top of page

பூவும் நானும் வேறு-3

இதழ்-3


குற்றமிழைத்தது என் விதியென்று கொண்டால்...


என் அறியாமையும் பெறுங்குற்றமே!

அக்குற்றமிழைத்தவள் நானேயென்றால்...


என் நீதியரசன் நீயேயாவாய்!

தண்டனைகள் முடிந்தபின்னும் கூட...


உன் தீர்புக்காக தலை நிமிர்ந்து நிற்பதால்...


நீ புயலென்றறிந்தே உன் பாதையில் நான் நடப்பதால்...


பூவும் நானும் வேறுதான்!


***


கட்சி தொண்டர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் சிலர்; அவர்களுக்குள் கலந்து இருந்த பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் வாயிலில் குழுமி இருக்க, காலை நேரத்திலேயே வெகு பரபரப்பாக இருந்தது சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்திருந்த அந்த ஆடம்பர பங்களா.


அந்த பரபரப்பில் தன்னை புகுத்திக்கொள்ளும் முன், கொஞ்சம் நிதானமாகக் காலை உணவை உண்டுகொண்டிருந்தார் அமைச்சர் புஷ்பநாதன்.


வேலை ஆட்கள் பயபக்தியுடன் உணவைப் பரிமாறிக்கொண்டிருக்க, அவருக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டு, உரத்த குரலில் எதோ சொல்லிக்கொண்டிருந்தார் அவரது சகதர்மிணி லலிதா.


உறக்கம் அகலாமலோ அல்லது அவன் முந்தைய தினம் அருந்திய மதுவின் போதை தெளியாமலோ, மந்த கதியில் அங்கே வந்து உட்கார்ந்தான் அவர்களுடைய செல்வப் புதல்வன் ஜவஹர்.


அவனைப் பார்த்த அடுத்த கணம், "ஏண்டா ஒரு வாரமா எங்கடா போயிருந்த! கண்ணுலயே படல! நைட் பார்ட்டினு கும்பல் கும்பலா பசங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ணற செய்தியைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அல்லு விட்டு போகுது!


அதுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே?


எதையாவது செஞ்சு வெச்சு கட்சியிலே என்ன அசிங்கப் படுத்திடாத.


கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ.


வாரத்துக்கு ஒரு தடவ அமைச்சரவைய மாத்திக்கிட்டே இருக்காங்க. எங்க பதவி போயிடுமோன்னு அப்படியே பக்குனு இருக்கு எனக்கு!" என அவர் பொரிந்து தள்ள,


"அதுதான் மூத்தவன் வியாபாரத்தை எல்லாம் பொறுப்பா கவனிச்சுக்கறான் இல்ல; இவனையும் ஏன் இப்படி நொய்யி நொய்யின்னு புடுங்கறீங்க?


அவன் வயசு; அப்படி இப்படி இருக்கத்தான் செய்வான்!


நீங்க ரொம்ப யோக்கியமா என்ன? எதுக்கும் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க, எதிர்க் கட்சி காரனுங்க செம காண்டுல இருக்கானுங்க!


என்னமோ சொல்ராங்களே மீமீயோ கீமியோ அதுல போட்டு உங்களைக் கிழிக்க போறானுங்க!" என உரத்த குரலில் நன்றாக மகனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு அவனுக்குப் பரிந்து வந்தார் லலிதா.


வீட்டில் வேலை ஆட்களுக்கு முன் அவர் அப்படி ஆரம்பிக்கவும், கோபத்தில் புஷ்பநாதனின் முகம் விகாரமாக மாற, "ஏய்! என்ன பத்தி இப்ப என்னடி பேச்சு! எங்க எப்படி நடந்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். முதல்ல உன் பிள்ளையை அடக்கிவை! மானம் போனா கூட பரவாயில்ல! *சுரே போச்சுன்னு தொடைச்சி போட்டுட்டு போயிட்டே இருக்கலாம். பதவி போனா உசுரே போயிடும்! எப்படா கவுக்கலாம்னு அவன் அவன் காத்துட்டு இருக்கான்; நீ வேற *** எடுக்காத!" என்றவாறு ஆத்திரத்துடன் அவரை பிடித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றார் அவர்.


தன்னை சமாளித்துக்கொண்டவராக, "கண்ணு அப்பா சொல்றதையும் கொஞ்சம் கேளு ராசா! நீதான அவரோட அரசியல் வாரிசு!


உங்க அண்ணி வேற சாக்கு கிடைக்கும்போதெல்லாம் உன்னைச் சாடை மாடையா நக்கல் பண்றா கண்ணு!


கொஞ்சம் புரிஞ்சிக்கோ!" என லலிதா மகனுக்கு அறிவுரை வழங்க, "மா! நீயுமா! விடும்மா; எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்!" என அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு, சாப்பாட்டில் கவனமானான் ஜவஹர்.


அங்கே நடப்பது எதையும் கொஞ்சமும் கவனிக்காததுபோல், செவிடோ என எண்ணும் அளவிற்கு, முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காண்பிக்காமல், உணவைப் பரிமாறிக்கொண்டிருந்த சமையல் வேலை செய்யும் பெண்மணி, பின்பு சமையற்கட்டிற்குள் நுழைய, அங்கே காய்கறிகளைக் கொண்டுவந்து வைத்த அவர்களுடைய ஓட்டுநரிடம், "பாத்தியா ராசு! என்ன பேச்சு பேசுது இந்த பொம்பள; இதோட வாய்க்கு நல்ல அனுபவிக்கும் பாரு! நல்ல புள்ள; நல்ல குடும்பம்" என கிசுகிசுத்தாள்.


"தைரியம் இருந்தா கொஞ்சம் சத்தமா சொல்லு பாக்கலாம்" என அவன் அவளைக் கிண்டலடிக்க, "நமக்கு எதுக்கு இந்த ஊர் வம்பு; வா போய் நம்ம வேலையைப் பார்க்கலாம்!" என முடித்தாள் அவள்.


***


"சார்! நம்ம ஸ்கூல்ல ஆர்.ஓ பிளான்ட் போட ஒரு ஸ்பான்சர் கிடைச்சிருக்காங்க. அவங்களுக்கு கொடுக்க ஒரு எஸ்டிமேஷன் வேணும்; கிடைக்குமா?" எனப் பள்ளியில், தலைமை ஆசிரியருக்கு முன்பாக உட்கார்ந்திருந்த வசுந்தரா கேட்கவும், அதில் மகிழ்ந்தவர், "ஆல்ரெடி நம்ம கிட்ட இருக்கே" என்றவாறு ஒரு காகித உரையை அவளிடம் நீட்டியவர், "நல்ல வேலை செஞ்சீங்கம்மா! யாரு அந்த ஸ்பான்சர்!" என்று பாராட்டும் விதமாக அவர் கேட்க, திவ்யாபாரதி அவளிடம் கொடுத்த அழைப்பு அட்டையை அவரிடம் நீட்டினாள் வசுந்தரா.


அதைப் பார்த்தவர் சற்று அதிர்ந்து, "எப்படிம்மா இவரோட அப்பாயிண்ட்மெண்ட் கிடைச்சது. எவ்ளோ பெரிய க்ரூப் தெரியுமா இவங்க!" என அவர் ஆச்சரியப்பட, அந்த அட்டையை வாங்கி பார்த்தவள், 'திலீப்ஸ் ஸ்டேஷனரீஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரையே அப்பொழுதுதான் கவனித்தாள் அவள்.


இருந்தாலும் திவ்யபாரதியின் பெயரை எந்த ஒரு இடத்திலும் சொல்வதை அவர் விரும்பமாட்டார் என்ற காரணத்தினால் அதைத் தவிர்த்தவள், "தெரிஞ்சவங்களோட ரிலேட்டிவ்!" என்று மட்டும் சொன்னாள் வசு.


"இது இல்லாம, அந்த பையன் நவீன் இருக்கான் இல்ல சார்! அவனுக்கும் ட்ரீட்மென்டுக்கு அரேஞ்ஜ் பண்ணி இருக்கேன். அவனோட பேரன்ட்ஸ் கிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்கு நீங்க பெர்மிஷன் குடுக்கணும்!" என அவள் சொல்ல,


"ஏம்மா! உங்களுக்கு இதெல்லாம் தேவையா. எதாவது பிரச்சனைனா மேல் இடத்துக்கு யார் பதில் சொல்றது. பீ.டி.ஏல வேற நம்மள கிழிப்பாங்க. மறுபடியும் அவன் எதாவது பிரச்சனை செய்தால் டிசிப்ளினரி ஆக்ஷன் எடுத்துக்கலாம்!" என அவர் அலட்சியத்துடன் பதில் சொல்ல, 'கொள்ளு என்றால் வாயை திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்வதும்' என்பதுபோல் ஆதாயம் இல்லாத ஒரு விஷயத்தைக் கண்டு ஓடி ஒளியும் அவரது எண்ணத்தால் எழுந்த கோபத்தை மறைத்தவளாக, "பரவாயில்ல சார்! நான் பார்த்துக்கறேன்; நீங்க ரிஸ்க் எடுக்க வேணாம்!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் வசுந்தரா.


"இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு; பிழைக்க தெரியாம! நல்லது செய்ய நினைக்கறவங்கள நிம்மதியாவே வாழ விட மாட்டாங்க. அது இன்னும் இவளுக்கு புரியல!" என முணுமுணுத்தபடி, தனது வேலையைத் தொடர்ந்தார் அந்த தலைமை ஆசிரியர்.


***


மாலை வசுந்தராவுக்கு கொடுக்கப்பட்டிருந்த நேரம் நெருங்க நெருங்க, மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கியது திலீபிற்கு.


'சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறதோ!' என்று தோன்றினாலும் அந்த நிலையிலிருந்து விடுபட முடியவில்லை அவனால்.


அவனது அலுவலக அறையை ஒட்டி இருக்கும் ஓய்வறையில் சென்று முகம் கழுவி, கண்ணாடியில் தன் பிம்பத்தை ஒருமுறை சரிபார்த்து வந்து இருக்கையில் அமர்ந்தான்.


இன்டர்காம் ஒலிக்கவும் அதை எடுத்து செவியில் பொருத்தியவன், "அனுப்புங்க ரேஷ்மி!" என்று சொல்லிவிட்டு, "ஆங்! ப்ளீஸ் சென்ட் த்ரீ காஃபீஸ்; அண்ட் ஒன் இஸ் ஃபார் தீபன், ஆப்டர் பிப்டீன் மினிட்ஸ்.


இன் பிட்வீன் நோ ஃபோன் கால்ஸ் ஆர் எனி அதர் டிஸ்டர்பன்ஸ்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் அவன்.


கதவை மென்மையாகத் தட்டிவிட்டு, 'ப்ளீஸ் கம் இன்' என்ற குரலைத் தொடர்ந்து, மென் புன்னகை அரும்ப, கையில் அழகிய பூங்கொத்துடன், "குட் ஈவினிங் திலீப் சார்" என்றவாறு அந்த அறைக்குள் நுழைந்தாள் வசுந்தரா.


அவளுடைய எளிமையான அழகில் தன்னை தொலைத்துக்கொண்டே, அதை அவள் உணராவண்ணம், "வெரி குட் ஈவினிங் மிஸ் வசுந்தரா! வெல்கம்" என்றவன், அவளுக்கான இருக்கையைச் சுட்டிக்காட்டி அமரும்படி ஜாடை செய்யவும், பூங்கொத்தை அவனிடம் கொடுத்து, நன்றி சொல்லிவிட்டு உட்கார்ந்தவள், "பாரதிம்மா உங்களை மீட் பண்ண சொன்னாங்க" என்று தனது பேச்சைத் தொடங்கினாள் வசுந்தரா.


"ம்... நீங்க வேலை செய்யும் ஸ்கூல்ல ஏதோ வாட்டர் ஸ்கேர்சிட்டின்னு சித்தி சொன்னாங்க; அதுக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க!" என்று இயல்பாக அவளிடம் பேச முயன்று, அதில் வெற்றியும் கண்டவாறு, அவன் கேட்க, அவனுடைய கண்ணியமான நடவடிக்கையில் அவனிடம் மரியாதை உண்டானது அவளுக்கு.


எனவே தயக்கமின்றி, "ம்... எஸ் திலீப் சார்! எங்க ஸ்கூல் சிட்டில இருந்து, ரொம்ப டிஸ்டன்ஸ் தள்ளி இருக்கு.


கிட்டத்தட்ட எண்ணூறு பிள்ளைங்க படிக்கறாங்க. ஒரு போர் வெல் இருக்கு. அதுல இருந்துதான் எல்லா உபயோகத்துக்கு தண்ணி எடுக்கிறோம்.


பட் ட்ரிங்கிங் வாட்டர் சோர்ஸ் இல்ல!


பாதுகாப்பில்லாத தண்ணியைத்தான் பிள்ளைங்க குடிச்சிட்டு இருக்காங்க.


அதனால அடிக்கடி உடம்புசரில்லாம போய், லீவ் எடுக்கறாங்க. நல்லா படிக்கற பிள்ளைங்க படிப்பு பாதிக்குது" என அவள் சொல்லிக்கொண்டிருக்க, கதவைத் தட்டிவிட்டு, உள்ளே நுழைந்தான் தீபன் மறுபடி அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தவாறு.


எதிர்பாராமல் அங்கே அவனைக் கண்டதும், அவளுடைய பேச்சு அப்படியே நிற்க, தானும் எழுந்து நின்றாள் வசுந்தரா.


"ஹை! வாடா மச்சான் வா!" என திலீப் அவனை உற்சாகமாக வரவேற்று, "ஹேய் டீப்ஸ்! இவங்கள தெரியும் இல்ல? மிஸ் வசுந்தரா!" என அவளை தீபனுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கத்தில் அவன் சொல்ல, “ஹை!" என்றவாறு வெகு இயல்பாக அவளுக்கு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து உட்கார்ந்தவன், "இவங்கள நேத்துதான் உங்க சித்தி வீட்டுல பார்த்தேன்" என்றான் தீபன்.


தொடர்ந்து, "ஹலோ மிஸ்; நான் ஒண்ணும் உங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டர் இல்ல! என்னைப் பார்த்தால் இப்படி எழுந்து நின்னு ரெஸ்பெக்ட் பண்ண வேண்டாம்" என மென்னகையுடன் அவளிடம் சொல்ல, சிறு தயக்கத்துடன் அவனுக்கு அருகில் உட்கார்ந்தாள் அவள்.


அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்த திலீப், "பார்றா! சித்தி வீட்டுக்கு போயிருந்தியா? அங்கே இவங்களும் வந்திருந்தாங்களா?" எனக் கேட்க, ஆமாம் எனத் தலையை ஆட்டினான் தீபன்.


இதற்கிடையில் மேற்கொண்டு பேச்சை எப்படித் தொடர்வது எனச் சங்கடத்துடன் அவள் திலீப்புடைய முகத்தைப் பார்க்க, "உங்க ஸ்கூலை பத்தி சொல்லிட்டு இருந்தீங்க இல்ல? யூ கேன் கன்டின்யூ வசுந்தரா! பிரச்சினை இல்ல" என அவன் சொல்லவும்,


"இல்ல; என் பிள்ளைங்களுக்கு நல்ல குடி தண்ணீர் கிடைக்க ஒரு ஆர்.ஓ பிளான்ட் போடணும்! அதுக்கு நீங்க ஸ்பான்சர் பண்ணா நல்லா இருக்கும்!" என அவள் சுற்றி வளைக்காமல் சொல்லிவிட்டு அதற்கான மதிப்பீட்டுக் கடிதத்தை அவனிடம் கொடுத்தாள் வசுந்தரா.


"அது கவர்மெண்ட் ஸ்கூல்தானே! இந்த தேவையெல்லாம் அந்த துறை மினிஸ்டர் கிட்ட சொல்லுங்க! அவங்கதான அதை செய்யணும்!


நீங்க ஏன் ஸ்பான்சர் தேடி அலையறீங்க?" எனச் சற்று எரிச்சலுடன் இடை புகுந்தான் தீபன்.


"இ...ல்ல; அவங்களுக்காக வெயிட் பண்ணா, இப்போதைக்கு நடக்காது. பிள்ளைங்க கஷ்டப்படுறத பார்க்க முடியல. அதனாலதான்" என இழுத்தவள், "நானும் இன்னும் சில டீச்சர்ஸும் சேர்ந்து பர்சனலா வாட்டர் கேன் வாங்கறோம்; ஆனாலும் பத்தல!" என எடுத்துச் சொன்னாள் வசுந்தரா.


பாரதி அவளை முன்பே எச்சரித்திருக்கவே, தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, அவனுக்கு எதிரில் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தாள் அவள்.


ஆனாலும் அதற்கிடையில் சிக்கியிருந்த அவளுடைய சிறு தயக்கமும் அவன் கண்களிலிருந்து தப்பவில்லை. அதற்கான காரணத்தை அவனது அறிவு கேள்வி கேட்டது.


"படிக்கற பசங்க தாகத்துக்கு தண்ணி கேக்கறாங்க. செய்யறதுல தப்பில்லன்னு தோணுது டிப்ஸ்! ரொம்ப கேள்வி கேக்காத" என திலீப் அவளுக்குப் பரிந்து வர, அவளுக்காக அவன் மெழுகாய் உருகுவதும், பாகாய் கரைவதும் நன்றாகப் புரிந்தது தீபனுக்கு. அருகில் இருக்கும் பெண் அறியாவண்ணம் கண்களாலேயே நண்பனை எரித்தான் அவன்.


அதை அலட்சியம் செய்தவனாக, அவள் கொடுத்த காகிதத்தைக் கூட பார்க்காமல், "நான் அஃபிஷியலா லெட்டர் கொடுக்கறேன். நீங்க வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க.


பட் பேமென்ட் நேரடியா சர்வீஸ் ப்ரொவைடருக்குத்தான் கொடுப்பேன்!" என்று சொல்லிவிட்டு, உடனே அவனுடைய காரியதரிசியை அழைத்துக் கடித்ததைத் தயார் செய்து கொடுத்து, அவளை வியப்பில் ஆழ்த்தினான் திலீப்.


அவனுக்கு மனதார நன்றி சொல்லிவிட்டு, இருவரிடமும் விடை பெற்று, அங்கிருந்து கிளம்பினாள் வசுந்தரா.


அவள் அங்கிருந்து சென்றதும், "மச்சான்! இவளை வீடியோல பார்த்ததும், இந்த மாதிரி ஒருத்தியைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னுதான்டா நினைச்சேன். ஆனா நேர்ல பார்த்த பிறகு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது இவளோடதான்னு முடிவே பண்ணிட்டேன்டா! என அதுவரை அவன் கட்டுப்படுத்தி வைத்திருந்த எண்ணங்களை மொத்தமாக நண்பனிடம் சொன்னான் திலீப்.


யோசனையுடன் அவனைப் பார்த்த தீபன், "நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத திலீப்! இவ உனக்கு கொஞ்சம் கூட செட் ஆக மாட்டா!" எனத் தீவிரமாகச் சொல்ல, "ஏண்டா ஏன் ஏன்?" எனப் பதட்டத்துடன் கேட்டான் திலீப்.


"ஏன்னு சொல்றேன்; புரிஞ்சுக்க முயற்சி பண்ணு;


ஏன்னா உனக்கு ரொம்ப இன்னசண்டான சாஃப்ட் பொண்ணுதான் சரிப்பட்டு வரும்.


இவ ரொம்ப அழுத்தமான டஃப் கேரக்டரா தெரியறா திலீப்! யோசி" என முடித்தான் தீபன்.


அதுமட்டும் இல்லாமல், அவள் அங்கே இருந்த வரை, அதுவும் வரவழைக்கப்பட்ட காஃபியை மூவரும் அருந்தும் சமயம், திலீபுடைய பார்வை அவளையும் சேர்த்துப் பருகியது என்றால், அதைக் கொஞ்சமும் உணராமல், அங்கும் இங்கும் சுற்றி சுழன்ற அவளுடைய பார்வை அடிக்கடி தீபனிடம் சென்று இளைப்பாறியது, அதை தீபனும் நன்றாகவே உணர்ந்துகொண்டான். ஆனால் அதை மட்டும் சொல்லாமல் தவிர்த்து விட்டான் தீபன்.


நண்பன் சொன்னவற்றைக் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாமல், "அவ எப்படி இருந்தாலும் எனக்கு ஓகேதான்! எனக்கு அவதான் வேணும்! நான் முடிவு பண்ணிட்டேன்!" எனப் பிடிவாதமாகச் சொன்ன திலீப்,


"உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே! உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே!


சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா!" எனப் பாடுவதுபோல் கத்தத்தொடங்க, கைகளால் காதை பொத்திக்கொண்ட தீபன், "கடவுளே! இந்த கிறுக்கன் கிட்ட இருந்து என்னை காப்பாத்து!" என சத்தமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.


***


பேருந்து நிறுத்தத்தில் வெகு நேரமாகப் பேருந்திற்காகக் காத்திருந்த வசுந்தரா, பொறுமை இழந்து கைப்பேசியில் நேரத்தைப் பார்க்க, அது ஆறு மணியைக் கடந்து சில நிமிடங்களைக் காண்பித்தது.


பேருந்து கிடைத்தாலும் வீடு போய்ச் சேர எப்படியும் இரண்டு மணி நேரமேனும் பிடிக்கும் என்ற எண்ணம் தோன்ற, மெல்லிய இருள் பரவத்தொடங்கி இருக்கவும், மனதிற்குள் லேசாகக் கலவரம் எட்டிப்பார்த்தது அவளுக்கு.


அந்த நேரம் அவளுக்கு அருகில் வேகமாக வந்து நின்றது அந்த கார். அவள் பதறி பின்னால் நகர, அதிலிருந்து இறங்கி வந்த தீபன், "நான்தான் வசுந்தரா! பயப்படாதீங்க! நானே உங்கள ட்ராப் பண்றேன் வாங்க!" என அவன் அவளை அழைக்க, தயக்கத்துடன், "இல்ல! பரவாயில்ல! பஸ் வந்துடும்! உங்களுக்கு ஏன் வீண் சிரமம்!" என அவள் சொல்ல,


"உங்கள இப்படி விட்டுட்டு போனா உங்க பராதிம்மா என்னை உண்டு இல்லனு பண்ணிருவாங்க; நானும் அந்த ஏரியா பக்கம்தான் போறேன்; வாங்க!" என அவன் வற்புறுத்தவும், பாரதியின் பெயரை அவன் சொன்னதால் அவனுடைய காரில் உட்கார்ந்தாள் வசுந்தரா.


போக்குவரத்து நெரிசலால் அவனுடைய வாகனம் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருக்கச் சாலையில் கவனத்தைப் பதித்திருந்தான் தீபன்.


அவனுடைய வாகனத்தின் பக்கத்தில் வந்த உயர்ந்த ரக ஆடி கார் ஒன்றின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தவனின் பார்வை யோசனையுடன் முதலில் வசுந்தராவிடம் சென்று, பின்பு அவளைக் கடந்து தீபனிடம் போய் குரோதத்துடன் நிலைத்தது.


'நான் யாரு? நான் யாரு? கொய்யால நான் யாரு?' என அலறிய அவனது கைப்பேசி அவனை மீட்க, அதை எடுத்து அலட்சியமாக, "சொல்லு!" என அவன் சொல்ல, "எப்ப கண்ணு வீட்டுக்கு வருவ? உன்கிட்ட முக்கியமா பேசணும்!" எனக் குழைந்து ஒலித்தது லலிதாவின் குரல்.


***


Recent Posts

See All
Poovum Naanum veru-Epilogue

இதழ்-36 கடைக்காப்பு அத்தியாயம்! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும்...

 
 
 
Poovum Naanum Veru-35

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத்...

 
 
 
Poovum Naanum Veru-34

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான்...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page