top of page

Poove Unn Punnagayil - 34

அத்தியாயம்-34

கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆண் பெண் என பாகுபாடில்லாத மிகப்பெரிய நட்பு வட்டம் இவர்களுடையது. எல்லோருமே வசதி படைத்த வீட்டுப்பிள்ளைகள் என்பதால் காலத்திற்கேற்றால்போல சினிமா, மால், பார்ட்டிகள் என்பதெல்லாம் இவர்களுக்குள் வெகு சகஜமான ஒன்றாக இருந்தது.


இவர்கள் முதல் ஆண்டில் படிக்கும்போது இறுதியாண்டு படிப்பிலிருந்தான் கௌசிக். அவனுடைய வசீகரிக்கும் தோற்றமும் 'காலேஜ் டாப்பர்' என்கிற பெருமையும் பெண்களையெல்லாம் அவன் பக்கம் ஈர்க்க, பாடத்தில் சந்தேகம் கேட்பதுபோல் இவர்களும் அடிக்கடி கௌசிக்கிடம் போய் பேச்சுக்கொடுக்கவும் முதலில் இயல்பாக விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் இவர்களுடைய மனநிலை புரிந்து, 'இனிமேல் டௌட் கேட்டு என் கிட்ட வராதீங்க. உங்க பிரஃபஸர் கிட்டயே கேட்டுக்கோங்க. நிச்சயமா கிளியர் பண்ணுவாங்க" என நேரடியாகச் சொல்லி அவர்களிடமிருந்து ஒதுக்கிப்போய்விட்டான். அதற்குள் அவனுடைய படிப்பும் முடிந்துவிட அவனுடைய தொடர்பே இல்லாமல் போனது.


மற்ற பெண்களெல்லாம் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் போனாலும் பலாவால் அந்த முகத்திருப்பலை சகிக்கவோ அவனுடைய பிரிவை ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.


ஏதோ ஒரு விதத்தில் அவனுடன் பழக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் முக நூலில் அவனுக்கு நட்பு அழைப்பு விட்டுப்பார்க்க அதைக் கூட ஏற்க தயாராயில்லை அவன். அந்த ஏமாற்றமும் அவமானமும் அவளுக்குள் நீறு பூத்த நெருப்பாக கனன்றுகொண்டே இருந்தது.


அந்த நேரத்தில்தான் அவர்களுடன் படிக்கும் தருணுக்கு ஹாசினியிடம் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருப்பது புரிந்தது பாலாவுக்கு. ஆனால் அதை ஹாசினிதான் உணர்ந்ததாகவே தெரியவில்லை. எல்லோருடனும் இயல்பாகப் பழகுவதுபோல்தான் அவனுடனும் பழகினாள் என்றாலும் பாலாவுக்கு அவள் மீது ஒரு பொறாமை உணர்வு முதன்முதலாக ஏற்பட்டது அப்பொழுதுதான்.


'இங்கே இத்தனை பெண்கள் இருக்கும்போது இந்த தருணுக்குக்கூட அவளிடம் மட்டும் எப்படி இவ்வளவு நாட்டம் உண்டானது? தன்னிடம் இல்லாதது அப்படியென்ன இருக்கிறது அவளிடம்?' என்கிற எண்ணம் கொஞ்சம் அதிகமாகவே தலைதூக்கியது. காரணம் கௌசிக்கே ஹாசினியை ஆர்வமுடன் பார்ப்பதுபோல பல சமயங்களில் தோன்றியிருக்கிறது அவளுக்கு.


ஆனாலும் அதை வெளிக்காண்பிக்காமல் அவள் சென்றுகொண்டிருக்க, ஒரு விடுமுறை தினம் பார்த்து மேகலாவின் பிறந்தநாள் வரவும், அவர்களுடைய வழக்கப்படி ஒரு நட்சத்திர விடுதியில் அனைவருக்கும் ட்ரீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தாள் அவள்.


அவர்கள் அனைவருமே வயது வரம்பைத் தொட்டிருக்க மதுவுக்கும் அனுமதி இருக்கவே ஹாசினி, சவிதா என அவர்கள் குழுவில் சிலரைத் தவிர்த்து மற்றவர் அனைவரும் புகுந்து விளையாட, அவர்களுடைய குதூகலம் களைகட்டியது.


ஆட்டம் பட்டம் என நேரம் கழியவும் ஹாசினையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அங்கே வந்தான் சத்யா.


அந்த நேரம் பார்த்து போதை தலைக்கு ஏறிப்போய், செல்ஃபீ எடுக்கும் சாக்கில் ஹாசினியின் தோளில் கை போட்டு தன்னுடன் நெருக்கிக்கொண்ட தருண் படங்களாக எடுத்துத்தள்ளிக்கொண்டிருக்க அவள் கவனம் முழுவதும் எடுத்த படங்களிலெல்லாம் தான் அழகாக இருக்கிறோமா என்பதை சரிபார்ப்பதில் மட்டுமே இருக்க, அவள் ஸ்லீவ்லஸ் டாப் வேறு அணிந்திருக்கவும் அது வசதியாகிப்போய் அவளுடைய தோளை வளைத்திருந்த அவனுடையக் கையை இன்னும் கொஞ்சம் சுதந்திரமாகப் படரவிட்டு எல்லை மீறிக்கொண்டிருந்தான்.


உள்ளே நுழைந்த சத்யாவின் பார்வையில் தப்பாமல் அந்த காட்சி பட, கண்மண் தெரியாத ஆத்திரத்தில் கொதித்தே போனான் அவன். அடுத்த நொடி தருணுடைய கைப்பேசி தரையில் தெறித்து நொறுங்கிச் சிதறியிருந்தது.


"ஏன்டீ, வாய் கிழிய குட் டச் பேட் டச் பத்தியெல்லாம் மணிக்கணக்கா பேசறீங்க இல்ல, அது உங்களுக்கு நடக்கும்போது அதை புரிஞ்சிக்கற அறிவு மட்டும் ஏன் உங்களுக்கு இல்லாம போகுது?" என அவன் உச்சபட்ச கோபத்தில் உருமும்போதே ஹாசினியின் கன்னமும் நன்றாகப் பழுத்தது.


அவள் என்னவென்று உணருவதற்குள் தருணின் கையை அவனுடைய பின்பக்கமாக வளைத்து நன்றாக முறுக்கியிருந்தான் அவளுடைய தாய்மாமன்.


"தாய்மாமன், பாட்டன், சித்தப்பன், பெரியப்பன்னு யாரா இருந்தாலும் எவ்வளவு உரிமை இருந்தாலும் எங்க குடும்பத்துலயெல்லாம் பொம்பள பிள்ளைகளை தொட்டு பேசறது, செல்லமா மடியில உட்கார வைக்கிறது, ஆசையா கட்டிபிடிக்கறது இதையெல்லாம் செய்ய மாட்டோம். ஒரு வயசுக்கு மேல அந்த ஒதுக்கம் தானா வந்துடும் தெரியுமாடா உனக்கு. ஆனா ஃப்ரெண்ஷிப் சோஷியல் பிஹேவியர் அது இதுன்னு சொல்லிட்டு உனக்குக் கொஞ்சம் கூட உரிமையே இல்லாத ஒரு பெண்ணை இப்படித் தொட்டு தடவறியே, இதெல்லாம் கேடு கெட்ட பொரம்போக்குத்தனம்னு உங்க அம்மா அப்பா உனக்கு சொல்லிக்கொடுக்கல?" என அவன் உறும, இப்படி அப்படி அசையக்கூட முடியாமல் வலியில் கத்திக்கொண்டிருந்தான் அவன். அதற்குள் அந்த விடுதியின் பணியாளர்கள் நடுவில் புகுந்து சத்யாவிடமிருந்து தருணை பிரித்து அவனை சமாதானம் செய்ய, ஹாசினியின் கையை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றான் சத்யா.


அதுவரை சத்யாவை எதிர்த்து ஒரு சுண்டுவிரலைக் கூட அசைக்கத் துணிவில்லாமல் மரம்போல் நின்றவன். ஆத்திரமும் அவமானமுமாக வெறிபிடித்தவன் போல அங்கிருந்து கிளம்பிச் சென்றான் தருண்.


தருண் ஹாசினியிடம் வக்கிரமாக நடந்துகொண்டதை மற்ற யாருமே கவனிக்காமல் போனாலும் தன் கவனம் முழுவதையும் அவர்களிடமே வைத்திருந்த பாலாவுக்கு மட்டும் அது நன்றாகவே தெரிந்தது. நடந்துமுடிந்த அசம்பாவிதம் அவளுக்கு ஒரு வித குரூர திருப்தியைக் கொடுத்தது என்றும் கூட சொல்லலாம்.


***


அடுத்த நாளே கல்லூரிக்கு வந்தவள் நேராக தருணிடம் சென்று, "சாரி தருண், சத்யா மாமா கிராமத்து ஆளு. அவங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டு நேத்து உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாங்க" என அவளுடைய மாமா செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல் மற்ற அனைவரிடமும் அதற்கு விளக்கம் வேறு கொடுத்துக்கொண்டிருந்தாள் ஹாசினி.


அதாவது அவளை அடித்ததற்காக அவளுடைய அப்பா சத்யாவை கண்டித்ததையும் அதற்காகக் கோபித்துக்கொண்டு அவன் ஊருக்குச் சென்றுவிட்டதையும்தான் அவள் மற்றவரிடம் உளரிவைத்தாள்.


அவளுடைய இந்த முட்டாள்தனத்தை எண்ணி பாலாவுக்கு சிரிப்பே வந்துவிட்டது.


ஆனால் தாமரை மூலம் கருணாகரனுக்கு உண்மை தெரியவர, தன் தவறை உணர்ந்து அவரே நேரில் சென்று சத்யாவை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துவந்ததும், அதன் பிறகு பிள்ளைகளின் பொறுப்பு மொத்தத்தையும் அவர் சத்யாவிடமே ஒப்படைத்ததும் ஒரு தனிக்கதை.


ஆனால் எது எப்படி இருந்தாலும் அந்த சம்பவத்திற்குப் பிறகு ஹாசினியிடம் பழகும்போது ஒரு எச்சரிக்கை உணர்வு எல்லோருக்குமே உண்டாகிப்போயிருக்க அவளிடமிருந்து ஒரு அடி தள்ளி நிற்கவைத்தது அவளுடைய ஆண் நண்பர்களை. தருணும் அதற்கு விதிவிலக்கில்லை.


அந்த சம்பவத்திற்கு சத்யாவை ஏதாவது ஒரு வழியில் பழி தீர்க்க முடியும் என்றால் அது ஹாசினியை பாதிப்புக்கு உள்ளாக்குவது மட்டுமே என்பதாக அவனுடைய மனதில் வன்மமும் பழி உணர்ச்சியும் கனன்றுகொண்டே இருந்தாலும் சத்யா என்னும் பாதுகாப்பு வளையமும் கருணாகரன் என்கிற ஆளுமையுடனான அவளது பின்புலமும் அவளை நோக்கி எந்த ஒரு அடியையும் எடுத்துவைக்கும் துணிவை அவனுக்குக் கொடுக்கவில்லை.


கல்லூரி படிப்பு முடிந்துவிட்டாலும் கூட அவர்களுடைய வாழ்க்கை முறையில் அது எந்த ஒரு மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. கிடைக்கும் நேரங்களிலெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து தங்கள் உல்லாசங்கள் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள்.


ஆனால் இவ்வளவு நாட்களும் ஒரு சிறு சந்தேகம் கூட யாருக்கும் வராத அளவுக்கு அவள் கௌசிக்கை காதலித்துக்கொண்டிருந்ததும் அவர்களுக்கு திருமணமே முடிவாகியிருக்கிறது என்பதும் திடீரென தெரியவந்ததில் அப்படி ஒரு அதிர்ச்சி உண்டாகிப்போனது பாலாவுக்கு. 'தன்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காதவன் ஹாசினியை மட்டும் காதலிப்பானாம்? திருமணமும் செய்துகொள்வானாம்? கையை கட்டிக்கொண்டு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா? கூடவே கூடாது! அதை எப்படியாவது தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும் என்கிற வெறியில் ஹாசினியின் மனதைக் கலைப்பதுபோல் அவள் பன்னிப் பன்னி பேசிப்பார்க்க, கொஞ்சம் கூட அசைந்துகொடுக்கவில்லை ஹாசினி.


இதற்கிடையில் பழைய நினைவுகளை ஊதி ஊதி வளர்த்து தருணையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தாள் அவள். அது நன்றாக வேலையும் செய்தது.


எது எப்படியோ ஹாசினியின் திருமணமும் நடந்து முடிய, அப்படியும் அவளுடைய எண்ணப்போக்கு மாறவேயில்லை. சொல்லப்போனால் ஃபேஸ் புக், இன்ஸ்ட்டா, வாட்ஸ் ஆப், என சமூக வலைத்தளங்களில் பெருமை பொங்க ஹாசினி பகிரும் கௌசிக்குடன் அவள் நெருக்கமாக இருக்கும் அவளுடைய திருமண, தேன்நிலவு புகைப்படங்களெல்லாம் பாலாவின் வயிற்றில் அமிலத்தைச் சுரக்க வைப்பதாகவே இருந்தன.


போதாத குறைக்கு அவளுடைய புகுந்த வீட்டு வாழ்க்கை பற்றி ஹாசினி அதீதமாக அளந்துவிட்டது வேறு அவளை உச்சபட்ச மன உளைச்சலில் தள்ளியது.


சரியான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்ப்பது காத்திருந்தவளுக்கு தருண் நன்றாக கை கொடுத்து உதவினான் அவனுடைய பிறந்தநாள் பார்ட்டி என்கிற பெயரில்.


அவன் கொடுத்த துணிவில்தான் போதை மருந்து கலந்த பழரசத்தை அவளுக்குக் கொடுத்துப் பருகவைத்து அதன்பின் அவள் மீது சிறிது மதுவைத் தெளித்து அவள் மது அருந்தியிருப்பதுபோல சித்தரித்து அவளை வீட்டிற்கு அழைத்துவந்தாள் பாலா.


அவளுக்கு நன்றாகவே தெரியும் இது அவளுடைய புகுந்தவீட்டில் அவள்மீதான மதிப்பை நிச்சயம் குறைக்கும் என்று. நிச்சயம் கௌசிக் இதை ஒப்ப மாட்டான் அதனால் இருவருக்குள்ளும் மிகப்பெரிய விரிசல் உண்டாகும் என அவள் போட்ட திட்டம் வெற்றிகரமாக வேலை செய்ததுதான்.


ஆனால் அது கொடுத்த உவகை சில தினங்கள் கூட அவளுக்கு நிலைக்காமல் போனதுடன் அவளை இப்படி காவல்நிலையம் கொண்டுவந்து நிறுத்தியிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.


அனைத்தையும் சொல்லிமுடித்துவிட்டு 'அடுத்து என்ன நடக்குமோ?' என்கிற பீதியுடன் நின்றிருந்தாள் பாலா. அவளுக்கு சத்யாவை பார்க்கவே அவ்வளவு பயமாக இருந்தது. அவளுக்கு மட்டுமில்லை அப்பொழுது அங்கே வந்து சேர்ந்த தருணுக்குமேதான் .


ஒரு வழியாக வேப்பிலை அடித்து பேய் ஓட்டுவது போல ஹாசினியின் தலை மேல் ஏறி உட்கார்ந்து அவளை ஆட்டிவைத்த பித்தத்தைத் தெளிய வைத்தது எல்லோருமாகச் சேர்ந்து அவளுக்குக் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்.


இந்த மட்டும் அவள் உண்மையை உணர்ந்ததே போதும், இனி பாலா, தருண் என்றில்லை வேறு யார் குறுக்கே வந்தாலும் ஹாசினியின் மனதை கலைக்கமுடியாது, கௌசிக்கும் அவளுடைய மனநிலையை புரிந்துகொண்டு அவளை நன்றாக சமாளிப்பான் என்பது திண்ணமாக விளங்க, பாலா, தருண் இருவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் மீது எந்தவிதமான சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.


அந்த இருவரின் பெற்றோரையும் வீடியோ காலில் அழைத்து நடந்த அனைத்தையும் சொல்லி அவர்கள் முன்னிலையிலேயே இருவரையும் நன்றாக எச்சரித்துவிட்டு 'இனி ஹாசினியின் விஷயத்தில் தலையிட மாட்டோம்!' என அவர்களிடம் எழுதிவாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார் செல்வி. அதற்குள்ளாகவே கண்ணும் கண்ணும் கலந்து ஹாசினியும் அவளுடைய கணவனும் ஏதோ ஒரு மாய உலகில் காதல் கீதம் இசைத்துக்கொண்டிருக்க, அதைப்பார்த்ததும் 'அப்பாடா' என்றிருந்தது சத்யாவுக்கு.


எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இப்படி ஒரு பேருபகாரத்தைச் செய்த சக்தி, செல்வி இரண்டு பெண்களுக்குமே ஆயிரம் நன்றிகளைச் சொல்லிவிட்டு கௌசிக்கிடமும் சுமுகமாகவே சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் சத்யா, வரும்பொழுது எப்படி ஹாசினியை தன்னுடன் கூட்டிவந்தானோ அதே போல கையுடன் அவளை தன்னுடனேயே அழைத்துக்கொண்டு.


என்ன ஏது என்பது விளங்காமல் அவர்கள் சென்ற திசையையே பரிதாபமாகப் பார்த்துக்கொண்டு, 'வட போச்சே' என்பதாக அசைவற்று நின்ற கௌசிக்கை பார்க்கவே சிரிப்பாக வந்தது சக்திக்கு.


அவள் தன் பங்கிற்கு செல்வியிடம் நன்றி நவின்றுவிட்டு விடைபெற்றுக் கிளம்ப, அதற்குள் தன்னை மீட்டுக்கொண்டவன் தானும் அவளுடன் இணைந்துகொண்டான் கௌசிக்.


'ஹா... ஹா' ஈமோஜியுடன் 'ஃப்ரீயா இருக்கும்போது கால் பண்ணுங்க மிஸ்ஸ்ஸ்ஸ்... சக்தி' என்கிற செய்தியைத் தாங்கி 'டிங்' என அவளுடைய கைப்பேசியில் வந்து விழுந்தது சத்யா அவளுக்கு அனுப்பிய குறுந்தகவல்.


கோபத்தில் முகம் சிவந்த இமோஜியை அவனுக்கு பதிலாக அனுப்பிவைத்தாலும் சக்தியின் முகம் மட்டும் புன்னகையில்தான் பூத்திருந்தது.


***


வீட்டிற்குள் நுழைந்தது முதல் சில பல திட்டுகளை ஹாசினிக்கு வாரி வழங்கிக்கொண்டே நடந்த அனைத்தையும் அவனுடைய அக்காவிடமும் அத்தானிடமும் சொல்லிச்சொல்லி மாய்ந்தான் சத்யா. கோபம், அழுகை, ஆயாசம் என ஒருவாறு அவர்களுக்குள்ளாகவே அனைத்தையும் பேசி முடித்து ஒரு தெளிவுக்கு வந்தவர்கள் அடுத்து செய்யவேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டு, ஹாசினியை அவர்கள் வீட்டில் முறைப்படி கொண்டுபோய் விட நாள் குறித்து அதை கௌசிக்கின் அப்பாவிடம் தானே சொன்னார் கருணாகரன்.


ஒரு வழியாகப் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் சிவநேசனுக்கும் சங்கரிக்கும் கூட அளப்பரிய நிம்மதிதான். எப்படியோ மகனுடைய வாழ்க்கை சந்தோஷமாக அமைத்தல் போதும் என்ற மனநிலையிலிருந்தவர் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டார் சிவநேசன் மனைவியின் ஒப்புதலுடன்.


எல்லாம் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் கைப்பேசியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள் ஹாசினி கௌசிக்கிடம் கொஞ்சிப்பேசி அவனை சமாதானம் செய்ய!


அவர்களுடைய கட்டிடப் பணி நடக்கும் இடத்தில் ஒரு முக்கிய வேலையைப் பார்வையிட வேண்டியிருந்ததால் அங்கே கிளம்பிச் சென்றான் சத்யா. மறுபடி அவன் வீடு திரும்ப இரவு நேரமாகிப்போனது.


சாப்பிட்டு அவனுடைய அறைக்குள் அவன் நுழையவும் சக்தியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.


எடுத்த எடுப்பில், "என்ன சத்யா நீங்க, பிரச்சனைதான் தீர்ந்து போச்சே, அதுவும் ஸ்டேஷன்ல வெச்சே கௌசிக் உங்க பொண்ணுகிட்ட எவ்வளவு கேரிங்கா நடந்துக்கிட்டார்னு பார்த்துட்டுதானே இருந்தீங்க. என்ன பிரச்சனை உங்களுக்கு. ஹாசினிய அவர் கூட அவங்க வீட்டுக்கே அனுப்பியிருக்கலாம் இல்ல? அவரை பார்க்கவே பாவமா போச்சு!" என படபடவென பொறிந்துத்தள்ளவும் அப்படி ஒரு உவகை உண்டானது சத்யாவுக்கு.


"என்ன சக்தி உங்க கட்சிக்காரருக்காக இவளவு சீரியஸா ஆர்க்யூ பண்றீங்க" என அவன் கிண்டலில் இறங்கவும், "சத்யா!" என சிணுங்கினாள் அவள்.


"என்ன இருந்தாலும் இவ அன்னைக்கு கோவிச்சிட்டு பெரியவங்க கிட்ட கூட சொல்லாம இப்படி கிளம்பி வந்தது ரொம்ப தப்புங்க சக்தி. இப்படி போற போக்குல அவள அனுப்பி வெச்சா அது அதைவிட தப்பு. அதனாலதான் கூட்டிட்டு வந்தேன். அவளை முறைப்படி கொண்டுபோய் விட நல்ல நாள் பார்த்துட்டோம். அக்காவும் அத்தானும் கூட்டிட்டுபோய் விடுவாங்க. அது மட்டுமில்ல, அத்தான் ஹசி பேர்ல ஒரு இடம் வாங்கி போட்டிருக்காங்க. அதுல அவங்க ஃபேமிலி ஃபுல்லா செட்டில் ஆகற மாதிரி காம்பாக்ட்டா ஒரு வீடு கட்ட பிளான் போட்டிருக்கோம். அதைப்பத்தி நேர்ல சொல்லி அவங்கள சம்மதிக்க வைக்கணும்" என அவன் நீண்ட விளக்கம் கொடுக்க, "சாரி சத்யா, எனக்கு பேமிலி செண்டிமெண்ட், இப்படிப்பட்ட பார்மாலிடீஸ் எதுவும் தெரியாது! யூசுவலி இந்த மாதிரி பிரேக் அப் கேஸ்லாம் அவ்வளவு ஈஸியா ஒண்ணு சேராது. பெரும்பாலும் டைவர்ஸ்ல போய்த்தான் முடியும். அதான் மறுபடியும் அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு ஒரு ஆதங்கத்துல இப்படி பேசிட்டேன்" என அவள் வருந்தவும், "தேங்க்ஸ் சக்தி. ஒவொரு தடவையும் நான் நோட்டீஸ் பண்ணியிருக்கேன். எதுலயுமே நமக்கென்னன்னு போகாம இவ்வளவு கேர் எடுக்கறீங்க பாருங்க அதனாலேயே எனக்கு உங்கள ரொம்ப பிடிக்குது" எனத் தன்னை மறந்து அவன் மனதிலிருந்ததை மறைக்காமல் அப்படியே சொல்லிவிட, அப்படி ஒரு மௌனம் குடிகொண்டது எதிர்முனையில்.


சட்டென தன் தவறை உணர்ந்தவன், "கவலை படாதீங்க சக்தி. இனிமேல் ஹாசினி புரிஞ்சி நடந்துப்பா. இல்லனாலும் நாமெல்லாம் எதுக்கு இருக்கோம்" என இலகுவாகவே சொல்ல, "ஹலோ, இதை விட்டா எனக்கு வேற கேஸே இல்லன்னு நினைச்சிட்டிங்களா. உங்க பொண்ணை பார்த்து பதமா நடந்துக்க சொல்லுங்க" என அவள் கண்டனத்துடன் சொல்ல, "அதெல்லாம் இருக்கட்டும், அது என்ன போலீஸ் ஸ்டேஷன்ல மொத்த பெர்ஃபார்மென்ஸையும் உங்க பிரண்டுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் சைலண்டா இருந்துட்டீங்க?" என அவன் தன் சந்தேகத்தை கேட்க,


"ஹலோ என்ன இருந்தாலும் அது அவங்களோட ஏரியா. அவங்கதான் பெர்ஃபார்மென்ஸ் பண்ணனும். என்னோட பெர்ஃபார்மென்ஸ் பார்க்கணும்னா நீங்க கோர்ட்டுக்குத்தான் வரணும். குட் நைட். பை" என மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அவள் அழைப்பைத் துண்டித்தாலும் அதில் ஒரு இழையோடிய கிண்டலும் லேசான சிரிப்பும் கலந்தே இருந்தது.


அத்துடன் நிறுத்த மனமில்லாமல், 'பெரிய கிச்சன் இருக்கற வீட்டையும், அதுக்கு ஃப்ரீயா வரபோற தொல்லையையும் பார்க்க எப்ப வரீங்க?' என அவன் குறுந்தகவல் அனுப்ப, 'கூடிய சீக்கிரம்' என பதில் வந்தது அவளிடமிருந்து.


ஆனால் அந்த 'கூடிய சீக்கிரம்' என்பதுதான் மாதக்கணக்கில் இழுத்தது சூழ்நிலை காரணமாக.


***


அவளை மீண்டும் நேரில் சந்திக்கும் நாளுக்காக அவன் வெகு ஆவலுடன் காத்திருக்க, இரண்டு தினங்கள் கடந்தும் சக்தியிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராமல் போனதால் தானே அவளை அழைத்தான் சத்யா.


"சொல்லுங்க சத்யா" என கரகரப்பாக ஒலித்தது அவளுடைய குரல். "என்ன சக்தி, கூடிய சீக்கிரம் வீடு பார்க்க வரேன்னு மெசேஜ் பண்ணிட்டு ஆளே காணாம போயிட்டீங்க?" என அவன் குறையாகக் கேட்க, "சாரி சத்யா, இப்போதைக்கு என்னால வீடு வாங்க முடியதுனு நினைக்கறேன்" என உணர்வற்ற குரலில் அவள் சொல்லவும், "ஏன், என்ன ஆச்சு" என்றான் சத்யா தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு.


"நான் இப்ப ஊருக்கு வந்திருக்கேன் சத்யா. அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. அவங்கள ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கேன். மத்ததெல்லாம் அப்பறம் எப்பவாவது நேர்ல பார்க்கும்போது டீடைலா சொல்றேன்" என அவள் பதில் கொடுக்க, அடுத்த சில மணிநேரங்களில் வேலூரில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனை ஒன்றில் சக்திக்கு முன்பாக நின்றிருந்தான் சத்யா, எதிர்பாராமல் அவனை அங்கே பார்த்ததால் வியப்பில் விரிந்த அவளுடைய விழிகளை பார்த்துக்கொண்டே.


****************

Recent Posts

See All
Poove Unn Punnagayil - 36

அத்தியாயம்-36 சென்னை மாநகரின் பிரதான பகுதியில் அமைந்திருந்த ஒரு பிரம்மாண்டமான திருமண மாளிகையின் முன்பு வந்து நின்ற ஆட்டோவிலிருந்து...

 
 
 
Poove Unn Punnagayil - 35

அத்தியாயம்-35 சத்யா கையில் ஏந்தியிருந்த தலைக்கவசம் அவன் இரு சக்கர வாகனத்தில்தான் வந்திருக்கிறான் என்பதை சொல்லாமல் சொன்னது. அவளுடன்...

 
 
 
Poove Unn Punnagayil - 33

அத்தியாயம்-33 'மியூச்சுவல் டிவோர்ஸ்க்கு பேப்பர்ஸ் ரெடி பண்ணிடுங்க' என கௌசிக் அவனுடைய வழக்கறிஞரிடம் சொன்ன வார்த்தைகள் இரண்டு நாட்களாக...

 
 
 

Opmerkingen

Beoordeeld met 0 uit 5 sterren.
Nog geen beoordelingen

Voeg een beoordeling toe
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page