top of page

Poovum Naanum Veru-33

இதழ்-33


கிழக்கு கடற்கரைச் சாலையில் காற்றைக் கிழித்து அபரிமிதமான வேகத்தில் பறந்துகொண்டிருந்தது தீபனின் வாகனம். அருகில் சந்தோஷ்!


அவனது மூளைக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்கும் என நினைத்து அவன் அங்கே செலுத்தியிருந்த போதை, அணைப்பதற்குப் பதிலாக அந்த நெருப்பை இன்னும் அதிகமாகக் கொழுத்து விட்டு எரியும்படியே செய்துகொண்டிருந்தது.


நியாயத்திற்கு ஜவஹருடைய மரணம் அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்க வேண்டும். பதிலாக அவனுடைய கோபத்தை மிகைப் படுத்தியிருந்தது.


மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் நண்பர்களுக்கு மட்டுமேயான ஒரு சிறிய பார்ட்டி என அவன் வழக்கமாகச் செல்லும் க்ளப் நண்பர் கவுதம் அழைத்திருக்க, மறுக்க முடியாமல் அங்கே சென்றான் தீபன். அவர் சந்தோஷையும் அழைத்திருக்க அவனையும் உடன் அழைத்துச்சென்றிருந்தான் அவன்.


அங்கே திலீப்பும் வந்திருக்க, அதுவும் பேசுவதற்கே அவர்களுக்கு அப்பொழுதுதான் நேரம் கிடைக்கவும், வசுவை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என அவன் முடிவெடுத்ததற்கான காரணத்தை திலீப் விளக்கமாகச் சொல்லவும், இடையில் சிரித்துவைக்காமல் அதனைக் கேட்பதே அவ்வளவு கடினமாக இருந்தது தீபனுக்கு!


சந்தோஷ் வேறு அவனைக் கிண்டலுடன் பார்க்கவும் கண்களாலேயே அவனை அடக்கிக்கொண்டிருந்தான் அவன்.


ஆரம்பத்தில் உற்சாகமான மன நிலையில்தான் இருந்தான் தீபன்.


பொதுவான நண்பர்கள் பலரும் வரவும்வேடிக்கையும் விளையாட்டுமாகத் தொடங்கிய பேச்சு, பின் அன்றைய தினத்தில் 'ட்ரெண்டிங்'காக இருக்கும் 'அதிகார வர்க்கத்தின் அராஜகம்' பற்றியதாக மாறிப்போக, அதனைப் பற்றிய அலசலும், அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்களைப் பற்றிய விமர்சனங்களுமாக இருந்தது.


தீபனுடைய சகோதரியும் அதில் சிக்கி இருக்கிறாள் என்பதை அவர்கள் அறியாத காரணத்தால், பேச்சு கொஞ்சம் எல்லை கடந்ததாகவே இருக்க, அருகில் சந்தோஷ் வேறு இருக்கவும் மிகவும் சங்கடமாக ஆகிப்போனது தீபனுக்கு.


அங்கிருந்து கிளம்பலாம் என்றாலும் அந்த கவுதம் அவனை விடுவதாக இல்லை. அந்த நேரம் பார்த்து ஜவஹர் இறந்த செய்தி வேறு அவனுக்கு வந்து சேர, சட்டப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனையிலிருந்து அவன் தப்பிவிடவே அதற்கும் அவன் மீது கோபம்தான் வந்தது தீபனுக்கு.


மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தவன், உபசரிப்புக்காக அங்கே தாராளமாகப் பரிமாறப்பட்ட மதுவை வெகு தாராளமாகவே குடித்துக் கொண்டிருந்தான்.


"மச்சான்! வேணாம்! உன் தங்கைக்கு என்னால பதில் சொல்ல முடியாது" என சந்தோஷ் தடுத்ததெல்லாம் அவனுடைய செவியில் நுழையவே இல்லை!


அங்கே இருந்தவர்களும் அவர்களது வாக்குவாதத்தை நிறுத்துவதாக இல்லை.


"இது மாதிரி ஒரு நியூஸ் வந்தா போதும்! எல்லாருமே பொங்கிட்டு வந்துருவாங்க! பொண்ணுங்கள யாராவது குறை சொன்னால்; அவங்க மேல பாஞ்சிருவாங்க!


சோஷியல் மீடியால யாரு என்னனு வரைமுறை இல்லாம போட்டோவெல்லாம் ஷேர் செய்யறது யாரு!


அதை யூஸ் பண்ணி மிரட்டினா அதுக்கு பயந்துட்டு வீட்டுல இருக்கிறவங்களுக்கு தெரியாம அவங்க கூப்பிடற இடத்துக்கு ஏன் போகணும்!


பணத்துக்காக எந்த எல்லை வரைக்கும் பொண்ணுங்க போக ஆரம்பிச்சுட்டாங்க!


பசங்க கூட சேர்ந்தது என்ன வேணா செய்யறது; கூட இருக்கறவங்களையும் இதுல இழுத்துவிடுறது!


பிரச்சினை வெளிய தெரிஞ்ச உடனே கூட இருக்கற பசங்கள மாட்டி விட்டுட்டு இவங்க மட்டும் தப்பிச்சிக்கிறாங்க!" என ஒருவர் அடுக்கிக்கொண்டே போக,


"எங்கே இந்த மாதிரி கிரைம்ஸ் நடந்தாலும் ஏண்டா பொண்ணுங்களையே குறை சொல்றீங்க? இப்படி கேவலமா பேச உங்களுக்கே வெக்கமா இல்ல?


இந்த மாதிரி பேச்சையெல்லாம் க்ராஸ் பண்ண முடியாமதான பாவம் அத்தன பொண்ணுங்க தற்கொலை பண்ணிகிட்டாங்க;


உங்க வீட்டுல எல்லாம் கூட பெண் குழந்தைங்க இருக்காங்க ஞாபகம் இருக்கட்டும்! அவங்களையும் இப்படித்தான் பேசுவீங்களா?" என தீபன் அங்கே எல்லோருடனும் சண்டைக்குக் கிளம்ப, "பொதுவா பேசற பேச்சுக்கு நீங்க ஏன் மிஸ்டர் தீபன் இப்படி பெர்சனலா எடுத்துக்கறீங்க! உங்க வீடு பொண்ணுங்களையா குறை சொன்னாங்க" என ஒருவர் குதர்க்கமாகக் கேள்வி கேட்க, அவரை அடிக்கவே போய்விட்டான் தீபன்.


அவனைக் கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது சந்தோஷுக்கு.


"இந்த சமுதாயத்தில் எல்லா பெண்களையும் அவங்க வீட்டுப் பெண்களா நினைச்சு பார்க்கணும் சவுந்தர்!


அப்பதான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும்! உங்கள மாதிரி குதர்க்கமா பேசறவங்களும் இந்த தப்புக்கு ஒரு வகையில சப்போர்ட் பண்றவங்கதான்!" எனக் காரமாகப் பதில் கொடுத்துவிட்டு நண்பனை அங்கிருந்து இழுத்துச்சென்றான் அவன்.


அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், "நான் ஸ்டெடியாதான் இருக்கேன்! ஒரு பிரச்சினையும் இல்ல" எனச் சொல்லிவிட்டுத் தானே காரை ஓட்டினான் தீபன்.


என்னதான் 'பிரச்சினை இல்லை' என்று அவன் சொன்னாலும் மற்றவர் பேசிய பேச்சுக்கள் அவனை அதிகம் பாதித்திருந்தது.


அது அவன் வாகனத்தைச் செலுத்திய வேகத்தில் தெரிந்தது.


"ப்ச்! விடு மச்சான்! இதெல்லாம் நாம கிராஸ் பண்ணித்தான் ஆகணும்!" என்ற சந்தோஷ், "இந்த நேரத்துல இவ்ளோ ஸ்பீட் வேணாம்! கம்மி பண்ணு!" என்று சொல்ல, அவன் சொல்வதும் சரி என எண்ணியவன் வாகனத்தின் வேகத்தைக் குறைக்க முயல, ஏதோ ஒரு தடுமாற்றத்தில் அவனது வாகனத்தை அவன் தவறாகக் கையாளவும், அது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கடைசியில் சாலை ஓர மரம் ஒன்றில் மோதி நின்றுபோனது.


'ஏர் பாக்' புண்ணியத்தில் தீபன் காயமின்றி தப்பித்துவிட சந்தோஷுக்கும் எதுவும் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையுடன் அவன் நண்பனைப் பார்க்கவும், அவன் பக்க கதவு திறந்து கீழே சரிந்திருந்தான் சந்தோஷ்.


அவனுடைய வயிற்றில் ஏதோ கிழித்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.



தங்கையின் கணவனான தனது நண்பனை அந்த நிலையில் பார்க்கவும், முழுவதுமாக நொறுங்கிப்போய் இருக்கும் அவனது காரின் முன்பக்கத்தைப் போலவே அவனுடைய மூளையும் உருக்குலைந்து போக, அடுத்து என்ன செய்வதென்றே புரியாமல் செயலிழந்து நின்றான் தீபன்.


சில நிமிடங்களுக்குள்ளாகவே பதட்டத்துடன் ஓடி வந்து அவனுக்கு அருகில் நின்ற திலீப்பை கூட உணராமல் உறைந்துபோய் அவன் நிற்க, "கம் ஆன்! ஹரி அப் தீபன்! இன்னும் த்ரீ கிலோ மீட்டர்ஸ்ல ஒரு ஹாஸ்ப்பிட்டல் இருக்கு.


வா தூக்கிட்டு போகலாம்!" என்று சொன்ன திலீப் அவனது பதிலுக்கும் காத்திருக்காமல், வேகமாகப் போய் சந்தோஷை தூக்க, திலீப்புடைய ஓட்டுநரும் உதவிக்கு வரவே, அவனுடைய வாகனத்தின் பின் இருக்கையில் சந்தோஷை உட்காரவைத்துவிட்டு, தீபனை இழுத்துவந்து அவனுக்கு அருகில் அமர்த்தியவன் தானும் மற்றொரு பக்கமாக சந்தோஷின் அருகில் உட்கார்ந்துகொண்டான்.


"மச்சான்! எனக்கு ஒண்ணும் இல்ல! சின்ன இன்ஜுரிதான்! நீ பயப்படாத! இப்போதைக்கு வீட்டுல யாருக்கும் சொல்ல வேண்டாம்!" என முனகலாக சந்தோஷ் சொல்லிக்கொண்டே அவன் மீது சரியவும், அவனுடைய குரலை கேட்டபின்தான் உணர்வே வந்தது தீபனுக்கு.


சந்தோஷின் வயிற்றிலிருந்து வெளியேறிய குருதி, அவனை உயிருடன் கொன்றது.


திலீப்புடைய ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அந்த மருத்துவமனையிலிருந்தனர் அனைவரும்.


அந்த பார்ட்டியில் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்த திலீப், சந்தோஷ் அவசரமாக தீபனை இழுத்துச் செல்வதைப் பார்த்துவிட்டு, அவர்களை பின் தொடர்ந்து வந்துவிடவே, நல்ல வேளையாக அவர்களுக்கு உதவ முடிந்தது.


சில நிமிடங்களிலேயே அவசர சிகிச்சை பகுதிக்குள் அழைத்துச்செல்லப்பட்டு சந்தோஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட, பணம் செலுத்தச் சென்றான் திலீப்.


அந்த பகுதியின் வாயிலிலேயே செய்வதறியாது நின்றுகொண்டிருந்த தீபனின் பார்வை அங்கே இருக்கும் குடிதண்ணீர் இயந்திரத்தில் 'பிளாஸ்க்'கில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்த பெண்ணிடம் செல்ல, அது மித்ராவை போன்றே தோன்றியது அவனுக்கு.


காட்சி பிழையோ என்ற எண்ணத்துடன் கண்களைக் கசக்கிக்கொண்டு அவன் மறுபடியும் அவளைப் பார்க்க, மித்ராவேதான்!


அவளுமே வியப்புடன் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.


பின்பு அது தீபன்தான் என அவள் உணரவும், அவனை நோக்கி வந்தவள், அவனுடைய சட்டையில் படிந்திருந்த ரத்தக் கறையைப் பார்த்துப் பதறியவளாக, "கடவுளே! உங்களுக்கு என்ன ஆச்சு தீபன்!" என நடுக்கத்துடன் கேட்க, வார்த்தைகள் வராமல் தவித்தவன், "ஒரு ஆக்சிடென்ட்! சந்தோஷுக்கு அடிபட்டிருக்கு!" என ஒருவாறு சொல்லி முடித்தான்.


"ஐயோ! சரிகாவோட வீட்டுக்காருக்கா!" என வருத்தத்துடன் கேட்க, "ம்! எனத் தலையை அசைத்தான் அவன்!


அவனை வினோதமாகப் பார்த்தவள், "ட்ரிங்க் பண்ணி இருக்கீங்களா மிஸ்டர் தீபன்!" எனக் கண்டிக்கும் குரலில் கேட்க, அதற்குள் அவனை ஒரு செவிலியர் அழைக்கவும் தீபன் உள்ளே செல்ல, அவனை பின் தொடர்ந்து போனாள் மித்ரா.


"நீங்க பேஷண்டுக்கு என்ன வேணும்!" என அங்கே பணியிலிருந்த மருத்துவர் கேட்க, " நான் அவரோட ப்ரதர் இன் லா!" என்றவன், "பயப்படும்படியா ஒண்ணும் இல்லையே டாக்டர்!" எனத் தவிப்புடன் கேட்டான் தீபன்!


"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல! ஏதோ ஷார்ப் ஆப்ஜெக்ட் நல்ல டீப்பா கிழிச்சிச்சு இருக்கு! ஊண்ட் கொஞ்சம் பெருசா இருக்கு! தையல் போட்டிருக்கோம்!


பட் பிளட் நிறைய போயிருக்கு! ஸோ அவருக்கு உடனே ரத்தம் ஏத்த வேண்டியதா இருக்கும்!


தென் ஒரு டூ டேஸ் ட்ரிப்ஸ்ல ஆன்டிபயாட்டிக்ஸ் கொடுக்க வேண்டியதா இருக்கும்!


மத்தபடி சர்ஜரி கூட தேவை இல்லை!" என்றவர்,


"அவரோடது பி பாசிட்டிவ் பிளட்!


செகண்ட் ஃப்ளோர்ல பிளட் பேங்க் இருக்கு! அங்க போய் கொஞ்சம் பேசிருங்க!" எனச் சொல்லிவிட்டு ஒரு மருத்துவ குறிப்பை அவனிடம் கொடுத்தார் அந்த மருத்துவர்.


இருவரும் அங்கிருந்து வெளியில் வரவும் அதற்குள் பணத்தைச் செலுத்திவிட்டு அங்கே வந்தான் திலீப்!


அங்கே எதிர்பாராமல் வசுவை பார்த்தவன், "ஹை வசு! நீ எப்படி இங்க!" எனக் கேட்க, "செவன்; செவன் தர்டி இருக்கும், அம்மாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமாயிடுச்சு! உடனே இங்க கொண்டுவந்தோம்!


இப்ப ஐ.சி.யு ல இருகாங்க!" என அவள் பதில் சொல்ல, "சாரி! உன்கிட்ட என்ன எதுன்னு கூட நான் கேக்கல' என்ற தீபன், "இப்ப எப்படி இருக்காங்க! பயப்பட ஒண்ணும் இல்லையே!" என்று கேட்க, "ப்ச்.. என்ன சொல்றதுனு தெரியல! நாளைக்கு காலைல தெரியும்!" என்றவள் ஏதோ சொல்ல வந்து, பின் உதட்டைக் கடித்து வார்த்தைகளை அடக்கினாள். அவள் மிக முயன்று அழுகையை அடக்குவது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.


திலீப்பை வைத்துக்கொண்டு அவள் பேசத் தயங்குவதும் புரிந்தது.


"ஓ மை காட்! அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது வசு! பயப்படாத!" என்றான் திலீப் ஆறுதல் வார்த்தையாக!


தன்னை சமாளித்துக்கொண்டு, "ஐ.சி.யூ க்கு வெளியில அப்பா உக்காந்துட்டு இருக்காங்க! இந்த ஹாட் வாட்டரை கொடுத்துட்டு வந்துடறேன்! நீங்க பிளட் பேங்க் போங்க!" என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்றாள் மித்ரா.


இருவருமாக பிளட் பேங்க் நோக்கிச் செல்ல, அங்கே சிறிய கும்பலே இருந்தது.


எல்லோர் முகத்திலும் இருந்த கவலையும் வேதனையும் அவனுடைய மன வேதனையை மேலும் கிளற, துவண்டு போய் நின்றிருந்தான் தீபன்.


சில நிமிட காத்திருத்தலுக்குப் பிறகு அவன் அழைக்கப்பட, அதற்குள் வசுமித்ராவும் அங்கே வந்தாள்.


"பி பாசிட்டிவ் பிளட்தான்! ஆனா இப்ப எங்க கிட்ட ஸ்டாக் இல்ல! யாராவது டோனர் இருக்காங்களா!" என அங்கிருந்த பெண்மணி கேட்க, "என்ன இப்படி ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாம பேசறீங்க! அப்பறம் எதுக்கு இந்த ஹாஸ்பிடல்! இந்த பிளட் பேங்க் எல்லாம்!" என திலீப் எகிற, "ப்ச்! சும்மா இரு திலீப்!" என்றவன், "என்னோடது பி பாசிட்டிவ் பிளட்தான்! நான் ரத்தம் கொடுக்கறேன்!" என்றான் தீபன்!


அவனை வினோதமாக பார்த்த அந்த பெண், "சாரி சார்! நீங்க ட்ரிங்க் பண்ணி இருக்கீங்க போல இருக்கே!" எனத் தயக்கத்துடன் சொல்ல, மித்ராவும் பார்வையில் கனலைத் தோய்த்து அவன்மேல் வீசவும், அவனுடைய சுய மரியாதை மொத்தமாக அடிவாங்கிப்போனது!


குற்ற உணர்வில் அவன் தலை குனிய, வசு திலீப்பை பார்க்கவும் அவனும் தலை குனிந்தான் அவளது பார்வையை எதிர்கொள்ள இயலாமல்!


பின்பு ஒரு நொடி கூட தயங்காமல், "சிஸ்டர் நான் ஓ நெகடிவ் டோனர்! என்னோட பிளட் அவங்களுக்கு மேட்ச் ஆகும்! நான் கொடுக்கறேன்!" என வசு சொல்ல, "ஓகே மேம்! ஆனா அது ரேர் க்ரூப் இல்ல!


இங்க ஒரு சர்ஜரிக்கு அந்த பிளட் தேவை படுது! அந்த பேஷண்டோட ரிலேட்டிவ் யாராவது பி பாசிட்டிவ் பிளட் ரீப்லேஸ் பண்றங்களான்னு கேக்கறேன்! ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!" என அந்த பெண் சொல்ல, அதற்கு அவள் சம்மதமாகத் தலை அசைக்கவும், அவளைத் தடுக்கும் சூழ்நிலையில் தீபன் இல்லாமல் போக, வசுவை உள்ளே அழைத்துச்சென்றார் அவர்.


***


அருணாவும் சரிகாவும் மாற்றி மாற்றி கைப்பேசியில் அழைத்தவண்ணம் இருக்க, அப்பொழுதுதான் கொஞ்சம் அவகாசம் கிடைக்கவும், ஏதேதோ காரணம் சொல்லி அன்று இரவு வீட்டிற்கு வர இயலாது எனச் சொல்லிவிட்டான் தீபன்.


அவ்வப்பொழுது அப்படி நடப்பதால் அருணா இயல்பாக எடுத்துக்கொள்ள, சரிகாவின் அதிருப்தி அவளது குரலியிலேயே தெரிந்தது.


அதுவும் சந்தோஷுடைய கைப்பேசி நொறுங்கிப்போயிருக்க, அது 'சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது' என வரவும், "ப்ச்! உங்க மாப்பிளை பேச மாட்டாரா! நாளைக்கு நேர்ல வரட்டும் கவனிச்சுக்கறேன்!" என அவள் சொல்லவும், அவனுக்கு விபத்து என்பதைக் கேள்விப்பட்டால் அவளுடைய நிலை என்னவாக இருக்கும் என்ற பயத்தில் அவனுடைய உடல் சில்லிட்டுப் போனது.


இதற்கிடையில் சென்று மித்ராவின் அப்பாவைப் பார்த்து விசாரித்துவிட்டு வந்தான் திலீப்.


உள்ளே சென்ற வசுமித்ரா திரும்ப வரும்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகியிருந்தது.


ஏற்கனவே அவன் இருந்த மனநிலையில் , அவளுடைய களைத்த முகத்தைப் பார்க்கவும் அவனுடைய குற்றவுணர்ச்சி பலமடங்கு அதிகமாகிப்போனது.


"சாரி மித்து!" என அவன் மெல்லிய குரலில் சொல்ல, "நான் போய் அம்மாவை பார்த்துட்டு, அப்பா கிட்ட சொல்லிட்டு வரேன்.


ரூம் ரெடி பண்ணிட்டாங்களா பாருங்க!" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் மித்ரா.


அங்கே இருந்த இருக்கையிலேயே சாய்ந்து உறங்கிப்போயிருந்த திலீப்பின் தோளைத் தீபன் தொட, அவன் விழித்துக்கொள்ளவும், "சாரி டா மச்சான்! ரியலி வெரி சாரி!" என தீபன் சொல்ல, அவனை வினோதமாகப் பார்த்தவன், "நீ மச்சான்னு சொன்னதுக்காகவே என்ன வேணா செய்யலாம்!" என்று சொல்லிவிட்டு, "வசு இன்னும் வரல!" என அவன் கேட்க, "அவங்க அம்மாவை பார்க்க போயிருக்கா! வா நாம போய் சந்தோஷை கவனிக்கலாம்" என தீபன் சொல்லவும், அங்கிருந்து சென்றனர் இருவரும்.


***


நட்சத்திர விடுதியின் அறை போன்றே எல்லா வசதிகளுடனும் இருக்கும் அறைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தான் சந்தோஷ்.


அவனுக்கு ரத்தம் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.


கொடுக்கப்பட்டிருக்கும் மருந்துகளின் புண்ணியத்தில் மயக்க நிலைக்குச் சென்றிருந்தான் அவன்.


அவன் அறைக்கு மாற்றப்பட்டவுடனேயே தீபன், திலீப்பை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட, அந்த தனிமை அவனுக்கு ஒரு வெறுமையைக் கொடுக்க, மிகவும் களைப்பாக இருக்கவும், துணைக்கு இருப்பவருக்காக அருகில் போடப்பட்டிருந்த கட்டிலில் கண் மூடி படுத்திக்கொண்டான் தீபன்.


உறக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் ஒரு நிலையில் அவன் இருக்க அவனுக்கு அருகில் நிழல் ஆடுவதுபோல் தோன்றவும், அவன் கண் விழித்துப் பார்க்க அங்கே நின்றுகொண்டிருந்தாள் மித்ரா!


அவளைப் பார்த்ததும் அவன் எழுந்து உட்கார, "என்ன சார்! சிக்னலுக்கு சிக்னல் பத்தாயிரம் கொடுத்தீங்களா!


இந்த ஆக்சிடென்ட் போலீஸ் கேஸ் ஆகாம இருக்க எவ்வளவு கொடுத்தீங்க!" என அவள் மிக எகத்தாளமாகக் கேட்க, உண்மையில் திலீப் யாருடனோ பேசி அந்த விஷயம் பெரிதாகாமல் இருக்க ஏதோ செய்திருந்தான். அந்த நிஜம் மனதைச் சுடவும், "ஏய்!" என அடிக்குரலில் உறுமினான் தீபன்!


"உண்மையை சொன்னா உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வரணும்!


போதை ஏறினா மட்டும் அவ்வளவு ப்ளெஷரா இருக்கில்ல ம்ம்!


உங்க மாப்பிளைக்கு ஒண்ணுன்னா உங்களுக்கு வலிக்குது இல்ல! இதே வேற யாருக்கோ இப்படி ஆகி இருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க!


உங்க பணத்தால மூடி மறச்சிருப்பீங்க இல்ல!


அன்னைக்கே குடிச்சிட்டு வண்டி ஓட்டாதீங்கன்னு சொன்னேன் இல்ல!


"ட்ரிங்க் அண்ட் ட்ரைவ்! ஹிட் அண்ட் ரன்! இதெல்லாம் நம்ம ஊருல சகஜம் இல்ல?!


பணத்தை வெச்சு மூடி மறைச்சிடலாம் இல்ல!


ஒரு நிமிஷத்துல பத்தாயிரம் சம்பாதிக்கறவங்க நீங்க! பணத்தைக் கொடுத்து எந்த எல்லைக்கும் உங்களால போக முடியும்! ஆனா உங்க தங்கை வீட்டுக்காரருக்கு ஒரு யூனிட் பிளட் கொடுக்க முடிஞ்சுதா உங்களால!" குரலை உயர்த்தாமல் ஆனால் கடுமையாகப் பேசிக்கொண்டே போனாள் மித்ரா!


"ஸ்டாப் இட் மித்ரா! விட்டா பேசிட்டே போற!


என்னைப் பார்த்தால் குடிகாரன் மாதிரி தோணுதா உனக்கு!" என அவன் தீவிரமாகக் கேட்க, "அப்படினா நீங்க குடிகாரன் இல்லையா என்ன?


டாஸ்மாக்ல க்யூல நின்னு வாங்கி குடிச்சா தான் குடிகாரனா!


இம்போர்ட்டட் லிக்கர்னு ஸ்டைலா சொல்லிட்டு குடிச்சா நீங்க பெரிய மகானா ஆகிடுவீங்களா என்ன? குடிகாரன்! குடிகாரன்தான்!


உங்க மாப்பிள்ளை இந்த நிலைமையில இருக்க நீங்கத்தானே காரணம்!" அவளுடைய குத்தல் பேச்சு தொடரவும், வேகமாக எழுந்து கோபத்துடன் அவளுடைய கழுத்தைப் பிடித்தவன், அதே வேகத்துடன் அவளை விடுவிக்க, தடுமாறி கட்டிலில் விழுந்தாள் மித்ரா!


கோபம் இருந்தாலும் அதில் வேதனை கலந்த அவனுடைய முகத்தைப் பார்த்தவள், "நான் ஏதோ கோவத்துல சொல்லிட்டேன்; இனிமேலாவது இந்த பழக்கத்தை விட்டுடுங்க ப்ளீஸ்!" என தன்மையாகச் சொல்லவும், அவளது கலங்கிய கண்களைப் பார்த்ததும் அவனது கோபம் மொத்தம் வடிந்து போக, அவளுடைய கையை பிடித்து அவளைத் தூக்கியவன், அவளை மென்மையாக அணைத்துக்கொள்ள, சங்கடத்துடன் அவள் அவனைத் தள்ளவும், அவனது அணைப்பை இறுக்கியவன், "புரிஞ்சிக்கோ மித்து இது நானா விரும்பி ஏற்படுத்திகிட்ட பழக்கம் இல்ல!


சரிகாவோட இன்சிடெண்ட்க்கு பிறகு என்னோட வாழ்க்கையே மாறிப்போச்சு!


என் ஆசைகள்; கனவுகள்; இலட்சியங்கள் எல்லாத்தையுமே தூக்கி எறிஞ்சிட்டு இந்த பாதைல வந்திருக்கேன்!


உனக்கு தெரியாது மித்து இந்த ஜவஹரையும் சேர்த்து என்னால இதுவரைக்கும் நாலு பேர் செத்துப்போயிட்டாங்க!


என்னதான் அவனுங்க குற்றம் செஞ்சிருந்தாலும் அவங்க சாவுக்கு நான் காரணம்ங்கற எண்ணம் என்னை கொன்னுட்டே இருக்கு!


ஒரு கொலை செய்யற அளவுக்கெல்லாம் எங்கம்மா என்னை கெட்டவனா வளர்க்கல!


நான் இந்த இடத்தை அடைய என்னவெல்லாம் செஞ்சிருக்கேன்னு உனக்கு தெரியாது!


நான் ஹாப்பியா இதையெல்லாம் செய்யல! ரொம்ப ரசிச்சு ரசிச்செல்லாம் செய்யல!


நான் என் மனசாட்சிக்கு விரோதமா இப்படி எதாவது செய்யும்போதெல்லாம் அதை மறக்க என் உடம்பு டயர்ட் ஆகற அளவுக்கு ஜிம் ஒர்க் அவுட்ஸ் செய்வேன்! இல்லனா எதாவது விளையாடுவேன்!


ஆனா அதெல்லாம் கூட பத்தாமதான் இந்த பழக்கம் வந்தது!


சிம்பிளா சொல்லனும்னா என்னோட குற்ற உணர்ச்சிய போக்கிக்க இப்படி ஒரு சீப் ஹாபிட்!


யூ நோ மித்து! நான் சின்ன வயசுல இருந்தப்ப எங்க அப்பா ரொம்பவே பிசி! நான் எல்லா விஷயத்தையும் அம்மா கிட்டத்தான் ஷேர் பண்ணுவேன்!


அதுவும் ஸ்கூல் படிப்பு முடிகிற வரைக்கும்தான்!


அதுக்கு பிறகு ஏதோ ஒரு ஸ்பேஸ் வந்துடுச்சு!


அதுவும் அந்த சம்பவங்களுக்கு பிறகு என்னோட பீலிங்ஸ் எதையும் யார் கிட்டயுமே என்னால ஷேர் பண்ண முடியல!


சந்தோஷ் கிட்ட கூட ஓரளவுக்குத்தான்!


பட் நான் சொல்லாமலேயே என்னை ஓரளவுக்கு புரிஞ்சுக்கிட்டவங்க பாரதி மேம் மட்டும்தான்!


இப்ப நான் சம்பாதிச்சு வெச்சிருக்கிற பணம்! இந்த பொசிஷன் இது எதுவுமே எனக்கு சந்தோஷத்தை கொடுக்கல!


நான் ஆசைப்பட்ட மாதிரி ஒரு ஸ்பேஸ் சைன்டிஸ்ட் ஆகி இருந்தால் நான் ரொம்ப கரெக்ட் பெர்சனா இருந்திருப்பேனோ என்னவோ!" நெகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தவனின் கைகள் தானாக தளர்ந்துபோக, அதுவரை ஒரு கம்பீரமும் முரட்டுத்தனமும் நிறைந்த ஆண் மகனாக மட்டுமே அவளுடைய கண்களில் நிறைந்திருந்தவனுக்குள் ஒளிந்திருந்த ஒரு மென்மையான இதயத்தின் துடிப்பை அவள் தனக்குள்ளும் உணரவும் அவளது கண்கள் கண்ணீரை உதிர்க்க, இப்பொழுது வசுமித்ராவின் கரங்களுக்குள் வாகாக அடங்கியிருந்தான் தீபப்பிரகாசன்!

Recent Posts

See All
Poovum Naanum veru-Epilogue

இதழ்-36 கடைக்காப்பு அத்தியாயம்! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும்...

 
 
 
Poovum Naanum Veru-35

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத்...

 
 
 
Poovum Naanum Veru-34

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான்...

 
 
 

留言

評等為 0(最高為 5 顆星)。
暫無評等

新增評等
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page