top of page

Poovum Naanum Veru 11

இதழ்-11


"எப்படி மச்சான்! எப்படி கண்டுபிடிச்ச? சித்தி உன்கிட்ட சொல்லியிருக்க வாய்ப்பே இல்ல! ஏன்னா 'உன் ஃப்ரண்ட் இங்க வந்த பிறகு நீயே அவன் கிட்ட சொல்லிக்கோ'ன்னு அவங்கதான் சொன்னாங்க!” என வியந்தவண்ணம் எதிர் முனையில் திலீப் படபடக்க, அதற்கு "ஓ! நான் கெஸ் பண்ணது கரக்ட்தானா?" எனக்கேட்டு சத்தமாகச் சிரித்தவன், "உன் மனசுல வசுந்தராவை பத்தி இப்படி ஒரு எண்ணம் இருக்குனு அவங்களுக்கு சொன்னதே நான்தான்.


ஆனா இந்த ட்விஸ்ட்டை இவ்வளவு சீக்கிரம் நானே எதிர்பாக்கல. பயங்கர அவசரமா தீயா வேலை செஞ்சி முடிச்சிருக்காங்க உங்க சித்தி!" என மனதில் நினைத்ததை அப்படியே சொன்னான் தீபன்.


"பாரதி சித்திக்கு எப்படி இந்த மேட்டர் தெரியும்னு மண்டைய பிச்சிட்டு இருந்தேன். நீ தான் காரணமா!


தேங்க்ஸ் டா மச்சான்.


கரெக்டான பர்சன் கிட்ட சொல்லி, இவ்வளவு ஈஸியா இந்த வேலையை முடிச்சிட்டியே!" என்றான் திலீப் மகிழ்ச்சியுடன்.


"தேங்க்ஸ்லாம் இருக்கட்டும். வசு எப்படி இதுக்கு இவ்ளோ டக்குனு சம்மதிச்சா...ங்க!" என அவன் யோசனையுடன் கேட்க அதற்கு, "சித்தி சொன்னா அவ அதை மீற மாட்டாளாம்! அவளோட பேரண்ட்சும் அப்படித்தானாம்! சித்தி கிட்ட அவ்வளவு ரெஸ்பெக்ட் அவங்களுக்கு!" என்றான் திலீப் பெருமையுடன்.


உணர்ச்சியற்ற குரலில், "ஓஹோ!" என்றவன், "காதல் ஒருத்தரோட ரெகமண்டஷன்லயோ நிர்பந்தத்துலயோ வராது திலீப். வரவும் கூடாது.


இந்த மாதிரி இன்ஃப்ளுயன்ஸ் பண்ணி கல்யாணம் செய்தால், அது நல்லதில்ல. அந்த பெண்ணோட சம்மதத்தை நீ நேரில் கேட்டிருக்க வேண்டாமா?" என வெகுவாக அவனைக் கடிந்துகொண்டான் தீபன்.


"நீ சொல்றதும் சரிதான் மச்சான். ஆனா இந்த பெரியவங்க அப்படி ஒரு ஆப்ஷனையே எனக்கு கொடுக்கலையே" என அவன் சொன்னதை ஆமோதிப்பது போல் திலீப் சொல்ல,


"அவங்க ஏன் குடுக்கணும்? வசு உனக்கு முன்ன பின்ன தெரியாத பொண்ணா என்ன? ஒரு தடவை அவ..ங்களை நேரில் மீட் பண்ணி நீயே கேட்டுட வேண்டியதுதானே" என அவன் சொல்வதுதான் சரி என திலீப்பை முற்றிலுமாக எண்ணவைத்தவன், "என்ன இருந்தாலும் இது உன்னோட வெட்டிங்; உன்னோட ஃபியான்சி; ஸோ... நீதான் பேசணும்; எதுவா இருந்தாலும் நீயேதான் ஃபேஸ் பண்ணனும்; அன்னைக்கு மாதிரி என்னை இதுல இழுக்காத; ஏன்னா நான் யூ.எஸ் போனதால அஞ்சு ஆறு நாளா எக்கச்சக்க வேலை குவிஞ்சு கிடக்கு. நான் முடிச்சே ஆகணும். ஆல் தி பெஸ்ட் திலீப்!" என எதிர் முனையிலிருந்தவன் பேச இடமே கொடுக்காமல் சொல்லி முடித்து அழைப்பைத் துண்டித்தான் தீபன்.


எப்படியும் திலீப் அவனை மறுபடியும் அழைப்பான் என்ற நம்பிக்கையில் கைப்பேசியின் திரையையே அவன் பார்த்துக்கொண்டிருக்க, அவனது எண்ணத்தைப் பொய்யாக்காமல் சில நொடிகளுக்குள்ளாகவே அழைத்த திலீப், "நீ சொன்னதுதான் சரி தீபன்; நீ வந்தா நான் கொஞ்சம் கான்ஃபிடென்ட்டா பீல் பண்ணுவேன் மச்சான். இது பிசினஸ் டீல் இல்ல பாரு; அதனால எனக்கு கொஞ்சம் டென்ஷானாதான் இருக்கு. ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாத!" என அவனிடம் கோரிக்கையாகச் சொல்லவும், "ப்ச்! சொன்னா கேக்க மாட்ட. சரி! அவ...ங்க கிட்ட பேசிட்டு எங்க எப்ப வரணும்னு சொல்லு; வர முயற்சி செய்யறேன்" என்று முடித்தான் தீபன்.


***


முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காண்பிக்காமல், கடமையே கண்ணாகப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்திக்கொண்டிருந்த வசுவை பார்த்து, "இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தத்தை வெச்சிட்டு, நீ இப்படி விட்டேத்தியா இருக்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லை வசு. முக்கியமான விஷயம் பேசணும்னு மாப்பிள்ளை உன்னைக் கூப்பிடும்போது வர மாட்டேன்னு சொன்னால் அது மரியாதையா இருக்காது. ஒழுங்கா நீ கிளம்பு." என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் கலைவாணி.


திலீப்புடனான வசுவின் திருமணத்தை உறுதி செய்தது முதல் பிடிவாதம் பிடித்து வீட்டிற்கே வந்துவிட்டார் அவர். முந்தைய தினம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, அவளை நேரில் சந்தித்துப் பேசவேண்டும் என்று அழைத்திருந்தான் திலீப்.


அவனை நேரில் சந்தித்துப் பேச மனதில் எழுந்த தயக்கத்தால், பரீட்சை தாள்களைத் திருத்தி முடிக்க வேண்டிய வேலையைக் காரணம் காட்டி அவளால் வர இயலாதது என அவள் மென்மையாய் மறுத்துவிட, பாரதியின் துணையை நாடினான் திலீப்.


"அவன் முக்கியமா பேசணும்னுதான உன்னை வர சொல்றான்; போய்ட்டு வா வசு; எத்தனை நாளைக்கு உன்னால இப்படி ஓடி ஒளிய முடியும்; எதார்த்தத்தை ஃபேஸ் பண்ணு; ஆனா கொஞ்சம் பார்த்து கவனமா பேசு; இப்போதைக்குப் பழசைப் பத்தி அவனுக்கு எதையும் சொல்லணும்னு அவசியம் இல்ல; ஜாக்கிரதை" என அவள் அவனைச் சந்தித்தே ஆகவேண்டும் எனச் சொல்லிவிட்டார் பாரதி. அவள் சொல்லாமலேயே அந்த தகவல் கலைவாணி வரை எட்டி இருந்தது.


உடனே மகளைக் கிளம்பச் சொல்லி பிடிவாதத்தால் இறங்கினார் அவர். அவள் இப்படி நடந்துகொண்டால், அந்த திருமணம் தடை பட்டுவிடுமோ என்ற பயம் அவருக்கு.


அன்னையின் பிடிவாதம் அவள் அறிந்ததே. இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டும் அவள் மறுத்துப் பேசினால் அதன் பின் அவரை எதிர்கொள்வது கடினம் என்பதும் புரியவே, திலீப்பை சந்திக்க ஒப்புக்கொண்டாள் அவள்.


அதன்பிறகு கொஞ்சமும் நேரம் கடத்த விரும்பாமல், அவனுடைய வீட்டிற்கும் அவளுடைய வீட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஆடம்பரமான ஒரு நட்சத்திர விடுதிக்கு அன்று மாலையே அவளை வரச்சொல்லி குறுந்தகவல் அனுப்பியிருந்தான் திலீப்.


வசுவிற்கு தகவல் அனுப்பியதுமே தீபனுக்கும் அதனைத் தெரியப்படுத்தியவன், அவனைக் கட்டாயம் வருமாறு வற்புறுத்த, "வரேன் பட் நீ சொன்ன டைம்க்கு ஒரு ஒன் ஹவர் பொறுத்துத்தான்; தட் இஸ் நீ வசு கிட்ட பேசி முடிச்ச பிறகு நான் வந்து டின்னருக்கு ஜாயின் பண்ணிக்கறேன் ரைட்" என்ற நிபந்தனையுடன் அங்கே வருவதற்கு ஒப்புக்கொண்டான் தீபன்.


***


அவன் சொன்ன நேரத்திற்கு அந்த நட்சத்திர விடுதிக்குள் நுழைந்த வசு கண்களால் திலீப்பை தேட, அவன் அங்கே தென்படவில்லை.


ஆனால் அங்கே சூழ்ந்திருக்கும் ஆடம்பரத்தையும், சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பணியாளர்களையும் ஆங்காங்கே கண்ணில் படும் அயல்நாட்டவரையும் கண்டு அவளுக்குக் கொஞ்சம் மிரட்சி ஏற்பட, அதனைப் புறந்தள்ளி நெடிய மூச்செடுத்து தன்னை சமன் செய்துகொண்டவளாக, வரவேற்பு பகுதியில் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து உட்கார்ந்தாள் வசு.


சில நிமிடங்களிலேயே அங்கே நுழைந்த திலீப், அங்கே அடர்நீல நிறத்தில் பூக்களால் எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்ட வெள்ளை நிற குர்த்தாயும், அதற்குத் தகுந்த அடர்நீல பாட்டியாலா பேண்ட் மற்றும் துப்பட்டா அணிந்து, வெகு எளிய ஒப்பனையுடன் ஓவியம் போன்று உட்கார்ந்திருந்த வசுவை பார்த்தவன், அவளது அழகில் தன்னை தொலைத்தவனாக அவளை நோக்கி வந்தான்.


அவன் அங்கே வருவதைக் கவனித்து, அவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல் வலிய வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அவள் எழுந்து நிற்க, "ஹை வசு! ஹோப் யு ஆர் டூயிங் வெல்" என்றவன், "வா! டேபிள் புக் பண்ணியிருக்கேன். அங்கே போய் பேசலாம்." என்று சொல்லிவிட்டு திலீப் நடக்கத்துவங்கவும், அவனை பின் தொடர்ந்து போனாள் வசு.


***


திலீப் அழைத்ததன் பேரில் அங்கே செல்வதற்காகத் தயாராகி, வரவேற்பறைக்கு வந்த தீபன், சாத்விகாவை மடியில் அமர்த்தியவாறு உட்கார்ந்து எதோ ஒரு கார்ட்டூன் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த அருணாவிடம்,


"மா! முக்கியமான வேலையா போறேன்! நைட் வர லேட் ஆனாலும் ஆகும்! டின்னர் கூட அங்கேயே சாப்பிட்டுடுவேன்; எனக்காக வெயிட் பண்ண வேணாம்!" என்று சொல்ல, அவன் வெளியே செல்ல தயாராகி இருப்பது புரியவும் பாட்டியின் மடியிலிருந்து குதித்து தாய்மாமனை நோக்கி ஓடி வந்தவள், அவனது கால்களைக் கட்டிக்கொண்டு, "நானும் டாடா! பை..பை..க்கு வதுவேன்! மாமா தூக்கி!" என்றவாறு தனது கைகளை விரித்தாள் சாத்விகா!


இத்தனை நாட்கள் வரை இப்படி ஒரு சூழல் அவனுக்குப் பழக்கம் இல்லாத காரணத்தால், எப்பொழுதும் போல பேசியவன், அந்த குட்டியின் செய்கையில் அதிர்ந்தவனாக, அன்னையைப் பரிதாபமாகப் பார்த்தான் தீபன்.


"கண்ணு மாமா ஏதோ வேலையா போறாங்க! உன்னை நாளைக்கு டாட்டா கூட்டிட்டு போவாங்க!" என அருணா அவளை இதமாகத் தடுக்க முற்பட, அழுவது போல் உதட்டைப் பிதுக்கினாள் சாத்விகா.


"செல்லம் கொடுத்து பிள்ளையை நல்லா கெடுத்து வெச்சிருக்கா உன் தங்கை. இவ அம்மா காரிய செக்கப்புக்கு வேற கூட்டிட்டு போகணும். இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நாள் நல்ல இருக்குனு டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன்; அங்க போய் இவளை எப்படி சமாளிக்கபோறோமோன்னு ஏற்கனவே நான் பயந்துட்டே இருக்கேன். இந்த குட்டி என்னடான்னா இங்கேயே பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாளே" என அருணா மெல்லிய குரலில் முணுமுணுக்க, அது புரிந்தார் போன்று குழந்தை மேலும் அழுகையைக் கூட்டவும் ஒரு நொடி யோசித்தவன், "ப்ச்! உனக்கு என்ன; இப்ப என் கூட வரணும் அவ்வளவுதானே!" என மருமகளுக்காக இறங்கி வந்தான் தீபன்.


அவனுடைய பேண்ட்டை இறுகப் பிடித்து முகம் சிவக்க நின்றிருந்தவள் 'ம்' என்றவாறு தலை அசைக்க, சின்னவளின் பாவனையைக் கண்டு சிரித்தவன், "நீங்க சரிகாவைப் பத்திரமா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வாங்க!


இந்த பொம்மு குட்டியை நான் பார்த்துக்கறேன்! சீக்கிரம் இவளை ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க!" என்றவாறு இருக்கையில் போய் அமர்ந்தான் தீபன்.


அவனது பொறுமையைக் கண்டு அதிசயித்தவராகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மகளுடைய அறை நோக்கி போனார் அருணா.


***


உணவகத்துக்குள் நுழைந்தது முதல், "உனக்கு என்ன ஃபுட் பிடிக்கும்; வெஜ் ஆர் நான்வெஜ்" என் திலீப் கேட்க, "வெஜ்! அதுவும் லைட்டா போதும்" என்றவள் ஒரு நொடி யோசித்து, "உங்களுக்கு நான்வெஜ் பிடிக்கும்னா சாப்பிடுங்க; எனக்கு ஹெசிட்டேஷன் கிடையாது" என்றாள் வசு.


அதிகமாக அவள் பேசிய வார்த்தைகளே அவ்வளவுதான். அதன் பிறகு அவன் என்ன கேட்டாலும் ஒரே வார்த்தையில் பதில், சமயத்தில் அதுவுமில்லாமல், 'ம்' 'ம்ஹும்' 'ஓ'.. மேலும் அவன் பொறுமையைச் சோதிப்பதுபோல் வெறும் தலையசைப்பு மட்டுமே என வசு திலீப்பை ஒரு வழி செய்துகொண்டிருந்தாள்.


இதற்கே இந்த நிலை என்றிருக்க, அவளுக்குத் தன்னை பிடித்திருக்கிறதா எனக் கேட்க வெகு தயக்கமாக இருந்தது திலீப்பிற்கு.


தீபன் சொன்னதை காட்டிலும் மேலும் சில நிமிடங்கள் கடந்திருக்க, 'எப்படா வருவ மச்சான்' என மனத்திற்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தான் திலீப்.


அவன் முகத்தை நேராகப் பார்க்கவும் தயங்கியவளாக, அங்கே அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியையே பார்த்துக்கொண்டிருந்தவள், தீபன் உபயோகிக்கும் 'பிரான்ஸ் கேரன் பௌரே' வாசனைத் திரவியத்தின் மணம் நாசியைத் துளைக்க, அனிச்சையாகப் பின்புறம் திரும்பினாள் வசு.


அவனுடைய ஆளுமையான தோற்றத்தை மேலும் எடுத்துக்காட்டும்படியான நீல நிற ஜீன்ஸ் மற்றும் கருப்பு நிறத்தில் பச்சை கோடுகள் போட்ட டீ-ஷர்ட் அணிந்து சாத்விகாவின் உயரத்துக்கு வளைந்து அவளது கையை பிடித்துக்கொண்டு அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த தீபன் அவளது விழிகள் முழுதும் நிறைந்துபோனான்.


மெத்து மெத்தென்ற ரோஜாவைப்போன்ற தோற்றத்தில், அன்னம் போன்று ஆடி அசைந்து அவனது கையை பிடித்து நடந்துவரும் அந்த குழந்தையைப் பார்த்தவள் மேலும் அதிசயித்துப் போனாள் வசு.


ஆனால் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல், "ஹை கைஸ்! சாரி பார் தி டிலே!" என்றவாறு அவர்களுக்கு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவன் சாத்விகாவை மடியில் அமர்த்திக்கொண்டு, அங்கே இருந்த பணியாளரை அழைத்து, "ஒன் பேபி சீட் ப்ளீஸ்!" என்று சொல்ல,


"ஹேய்! வாட் அ சர்ப்ரைஸ்! உன் சிஸ்டேரோட பேபியா! லவ்லி டா மச்சான்!" என்றான் திலீப் உண்மையான மகிழ்ச்சியுடன்.


"எஸ் டா! நானும் வருவேன்னு ஒரு அடம்!" என்றான் தீபன் பெருமையுடன்.


அந்த குழந்தையைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டதைக் கேட்டதும் அவளுடைய முகம் பிரகாசிக்க, குழந்தையின் கன்னத்தை வருடியவள், கையை நீட்டி, "என் கிட்ட வருவீங்களா செல்லம்?" என வெகு எதிர்பார்ப்புடன் கேட்க, குழந்தை தீபனின் முகத்தை பார்க்கவும், மெல்லிய முறுவலுடன், சம்மதமாகத் தலை அசைத்தவன் குழந்தையைப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்த, அவளைத் தூக்கி தன் மடியில் உட்கார வைத்துக்கொண்ட வசு, "பாப்பா பேர் என்ன?" என்று கேட்க, "சாத்விக்கா!" என்றாள் குழந்தை கொஞ்சும் மழலையில்.


"வாவ்! சாத்விகான்னா நீங்க ரொம்ப மென்மையானவங்களா! ஸோ... நைஸ்!" என்றாள் வசு அவளைப் பாராட்டுவதைப் போல.


அதற்குள் குழந்தைகள் உட்காருவதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த உயரமான இருக்கையை அங்கே கொண்டுவந்து வைத்து அவளை அதில் அமரவைத்தார் அங்கே பணியிலிருந்த பெண் ஒருவர்.


அப்பொழுது அவளுக்கு அருகில் மேசை மேல் வைத்திருந்த அவளுடைய வண்டியின் சாவிக்கொத்தில் குழந்தையின் பார்வை செல்ல, "ஹாய்! எலிபேன்த்!" என்றவாறு அந்த சாவிக்கொத்தைக் கையில் எடுத்து, அதில் மாட்டப்பட்டிருந்த வெண்கலத்தால் ஆன யானையை தன கரங்களால் வருடினாள் அந்த குட்டி.


"ம்! எலிபாண்ட்னா யானை தெரியுமா குட்டி?" என வசு கேட்க, அவளுடைய குதூகலத்தைப் பார்த்து 'இதுவரை அப்படி இருந்தவளா இவள்?' என திகைத்துப்போனவனாக, "பார்றா! எல்லாத்துக்கும் மீனிங் சொல்றாங்க இந்த ஆன்டி! என் பேருக்கு என்ன மீனிங் சொல்ல சொல்லு பேபி பார்க்கலாம்!" என இயல்பாக அவர்களுடைய பேச்சுக்குள் தன்னை நுழைத்துக்கொண்டான் திலீப்.


"ஆன்டி! என்ன மீனிங்!" எனக் குழந்தை எதார்த்தமாகக் கேட்க, ஒரு நொடி திகைத்து யோசித்தவள், "திலீபன்னு ஒரு பெரிய ராஜா இருந்தார்; அதுதான் எனக்குத் தெரியும் குட்டிமா" என்றாள் வசு.


"அப்படினா தீபன் மாமாக்கு என்ன மீனிங்!" என்று விடாமல் அவள் கேள்வி கேட்க, பேசிக்கொண்டே யாரும் அறியாவண்ணம் குழந்தையின் கையிலிருந்த சாவியை மென்மையாக வாங்கி அதனை தன் துப்பட்டாவில் முடிந்துகொண்டவள், "ம்! விளக்கு! அதாவது லாம்ப்! அதுல இருந்து வளரும் பிரைட் லைட்! வெளிச்சம்!" என்றாள் சகஜமாக.


முகம் பிரகாசிக்கக் கண்கள் மின்ன அவள் சொன்ன விளக்கம் புரிந்ததோ இல்லையோ ஆனால் அவள் கேட்பதற்கெல்லாம் அலுக்காமல் வசு பதில் கொடுக்கவும் சாத்விகாவின் உற்சாகம் மேலோங்க, "உங்க நேம் என்ன மீனிங்!" என்று குழந்தை கேட்க, "ம்! கோல்ட் மாதிரி ப்ரேஷியஸ் ஃப்ரென்ட்; அப்படினு அர்த்தம்" என்றாள் வசு கொஞ்சமும் யோசிக்காமல்.


"வாட்! வசுந்தரான்னா பூமி இல்ல! நீ வேற என்னவோ சொல்றயே!" என திலீப் இடைப்புக, அவனை தீபன் பார்த்த பார்வையில், "இல்ல அது பாட்டி காலத்துப் பேரா இருக்கேன்னு கூகுள் சர்ச் பண்ணேன்!" என்றவாறு வசுவின் முகத்தை அவன் பார்க்க, கலவரமாகி அவள் முகம் இருண்டு போய் இருக்க, "சாரி! எங்க பாட்டி பேரும் வசுந்தராதான்; அதைத்தான் அப்படிச் சொன்னேன்!" என விளக்கினான் திலீப், தான் 'பாட்டி காலத்துப் பெயர்' என்று சொன்னதால்தான் அவள் அப்படி இருக்கிறாளோ என எண்ணி.


ஆனால் அவனுக்கு மட்டுமே அவள் சொன்ன அர்த்தத்தை சுமந்திருக்கும் பெயர் 'வசுமித்ரா!" என்று புரிந்ததால் அவளை ஆழமாகப் பார்த்தான் தீபன் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காண்பிக்காமல்.


***


இருளடைந்த காட்டின் பாதையில் பயணிக்கிறேன்...


நெருஞ்சி முட்கள் சிதறிக்கிடக்கும் ஒரு வழி பாதையோ...


புதர்களுக்குள் ஊளையிடும் நரிகளின் ஓலமோ...


சருகுகளில் சலசலக்கும் அரவத்தின் அரவமோ...


கலவரப்படுத்தவில்லை என்னை!


தூரத்தில் தெரியும் தீபமாய்...


பிரகாசிக்கும் தீபத்தின் சுடராய் நீயும்!


உன் வெளிச்சத்தை நோக்கியே என் பயணமும் இருபதால்!


தீபத்தின் வெம்மையில் வாடிப்போகும் அனிச்சமாய் இல்லாமல்...


நீயாகிய தீபத்தின் சுடரை தாங்கியிருக்கும் திரி நானாக இருக்கத் துணிந்ததால்...


பூவும் நானும் வேறுதான்!

Recent Posts

See All
Poovum Naanum veru-Epilogue

இதழ்-36 கடைக்காப்பு அத்தியாயம்! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும்...

 
 
 
Poovum Naanum Veru-35

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத்...

 
 
 
Poovum Naanum Veru-34

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான்...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page