலம் வந்தவள், இனி அங்கே வரவே மாட்டாளா?' என மனதைத் துளைத்த கேள்வி அவனை அதிர வைத்து இனிக்க இனிக்க வாயில் போட்டு மென்ற பொருள் பாதியில் கசந்து, அவசரமாக உள்ளே போய் அவனது நெஞ்சை அடைக்க, திணறிப் போனான்.


"ஐயோ தாமு! என்ன ஆச்சு?" எனப் பதறியவள், வேகமாகக் குனிந்து கால்வாயில் ஓடிய நீரைக் கை நிறைய அள்ளி அவனது வாயில் புகற்றினாள்.


சில்லென்ற தண்ணீர் நெஞ்சுக்குழிக்குள் இதமாக இறங்கி அவனை ஆசுவாசப்படுத்தியது. அவன் அணிந்திருந்த சட்டை நனைந்து அவனது நெஞ்சில் ஈரம் படர்ந்திருக்க, அவனுக்கு ஒன்றென்றால் அவளுக்கு ஏற்படும் பதற்றமும், அவன் மீதான அவளுடைய அக்கறையும், மல்லிகையும், சீயக்காயும் மஞ்சளும் கலந்து அவள் மீதிருந்து வந்த கலவையான மணமும் அவனைக் கிறுகிறுக்க வைக்க, அவனது மூளை சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டிருந்தது.


அப்படியே அவளது கைகளைப் பற்றி தன்னருகில் இழுத்தவன், "பேசாம என்னைக் கட்டிக்கோ மங்க, அதுக்கு மேல நீ எங்கிட்ட வரத யாரு தடுக்கறாங்கன்னு நானும் பார்க்கறேன்" என அவனது மனதை உடைத்துக்கொண்டு வார்த்தைகள் கொட்டிவிட, விதிர் விதிர்த்துப் போனாள் நிலமங்கை.


இவன் இப்படி ஒரு வார்த்தை சொல்வான் என் கனவிலும் கூட எண்ணவில்லையே அவள்! கணநேரம் கூட அவளை விட்டு அகலாமல் அவளைக் காவல் காக்கும் அவளது தாத்தாவின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அவனைக் காணத் தான் இப்படி ஓடி வந்ததே தவறோ என்றெண்ணினாள்! இந்தக் காட்சியை மட்டும் யாராவது பார்த்துவிட்டுப் போய் அவரிடமோ அல்லது தாமுவின் பாட்டியிடமோ வத்தி வைத்தால் அவ்வளவுதான்.


யாருமே அவனை ஒரு வார்த்தைக் கூட இகழ்ந்து பேச மாட்டார்கள். 'பெண்ணென்ற அடக்கம் கொஞ்சமாவது இருக்கிறதா? அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி இருக்கும் நேரத்தில், மேல் விழுந்து போய் அவனுடன் உனக்கென்ன பேச்சு?' என்கிற ரீதியில் ஒட்டுமொத்தமாக அவளை மட்டுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவார்கள்.


நான்கையும் நினைத்து பயத்தில் மருண்டவளின் விழிகள் நாலாபுறமும் சுழன்றன. நல்லவேளையாக அவரவர் வேலைகளில் அவரவர் மும்முரமாக இருக்க, யாரும் அவர்களிருவரையும் கவனிக்கவில்லை என்பது சிறு நிம்மதியைக் கொடுத்தது.


வேறெந்த சிந்தனையும் அற்று புதிராக அவனைப் பார்த்தபடி தன் கைகளை உருவிக்கொண்டு பின்னோக்கி எட்டு வைத்தவள் அப்படியே திரும்பி ஓட்டமும் நடையுமாக அவனது பார்வையிலிருந்து கரைந்து மறைந்தாள்.


அவள் மறைந்த நொடியே அவனது அறிவு விழித்துக் கொண்டது. உணர்ச்சிவசப்பட்டுச் சிந்திக்காமல் பேசியிருந்தாலும் தன் செயலை எண்ணிக் கொஞ்சம் கூட வருந்தவில்லை, சொல்லப்போனால் தன் மனச்சிறையை உடைத்துக்கொண்டு விடுதலையான ஆசுவாசம்தான் உண்டானது. மனம் தெளிந்து, 'நிலமங்கை என்கிற இந்த மங்கையால் மட்டுமே என்னை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்! வேறெந்தப் பெண்ணாலும் இப்படி எனது உணர்வுகளை வசியம் செய்ய இயலாது! இந்த நியதிக்குப் புறம்பாக ஏதாவது செய்தால் அது விபரீதத்தில்தான் போய் முடியும்! இனி இவள் மட்டுமே என் இலக்கு!' என்கிற தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தவனாக தன் பாதையில் நடந்தான் தாமோதரன்.


மாய ஒளி சிதறலாய் சலனப்படுத்தி...


நெருங்கி வந்தால் விலகிப்போய்...


கண்களை ஏமாற்றும் கானல் நீர் நீயல்ல!


 


ஆலியாய் தூவி...


தூறலாய் மாறி...


சாரலாய் நனைத்து...


அடைமழையாய் என்னை அடித்துச் சென்றென்,


தாகம் தீர்க்க வந்த குளிர்க் கொண்டல் நீ!


 


வானம் விட்டு...


இந்தப் பூமி தொட்டு...


என்னை உன்னில் கரைக்க வா!


 


உன்னில் நனைய...


உன்னில் கரைய...


உன்னில் கலக்க...


உனக்காகவே உயிர் பூத்திருக்க..,


உனையே என் உடைமையாய் கொண்டாட...


ஒரு துளி உரிமை கொடு பெண்ணே போதும்!


என் ஆயுள் இன்னும் சில நூற்றாண்டு நீளும்!


***


சரியாக ஒரு வாரம் கடந்திருந்தது.


தன் அறையில் உட்கார்ந்து ஒரு மின்னஞ்சலை வடித்துக் கொண்டிருந்தான் தாமோதரன்.


ஒரு முக்கிய ஆன்-சைட் பிராஜக்ட்டுக்காக அமெரிக்கத் தலை நகரத்திற்குச் செல்ல, அவன் வேலை செய்யும் நிறுவனம் கேட்டிருக்க, அதற்கு ஒப்புக்கொண்டு பதில் அனுப்புகிறான். அந்தப் பணி முடிந்து அவன் திரும்ப வரக் குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகும்.


அதற்கு மறுப்பு சொன்னாலும் கூட அவனை யாரும் நிர்ப்பந்திக்கப் போவதில்லை. இது போன்ற பல வாய்ப்புகளை ஏதேதோ காரணங்களுக்காகத் தள்ளிப் போட்டுக்கொண்டே போனவன், இப்பொழுது வேறெதைப் பற்றியும் சிந்திக்காமல் உடனே ஒப்புக்கொண்டிருக்கிறான்.


தட்டச்சு செய்தது மறுபடி சரிபார்த்து அவன் அந்த மின்னஞ்சலை அனுப்பி முடிக்க, எங்கே தன் இல்லத்தில் இனி கேட்கவே கேட்காதோ என அவன் எண்ணிய அந்தக் கொலுசொலி சங்கீதமாய் அவனை நெருங்கி வந்து அவனருகில் நின்று மௌனமானது.


அது தந்த உணர்வில் அவனது உடல் மொத்தமும் ஒரு சிலிர்ப்பு ஓட, அவளாகவே வந்து பேச்சைத் தொடங்கட்டும் என அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.


அவனருகில் வந்து நின்றவளும் கூட சட்டென அவனிடம் பேசிவிடவில்லை. குறைந்தபட்சம் அவனது பார்வைக்காக அவள் காத்திருக்க, வேண்டுமென்றே அவளைக் காக்க வைத்தவனும் அவள் பேசிக் கேட்கக் காத்திருந்தான்.


ஓரிரு நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்காமல் அவளது பொறுமை கரையைக் கடக்க, தடதடவெனத் திரும்பி நடந்தவளை வேகமாகப் போய் வழி மறித்து நின்றவன், "என்ன ஆறு தூங்குதா இல்ல முழிச்சிட்டு இருக்கான்னு பார்த்துட்டுப் போக வந்தியா?" என இடக்காகக் கேள்வி கேட்டான். 


"நெசமாவே ஆறு தூங்குதா இல்ல தூங்கற மாதிரி நடிக்குதான்னு எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு. தூங்கறவங்கள எழுப்பலாம் ஆனா தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்ப முடியாதில்ல தாமு" எனக் குமைந்தாள் அவனுக்குச் சளைக்காதவளாக.


அவள் எங்கே வருகிறாள் என்பது புரிய, புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தவன், "யாரு இப்ப தூங்கற மாதிரி நடிக்கறாங்க, நீதான் கொஞ்சம் வெவரமா சொல்லேன்?" என்றான் விதண்டாவாதமாக.


"சும்மா நடிக்காத தாமு, உன் நிச்சய தாம்பூலம் நிக்க நெசமாவே அந்த அக்காதான் காரணமா?" என அவள் நேரடியாகக் கேட்கவும், சற்று அதிர்ந்துதான் போனான்.


இவ்வளவு முதிர்ச்சியை இவளிடம் எதிர்பார்க்கவில்லை தாமு.


அன்று 'என்னைக் கட்டிக்கோ' எனச் சொன்னதற்கு கூட அவள் ஏதும் கேள்வி கேட்டால் 'தம்மாத்தூண்டு பொண்ணு நீ, ஒன்னப் போய் கட்டிக்க கேப்பாங்களா? சும்மா வம்பிழுக்கத்தான் சொன்னேன்' என மழுப்பிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தான்.


ஆனால் அதன் பின் அதைப் பற்றி ஏதும் கேள்வி கேட்கக் கூட அவனை அவள் தேடவில்லை. ஒருவிதத்தில் அதுவே சவாலுக்கு அழைப்பது போன்று அவனைத் தூண்டி விட, எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல அந்த பவ்யா வேறு சற்று அதிகமாக அவனிடம் தன் திமிரைக் காண்பிக்க, என்னென்னவோ செய்து முடித்துவிட்டான்.


"என்ன மங்க, லூசு மாதிரி ஒளறிட்டு இருக்க! நான் ஏன் நிச்சய தாம்பூலத்த நிறுத்தப் போறேன், அவ திமிரு பிடிச்சு ஆடினா, அதுக்கு நானா ஆளு" என்று அவன் அவளையே எதிர்க் கேள்வி கேட்டான். 


ஊடுருவி அவனது விழிகளுக்குள் கலந்தவள், "அப்படின்னா, அன்னைக்கு, என்ன கட்டிக்கோன்னு சொன்னியே, அதுக்கும் உன் நிச்சயதாம்பூலம் நின்னதுக்கும் எந்த சம்மதமும் இல்ல" என்று காட்டமாகக் கேட்க, பக்கெனச் சிரித்தவன், "நிஜமாவே நீ லூசுதான் மங்க, சும்மா தாமஸுக்குச் சொல்றதெல்லம் நிஜம்னு நினைச்சிட்டு என்ன கேள்வி கேக்கற! அம்மா தாயே, இந்த மாதிரி எங்க கெழவி எதிர பேசித் தொலைச்சிடாத, அப்பறம் அது உன்னைப் பிரிச்சி மேஞ்சுபுடும்" என்றான் எகத்தாளமாக.


விழிகளில் நீர் கோர்த்துவிட்டது மங்கைக்கு. "வேணாம் தாமு, நான் மேல் படிப்பெல்லாம் படிக்கணும்ன்ற ஆசைல இருக்கேன். இப்படி டபுள் கேம் விளையாடி, நீ என்ன செஞ்சாலும், உன்னை விட்டுவாங்க, என்னத்தான் குத்தம் கொற சொல்லி அசிங்கப்படுத்துவங்க! தாத்தாவுக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா, மொதல்ல என் படிப்புக்குத்தான் பங்கம் வரும். என் சித்தி வேற எப்படா சாக்கு கிடைக்கும்னு கண்கொத்தி பாம்பா பார்த்துட்டு இருக்கு, பேசிப் பேசியே என்ன அசிங்கப்படுத்திப்புடும்" என அவள் தழுதழுக்க, 


"லூசாடீ நீயி, நான் தான் படிச்சி படிச்சி சொல்லிட்டு இருக்கேன் இல்ல? பேசாம போ... போயி எல தழைய பத்தி என்னவோ படிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருக்க இல்ல, அத படி, எவனாவது கிராமத்து மைனர் கிடைப்பான் அவனைக் கட்டிட்டு, இந்தப் பட்டிக்காட்டுல மாடு மேய்ச்சு பால் கறந்துட்டு , சாணிப் பொறுக்கி வெரட்டி தட்டிட்டுப் பொழைப்பு நடந்து" எனச் சுள்ளென எரிந்து விழுந்தான்.


இலகுவான மனநிலையில் இருந்திருந்தால், அவனுக்கு விதவிதமாய் பலப்பல பதில்களைக் கொடுத்திருப்பாள். அவளிருந்த குழப்ப நிலையில், மனதிற்குள்ளேயே அவனைத் திட்டித் தீர்த்தவாறு, பேச்சற்றவளாக முகத்தைத் தொங்கப்போட்ட படி அங்கிருந்து அகன்றாள் நிலமங்கை. அவள் சென்று சில நிமிடம் கடந்த பின்பும் கூட அவளது பாதக் கொலுசொலி தாமோதரனின் செவிகளுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.


சன்னலோரம் அமர்ந்து கரைந்த காகத்தின் குரலில் தன் உறை நிலையிலிருந்து கலைந்தவன், கீழே இறங்கி வந்தான். எதார்த்தமாக அவனது பார்வை மங்கையின் வீட்டை நோக்கித் திரும்ப, தூணை அணைத்தபடி வாயிற்திண்ணையில் சிலைப் போல அமர்ந்திருந்தாள் மங்கை. அவளை நெருங்கிப் போய் பேச்சுக் கொடுக்கும் உந்துதல் உண்டான போதும் சூழ்நிலை கருதி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.


அவர்கள் வீட்டுக்குள்ளே பேச்சுக் குரல் கேட்க, அனிச்சையாக உள்ளே சென்றான்.


"என்ன சொல்ல சந்தானம், காலம் அப்படி இருக்கு. இப்ப இருக்கற பொண்ணுங்கல்லம் கொஞ்ச நஞ்ச திமிராவா இருக்குதுங்க? அவளுகள பெத்தவனுங்கள சொல்லணும்! இந்த ஊர் காரப்பயதான அவ அப்பன். அப்படியே என்னவோ வெள்ளக்கார தொர கணக்கா கலர் படம் காமிக்கறான், பேமானி, ஆத்தாகாரி ஒரு மேனாமினுக்கி" என அங்கே வந்திருந்த மங்கையின் தாத்தாவிடம் பவ்யாவையும் அவளது குடும்பத்தையும் வசை மாறி பொழிந்துகொண்டிருந்தார் வரலட்சுமி.


பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருமே அவனைக் கவனிக்கவில்லை.


"நல்லதா போச்சுன்னு விடு சித்தி! இந்தக் கல்யாணம் மட்டும் முடிஞ்சிருந்தா இந்தப் பொண்ணுக்கும் நம்ம தாமுக்கும் எப்படி ஒத்துப் போகும் சொல்லு" என சந்தானம் அவருக்குச் சமாதானம் சொல்ல, 


"மனசே ஆற மாட்டேங்குது சந்தானம். நம்ம தாமுவ காட்டன், கருப்பன்னெல்லாம்  சொல்லி ஏசி இருக்கு அந்தப் பிடாரி தெரியுமா? ஃபோனுல பதிஞ்சுப் போட்டு காமிச்சான்" என்று வரலட்சுமி ஆதங்கப் பட்டு மூக்கைச் சிந்தினார். 


"அதான் நிச்சயதாம்பூலம் கூட நடக்கல இல்ல. பேச்சு வார்த்தையோட நின்ன வரைக்கும் நல்லதா போச்சுன்னு விடு சித்தி, வேற நல்ல பொண்ணா பார்த்துக்கலாம்" என்று அவர் திரும்பவும் சொல்லிக்கொண்டிருக்க, ஒரு பக்கம் அவனுக்குக் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தாலும் சிரிப்பும் வந்தது.


'ஆமாமாம், நீங்க எவளையாவது ஒருத்திய புடிச்சு கட்டிக்கன்னு கொண்டு வந்து நிறுத்துங்க, நானும் அவ இழுக்கற இழுப்புக்கெல்லாம் போறேன். அப்பால ஒரு நல்ல நாளா பார்த்து இந்த மங்கை என் கண்ணு முன்னால வந்து என்ன வெச்சு செய்யும்! நானும் சினிமா வில்லன் மாதிரி பிளான் பண்ணி ஒவ்வொரு ஏற்பாட்டையா தடுத்து நிறுத்துவேன்' என மனதிற்குள் எண்ணியபடி தன் அறைக்கே திரும்பச் சென்றான்.


பொன்னேர் பூட்டிய தினம் மங்கையை நேரில் பார்த்துவிட்ட பிறகு, அதுவும் அவளிடம் அப்படிப் பேசிவிட்ட பிறகு, அவன் மனம் அவன் வசமே இல்லை.


அவன் வீட்டிற்கு வருவதற்குள் பவ்யாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வர, அதை ஏற்று 'சொல்லு பவ்யா" என்றபடி நடக்கத் தொடங்கினான்.


"என்ன ப்ளேக் ஹல்க், நான் ஃபோன் பண்ணா ஃபர்ஸ்ட் கால், ஃபர்ஸ்ட் ரிங்லயே எடுக்கணும், மேரிட் ஃலைப்போட ஃபர்ஸ்ட் ரூல் கூட உங்களுக்குத் தெரியாதா?" எனக் கிண்டல் இழையோட லேசான அதிகாரதொனியில் அவள் கேட்க, அவனது நிறத்தை வேறு அவள் இழுத்துவிட்டிருக்கச் சுருக்கென்றது தாமோதரனுக்கு.


"அதெல்லாம் வேல வெட்டி இல்லாம கூஜா தூக்கிட்டுப் போறவன் எவனுக்காவது போட்ட ரூலா இருக்கும், எனக்குப் பொருந்தாது" என அவன் அனலைக் கக்க,


"என்ன தாமு இது, சும்மா ஃபன்னியா பேசினதுக்குப் போய் இவ்வளவு ரூடா பதில் சொல்றீங்க?' என்றாள் உள்ளே போன குரலில்.


"பாடி ஷேமிங் பன்றதெல்லாம் உனக்கு ஃபன்னியா படுதா, கிவ் ரெஸ்பெக்ட்... டேக் ரெஸ்பெக்ட் பவ்யா! நீ என்ன குடுக்கிறியோ அதுதான் உனக்கு திரும்ப கடைக்கும்" என அவன் விறைப்பாகப் பதில்கொடுக்க,


சிறு மௌனத்துக்குப் பின், "கூல் தாமு, ரிலேக்ஸ்! இப்ப இதுவா முக்கியம்? நிச்சயதார்த்த சாரி வாங்கறத பத்தி என் கன்டிஷன் சொல்லியிருந்தேனே, வீட்டுல பேசிட்டிங்களா" எனக் கேட்டாள் காரியத்திலேயே கண்ணாக.


'சாரி' என்கிற ஒரு வார்த்தையைச் சொல்லக்கூட விரும்பாமல் அதை இலகுவாகத் தவிர்த்து அவள் இப்படிப் பேசியது அதீத எரிச்சலைக் கொடுக்க, 'எனக்கா கன்டிஷன் போட்ற நீ... இருடீ, நான் யாருன்னு உனக்கு காட்டறேன்' என மனதிற்குள்ளேயே கருவியவனுக்கு, வரலட்சுமியின் வாயினாலேயே 'இந்தப் பொண்ணு நமக்கு வேண்டாம்' எனச் சொல்ல வைக்க, ஒரு விபரீத திட்டம் உருவானது.


"ஆயா அதுக்கு ஒத்துக்கல பவ்யா" என்று அவன் இலகுவாகச் சொல்லிவிட்டு, "எனக்கு அர்ஜன்ட்டா கொஞ்சம் வேல இருக்கு, அப்பறம் பேசறேன்" என அலட்சிய தோரணையில் அழைப்பைப் பட்டெனத் துண்டித்து அவன் பற்ற வைத்த தீ நன்றாகவே கொழுந்துவிட்டு எரிந்தது.


அடுத்த நொடியே அவள் நேரடியாக வரலட்சுமிக்கே அழைத்துவிட்டாள். அவரைப் பற்றி தெரியாமலா அவன் இப்படி பேசி வைத்தான்? அவன் கணக்குப்படி அவள் சொன்னதற்குக் கொஞ்சம் கூட இசையவில்லை அவர்.


அவருடன் ஒரு பாட்டம் வாக்குவாதம் செய்து தோற்றுவிட்டு, அதன் பின்னும் கூட பரவாயில்லை என பவ்யா, அவளாகவே இறங்கி வந்து தாமோதரனை அழைத்துப் பேசிய போதும்  ஈகோவைக் கிளறி அவளை உணர்ச்சிவசப்படச் செய்து அவளது வாயைப் பிடுங்கி வார்த்தையை வளர்த்து, அந்தப் பேச்சுக்களையெல்லாம் பதிவு செய்து, குறிப்பாக அதை வரலட்சுமியிடம் போட்டுக் கொடுத்து அந்தத் தீயை அணையாமல் பார்த்துக்கொண்டான்.


பிரச்சனை பெரியவர்கள் வரை போனதால், ஒன்று தொட்டு ஒன்று பேச்சு வளர, வார்த்தைகள் தடிக்க, பேச்சுவார்த்தையுடன் அந்தத் திருமண ஏற்பாடு நின்றுபோய், அந்தத் தீயில் குளிர்காய்ந்தது தாமோதரன் என்றால், சந்தோஷ சாரலில் நனைந்து கொண்டிருந்த ஒரே ஜீவன் புஷ்பா மட்டுமே!


Recent Posts

See All
Nilamangai - 25

25. மக்கள் சக்தி நிதரிசனத்தில்… அவளறியாத கடந்த காலத்தை அறிந்த பிறகு, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உணர்ச்சிக்குவியலாக சிலை போல...

 
 
 
Nilamangai - 24

24. பரிகாரம் நினைவுகளில்… மங்கையை சமாதானப்படுத்தி இயல்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இனி நடவாத காரியம் என்பது நன்றாகவே புரிந்து...

 
 
 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
chittisunilkumar
Feb 15, 2023

Ivan kd ah la irukan mangai ivana mattum nambidatha ma

Like
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page