top of page

Poove Unn Punnagayil -31

அத்தியாயம்-31

ஊருக்குக் கிளம்புவதற்காகத் தாமரை துணிமணிகளை எடுத்துவைத்துக்கொண்டிருக்க மகளை மடியில் இருத்திக்கொண்டு வாயிற் திண்ணையில் உட்கார்ந்திருந்தான் கருணாகரன். அவனுடைய சட்டைப் பையை குடைந்து ரூபாய் தாள்கள் பேனா என அனைத்தையும் எடுத்து கீழே வீசிக்கொண்டிருந்தது குழந்தை.


தேன்மொழிக்குத் துணையாக வந்த மல்லிகா அவனைக் கண்டு அதிர்ந்து அப்படியே தேங்கி நின்றுவிட, அதிலெல்லாம் கவனமே இன்றி சுயநினைவே இல்லாதவள் போல மின்னலென வீட்டிற்குள் ஓடினாள் தேன்மொழி.


முந்தைய தினம் கருணாகரன் காட்டுக்கோவிலூரில் அவர்கள் வீட்டில் இருக்கும்போதுதான் அங்கே வந்து லோகு மகளின் திருமண பத்திரிகை வைத்து அழைத்துவிட்டுப் போயிருந்தார். அப்படியிருக்க 'இந்த பெண் ஏன் இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறாள்' என்கிற கேள்வியுடன் கருணா மல்லிகாவைப் பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் போக, முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தன் இருசக்கர வாகனத்தைப் பழுது பார்த்துக்கொண்டிருந்த சத்யாவின் அருகில் போய் தேன்மொழி நிற்கவும் அருகில் நிழலாடுவதை உணர்ந்து அவளை நிமிர்ந்து பார்த்தான் அவன்.


"சத்யா, வா இப்பவே போய் நாம ஏதாவது கோவில்ல வெச்சு கல்யாணம் செஞ்சுக்கலாம்" என அவள் அழுத்தமாகச் சொல்ல, வெலவெலத்துப்போனான் அவன்.


'இது என்ன புது கூத்து, இந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சு போச்சா' என்பதாக கருணா பார்த்திருக்க, பதைபதைத்துப்போய் அங்கே வந்தனர் தாமரையும் கோதையும்.


நடந்துமுடிந்த கலவரங்களில் கோதைக்கு இதெல்லாம் மறந்தே போயிருந்தது. மகளிடம் இதுபற்றி எதுவுமே சொல்லவில்லை அவர்.


அவளை நச்சரித்து அங்கே அழைத்துவந்ததால் ஒரு பீதியுடன் மல்லிகாவும் அங்கே வந்து நிற்க, நல்லவேளையாக வீட்டு மனிதர்கள் தவிர அயலார் யாரும் அங்கே இல்லை.


அதற்குள் தன்னை நிலைப்படுத்திக்கொண்ட சத்யா, "இதோ பாரு தேனு, இதெல்லாம் நம்ம வாழ்க்கைக்கு ஒத்து வாராது. உங்க அம்மாவுக்கு வேற உடம்பு சரி இல்ல. இந்த நேரத்துல நாம யாரையும் துன்பப்படுத்தக்கூடாது. அதனால நீ ஒழுங்கா ஊர் போய் சேரு" என உணர்வற்ற குரலில் சொல்ல,


"அதெல்லாம் முடியாது. அம்மா இப்ப நல்லாத்தான் இருக்காங்க. என்னாலதான் நீ இல்லாம வாழ முடியாது. செத்துருவேன் சத்யா" என அவள் தன் பிடியிலேயே நிற்க,


"லூசு மாதிரி உளராத தேனு, எங்க அப்பான்னா எங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு பிடிக்கும். லோடு அடிச்சிட்டு ஊருக்கு வரும்போது காராசேவை பக்கோடா ஸ்வீஎட்டுன்னு ஏதாவது பொட்டலம் வாங்கிட்டு வந்து பாதி ராத்திரியா இருந்தா கூட எங்களை எழுப்பி சாப்பிட வெப்பாரு. இப்ப, போன மாசம் வரைக்கும்" எனப் பெருமையாகச் சொன்னவன், "அவரோட சாராய நெடிதான் எங்களை எழுப்பும். அதனால அந்த நாத்தம் கூட எங்க அப்பாவோட அடையாளமா அவரோட வாசனையாதான் எங்களுக்கு பழகிப்போயிக்கு. சொல்லாம கொள்ளாம திடீர்னு ஒரு நாள் அவரே இல்லாம போயிட்டாரு. அவரோடவேவா எங்க வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இதோ வாழ்ந்துட்டுதான இருக்கோம். அதனால எந்த உறவும் நிரந்தரமில்லை தேனு. அதை முதல்ல புரிஞ்சிக்கோ. சினிமாவுல வர மாதிரி நீயும் நானும் கட்டிப்பிடிச்சு டூயட் பாடினோமா என்ன, நீ இல்லாம நான் இல்லனு பெனாத்திட்டு திரிய. போ, போய் நல்லபடியா பிழைக்கற வழியை பாரு" என்றான் கடினமான குரலில்.


"ப்ளீஸ் புரிஞ்சிக்கோ சத்யா, என்னால உன்னை மறந்துட்டு வேற வாழக்கை வாழ முடியாது. அட்லீஸ்ட் எங்க அப்பா கிட்ட வந்து மறுபடியும் ஒரு தடவ பேசிப்பாரு. அவரு எனக்காக சம்மதிச்சாலும் சம்மதிப்பாரு" என அவள் கெஞ்சிக்கொண்டே போக,


"இல்ல தேனு, உங்க அப்பா எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தாரு. ஆனா என்னாலதான் அதை பயன்படுத்திக்க முடியல. நான் பைனல் இயர் எக்ஸாம் கூட எழுதல. எனக்கு இப்ப சரியான வேலையும் கிடைக்காது. உனக்கு பார்த்திருக்கற மாப்பிளை அளவுக்கு நான் செட்டில் ஆகணும்னு சொன்னா அதுக்கு குறைஞ்சது இன்னும் அஞ்சு ஆறு வருஷமாவது ஆகும். நான் பேச்சு மாற மாட்டேன். ஒழுங்கா போய் உங்க அப்பா பார்த்திருக்கற பையன கட்டிட்டு நீ நல்லபடியா இரு" என அவன் முடிவுடன் சொல்ல,


"என்ன சத்யா இப்படி சொல்ற, உனக்கு இன்டர்வ்யூக்கு கூட வந்துதாமே, மல்லி சொல்லிச்சு, உங்க அப்பாவுக்கு மட்டும் இப்படி ஆகலன்னா எல்லாமே நீ சொன்னபடிதான நடந்திருக்கும்" என அவள் ஆயாசத்துடன் சொல்ல, "அதுதான் நடக்கல இல்ல, இதுதான் நம்ம விதின்னா இதை நாம ஏத்துட்டுதான் ஆகணும். உங்க அப்பா நினைச்சிருந்தா அன்னைக்கு என்னை கழுத்தை பிடிச்சி வெளியில தள்ளி இருக்கலாம். ஆனா அவர் நல்ல மனசு அதை செய்ய விடல. அவருக்கு கொடுத்த வார்த்தையை என்னால மீற முடியாது. உன் வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு அவர் ஆசை படறதுல எந்த தப்பும் இல்ல. அதுக்கு குறுக்க நிக்க நான் தயாரா இல்ல" எனக் கண்களில் நீர் திரள ஆவேசத்துடன் முடித்தவன், கருணாகரனை நோக்கி, "சாரி அத்தான் ஒரு மாசமா எங்களுக்காக என்னென்னவோ செஞ்சீங்க. லூசுத்தனமா இந்த பொண்ணு இப்படி வீட்டை விட்டு வந்திருக்கு. இவங்க அப்பா வேற ஊர் முழுக்க பத்திரிகை வெச்சிட்டு இருக்காரு. இந்த நேரத்துல இது ஊருக்குள்ள தெரிஞ்சுப்போனா பெரிய பிரச்சனை ஆயிடும். யாருக்கும் தெரியாம நீங்க வந்த கார்லயே இவளை கொண்டு போய் அவங்க வீட்டுல விட்டுடுங்க அத்தான்" என அவன் தலை குனிந்தபடி சொல்ல, அவ்வளவு குற்ற உணர்ச்சியாக இருந்தது கருணாகரனுக்கு.


அன்று மயிலம் அவர்கள் வீடு தேடி வந்தபோது ஒரே ஒரு இரவு அவரை அங்கே தங்கிவிட்டுப் போகும்படி சொல்லியிருக்கலாம் அவன்.


அவரை மெரினா பீச் கூட்டிப்போகவேண்டும் எனத் தாமரை சொன்னதற்கு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்று சொன்னானே. அப்படி ஒரு சந்தர்ப்பம் வராமலேயே போய்விட்டதே. இப்பொழுது அவன் முகத்தைக் கொண்டு போய் எங்கே வைத்துக்கொள்வான். கண்ணீருடன் நின்றிருக்கும் தாமரையின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கக்கூட அசூயையாக இருந்தது அவனுக்கு.


அதை அப்படியே விழுங்கிவிட்டு சத்யா விஷயத்தில் அடுத்து என்ன முடிவெடுப்பது என அவன் கேள்வியாய் மனைவியின் முகத்தைப் பார்க்க, "நானும் அத்தானுமா வேணா லோகு மாமா கிட்ட பேசி பார்க்கவா சத்யா" என தாமரை அவனுடைய எதிர்காலத்தை மனதில் வைத்துக் கேட்க,


"வேணாம்க்கா, நாங்க பிடிவாதமா நின்னா அவர் என்ன வெட்டறேன் குத்தறேன்னு கிளம்பவாபோறாரு? ஆனா சந்தோஷமா இதுக்கு சம்மதிக்க மாட்டாருக்கா. அந்த நல்ல மனுஷரோட மனசை நோகடிக்க கூடாது. இவளுக்கு கிடைக்கப்போற ஒரு நல்ல எதிர்காலத்தை நான் கெடுத்ததா இருக்கக்கூடாது" என அவன் தீர்மானமாகச் சொல்லிவிட, கண்களில் ஜீவனே இல்லாமல் பரிதாபமாக சத்யாவை பார்த்தபடி அதிர்ச்சியில் அசைவற்று நின்ற தேன்மொழியின் கையை பற்றி இழுத்துக்கொண்டு மல்லிகா செல்ல, அவர்களைப் பின்தொடர்ந்து போனான் கருணாகரன்.


ஒரு விதத்தில் சத்யாவின் முடிவுதான் சரி என்பதாகப் பட்டது கருணாகரனுக்கு. அவனுடைய இந்த மன முதிர்ச்சியை எண்ணி கொஞ்சம் வியப்பாகவும் இருந்தது. முன்பிருந்ததை காட்டிலும் அவன் மீதான நன்மதிப்பு இன்னும் கூடித்தான் போனது கருணாவுக்கு. ஆனால் அவன் உள்ளுக்குள்ளே எந்த அளவுக்கு நொறுங்கிப்போயிருக்கிறான் என்பதை அவன் இந்த சந்தர்ப்பத்தில் உணராமல் போனதுதான் கொடுமை.


செல்லும் நேரமெல்லாம் தேன்மொழிக்கு புத்திமதி சொல்லி, கோவிலுக்குச் சென்று திரும்பும்பொழுது எதார்த்தமாக அவர்களைப் பார்த்ததுபோல இருவரையும் லோகுவின் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு தன் வீட்டிற்குப் போய் அவனுடைய அம்மா அப்பாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் மனைவியின் பிறந்தவீட்டுக்கு வந்தான் கருணாகரன்.


வீட்டில் இருக்கவே பிடிக்காமல் சத்யா எங்கேயோ போயிருக்க, அழுது அழுது முகம் வீங்கிப்போய் உட்கார்ந்திருந்தாள் தாமரை. சமையலறையில் எதையோ உருட்டிக்கொண்டிருந்தார் கோதை.


குழந்தை தூளியில் உறங்கிக்கொண்டிருக்க, ஊருக்குக் கிளம்பத் தயாராகப் பைகளெல்லாம் எடுத்து ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்தன.


"சத்யா எங்க தாமரை? அவனை கூப்பிடு, சொல்லிட்டு கிளம்பலாம்" என அவன் இயல்பாகச் சொல்ல, "இவங்கள இப்படியே விட்டுட்டு நான் உங்க கூட வரமாட்டேன்" என்றாள் அவள் ஒரு மரத்த தொனியில்.


அவளுடைய அப்பா அவர்களுடைய வீடு தேடி வந்தபோது ஒரே ஒரு நாள் தங்கிவிட்டுப் போகும்படி அவன் அவரிடம் சொல்லவில்லை என்பது அவள் மனதை அறுத்துக்கொண்டே இருந்தது. அது சம்பந்தமாக இருவருக்குள்ளும் சண்டைகள் வந்து ஓய்ந்திருந்தாலும், அவர் உயிருடன் இருந்திருத்தல் அது இவ்வளவு பூதாகரமாக அவளுக்குத் தோன்றியிருக்காது. அவன் அன்று சொன்ன 'வேற ஒரு சந்தர்ப்பம்' வராமலேயே போனதுதான் அதுவும் இறுதியாக ஒரு முறை அவருடைய முகத்தைப் பார்க்கக்கூட அவளுக்கு வழியில்லாமல் போனதுதான் இங்கே மனச்சுமையாகிப்போனது.


அதற்கு பிறகும், கணவனே என்றாலும், மறுக்கவும் வழி இன்றி ஏற்கவும் முடியாமல் எல்லாவற்றிற்கும் அவனைச் சார்ந்தே அவளுடைய மொத்த குடும்பமும் இருப்பது போல் தோன்ற அது வேறு அவ்வளவு அசூயை உணர்வைக் கொடுத்தது அவளுக்கு. சத்யாவின் எதிர்காலம் வேறு அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க, நிராதரவாக அவர்களை அப்படியே விட்டுவிட்டுப் போக அவளுக்கு மனம் இடங்கொடுக்கவில்லை. அதனாலோ என்னவோ அவனுடன் அவனுடைய வீட்டிற்குச் செல்லவே பிடிக்கவில்லை அவளுக்கு.


அவள் இவ்வாறு மூர்க்கமாக மறுக்க, ஒரு நொடி அதிர்ந்தான் கருணா.




ஆனாலும் இந்த நிலையில் அவளிடம் வாக்குவாதம் செய்ய மனமின்றி, "சரி இன்னும் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வா, நான் மட்டும் இப்ப கிளம்பறேன்" என அவன் அதற்கும் இறங்கிவந்துவிட, ஏனோ அதுவும் அவளது ஆத்திரத்தைக் கிளப்புவதாகவே இருந்தது.


"இல்ல நான் இனிமேல் அங்க வரவே மாட்டேன்" என்றாள் ஒரு வித பிடிவாதத்துடன். ஆயாசமாக இருந்தது கருணாகரனுக்கு. அவளையும் மகளையும் இப்படி விட்டுவிட்டு எவ்வளவு நாட்கள் இருக்க முடியும் அவனால். அதையாவது அப்படியே சொல்லித்தொலைத்திருக்கலாமா அவன்?


"ஆனா என்னால குட்டிம்மாவை விட்டுட்டு இருக்க முடியாது தாமரை" என அவன் வழக்கமாகப் பாடும் பல்லவியைப் பாட, ஆவேசத்துடன் எழுந்தவள், “கடைசி கடைசியா எங்க அப்பா அங்க வந்தப்ப அவரை ஒரு ராத்திரி தங்கிட்டு போங்கன்னு சொல்ல கூட மனசில்லாதவங்க வீட்டுக்கு வந்து வாழ நான் தயாரா இல்ல” என்றவாறு தூளியில் உறங்கிக்கொண்டிருந்த மகளை கைகளில் எடுத்து அவன் மீது திணித்து, "தாராளமா உங்க மகளை நீங்களே வெச்சுக்கோங்க. இப்ப நீங்க நிம்மதியா கிளம்பலாம்' என அவள் ஆவேசமாகச் சொல்ல, அதைப் பார்த்துக்கொண்டே அங்கே கோதை வேறு வரவும், அவனுடைய தன்மானம் ஏகத்துக்கும் அடிவாங்கிவிட, அனிச்சையாக ஒரு கரத்தால் மகளைப் பற்றி மார்புடன் அணைத்தவன் மற்றொரு கரத்தால் பளார் என மனைவியை அறைந்திருந்தான் கருணாகரன்.


திட்டமிட்டெல்லாம் இதை அவன் செய்யவில்லையென்றாலும் ஒரு நொடி யோசனையின்றி சுய கட்டுப்பாடிழந்து ஒரு ஆத்திரத்தில் அவன் எல்லை மீறி நடந்திருக்க, அங்கே ஒரு நொடி நிற்கக்கூட இயலாத அளவுக்கு அவனுடைய இயல்பான அகங்காரம் தலை தூக்க, மகளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து அகன்றான் கருணாகரன் இயலாமையுடன் கூடிய கோபத்துடன்.


ஏற்கனவே செய்த தவறுகளால் உண்டான குற்ற உணர்ச்சியுடன் கூட எங்கே மகளை இவளிடம் விட்டுவிட்டுச் சென்றால் அவள் திரும்ப வரவே மாட்டாளோ என்கிற ஒரு பயமும் சேர்ந்துகொண்டதால் விடாப்பிடியாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்விட்டான் அவன்.


எப்படி இருந்தாலும் மகளுக்காகவாவது அவள் வந்துதானே ஆகவேண்டும் என்கிற இறுமாப்பு வேறு!


காட்டுக்கோவிலூர் போய், குழந்தையைப் பார்த்துக்கொள்ள மோகனாவை உடன் அழைத்துக்கொண்டு சென்னைக்கே போய்விட்டான் அவன். அவர்கள் கேட்டதற்கு தான்தான் தாமரையை அங்கே விட்டுவிட்டு வந்திருப்பதாகச் சொல்லவிட, மேற்கொண்டு யாரும் தோண்டி துருவவில்லை.


அவளுடைய மனக் காயங்கள் ஆறாமல் போனதால் இரண்டு வாரங்கள் கடந்தும் அவன் எதிர்பார்த்தது போல் அவள்தான் வந்தபாடில்லை. இப்படியே ஒவ்வொரு நாட்களாகச் செல்லச்செல்ல குழந்தைக்காகக் கூட அவள் தன்னிடம் வரவே மாட்டாளோ என்கிற அளவுக்கு திகிலாகிப்போனது கருணாகரனுக்கு.


இதற்கிடையில் தேன்மொழியின் திருமணம் முடிந்திருக்க, மன அழுத்தம் கூட்டிப்போய் எதையோ குடித்து வாயில் நுரைதள்ள மயங்கினான் சத்யா.


எப்படியோ அம்மாவும் மகளுமாக அவனை மருத்துவமனையில் அனுமதிக்க, தகவல் அறிந்து ஓடிவந்தார் பாபு, கருணாகரனுக்குத் தகவல் சொல்லிவிட்டு. முன்பு பட்ட சூடு காரணமாக இருக்கலாம்.


கொஞ்சம் தாமதமாக என்றாலும் லோகுவும் வந்து சேர்ந்தார்.


சில மணிநேரங்களில் கருணாவும் மகளைத் தூக்கிக்கொண்டு அங்கே வந்துவிட, தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்தான் சத்யா.


அவளை நிர்ப்பந்தப்படுத்தி தன்னுடன் அழைத்துப்போய் மேலும் ஒரு பழியைத் தேடிக்கொள்ளாமல் இருந்தோமோ என உண்மையில் நிம்மதியாகத்தான் இருந்தது கருணாகரனுக்கு.


சத்யாவை வீட்டிற்கு அழைத்துவந்தவுடன், இந்த நிலைமையில் தனியனாக விடக்கூடாது என்கிற அக்கறையும் பொறுப்பும் சேர்ந்துகொள்ள, கோதை சத்யா இருவரையுமே தன்னுடன் சென்னைக்கே அழைத்துச்செல்வதாகவும், விருப்பப்பட்டால் தன்னுடைய வீட்டிலேயே அவர்கள் இருக்கட்டும் இல்லையென்றால் தனியாக வீடெடுத்து தங்கிக்கொள்ளட்டும். அரியர்ஸ் எழுதி அவனுக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் சத்யா தன் நிறுவனத்திலேயே வேலை பார்க்கட்டும் என பாபு, லோகு, தாமரையின் அத்தை குடும்பம் கோதை என பெரியவர்களை வைத்துக்கொண்டே தன் முடிவை அவன் சொல்ல, சத்யாவைக் குறித்த அச்சம் வேறு சேர்ந்துகொண்டதால், மறுத்துப்பேசி ரசாபாசம் செய்து பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்ட மனம் இல்லாமல் சுமுகமாக போக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிப்போனது தாமரைக்கு.


"எனக்கு தனியா இருந்து பழக்கம்தான். இங்க இருக்கறதுல எந்த பிரச்சனையும் இல்ல. இந்த வீட்டுல இருந்தாதான் எனக்கு நிம்மதியும் கூட. சத்யாவை மட்டும் உங்க கூட கூட்டிட்டு போயிடுங்க" என கோதை திட்டவட்டமாக சொல்லிவிட, எல்லோரும் பேசிப்பேசி கடைசியில் அதுவே முடிவானது.


கருணாகரன் தாமரையுடன் சென்னை வந்தான் சத்யா. அவர்களுடைய நிறுவனத்திலேயே கருணாகரனுக்கு உதவியாக இருக்கப்போய் நாட்கள் செல்லச்செல்ல அவன் அந்த வேலையிலேயே தன்னை மூழ்கடித்துக்கொள்ள காயங்கள் மறைந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்தான் அவன். கொஞ்சம் தாமதமாக என்றாலும் விடுபட்டுப்போன பரிட்சைகளை எழுதி அவன் படிப்பை முடித்தாலும் பழகிப்போன சூழ்நிலையை விட்டு வேறு வேலைக்கு போக விருப்பமில்லாமல் போனது அவனுக்கு. அக்காவின் மக்கள் அவனுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை கொடுத்தனர்.


தாமரை - கருணாகரனை பொறுத்தவரையில் கணவன் மனைவி உறவென்பது, அதையும் தாண்டி அம்மா அப்பா என்கிற மிகப்பெரிய பொறுப்பானது எப்படிப்பட்ட பூகம்பங்கள் வந்தாலும் சுலபமாக உடைந்துபோவதில்லை என்கிற காரணத்தால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சிறு விரிசல் காலப்போக்கில் தானாகவே கூடிப்போனது.


பேதங்கள் மறைந்து அவர்கள் வாழ்க்கை ஊடலும் கூடலுமாக பெண்டுலம் போல இப்படியும் அப்படியும் ஆடி ஒரு நிலைக்கு வந்து நின்ற சந்தோஷ தருணத்தில்தான் பிறந்தான் சந்தோஷ்.


அன்பு எனும் சங்கிலியால் இன்னும் இன்னும் அவர்களை இறுகக் பிணைத்து சகிப்புத்தன்மை எனும் சாவியால் புரிதல் எனும் பூட்டைக் கொண்டு இருவரையும் பூட்டி வைத்தது காலம்.


***


மாற்றி மாற்றி இருவரும் சொன்ன கதையைக் கேட்டு ஸ்தம்பித்துப்போய் உட்கார்ந்திருந்தாள் ஹாசினி. அவளுடைய மடியில் குடியேறியிருந்தது அங்கே சுவரில் மாட்டிவைக்கப்பட்டிருந்த புகைப்படம். நீல நிற வெல்வெட்டினால் ஆன திரைச்சீலையின் பின்னணியில், அருகில் உயர மேசைமேல் ஒரு பூக்கூடை வைக்கப்பட்டிருக்க, நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி கருணா மகளை மடியில் ஏந்தியிருக்க அவனுடைய தோள்களில் கை வைத்தபடி அவனுக்குப் பின்னால் நின்றிருந்தாள் தாமரை. குழந்தையின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு , தாய் தகப்பன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். பார்ப்பதற்கே அவ்வளவு கவிதையாக இருந்தது அந்த புகைப்படம். ஆயிரம் முறை பார்த்த படம்தான் என்றாலும் அதன் கதை தெரிந்த பிறகு புதிதாக அதைப் பார்ப்பதுபோல் தோன்றியது ஹாசினிக்கு.


அதே போன்ற ஒரு புகைப்படத்தில் தன்னையும் கௌசிக்கையும், இந்த படத்தில் தான் இருப்பதுபோலவே கொழுக் மொழுக் என ஒரு மகளையும் வைத்து கற்பனை செய்துபார்த்தது அவளுடைய மனது. அந்த கற்பனையே அவ்வளவு உவகையைத் தர, மீண்டும் ஒரு முறை அவளுடைய கைகள் அந்த படத்தை வருடியது ஆசையுடன்.


"இந்த அளவுக்கு கான்ட்ராவெர்சரீஸ் இருந்துதாப்பா உங்களுக்குள்ள, என்னால நம்பவே முடியல" என்றாள் அவள் தலை நிமிராமலேயே.


"இருந்துது, ஆனா உங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கறதுக்குள்ள அதையெல்லாம் சார்ட் அவுட் பண்ணிட்டோம். இன்னும் சொல்லப்போனா எங்க ரெண்டுபேரோட அடிப்படை குணம்னு ஒண்ணு இருக்கு இல்ல. அது அப்படியேதான் இருக்கு. சமயத்துல அப்படி இப்படி அது தலை தூக்கத்தான் செய்யும். சண்டையும் வரும். ஆனா அதை உங்களுக்கு தெரியற அளவுக்கு எக்சிபிட் பண்ண மாட்டோம். எப்படி எங்க கொஞ்சல் குலாவால் எல்லாம் எங்க பர்சனலோ அதே மாதிரி சண்டையும் எங்களுக்குள்ள, சமாதானமும் எங்களுக்குள்ள பர்சனல்தான்" என விளக்கம் கொடுத்தவர், 'அப்படித்தானே தாமரை" என்று கேட்டுக்கொண்டே மகளின் கவனம் புகைப்படத்திலேயே இருப்பதைக் கவனித்து மனைவியின் இடையில் கிள்ளிவைக்க, "அம்மாடி" என்றிருந்து தாமரைக்கு. அதுவரை அழுகையும் கண்ணீரும் முட்டிக்கொண்டு முகம் சிவந்திருந்தவருக்குக் கொஞ்சம் வெட்கமும் சேர்ந்துகொள்ள மேலும் சிவந்துபோனது அந்த தாமரையின் முகம்.


மகள் முகத்தில் படிந்திருந்த ஏக்கத்தைப் பார்த்ததும் மனம் வலிக்க, "நான் சொன்னதையெல்லாம் கேட்டு எப்படி ஃபீல் பண்ற குட்டிம்மா" என கருணாகரன் கேட்க, "என்ன சொல்றதுன்னே தெரியலப்பா, அம்மா இடத்துல இருந்திருந்தா எப்படி இருக்கும்னு என்னால கற்பனை கூட செய்ய முடியல. எல்லாருக்கும் அவங்க அவங்க அப்பான்னா எவ்வளவு பிரீஷியஸ் இல்ல" என அவள் மனதில் பட்டத்தை அப்படியே சொல்ல, "ஆமாம் குட்டிம்மா. அதே மாதிரி ஒவ்வொரு அப்பாவுக்கும் அவங்க பிள்ளைங்கதான் பிரீஷியஸ், அவங்க எந்த லெவல்ல இருந்தாலும். அதுவும் மகள்கள்ன்னா ரொம்பவே. ஏன்னா பிரிவுங்கற ஒரு விஷயத்தை முன்கூட்டியே எதிர்பார்க்கறோம் இல்ல" என அவர் சொல்ல, அவள் அதை மௌனமாக உள்வாங்கவும், "உன்னைப் பொறுத்தவரைக்கும் நான் உன் விருப்பத்துக்கு மாறா ஒரு சின்ன செயல் கூட செஞ்சதில்ல குட்டிமா. உங்க தாத்தாவை நான் நடத்தின விதத்துக்கு, எங்க குடும்பம் இவங்கள பார்த்த பார்வைக்கு எங்க எனக்கும் அந்த நிலை வந்துடுமோன்னு ஒரு பயம் இருந்துட்டே இருக்கும். அதனாலதான் உன் கல்யாணத்தை ஓர் சின்ன குறை சொல்ல கூட இடம் கொடுக்காம செஞ்சு முடிச்சேன். ஆனா இவ்வளவு செஞ்சும் நீ இப்படி வாழாம வந்து நிக்கறது எனக்கு ரொம்பவே வேதனையை கொடுக்குது.


ஆனா என்ன நடந்தாலும் நான் உன் பக்கம்தான் கண்ணா. உனக்கு டைவர்ஸ் வேணுமா சொல்லு, வாங்கி கொடுக்கறேன். புழு மாதிரி முதுகு எலும்பே இல்லாம உன் காலடில விழுந்து கிடக்கிற மாதிரி ஒருத்தன் வேணுமா சொல்லு, பணத்தை தூக்கி எறிஞ்சா கிடைக்காம போகாது. தேடி பிடிச்சு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஆனா அதுக்கு பிறகு? அவனையும் பிடிக்கலன்னா? நல்லா யோசி!


எங்க கதைல சொன்ன மாதிரியான ஜெனரேஷன் கேப், கம்யூனிகேஷன் கேப் எதுவுமே உங்களுக்குள்ள இல்ல. மனசுல பட்டத ஈஸியா பேச முடியுது. எங்களுக்கு இருந்த சமூக கட்டுப்பாடுகள் எதுவும் உங்களுக்கு கிடையாது. எந்த இடத்துலயும் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து நெருக்கத்தை காமிச்சு உங்க அந்நியோன்னியத்தை பிரகடனப்படுத்த உங்களால முடியுது. பண புழக்கமும் அதிகம் இருக்கு. நினைச்சதை ஈஸியா அடைய முடியுது. இவ்வளவு இருந்தும் ஏன் உங்களால உங்க இடைவெளிகளை நிரப்ப முடியல? ஈகோவை விட்டுத்தள்ளிட்டு அன்பு செலுத்த கத்துக்கோங்கம்மா. அதுதான் எல்லாத்துக்கும் அடிப்படை. அது இருந்தா விட்டுக்கொடுக்க தோணும், நம்ம பார்ட்னரோட தவறை மன்னிக்க முடியும், நூறு வருஷம் கூட ஒரே ரூம் குள்ளேயே ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்த்துட்டு இருந்தா கூட ஒருத்தருக்கு ஒருத்தர் அலுத்துப்போக மாட்டீங்க. டேக் யுவர் ஓன் டைம் கண்ணம்மா. அதே மாதிரி கௌசிக்குக்கும் கொஞ்சம் டைம் கொடு, உன் வேவ் லெந்துக்கு அவன் வர. அவன் மட்டும் வேணும் அவன் குடும்பம் வேணாம்னு எண்ணம் வரக்கூடாது. அவனுக்கு அவன் குடும்பம் முக்கியம் இல்ல? நல்லா யோசிச்சு முடிவெடு" என கருணா சொல்லிக்கொண்டே போக, 'அடடா இவர் இப்படியெல்லாம் கூட பேசுவாரா?' எனக் கணவரைப் பார்த்திருந்தார் தாமரை.


மகளின் ஆழ்ந்த மௌனம் அவள் யோசிக்கத்தொடங்கிவிட்டாள் என்பதைச் சொல்ல, மனதில் ஒரு அமைதி உண்டானது அவருக்கு.


சத்யாவும் சந்தோஷும் வந்துவிட, அறையை விட்டு வெளியில் வந்தனர் மூவரும். ஹாசினியை பார்த்த நொடி சத்யாவினுடைய முகத்தில் கவலையின் ரேகைகள் படர, அவனைப் பார்த்ததும் தொண்டையை அடைத்துக்கொண்டு வந்தது ஹாசினிக்கு.


அவர்கள் வீட்டு விழாக்கள் பலவற்றிலும் தேன்மொழியை பார்த்திருக்கிறாள் அவள். ஏன் அவளுடைய திருமண வரவேற்பிற்குக் கூட அவளுடைய கணவருடன் வந்திருந்தாளே! 'எந்த அளவுக்கு அந்த பெண்ணை விரும்பியிருந்தால் விஷம் குடிக்கும் அளவுக்கு போயிருப்பான். காதல் தோல்வியின் வலியை உணர்ந்தவன் என்பதால்தானே அந்த அளவுக்கு மெனக்கெட்டு அவளுடைய திருமணத்தை நடத்தியிருக்கிறான். இந்த திருமணம் இப்படி சில மாதங்கள் கூட நிலைக்கவில்லையே என்கிற கவலையில்தானே இருவரையும் சேர்த்துவைக்க இவ்வளவு தூரம் போராடுகிறான். இதைக் கூட புரிந்துகொள்ளாமல் அவனை என்னவெல்லாம் பேசிவிட்டேன் நான்' என உண்மையாகவே வருந்தியவள், "சாரி மாம்ஸ்!" என்றவாறு தாவி அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு தேம்ப,


அவள் தாமரையிடம் அவனை பற்றி தாறுமாறாக பேசிய எதுவும்தான் அவனுக்கு தெரியாதே. ஹோட்டலில் அவள் நடந்துகொண்ட விதத்துக்குத்தான் இப்படி வருந்துகிறாள் என்று எண்ணியவன், "ஹேய் லூசு, எதுக்கு இப்படி அழற? இப்படி உலகம் புரியாம கிடைச்ச ஒரு நல்ல வாழ்க்கையை சீரழிச்சுக்கறியேங்கறத தவிர எனக்கு உன் மேல வேற எந்த கோவமும் இல்லடா குட்டிமா" என அவன் அவள் கூந்தலை வருட, இன்னும் இன்னும் கூடிக்கொண்டே போனது அவளுடைய விசும்பல். 'சாரி மாம்ஸ், சாரி மாம்ஸ்' என முணுமுணுத்துக்கொண்டே இருந்தன அவளுடைய இதழ்கள்.


***


ஒரு வழியாகப் பேசி சமாதானமாகி இரவு உணவையும் முடித்துக்கொண்டு எல்லோரும் அவரவர் அறைக்குள் புகுந்துகொள்ள, அவருடைய சிம்மாசனத்தில் வந்து உட்கார்ந்திருந்தார் தாமரை.


பூங்காற்றே இனி போதும்


என் உடல் தீண்டாதே


இங்கு போராடும்


சருகான பூ மனம் தாங்காதே


நான் ஒன்று எண்ணித் தவிக்க


தான் ஒன்று தெய்வம் நினைக்க


துன்பத்தில் என்னைத்


தள்ளிப் பார்க்காதே


என் நெஞ்சம் தாங்காதே



சத்யாவின் அறையிலிருந்து மிதந்து வந்து அந்த இரவை இனிமையக்கிக்கொண்டிருந்தது இளையராஜாவின் பாடல் இழையோடும் சோகம் கலந்து.


அவர் அங்கே இருக்கக்கூடும் என்பதை அறிந்து அங்கே வந்த ஹாசினி அவரது மடியில் தலை சாய்ந்துகொள்ள, அவருடைய கரங்கள் மகளுடைய கூந்தலை வருடியது. அது தந்த இதத்தில் அவளுடைய கண்கள் சொருக அவளுடைய நாயகனின் முகம் வந்து கண்கள் முழுவதும் நிறைந்துபோனது.


"இன்னுமாம்மா சத்யா மாமா அந்த பொண்ணையே நினைச்சிட்டு இருக்காரு" என அவள் வருத்தத்துடன் கேட்க, "அவனுக்குனு ஒரு லைப் அமைஞ்சிருந்தா மறந்திருப்பானோ என்னவோ. அமையல அதனால அவனோட தனிமையை மறக்க அந்த நினைவுகளை தூக்கி சுமந்துட்டு இருக்கான்னு தோணுது, ம்ம்" என பெருமூச்சு ஒன்றை எடுத்துக்கொண்டவர், "நல்லவேளை ஹசி, தேனுவே அவனை தேடி வந்து நின்னப்ப கூட மனசு தடுமாறாம எதுக்காக அவன் அவளை விட்டுக்கொடுத்தானோ அது வீண் போகாம, அந்த பொண்ணு வாழ்க்கைல நல்லபடியா செட்டில் ஆகி குழந்தை குட்டின்னு நல்லா இருக்கா. இல்லன்னா அவன் என்ன மாதிரி நிலமைல இருப்பான்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல என்றார் தாமரை.


அதில் தொனித்த உண்மை ஹாசினியை என்னவோ செய்தது.


https://youtu.be/90Zq1FLdrfE (click for video song)


நம் கானம் கேட்ட

வானாடும் சோலை

வீணில் வாடுது பார்த்தாயோ

பொன் மாலை வேளை

இங்கென்ன தேவை

சோக சங்கீதம் கேட்டாயோ


என் வாழ்வு மண் மீது போனாலும்

உன் வாழ்வு இன்பங்கள் காணட்டும்

யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும்

வேர் போல ஆல் போல நீ வாழ்க

அன்பே அன்பே என் இன்பம் எங்கே

பூங்காற்றே இனி போதும்


என் உடல் தீண்டாதே

இங்கு போராடும்

சருகான பூ மனம் தாங்காதே


****************

Recent Posts

See All
Poove Unn Punnagayil - 36

அத்தியாயம்-36 சென்னை மாநகரின் பிரதான பகுதியில் அமைந்திருந்த ஒரு பிரம்மாண்டமான திருமண மாளிகையின் முன்பு வந்து நின்ற ஆட்டோவிலிருந்து...

 
 
 
Poove Unn Punnagayil - 35

அத்தியாயம்-35 சத்யா கையில் ஏந்தியிருந்த தலைக்கவசம் அவன் இரு சக்கர வாகனத்தில்தான் வந்திருக்கிறான் என்பதை சொல்லாமல் சொன்னது. அவளுடன்...

 
 
 
Poove Unn Punnagayil - 34

அத்தியாயம்-34 கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆண் பெண் என பாகுபாடில்லாத மிகப்பெரிய நட்பு வட்டம் இவர்களுடையது. எல்லோருமே வசதி படைத்த...

 
 
 

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page