top of page

Poovum Naanum Veru! 8

இதழ்-8


பகலவனைக்கண்டு மலருமாம் தாமரை!

வெண் மதியைக் கண்டு பூக்குமாம் ஆம்பலும்!

மின்னல் வெட்டும் ஒளியில் விரியுமாம் தாழையுமே!

நீயே என் பகலவன்!

நீயே என் முழு மதியும்!

மின்னல் போல என் வாழ்வில் தோன்றி மறைந்தவனும் நீயேதான்!

உனைக் கண்டு மலராமல்...

தொட்டால் சிணுங்கியாய்... 

என்னுள்ளே நானே சுருங்கிப்போவதால்...

பூவும் நானும் வேறுதான்!


மிக மும்முரமாக அவனது மடிக்கணினியில் ஆழ்ந்திருந்த தீபனின் கைப்பேசி ஒளிர்ந்து, அதில் ஏதோ அழைப்பு வருவதை அவனுக்கு உணர்த்த, அது யார் என்பதைக் கூட பார்க்காமல் அந்த அழைப்பை ஏற்றவன், "சொல்லுங்க மேம்!" என்றான் எதிர் முனையில் இருப்பது பாரதிதான் என்ற முடிவுடன்.


அவன் பதில் கொடுத்த வேகத்தை உணர்ந்து, "ஸோ... என்னோட காலை நீ எக்ஸ்பெக்ட் பண்ணிட்டுதான் இருந்த ரைட்!" எனக் கொஞ்சம் காரமாகக் கேட்டவர், "எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டுதான் ஹாஸ்பிடலுக்கே வந்திருக்க!


அவ்வளவு அவசியமா உன் ஸ்டாஃபோட அப்பாவை நீ பார்க்க வந்திருக்கேன்னு சொன்ன போதே நான் யோசிச்சேன்.


ஸோ... நீ அங்க வந்தது வசுந்தராவ பார்க்கத்தான் இல்ல?


நீ லீக் பண்ணியிருக்கும் வீடியோ அவளோட போன்ல இருந்து எடுத்ததுதானே?" எனக் கேள்விகளைத் தொடுத்துக்கொண்டே போனார் பாரதி.


"மே....ம்! சமயத்துல நீங்க கூட உணர்ச்சிவசப்பட்டு போயிடறீங்க! இன்னைக்கு பீபீ மாத்திரை எடுக்கலையா?" என அவரது பதட்டத்தைச் சுட்டிக்காட்டியவன், "இதெல்லாம் போன்லயே பேச முடியாது இல்ல? இந்த பாதி ராத்திரில வேண்டாம்; நாளைக்கு நேரில் வந்து விளக்கமா சொல்றேன்!


ப்ளீஸ் பீபீ மாத்திரை போட்டுட்டு தூங்குங்க!" என்றான் தீபன் நிதானமாக.


"நேரில் வா; உனக்கு இருக்கு" என்ற மிரட்டலுடன் அந்த அழைப்பைத் துண்டித்தார் அவர்.


அவரது மிரட்டலில் தொனித்த உரிமைத்தன்மையில் முகத்தில் மலர்ந்த புன்னகையுடனேயே மறுபடியும் மடிக்கணினிக்குள் புகுந்துகொண்டான் தீபன்.


***


அடுத்த நாள், தலையில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக, கால அவகாசம் பெற்று பள்ளிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாள் வசுந்தரா.


தலைமை ஆசிரியர் அறையில் அப்பொழுது காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்க, பள்ளிக்கூடமே வெகு பரபரப்பாக இருந்தது.


அவர்களுடைய தலைமை ஆசிரியரின் முகம் வேறு கடுகடுவென இருக்க, அவர் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார் என்பது அவளுக்கு நன்றாகவே விளங்கியது.


அந்த காணொளியில் சிக்கிய மாணவர்களில் மூன்றுபேர் மட்டும் முந்தைய இரவு நடந்தது எதையும் அறியாமல் பள்ளிக்கு வந்திருக்க, மற்ற மூவரும் அதுவரை அங்கு வரவில்லை.


வராத மற்ற மூன்று மாணவர்களையும் அவர்கள் அனைவரின் பெற்றோரையும் உடனே அங்கே வரச்சொல்லி தொலைப்பேசி மூலம் தகவல் அனுப்பப்பட்டிருந்தது.


ஒரே இரவுக்குள் சமூக வலைத்தளங்களிலும் அதன் மூலம் மற்ற ஊடகங்களிலும் 'ட்ரெண்டிங்' ஆகியிருந்த அந்த காணொளியில் வசுந்தராவின் உருவம் பதிவாகவில்லை என்றாலும், விசாரணையில் அந்த மாணவர்கள் அவளைப் பற்றிச் சொல்லியிருந்தனர், அவள் கைப்பேசியில் அங்கே நடந்தவற்றைப் பதிவு செய்தது உட்பட.


எனவே அங்கே வந்திருந்த பெண் துணை ஆய்வாளர், அதுபற்றி அவளிடம் கேள்விகள் கேட்க, முந்தைய தினம் நடந்த அனைத்தையும் சொன்னாள் வசுந்தரா.


"நேத்து சோஷியல் மீடியால எல்லாம் வந்த வீடியோ நீங்க ரெக்கார்ட் செய்ததா?" என அவர் கேட்க, "இல்லை! நான் ஒரு வீடியோ ரெக்கார்ட் பண்ணேன். பட் அது கை பட்டு டெலீட் ஆயிடுச்சு" என அவள் உண்மை நிலையைச் சொல்ல, துணை ஆய்வாளர் அதை நம்பத் தயாராக இல்லை.


"பரவாயில்லை! எங்க ஐ.டி விங்ல கொடுத்து டெலீட் ஆன அந்த வீடியோவை நாங்க ரெகவரி செஞ்சிடுவோம்.


ஸோ... உங்க மொபைல் போனை நாங்க சீஸ் பண்ணி எடுத்துட்டு போறோம்! இந்த கேஸ் முடியற வரைக்கும் அது எங்க கிட்டத்தான் இருக்கும்.


உங்களுக்கு அந்த போன் உடனே தேவைப்பட்டால், அபிஷியலா ஒரு லெட்டர் கொடுங்க! சில நிபந்தனைகளோட திருப்பி கொடுப்பாங்க!" என்று சொல்லி, மேற்கொண்டு விசாரணைக்காக அவளது கைப்பேசியை அவர்களிடம் ஒப்படைக்கும்படி சொன்னார் உடன் இருந்த ஆய்வாளர்.


பாரதியை அழைத்து அவரிடம் இதுபற்றி கூறலாம் என அவள் எண்ணினாலும், அதிலிருந்து யாரையும் அழைத்துப்பேச அவளை அனுமதிக்கவில்லை அவர்கள். வேறு வழியின்றி அவளது கைப்பேசியை அவர்களிடம் கொடுத்தாள் வசுந்தரா.


அதன்பின் மற்ற மூன்று மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் ஒவ்வொருவராக அங்கே வர, அவர்கள் அதிகாரத்திற்கு உட்பட இடத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அவர்களுடைய மேலிடத்திலிருந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்ததில் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஆய்வாளர், அந்த மாணவர்கள் வந்த விதத்தையும், அவர்களுடைய அலட்சியத்தையும் கண்டு கொதித்துப்போய், "உங்க பெத்தவங்கள பாருங்க! எல்லாரும் தினக் கூலிக்கு வேலை செய்யறவங்கதான!


நீங்களாவது முன்னேறணும்னு சொல்லித்தானே படிக்க அனுப்பறாங்க, இப்படித் தறி கெட்டு அலையறீங்க!


கஞ்சா அடிக்கற வயசாடா உங்களுக்கு?" எனக் கேட்டுக்கொண்டே அவர்களை நன்றாக வெளுத்து வாங்கினார்.


அங்கே இருந்த ஒருவராலும் அவரை தடுக்க இயலவில்லை. பேசாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.


அதனைக் கண்டு பொறுக்க முடியாமல், வேதனை குரலில், "ப்ளீஸ்! ப்ளீஸ்! இவங்கள அடிச்சு ப்ரயோஜமே இல்ல! இவங்க பேரன்ஸுக்கே இதுல இருக்கும் ஆபத்து புரியாது.


இவங்க அப்பாக்கள் பலபேர் வேலை முடித்து கூலி வாங்கின உடனே டாஸ்மாக் தேடி போறவங்கதான்.


குடிச்சிட்டு அவங்களே பொறுப்பில்லாம இருக்கும்போது அதைப் பார்த்து வளரும் பசங்க எப்படி இருப்பாங்க?


நல்ல பண்பான பெத்தவங்கள பார்த்து வளரும் பிள்ளைகளே தறிகெட்டு போறாங்க!" என வசுந்தரா மட்டும் அவர்களுக்கு பரிந்து வர,


"என்ன மேடம் தெரிஞ்சுதான் பேசறீங்களா? இப்ப இவங்கள அரெஸ்ட் பண்ணி ஜுவானியல் கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணனும் தெரியுமா?" என அந்த ஆய்வாளர் அவளிடம் கேட்க,


"வேண்டாம் சார்! இவங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து, மறுபடியும் இப்படி போகாம திருந்தி நல்லபடியா வாழ உதவி செய்யணும்!


ரீஹேபிலிடெக்ஷன் சென்டர்ல சேர்க்க உதவி பண்ணுங்க! தண்டிக்க வேண்டாம்!" என அவள் கெஞ்சலாகக் கேட்கவும், அந்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களைக் கைது செய்யாமல், அந்த மாணவர்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபட, அவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்துவிட்டு, வசுந்தரவிடமிருந்து எழுத்துப்பூர்வமாகப் புகார் மனு ஒன்றைப் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து சென்றனர் காவல்துறையினர்.


அனைவரும் அங்கிருந்து சென்ற பிறகு, வசுந்தராவை அழைத்த அவர்களுடைய தலைமை ஆசிரியர், "ஏம்மா உங்களுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம். ஸ்கூலுக்கு வெளியில இந்த பசங்க என்ன செஞ்சா உங்களுக்கு என்ன? இப்ப பாருங்க எவ்வளவு பிரச்சினை!" என தன் கோபம் முழுவதையும் கொட்டி அவளிடம் கடுமையுடன் கேட்க,


"எப்படி சார் இவ்வளவு ஈஸியா இப்படி கேக்கறீங்க. இந்த ட்ரக் அடிக்ஷன் இந்த பிள்ளைகளோட எதிர்காலத்தையே நாசம் செஞ்சிடாதா?


அது மட்டும் இல்ல! திருட்டு, பாலியல் ரீதியான குற்றங்கள், தொடங்கி கொலை வரை பல சமூக விரோத நடவடிக்கைகளுக்கு இந்த பழக்கம் அடித்தளம் அமைச்சு கொடுக்கும்னு உங்களுக்கு தெரியுமா?


நீங்க வேணா பத்திரமா இருந்துக்கோங்க. என்னைத் தடுக்க முயற்சி செய்யாதீங்க!" என அவருக்கு அனல் தெறிக்கப் பதில்கொடுத்துவிட்டு, வகுப்பறை நோக்கிப் போனாள் வசுந்தரா அவளுடைய பிள்ளைகளுக்குப் பாடம் நடத்த.


***


முந்தைய இரவு சொன்னதுபோலவே பாரதியின் வீட்டிற்கு வந்திருந்தான் தீபன்.


ரயிலம்மா கொண்டுவந்து கொடுத்த காஃபியை பருகியவாறே, "என்ன சொல்லணுமோ இப்ப சொல்லுங்க!" என்று சொல்லிவிட்டு, "ம்ஹும்! திட்டுங்க!" என்று அவன் புன்னகைக்க, "திட்றதா! நீ செஞ்சு வெச்சிருக்கும் வேலைக்கு உன்னை நல்லா முட்டிக்கு முட்டி தட்டணும்!" என அவரும் விட்டுக்கொடுக்காமல் பேச, "நீங்க அப்படி செஞ்சாலும் நான் அதை மறுக்காமல் வாங்கிப்பேன் மேம்!" எனச் சொல்லி ஒரே வார்த்தையில் அவரை நெகிழச்செய்தான் தீபன்.


"படவா! பேசியே ஆளை கவுத்திடு!" என்றவர், "ஏன் தீபன் நீ அவளோட போனை ட்ராப் பண்ற இல்ல? பட் ஒய்?


அவளைப் பத்தி தெரிஞ்சிக்க எதுக்கு உனக்கு இவ்வளவு ஆர்வம்?" என அவர் இரக்கத்துடன் கேட்க,


"ப்ச்! நீங்கதான் காரணம்! திலீப்பை பொறுத்தவரை உங்க அக்கா மகன்! அவன் கிட்ட உங்களுக்கு ஏகப்பட்ட பாசம்! அது நேச்சர்தான?


ஆனா நான் யாரு? என்னை ஏன் உங்களுக்கு பிடிச்சுது?


உங்க மனசுல எனக்கு நீங்க கொடுத்திருக்கும் ஒரு இடத்தை, அதே அளவுக்கு" என்றவன் சில நொடிகள் நிறுத்தி, "அதைவிடவும் அதிகமாவோன்னு தோணுது; அந்த வசுந்தராவுக்கு கொடுக்க காரணம் என்ன?


இதை தெரிஞ்சுக்கத்தான் அப்படி பண்ணேன்!" என அவன் நிதானமாகவே சொல்ல,


"நான்சன்ஸ்! அன்புக்கெல்லாம் மெஷர்மென்ட் டேப் வெச்சிருக்கியா தீபன் நீ!" என ஆயாசத்துடன் கேட்டவர், "இப்ப அவளை பத்தி என்ன கண்டுபிடிக்க முடிஞ்சுது உன்னால?" என்று கேட்டார் திவ்யபாரதி.


அதற்கு எள்ளலாக, "வசுந்தரா அவ பேர் இல்ல! அது உங்க அம்மாவோட பேர்! அவ பேர் வசுமித்ரா! அவளோட அம்மா அப்பா தவிர மத்தவங்க எல்லாருக்கும் மித்ரா!


அவ அப்பாவோட பேர் செல்வராகவன். அம்மாவோட பேர் கலைவாணி! அதாவது கலைவாணி டீச்சர்!


எல்லாத்துக்கும் மேல அவளோட அண்ணனோட பேர் வசந்த்!" என்ன கரெக்ட்டா?" என அவன் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க, அதிர்ந்துபோய், "எப்படியும் நீ கண்டு பிடிச்சிடுவேன்னு எனக்குத் தெரியும் தீபன்; ஆனா இவ்வளவு சீக்கிரம் நான் இதை எதிர்பார்க்கல" என்றவாறு எழுத்தே நின்றுவிட்டார் பாரதி.


அவரது கையை பிடித்து அவரை உட்காரவைத்தவன், "எல்லா கேள்விக்கும் என்கிட்ட பதில் இருக்கு! ஒண்ணே ஒண்ணை தவிர!


அந்த வசந்த் இப்ப எங்க இருக்கான்!


எந்த கண்ட்ரிக்கு ஓடிப்போய் ஒளிஞ்சிட்டு இருக்கான்?" என அவன் நேரடியாகக் கேட்கவும்,


"அந்த வசந்த் எங்க போனான்னு யாருக்குமே தெரியாது தீபன்! நான் சொன்னா நீ நம்பித்தான் ஆகணும்!" என்றார் பாரதி ஆயாசத்துடன். 'இதற்குமேல் இதைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதே!' என்பது போல்.


"நீங்க என்னதான் மூடி மறைச்சாலும்! நானே அவனைக் கண்டுபிடிப்பேன்! அன்னைக்கு என் கையாலதான் அவனுக்கு சாவு! " என்று வெறியுடன் அவன் சொல்லவும், 'உன்னால அவனைக் கண்டுபிடிக்கவும் முடியாது; கொல்லவும் முடியாது தீபன்!' என மனதிற்குள் எண்ணிக்கொண்டார் பாரதி!


எட்டு ஆண்டுகளுக்கு முன் அவனை முதன்முறை சந்தித்தது முதல், இன்று வரை அவரது பேச்சிற்கு மட்டும் கட்டுப்படுவான் தீபன், அதுவும் அவன் அவரிடம் கொண்டிருக்கும் அளவுகடந்த மரியாதையின் காரணமாக என்பதில் அவருக்கு அளவுகடந்த நம்பிக்கை உண்டு.


ஆனாலும் வசுந்தராவை பொருத்தமட்டும் அந்த நம்பிக்கையை அவன் உடைத்துக்கொண்டிருக்கிறான் என்பதும் அவருடைய மனதிற்கு நன்றாகவே புரிந்தது.


தீவிரமாக ஒரு செயலில் இறங்கிவிட்டால், எக்காரணம் கொண்டும் அதிலிருந்து அவன் பின்வாங்க மாட்டான் என்பதும் அவர் அறிந்ததே.


அவனுடைய பிடிவாத குணத்தை உடைப்பதும் நடக்காத காரியம் என்பதும் அவர் உணர்ந்ததே.


வசுவிற்கு தீபனால் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்ற கவலை அவர் மனதை அரிக்கத்தொடங்கியது.


"தீபா வசு ரொம்ப நல்ல பொண்ணுப்பா! அவ எந்த தப்பும் செய்யல; புரிஞ்சிக்கோ!" என அவர் அவளுக்காக பேச, "அவ தப்பு செஞ்சாளா இல்லையான்னு எனக்கு நல்லாவே தெரியும் மேம்!


நான் உங்க மேல அளவுகடந்த மரியாதை வெச்சிருக்கேன். அவளால உங்களையே எதிர்த்துப்பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுப்போச்சு!


என்னை மன்னிச்சிடுங்க" என வருத்தத்துடன் சொன்னவன், "நேத்து சொன்னதுதான்; நான் யாரோ செய்த தப்புக்கு யாரையோ பழிவாங்க மாட்டேன்; ப்ளீஸ் மேம்! என்னை நம்புங்க" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் தீபன்.


வசுந்தரா மற்றும் தீபன் இருவரில் யார் பக்கம் நிற்பது எனப் புரியாமல் கலங்கிப்போனார் பாரதி, தன் படிப்பு தான் வகித்த பதவிகள் எல்லாவற்றையும் மறந்து மனித நேயம் உள்ள ஒரு சாதாரண பெண்மணியாக.


***


அந்த இடுகாட்டில் கஞ்சா வியாபாரம் செய்தவர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது காவல்துறை.


ஒரு வேளை, டீ.பீ லீக்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த அந்த காணொளி வசுந்தராவின் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டதாக இருக்கும் பொருட்டு, அந்த டீ.பீ யார் என்பதைக் கண்டுபிடிக்க இயலுமா என்ற ரீதியில் வேறு அவர்களுடைய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


அப்படி இருக்கும் பட்சத்தில், அந்த வழக்கு 'சைபர் க்ரைம்' பிரிவுக்கு மாற்றப்படலாம் என்ற நிலையும் இருந்தது.


எனவே மேலிடத்தின் உத்தரவின்படி போதை மருந்து விற்பனை தொடர்பான வழக்கை விசாரணை செய்யும் ஆய்வாளர், வசுந்தராவினுடைய கைப்பேசியில் இருக்கும் தகவல்களை ஆராயும் பொருட்டு காவல்துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் அதை ஒப்படைத்திருந்தார்.


அங்கே பணியில் இருக்கும் அதிகாரி, அணைத்துவைக்கப்பட்டிருந்த அந்த கைப்பேசியை உயிர்ப்பித்து, அதனை அவர்களுடைய கணினியில் இணைக்க, அடுத்த நொடி, அந்த கைப்பேசியின் திரை மாறி மாறி ஒளிர்வதும் அணைவதுமாக இருக்கவும், அதனைக் கணினியிலிருந்து பிரித்து எடுக்க, அது முழுவதுமாக செயலிழந்து போனது.


உடனே அவர் அதனை ஆராயவும், கணினி மற்றும் கைப்பேசிகளைச் செயலிழக்கவைக்கும் ஒரு புதுவிதமான நச்சுநிரல் அதாவது 'வைரஸ்' பாதிப்பால் அந்த கைப்பேசியை இனி பயன்படுத்தவே இயலாத அளவிற்கு முற்றிலும் செயலிழந்து போயிருப்பது அந்த கணினியியல் வல்லுநருக்குப் புரிந்துபோனது.

Recent Posts

See All
Poovum Naanum veru-Epilogue

இதழ்-36 கடைக்காப்பு அத்தியாயம்! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும்...

 
 
 
Poovum Naanum Veru-35

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத்...

 
 
 
Poovum Naanum Veru-34

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான்...

 
 
 

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page