top of page

Poovum Naanum Veru - 22

இதழ்-22


சரிகா அரைகுறையாகச் சொன்ன அடையாளத்தை வைத்து ஜவஹருடைய பண்ணைவீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் சுற்றித்திரிந்த தீபன், நேரத்தைக் கடத்த விரும்பாமல் வசந்தின் வீட்டிற்கே சென்றான் அவனைத் தேடி.


அங்கே அவன் இல்லாமல் போனாலும், அவனது அலுவலக முகவரி கிடைக்கவும், விடாமல் அவனைத் தேடி அங்கேயும் சென்றான் தீபன்.


சேலம் புறநகர்ப் பகுதியிலிருந்த அந்த முகவரியைக் கண்டுபிடித்து, அந்த அலுவலகத்திற்குள்ளே சென்று பார்க்க, ஒரு அலுவலகத்திற்கான எந்த ஒரு லட்சணமும் அங்கே இல்லை.


பெயருக்கென்று ஒருவன் வரவேற்பு பகுதியில் அமர்ந்திருக்க, அங்கே போடப்பட்டிருந்த விலை உயர்ந்த சோபா, மேசை என அனைத்திலும் தூசி மண்டியிருக்க, எங்குப் பார்த்தாலும் சிகரெட் துண்டுகளும் சாம்பலுமாக அலங்கோலமாக இருந்தது அந்த இடம்.


வெளிநாட்டு மதுபான பாட்டில்களும், பியர் டின்களும் கூட பஞ்சமில்லாமல் உருண்டு கிடக்க, அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டுச் சுத்தப்படுத்தப்படாமல் கிடந்த ஹோட்டல் உணவுகளின் துர்நாற்றமும், சிகரெட் மற்றும் மதுவின் கலவையான வாடையும் சேர்த்து வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது தீபனுக்கு.


ஊரை நம்ப வைக்க அப்படி ஒரு போலியான அலுவலகம் போலும். மற்றபடி அங்கே அவர்கள் உருப்படியாக எந்த வேலையும் செய்யவில்லை என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்துபோனது.


அங்கே இருந்தவனை முதலில் மென்மையாகக் கேட்கச் சரியான பதில் கிடைக்காமல் போகவும், தீபன் அவனைப் புரட்டி எடுக்கவும், "தம்பி! தம்பி! அடிக்காதிங்க தம்பி!" என்றவன், "வாராவாரம் சனி ஞாயிறுன்னாக்க மட்டும்தான் ஜவஹர் தம்பி; அவங்க ஃப்ரெண்டுங்க எல்லாரும் இங்க வருவாங்க!


சமயத்துல இங்க வராம நேரா பண்ணை வீட்டுக்கே போனாலும் போயிருவாங்க தம்பி!


நான் பத்துநாளா ஊருக்கு போயிட்டு நேத்துதான் வந்தேன்!


இப்பதான் உள்ள நுழையறேன்! பாருங்க இன்னும் சுத்தம்கூட செய்யல!" என அவன் சொல்ல, அதன் பின்புதான் அவன் மூலமாக தீபனுக்கு தெரிந்தது அந்த பகுதியில் பல இடங்களை புஷ்பநாதன் வளைத்துபோட்டிருப்பது.


அதன்பின் அந்த அலுவலகத்திலிருந்து சற்று தள்ளி இருந்த அந்த பண்ணை வீட்டின் முகவரியை அவனிடமிருந்து தெரிந்துகொண்டு, அங்கே சென்றான் தீபன்.


அங்கேயிருந்த காவலாளியிடமும் சண்டையிட்டு, அவனைத் தாக்கிவிட்டுத்தான் அவனால் உள்ளேயே செல்ல முடிந்தது.


அங்கே வரவேற்பறையிலேயே போதை மயக்கத்தில் அலங்கோலமாக சரிந்துகிடந்த மூவரை பார்த்ததும், அவனுக்கு இருந்த கோபத்தில் அவர்களை அடித்து நொறுக்க, ஒருவன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருடைய மகன்; மற்றொருவன் அந்த பகுதியின் ரியல் எஸ்டேட் அதிபரின் மகன்; இன்னும் ஒருவன் புஷ்பநாதன் சார்ந்திருக்கும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் என்பது அவனுக்குத் தெரியவந்தது.


அங்கே வசந்தோ அல்லது ஜவஹரோ இல்லை என்பதும் தெரிந்தது.


எதோ யோசனை தோன்றவும், தீபன் அவர்களுடைய கைப்பேசியைப் பிடுங்கிப் பார்க்க, அவற்றிலிருந்த பல காணொளிகள், அவனை நிலைகுலையச் செய்தது.


சரிகாவை மயக்கநிலையில் வைத்து எடுத்த காணொளி அதில் இல்லை என்றாலும், பல பெண்களை அதேபோன்றே மயக்கத்தில் வைத்தோ அல்லது பலவந்தப் படுத்தியோ எடுக்கப்பட்ட காணொளிகள் அதில் நிறைய இருந்தன.


ஒவ்வொன்றும் அந்த பெண்களின் பெயருடன் தனித்தனி போல்டர்களாக சேமிக்கப்பட்டிருக்கவும், அவற்றை அவர்கள் பலருக்கு பகிர்வதும் புரியவும், அவர்களை அப்படியே விடவும் அவனுக்கு மனம் வரவில்லை.


முதலில், சரிகாவை பாதிக்கும் அந்த காணொளியைக் கண்டுபிடித்து அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே அவன் அங்கே வந்திருந்தானே தவிர, காவல் துறைக்குச் சென்று இந்த பிரச்சினையை ஊரறிய செய்ய அவன் கொஞ்சமும் விரும்பவில்லை.


ஆனால் இதை இப்படியே மூடி மறைக்கும் பட்சத்தில், இன்னும் பல பெண்கள் இதில் சிக்கிப் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும் என அவனுடைய மனசாட்சி அவனைச் சுட, அந்த கைப்பேசிகளை எடுத்துக்கொண்டு, அவன் காவல் நிலையம் நோக்கிச் சென்றான் தீபன்.


அந்த பகுதி காவல் நிலையத்தில் அந்த புகாரை அவர்கள் ஏற்க மறுக்க, வசந்த் குடும்பம் குடியிருக்கும் பகுதியிலிருக்கும் காவல்நிலையத்திற்குச் சென்று, அந்த புகாரைப் பதிவுசெய்தான் தீபன்.


அதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் யார் யார் என அறியாத நிலையில் அவர்கள் அந்த புகார்களை ஏற்றுக்கொண்டு விட, சரிகா அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு திரும்ப வந்தான் அவன்.


அங்கே நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் கவனித்து, அவர்கள் இருக்கும் சூழல் புரியவும், அவர்களுக்கு ஆறுதலாக என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்துகொண்டிருந்தான் சந்தோஷ்.


அவன் ஒருவன் அங்கே இருக்கும் துணிவில்தான் தீபனால் வசந்தை தேடி வெளியே செல்லவே முடிந்தது.


தீபன் அங்கே இல்லாத சமயம் வசந்துடைய அம்மாவும் தங்கையும் அங்கே வந்துவிட்டுப் போனதாகச் சொன்னார் அருணா. 'ஒன்றுமே நடக்காததுபோல் எப்படி அவர்களால் இதுபோன்று இயல்பாக நடந்துகொள்ள முடிகிறது!' எனக் கோபம்தான் வந்தது அவனுக்கு.


இடையே காவல்துறையினர் வந்து சரிகாவிடம் விசாரணை செய்யவும், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மிகவும் திணறியபடி அவள் பதில் சொல்ல, வேதனைக்கு மேல் வேதனையாக ஒவ்வொரு நிமிடத்தைக் கடப்பதும் ஒரு யுகத்தைக் கடப்பது போல் மிக மிகக் கடினமாக இருந்தது அனைவருக்கும்.


ஒருவாறாக அவர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக மோசமாகத் தொடங்கிய அன்றைய நாள் இரவை நெருங்கிக்கொண்டிருக்கும் சமயம், காவல் நிலையத்திலிருந்து தொலைப்பேசி மூலம் தீபனை அழைத்து, அந்த வழக்கு சம்பந்தமாகக் குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டதாக சொன்னவர்கள், அவர்களை அடையாளம் காட்டுவதற்காக அவனை அங்கே நேரில் வருமாறு அவர்கள் கூப்பிட, தனியாகவே காவல் நிலையம் நோக்கிச் சென்றான் தீபன்.


ஆனால் அங்கே குற்றவாளிகள் என அவர்கள் காட்டிய ஐந்துபேரையும் பார்த்து அதிர்ந்துதான்போனான் அவன்.


ஏனென்றால் அவர்களில் ஒருவன் கூட அன்று காலை அந்த பண்ணை வீட்டிலிருந்தவர்களோ, வசந்தோ அல்லது ஜவஹரோ இல்லை. முற்றிலும் புதியவர்களாக நின்றுகொண்டிருந்தனர்.


அந்த கைப்பேசிகள் அவர்களுடையதுதான் என அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என அங்கே பணியிலிருந்த ஆய்வாளர் சொல்லவும், எப்படியும் கைப்பேசியில் பதிவாகி இருக்கும் தகவல்களை வைத்து அவர்களுடையது இல்லை என அவன் நிரூபிக்க இயலுக்கும் என்ற எண்ணத்தில், தீபன் அந்த கைப்பேசிகளைக் காண்பிக்கச்சொல்லவும், அந்த கைப்பேசிகள் அனைத்தும் கூட முற்றிலும் வேறாக மாற்றப்பட்டிருந்தது.


அங்கே அனைவரும் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் விலைபோயிருப்பது புரியவும் மனதில் கோபத் தீ கொழுந்துவிட்டு எரிய, "நீங்க எல்லாரும் மனுஷங்கதானா? உங்களுக்கு அக்கா; தங்கச்சி; மகள்னு யாருமே இல்லையா? வெக்கமா இல்ல" என தீபன் ஆத்திரத்துடன் அங்கே பணியிலிருந்த ஆய்வாளரின் சட்டையைப் பிடிக்க,


அவனது கையை தட்டிவிட்டவர், "இங்க பார்: நாங்க நல்லா விசாரிச்சிட்டோம்; மினிஸ்டர் பையன் மேலயும் அவரோட ஃப்ரெண்ட்ஸ் மேலயும் மார்னிங் நீ கொடுத்த கம்பளைண்ட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்ல;


நீ கொண்டுவந்த செல்போன்ஸ் எல்லாமே இவங்களோடதுதான்.


அதுல நீ சொன்ன மாதிரி எந்த வீடியோ எவிடென்சும் இல்ல.


அதோட இல்லாம காலையில செக்யூரிட்டியை தாக்கிட்டு; நீ மினிஸ்டர் வீட்டுக்குள்ள போய் அவரோட கெஸ்ட் எல்லாரையும் அடிச்சிருக்க; அதுக்கு எங்க கிட்ட ஆதாரம் இருக்கு!


அவங்க கம்பளைண்ட் வேற கொடுத்திருக்காங்க!


இப்ப கூட ட்யூட்டில இருக்கற ஆபீசரை அடிக்க வந்தேன்னு சொல்லி என்னால உன் மேல் கேஸ் பைல் பண்ண முடியும்; பட் நான் இதைச் செய்ய விரும்பல!


அதோட ஒரு விஷயம் உனக்குத் தெரியுமா; இதுல பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள்னு நீ ஒரு லிஸ்ட் போட்டு குடுத்தியே; அதுல ஒருத்தங்க கூட அதை உண்மைன்னு சொல்ல தயாரா இல்ல:


பேசாம இந்த கேசை வாபஸ் வாங்கிட்டு போயிட்டே இரு; அவங்க உன் பேரில் கொடுத்திருக்கும் கேஸையும் வாபஸ் வாங்க சொல்றேன்; அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது" என அவர் மிரட்டுவதுபோல் சொல்லவும், "ப்ச்! உங்க கிட்ட எனக்கு என்ன பேச்சு!


என்னால இந்த கேஸை வாபஸ் வாங்க முடியாது!


நான் மீடியாவுக்கு போய் இந்த விஷயத்தை டீல் பண்ணிக்கறேன்!" எனச் சவாலாகச் சொல்லிவிட்டு ஒரு நொடியும் தாமதிக்காமல் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த தீபன் தன் பைக்கில் ஏறி மருத்துவமனை நோக்கிக் கிளம்பினான்.


அவன் அந்த கைப்பேசிகளை அவர்களிடமிருந்து கைப்பற்றி எடுத்துவரும் போதே, அவனது கைப்பேசியிலிருந்து புதிதாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அந்த 'கூகுள் அக்கௌண்ட்'டிற்கு, அவற்றிலிருந்த அனைத்து காணொளிகள் மற்றும் தகவல்களைப் பதிவேற்றம் செய்திருந்தான்.


அதன் அடிப்படையிலேயே காவல்நிலையத்தில் அவன் அவ்வாறு பேசிவிட்டு வந்தது.


ஆனால் தீபன் சிறிது தூரம் சென்றதும் அவனது வண்டியைத் தடுத்து நிறுத்தியபடி வந்து நின்ற ஸ்கார்பியோவிலிருந்து வேகமாகக் குதித்து இறங்கிய சிலர், ஒரு நொடி சிந்திக்கக் கூட அவனுக்கு நேரம் கொடுக்காமல், அவனை அடித்து நொறுக்க, ஒருவன் அவனுடைய பைக்கில் பெட்ரோல் ஊற்றி அதனை எரித்தான்.


அவனது கைப்பேசியையும் அவனிடமிருந்து பறித்து, அதையும் எரிந்துகொண்டிருக்கும் பைக்கில் வீசினான் மற்றொருவன்.


அவர்களிடம் எதிர்த்து நிற்க இயலாமல் துவண்டுபோய் கொஞ்சம் கொஞ்சமாக அவன் செயலிழக்கவும், அவனை அவர்கள் வந்த அந்த வாகனத்திலேயே தூக்கிப் போட்டுக்கொள்ள, அதிவேகமாக அங்கிருந்து பறந்தது அந்த வாகனம்.


அந்த இரவு நேரத்தில், அதுவும் அவன் இருந்த நிலைமையில், அவனால் அந்த வாகனம் செல்லும் திசையைக்கூட கணிக்க முடியவில்லை.


***


அவன் ஜவஹரின் நண்பர்களிடமிருந்து கைபற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த கைப்பைசிகள் யாவும் அவர்களிடமே மறுபடியும் வந்திருக்க, அவற்றிலிருந்த தகவல்கள் யாவும் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது அவர்களுக்கு தெரிந்துபோயிருந்தது.


எவ்வளவு முயன்றும் அதன் ஐபி அட்ரஸ் மற்றும் அதன் பாஸ் வேர்ட் எதையுமே அவர்களால் நெருங்க முடியவில்லை.


அதை பற்றி தெரிந்து கொண்டு, அந்த ஆதாரங்களை அழிக்கவே அவர்கள் தீபனை அங்கே கடத்தி வந்தது.


எங்கோ ஒரு இருட்டு அறையில் இரண்டு நாட்கள் வைத்திருந்து அடித்து துன்புறுத்தியும் அவனிடமிருந்து ஒரு வார்த்தையை கூட வாங்க முடியவில்லை ஜவஹரின் அடியாட்களால்.


ஏற்காட்டில் உள்ள ஒரு ரெசார்ட்டில் இரண்டு நாட்கள் பதுங்கியிருந்தவர்கள், பொறுக்க முடியாமல் கிளம்பி வந்துவிட்டனர் தீபனை விசாரிக்க.


மூன்றாம் நாள் இரவு, அவன் பசியும் உறக்கமும் மயக்கமும் கலந்த நிலையில் இருக்க வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து ஒருவன் அவன்மீது ஊற்றவும், கொஞ்சம் சுரணை வந்து அவன் கண் விழித்துப் பார்க்க, அடியாட்கள் புடை சூழ அவன் எதிரே இரண்டு புதியவர்கள் நின்றிருந்தனர்.


மிகவும் முயன்று கையை ஊன்றி அவன் எழுந்திருக்க, அது முடியாமல் அவன் மறுபடியும் கீழே சரியவும், தீபனை நெருங்கி வந்தான் அவன். வசந்த்!


"ப்ச்! என்னை பார்க்கணும்னு துடிச்சிட்டு இருந்திருப்ப இல்ல! நல்லா பார்த்துக்கோ நான் தான் வசந்த்! இவன் ஜவஹர்!" என எகத்தாளமாகச் சொன்னவன்; "உன் தங்கை; செத்துடுவான்னு நினைச்சோம்; அவளுக்கு ஆயுசு கெட்டி போலிருக்கு; இன்னும் சாகல!


அப்படியே பொழைச்சு வந்தாலும் அவ இதை பத்தி வெளியில சொல்ல மாட்டான்னு நினைச்சோம்!


முதல் தடவையா நாங்க நினைச்ச மாதிரி நடக்கல!" என அடுக்கிக்கொண்டே போனவன், "இதையே ஃபுல் டைமா செஞ்சிட்டு இருக்கோம்!


ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல; ஸோ ஃபார் நூத்தி என்பது பொண்ணுங்க; உன் தங்கையோட சேர்த்து நூத்தி எண்பத்து ஒண்ணு!


அதுவும் இதுல எத்தனை பேர் ஹௌஸ் வைவ்ஸ்னு தெரியுமா உனக்கு? ஒரு டாக்டரும் இதில் அடக்கம்!


இதுல தற்கொலை செய்துக்கிட்டவளுங்க மட்டும்... ம்.." என யோசிக்க, "எய்ட்!" என ஜவஹர் சொல்ல, "ம்ஹூம்! நயன்; அந்த நிரஞ்சனாவை விட்டுட்டியே" என்ற வசந்த், "இதைப் பத்தியெல்லாம் நாங்கள் கவலையே பட்றதில்ல தீ...பன்;


ஆமாம்! உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு தைரியம் வந்தது! போலீஸ்கெல்லாம் போயிருக்க!?


உன் தங்கையோட லேட்டஸ்ட் மூவிய நெட்ல ரிலீஸ் பண்ணா உனக்கு ஓகே வா" என அவன் எள்ளலாக கேட்க,


'தூ!' என அவனது முகத்தில் உமிழ்ந்தவன், "உனக்கும் ஒரு தங்கை இருக்கா இல்ல; அவளோட மூவிய இப்படி ரிலீஸ் பண்ணுவியா யூ ***" என தீபன் கேட்க, அதை அப்படியே துடைத்தவன்,


"எங்க! ஒருத்தன் கூப்பிட்டானு சொல்லி; கொஞ்சமும் யோசிக்காம அவன் பின்னால போக சொல்லு பார்ப்போம் அவள! அவ போக மாட்டா!


அப்படி போனான்னா அவளுக்கும் இதே கதிதான்! யாராலயும் தடுக்க முடியாது" எனக் கொஞ்சமும் வெட்கமில்லாமல் சொன்னவன், "உன் தங்கைக்குக் கொஞ்சம் கூடவா அறிவு இல்ல?


தெரியாமத்தான் கேக்கறேன் தீபன்; நீயும் ஆம்பளதான; உருப்படியா வேலை வெட்டி இருக்கறவன் யாராவது பொண்ணுங்க கிட்ட கடலை போட்டுட்டு டயம் வேஸ்ட் பண்ணுவானா?


கொஞ்சம் சிரிச்சு பேசினா போதும்; அதுவும் நீ அழகா இருக்க; உன் கண்ணு அழகா இருக்கு; மூக்கு அழகா இருக்கு; பிளா... பிளா...


இன்னும் கீழ இறங்கி செக்சியா பேசினா கூட அதை ரசிச்சு ரசிச்சு கேட்டுகிட்டே இருந்தால்; நாங்களும்தான் என்ன செய்வோம்;


அவங்களோட ரசனையை பணமா மாத்தறோம்; தட்ஸ் இட்!


சட்டுனு உன்னால அப்படியெல்லாம் போய் ஒரு பொண்ணுகிட்ட பேசிட முடியுமா?


இதெல்லாம் ஒரு கலை தீபன்! ரொம்ப முயற்சி செஞ்சு கத்துகிட்ட ஒரு கலை!


ஒரு காஸ்டலி பைக் இருந்தா போதும்;


ஒரு லேட்டஸ்ட் மாடல் போன் இருந்தா போதும்; பொண்ணுங்கள ஈஸியா அட்ராக்ட் பண்ண முடியும் தெரியுமா உனக்கு;


மிடில் க்ளாஸ் பசங்கள இந்த பொண்ணுங்க திரும்பி கூட பார்க்கமாட்டாளுங்க தீபன்.


இப்பல்லாம் ஸ்கூலேயே ஸ்டார்ட் பண்ணிடறாங்க தெரியுமா?


போனோகிராபி பார்க்கலன்னா; கேர்ள் ப்ரெண்ட்ஸ் இல்லன்னா அவன் ஆம்பளையே இல்லன்னு சொல்ற ஒரு கூட்டமே இருக்கு; காலேஜ்ல படிக்கறவன்தானே இதெல்லாம் உனக்குத் தெரியாதா என்ன?


இந்த ஜவஹர் மாதிரி ஒரு ஃப்ரெண்ட் ஒரே ஒரு ஃப்ரெண்ட் இருந்தா போதும்; பார்த்த இல்ல; நூத்தி எண்பத்தி ஒண்ணு ப்ளஸ்... ப்ளஸ்... முடிவே இல்லாம போயிட்டே இருக்கும்" வெறிபிடித்துப் பேசிக்கொண்டே போனான் வசந்த்.


"இப்படியெல்லாம் பேசறியே உனக்குக் கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா!


இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்; எதுக்குடா பொண்ணுங்க உங்க பின்னால வரணும்?


நம்ம சொசைட்டிக்கு உபயோகமா என்னத்தடா செஞ்சு கிழிச்சீங்க?


வயசு கோளாறுல; ஹார்மோன்களோட தூண்டுதலில் நீங்க பேசற எல்லாத்தையும் நம்பி உங்க பின்னால வறவங்களையும்; கொஞ்சம் அன்பும் கவனிப்பும் கிடைக்காதான்னு ஏங்கறவங்களையும் உங்க சுயலாபத்துக்காக இப்படி யூஸ் பண்ணிக்கறீங்களே இதெல்லாம் உங்க சைக்கோத்தனம்;


நீங்கல்லாம் ஆம்பளையே இல்லடா; சைக்கோங்க!


நாலஞ்சு சைக்கோங்க ஒண்ணுகூடினா; இப்படித்தான் யோசிப்பீங்க; அதுவும் கேட்டதும் துட்டு கொடுக்கற அப்பனுங்க இருந்தால்; இதோ உன்னை மாதிரி ஒரு சைக்கோவை இவனை மாதிரி ஒரு சைக்கோ நல்லா யூஸ் பண்ணிப்பான்!


ஆண்மை தவறேல்னு பாரதியார் சொல்லியிருக்கார் தெரியுமா?


நான் அப்படிப்பட்ட உண்மையான ஆம்பள...டா!


உங்களுக்கு நரகம்னா என்னனு காட்டாம நான் சகமாட்டேன்! என்னை மிரட்டுற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க!


என்ன சொன்ன என் தங்கையோட வீடியோவை நெட்ல போடுவேன்னுதானே! போட்டுக்கோடா! எனக்கு அதைப் பத்தியெல்லாம் கவலை இல்ல!


என் தங்கையை எப்படி பாதுகாக்கணும்னு எனக்கு தெரியும்! இதனால ஒண்ணும் அவளோட கற்பு களங்கப்பட்டதா ஆகிடாது! எங்க மானமும் போயிடாது: எங்க வாழ்க்கையும் முடிஞ்சு போயிடாது!


இதை முக்கியமா ஞாபகத்துல வெச்சிட்டு எங்க பின்னாலயே எவனும் வரமாட்டன். அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சினை!


இந்த சொஸைட்டிய எப்படி ஃபேஸ் பண்ணனும்னு எனக்கு தெரியும்.


எத்தனையோ குற்றம் நடக்குது; அதுல இதுவும் ஒண்ணு!


தப்பு செய்யறவன்தான் பயப்படணுமே தவிர; பாதிக்கப்பட்டவன் ஏன் பயப்படணும்!


ஆனா இனிமேல் உங்களால ஒரு பொண்ணு கூட பாதிக்கப்படக் கூடாது! அதுக்கு நான் விடவும் மாட்டேன்!" என்றான் தீபன் நிமிர்வுடன்; கம்பீரமாக!


அவனது கொதிப்பான வார்த்தைகளில் எரிச்சலுற்றவன், ஆத்திரத்துடன் அவனுடைய வயிற்றில் ஓங்கி உதைத்தான் ஜவஹர்!


அவர்கள் முன்னால் கொஞ்சமும் கீழிறங்கிவிடக்கூடாது என்கிற உறுதியுடன் பொறுக்கமுடியாத அந்த வலியையும் பற்களை கடித்து தாங்கிக்கொண்டு, தன்னையும் மீமீமீறி தீபன், "ம்மா!" என்று முனகிச் சுருள அதைக்கூட தன் கைப்பேசியில் பதிவு செய்துகொண்டுதான் இருந்தான் வசந்த் மனதில் நிரம்பி வழியும் காழ்ப்புணர்ச்சியுடன்.


'சொன்னாலும்சொல்லாட்டியும் எங்கண்ணா சூப்பர் ஹீரோதான் தெரிஞ்சிக்கோ!' அன்று மித்ராவிடம் சரிகா சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் அவனது செவிகளில் எதிரொலித்தது!


ஆத்திரத்துடன், "ஜவா! இவனை இப்படியே போட்டுத் தள்ள சொல்லு! வரது வரட்டும் பார்த்துக்கலாம்!" என வசந்த் சொல்ல, "அறிவு கெட்ட முட்டாளுங்களா!" எனக் கர்ஜித்துக்கொண்டே அங்கே வந்தான் திவாகர்; ஜவஹருடைய அண்ணன்!


"ஏன்டா அறிவில்ல உங்களுக்கெல்லாம்; பிரச்சினையைக் காதும் காதும் வெச்ச மாதிரி முடிக்காம இப்படி இழுத்துவிட்டிருக்கீங்க" என அவன் காட்டமாகச் சொல்ல,


"என்ன சொல்றடா அண்ணா! இங்க இப்ப உனக்கு என்ன வேலை" என ஜவஹர் அவனிடம் பதிலுக்கு எகிற, கைப்பேசியில் டயல் செய்து ஸ்பீக்கரில் போட்டு தம்பியிடம் நீட்டினான் திவாகர், "டேய் அறிவுகெட்ட *** நாயே!


ஹோம் மினிஸ்டர் அதுவும் சென்ட்ரல் ஹோம் மினிஸ்டர் கூப்பிட்டு காச்சு காச்சுன்னு காச்சறாரு!


யாருடா அந்த தீபன்! அவனுக்கு எப்படிடா இவ்வளவு இன்ஃப்ளுயன்ஸ்! நீ எதையாவது செஞ்சு என் பதவிக்கு உலை வெச்சுடாத!


உங்கண்ணன் என்ன சொல்றானோ அப்படியே கேளு! எனக்கு தெரியாம எதையாவது செஞ்சு வெச்ச உன்னை கொன்னு புதைச்சிடுவேன் ஜாக்கிரதை" என ஆத்திரத்துடன் சொல்லிக்கொண்டே போனார் புஷ்பநாதன்.


அந்த உரையாடல் அனைத்தும் தெளிவாகச் செவிகளைத் தீண்ட, ஆச்சரியத்தில் திகைத்துப்போனான் தீபன்.

Recent Posts

See All
Poovum Naanum veru-Epilogue

இதழ்-36 கடைக்காப்பு அத்தியாயம்! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும்...

 
 
 
Poovum Naanum Veru-35

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத்...

 
 
 
Poovum Naanum Veru-34

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான்...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page