10. வில்லங்கம்
நினைவுகளில்...
செவிப்பறையையே கிழிக்கும் அளவுக்கு ஒலிப்பெருக்கியில் பிரபல திரைப் பாடல் ஒன்று அதிர்ந்துகொண்டிருந்தது.
ஒரு பக்கம் மங்கள வாத்தியம் வேறு தன் பங்கை ஆற்றிக்கொண்டிருக்க, பகட்டாகத் தங்களைக் காண்பித்துக்கொள்ளும் போட்டியில், தங்கத்தாலும் தங்கம் போன்று ஜொலிக்கும் போலிகளாலும் ஆன ஆபரணங்களை உடல் முழுவதும் அணிந்து கொண்டு, பட்டை பட்டையாகச் சரிகைகள் சரசரக்கப் பட்டும் பாலியஸ்டர் பட்டுமாக உடுத்தி, தலை நிறைய மல்லியும் கனகாம்பரமும் முடித்து சிரிப்பும் அரட்டையுமாகப் பெண்கள் கூட்டம் அந்தத் திருமண மண்டபத்தை நிறைத்திருந்தது.
வேட்டியின் கரைக்குத் தோதாக கலர் கலராகச் சட்டை அணிந்தும் கூட அந்தப் பெண்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆண்கள் கூட்டம் அலைமோத, கடைசி வரிசையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அவளுடைய தாத்தாவுக்கு அருகில் உட்கார்ந்திருந்தாள் நிலமங்கை.
ஏதோ ஒரு குளிர்பானத்தால் நிரம்பிய குவளைகளை ஒரு தட்டில் அடுக்கி எடுத்து வந்து, "எடுத்துக் குடி தாத்தா, வெயிலுக்கு எதமா இருக்கும்" என்று அவரை உபசரித்தான் கதிர், சந்தானத்துடைய தமக்கையின் பெண் வயிற்றுப் பேரன்.
அவனுடைய தங்கையின் திருமணம்தான் அங்கே நடந்தேறிக் கொண்டிருந்தது. மறுப்பேதும் இன்றி அவர் அதை கையில் எடுத்துக்கொள்ள, "நீயும் எடுத்துக்கோ மங்க" என்று கொஞ்சம் அதிகமாகவே அவளிடம் அவன் பொங்கி வழியவும், "இந்தா மங்கை எடுத்து குடி, எவ்வளவு நேரம் தான் இந்தப் பிள்ளை இப்படியே நீட்டிட்டு நிக்கும்" என அவளை மென்மையாக அதட்டினார் சந்தானம்.
"எனக்கு வேணாம் கதிரு, புடிக்காது" என மறுத்தவள், "ஏன் தாத்தா இந்தப் பூச்சி மருந்தெல்லாம் நான் குடிக்க மாட்டேன்னு உனக்குத் தெரியாதா? இந்தக் கருமத்தைத் தயாரிக்க ஃபேக்டரி வெக்கறேன் பேர்வழியேன்னு நெலத்தடி நீர மொத்தமா உறிஞ்சிட்டானுங்க. ஆனா நாம இததான் பாட்டில் பாட்டில்லா வாங்கி குடிச்சிகினு கெடக்கறோம்" எனச் சிடுசிடுத்தாள்.
அதில் கதிருடைய முகம் சுண்டிப் போக, "நீ போய் வேலையைப் பாரு கதிரு, முறை செய்ய வேற ஒன்ன தேடுவாங்க" எனப் பக்குவமாகப் பேசி அவனை அங்கிருந்து அனுப்பியவர், "என்ன மங்க, அவன் ஒன்ன விட வயசுல எவ்வளவு பெரியவன், மாமா, அத்தான்னு ஏதாவது மொற வெச்சு கூப்புடாம இப்படி மட்டு மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்புடுற? போறாத குறைக்கு இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி வேற பேசற? அவங்களா ஒன்ன பொண்ணு கேட்டு வந்திருக்காங்கன்னு எளக்காரமா? அவங்கூட உனக்கு கல்யாணம் நடக்குது இல்ல நடக்காம போகுது இதெல்லாம் ரெண்டாம் பட்சம், ஆனா நீ இப்படி நடந்துக்கறது எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல ஆமாம்" என வெகுவாக அவளைக் கடிந்து கொண்டார்.
'ஆனானப்பட்ட தாமுவையே நான் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன். இவன போய் முறை வெச்சு கூப்பிட சொல்றியே! போ தாத்தா, சும்மா காமடி பண்ணிட்டு!' என மனதிற்குள் சிலுப்பிக் கொண்டவள், "அது என்ன தாத்தா இந்தக் கல்யாணம் நடக்கிறது இல்ல நடக்காம போகுதுன்னு பொடி வெச்சுபேசற! நான் சொல்றேன், அதெல்லாம் நிச்சயம் நடக்காது. நீ கனவு காணாத?" என திட்ட வட்டமாக மொழிந்தாள் நிலமங்கை.
"ஏன் நடக்காது? இல்ல ஏன் நடக்காதுன்னு கேக்கறேன், அஆங்? காலேஜ் போய் படிக்கலையே தவிர நம்ம கதிருக்கு என்ன கொறச்சல்? ஊரோட விவசாயம் பாக்கறான். கோழிப் பண்ணை வெச்சிருக்கான். பால் வியாபாரம் பண்றான், பணம் சேர்த்து, இதோ ஜாம் ஜாம்னு தங்கச்சிக்குக் கல்யாணம் செய்றான்! பொறுப்பான புள்ள. இவனை விடப் பொருத்தமான பையன் உனக்கு எங்க கிடைப்பான்? உன் சித்திக்குச் செஞ்ச மாதிரி ஒன்ன கட்டாயப்படுத்தி ஒரு கல்யாணத்தைச் செய்யக்கூடாதுன்னு நானும் பலவிதமா பேசிப் பாக்கறேன் நீ என்னடான்னா பிடி கொடுக்க மாட்டேங்கற?" என ஒரு சொற்போருக்கு ஆயத்தமானார்.
"வேணாம் தாத்தா இதோட வுட்ரு, இத பத்தி பேசினா தேவையில்லாம நமக்குள்ள சண்டை வருது. இதுக்குதான் நான் இந்தக் கல்யாணத்துக்கு வரவே மாட்டேன்னு சொன்னேன், வம்படியா இழுத்துனு வந்து உக்கார வச்சிருக்க" என அவள் சண்டைக் கோழியாய் சிலிர்த்தெழ, அவளுக்குப் பதில் கொடுக்க வாய் திறந்தவர், அருகில் நிழலாடுவதை உணர்ந்து அந்தப் பேச்சை அப்படியே நிறுத்தினார்.
அதில் மங்கை விழி உயர்த்திப் பார்க்க தாமோதரனும் புஷ்பாவும் நின்றிருந்தனர்.
அவனைப் பார்த்த அதிர்ச்சியில் பட்டென எழுந்தே நின்றுவிட்டாள் மங்கை. அவளது சொய்கையைப் புரிந்து கொண்டவனாக, அதுவும் முதல் முதலாக அவளைப் புடவையில் பார்த்ததில் ஸ்தம்பித்தே போனவனாக, உச்சி முதல் பாதம் வரை அவளைப் பார்வையால் வருடியவனின் முகத்தில் ஒரு குறும்புன்னகை மலருவதைக் கண்டுகொண்டவள், 'ச்ச, லூசாடி மங்க? என்ன செஞ்சு வெச்சிருக்க நீ!' என மனதிற்குள்ளேயே தன்னைத்தானே கடிந்துகொண்டாள்.
'நான் ஒண்ணும் ஒன்ன பார்த்துட்டு ஜெர்க் ஆகல' என்பதைப் பிரகடன படுத்த, "அத்த, நீ இங்க உக்காரு, நான் போய் இந்த தேவி பொண்ணு என்ன செய்யுதுன்னு பார்த்துட்டு வரேன்" என அங்கிருந்து அகன்றள்.
அனிச்சையாக புஷ்பா அங்கே உட்கார, முகம் கன்ற தாமு போய் தாத்தாவுக்கு மற்றொரு பக்கமாக இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவனது முகக் குறிப்பைப் படித்தவளாக, "இன்னா அத்தான் இது வர வர இந்த மங்க பொண்ணு இப்படி போயிக்கினு இருக்குது. முழுசா ரெண்டு வருஷம் கழிச்சி எம்புள்ள ஊருக்கு வந்திருக்கான், என்ன ஏதுன்னு ஒரு வார்த்த கேக்காம, எப்புடி முறிக்கிகினு போவுது பாரு?" என அங்கலாய்த்தாள்.
"என்ன இன்னா புஸ்பா பண்ண சொல்ற நீயி, இவ்வளவு நேரம் என் கூடவும் ஒரே சண்டைதான் போ' என தன் ஆதங்கத்தை அவர் புலம்பித் தள்ள, "ஏன், என்ன வந்துச்சாம் இந்த மகாராணிக்கு?" என நொடித்தாள் புஷ்பா.
"நம்ம கதிர் இருக்கான் இல்ல, அவனுக்கு இவள கேட்டு வந்தாங்கம்மா" என அவர் சொல்லத் தொடங்க, புஷ்பாவின் முகமே கருத்துவிட்டது.
சட்டென தன் அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, "மெய்யாலுமா சொல்ற, கதிருக்கு நம்ம மங்கைய கேக்கறாங்களா?" எனக் கேட்டாள் வியந்த பாவத்தில்.
"உங்கிட்ட நான் என்ன பொய்யா சொல்லப்போறேன், சின்ன புள்ளைல இருந்து பார்த்துகினு இருக்கான் இல்ல, இவள மனசுல நெனைச்சிருப்பான் போலிருக்கு. சின்ன பொண்ணு கல்யாணம் முடிவாகவும், போன மாசம் மாப்ள வுட்டுக்குக் கை நனைக்க போவசொல்ல, என்ன கூட வரச்சொல்லி அக்கா மருமவனே நேர்ல வந்து கூப்டான். பேச்சு வார்த்தையெல்லாம் சுமுகமா முடியவுங்காட்டியும், அன்னைக்கே பட்டுனு கேட்டுப்புட்டான்” என்றார் எதையும் பூசி மெழுகாமல்.
"நீ என்ன சொன்ன அத்தான்? உனக்கு இதுல சம்மதமா?" என அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் கேட்டாள் புஷ்பா.
"கரும்பு தின்னக் கூலியா, யாரவது இதுக்கு வேணாம்னு சொல்லுவாங்களா? வேலு மாதிரி அவனென்ன உதவாக்கர பயலா? நாளைக்கே நம்ம மங்கையையும் சரி, என் நெலத்தையும் சரி, கதிர் நல்லா பார்த்துப்பான். அந்த நம்பிக்க எனக்கு இருக்கு. ஆனாலும் அவளோட அப்பங்கிட்ட கலந்து பேசி முடிவு சொல்றேன்னு சொல்லிட்டு வந்தேன். ஆனா இந்தப் பொண்ணு இன்னாடான்னா புடி குடுக்கவே மாட்டேங்குது.”
”படிப்ப முடிக்கணுமாம், அவ அப்பன் என்னடான்னா, வுடு பார்த்துக்கலாம்னு சுளுவா சொல்றான். இந்த மகேசு பொண்ண பாம்பு நெனச்சு தாண்டவும் முடியல, பழுதுன்னு நெனச்சு மிதிக்கவும் முடியல. நீயே சொல்லு புஸ்பா, எனக்கும் வயசாகுது இல்ல? வயசு பொண்ண வெச்சிக்கினு வவுத்துல நெருப்ப கட்டிகினே இருக்க முடியுமா?!”
”நம்மூர்ல இருந்து காலேசுக்குப் போக வர பஸ்ஸ புடிக்கணும்னா அம்மாந்தொலவு போகவேண்டியதா கெடக்கே. பொழுது போயி அது ஊட்டுக்கு வந்து சேரக்குள்ள நான் தவிக்கிற தவிப்பு எனக்குதான் தெரியும்! அதுவும் இப்ப ஊருக்குள்ள எவன் எவனோ வாரான் எவன் எவனோ போறான்!”
”இதே கதிர் ஊருன்னா, மெயின் ரோட்டுக்கு மேலயே இருக்குது, அவனும் இவ ஆச படற படிப்ப படிக்க வெக்கறேன்னு சொல்றான், இந்தப் பொண்ணு இன்னாடான்னா புரிஞ்சுக்கவே மாட்டேங்குது” என தான் பாட்டுக்கு ஒரு பாட்டம் புலம்பித் தள்ளினார்.
எங்கே அவள் தனக்கு மருமகளாக வரும் வாய்ப்பு தட்டிப் போய்விடுமோ என்கிற பதட்டத்தில், "ஒரு விதத்துல அவ சொல்றதும் சரின்னுதான் தோனுது அத்தான். அதான் அவளுக்கு இன்னும் ஒரு வருஷ படிப்பு பாக்கி இருக்கே! அவங்க ஏன் இப்படி திடுதிப்புனு வந்து பொண்ணு கேட்டு வெச்சாங்க?" எனக் கேட்டுவிட்டாள் தன் மனம் தாங்காமல்.
புஷ்பாவின் இந்தப் பேச்சு ஏன் எதற்கு என்பது கூட புரியாதா அவருக்கு. மங்கைக்கும் தாமுவுக்கும் எந்த விதத்திலும் பொருந்திப் போகாது என்பதை திடமாக நம்புபவர். இதில் இவளுடைய கனவு பகல் கனவாகத்தான் போகும். அதுதான் ஊரறிய தாமோதரனுக்கு அசலில் பார்க்கிறார்களே! எதையாவது தடுக்க முடிந்ததா இவளால்? ஏற்கனவே இவரது சொல் பேச்சு கேட்காமல் மல்லுக்கு நிற்கும் மங்கை, இவள் பேசுவதையெல்லாம் கேட்க நேர்ந்தால் இன்னமும் ஆட்டமாய் ஆட மாட்டாளா?' என நினைக்க, நினைக்க உள்ளுக்குள்ளே புசுபுசுவென பொங்கிவிட்டது சந்தானத்துக்கு.
"பொண்ணுன்னு இருந்தா கேக்கத்தான் செய்வாங்க, இதுல என்ன குத்தத்த கண்ட நீ! எனக்கு கண்டி நாளைக்கே ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிபோச்சுன்னா, எம்பேத்தி நாதியத்துதான் நிக்கும். இன்னைக்கு என்ன கேள்வி கேக்கறவன் எவனும் அவளுக்காக ஒரு துரும்ப கூட கிள்ளி போடமாட்டான். இதே என் சொந்த அக்கா பேரனுக்கே அவள குடுத்தா, எனக்கு நிம்மதிதான் தெரிஞ்சிக்க" என ஆவேசம் பொங்கச் சொல்லி முடித்தார் சந்தானம்.
அவரது துடுக்கான பேச்சில் உள்ளுக்குள்ளே கோபம் கனன்றது தாமோதரனுக்கு. அதுவரை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், "உடு பெரியப்பா, இப்பவே கெடந்து ஏன் கவலை பட்டுக்கினு கிடக்குற, நாங்கல்லாம் இல்ல? அவ நல்ல படியா படிச்சி முடிக்கட்டும், என்னைக்கா இருந்தாலும் மங்க என் பொறுப்புன்னு வெச்சிக்கோ" என்று அவன் சொன்ன விதத்தில் அவருக்கு மேலும் கிலிதான் பிடித்தது. அதற்குள் மங்கை அங்கே வரவும் அந்தப் பேச்சு அப்படியே நின்றுபோனது.
கையில் சூடான காபி நிரம்பிய காகிதக் குவளையுடன் அங்கே வந்தவள் புஷ்பாவின் அருகில் அமர்ந்துகொண்டாள்.
"அத்த, நீ காபி குடிக்கிறியா?"
"வேணாம் மங்க, இப்பதான் டிபன், காபி எல்லாம் முடிச்சிகினு வந்தோம். அதிருக்கட்டும், ஆமாம் நீ ஏன் மங்க ஒரு மாதிரி இருக்க?"
"இந்த கூச்சல் ஆவல அத்த, தல வலிக்குது" என இருவரும் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போக, சந்தானத்துக்கு பின்னாலிருந்து எட்டிப் பார்த்தபடி, "இப்ப என்ன படிச்சிட்டு இருக்க மங்க?" என்று கேட்டான் தாமோதரன்.
"பி.எஸ்.சி அக்ரீ, செகன்ட் இயர்" என பதில் கொடுத்தாள் தானும் பின்னால் சாய்ந்து அவனது முகத்தைப் பார்த்தபடி.
"என்ன? என்ன பார்த்து என்ன ஏதுன்னு கூட கேக்க மாட்டேங்கற? ஒனக்கு புக்கு வாங்கிட்டு வந்து கொடுக்க புதுசா வேற யாரும் கிடைச்சுட்டாங்களோ?" எனக் கேட்டான் எள்ளல் தொனிக்க.
அதில் சந்தானம் உக்கிரமாகிப்போக, "அப்படியே வெச்சிக்கோ" என்றாள் மங்கை அலட்சியமாக.
சந்தானம் குளிர்ந்துவிட, தாமோதரன்தான் தகித்துப் போனான். 'அவ்ளோ தெனாவெட்டாடி? இதுக்கெல்லம் சேர்த்து வெச்சு இருக்குடி உனக்கு?' எனக் கறுவினான்.
அதை மனதிற்குள்ளேயே மறைத்துக்கொண்டு, "பொறப்படலாமாம்மா, நிறைய வேல கெடக்கு" என புஷ்பாவைத் துரிதப்படுத்த, சந்தானத்திடமும் மங்கையிடமும் சொல்லிக்கொண்டு, தாம்பூலம் வாங்கிக்கொண்டு கிளம்பினர்.
பவ்யாவுடன் ஏற்பாடு செய்திருந்த நிச்சயதார்த்தம் நின்ற பின், அதாவது மங்கை வந்து அவனைச் சந்தித்த மறுதினம் பெங்களூரு சென்றவன் அடுத்த சில தினங்களிலேயே அமெரிக்கா சென்றுவிட்டான். அதன் பிறகு அவன் ஊருக்குக் கூட வரவில்லை. அமெரிக்கா செல்வது பற்றி மங்கைக்கு அவன் தெரியப்படுத்தவும் இல்லை. மூன்று வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவன் அமெரிக்கா செல்லவிருக்க, ஜனாவும் புஷ்பாவும் அங்கேயே சென்று மகனை வழி அனுப்பி வைத்துவிட்டு, பெங்களூரு வீட்டைக் காலி செய்துகொண்டு வந்தனர். அதன் பின் கோபத்தில், சில மாதங்கள் வரையிலும் கூட வரலட்சுமி பேரனிடம் பேசவில்லை.
வீடியோ கால் மூலம் அவரது கையில் காலில் விழாத குறையாகக் கெஞ்சி, அது வேலைக்கே ஆகாமல் போய், கடைசியாகத் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என அவரை மிரட்டித்தான் சமாதானம் செய்து பேச வைத்தான்.
அதன் பிறகு இரண்டு வருடம் முடிந்து இதோ இப்பொழுதுதான் இங்கே வந்திருக்கிறான். அதுவும் முந்தைய தினம் சென்னையில் நடந்த அலுவலக ரீதியான ஒரு முக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக மட்டுமே. தொடர்ந்து வார இறுதியாக இருக்க, எல்லோரையும் நேரில் பார்க்க இங்கே வந்திருக்கிறான் அவ்வளவுதான்.
முந்தைய இரவுதான் இங்கேயே வந்திருந்தான். உறக்கமற்ற இரவுகளாலும் ஜெட்லாக்காலும் களைத்துப்போயிருந்தாலும் எப்படியும் இந்தத் திருமணத்துக்கு மங்கை வருவாள் எனத் தெரிந்தே, உறக்கத்தைத் தியாகம் செய்து அங்கே வந்தான். அவனை நேரில் பார்த்தால் வியந்து போய் அவனிடம் கேள்விகள் கேட்பாள் என எண்ணியிருக்க, அவனை மொத்தமாக ஏமாற்றிவிட்டாள் அவனுடைய மங்கை. அதுவும் எளிமையான பட்டுப் புடவையில், நகைகள் அணிந்து, நீண்ட கூந்தலைப் பின்னி மலர் சூடி அவள் நின்ற காட்சியில், தாலி கட்டி அவளைக் கையுடன் தன்னுடனேயே அழைத்துப்போய்விடும் அளவுக்கு அவனது ஆவல் பெருகியது.
இதற்கிடையில் இவளது தாத்தா செய்யும் குழப்பம் வேறு! இவளை விட்டுப் பிடிக்கலாமா? விட்டால் பிடிக்க முடியுமா? திருமணம் வேண்டாம் எனப் பிடிவாதம் பிடிப்பவள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சம்மதித்து விடுவாளோ? எனப் பல கேள்விகள் அவனைக் குழப்பி அடித்தது.
தாமோதரன் காரைச் செலுத்திக்கொண்டிருக்க, அவனுக்கு அருகில் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் புஷ்பா.
சந்தானம் எங்கே மங்கையைக் கதிருக்குக் கொடுத்துவிடுவாரோ என்கிற கவலையே மனம் முழுவதும் வியாபித்திருக்க அவளது முகம் அதை அப்படியே பிரதிபலித்தது.
மகனுடைய மனநிலையும் பிடிபடவில்லை. அவன் சம்மதம் என ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும், ஜனாவின் கையைக் காலைப் பிடித்தாவது இந்தத் திருமணத்தை நடத்திவிடுவாள்.
எதார்த்தமாகத் திரும்பும்பொழுது கவலை தோய்ந்த அவரது முகம்தான் தாமுவின் கண்களில் பட்டது.
அவளது எண்ண ஓட்டத்தை அறிந்தவனாக, 'கவல படாதம்மா, மங்கைய கட்டிட்டு நான் உன் ஆசையை கண்டிப்பா நிறைவேத்தி வெக்கறேன்' என மனதிற்குள்ளேயே சொன்னவனுக்கு, 'அவ்ளோ நல்லவனாடா நீ? உங்க அம்மாவுக்காகத்தான் நீ மங்கைய கட்டிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்க, இல்லன்னா ஒரு பவ்யாவையோ இல்ல திவ்யாவையோ கட்டிப்ப, அப்படித்தான?' என அவனது மனசாட்சி அவனைக் காரி உமிழ, 'ஏய்... ச்சீ... அடங்கு, ரொம்ப ஓவரா போற நீ' என அதைத் தலையில் தட்டி அடக்கியவன், "இப்ப என்னவாம் அந்த மங்க பொண்ணுக்கு, எதுக்கு இப்படி மூஞ்சிய தூக்கி வெச்சிக்கினு சுத்துது?' எனக் கேட்டான், தன்னை வெகு இயல்பாகக் காண்பித்துக்கொண்டு.
"யாரு கண்டாங்க, இந்த சந்தானம் அத்தான், கதிர கட்டிக்கச் சொல்லி அதைப் புடிங்கி எடுக்குதோ என்னவோ" என பதிலுரைத்தார்.
"அதுக்குள்ள என்னவாம் அந்த ஆளுக்கு? இப்ப அந்தப் பொண்ணுக்கு என்ன வசாகுதுன்னு கல்யாணம் பண்ணனும்னு குதிக்குது" எனக் கடுப்புடன் கேட்டான்.
"பெரியவங்கள அப்படி பேசாத தாமு" என மகனைக் கண்டித்தவர், "பாவம் அதோட கவல அதுக்கு. இந்தப் பொண்ணுதான் தேவையில்லாம அதான்ட சண்ட வலிச்சிக்குனு கெடக்குதுன்னு நெனைக்கறேன். சும்மா பேச்சுவார்த்தைலதான போய்ட்டு இருக்கு. அதுக்கே ஏன் கெடந்து மண்டைய உடைச்சிக்கணும் சொல்லு. உனக்குக் கூடதான் பேசி நிச்சயதாம்பூலம் செய்யற அளவுக்குப் போனோம்? நடந்துதா என்ன?" எனச் சந்தடி சாக்கில் அவனைச் சதக்கென்று குத்தினார்.
"ம்மா... நீ எதுக்கு எத முடிச்சி போடுற?" எனக் கடுப்பானான்.
"அதில்லடா, ஒரு பேச்சுக்குச் சொன்னேன்" எனக் குழைந்தவர், "ஆயிரம் இருந்தாலும் ஆத்தா இல்லாத பொண்ணு தாமு, அது. யார் கிட்ட போயி மனசுல இருக்கறத சொல்லும் சொல்லு" என வருந்தினாள்.
"ஏம்மா, நீ இல்ல? ஆஊன்னா அத்த... அத்த..ன்னு உன்னாண்டதான ஓடி வரும், இப்ப என்ன வந்துச்சாம் அதுக்கு?" எனக் கேள்வி கேட்டான்.
"ம்க்கும்" என நொடித்தவள், "உனக்கு கல்யாணம் பேசி நிச்சய தாம்பூலம் வரைக்கும் போகவும், அத்தான் அத நம்மூட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிவெச்சிட்டதா கேள்வி. அதுக்கு அப்பால அது அதிகமா இங்க வந்துபோறதில்ல" என்று சொல்ல, "ஒனக்கு உடம்புக்கு முடியலன்னு சொன்னா வந்து கூடமாட செய்யுமே" என இழுத்தான்.
"என்னைக்கா இருந்தாலும் எனக்கு மருமகளா வரப்போகுதாங்காட்டியுன்னு உரிமையோட கூப்புட்டு உடுவேன், இப்பதான் அதுக்கு வழி இல்லன்னு ஆயிடிச்சே. அதனால நானும் கூப்புட்றதில்ல, அதுவும் வரதில்ல" என அவன் மீது பாய்ந்தவள், "இதுக்கு நடுவுல, ஆறு மாசம் முன்னால நம்ம கண்ணப்ப நாயக்கரு தவறிப்போனாரு இல்ல, உங்க ஆயா சொல்லியிருக்குமே!" எனக் கேட்டு அவர் நிறுத்தவும், 'நாம என்ன கேட்டா, இந்த அம்மா என்ன சொல்லுது' என ஆர்வமின்றி, 'ம்ம்" என்றான்.
"அவருக்குக் கொள்ளி போடக் கூட அவரோட மூத்த புள்ள வெளிநாட்டுல இருந்து வரல, மங்க கூட பள்ளிக்கூடத்துல படிச்சானே அவரோட கடைசி புள்ள தேவா, அவன்தான் கொள்ளி வெச்சான். அதுக்கு அப்பால நடப்புக்குத்தான் மூத்தவன் வந்து சேந்தான். அதுவும் பொண்டாட்டி புள்ளைங்கள இட்னு வராம, தான் மட்டும் ஒண்டியா. அவனும்… பட்டணத்துல இருக்கானே அவரோட ரெண்டாவது மகன் சுப்புவுமா சேர்ந்து, இங்க ஊர்ல இருக்கற நிலபுலன் எல்லாத்தையும் வித்துட்டு, ஒரேடியா ஊற காலிபண்ணிட்டு போகணும்னு ஒத்தக்கால்ல நின்னானுங்க.
இதுதான் சந்தர்ப்பம்னு சொல்லி, நம்ம தேவியோட அப்பன் கோவிந்தன் கிடக்கான் பாரு, இம்மாநாளா மாட்டு ப்ரோக்கரா இருந்தவன், இப்ப திடீர்ன்னு லேண்டு ப்ரோக்கரா மாறிபுட்டான்.
பட்டணத்துல இருந்து யார் யாரையோ கூட்டிகினு வந்து இடத்தை காமிக்க ஆரம்பிச்சான். நம்ம ஊரு ஆளுங்களுக்கு வித்தலாவது வெவசாயம் பாப்பாங்க, எவன் எவனையோ கொண்டுவந்து விட்டா? எவன் எப்ப என்ன செய்வான்னு யாருக்குத் தெரியும்? இதெல்லாம் மங்கைக்குக் கொஞ்சம் கூட புடிக்கவே இல்ல. என்ன இருந்தாலும் காலேஜ் வரைக்கும் போய் படிக்குது இல்ல! உலக வெவரம் அதுக்கு அத்துப்படி" என சிலாகிக்க, "சரி, என்னனு விஷயத்த சொல்லு" என மகன் ஆர்வமாகக் கேட்கவும் தொடர்ந்தாள்.
"நம்ம நெலத்துக்கு நேர் எதுத்தாப்ல அறுபது ஏக்கர் நாயக்கரோடது. இம்மாம் பெரிய நெலத்த வாங்க நம்ம ஆளுங்க யார்கிட்ட துட்டு இருக்குது? அந்தப் பொண்ணு உங்க அப்பனாண்ட வந்து, 'அத நீயே வாங்கிக்க மாமா'ன்னு கெஞ்சிப் பார்த்துச்சு.
"எதிர்காலத்துல எம்புள்ள கூட வெளிநாட்டோட போனாலும் போயிருவான், இருக்கறத விக்கவே நான் ஆளப் புடிக்கணும், இதுல புது நெலமெல்லாம் என்னால இப்ப வாங்க முடியது'ன்னு உங்கப்பன் தீர்மானமா சொல்லிடுச்சு. கிட்டத்தட்ட அழாத கொறையா அன்னைக்கு நம்ம ஊட்டை உட்டுப் போச்சு. அதுக்கு அப்பால அந்தப் பொண்ணு என் கிட்ட கூட முகம் கொடுத்துப் பேசறதில்ல" எனக் கதை கதையாகச் சொல்லி முடித்தார்.
மங்கையின் அறியாமையை எண்ணி அவனுக்குக் கவலையாக இருந்தது. ஆம்... அந்தச் சூழ்நிலையில் அதை மங்கையின் அறியாமையாகத்தான் பார்த்தான் தாமோதரன்.
அவனது சிந்தனை அவளையே சுற்றிச்சுழல, சரியாக அதே நேரம் அவர்களைக் கடந்து போனது புல்லட் ஒன்று. யாரோ ஒரு பள்ளிச் சிறுவனை ஓட்ட விட்டு, அவனுக்குப் பின் அமர்ந்தபடி சென்றுகொண்டிருந்தார் தேவியின் அப்பா கோவிந்தன்.
அவரது வலது கையில் கட்டுப் போடப்பட்டிருக்க, அவனது வாகனத்தை அடையாளம் கண்டுகொண்டவர், திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தபடி, பூரண ஆரோக்கியத்துடன் இருந்த மற்றொரு கையை ஆட்டிவிட்டுப் போக, மரியாதைக்குத் தானும் கைக் காண்பித்தவன் பக்கென்று சிரித்துவிட்டான்.
"என்ன தாமு?" எனப் புரியாமல் புஷ்பா கேட்க, அவரைச் சுட்டிக் காண்பித்தவன், "சரியான காமடி பீசும்மா இந்த ஆளு, எங்கயோ விழுந்து கைய ஒடச்சிகினு, புல்லட்டு வண்டிக்கு டிரைவர் போட்டிருக்குது பார், அதுவும் பள்ளிக்கூடம் படிக்கற பையன புடிச்சு" எனத் தொடர்ந்து சிரித்தான்.
"யாரு, இந்த ஆளா காமடி பீசு, இவன் சரியான வில்லங்கம் புடிச்ச மூதேவி" எனக் காய்ந்தவர், "நாயக்கரோட மொத்த எடத்தையும், சூட்டோட சூடா யாரோ அரசியல்வாதியோட பினாமி ஒருத்தனுக்கு ஒரே கையா முடிச்சிக் கொடுத்துட்டான் தெரியுமா? இப்ப அத சுத்தி இருக்கற எடத்தையெல்லாம் அந்த ஆளு வளைச்சு போட பார்த்துகினு கெடக்கான்" என்றாள்.
"இதுல என்னம்மா இருக்கு? ஏதாவது ஃபார்ம் ஹவுஸ் பிளான் பண்ணுவானுங்க, வேற என்ன?"
"ப்ச்… நல்லா சொன்ன போ… அவனுங்க எங்க ஃபார்ம் ஹவுஸ் வெச்சு பண்ணையம் செய்யறானுங்க? அந்த எடத்துல தண்ணி கேன் கம்பனி வரப் போவுதாம். போறாத கொறைக்கு, அந்த நெலத்துக்கு முன்னால ரோட்டை ஒட்டி ரெண்டு ஏக்கரு நம்ம பூங்காவனத்தம்மாளுதுல்ல. அத வாங்கினாத்தான், அவனுங்க நெலத்துக்குப் போக்குவரத்து சுளுவா இருக்கும். அதனால அத கொடுக்கச் சொல்லி அந்தக் கெழவிய தொல்லைப் பண்ணிட்டு இருக்கானுங்க. உசுரா நெனச்சி வெவசாயம் செய்யறவ கிட்ட போய் சாமியா கும்புடற நிலத்தை வெலைக்குக் கேட்டா சும்மா உடுமா? போன வாரம் இவனுக்கும் கெழவிக்கும் வாய் தகராறு முத்தி, போதைல இவன் அத மரியாதை இல்லமா பேசி, செல்வம் பய போட்டுச் சாத்து சாத்துன்னு சாத்திபுட்டான். அதுலதான் கை ஒடிஞ்சுப் போச்சு. செல்வம் பேர்ல போலீஸ் கேஸ் கொடுக்க போய், நம்ம சந்தானம் அத்தான்தான் தலையிட்டு சுமுகமா அனுப்பி வெச்சுது" என்று முடித்தாள்.
அனைத்தையும் மனதிற்குள் அசைபோட்டபடி வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவனின் சிந்தைக்குள் விபரீத திட்டம் ஒன்று உருவானது.
அன்னையுடன் வீடு வந்து சேர்ந்தவன் அடுத்த நாள் பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்து முடித்து, மதிய உணவை உண்டு, சிறிது நேரம் உறங்கி எழுந்தான்.
முகம் கழுவி புஷ்பா கொடுத்த தேநீரை அருந்திவிட்டு, மாலை சூரியன் தந்த மிதமான வெப்பத்தை அனுபவித்தபடி நடந்தவன் மங்கையின் வீடு வரை வந்து சேர்ந்திருந்தான்.
வீட்டின் முன் புறமாக இருக்கும் வேப்ப மரத்தின் அடியில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு, ஒரு புத்தகத்தை அணைத்துப்பிடித்தபடி அதில் படுத்திருந்தாள் நிலமங்கை. மூங்கில் தட்டிக் கதவு திறக்கப்படும் அரவத்தில் அவசரமாக எழுந்தமர்ந்தவள் அங்கே தாமோதரனைக் காணவும் எழுந்து நின்றாள்.
அன்று 'என்ன கட்டிக்கோ' என அவன் சொன்னது வெறும் வாய் வார்த்தைக்காக இல்லை என்றால், அவன் மனதிற்குள் காதலோ தாபமோ ஏதோ ஒரு சாத்தான் குடிபுகுந்திருந்தால், நிச்சயம் அவன் தன்னைத் தேடி வருவான் என்ற அவளது எண்ணத்தைப் பொய்யாக்காமல் அவன் அங்கே வரக் கண்டதும் அவளது பார்வை கூர்மையானது. நீண்ட நாட்களாக தன் மனதில் இவனைப் பற்றி குழப்பியடித்த சந்தேகம் ஊர்ஜிதமான ஒரு நிம்மதிதான் உண்டானது மங்கைக்கு. ஆனாலும் இதற்கெல்லாம் தான் ஆட்படக்கூடாது என ஆயிரமாவது தடவையாக தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
ஒருவாறு மனம் சமநிலை பட்டிருக்க, "வா தாமு, காலைல வேற டென்ஷன்ல இருந்தனா, அதான் உன்கிட்ட சரியா பேசக்கூட தோனல, இப்ப சொல்லு! எப்படி இருக்க? என்ன உன் காத்து திடீர்னு இந்தப் பக்கம் அடிச்சிருக்கு?" எனத் தாமோதரனை இலகுவாக எதிர்கொள்ளவும் முடிந்தது.
பழைய மங்கையாக அவள் பேச முற்படுவதில் அவன் ஒன்றும் மனம் இறங்கிவிடவில்லை. காலை, 'அப்படியே வெச்சுக்கோ' என அவள் தெனாவெட்டாகச் சொன்னதுதான் உண்மை. இப்பொழுது இவள் பேசும் இந்த இனிமையான பேச்சு தேன் தடவிய விஷம் என்பதை நன்றாகவே உணர்ந்தான்.
சுடிதார் அணிந்திருந்தாள். காதில் தோடு கூட போட்டிருக்கவில்லை. எழுந்து நிறத்தில் மொத்த கூந்தலும் அவிழ்ந்து சரிய, மீண்டும் அள்ளிக் கொண்டையாக முடிந்தாள். சிற்பம் போன்று தன் முன் நின்றவளைப் பார்வையால் வருடாமல் இருக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான்.
"உக்காரு தாமு, தாத்தாவ கூப்புடுறேன்" என்று அவள் உள்ளே செல்ல எத்தனிக்க, "நானும் உன் தாத்தாவ பார்த்து ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னுதான் வந்திருக்கேன்" என, 'உன்னைப் பார்க்க வரவில்லை' என்று சொல்லாமல் சொன்னான்.
அதைக் கண்டுகொள்ளாத பாவத்தில் அவள் உள்ளே செல்ல, அந்தக் கயிற்றுக் கட்டிலில் அப்படியே அமர்ந்தான்.
அவளது அணைப்பிலிருந்த புத்தகம் அங்கேயே கிடக்க, அனிச்சையாக அதை எடுத்துப் புரட்டவும், அதிலிருந்து அவன் மடியில் விழுந்தது புகைப்படம் ஒன்று.
நான்கைந்து வருடங்களுக்கு முன் ஊரில் யாருடைய திருமணத்தின்போதோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் நடுநாயகமாய் மணமக்கள் இருக்க, தேவி, மங்கை, கண்ணப்ப நாயக்கரின் கடைசி மகன் தேவா, அவனுக்கு அடுத்து தாமோதரன் என வரிசையாக நின்றிருந்தனர்.
அப்பொழுதுதான் தேவாவைப் பற்றிய நினைவு ஒன்று லேசாகப் பொறித் தட்டியது.
அதைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்குள் அங்கே சந்தானம் வந்துவிட, ஒரு குவளை தேநீரோடு மங்கையும் வந்தாள்.
அதை அவனிடம் நீட்ட, அவசரமாக அந்தப் புகைப்படத்தை புத்தகத்துக்குள் வைத்து மூடியவனின் முகத்தில் உஷ்ணமாக வந்து மோதியது மங்கையின் பெருமூச்சு! அவளது முகத்தைப் பார்த்தபடியே அதை கையில் வாங்கியவனுக்கு ஏதோ வித்தியாசமாகப் பட்டது.
"வா தாமு, நேத்துதான் வந்த, நாளைக்கே கிளம்ப போறயாம்" என அவர் எதார்த்தமாகக் கேட்டபடி அவனுக்கு அருகில் அமரவும் கலைந்தவன், "ஆமாம் பெரிப்பா, கம்பெனி வேலையாதான் வந்தேன்" என்று பதில் சொல்லிவிட்டு, "உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றான் தீவிர பாவத்தில்.
காலை அவன் பேசிய பேச்சு நினைவில் வர, "சொல்லு தாமு" என்றார் சிறு அச்சத்துடன்.
"எங்க கழனிக்கு முன்னால உங்க நெலம் இருக்கே, அது ஒரு, ரெண்டு ரென்ற ஏக்கர் இருக்குமா பெரிப்பா?"
"ஏன் கேட்கற தாமு?" எனக் கேட்டார், அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாத பாவத்தில்.
"இல்ல, என்னைக்கா இருந்தாலும் எனக்கு அந்த நெலம் வேணும் பெரிப்பா, நாளைக்கே எங்க நெலத்தயெல்லாம் விக்கணும்னா, இது வில்லங்கமா முன்னால நிக்கக்கூடாது பாரு" என்றான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாதவன் போல.
"இது நல்ல பேச்சில்ல தாமு, இப்படி பேசிட்டு இனிமேல் இங்க வராத" என்றார் சந்தானம் முகத்தில் அறைந்தார் போன்று.
"நீ கோச்சுக்காத பெரிப்பா, எனக்கு நீ அந்த நெலத்த கொடுக்கலன்னா கூட பரவாயில்ல, ஆனா என் சம்மதம் இல்லாம அத நீ விக்கவோ, இல்ல அசலூர் காரன் யார் பேருக்கும் மாத்தி கொடுக்கவோ மாட்டேன்னு ஒரு வார்த்த சொல்லு போதும், அதாவது அந்த எடத்த என்ன தவிர வேற யாருக்கும் நீ கொடுக்கக் கூடாது" என்றான்.
"இப்ப ஏன் இந்தப் பேச்சு வந்துதுன்னு எனக்கு நல்லாவே புரியது தாமு" எனக் கூர்மையாகச் சொன்னவர், "அந்த எடம் மங்க பேர்ல இருக்கு, என்னைக்கும் அவ பேர்லதான் இருக்கும். நான் உசுரோட இருக்கற வரைக்கும் அந்த நெலத்த வேற யாருக்கும் விக்க மாட்டேன், மாத்திக் கொடுக்கவும் மாட்டேன், என்ன நீ நம்பலாம்" என்றார் ஒரே வார்த்தையாக.
"ரொம்ப நல்லது பெரிப்பா, இதைச் சொல்லத்தான் வந்தேன், நான் இப்ப கிளம்பறேன்" என்றவன், "வரேன் மங்க" என்று அவளின் முகம் பார்த்துச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
'இவன் ஏன் இப்ப சம்பந்தமே இல்லாம இந்த நெலத்த பத்திப் பேசிட்டுப் போறான்" என சந்தானம் வெகுவாகக் குழம்பிப்போக, அப்படியே உறைந்து நின்றாள் மங்கை, அவன் மறைமுகமாக அவளிடம் விடுத்த எச்சரிக்கையில்!
அவளது மூக்கில் மின்னிய மூக்குத்தியிலேயே கட்டுண்டு கிடந்தவனாக, கையிலிருந்த புத்தகத்தால் முகத்தில் விசிறிக்கொண்டவன் பாதி தூரம் வந்த பின்புதான் பேச்சு சுவாரஸ்யத்தில் அந்தப் புத்தகத்தைத் தன் கையேடு எடுத்து வந்ததை உணர்ந்தான்.
அந்தப் புத்தகம் அதை அவளுக்கு வாங்கி வந்து கொடுத்த தினத்தின் நினைவுகளை அவனுக்குள் மீட்டியது. அன்று மட்டுமில்லை அவனது கண்களுக்கு இன்றும் கூட புதிதாகத்தான் தெரிந்தாள் நிலமங்கை.
அடுத்த முறை அவன் இங்கே வரும்பொழுது இன்னும் புதியவளாக அவளைப் பார்க்கப்போகிறான் தாமோதரன், அறச்சீற்றம் மிகுந்த ஒரு போராட்டக்காரியாக!
Comentarios