top of page

Poovum Naanum Veru (9)

இதழ்-9


மேலே அமைதியைப் போர்த்தி...


உள்ளுக்குள்ளே கனன்றுகொண்டிருக்கும் எரிமலை நான்.


எந்த நொடிப்பொழுதும் வெடித்துச் சிதறுவேன் என்றறிந்தும்...


என்னருகே மலர்ந்து நின்றால் மலர்களும் தீப்பற்றும் என்றறிந்தும்...


தீக்குள் விரலை வைக்க நீ துணிவதால்...


பூவும் நீயும் வேறுதான்!


சில தினங்கள் கடந்த நிலையில், ஒரு நாள் மாலை நேரம் அவனுடைய அறையில் பெட்டியில் அவனுடைய உடைகளை அடுக்கியவாறு, அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்த தீபன், அவனுக்கு காஃபியை எடுத்துவந்த அருணாவிடம், "ம்மா! என்னோட பாஸ்ப்போர்ட்ட பார்த்தீங்களா! எங்கேயோ மிஸ்பிளேஸ் ஆகியிருக்கு!" எனப் படபடக்க,


"என்னடா தீபா என்னை இப்படி பதைபதைக்க வெக்கற! உன் செர்டிபிகேட்ஸ் இருக்கும் பைல் குள்ளத்தானே வெச்சிருப்ப; தேடிப்பாரு" என சொல்லிக்கொண்டே முக்கிய ஆவணங்களை வைக்கும் அலமாரியிலிருந்து ஒரு கோப்பை எடுத்து அவனிடம் நீட்டினார் அவனுடைய அம்மா அருணா.


கைப்பேசியில் மணியைப் பார்த்துக்கொண்டே, அவன் அந்த கோப்பின் பக்கங்களைத் திருப்ப, அவனது கண்ணில் பட்டது அந்த அழகிய வாழ்த்து அட்டை!


புசு புசுவென 'டெட்டி பியர்' ஒன்று 'ஹாப்பி பர்த்டே' என எழுதப்பட்ட கண்ணாடியால் செய்த அழகிய இதயம் ஒன்றைக் கையில் வைத்திருப்பதுபோல் படம் போடப்பட்டிருக்க, அதன் கீழே குண்டு குண்டாக அழகிய கையெழுத்தில், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்; அன்புடன் சரிகா & மித்ரா’ என எழுதப்பட்டிருந்த அந்த வாழ்த்து அட்டையிலிருந்து அவனது கண்களைப் பிரிக்க இயலாமல் தவித்தவன், நேரம் ஆவதை உணர்ந்து அதை மூடி வைத்தான் தீபன்.


அதற்குள் அவனுடைய அப்பா அரங்கநாதன், "தீபா பிளைட் டிக்கெட் கூடவே அதை வெச்சிருக்க பாரு!


ஆட்டை தோளிலேயே போட்டுட்டு தேடின கதைதான் போ!" என்றவாறு அவனுடைய கடவுச்சீட்டு, விமான பயணச்சீட்டு அனைத்தையும் கொண்டுவந்து அவனிடம் கொடுக்க, “தேங்க் காட்!" என்றவாறு அதனை வாங்கி அவனது மடிக்கணினியை வைக்கும் பைக்குள் அதனை வைத்துப் பத்திரப்படுத்தினான் தீபன்!


"கண்ணா! குட்டிம்மாவ பத்திரமா கூட்டிட்டு வாப்பா! அவளுக்கு அஞ்சாம் மாசம் வேற! நீங்க இங்க வந்து சேரும் வரைக்கும் எனக்குத் தூக்கமே வராது! சாது குட்டிக்கு வேற ரொம்ப நேரம் ட்ராவல் பண்ணி பழக்கமில்லை!" என அருணா மகனிடம் கெஞ்சலாகச் சொல்ல, "ம்மா! பேசாம நீங்களும் அப்பாவும் அங்கேயே போய் இருக்கலாம் இல்ல! சரிகாவுக்கும் தேவை இல்லாத அலைச்சல் இருக்காது!" என அவன் அங்கலாய்க்க,


"ப்ச்! எனக்கு அந்த ஊர் குளிர் செட் ஆகலேயே! சாது குட்டி பிறந்த போது டெலிவரிக்காக அங்கே போய் இருந்த போதே ரொம்ப கஷ்டமா போச்சு! அப்பாவுக்கும் அங்கே செட் ஆகல!


பொண்டாட்டியையும் பிள்ளையையும் பிரிஞ்சிருக்க ஒத்துக்கிட்டு மாப்பிள்ளையே அனுப்பறாரு;


நீ என்னடான்னா இவ்வளவு பேச்சு பேசற!" என அவர் மகனிடம் சண்டைக்குக் கிளம்ப,


இரு கைகளையும் தூக்கி, "தாயே ஆளை விடுங்க! உங்க மாப்பிள்ளை இருக்கானே அவன் ஒரு சரியான பொண்டாட்டி தாசன்!


அவ இங்க வரணும்னு அடம்பிடிச்சிருப்பா! அவனும் விட்டுக் கொடுத்திருப்பான்!


நல்ல புருஷன்; நல்ல பொண்டாட்டி! ரெண்டும் நல்ல ஜாடிக்கேத்த மூடி!" எனக் கிண்டலாக முடித்தவன், வீட்டிலிருந்து கிளம்பினான்.


விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் முடிந்து விமானத்தில் ஏறி அமர்ந்தவனின் எண்ணம் முழுவதிலும் அன்று அவன் பார்த்த வாழ்த்து அட்டையே நிரம்பி இருந்தது.


அவனுடைய இருபத்தி இரண்டாவது பிறந்த தினத்தன்று அந்த வண்ணமயமான அழகிய வாழ்த்து அட்டையை அவனிடம் கொடுத்து, "ஹாப்பி பர்த்டே அண்ணா!" என அவனுடைய ஒரே தங்கை, அவர்கள் குடும்பத்தின் மொத்த சந்தோஷமுமாக இருப்பவளான சரிகா முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அவனுக்கு வாழ்த்துக் கூற,


'தாங் யூ டா குட்டிம்மா!" என்றவாறு அந்த அட்டையை வாங்கி அதனைப் பிரித்தவன் 'டெட்டி பியர்' படத்தையும் அதன் கைகளிலிருந்த இதயத்தையும் ரசித்தவனாக, அதிலிருந்த 'மித்ரா' என்ற பெயரைப் பார்த்து வியந்துபோய், "அட தமிழ்ல எல்லாம் எழுதி இருக்க! ஆமாம்; யாரு சரிகா இந்த மித்ரா!" என்று கேட்க,


"அங்க நம்ம பக்கத்து வீட்டுல இருக்காண்ணா! கொஞ்ச நாளைக்குள்ளேயே என்னோட பெஸ்டீஈஈ ஆகிட்டா அவ!" என பாவனையுடன் சொன்னவள்,


“ப்ளஸ் டூ படிக்கறாண்ணா அவ! பார்க்க பொட்டேட்டோ மாதிரி நல்லா ரவுண்டா இருப்பா!


சரியான முண்ட கண்ணி! அவ கோவமா முறைச்சு பார்க்கணுமே! செம்ம காமடியா இருக்கும்.


யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிடுவாண்ணா!


நான் அவ கிட்ட உன்னைப் பத்தி நிறையச் சொல்லி இருக்கேன் தெரியுமா?


அவளுக்கு கூட உன்னை நேரில் பார்க்கணும்னு ரொம்ப ஆசை தெரியுமாண்ணா!


நாங்க ரெண்டு பெரும் சேர்ந்துபோய் தான் இந்த கிரீட்டிங் கார்டை வாங்கினோம்!


நான் தான் எழுதுவேன்னு சொல்லி அடம் பிடிச்சு கார்ட்ல பர்த்டே விஷ்சஸ்ஸை அவதாண்ணா எழுதினா!"


‘அந்த மித்ரா யார்’ என அவன் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு தோழியைப் பற்றி என நீண்ட விளக்கம் கொடுத்து முழுவதையும் ஒப்பித்தாள் சரிகா!


அவளுடைய இயல்பே இதுதான்.


வள வளவென்று பேசுவாள்.


எப்பொழுதுமே உற்சாக பந்தாய் சுறுசுறுப்புடன் புன்னகை முகமாக இருப்பாள் சரிகா.


'இவளுடைய இயல்பு மாறாமல் இப்படியே இவளைப் பார்த்துக்கொள்ளும் ஒருவனைத்தான் இவளுடைய வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்ற எண்ணம் தோன்ற, தங்கையின் பேச்சை உற்சாகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கும் ஏனோ அந்த முகம் அறியாத பெண்ணை நேரில் காண வேண்டும் என்ற ஆவல் உருவானது.


பேச்சு சுவாரஸ்யத்தில் அனிச்சை செயலாக, அங்கே மேசை மீது இருந்த கோப்பில் அந்த வாழ்த்து அட்டையை வைத்து மூடினான் தீபன். இன்றுவரை பத்திரமாக அது அங்கேயே இருப்பதுதான் விந்தையிலும் விந்தை.


விமானத்தில் பயணிக்கிறோம் என்பதை கூட மறந்தவனாக, அந்த தினத்தின் நினைவுகளுடனே உறங்கிப்போனான் தீபன்.


***


கிட்டத்தட்ட இருபது மணி நேரம் பயணம் செய்து, அவன் 'ஜே.எஃப்.கே' விமான நிலையத்தில் தரை இறங்கும் போது அங்கே காலை ஏழரை மணி.


அவனை வீட்டிற்கு அழைத்துச்செல்ல சரிகாவின் கணவன் சந்தோஷ் நேரிலேயே விமான நிலையத்திற்கு வந்திந்திருதான்.


"ஏண்டா மாப்ள உனக்கு வீண் அலைச்சல்? உன் வீட்டுக்கு வர எனக்கு வழி தெரியாதா என்ன?" தீபன் உரிமையுடன் நண்பனிடம் கேட்க,


"நீ அஃபிஷியலா வந்திருந்தாலே உன் பாசமலர் என்னை சும்மா விட மாட்டா; பெர்சனலா வேற வந்துட்டியா; ராத்திரியெல்லாம் என்ன தூங்கக் கூட விடல" எனப் புலம்புவதுபோல் சந்தோஷ் சொல்ல, அவள் தோளில் கை போட்டுக்கொண்டே, "கதை விடாதடா; உன்னை பத்தி எனக்குத் தெரியும்" என்றான் தீபன் பெருமையுடன்.


சில நிமிட கார் பயணத்தில் அவர்களுடைய வீட்டிற்கு வந்தனர் இருவரும்.


மிகப்பெரிய அமெரிக்க மென்பொருள் நிறுவனம் ஒன்றில் அதிக சம்பளத்துடன், நிரந்தர வேலை சந்தோஷுக்கு.


குறுகிய காலகட்டத்திற்குள்ளாகவே அமெரிக்கக் குடி உரிமையும் அவர்களுக்குக் கிடைத்துவிடவே, மூன்று படுக்கை அறை கொண்ட 'பிளாட்' ஒன்றை அங்கேயே சொந்தமாக வாங்கி இருந்தான் அவன்.


சமையலுக்கு எனத் தமிழ் பெண்மணி ஒருவரையும் வேலைக்கு அமர்த்தியிருந்தான், அங்கே உள்ள நடைமுறை சட்டதிட்டத்துக்கு உட்பட்டு.


வெகு நேர்த்தியுடன் இருந்த அவர்களுடைய வீட்டிற்குள் நுழைந்த உடனேயே, "மா...மா.." என மழலையில் கூவிக்கொண்டே குடுகுடுவென ஓடி வந்தாள் சாத்விகா; சந்தோஷ் சரிகாவின் இரண்டரை வயது குட்டி மகள்.


அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி தோளில் போட்டுக் கொண்டு அவளுடைய நெற்றியில் முத்தம் பதித்தவன், 'குட்டிம்மா! எப்படி இருக்கீங்க!" என அவளை நலம் விசாரிக்க, "ம்ம்! சாது பாப்பா நல்லா இக்கா! மாமா நல்லா இக்கா? அங்கா (அரங்கா) தாத்தா நல்லா இக்கா? அதுனா (அருணா) பாத்தி நல்லா இக்கா?" என அவள் மழலை மொழியில் அவனிடம் பதிலுக்கு விசாரிக்க, நற்பண்புகளைத் தங்கை அழகாக அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பது அவனுக்குப் புரிந்து, "எல்லாரும் நல்லா இருக்காங்கடா செல்லம்! சாது பாப்பாவைப் பார்க்க ஆசையா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க!" என மருமகளை அணைத்துக்கொண்டான் தீபன்.


அங்கே ஸ்கேனிங்கில் சரிகாவின் கருவில் இருக்கும் குழந்தை பெண் என தெரிந்த காரணத்தால், "தங்கச்சி பாப்பாவ?" என அவள் விடமால் கேள்வி கேட்க, "ஆமாம்! அவங்களையும்தான்!" என்றான் தீபன் அந்த குட்டி பேசிய அதே பாவனையுடன்.


அதுவரை அவர்கள் உரையாடலை மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சரிகா, பொறுமை இழந்து, "அண்ணா! முதல்ல உன் ஃப்ரெண்ட ஏர்போர்ட்ல வெச்சே கொஞ்சியாச்சு. அடுத்தது உன் மருமக! நான் ஒருத்தி இங்க இருக்கேன்: உன் கண்ணுக்கு தெரியுதா?" என சண்டைக்குக் கிளம்ப, "டேய் குட்டிம்மா! நீ எப்பவுமே என் கண்ணுக்குள்ளதான இருக்க?" என அவன் தீவிரமாகச் சொல்லவும், அடுத்த நொடி பாய்ந்து அண்ணனைக் கட்டிக்கொண்டவள், கண்களில் பொங்கிய கண்ணீரை அவனுடைய சட்டையிலேயே துடைக்க, "சரிகா! இப்ப எதுக்கு இந்த அழுகை! ஐ டோன்ட் லைக் யுவர் டீயர்ஸ் ரைட்!" என ஓங்கி ஒலித்தது தீபனின் குரல். "இது சந்தோஷத்துல வர அழுகை அண்ணா! இதைக் கட்டுப்படுத்த சொல்லாத!" என்றாள் சரிகா கரகரத்த குரலில்.


"மச்சான்! நீ இப்படியே பேசிட்டு இருந்தன்னு வை! உன் தங்கை நம்ம ரெண்டு பேரையும் பட்டினி போட்டுடுவா; அதனால கண்ணே மணியேன்னு அவளை சும்மாவாவது கொஞ்சிடு!" என சந்தோஷ் இயல்பாக கூற, "ரெண்டு பேரும் ஒண்ணு கூடிட்டிங்க இல்ல! இருக்கு உங்களுக்கு!" என மிரட்டலாகச் சொன்னாள் சரிகா.


அவள் அப்படிச் சொன்னாலும் அந்த இரண்டு ஆண்களுக்குமே அவளுடைய மகிழ்ச்சியும் நிம்மதியும் மட்டுமே முக்கியம் என்பதை அவள் அறிந்தே இருப்பதால் அதன் பெருமை பொங்கிப் பிரவாகித்தது அவளது குரலில்.


***


இரண்டாவது பிரசவத்திற்காக சரிகாவை அழைத்துச் செல்வதற்காகத்தான் தீபன் அங்கே வந்திருந்தாலும், அவனுடைய வியாபார தொடர்பான ஒரு சில சந்திப்புகளிலும் அதைத் தொடர்ந்து ஒரு கேளிக்கை விருந்திலும் அவன் கலந்துகொள்ள வேண்டிய காரணமும் அதில் அடங்கி இருந்தது.


எனவே அடுத்து வந்த இரண்டு தினங்களும் தீபன் அவனுடைய தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளிலேயே மூழ்கி இருந்தான்.


வியாபார நிமித்தமாக அவன் வருடத்தில் நான்கு அல்லது ஐந்து முறை அங்கே வந்து செல்வது வழக்கம்தான்.


அங்கே வந்தால் சரிகாவின் வீட்டில்தான் அவன் தங்குவதும்.


எனவே அது முன்பே தெரிந்திருக்கவும், சரிகாவும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


ஆனால் அன்று பார்ட்டியில் கலந்துகொண்டு, நாகரிகம் கருதி கொஞ்சமாக மது அருந்தி இருந்ததால், தீபன் தயக்கத்துடன் வீட்டுக்குள் வர, நல்ல வேளையாக சரிகா உறங்கிப்போயிருந்தாள்.


சந்தோஷ் மட்டும் வரவேற்பறையில் உட்கார்ந்து கைப்பேசியை குடைந்துகொண்டிருக்க, அவனைப் பார்த்து ஒரு நெடிய மூச்சை வெளியேற்றியவன், "தப்பிச்சேன்டா சாமி!" என்றவாறு, அணிந்திருந்த கோட்டை கழற்றி சோஃபாவின் ஒரு மூலையில் போட்டுவிட்டு, டையை தளர்த்திக்கொண்டே நண்பனின் அருகில் வந்து உட்கார்ந்தான்.


"நம்ம பிரச்சினை உன் தங்கைக்கு எங்க புரியுது!


தப்பித்தவறி என்னைக்காவது பார்ட்டின்னு ட்ரிங்க் பண்ணிட்டு வந்தேன்னு வை; எனக்கு அன்னைக்கு சிவராத்திரிதான் போ!" என அங்கலாய்த்தான் சந்தோஷ்.


"இப்படி அவளுக்கு பயப்படற மாதிரி நடிச்சே அவளை ஏத்தி விடு! உன்னாலதான் அவ இப்படி உச்சாணி கொம்புல ஏறி உட்கார்ந்துட்டு இருக்கா!" என அவனிடம் எகிறினான் தீபன்.


"முரட்டு சிங்கிளா இருக்க இல்ல! நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ! உனக்குன்னு ஒருத்தி வந்தாதான் தெரியும் குடும்பஸ்தனுங்க படுற பாடு!" என சந்தோஷ் அவனை வாற, "உங்களையெல்லாம் பார்த்துதான் நான் அந்த தப்பை பண்ணல!" என அவனுக்குப் பதில் கொடுத்தான் தீபன்.


"டேய்! நான் சும்மா கலாய்ச்சா நீ சீரியஸா பேசுற!


இல்ல; இல்ல; டெலிவரி முடிஞ்சு சரிகா இங்க திரும்ப வரதுக்குள்ள உனக்கு ஒரு சரியான ஏற்பாடு பண்ணனும்!" எனத் தீவிரமாகச் சொன்னான் சந்தோஷ்.


'உனக்குன்னு ஒருத்தி; சீக்கிரமா ஒரு ஏற்பாடு பண்ணனும்' என தீபனுடைய திருமணத்தைக் குறித்து அவன் பேசவும், தீபனையும் மீறி அவனுடைய ஆழ்மன எண்ணங்கள் மேலெழும்ப,


'நீ அந்த வசந்தோட தங்கை மித்ராவா இல்லாம நிஜமாவே யாரோ ஒரு வசுந்தரவா இருக்கக்கூடாதா' என எண்ணிய அவன் மனதில் திலீபின் முகம் வேறு மின்னி மறையவும் அவனது சிந்தனை இலக்கின்றி எங்கெங்கோ அலைந்து திரிந்தது.


சலனமில்லாமல் நண்பனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன், அவனுடைய பேச்சுக்கு எந்த ஒரு எதிர்வினையும் கொடுக்காமல், ஆயாசமாகக் கண்களை மூடி சோபாவில் சாய்ந்துகொண்டான் தீபன்.


நண்பனின் இயல்பிற்கு மாறான இந்த செய்கையால் வியந்துபோனவனாக, 'என்னடா மச்சான்! லவ்வுல சிக்கிட்டயா?! யாருடா இந்த முனிவரோட தவத்தை கலைச்ச மேனகை!' என அவனைக் கலாய்க்க எண்ணி நாவின் நுனி வரை வந்துவிட்ட வார்த்தைகளை தீபனின் மனநிலையை உணர்ந்து அப்படியே விழுங்கியவன், "லேட் நைட் ஆயிடுச்சு தீபன்; போய் படு; மீதியை காலையில பார்த்துக்கலாம்!" என்றவாறு அவனுடைய அறையை நோக்கிப்போனான் சந்தோஷ்.


***


அடுத்த நாள் மாலை சென்னை புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தனர் அனைவரும். அங்கே காத்திருக்கும் நேரம் முழுதும் மகளை அண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு கணவனின் தோளில் சாய்ந்தபடியே கிசுகிசுப்பாக அவனிடம் எதோ பேசிக்கொண்டிருந்தாள் சரிகா.


கோர்த்திருந்த இருவரது கரங்களும் ஒரு நொடி கூட பிரியவில்லை. அவளுடைய முகத்தில் கணவனைப் பிரிந்து செல்லும் கவலையைத் தவிர வேறு எந்த ஒரு உணர்வும் கொஞ்சம் கூட தெரியவில்லை.


இத்தனை வருடங்களில் அவள் கொஞ்சமும் மாறவே இல்லை என்பது தீபனுக்கு நன்றாகவே புரிந்தது.


இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வீட்டிலிருந்ததை விட சந்தோஷ் அவளை மிக நன்றாகவே கண்ணில் வைத்துக் காக்கிறான் என்பதை உணர்ந்து அவனது மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.


விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு வரவும், மனமே இல்லாமல் எழுந்து வந்து அண்ணனின் கையை பற்றிக்கொண்டாள் சரிகா.


அதில் வியர்வையின் பிசுபிசுப்பை உணர்ந்தவன், நண்பனின் முகத்தை ஏறிட, உறையவைக்கும் அளவிற்கு அங்கே இருந்த ஏ.சியின் குளிரையும் தாண்டி அவனது முகத்தில் வியர்வை வழிவதைப் பார்த்தவன், "ப்ச்! நீ மொத்தமா சரிகாவோட ஹஸ்பெண்டா மாறிட்டடா சந்தோஷ்!" என தீபன் சொல்லவும், 'என்ன?' எனக் கேட்பதுபோல் அவனைப் புரியாத பார்வை பார்த்த நண்பனை, "என் மேலே உனக்கு நம்பிக்கை இல்ல! ஏன்னா நீ இப்ப தீபனோட ஃப்ரண்டா இல்ல!" என அவன் வருத்தத்துடன் சொல்ல,


"ரொம்ப பேசாதடா மச்சான்! என் கவலையே இப்ப இருக்கற மாதிரியே சரிகா என் பிள்ளைகளோட பத்திரமா திரும்ப வரணுமே என்பதுதான்!" என அவன் உண்மையான அச்சத்துடன் சொல்ல,


"இப்ப இருக்கற சரிகா என் தங்கை இல்ல! அவ உன் மனைவி! அவ இப்படி இருக்க நூறு சதவீதம் நீதான் காரணம்; நீ மட்டும்தான் காரணம்! இனிமேல் அவளை எதுவும் பாதிக்காது! நான் பாதிக்கவும் விடமாட்டேன்! நீ கவலைப் படாத" எனத் தீவிரமாய் சொன்ன தீபன், "இது வரைக்கும் செய்ய முடியாததை எல்லாத்தையும் சேர்த்துவெச்சு மொத்தமா செஞ்சு முடிக்க உன்னோட அம்மா அப்பாவும் என்னோட அம்மா அப்பாவும் சேர்ந்து ஏதேதோ பிளான் எல்லாம் போட்டுட்டு இருகாங்க;


அவ டெலிவரி முடிஞ்சு இங்க திரும்ப வரதுக்குள்ள நீ அங்க எத்தனை தடவ வர வேண்டியதா இருக்குமோ! பீ ரெடி!" என நண்பனை உற்சாகப்படுத்திவிட்டு தங்கை மற்றும் அவளுடைய மகள் இருவரையும் அழைத்துக்கொண்டு, விமானத்தை நோக்கிப் போனான் தீபன்.


அவன் சென்னையில் இல்லாத ஆறு நாட்களை நன்றாகவே பயன்படுத்தி, அங்கே திலீப்புடன் வசுந்தராவின் திருமணத்தை நிச்சயம் செய்து அவளுடைய நிலைமையையே மாற்றி இருந்தார் திவ்யபாரதி இரண்டு குடும்பங்களின் ஒப்புதலுடன்!


அதற்கு தீபனின் பதில் நடவடிக்கை எப்படி இருக்கப்போகிறதோ?


பதில் காலத்தின் கைகளில்!

Recent Posts

See All
Poovum Naanum veru-Epilogue

இதழ்-36 கடைக்காப்பு அத்தியாயம்! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும்...

 
 
 
Poovum Naanum Veru-35

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத்...

 
 
 
Poovum Naanum Veru-34

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான்...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page