top of page

Poove Unn Punnagayil - 27

அத்தியாயம்-27

தாமரையை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்திருப்பதைப் பற்றிச் சொல்லாமல் அப்பாவிடம் இந்தப் பேச்சை எப்படித் தொடங்குவது என்கிற யோசனையுடனேயே குளித்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்தவனை வகையாக பிடித்துக்கொண்டார் பாபு.


"நம்ம நிம்மி வீட்டுக்கார் வழி சொந்தத்துல கொஞ்சம் பெரிய இடமாவே வந்திருக்கு. நிறைய நகை நட்டு சீர் செனத்தியோட கூட உன் பிஸினஸுக்கும் பணம் கொடுக்கிறதா சொல்றாங்க" என அவனுக்கு நேராக நீட்டப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்து ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு.


ஏற்கனவே கொஞ்சம் பணநெருக்கடியிலிருந்தவன் தாமரையை இவர்கள் வேண்டாம் என்று சொன்னதிலும் முக்கியமாக அதில் இவன் பெயரை இழுத்துவிட்டிருந்ததிலும் ஏகப்பட்ட கடுப்பிலிருந்தான்.


"ஏன், முந்திரிதோப்புல போய் பார்த்துட்டு வந்தோமே அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என இழுத்துப்பிடித்த நிதானத்துடன் அவன் கேட்க, "ப்ச்... அது நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராத சம்பந்தம். பொண்ணோட அப்பன்காரன் ஏதோ கொஞ்சமாவது சொல்லிக்கிற மாதிரி இருந்தாலும் பரவாயில்ல. அவன் சரியான குடிகாரனாம் இல்ல?" என அவர் எகத்தாளமாக கேட்க, "நான் அந்த பொண்ணைத்தான கட்டிக்க போறேன். அவ அப்பனை இல்லல்ல? எனக்கு அவளைத்தான் பிடிச்சிருக்கு. அதை நான் ஓப்பனா சொன்ன பிறகும் நீங்க இப்படி மாத்தி பேசறது சரியில்லை?" என அவன் தீர்மானமாக சொல்ல, வார்த்தைகள் தடித்தது.


அவர் மட்டும் கொஞ்சம் அவனை புரிந்து கொண்டு தொழில் செய்ய பண உதவி செய்திருந்தார் என்றால், அவனுடைய வளர்ச்சி இன்னும் கொஞ்சம் சீக்கிரம் ஏற்பட்டிருக்கும். பணத்திற்காக இப்படி நாயாய் பேயாய் அலையவேண்டியதாக இருந்திருக்காதே.


இவனுடைய தாய்மாமன் தன் மகளை இவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னதற்கு கூட நியாயத்திற்கு அவர் மேல் வந்திருக்கவேண்டிய கோபம் இவன் மீதல்லவா வந்து தொலைத்தது இவனைப் பெற்றவர்களுக்கு. இவன் சரியில்லை என இவர்களே நம்புவதுதானே அதற்கு காரணம்.


அதோடாவது நிறுத்திக்கொண்டர்களா? அந்த பெண்ணை இவனுடைய தம்பிக்கே அல்லவா பேசி முடித்திருக்கிறார்கள். அதை கொண்டே இவனுடைய கல்யாணமும் இவன்மீது திணிக்கப்படுகிறதே!


வாய்ப்பே கொடுக்காமல், எல்லா விஷயத்திலும் அவர்கள் போக்கிலேயே அவனை இழுக்க முயலவும் அவனுடைய பொறுமை மொத்தமாக பறந்துவிட்டிருந்தது.


இனி தாமரைதான் அவனுடைய வாழ்க்கைத்துணை என்பது அழுத்தமாக அவன் மனதில் பதிந்துபோயிருக்க, அதை வார்தைகளாக்கி அவளுக்கு நம்பிக்கை கொடுத்திவிட்டுவேறு அவன் வந்திருக்க, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக யாரோ ஒருத்தியை காண்பித்தால் அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவானா அவன்?


திருணம் என ஒன்று நடந்தால் அது தாமரையுடன்தான்! இல்லையென்றால் காலம் முழுமைக்கும் தனியாகவே இருந்துவிடுவதாகவும், அவர்கள் விருப்பப்படி ஜனார்தனனுடைய திருமணத்தை நடத்திக்கொள்ளுமாறும் கருணா தீர்மானமாக சொல்லிவிட என்ன செய்வதென்றே புரியவில்லை பாபுவுக்கும் மோகனாவுக்கும்.


மயிலத்தை தன் சம்பந்தி என்று சொல்லிக்கொள்ள பாபுவுக்கு அவ்வளவு அசூயை என்றால் வேறுவிதமான மன உளைச்சல் மோகனாவுக்கு.


தொழில் விவாகரத்தில் அவனுடைய அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக அவன் ஏறுக்கு மாறாக நடப்பதினால் ஏற்கனவே அவன் மனதளவில் கொஞ்சம் விலகிப்போயிருக்க, பிழைப்புக்காக அவன் ஊர் விட்டு ஊர் சென்றதில் அவர்களுடைய இடைவெளி கொஞ்சம் அதிகமாகவே இருப்பது போன்ற ஒரு உணர்வு அவருக்கு.


விருப்பமே இல்லாமல் அவர்களுடைய வற்புறுத்தலால் பெண் பார்க்க வந்தவன் தாமரையை பார்த்த அடுத்த நொடி அவளுடைய தோற்றத்தில் மயங்கிப்போய் அப்படியே தலைகீழாக மாறியிருக்கவும், எங்கே அவள் மகனை மணந்துகொண்டு வந்தாள் என்றால் தங்கள் மூத்த மகன் தங்களுக்கு இல்லாமலேயே போய்விடுவானோ என்று வெகுவாக பயந்துபோயிருந்தார் அவர்.


இந்த அப்பா-பிள்ளையின் வாக்குவாதத்தை பார்த்து மிரண்டுபோய், எது எப்படியோ கல்யாணம் என்ற ஒன்று நடந்து அவன் பிள்ளை குட்டியுடன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டவர், நடுவில் புகுந்து கொஞ்சம் சமாளித்து இருவரையும் அமைதிபடுத்தினார்.


வெருட்டென கிளம்பி வெளியில் வந்தவன், கண்ணில் படும் சொந்தங்கள், நண்பர்கள் என பொதுப்படையாக பேசிக்கொண்டே ஒரு முறை அந்த பட்டிக்காடு முழுவதையும் சுற்றிவிட்டு, அவ்வப்பொழுது சிலபல சிகரெட்களை ஆத்திரம் தீர புகைத்துவிட்டு மாலைதான் வீடுவந்து சேர்ந்தான்.


அவனுடைய அக்கா நிர்மலாவை அழைத்துக்கொண்டு அத்தான் மணிகண்டன் அங்கே வந்திருக்க அவருக்கு எதிரில் கோபத்தை இழுத்துப்பிடித்து தந்தையிடம் முகம் திருப்ப இயலாமல் போனது அவனுக்கு.


மரியாதை நிமித்தம் அவரிடம் நலம் விசாரித்து இயல்பாகப் பேசத்தொடங்க, இவர்கள் பிரச்சனைக்குள் தலையிட விரும்பாமல் வீட்டிற்குள் எங்கோ பதுங்கியிருந்த ஜனார்த்தனனும் வந்து இணைந்துகொள்ள வீட்டிற்குள் சற்று சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டது.


வீட்டில் நித்தமும் சண்டையும் சச்சரவுமாக இருக்க, சீக்கிரமே இரண்டு பிள்ளைகளுக்கும் நலப்படியாக திருமணம் நடந்து முடிய வேண்டும் என்கிற வேண்டுதலுடன் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் பௌர்ணமி தோறும் நள்ளிரவில் நடைபெறும் ஜோதி தரிசனத்திற்கு குடும்பத்துடன் அனைவரும் சென்றுவரலாம் என்று முடிவு செய்து கிளம்பினர் எல்லோரும்.


வக்கிரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த ஜோதியை தரிசனம் செய்ய எப்பொழுதுமே கூட்டம் முண்டியடிக்கும். அன்று ஆடி பௌர்ணமி வேறு என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்க திணறித்தான் போனார்கள் எல்லோரும்.


ஒருவழியாக சந்திரமௌலீஸ்வரரையம் காளி அன்னையையும் வணங்கி ஜோதி தரிசனம் முடிந்து அவர்கள் வெளியில் வரவும் வந்த கூட்டமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்துகொண்டிருக்க, காளி சன்னதிக்கு நேராக இருக்கும் தீபலக்ஷ்மியின் சந்நிதியில் விளக்கேற்றிக்கொண்டிருந்தவளைப் பார்த்ததும் விழிகள் வெளியிலேயே வந்து தெறித்தது கருணாகரனுக்கு.


அதிகாலை மஞ்சள் வண்ண சுடிதரில் இருந்தவள் இப்பொழுது பச்சை நிற புடவையில் அவனுக்குக் காட்சி கொடுத்தாள் தாமரை.


சட்டென தம்பியின் முகத்தில் ஒளிர்ந்த ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தைக் கண்டுகொண்ட நிர்மலா, வியப்புடன் என்னவென்று அவனிடமே கேட்க, கண்களால் அவளை சுட்டிக்காட்டியவன், "தாமரை" என்று புன்னகையுடன் சொல்ல, வாய் பிளந்தாள் நிர்மலா.


அம்மாவும் அப்பாவும் அதிர்ந்து நிற்க, கணவர் வழி சொந்தத்தில் ஒரு பெண்ணை தம்பிக்கு மணம் முடிக்க வேண்டுமா என ஒருவித அரைகுறை மனநிலையிலிருந்தவளுக்கு தாமரையை பார்த்தவுடன் பிடித்துப்போகவும் தானே நேராக அவளை நோக்கிச் சென்றாள் நிர்மலா.


அருகிலிருந்த கோதையிடம் தயக்கத்துடன் பேச்சு கொடுக்க, மகளுக்கு நல்ல இடத்தில திருமணம் முடியவேண்டும் என்று தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள் ஜோதி தரிசனம் செய்வதாக வேண்டிக்கொண்டு அவர்கள் இங்கே தொடர்ந்து வருவதாகவும், இதுதான் மூன்றாம் பௌர்ணமி என்றும் அவரும் எதார்த்தமாக சொல்லிக்கொண்டிருக்க, பிறகுதான் தான் யார் என்பதையே அவரிடம் நிர்மலா சொல்ல அவளிடம் எப்படி எதிர்வினையாற்றுவது என்றே புரியவில்லை கோதைக்கு.


அதற்குள் மயிலமும் சத்யாவும் அங்கே அவர்களை தேடி வர, எல்லோருமே ஒரே இடத்தில் சேர்ந்து பேசும் சந்தர்ப்பம் தானாக அமைத்துப்போக, எப்படியோ தட்டுத்தடுமாறி திருமணப் பேச்சை தூசுதட்டினாள் நிர்மலா.


'நகை மற்றும் சீர்வரிசை எல்லாம் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தால் போதும், ஆனால் கன்னிகாதான கல்யாணமாக நல்ல மண்டபமாக ஏற்பாடு செய்து சிறப்பாக செய்துகொடுங்கள்' என நாசூக்காக பாபு சொல்லிவிட, 'முடிந்து போனதாக நினைத்தது மறுபடியும் கை கூடி வர, அதுவும் இப்படி அம்மன் சன்னதியில்! இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிப்பதா இல்லை வேண்டாம் என்று சொல்வதா?' என உண்மையில் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டதென்னவோ கோதையும் மயிலமும்தான். காரணம் அவர்களை நேரில் சந்தித்துவிட்டு வந்த பிறகு, அவர்கள் முகத்தில் அறைந்த்தாற்போல அப்படி கணக்காக பேசியிருக்க, கோதைக்கு மனதே விட்டுப் போனது.


அவர்கள் பெண்ணை பெற்றவர்கள் என்பதால் வேண்டம் என்றோ, அன்று பாபு சொன்னதுபோல வீட்டிற்கு போய் பேசிவிட்டு பதில் சொல்கிறோம் என்றோ சொல்லவே வழி இருக்கவில்லை.


தீவிரமாக யோசித்து, "லோகு அண்ணனை வெச்சிட்டு பேசி முடிவு செஞ்சுக்கலாம்" என கோதை தயங்கி தயங்கி சொல்லிவிட, ஒரு வழியாக எல்லோரும் கிளம்பி அவரவர் ஊர் போய் சேர்ந்தனர்.


தாமரை கருணாகரன் இருவருமே ஒரே இடத்தில் இருந்தாலும் கூட ஒருவர் முகத்தை மற்றவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அப்படி பார்க்க முயற்சி கூட செய்யவில்லை.


வீட்டிற்குள் நுழையவே அதிகாலை ஆகியிருக்க, குளித்து முடித்து குலதெய்வ கோவிலில் பொங்கல்வைத்து அன்று பூஜை செய்வதற்கு தேவையானவற்றை பார்த்து எடுத்துவைக்கவென அன்றைய நாளின் பரபரப்பு தொற்றிக்கொண்டது அனைவரையும்.


முன்பு நடந்ததை போல ஆகிவிடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கையில் பொங்கல் வைத்து கூழ் ஊற்றி அனைத்தும் முடியும் வரை பொறுத்திருந்தவன், லோகுவிடம் பேசும்படி தமக்கைக்கு ஜாடை செய்ய, அவரும் அந்தக் கோவிலிலேயே இருந்ததால், பாபுவை முடுக்கிவிட்டு அவருடன் பேசவைத்தாள் நிர்மலா.


இதற்கிடையில் இரவு திருவக்கரையிலிருந்து கிளம்பி பேருந்தில் வந்துகொண்டிருக்கும்போதே கோதை மகளின் விருப்பதைப் பற்றி கேட்க, நிச்சயம் கருணாகரன் இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லாமல் விடமாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கும் ஏற்பட்டிருக்கவே, "லோகு மாமா மூலமா மேற்கொண்டு பேச முடிஞ்சா பேசி முடிச்சிடுங்க" என்று சொல்லிவிட்டாள் அவள்.


அவர்கள் பக்கமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போக, இவர்கள் நேரில் போய் பேசி சங்கடப்பட்டு வந்த பிறகு, உச்சபட்ச கோபத்துக்கு ஆளாகியிருந்தாள் தாமரை. சத்யாவின் படிப்பு முடியும் வரை திருமண பேச்சையே எடுக்கக்கூடாது என தீர்மானமாக சொல்லிவிட்டுத்தான் மறுபடியும் வேலையில் சேர அவள் சென்னை சென்றதே எனும் பொழுது அவளிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை அவர்.


கோவிலில் வைத்துப் பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே அவருக்கு இளைய மருமகளாக வரவிருக்கும் தன் தம்பி மகளைப்பற்றிப் பல முறை பேசிவிட்டார் மோகனா. அதுவே, அந்த குடும்பத்தில் தங்கள் மகளைக் கொடுத்தால் அவளுக்கு மதிப்பு குறையுமோ என்கிற அச்சத்தை கோதைக்கு விளைவித்திருக்க, தாமரையை கருணாகரனுக்குக் கொடுக்க கொஞ்சம் கூட இஷ்டம் இல்லாமல் போனது அவருக்கு.


ஒரு வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவனுடைய படிப்பும் பணமும்தான் அவளை இப்படி ஒரு முடிவை எடுக்கவைத்ததோ என்று அசந்தேவிட்டார் கோதை.


பொறியியல் படிப்பையோ அவர்களுடைய பணம் காசையோ பார்த்து அவள் இந்த முடிவுக்கு வரவில்லையே. கருணாகரன் என்கிற மனிதனின் துணிச்சலான நேர்மையான வசீகரமான அணுகுமுறைதானே அவளை இப்படி ஒரு பதிலை சொல்லவைத்தது.


அவளை பெற்ற அன்னையே இதை புரிந்துகொள்ளவில்லை என்றால் அவளைப்பற்றியதான மற்றவரின் புரிதல் எப்படி இருக்கும்? முக்கியமாக, புரியவேண்டியவனுக்கு புரியுமா இது?


***


கணவரின் சட்டைப் பையில் கடைசியாக வைத்திருந்த ஐந்து ரூபாய் தாளையும் கூட செலவு செய்துதான் திருமணத்தை நடத்தி முடித்தார் கோதை. கோதைத்தான் நடத்தி முடித்தார். அப்படித்தான் சொல்லவேண்டும்.


எப்பொழுதுமே தாழ்வு மனப்பான்மையால் நத்தை போலக் கூட்டுக்குள் சுருங்கிக்கொள்வார் மயிலம். கூடவே இந்த பாழாய்ப் போன குடிப்பழக்கம் வேறு. சொந்த பந்தம், அக்கம் பக்கம் என எந்த ஒரு விசேஷங்களில் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை அவர். அவர் ஊர் ஊரக சுற்றிக்கொண்டிருப்பதே ஒரு சாக்காக ஆகிப்போக, அவரை யாரும் எதற்கும் எதிர்பார்ப்பதும் இல்லை.


தாமரையின் திருமண பேச்சு தொடங்கியது முதல் எல்லா பேச்சுவார்த்தையும் கோதை மூலமாகத்தான் நடந்தது. வீட்டில் படித்துப் படித்து சொல்லி இழுத்துக்கட்டிக்கொண்டு வந்தாலும், சட்டெனப் பேச வராது மயிலத்துக்கு. சொல்ல வேண்டிய விஷயத்தைத் தவிர மற்றதையெல்லாம் உளறிக் கொட்டுவார். அவர் பேசுவதை விட பேசாமல் இருந்தாலே தேவாலாம் என்பதாக ஆகிப்போகும் கோதைக்கு.


வீட்டிற்கு வந்ததும் அந்த கோபத்தையும் அவரிடம்தான் காட்டுவர்.


வீட்டில் பிள்ளைகள் பார்வையிலும் சரி வெளியில் மற்றவர் பார்வையிலும் சரி இதுவே அவரை இறக்கிக் காண்பித்துவிடும்.


நம் சமூகத்தில்தான் பெண்கள் முன்னின்று பேசினாலோ துணிவுடன் செயல்பட்டாலோ அது ஒரு ஆகச்சிறந்த குற்றமாயிற்றே! அனைத்தையும் முன்னின்று திறம்பட நடத்திமுடிக்கும் ஒரு சரியான துணை அமைத்துவிட்டல் கோதை போன்றவர்கள் ஏன் முந்திக்கொண்டு நிற்கப்போகிறார்கள்? அல்லது நிற்கத்தான் முடியுமா?


மயிலத்தைப் பொறுத்தவரை சம்பாதித்துக் கொண்டுவந்து போடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது அவருக்கு. அது கூட குடும்பம் நடத்த போதுமானதாக இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் கூட யோசித்தது இல்லை அவர்.


வாடகை இல்லா வீடு, கிராமத்து எளிய வாழ்க்கை முறை என்பதால் அவர் கொடுப்பதை வைத்து கடன் கட்சி இல்லாமல் ஓரளவுக்குக் கௌரவமாக குடும்பத்தை நடத்தினர் கோதை என்றுதான் சொல்ல வேண்டும்.


நிலைமை இப்படி இருக்க, அது வேறு மாதிரி பார்க்கப்பட்டது கருணாகரனின் குடும்பத்தினரால் அவன் உட்பட. அவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே தாயைப் போலப் பிள்ளை என்கிற முத்திரை குத்தப்பட்டுவிட்டது தாமரையின் மேல்.


உங்களால் முடிந்ததைச் செய்துகொடுங்கள் என்று பாபு சொல்லிவிட்டாலும், 'என் தம்பி அவன் பொண்ணுக்கு இதை செய்யப்போறான், அதை செய்யப்போறான். எங்க நிம்மிக்கு அஞ்சு வருஷம் முன்னாலேயே சீரோட கூட ப்ரிஜ்ஜு வாங்கி கொடுத்தோம், கிரைண்டர் வாங்கி கொடுத்தோம்' என மோகனா அடுக்கிய விதத்தில், கட்டில் பீரோ மிக்சி கிரைண்டர் என்று ஏகத்துக்கும் இழுவிட்டது அவர்களுக்கு.


தாமரையின் மூன்று வருட சம்பாத்தியத்துடன் சேர்ந்து முன்பே சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்தது என தன் கழுத்தைக் கூட துடைத்து மகளுக்கு இருபது பவுன் நகை போட்டார் கோதை. கூடவே வெள்ளியில் பூஜை சாமான்கள் வேறு.


மருமகனுக்கு என்று குறை வைக்கக் கூடாது என்கிற முறையில் பைக் வேறு வாங்கப்போக, அதற்கான தொகையை லோகுவிடமிருந்து கடனாக வாங்கியிருந்தார்.


கூடவே மயிலம் வேலை செய்யும் லாரி உரிமையாளரிடமிருந்து வேறு ஒரு பெரிய தொகையை வாங்கியிருந்தார் அவர், அதுவும் கடனாகத்தான்.


வண்டி புக் செய்யக் கூடத் தானே போய் நின்றால் அது இன்னும் மதிப்பை குறைக்கும் என்கிற பயத்தில் கணவருடன் சத்யாவை அனுப்பிவைத்தார் கோதை, ஆயிரம் பத்திரம் சொல்லி.


சென்னைக்கே போய் கருணாவையும் உடன் அழைத்துச் சென்று அவனுக்குப் பிடித்த பைக்கையே புக் செய்துவிட்டு வந்தார் மயிலம்.


ஒரு ஓட்டை இரு சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு அக்காவும் தம்பியுமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்க, அவ்வளவு பணம் போட்டு மருமகனுக்கு மட்டுமாக ஒன்றை வாங்க மனதே ஆகவில்லை அவருக்கு.


பைக்காக வாங்காமல் ஸ்கூட்டி போன்று வாங்கினால் மகளும் அதை ஓட்டுவாளே என்கிற ஆதங்கத்தில், அதை வருங்கால மருமகனிடம் அவர் எதார்த்தமாகச் சொல்லப்போக அப்படி ஒரு கோபம் வந்துவிட்டது கருணாகரனுக்கு.


சிறு சிறு விஷயங்களில் கூட கொஞ்சம் அதிகமாகவே கௌரவம் பார்ப்பவன் அவன். வரதட்சணையாக இப்படி பைக் அது இது என வாங்கிக்கொள்ள அவ்வளவு அவமானமாக இருந்தது அவனுக்கு.


ஆனால் இதையெல்லாம் அவர்களாகவே செய்வதாக ஒரு பிம்பம் உருவாகியிருக்க, பாபு மோகனா இருவரும் இதையெல்லாம் எதிர்பார்ப்பது புரியவும், வேண்டாம் என முற்றிலும் மறுக்க இயலவில்லை அவனால்.


இவனுடைய பிடிவாதத்தால் ஏதோ அரை மனதாக அவர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதித்திருக்க, இவன் இப்படி ஏதாவது சொல்லி வைத்தால் அது பெரிய பூகம்பத்தையே கிளப்பி அனைத்தையும் தடுத்து நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால், பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ வாயை மூடிக்கொண்டு அவர்கள் போக்குக்கே போக வேண்டிய சூழ்நிலை அவனுக்கு.


அவன் தற்போது உபயோகிக்கும் பைக் வேறு அடிக்கடி மக்கர் செய்யவும், எப்படியும் ஒரு புது பைக் வாங்கவேண்டிய தேவையும் அவனுக்கு இருக்கத்தான் செய்தது.


மயிலம் இப்படிச் சொல்லவும் அது குற்றவுணர்ச்சியைக் கிளறி அவனுடைய ஈகோ தலை தூக்கிவிட, "நானா உங்களை பைக் வாங்கித்தரச்சொல்லி கேட்டேன், உங்க பொண்ணுக்கு என்ன தேவையோ வாங்கிக்கொடுக்க வேண்டியதுதானே" என அவன் முறுக்கிக்கொள்ள, அவனைக் கெஞ்சிக் கூத்தாடி மலை இறக்கி அவனுக்குப் பிடித்த பைக்கையே வாங்கவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது சத்யாவுக்கும் மயிலத்துக்கும். அதற்கும் சேர்த்து அவர் மனைவியிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டதுதான் மிச்சம்.


அவர்களுடைய அவசரத்துக்கு தகுந்தபடி ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்தத்திலேயே நாள் குறித்து, பத்திரிக்கை அடித்து, அவர்கள் கேட்டபடி திண்டிவனம் டவுனிலேயே நல்லதாக மண்டபம் பார்த்து, அவர்கள் சொன்ன சமையல் காரரையே நியமித்து, அவர் பட்டியலிட்ட அனைத்து பொருட்களையும் ஓடி ஓடி வாங்கி வந்து கொடுத்து, ஃபோட்டோ, வீடியோ, மணமகன் அழைப்பிற்கு கார் என பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்த பிறகும் கூட ‘இது நொள்ளை, இது நொட்டை’ என ஆளாளுக்கு அவர்கள் அடுக்கிய குறைகளையும் சகித்து, எப்படியோ தங்களைக் கசக்கிப் பிழிந்து ஒரு வழியாக மகளுடைய திருமணத்தை நடந்தி முடித்தனர் மயிலம் கோதை தம்பதியினர்.


இதுவரை தாமரையாக மட்டும் இருந்தவள், திருமதி தாமரை கருணாகரன் என்கிற பொறுப்பிற்குள் புகுந்துகொண்டாள் 'என்றென்றும் சிரிப்புக்கு மட்டுமே சொந்தக்காரியாக இருக்கவேண்டும்' என்ற பேராசையுடன் மயிலம் என்கிற தகப்பனின் மனதிற்குள் பொத்தி பொத்தி போற்றப்படும் தாமரை என்கிற அவருடைய தேவதை.


****************

Recent Posts

See All
Poove Unn Punnagayil - 36

அத்தியாயம்-36 சென்னை மாநகரின் பிரதான பகுதியில் அமைந்திருந்த ஒரு பிரம்மாண்டமான திருமண மாளிகையின் முன்பு வந்து நின்ற ஆட்டோவிலிருந்து...

 
 
 
Poove Unn Punnagayil - 35

அத்தியாயம்-35 சத்யா கையில் ஏந்தியிருந்த தலைக்கவசம் அவன் இரு சக்கர வாகனத்தில்தான் வந்திருக்கிறான் என்பதை சொல்லாமல் சொன்னது. அவளுடன்...

 
 
 
Poove Unn Punnagayil - 34

அத்தியாயம்-34 கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆண் பெண் என பாகுபாடில்லாத மிகப்பெரிய நட்பு வட்டம் இவர்களுடையது. எல்லோருமே வசதி படைத்த...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page