top of page

Poove Unn Punnagayil - 15

அத்தியாயம்-15

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா


ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா


வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா


நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா…


கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்


உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


மின்னலே நீ வந்ததேனடி


என் கண்ணிலே ஒரு காயமென்னடி


என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி


சில நாழிகை நீ வந்து போனது


என் மாளிகை அது வெந்து போனது


மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…


ஜன்னல் வழியாகக் கசிந்துவந்த பாடலில் செவிகளைக் கொடுத்து, எதையும் யோசிக்காமல் நிச்சிந்தையாக கல்மேடையில் உட்கார்ந்திருந்தார் தாமரை.


அடுத்து ஒலிக்கவிருக்கும் பாட்டுக்காக அவர் காத்திருக்க, உள்ளே அமைதி நீடிக்கவும், 'என்ன இன்னைக்கு ஒரே பாட்டோட நிறுத்திட்டான்?' என்ற கேள்வி எழுந்து ஜன்னல் புறமாக அவர் திரும்பிப் பார்க்க, சத்யாவின் அறையில் விளக்கு அணைக்கப்பட்டது.


'பாவம், டயர்ட்ல தூக்கம் வந்துடுச்சு போலிருக்கு. அதான் பாட்டை நிறுத்திட்டான். ம்ம்... இன்னும் எத்தனை வருஷத்துக்கு அந்த பொண்ணையே நினைச்சிட்டு இப்படியே இருக்கபோறானோ?' என்ற எண்ணம் தோன்ற, பெருமூச்சு எழுந்தது அவருக்கு.


ஆனால், விளக்கை அணைத்துவிட்டு அவரை தேடித்தான் அங்கே வந்துகொண்டிருந்தான் சத்யா.


"உன் ரூம் லைட்ட ஆஃப் பண்ணவும், நேரத்தோட படுதுட்டியோன்னு நினைச்சேன்" எனப் புன்னகைத்தார் தாமரை.


"உன் பொண்ணு கல்யாணம் முடியற வரைக்கும் எங்க இருந்து எனக்கு தூக்கம் வரும் ம்..." என அவன் இயல்பாகச் சொல்ல, 'ப்ச்...’ என அலுத்துக்கொண்டவர், "புதுசு புதுசா எதையாவது கிளப்பி விட்டுட்டே இருக்காளேடா இவ... என்னதான் செய்யறது" என்றார் அவர் இயலாமையுடன்.


"ஏன்கா, புதுசா இப்ப என்ன?" என அவன் கூர்மையாக கேட்க, "ப்ச், ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டாம், அதுவும் எங்கயாவது வெளி நாட்டுல பண்ணணுமாம். இன்னைக்கு கோட்டாக்கு இழுத்துவிட்டிருக்கா" என அவர் அங்கலாய்க்க,


"இதுல என்ன இருக்கு? இப்ப எல்லாரும் செய்யறதுதான. இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்" எனக் கேட்டான் அவன்.


"தனியா இருக்கும்போது இதைப் பத்தி சொல்லியிருந்தா..தான் பிரச்சனையே இல்லையே. அவங்க அத்தை பாட்டி ரெண்டுபேரையும் வெச்சிட்டே இல்ல சொல்லி முடிச்சிட்டா. போறாத குறைக்கு மெஹெந்தி, சங்கீத் லொட்டு லொசுக்குன்னு. 'இதெல்லாம் நம்ம வழக்கத்துல உண்டா? சடங்கு சம்பிரதாயதெல்லாம் புது புதுசா மாத்தலாமா? கல்யாணத்துக்கு முன்னால இப்படி சினிமா ஷூட்டிங் மாதிரி கன்றாவியெல்லாம் நமக்கு தேவையா?'ன்னு அவங்க பங்குக்கு ஆடி தீர்த்துட்டாங்க" என அவர் வருந்த,


"இதெல்லாம் நமக்கு புதுசா என்ன? விடுக்கா பார்த்துக்கலாம். தெரிஞ்ச வெட்டிங் போட்டோ ஏஜன்ஸில பேசி வெச்சிருக்கேன். அவங்களும் ப்ரீ வெட்டிங் ஷூட் பத்தி கேட்டாங்க. நேர்ல வந்து பேசறதா சொல்லியிருக்கேன். அத்தானையும் வெச்சிட்டு பேசி முடிவெடுக்கலாம்" என அவன் சொல்லிக்கொண்டிருக்கவும், கருணாகரனின் வாகனம் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.


"சரி... அத்தான் வந்துட்டாங்க. சாப்பாடு போடணும். நீ போய் தூங்கு, மத்தத காலைல பேசிக்கலாம்" என்றவாறு அங்கிருந்து எழுந்துச் சென்றார் தாமரை.


***


தாமரை உணவு மேசை மேல் சாப்பாட்டை எடுத்துவைக்க, சுத்தப்படுத்திக்கொண்டு இலகு உடைக்கு மாறி அங்கே வந்தார் கருணா.


"உம் பொண்ணுக்கு என்ன கார் வேணுமாம்? ஏதாவது சொன்னாளா?' எனக் கேட்டவாறு கைப்பேசியை உயிர்ப்பித்து கூகுளை குடைந்தவர், அதை மேசை மீது வைக்க கார்களாக வந்து குவிந்தது அதன் திரையில்.


"ம்ம்... காலைல கூட சந்து கிட்ட சொல்லிட்டு இருந்தாளே, ஏதோ லேட்டஸ்ட் மாடல்" என்றவர் சற்று யோசித்து தாமரை அதன் பெயரைச் சொல்ல, "சுத்தம், அது பார்க்கத்தான் பந்தாவா இருக்கும், மத்தபடி மைலேஜே கொடுக்காது. காரையும் வாங்கி கொடுத்துட்டு அதுக்கு பெட்ரோல் போட மாசாமாசம் பணத்தையும் நான்தான் அவளுக்கு கொடுக்கணும்" என எரிச்சலுடன் சொன்னவர், "சத்யா முழிச்சிட்டு இருந்தான்னா கொஞ்சம் வரச்சொல்லு' என அவர் சொல்லவும், போய் அவனை அழைத்துவந்தார் தாமரை.


"சொல்லுங்க அத்தான்" என வந்து நின்றவனை, "என்ன கார் வங்கலாம் சத்யா' என அவர் கேட்கவும், முதலில் புரியாமல் விழித்தவன் பிறகு ஹாசினிக்காக கேட்கிறார் என்பது விளங்க, "பெரிய கார் வேண்டாம் அத்தான். அவங்க ஃப்ளாட்ல பார்க்கிங் ஃபெசிலிட்டி கிடையாது. ஹேட்ச்பேக் மாடல் கார் ஏதாவது வாங்கலாம்" என்றவன் சில கார்களின் பெயர்களை சொல்லி அவற்றின் சாதக பாதகங்களையும் விளக்க, அவற்றில் ஒன்றைக் குறிப்பிட்டவர், 'இதுவே பெட்டரா தோணுது. நாளைக்கு நீயே அவளை கூட்டிட்டு போய் புக் பண்ணிட்டு வந்திடு. உங்கக்காவும் சந்துவும் வந்தா அவங்களையும் கூட்டிட்டு போ" என்று சொல்லிவிட்டு, "நான் பார்த்த பையனா இருந்தா, ஒவ்வொண்ணுக்கும் நானே வந்து நின்னிருப்பேன். என்னவோ மனசே ஒட்டல" என முணுமுணுத்தார் அவர். கழிவிரக்கம், ஏமாற்றம் எல்லாம் கலந்து ஆதங்கத்துடன் வந்தன அவரது வார்த்தைகள். இயலாமையுடன் அவரை பார்த்துவைத்தார் தாமரை.


அதன் பின், போட்டோ ஷூட், மெஹெந்தி, சங்கீத் என மகள் ஆசையாகக் கேட்ட அனைத்தையும் தாமரை பட்டியலிட, "உனக்கு இதெல்லாம் தேவைன்னு படுதா தாமர?" எனக் கேட்டர் கருணா.


"தேவையா தேவையில்லையான்னு ஒண்ணுமே புரியலைங்க. ஊர் உலகத்துல எல்லாரும் இதையெல்லாம் செய்யும்போது, முக்கியமானவங்கள கூப்பிட்டு அமைதியா ஒரு கல்யாணம் பண்ணா போறாதா? அதுக்கு பிறகு அவங்க வாழப்போற வாழ்க்கைதான முக்கியம். இப்படி திருவிழா மாதிரி கோலாகலாமா இவ்வளவு அமர்க்களமும் ஆடம்பரமும் தேவைதானான்னு நான் நிறைய தடவ நினைச்சிருக்கேன். ஆனா நமக்குன்னு வரும்போது, அதுவும் அவ இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுத்து ஆசைப்பட்டு கேட்கும்போது வேண்டாம்னு சொல்ல முடியல. அவ கூட படிச்ச பிள்ளைங்க கல்யாணத்துல இந்த கூத்தையெல்லாம் நானே பார்த்திருக்கேனே. ஆனா அத்தை அண்ணி இவங்களுக்கெல்லாம் இதெல்லாம் பிடிக்கல போலிருக்கு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல" என அவர் குழப்பத்துடன் பதில் சொல்ல, "இப்பல்லாம் கடன் வாங்கியாவது இதையெல்லாம் செய்யறாங்கதான அத்தான், காலத்தின் கோலம், நமக்கு பிடிக்குதோ இல்லையோ பிள்ளைகளுக்காக இதையெல்லாம் நடத்திதான் ஆகணும். வேண்டாம்னு ஈஸியா சொல்லிட்டு போயிடலாம். அவங்க காலம் முழுமைக்கும் ஒரு குறை இருந்துட்டே இருக்கும் இல்ல" என சத்யா அவன் பங்கிற்குச் சொல்ல, "அம்மாவையும் அக்காவையும் நான் பார்த்துக்கறேன். என்ன செய்யணும்னு தோணுதோ செஞ்சிட்டு போங்க. எவ்வளவு பணம் வேணும்னு மட்டும் சொல்லுங்க, கொடுக்கறேன்" என முடித்துக்கொண்டார் கருணாகரன்.


இதை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி பிடிபடவில்லை ஹாசினிக்கு. உடனே கௌசிக்கை அழைத்து இதைப் பற்றிச் சொல்ல, 'ப்ரீ வெட்டிங் ஷூட்' என்கிற விஷயத்தைக் கேட்டதும் அப்படி ஒரு தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது அவனுக்கு. உள்ளுக்குள்ளே அவனுக்கும் இதிலெல்லாம் ஆசைதான் என்றாலும் அவனுடைய அம்மாவின் சம்மதமில்லாமல் அவனால் இதற்கு ஒப்புதல் கொடுக்க இயலாது. அதை ஹாசினியிடம் வெளிப்படையாகச் சொன்னால், அவ்வளவுதான் வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கத்தொடங்கிவிடுவாள். எனவே சற்று மழுப்பலாகப் பேசி ஒரு நாள் அவகாசம் வாங்கிக்கொண்டான் அவன்.


எனவே, அடுத்தநாள் நாள் நன்றாக இருக்கவே, அனைவருமாகப் போய் கார் புக் செய்துவிட்டு வந்தனர். அன்று மாலையே கௌசிக் வீட்டினரையும் வரச்சொல்லி, ஹாசினி கௌசிக் இருவருக்குமான திருமண உடைகள், கூரைப்புடவை தாலி என அனைத்தையும் வாங்கி முடித்தனர் கைகலப்பும் கலகலப்புமாக.


அடுத்ததாக, ரிஸப்ஷனுக்கான உடைகளைத் தேர்ந்தெடுக்கச் சென்னையிலேயே மிகப் பிரபலமான பொட்டிக் ஒன்றுக்கு வந்தனர் அனைவரும். கௌசிக்கிற்கு வழக்கமான பாணியில் கோட் சூட் தைப்பதற்காகப் பிரத்தியேக துணியைத் தேர்ந்தெடுத்து, அதற்கு அளவும் கொடுத்துவிட்டு, அதே நிறத்தில் ஹாசினி தனக்காக ஃபுல் ஃப்ராக் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, அங்கேயே வைத்து, "இதெல்லாம் எங்க குடும்பத்துக்கு செட் ஆகாது. எங்க பாரம்பரியம் என்ன? எங்க கலாச்சாரம் என்ன? எங்க வீட்டு மருமக கவுன் போட்றதா?" என சங்கரி குதி குதி என குதிக்க, அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது தாமரைக்கு. மகள் வேறு, யார் சொல்வதையும் கேட்க மாட்டேன் என்கிற ரகமாயிற்றே! பூஜாவுக்கும் அதே போன்று விலை உயர்ந்த ஒரு உடையை வாங்கிக்கொடுப்பதாகச் சொன்ன பிறகுதான் விட்டுக்கொடுத்தார் சங்கரி. இதில் ஆகச்சிறந்த நகைப்பிற்குரிய விஷயம் என்னவென்றால் அண்ணனின் திருமண வரவேற்பில் அணிய பூஜா தேர்ந்தெடுத்த உடையும் ஒரு ஃபுல் ஃப்ராக்தான்.


அதற்குள் கையில் காலில் விழுந்து, அதை மிக உயர்ந்த விஷயமாகச் சித்தரித்து, அவனுடைய அம்மாவைச் சரிக்கட்டி போட்டோ ஷூட்டுக்கு அவன் ஒப்புதல் வாங்கியிருக்க, அடுத்த நாளே சத்யா சொன்ன தொழில் முறை புகைப்பட நிறுவனத்திற்கு நேரில் சென்று, வீடியோ காலில் கௌசிக்கையும் இணைத்துக்கொண்டு, ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட், கேண்டிட் போட்டோஸ், மற்றும் வழக்கமான திருமண புகைப்படங்கள் என ஹாசினியின் தேவைக்கேற்ப அனைத்தையும் பேசி முடித்து, அதற்கான முன் பணமும் செலுத்திவிட்டு வந்தனர்.


***


திருமணத்திற்கிடையில் அதிக நாட்கள் அவகாசம் இல்லாததால் வெளிநாடு எங்கும் செல்ல இயலாமல் போக, வால்பாறையைத் தேர்ந்தெடுத்து போட்டோ சூட்டுக்காக அங்கே செல்ல முடிவெடுத்தனர்.


அவர்களுடன் ஹாசினியின் சித்தப்பா ஜனாவும் அவளுடைய சித்தி ரூபாவும் செல்வதாக ஏற்பாடாகி இருக்க, கௌசிக்குடன் பூஜாவை அனுப்பிவைக்க முடிவெடுத்தார் சங்கரி, அப்பொழுதுதான் எல்லை மீறிப் போகமாட்டான் மகன் என்கிற நம்பிக்கையில்.


இன்னும் இரண்டு தினங்களில் அவர்கள் அங்கே செல்ல வேண்டியிருக்க, மறுபடி மறுபடி பாலா வேறு அவளை ஒருநாள் தங்களுடன் நேரம் செலவழிக்குமாறு அழைக்கவும், தவிர்க்க இயலாமல் தாமரையிடம் வந்துநின்றாள் ஹாசினி.


'இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா?' என அவர் வெகுவாக தயங்கவும், ஹாசினி கெஞ்சலில் இறங்க, 'கல்லூரி தோழியர்தானே! இதில் என்ன வந்துவிடப் போகிறது? போனால் போகட்டும்' என்கிற ரீதியில் அதற்கு சம்மதித்து விட்டார் தாமரை. சமயத்தில் நாம் வெகு சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயம்தான் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு அடித்தளம் அமைக்கும் என்பதைப் பாவம் அவர் அப்பொழுது நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்.


அன்றே பாலா முதலான அவளுடைய தோழியர்களுடன் மதிய உணவுக்கு ஒரு நட்சத்திர விடுதிக்குச் சென்று வந்தாள் ஹாசினி. அங்கே அவளுடைய கல்லூரி தோழன் தருணும் வந்திருந்தான்.


இது எல்லாமே கௌசிக்கிற்கும் தெரிந்தேதான் நடந்தேறியது. ஆனால் அது அவனுக்கு உவப்பானதாக இருந்ததா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.


காரணம் அந்த கும்பலை அவனுக்குக் கல்லூரிநாட்களிலிருந்தே அறவே பிடிக்காது. இதனாலேயே அவர்களுடைய காதல் விவகாரம் அவளுடைய நட்பு வட்டத்துக்குத் தெரியாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டான் கௌசிக்.


ஓரளவுக்குமேல், அவர்களைத் தள்ளிவைக்க அவன் முயன்ற போதெல்லாம் அது அவர்கள் இருவருக்குள்ளும் கசப்பை ஏற்படுத்துவது புரியவும் அதற்கான முயற்சியைக் கைவிட்டுவிட்டான் அவன்.


'இவை எல்லாமே திருமணம் என்கிற ஒன்று நடந்து முடியும்வரைதான். அதன் பிறகு தன்னை மீறி ஹாசினியால் செல்ல இயலாது. இதுபோன்றெல்லாம் நடக்காமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்கிற மனநிலையில் அவன் இருக்கவும், அவனும் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.


ஹாசினி போன்ற சக்திவாய்ந்த பின்புலம் கொண்ட இன்றைய தலைமுறை பெண்ணிடம் ஆதிக்கம் செலுத்தவோ இல்லை அடக்கி ஆளவோ ஒருவன் நினைத்தால், அவன் கணவனே என்றாலும், காதல் மணம் புரிந்தவனே என்றாலும், அது நடக்கின்ற காரியமா என்ன? உணரவேண்டாமா இந்த ஆண்மகன். அதுவும் சங்கரி போன்ற ஒரு பெண்ணிற்கு மகனாகப் பிறந்தவன்.


****************

Recent Posts

See All
Poove Unn Punnagayil - 36

அத்தியாயம்-36 சென்னை மாநகரின் பிரதான பகுதியில் அமைந்திருந்த ஒரு பிரம்மாண்டமான திருமண மாளிகையின் முன்பு வந்து நின்ற ஆட்டோவிலிருந்து...

 
 
 
Poove Unn Punnagayil - 35

அத்தியாயம்-35 சத்யா கையில் ஏந்தியிருந்த தலைக்கவசம் அவன் இரு சக்கர வாகனத்தில்தான் வந்திருக்கிறான் என்பதை சொல்லாமல் சொன்னது. அவளுடன்...

 
 
 
Poove Unn Punnagayil - 34

அத்தியாயம்-34 கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆண் பெண் என பாகுபாடில்லாத மிகப்பெரிய நட்பு வட்டம் இவர்களுடையது. எல்லோருமே வசதி படைத்த...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page