top of page

Poovum Naanum veru-28

இதழ்-28


"இது என்ன புது கதை?" என்றவர் மித்ராவை பார்த்து, "ஹேய் உங்க அப்பா எனக்கு எப்பவாவது ட்ரைவரா இருந்தாரா என்ன?" என ஏதும் தெரியாததுபோல் அதிசயிக்கும் குரலில் கேட்டார் பாரதி.


அவரது அந்த பாவனையில் சிரிப்பு வந்து விட அதை மிக முயன்று அடக்கிய மித்ரா, என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் இப்படியும் அப்படியும் தலையை ஆட்ட, "உங்க பொண்ணுக்கு இன்னும் ட்ரைனிங் பத்தல மேம்!" என தீபன் சத்தமாகச் சிரிக்க, கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர்.


அதற்குள் திலீப்பை சூழ்ந்திருந்த பத்திரிகையாளர்கள் சிலரின் பார்வை தீபன் மேல் விழ, அதை உணர்ந்தவராக மித்ராவை அங்கிருந்து இழுத்துச்சென்றார் பாரதி.


அதற்குள் அவனை நெருங்கி வந்த நிருபர் ஒருவர், "உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் தீலீப் சார் மேரேஜ் அனௌன்ஸ் பண்ணிட்டார்! உங்க மேரேஜ் எப்ப?" எனக் கேட்டார்.


அனிச்சை செயல் போல அவரது பார்வை வசுமித்ராவை தொடர்வதை கவனித்தவன், "அடுத்தவங்க பெர்சனல் விஷயங்களை தெரிஞ்சிக்க உங்களுக்கு என்ன இவ்வளவு ஆர்வம் ம்ம்!” எனச் சற்று குத்தலாக ஆனால் சிரித்துக்கொண்டே சொன்னவன், “என் கல்யாணம் பிக்ஸ் ஆனா முதல்ல உங்க கிட்ட சொல்றேன் ஓகேவா!" என அழுத்தமாகச் சொல்லவிட்டு, அவருடைய மைக்கையும் அடையாள அட்டையையும் பார்த்தவன், "என் பிக் எதாவது ஒண்ணு வெளியில வந்தாலும் அப்பறம் உங்களுக்கு ஏற்படக்கூடிய சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பில்லை!" என்று முடித்தான் தீபன் கிண்டலாகவே!


அதில் அடங்கியிருந்த மறைமுக எச்சரிக்கை புரிந்ததால் அந்த நிருபரின் முகம் போன போக்கைப் பார்த்துக்கொண்டே அவன் அங்கிருந்து திலீப்பை நோக்கி சென்றான்.


அவனது கோட் பாக்கட்டில் கைவிட்டு ஒரு சிறு நகைப் பெட்டியை எடுத்து அதை திலீப்பிடம் நீட்ட, அதில் கண்ணைப் பறித்த வைர மோதிரங்களைப் பார்த்தவன், "எப்ப மச்சான் வாங்கின? நான் மேரேஜ் பத்தி ஒண்ணுமே சொல்லலையே?" என அவன் அதிசயிக்க, "ஒரு சின்ன கெஸ்சிங்தான்! ஆனா பாதி சரி! பாதி தப்பு!" என தீபன் சொல்ல, அவன் சொல்லவருவது புரியவும், அதை கவனிக்காதவன் போல, "ஹேய் மாலு! இவரை தெரியும் இல்ல...?"


"எஸ்; மிஸ்டர் தீபன் தானே?! இவரைத் தெரியாமல் இருக்குமா?"அவன் முடிப்பதற்குள்ளாகவே சொன்னாள் மாளவிகா.


"ஓ மை காட்!" என்ற தீபன், "இவ்வளவு அழகான பெண்ணுக்கு என்னை தெரிஞ்சிருக்கே! ஐ ஆம் பிரிவிலிஜ்ட்!" என்றான் அவளைப் பாராட்டும் விதமாக.


"தேங்க் யூ அண்ணா! நான் அழகா இருக்கேன்னு அக்செப்ட் பண்ணதுக்கு! இது புரிய ஒருத்தருக்கு சில வருஷங்கள் ஆச்சு!" என அவள் திலீப்பை கிண்டல் செய்ய, "நீங்க ரொம்ப அழகுதான்! ஒத்துக்கறேன் மேடம்" என்றவாறு தீபன் பரிசளித்த மோதிரத்தை அவளுக்கு அணிவித்தான் திலீப்.


அவனுக்கான மோதிரத்தை அவளும் அணிவிக்க, சுற்றி இருந்த படக்கருவிகள் அந்த காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டன.


அப்பொழுது உடல் முழுதும் சரிகையிட்ட பட்டுப்புடவையில், நடமாடும் நகைக்கடை போலத் தோற்றமளித்த அவனுடைய மனைவியுடன் திவாகர் திலீப்பை வாழ்த்த அங்கே வரவும், சபை நாகரிகம் கருதி அவனிடம் ஒரு, "ஹை!" மட்டும் சொல்லிவிட்டு தனியே வந்தவன், எதோ எச்சரிக்கை உணர்வு தோன்ற அதன் பின்பு மறந்தும் மித்ராவின் அருகில் செல்லவில்லை தீபன்.


அவளையும் அவனுக்கு அருகில் செல்ல அனுமதிக்கவில்லை பாரதி.


தூரத்திலிருந்தே கண்களாலேயே மித்ராவை சுவைத்தவன், பஃபே முறையில் அங்கே கமகமத்துக்கொண்டிருந்த உணவு வகைகளை விழுங்கிவிட்டு, அவள் திலீப்பிடமும் பாரதியிடமும் என்ன சொல்லி அவர்களை தன் விருப்பத்திற்கு உடன்படச் செய்தாள் என மிர்தாவிடம் கேட்டு அறிந்துகொள்ளாமலேயே அனைவரிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றான் தீபன்.


சில நிமிடங்களில் வசுமித்ராவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் பாரதி!


***


அடுத்த நாள் காலை அனைத்து செய்தித்தாள்களிலும் திலீப் திருமண அறிவிப்பு பற்றிய செய்தி வெளியாகியிருந்தது.


அதை ஒரு பார்வை பதிவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தான் தீபன்.


"தீபன் முக்கியமா பேசணும்! உடனே கிளம்பி வா" என திவ்யாபாரதி அவனைக் கைப்பேசி மூலம் அழைக்கவும், மறுபேச்சின்றி அவருடைய வீட்டிற்குச் சென்றான் அவன்.


வீட்டிற்குள் நுழைந்ததும், அவனைப் பார்த்து 'வா' என்று மட்டும் சொல்லிவிட்டு, மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, வழக்கம்போல அவருக்கு அருகில் போய் உட்கார்ந்துகொண்டு, அவரது முகத்தைப் பார்க்க, அது யோசனையில் இறுகிப்போயிருந்தது.


"என்ன முக்கியமான விஷயம் மேம்! வர சொல்லிட்டு பேசாம இருக்கீங்க!" என அவன் கேட்க, "தீபன்!; என்ன காரணமோ தெரியல; அந்த பொண்ணு உன் மேல இவ்வளவு ஈடுபாடு காட்டறா; அது எப்படின்னு எனக்கு புரியவே இல்ல!" என்றவர், "அதை நீ அட்வாண்டேஜா எடுத்துகாதப்பா!" என்று முடித்தார்.


"இப்ப நீங்க என்னதான் சொல்ல வரீங்க?" என அவன் கூர்மையாகக் கேட்க, "உனக்கு என்னவோ புரியவே புரியாத மாதிரி கேக்கற! " என எரிச்சலுடன் சொன்னவர், "உன்னோட லிஸ்ட்ல இன்னும் வசந்த் மட்டும்தானே சிக்கல!


அவனைக் கண்டுபிடிக்க வசுவை யூஸ் பண்றயோன்னு.." அவர் இழுக்கவும், அத்தகு இகழ்சியாக சிரித்தவன், "வாஸ்தவமா இப்படி கேட்டதுக்கு நீங்க என்னை சரியா புரிஞ்சுக்கலேன்னு எனக்கு கோவம்தான் வரணும்; பட் இல்ல! ஏன் தெரியுமா நீங்க இவ்வளவு அக்கறை காமிக்கறது வசுமித்ரா மேல!


ஸோ எனக்கு சந்தோஷம்தான்!" என்றவன்,


"அன்னைக்கு என்னை; என் குடும்பத்தை காப்பாத்தினது நீங்க; அதுக்கு பின்னால இருந்தது வாசுவோட அப்பா! கரெக்ட்டா?" என அவன் கேட்க, முன்பே அவன் இதைப் பற்றிய பேச்சைத் தொடங்கியிருந்ததால் அதில் வியப்பேதும் இன்றி, "ப்ச்! இல்ல! அதுக்கு காரணம் வாசுவோட அப்பா இல்ல; அவளோட அம்மா கலைவாணியும் வசுவும்தான்!" என்றார் திவ்யாபாரதி.


அவன் வியந்துபோய் பார்க்கவும், "நிஜமாத்தான்; அந்த நேரத்துல ராகவன் உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடல்ல இருந்தார்!" என்றவர் அந்த சமயத்தில் நடந்த அனைத்தையும் அவனிடம் விளக்கமாகச் சொல்லிமுடித்தார் பாரதி.


"நீ பத்திரமா வீட்டுக்கு வந்ததும், எனக்கு நன்றி சொல்ல வந்திருந்தாங்க கலைவாணி!


அவங்க என்னதான் நல்ல எண்ணத்தில் இதைச் செய்திருந்தாலும் உள்நோக்கத்தோடதான் செய்யறாங்கனு நீங்க நினைக்கலாம் இல்ல!


அதனால இதைப் பத்தி உங்களுக்குத் தெரிய வேண்டாம்னு அவங்க சொல்லிட்டாங்க! அதனாலதான் நானும் சொல்லல!"


பேச்சே வரவில்லை தீபனுக்கு! சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, "ரயிலம்மா!" என அழைத்தவன் "குடிக்க சில்லுனு ஏதாவது கொண்டு வாங்க!" என்று அவரை பணிக்கவும், "உங்களுக்கு மா!" என அவர் கேட்க, "ரெண்டுபேருக்குமே ஆரஞ் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா" என்று சொல்லிவிட்டு, "அன்னைக்கு நான் கேட்டதுக்கு 'வசு மேல எனக்கு எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல; கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இப்ப இல்ல; அப்படி ஒரு முடிவுக்கு வரும்போது நீங்க யாரை சொல்றீங்களோ அவளையே கல்யாணம் பண்ணிக்கறேன்'னு ஏதேதோ கதையெல்லாம் சொன்ன!


நீ அப்படி சொன்ன பிறகுதான் திலீப்புக்கு அவளை கேட்டேன்! முதல்ல இருந்தே மறுத்து மறுத்து பேசிட்டு இருந்தவ, எங்க கிட்ட சரின்னு சொல்லிட்டு அவனை போய் கன்னாபின்னான்னூ குழப்பிட்டு வந்துட்டா!


ஏற்கனவே அந்தஸ்து போதை தலைக்கு ஏறிப்போய் எங்க அப்பா அவனிடம் எதோ சொல்லி வெச்சிருக்கார் போலிருக்கு.


இவ வேற ஏதோ சொல்லவும், தாத்தா சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறேன்னு அவரை வெச்சுட்டே சொல்லிட்டான் அந்த கடன்காரன்!


அவர் எனக்கு அப்பவாச்சே! எங்க விட்டா மனசு மாறிடுவானோன்னு ஒரே நாள்ல இந்த ஏற்பாட்டை செஞ்சுட்டார்.


யாராலயும்; முக்கியமா மாமாவால அவர் வார்த்தையை மீற முடியல!


நான் பேக்கு மாதிரி வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கேன்!" என தன் ஆதங்கம் முழுவதையும் கொட்டினார் பாரதி.


அவரை வைத்து விளையாடுகிறோமே என அவனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அதை மறைத்துக்கொண்டு, "திலீப்பை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்! அவ திலீப்புக்கு ஒத்து வரமாட்டானு உங்க கிட்ட முன்னாலேயே சொன்னேனா இல்லையா!


நீங்க என்னை பைபாஸ் பண்ணி ஏதேதோ பண்ணீங்க! இப்ப இப்படி புலம்பினா நான் என்ன செய்ய முடியும்?" என அவன் நேரடியாகக் கேட்க, அதில் அவருக்கு சுறுசுறுவென கோபம் வந்துவிட, "இப்ப என்ன சொல்ல வர! உனக்கும் வசு வேண்டாம் திலீப்புக்கும் சொல்லக்கூடாதுன்னா நான் அவளுக்கு வேற ஒரு மாப்பிளையைத்தான் பார்க்க சொல்லணும்!


வசந்தை பத்தி தெரிஞ்சா அந்த பொண்ணு நிலைமை என்ன ஆகும்னு தெரியுமா?


ஏற்கனவே அந்த ஊருல அவங்களால வாழவே முடியாத அளவுக்குப் பிரச்சினை ஆகிப்போய்த்தான் இங்க வந்தாங்க!" என்றார் பாரதி படபடப்பாக!


அவனுக்குச் சிரிப்பு வந்துவிட, "ப்ச்... பராதிம்மா!" என மித்ரா அழைப்பதுபோலவே ராகம் போட்டு அவரை அழைத்தவன், "இப்பவும் சொல்றேன்! நீங்க பார்த்து 'வசுதான் பொண்ணு! கட்டு தாலியன்னு' சொல்லுங்க கட்டிட்டு போறேன்! அப்பறம் அவளை பத்தி நீங்க ஏன் கவலை படணும்!" எனக் கெத்தாகச் சொல்ல, வியந்துபோய் கை விரல்களால் வாயை மூடிக்கொண்டவர், "அடப்பாவி! உங்க அம்மாவையும் சரிகாவையும் பத்தி யோசிச்சியா?" என அவர் கேட்க, "அதான் நீங்க இருக்கீங்களே! அப்பறம் அவங்களை பத்தி நான் ஏன் யோசிக்கணும்! " என்றான் தீபன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்!


"ரொம்ப நல்லவன்டா நீ!" என்று சொல்லி சிரித்தார் பாரதி.


அதற்குள் ரயிலம்மா பழரசத்தைக் கொண்டுவந்து வைக்க அதை எடுத்துப் பருகியவாறே, "அவ மேல இருக்கற ஓவர் அட்டாச்மெண்ட் காரணமாகவோ என்னவோ; மித்ரா விஷயத்துல மட்டும் நீங்க ஓவர் சென்டி ஆகறீங்க!


மத்தபடி அறிவுப்பூர்வமா செயல்படுற உங்களுக்கு புரிய வெக்கறது ஈஸி! பட் எங்கம்மா இருக்காங்களே அவங்க ரொம்ப எமோஷனல்!


அவங்களை இந்த விஷயத்துல ஹாண்டில் பண்றது எனக்கு கொஞ்சம் கஷ்டம்தான்!


சரிகாவை கன்வின்ஸ் பண்ண சந்தோஷ் இருக்கான்! அவளைப் பத்தி எனக்குக் கவலை இல்ல!" என்றான் தீபன் யோசனையுடன்.


"நீயே இப்படி சொல்றியே! அப்ப அவ நிலைமை!


வசுவை நீ கல்யாணம் பண்ணிட்டா வாழ்க்கை முழுவதும் மனசுல ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கும் தீபன்; அது குடும்ப வாழ்க்கைக்கு நல்லதில்லை!


நீ மட்டும் அவளை அக்செப்ட் பண்ணிட்டா போறாது!


உங்க குடும்பத்துல இருக்கறவங்க எல்லாரும் அவளை மனப்பூர்வமா அங்கீகரிக்கணும்; அது முக்கியமில்லையா?" எனக் கேட்டவர், "அவ மனசுல எந்த அளவுக்கு விரக்தி இருக்குனு உனக்கு தெரியுமா?" என்று கேட்டார் பாரதி!


"ஏன் அப்படி சொல்றீங்க! அந்த மாதிரி அவ எதாவது சொன்னாளா?" என அவன் கேட்க,


"ம்ம்! 'கல்யாணமே வேணாம்! வாழ்க்கை முழுசுக்கும் இப்படியே இருந்துடறேன்'னு ரொம்ப அழுத்தமா சொல்றா!" என்றவர், "மண்டே மார்னிங் வசு இங்க வந்திருந்தாப்பா!" என அன்று நடந்ததைச் சொல்லத்தொடங்கினர் பாரதி.


இரு தினங்களுக்கு முன் தொலைப்பேசியில் அவரை அழைத்து அங்கே வருவதாகச் சொன்னவள், அரைமணி நேரத்தில் அங்கே வந்தாள் வசுமித்ரா!


அங்கே வந்த பிறகு அவள் சொல்லித்தான் பாரதிக்குத் தெரிந்தது அவள் திலீப்பை சந்தித்துப் பேசிவிட்டுத்தான் அங்கே வந்திருக்கிறாள் என்று!


அதனைக் கேட்டு பாரதி கோபத்துடன் மௌனமாகி விட, அது தாங்க முடியாமல், "தயவு செஞ்சு புரிஞ்சிக்கோங்க ம்மா! என்னால திலீப்பை கல்யாணம் பண்ணிக்க முடியாது! அதுக்கு என் மனசாட்சி இடம் கொடுக்கல!" என அவள் சொல்ல, "யாரையாவது!" என்றவர் அதை திருத்தி, "தீபனை லவ் பண்றியா?" எனக் கடுமையாகக் கேட்டார் பாரதி.


"தெரியல!" என்றவள், "பட்.. கல்யாணம்னு சொன்னா என் மைண்ட் ஃபுல்லா அவர் மட்டும்தான் இருக்கார்!


ஆனா அவரை லவ் பண்ற சிட்சுவேஷன்ல நான் இல்லை! அதனால அந்த எண்ணத்தை லவ்னு சொல்ல முடியல!


பட் கல்யாணமே வேண்டாம்னு தோணுது! உங்களை மாதிரி மத்தவங்களுக்கு என்னால ஆன நல்லதை செஞ்சுட்டு இப்படியே இருந்துடுலாம்னு முடிவு பண்ணிட்டேன்!


அதுதான் எனக்கு நிம்மதியும் கூட!" என அவள் சொல்ல, "என்ன உளர்ற வசு! இப்ப உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்! எதிர்காலத்துல ஒரு துணை இல்லாம தனியா எப்படி இருப்ப!" என அவர் எதார்த்தமாக கேட்க,


"ஏன் இதோ நீங்க இல்ல! அதுமாதிரி என்னால இருக்க முடியாதா என்ன?


உங்க ஹஸ்பண்ட் இறந்து போகும்போது ஜஸ்ட் தர்டி இயர்ஸ்தானே உங்களுக்கு!


ஏன் வேற மேரேஜ் பண்ணிக்கல! உங்க ஃபாமிலில நடக்காததா என்ன?


உங்க அப்பா உங்க கல்யாணத்தை ஏத்துக்கலைன்னு இன்னும் கூட வைராக்கியமா அவர் கூட நேரடியா பேசாம இப்படி தனியா இருக்கீங்க இல்ல?


அதுக்கு காரணம் உங்களுக்கு உங்க கணவர் மேல இருக்கும் லவ் தானே?” என அவள் அவரது கேள்வியை அவர் பக்கமே திருப்ப,


அதில் தடுமாறியவர், "அந்த கடன்காரன் கூட சேர்ந்து நீ கூட கொஞ்சம் கர்ரப்ட் ஆகிட்ட வசு! அவனை மாதிரியே பேசற!" எனப் பல்லைக் கடித்தார் பாரதி.


தானே அவளுக்கு ஒரு தவறான உதாரணம் ஆகிவிட்டோம் என அவரது மனசாட்சி சுட்டது.


"அது மட்டும் இல்ல மேம்! அம்மா அப்பாவைப் பார்க்கும்போது எனக்கு எந்த பிடிப்புமே ஏற்படல" என்றும் சொன்னாள் மித்ரா!


திலீப்பை மறுத்துவிட்டு வந்துவிட்டாளே என்ற மனக்குறை இருந்தாலும், அவளது பிடிவாதத்தை உடனே கரைக்க முடியாது என்பதும் புரிந்தது அவருக்கு!


வேறு வழி இல்லாமல் அவளது பேச்சை ஒப்புக்கொண்டார்.


அவள் நாமக்கல் சென்று வந்ததை பற்றிச் சொன்னவள், தோண்டி எடுத்த அனைத்து ஆதாரங்களையும் தீபனிடம் ஒப்படைத்துவிட்டதையும் சொன்னாள் வசுமித்ரா!


"நான் பெரியவங்க கிட்ட எதையும் மறைக்க கூடாதுன்னு ஒரு கட்டுப்பாடுடன் இருக்கேன் மா! அதனால உங்க கிட்ட இருந்தோ அம்மா அப்பாகிட்ட இருந்தோ எதையும் நான் மறைக்க விரும்பல!


அவங்க கிட்டேயும் எல்லாத்தையும் சொல்லிடப்போறேன்!


எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க!" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் வசுமித்ரா!


கல்லென இறுகிப்போய் உட்கார்ந்திருந்தவர், அவளது எண்ணப் போக்கை மாற்றும் பொருட்டு, முதல் கட்டமாக அவருடைய அப்பாவிடம் சமாதானமாகப் போக முடிவு செய்தார் பாரதி.


அனைத்தையும் அவர் தீபனிடம் சொல்ல, அமைதியாக அதைக் கேட்டவன், "பார்க்கலாம் மேம்! நீங்க கவலை படாதீங்க! இனி அவளை பத்தின ரெஸ்பான்சிபிலிட்டி என்னோடது!" என ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் தீபன்!


மனம் கொஞ்சம் தெளிவடைந்தது போல் இருந்தது பாரதிக்கு!


***


நேரே 'தீபன்ஸ் டவர்' அலுவலகத்திற்கு வந்தவன் அவனது அன்றாட பணிகளில் மூழ்கிப்போனான் தீபன்.


செய்துகொண்டிருந்த வேலையில் அனைத்தும் மறந்துபோயிருக்க, வயிறு பசித்து மதிய உணவு நேரம் கடந்துகொண்டிருப்பதை அவனுக்கு நினைவு படுத்தவும், அவன் கிளம்ப எத்தனிக்க, சரிகாவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.


"சொல்லு குட்டிம்மா!" என அவன் களைப்புடன் சொல்ல, "அண்ணா! என்னண்ணா இது! நீங்க போய் அந்த வசுமித்ரா கூட! அதுவும் அவ கையை பிடிச்சுக்கிட்டு!" என அவள் சீற்றத்துடன் கேட்க, அதிர்ந்தவன், "ஏய் என்ன சொல்ற! நீங்க வேலூர்ல இருந்து வந்துடீங்களா?" என அவன் கேட்க, "இல்ல! மேரேஜ் முடிஞ்சு ரெஸ்ட் எடுக்க ஹோட்டல் ரூமுக்கு வந்தோம்! ஏதோ ந்யூஸ் சேனல்ல மறுபடியும் மறுபடியும் இந்த கன்றாவியை காமிச்சுட்டு இருகாங்க!


பாப்பா கூட அவளை பார்த்துட்டு 'வதுந்தா ஆண்ட்டி'னு சொல்லி குதிக்கறா!


அம்மா செம்ம கோவமா இருகாங்க!" என அவள் அழாத குறையாகச் சொல்ல, "ப்ச்.. போன வை! பங்க்ஷன் முடிச்சிட்டு இங்க வா; நான் நேர்ல சொல்றேன்!" என அழைப்பைத் துண்டித்துவிட்டு அங்கே இருக்கும் தொலைக்காட்சியை அவன் உயிர்ப்பிக்க, பல சேனல்கள் திலீப் கொடுத்த பார்ட்டியை ஒரு எதார்த்தமான செய்தியாக காண்பிக்க, 'பிளவர்!' என்கிற ஒரே ஒரு சேனலில் மட்டும் அதை விலாவாரியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்.


சரிகா சொன்னதைப்போலவே தீபன் வசுமித்ராவுடன் உள்ளே நுழைந்த காட்சி தெளிவாகக் காண்பிக்கப்பட்டிருந்தது.


அதையும் மறுபடி மறுபடி ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்.


அது புஷ்பநாதனுடைய தொலைக்காட்சி சேனல் என்பது தீபனுக்கு முன்னமே தெரியும் என்பதால் அவனுடைய கோபம் எல்லையைக் கடந்தது.


***


அதே நேரம் "மேடம்! வசு மதியம் வீட்டுக்கு வந்து லன்ச் சாப்பிட்டுட்டு மறுபடியும் ஸ்கூலுக்கு கிளம்பி போனாள்!


கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நம்ம வீடு இருக்கற திருப்பத்துல அவளோட ஸ்கூட்டி எரிஞ்சிட்டு இருக்கறதா பக்கத்து வீட்டுல இருக்கறவங்க பார்த்துட்டு வந்துசொன்னாங்க!


பதறி அங்கே போய் பார்த்தால் அது வசுவோட ஸ்கூட்டிதான் மேடம்!


அவ போன் சுவிட்ச் ஆஃப் னு வருது! ஸ்கூலுக்கு போன் பண்ணா அவ இன்னும் வரலேன்னு சொல்ராங்க! எனக்கு ரொம்ப பயமா இருக்கு!' எனச் சொல்லிக்கொண்டே போனார் கைப்பேசியில் பாரதியை அழைத்த செல்வராகவன்.


அதிர்ந்து போனார் திவ்யாபாரதி.

Recent Posts

See All
Poovum Naanum veru-Epilogue

இதழ்-36 கடைக்காப்பு அத்தியாயம்! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும்...

 
 
 
Poovum Naanum Veru-35

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத்...

 
 
 
Poovum Naanum Veru-34

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான்...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page