top of page

Poove Unn Punnagayil - 20

அத்தியாயம்-20

'அண்ணா, உங்க ஆபிஸ்க்கு எதிர ஒரு டீக்கடை இருக்கு இல்ல, அங்க டீ நல்லா இருக்குமா" என சத்யா தீவிரமாக கேட்க, "சூப்பரா இருக்கும் தம்பி. அதுவும் கடைக்காரன் நம்ம ஆளுதான். நான் போனா ஸ்பெஷலா டீ போட்டு தருவான்" என்றார் ஞானம் பெருமை பொங்க.


"சூப்பர்தான் போங்க" என அவரை புகழ்ந்தவன், வரும் போது சூடா சமோசா வேற போட்டுட்டு இருந்தாங்கண்ணா. பார்க்கும்போதே சாப்பிடணும்னு தோணிச்சு. நீங்க ப்ரீயா இருந்தா வாங்களேன், நாம போய் ஒரு கை பார்ப்போம். மறக்காம என்ன ஞாபகம் வெச்சுட்டு விசாரிச்சீங்க இல்ல, அதுக்கு குட்டி ட்ரீட்ன்னு வேணா வெச்சுக்கலாம்" என ஒரு பார்வை சக்தியைப் பார்த்துக்கொண்டே அவன் புன்னகையுடன் சொல்ல, "அப்படினா உடனே வாங்க தம்பி போகலாம். ஏன்னா இங்க சமோசா போட்ட உடனே காலி ஆயிடும்" என்று அவர் அவனைத் துரிதப்படுத்த, "அடடா, எனக்கு உங்க மேடம் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே" என அவன் வருத்தத்துடன் இழுக்க, "பரவாயில்ல தம்பி, நீங்க பேசிட்டு வாங்க, நான் போய் ஒரு நாலு சமோசாவை நிறுத்தி வெக்கறேன்" என உற்சாகமாகச் சொல்லிவிட்டு அவசரமாக வெளியில் சென்றார் அவர்.


'தனியா பேசணும், நீங்க வெளியில போங்க' என்பதை இவ்வளவு நாசூக்காக அவன் சொன்ன விதம் உண்மையிலேயே சக்தியை வெகுவாக கவர்ந்தது.


அவளுடைய முகத்தில் படர்ந்திருந்த இலகு தன்மையில் அவனிடம் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த தயக்கமும் விலகிவிட, "நீங்க என்ன ஞாபகம் வெச்சுக்கலன்னாலும் பரவாயில்லை மிஸ் சக்தி, ஆனா இங்க உங்களை பார்த்தவுடனே இந்த பிரச்சனையை ஈஸியா சால்வ் பண்ணிடலாம்னு எனக்கு ஒரு நம்பிக்கை வந்துடுச்சு" என அவன் சொல்லவும், "பேருக்கு முன்னால இந்த மிஸ் மிஸஸ் எதையாவது ஒண்ணை சேர்த்து சொன்னாதான் உங்களுக்கு தூக்கம் வருமா?" என அவனை முறைத்துக்கொண்டே அவள் கண்டன குரலில் கேட்க, "அது அப்படி இல்லங்க, ஒரு பெண்ணை சட்டுன்னு எப்படி பேர் சொல்லி கூப்பிட முடியும் சொல்லுங்க, நீங்க லாயர் வேற? மேடம்னு கூப்பிட்டா ஒரு வயசான பீல் வருது இல்ல" என அவன் இடக்காகக் கேள்வி கேட்க, வயதைப் பற்றி குறிப்பிடவும் அவளுடைய முகம் அஷ்டகோணலாகிப்போக, "ப்பா... என்ன வாய்ங்க உங்களுக்கு? நீங்க பேசாம வக்கீல் ஆகியிருக்கலாம்" என்றாள் அவள் ஆயாசத்துடன்.


"ப்ச்... நான்லாம் வக்கீல் ஆகியிருந்தா அப்பறம் ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்கபோறேன்" என அதற்கும் உடனடியாக ஒரு பதிலைக் கொடுத்தவன், "நம்ம விஷயத்தை விடுங்க, நான் உங்களை எப்படியும் கூப்பிடல" என்று சட்டென விட்டுக்கொடுத்துவிட்டு, "அவங்க ரெண்டு பேருக்குமே வாழ்க்கையை பத்தின சீரியஸ்னஸ்ஸே இல்லன்னுதான் சொல்லணும், எல்லாத்துக்குமே எடுத்தேன் கவுத்தேன்ன்னு முடிவெடுத்துட்டு எல்லாரையும் தொங்கல்ல விடறாங்க" என அவன் அங்கலாய்க்க,


முகத்தில் கொஞ்சம் கூட சலனமே இல்லாமல், "கௌசிக்கை பத்தி எனக்கு அப்படி நினைக்க தோணல மிஸ்டர் சத்யா. ஏன்னா அவர் நல்ல மெச்சூர்டா பேசற மாதிரித்தான் தோணுது..


நான் தெரிஞ்சிட்ட வரைக்கும், கல்யாணம் ஆகி அவங்க சேர்ந்திருந்த நாலு மாசத்துல, முதல் ரெண்டு மாசம் மட்டும்தான் அவங்களுக்குள்ள ஸ்மூத்தா போயிருக்கு.


அதுக்கு பிறகு, அவரால சேட்டிஸ்ஃபயே பண்ண முடியாத அளவுக்கு உங்க வீட்டு பொண்ணோட டிமேண்ட்ஸ் அண்ட் எக்ஸ்பெக்ட்டேஷன்ஸ் டே டு டே இன்கிரீஸ் ஆயிட்டே போயிருக்கு.


எல்லாத்தையும் என்கிட்ட சொல்லலன்னாலும், அவர் சொன்ன வரைக்கும் எனக்கு புரிஞ்சது என்னன்னா, அவங்க அப்பாவோட ஆட் ஆன் கார்ட் வெச்சு அடிக்கடி அவங்க பர்ச்சேஸ் செஞ்சது அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.


அடிக்கடி அவர் லீவ் எடுத்துட்டு அவங்க கூட அவுட்டிங் வரணும்னு எதிர்பார்த்திருக்காங்க. அதுக்கு அவரோட ஆபிஸ் சூழ்நிலை இடம் கொடுக்கல. ஸோ, அவரை வேலையை விட்டுட்டு உங்க அப்பா கம்பெனில ஜாயின் பண்ண சொல்லி தொடர்ந்து ப்ரெஷர் போட்ருக்காங்க ஹாசினி.


அதுக்கு அவர் விருப்பப்படல. அதனால, பழிவாங்கற மாதிரி அவரை அவாய்ட் பண்ணிட்டு, அடிக்கடி ப்ரெண்ட்ஸ் கூட பர்ச்சேஸ், மூவீ, லஞ்சு பார்ட்டின்னு வெளியில கிளம்பி போக ஆரம்பிச்சுட்டாங்க. இல்லன்னா பிறந்த வீட்டுக்கு போயிடுவாங்களாம். வீட்டுக்குள்ளயும் யார் கூடவும் ஒரு ஸ்மூத் ரிலேஷன்ஷிப் மெயின்டைன் பண்ண அவங்க முயற்சி செய்யல" என சக்தி சொல்லிக்கொண்டே போக, வேதனையாக இருந்தது சத்யாவுக்கு.


"எப்படியாவது ரெண்டு மூணு நாள் அடஜஸ்ட் பண்ணுங்க, மிஸ்" என தொடங்கியவன், "நடுவுல நைசா நீங்க என்னை மிஸ்டர்னு சொல்லுவீங்க, நான் கண்டுக்காத மாதிரி போகணும், ஆனா நான் மட்டும் உங்களை மிஸ்னு சொல்ல கூடாது, என்ன ஒரு வில்லத்தனம்” என புலம்பலாக சொல்லவிட்டு, "கௌசிக்கை கொஞ்சம் சமாளிங்க, நான் ஹாசினிகிட்ட பேசிட்டு சொல்றேன், ஒரு நாள் எப்படியாவது ரெண்டுபேரையும் ஒண்ணா உட்கார வெச்சு சமாதானம் பேசுவோம், கண்டிப்பா ஒரு நல்ல முடிவு கிடைக்கும்" என அவன் நம்பிக்கையுடன் சொல்ல, "கண்டிப்பா, எனக்கும் அதுதான் விருப்பம்" என்றாள் சக்தி மலர்ந்த புன்னகையுடன். அந்த புன்னகை, பேச்சின் நடுவில் மிஸ்ஸுக்கும் மிஸ்டருக்கும் அவன் கொடுத்த விளக்கத்தின் பலன் என்பது புரிந்தது சத்யாவுக்கு.


"அப்பாடி, ஒரு வழியா சிரிச்சிடீங்க. அப்படினா நீங்களும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமில்ல?" என அவன் வெகு இயல்பாக கேட்க, 'என்ன?' என்ற கேள்வியை தன் பார்வையால் அவள் தொடுக்க, "சமோசா, டீ, பட்டர் பிஸ்கட் எல்லாத்தோடவும் நம்ம ஞானம் அண்ணா கூட ட்ரீட்" என அவன் அதற்கு விளக்கம் கொடுக்க, 'அவனுடன் இணைந்துகொண்டால்தான் என்ன?' என்கிற ஆவல் அவளையும் அறியாமல் தலைதூக்கினாலும், "பரவாயில்ல மிஸ்...டர் சத்யா" எனத் தன்னையும் அறியாமல் சொல்லிவிட்டு, சொன்ன வேகத்தில் அதை உணர்ந்து, வாய் விட்டுச் சிரித்தவாறு, "எனக்கு அடுத்த கிளையண்ட் காத்துட்டு இருக்காங்க, இன்னொருநாள் பார்க்கலாம்" என்றாள் தன் சூழ்நிலையைக் காரணம் காட்டி.


அவளுடைய சிரிப்பை மனம் முழுவதிலும் நிரப்பிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பியவன், அந்த அலுவலகத்தின் எதிரே இருந்த தேநீர் விடுதியில் காத்திருந்த ஞானத்துடன் இணைந்துகொண்டான் சமோசா மற்றும் தேநீருடன்.


***


சத்யா வீடுதிரும்பும்பொழுது மாலை மறைந்து இருள் கவிழத்தொடங்கியிருந்தது.


அவனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வந்தவனின் பார்வை வழக்கமாக அவனுடைய தமக்கை உட்காரும் இடத்தை நோக்கிச் செல்ல, வெகு அதிசயமாக அன்று அங்கே ஹாசினி அமர்ந்திருந்தாள்.


அதை காண அவ்வளவு வியப்பாக இருந்தது அவனுக்கு. இப்படி ஒரு இடத்திலெல்லாம் பொருந்தி உட்காருபவள் இல்லை அவள்.


ஒரு உந்துதலில் அனிச்சை செயலாக அவன் அவளுக்கு அருகில் வந்து நிற்க, அதைக் கூட உணராமல் அவளுடைய பார்வை இலக்கில்லாமல் எங்கோ வெறித்திருக்க, அப்படி ஒரு ஏக்கம் படர்ந்திருந்தது அவளுடைய முகத்தில்.


என்னதான் விவாகரத்து வேண்டும் என அவள் ஒரு பக்கம் தீவிரமாக சொல்லிக்கொண்டிருந்தாலும், அவளுடைய வழக்கமான உற்சாகத்தை இழந்தவளாக, மிகவும் பிடித்தமான பொம்மையைத் தொலைத்த குழந்தையின் அலைப்புறுதல் போல கௌசிக்கை பிரிந்து வந்ததால் உண்டான துயர் அவளிடம் அப்பட்டமாக தெரிந்தது.


அவள் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்பதை கணிக்கவே இயலவில்லை அவனால்.


போய் அருகிலிருந்த குழாயில் கை, கால், முகம் கழுவியவன், அதில் அந்த மோனநிலை கலைந்து அவள் திரும்பிப்பார்க்கவும், அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான்.


அவனைப் பார்த்ததும் அவள் இயல்பாய் புன்னகைக்க, அதில் ஜீவனே இல்லாமல் இருக்கவும், 'என்ன இல்லை இந்த பெண்ணுக்கு? இப்படி தன் நிம்மதியையும் கெடுத்துக்கொண்டு தன்னை சுற்றி இருப்பவரின் மனநிம்மதியையும் கெடுகிறாளே!' என்று மனம் கனத்து போனது அவனுக்கு.


ஆதூரமாக அவளது கூந்தலை வருடியவன், "இந்த நேரத்துல ஏன் இப்படி தனியா உட்கார்ந்திருக்க குட்டிம்மா?" என அவன் கரிசனையுடன் கேட்ட கேள்விக்கு, "ப்ச்... ரொம்ப லோன்லியா பீல் ஆச்சு மாம்ஸ்... இங்க வந்து உட்கார்ந்து இந்த கலர் கலர் ரோஸஸ் எல்லாத்தையும் பார்த்துட்டே இருந்தேனா, அதுல டைம் போனதே தெரியல" என்ற ஹாசினியின் பதிலில் மேலும் வியப்பு கூடிப்போனது சத்யாவுக்கு.


'அதுதான் இவளுடைய நேரத்தை களவாடத்தான் ஆகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பான செல்போனும், எப்பொழுதும் இவளைச் சுற்றி இவளைப்போன்றே விவஸ்தை கெட்ட ஒரு கூட்டமும் இருக்கிறதே, பிறகு ஏன் இப்படி ஒரு தனிமை உணர்வு இவளுக்கு? இதைக் கொஞ்சமும் யோசிக்க மாட்டாளா இவள்?' என்கிற கேள்வியும், கூடவே, சில நாட்களாகவே மகளைப் பற்றிய மன உளைச்சலில் உறக்கமின்றி கண்ணுக்குக் கீழே கருவளையம் படரும் அளவுக்கு பொலிவிழந்துபோயிருக்கும் அவனுடைய அக்காவின் நினைவும் வந்தது அவனுக்கு. அவனையும் அறியாமல் தாயையும் மகளையும் ஒப்பிட்டுப் பார்த்தது மனம்.


"ஒண்ணு தெரியுமா ஹாசினி, இது எங்க அக்காவோட சிம்மாசனம், இதுல உட்கார பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து போற மனப்பான்மை, சுய சிந்தனை, கொஞ்சம் அதிகமா சுயமரியாதை அப்படிங்கற சில தகுதிகள் வேணும். அதெல்லாம் உன்கிட்ட இருக்கா?" என அவன் கூர்மையாகக் கேட்க, "ஏன், மாம்ஸ்... அதெல்லாம் என் கிட்ட இல்லங்கறீங்களா?" என ரோஷமாக கேட்டாள் ஹாசினி.


"அப்படினா, அந்த குவாலிடீஸ்லாம் உன்கிட்ட இருக்குன்னு சொல்றியா?" என அவன் மறுபடியும் கேட்க, "ஏன் மாம்ஸ், நான் அம்மா மாதிரி இல்லையா?" எனக் கேட்டாள் அவள் நலிந்த குரலில்.


"நிச்சயமா இல்ல ஹாசினி, அதெல்லாம் என்னன்னு கூட உனக்கு தெரியாது" என கடிந்துகொண்டவன், "ஏன் தெரியுமா? வாழ்க்கையோட வலி நிறைந்த பக்ககங்களை நீ இதுவரைக்கும் பார்க்கவே இல்ல! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? நீ ஒரு படிப்பறிவில்லாத வெகுளியான ஏழை லாரி கிளீனரோட பொண்ணு கிடையாது. பெத்த பிள்ளைகளுக்கு நல்லது செய்யறதா நினைச்சிட்டு ஒரு ராஜ பாட்டைய போட்டு வெச்சிட்டு, அதுல கூட உங்களை உங்க சொந்த கால்ல நடக்கவிடாம தன் தோள்மேலயே தூக்கிட்டு நிக்கற, எதார்த்தம் கண்ணை மறைக்கற அளவுக்கு உங்க மேல பாசம் வெச்சிருக்கற ஒரு பணக்கார அப்பாவுக்கு பிறந்தவ நீ" என்றவன், "ஏன் ஹாசினி இப்படி இருக்க, வாழக்கையை ஏன் இவ்வளவு ஈஸியா எடுத்துக்கற. நீயே விரும்பிதான் கௌசிக்க சூஸ் பண்ண! பிடிவாதம் பிடிச்சுதான் அவனை கல்யாணமும் செஞ்சுட்ட. அதுவரைக்கும் எல்லாமே சரி. தப்புன்னே சொல்ல மாட்டேன். ஆனா அவ்வளவு தீவிரமான உன்னோட மூணு வருஷ காதல், எப்படி ஹாசினி ஒரு மூணு மாசம் கூட தாக்குபிடிக்காம காலாவதியாகிப்போச்சு, அது கேவலம் இல்ல?" என உள்ளே ஊற்றெடுத்த ஆதங்கத்தை தேக்கி, அவன் அழுத்தமாகக் கேட்டுக்கொண்டே போக, "எல்லாம் வெறும் இன்பேக்ச்சுவேஷன் மாம்ஸ், இன்பேக்ச்சுவேஷன்! அது புரிய எனக்கு இத்தனை நாள் ஆச்சு" என அவள் வெகு இயல்பாக பதில் கொடுக்கவும், திக் என்று ஆனது சத்யாவுக்கு.


"என்ன சொல்ற நீ?" என அவன் அதிர்வுடன் கேட்க, "அப்பாவே ஒரு மாப்பிளை பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா, எப்படிப்பட்ட ஒரு மாப்பிளையை பார்த்திருப்பாங்க? இந்த மாதிரி ஒரு ஜெயிலுக்குள்ள என்னை தள்ளியிருப்பாங்களா சொல்லுங்க? பாலா கல்யாணத்துக்கு முன்னாலயே இதை சொன்னா!? எனக்குதான் அப்ப புரியல! கௌசிக்க எப்படியாவது என் வழிக்கு கொண்டுவந்துடலாம்னு லூசுத்தனமா கற்பனை பண்ணிட்டு இருந்துட்டேன்" என அவள் கழிவிரக்கத்துடன் அடுக்கிக்கொண்டே போக, ஏற்கனவே பாலாவை நினைத்து மனதிற்குள் லேசாகத் துளிர்த்திருந்த சந்தேகம் இப்பொழுது வலுத்தது அவனுக்கு.


இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் முனைப்புடன், "அவளுங்க பேச்சையெல்லாம் கேட்டுட்டுதான் நீ இப்படி ஒரு முடிவுக்கு வந்தியா? அப்படி என்ன சொன்னா பாலா?" என அவன் வெகு இயல்பாகக் கேட்க முயல, ஆனாலும் அவனுடைய குரலில் வெளிப்பட்டுவிட்ட கடுமையில் சற்று நிதானித்தவள், "ச்ச..ச்ச... அவ தப்பா எதுவும் சொல்லல மாம்ஸ்... அப்பா பார்த்திருந்தா இன்னும் நல்ல மாப்பிள்ளையா பார்த்திருப்பாங்கன்னுதான் சொன்னா" என மழுப்பியவள், அவசரமாக அங்கிருந்து அகன்றாள் ஹாசினி மேற்கொண்டு அவன் ஏதாவது வார்த்தையைப் பிடுங்கி வம்பை இழுத்துவிடுவானோ என்கிற பயத்தில்.


நிச்சயம் இதில் ஏதோ சூது அடங்கியிருக்கிறது என்பது திண்ணமாக விளங்க, அவளைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்றான் சத்யா எதுவாக இருந்தாலும் அதை கண்டுபிடிக்கவேண்டும் என்கிற ஒரு உத்வேகத்துடன்..


வேகமாகச் சென்றவள் தன்னுடைய அறைக்குள் நுழைத்து கதவை வேறு சாற்றிக்கொள்ள, அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச இயலாமல் போனது சத்யாவுக்கு.


இரவு உணவின்போதும் கூட யாரும் யாருடனும் எதையும் பேசவில்லை. ஹாசினி அங்கே திரும்பவந்தபிறகு இதுதான் இவர்கள் வீட்டின் புதிய நடைமுறை என்றாகிப்போயிருக்க, உண்டு முடித்து அவனுடைய அறைக்கு வந்தவன், 'நெக்ஸ்ட் மீட்டிங் எப்ப?' என தங்லீஷில் சக்திக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, அவளுடைய பதிலுக்காகக் காத்திருக்க, அது கிடைக்காமல் போகவே, யூட்யூப்பில் ஒரு பாடலை தேர்ந்தெடுத்துக் கசியவிட்டான் சத்யா.


அதன் வரிகள் அவனுடைய மனதிற்குள் ஏதேதோ கற்பனைகளை அள்ளித்தெளிக்க, ஜன்னலுக்கு வெளியில், கல்மேடையில் அமர்ந்து அந்த பாட்டை கேட்டுக்கொண்டிருந்த தாமரையின் மனதில்தான் குற்றவுணர்ச்சியைக் கொண்டுவந்து திணித்தது, 'நான், என் குடும்பம், என் பிள்ளைகள் என எந்த அளவுக்கு மிகவும் சுயநலமாக நடந்துகொள்கிறேன்?' என்பதாக.


யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி


உயிர் காதல் ஒரு வேள்வி


காதல் வரம் நான் வாங்க

கடை கண்கள் நீ வீச

கொக்கை போல நாள்தோறும்

ஒற்றை காலில் நின்றேன் கண்மணி…


****************

Recent Posts

See All
Poove Unn Punnagayil - 36

அத்தியாயம்-36 சென்னை மாநகரின் பிரதான பகுதியில் அமைந்திருந்த ஒரு பிரம்மாண்டமான திருமண மாளிகையின் முன்பு வந்து நின்ற ஆட்டோவிலிருந்து...

 
 
 
Poove Unn Punnagayil - 35

அத்தியாயம்-35 சத்யா கையில் ஏந்தியிருந்த தலைக்கவசம் அவன் இரு சக்கர வாகனத்தில்தான் வந்திருக்கிறான் என்பதை சொல்லாமல் சொன்னது. அவளுடன்...

 
 
 
Poove Unn Punnagayil - 34

அத்தியாயம்-34 கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆண் பெண் என பாகுபாடில்லாத மிகப்பெரிய நட்பு வட்டம் இவர்களுடையது. எல்லோருமே வசதி படைத்த...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page