top of page

Poovum Naanum veru-Epilogue

இதழ்-36


கடைக்காப்பு அத்தியாயம்!


(Epilogue)


ஓம் தத் புருஷாய வித்மஹேI


வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரசோதயாத்II


கணீரென்று அய்யர் சொல்லும் மந்திரங்கள் வீட்டில் எதிரொலிக்க, வீடு முழுதும் ஹோம புகை பரவி இருந்தது.


அவர்களது நாமக்கல் வீட்டில் உறவுமுறை பங்காளிகள் எல்லோரையும் அழைத்து வசந்த் இறந்ததற்காக அவனுக்குச் செய்யவேண்டிய காரியங்களை முறைப்படி செய்து முடித்தவர்கள், காலம் கடந்து அதனைச் செய்தற்காக சில பரிகாரங்களுடன் கணபதி ஹோமம் செய்துகொண்டிருந்தனர்.


அவர்களுடைய அழைப்பை ஏற்று உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் என அனைவரும் அங்கே வந்திருக்க, அவர்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் கொஞ்சம் மாறியிருப்பது எல்லோருக்கும் புரிந்தது.


அங்கே ஓரமாக நின்றுகொண்டிருந்த மாரியிடம் மித்ராவின் பார்வை செல்ல, "உனக்காக மட்டுமில்ல மித்ரா பாப்பா! தீபன் தம்பி சொன்னா கூட குழி எடுப்பேன்!' என அவர் சொல்வதுபோல் தோன்றியது அவளுக்கு!


அந்த குற்றங்களைப் பற்றிய உண்மைகள் ஊடகங்களில் வந்த பிறகு, வசந்தை தேடிக்கொண்டு அவர்கள் வீட்டிற்கே வந்தது காவல்துறை.


விசாரணையில் என்ன சொல்வது என்பது புரியாமல், வசந்தை பற்றிய உண்மைகள் தங்களுக்குத் தெரிந்துவிட்டதால் அவன் வீட்டிற்கே வராமல் எங்கோ சென்றுவிட்டதாகவும், அவனைத் தேடி மீண்டும் அழைத்துவர விரும்பாமல் அவர்கள் அப்படியே விட்டுவிட்டதாகவும் வாணி சொல்ல அதைப் பின்பற்றியே ராகவனும் பேசவும், அதை நம்பாமல் காவல்துறையினர் மேலும் மேலும் அவர்களைக் கேள்வி கேட்டு குடைய, அந்த மன உளைச்சலினால்தான் கலைவாணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.


மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் சமயத்தில் மித்ரா அதை தீபனிடம் சொல்ல, அவளைக் குழப்பும் விதமாக அதைக் காதிலேயே வாங்காதது போல ஏதும் சொல்லாமல் மௌனாக இருந்துவிட்டான் அவன்.


அந்த வாரத்திலேயே சரிகாவின் வளைகாப்பிற்காக அம்மா அப்பாவுடன் வசுமித்ரா அவர்கள் வீட்டிற்குச் செல்ல வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்த வைபவம்.


அவர்களுடைய சொந்தத்தில் பலரும் வந்திருக்க அவர்களுடைய அழைப்பின் பெயரில் திவ்யாபாரதியும் அங்கு வந்திருந்தார்.


தீபனை பற்றிய தயக்கமெல்லாம் மறைந்து மிகவும் நிறைவான மனநிலையிலிருந்தவர் வசுமித்ராவை அங்கே காணவும் அவளை மகிழ்வுடன் அணைத்துக்கொண்டார் பாரதி.


மேலும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் விதமாக இந்திய அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவின் தலைமை பொறுப்பு திவ்யாபாரதிக்கு வழங்கப்பட்டிருப்பதைப் பெருமையாக அவளிடம் பகிர்ந்துகொண்டார் அவர்.


மகளுக்கு வாங்கியது போலவே புடவை நகைகள் என அனைத்தையும் தயாராக வாங்கி வைத்திருந்த அருணா அவற்றை மித்ராவிடம் கொடுத்து அணிந்துவரச்சொல்ல, மறுக்கமுடியாமல் அவளும் அவற்றை அணிந்து வந்தாள்.


எல்லோர் மனதிலும் இருந்த சிறிய குறையும் கரைந்துபோக சரிகாவின் வளைகாப்பு நல்லபடியாக நடந்து முடியவும் யாருமே எதிர்பாராத வண்ணம் அவர்களுடைய திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாள் குறித்து, நிச்சய தாம்பூலத்தையும் அன்றே நடத்திவிட்டார் அரங்கநாதன்.


காரணம் அருணா!


***


எல்லாம் நல்ல விதமாகச் சென்றுகொண்டிருக்க ஒரு வாரம் கடந்த நிலையில் வசந்தை பற்றி மித்ரா பேசிய சமயம் தீபன் சாதித்த மௌனத்தின் பதிலை, 'அமைச்சர் புஷ்பநாதனின் பண்ணைவீட்டில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடு' என்ற முக்கிய செய்தியாக எல்லா தொலைக்காட்சிகளும் மக்களிடம் சத்தமாக சொல்லிக்கொண்டிருந்தது.


அமைச்சர் புஷ்பாதனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சில பெண்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பதாக அங்கே ஊருக்குள்ளே பரவிய புரளியைத் தொடர்ந்து மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கே நடத்த காவல்துறை சோதனையில் ஒரு இடத்தில் தோண்டப்பட உண்மையிலேயே அங்கே சில எலும்புகள் கிடைக்கவும், பின்னர் ஆய்வில் அது வசந்துடையது என்பது புலன் ஆனது!


அதற்குக் காரணம் தீபன் மட்டுமே என்பது மித்ராவுக்கு நன்றாகவே விளங்கியது.


உடனே அவனைத் தேடி அவனது அலுவலகத்துக்கு வந்தவள், 'எப்படி இதெல்லாம் செஞ்சீங்க!' என அவள் வியப்புடன் கேட்க, "எல்லாம் மாரியம்மா மகிமை!" என அவன் பதில் சொல்லவும், "என்ன மாரிம்மாவா! நீங்க எப்ப அங்க போனீங்க! எப்படி இதையெல்லாம் செஞ்சீங்க!" என அவள் கேள்விகளாகக் கேட்டுத்தள்ள, அதில் கடுப்பானவன் அவளைச் சுவருடன் சரித்து, அவளது கண்களில் மூழ்கியவாறு, "நீ டீச்சரா இல்ல வக்கீலா! இவ்ளோ கேள்வி கேக்கற!" என்று கேட்க, "ஐயோ! இது ஆபிஸ்! இப்படி செய்யறீங்க!" என்றவாறு அவள் அங்கிருந்து விடுபட முயல, அவளை நகரவிடாமல் கைகளால் சிறை செய்தவன், "இது என்னோட ஆபீஸ்! நீ எனக்கு நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்ல!


இங்க என் பெர்மிஷன் இல்லாம யாரும் உள்ள வரமாட்டாங்க புரிஞ்சுதா!" என்றவன், "இப்ப நான் கேக்கற கேள்விக்கு நீ பதில் சொல்லு!


திலீப் கிட்ட என்ன சொன்ன? உன்னைப் பார்த்தாலே மெர்சல் ஆகறான்?" என கிண்டலாகக் கேட்க,


"ஐயோ நான் தப்பா எதுவும் சொல்லலையே!" என அவள் பதறவும், "தப்பா எதுவும் சொல்லல சரி! சரியா என்ன சொன்ன! அதை சொல்லு?" என அவன் விடாப்பிடியாகக் கேட்க, தலையைச் சரித்து அவனைப் பார்த்தவள், "என்னவோ எதுவுமே தெரியாத மாதிரி கேக்கறீங்க!


இதை திலீப் உங்க கிட்ட சொல்லாம இருக்க வா...ய்ப்பே இல்லையே!" என அவள் எகத்தாளமாகக் கேட்கவும், கலகலவென சிரித்தவன், "ஆமாம் தாயே அவன் சொன்னான்! இல்லனு நான் சொல்லல!


ஆனாலும் நீ சொல்லு! என்ன சொன்ன? உன் வாயால கேக்கணும்னு நினைக்கறேன்!" என அவன் சொல்லவும்,


"முதல்ல இருந்தே அந்த கல்யாண ஏற்பாட்டுல எனக்குக் கொஞ்சமும் இஷ்டம் இல்ல!


அம்மா அப்பாவுக்காகவும் பாரத்திமாவுக்காகவும்தான் பொறுத்துட்டு இருதேன்!


டின்னருக்கு போயிட்டு வந்தோமே அன்னைக்கு, 'இன்னும் எத்தனை பேர இப்படி பொய் சொல்லி ஏமாத்தலாம்னு நினைக்கற'ன்னு நீங்க கேட்டீங்க;


நீங்க என்ன நினைச்சு கேட்டீங்களோ எனக்கு தெரியாது; ஆனா இப்படி ஒரு கல்யாணம் நடந்தா நான் திலீப்பை மட்டும் இல்ல என்னையே ஏமாத்திக்கற மாதிரின்னு எனக்கு நல்லாவே புரிஞ்சுது;


அதனால அப்படி ஒண்ணு என் வாழ்க்கையில வேண்டவே வேண்டாம்னு முடிவே பண்ணிட்டேன்!


ஏன்னா ஆரம்பத்துல சரிகாண்ணி உங்களைப் பத்தி சொல்லும்போதெல்லாம் என்னையே அறியாம உங்க பேர்ல ஒரு க்ரஷ் உண்டாகி இருந்தது!


அப்ப அதை காதல்னு சொல்ல முடியாது; ஒருவித ரசனை அவ்வளவுதான்.


ஆனா உங்க மேல ஒரு அதீத ஈடுபாடு; காதல்; ஒரு ஹீரோ ஒர்ஷிப் எப்படி வேணா சொல்லலாம்; அது எனக்கு ஒரு சம்பவத்தைப் பார்த்த பிறகு உண்டாச்சு!" என்று சொல்லி அவள் நிறுத்த, அவளுடைய வார்த்தையாக அவன் மேல் அவளுக்கு இருக்கும் எண்ணத்தைக் அறிந்தவனின் மனது மகிழ்ச்சியில் திளைக்க, "ஐயோ! அப்படி என்ன சிறப்பான தரமான சம்பவம் அது!" என அவன் ரசனையுடன் கிண்டலாகக் கேட்க, "சிறப்பான சம்பவம் எல்லாம் இல்ல! ரொம்ப கசப்பான சம்பவம்தான்!" என்றவள்,


"வசந்த் இறந்த அன்னைக்கு அவனைப் புதைத்த பிறகு அவனோட ரூமை கிளீன் பண்ணும்போது ஒரு மெமரி கார்ட் கிடைச்சது!


கீழ விழுந்து சிதறி கிடந்த அந்த போனை அவனோடவே புதைச்சுட்டோம்! ஆனா அந்த மெமரி கார்டடை அப்ப நான் கவனிக்கல!


கொஞ்ச நாளைக்குப் பிறகு அதை கம்ப்யூட்டர்ல போட்டுப் பார்த்தேன்! அதுல ஒரே ஒரு வீடியோ மட்டும் இருந்தது!


அது அங்க எல்லாரும் சேர்ந்து உங்களை அடிச்சு துன்புறுத்தின வீடியோ!


அதைப் பார்க்கும் போது முதலில் உங்கமேல ஒரு பரிதாபம்தான் வந்துது!


ஆனா அந்த நிலைமையிலும் உங்க முகத்துல தெரிஞ்ச கோபம்! உங்க வார்த்தைல இருந்த துணிவு எல்லாத்தையும் பார்த்த போது உங்க மேல அப்படி ஒரு மதிப்பு ஏற்பட்டது! அது நாளடைவில் அன்பா காதலான்னு பிரிக்க முடியாத ஒரு உணர்வா மாறிப்போச்சு!


அந்த வீடியோவை நான் ஒரு தடவைதான் பார்த்தேன்! ஆனா அது என் மனசுல அப்படியே பதிஞ்சு போச்சு!


அதை பத்தி நினைக்கும்போதெல்லாம் என்னையும் அறியாமல் உங்கள நேரில் பார்க்கணும் என்கிற ஒரு ஆவல் ஏற்படும்!


அதனாலதான் ஓவொருமுறை உங்களை நேரில் பார்க்கும்போதும் நான் தடுமாறிப்போனேன்!" என்றாள் மித்ரா.


"ஓஹ்! முதல்ல அதுக்கான காரணம் எனக்கு புரியல! ஆனா நீ வசந்தோட தங்கைனு தெரிஞ்ச பிறகு அதனாலதான் என்னை பார்த்து அப்படி ரியாக்ட் பண்ணியோன்னு நினைச்சேன்!" என்றான் தீபன்.


"அதுவும் ஒரு காரணம்தான்!" என்றவள், "அந்த கல்யாணத்தை நிறுத்தற முடிவோடதான் நான் நாமக்கல் கிளம்பிப் போனேன்!


நான் வசந்தோட திங்ஸ் எல்லாத்தையும் எடுக்க நாமக்கல் போயிருந்த அன்னைக்கு திலீப் என்னை நேரில் மீட் பண்ணனும்னு சொன்னார்.


நான் திரும்ப வந்த பிறகு உங்க கிட்ட எல்லாத்தையும் கொடுத்த அடுத்த நாள் அவரை மீட் பண்ண, அன்னைக்குப் போனோமே அந்த ஹோட்டலுக்கு போனேன்!


அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது அவர் என்னைக் கூப்பிட்டதே என் வேலையை ரிசைன் பண்ண சொல்லதான்னு!


"உன்கிட்ட எதைச் சொல்லக்கூடாதோ அதை சொல்லியிருக்கான் அந்த அதி புத்திசாலி!" எனச் சொல்லி தீபன் சிரிக்க, "ப்ச்! தீபன்!" என அவள் சலுகையாகக் கோபப்பட, "ஓகே! சொல்லு" என அவன் ஆவலாகக் கேட்கவும், "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா!


பல குற்றங்களை முளைக்கும் இடத்திலேயே களைய ஒரு நல்ல ஆசிரியரால மட்டும்தான் முடியும்!


பொருளாதாரத்துல ரொம்பவே கீழ இருந்துட்டு அதுவும் முதல் தலைமுறையா கல்வியை தேடி வர இந்த பிள்ளைகளைச் சரியான பாதைல கூட்டிட்டு போனால் இந்த சமூகம் நல்ல செழிப்பா இருக்கும்!


அதனாலதான் இப்படி ஒரு வேலையை நான் சூஸ் பண்ணேன்! என்னால முடிஞ்ச வரைக்கும் சிறப்பா செய்துட்டு இருக்கேன்!


அதனால இதை குறைச்சு சொன்னால் என்னால அதை தாங்கிக்கவே முடியாது!


திலீப் அப்படி சொன்னதும் எனக்குக் கோபம் வந்தது” என அவள் சொல்லவும், "அதுவரைக்கும் அவன் உன்னை ஒரு அழகான பூன்னு நினைச்சிட்டு இருந்திருப்பான்! ஆனா எனக்குதானே தெரியும் நீ வேறன்னு!" என தீபன் இடைப்புக, "என்ன! என்ன வேற!" என அவள் வேகமாக கேட்க, "ம்.. புயல்மா நீ பூ இல்ல ஒரு புயல்!


என்னையே வேரோட சாய்ச்சிட்ட புயல்!" என அவன் ரகமாகச் சொல்லவும் அவள் முறைக்க, "சரி சரி! நீ சொல்லு!" என்றான் அவன்.


தொடர்ந்தாள் மித்ரா!


'இது என்னோட லட்சியம்!


என்னால இந்த வேலையை விட முடியாது!


இதோட இல்ல; ரொம்ப ரிமோட் ட்ரைபல் வில்லேஜ்ல ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகணும்னு எனக்கு ஒரு எண்ணம் இருக்கு!


எனக்கு கல்யாணத்துல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல'ன்னு சொன்னேன்.


அவரோட முகம் அப்படியே மாறி போச்சு! 'என்ன வசு இப்படி சொல்ற'ன்னு கேட்டார்.


எனக்கே அவரை பார்க்கப் பாவமா இருந்தது!


அதனால, 'டெய்லி ஏதாவது ஒரு பிரச்சினையைத் தேடிப்போய் வம்பை விலைகொடுத்து வாங்கிட்டு வர ஆளு நான்!


உங்களை மாதிரி ஒரு ஸ்மூத் கோயிங் பெர்சனுக்கு நான் செட் ஆக மாட்டேன்!


பயங்கரமா உங்களை லவ் பண்ணிட்டு; டெய்லி அழகா மேக்கப் போட்டுட்டு; உங்க கூட பார்ட்டி என்ஜாய் பண்ண என்னால முடியாது!


அதுக்கு ஏத்த மாதிரி உங்க கல்ச்சருக்கு செட் ஆகற பொண்ணா; முக்கியமா உங்களை ரொம்ப டீப்பா லவ் பண்ற ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க ப்ளீஸ்!


நீங்க ரொம்ப நல்லவர்; உங்களை மாதிரி ஒரு ஃப்ரெண்டை மிஸ் பண்ண நான் விரும்பல!


அதனால நாம எப்பவுமே நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்!' அப்படினு நான் சொன்னேன்.


அப்படியே சைலண்டா எழுத்து போயிட்டார்.


ஆனா அன்னைக்கு நைட்டே போன் பண்ணி, 'இந்த கல்யாணம் நடக்கலன்னா நீ ஹர்ட் ஆக மாட்ட இல்ல'ன்னு கேட்டார் திலீப்.


'நீங்க ஹர்ட் ஆகலேன்னா நானும் ஆக மாட்டேன்'னு சொன்னேன், "நாட் அட் ஆல்! நீ சொன்ன மாதிரி நாம நல்ல ஃப்ரெண்ட்ஸாவே இருக்கலாம்'னு சொல்லிட்டு காலை கட்பண்ணிட்டார் உங்க நண்பர்! அப்ப அவரோட குரல்ல தெரிஞ்சுதே ஒரு குதூகலம்" என்று சொல்லி சிரித்தாள் மித்ரா.


"ம்ம்! தெரியும்! 'டேய் மாலு ரொம்பவே பயந்த சுபாவம்; அதைவிட அவளுக்கு என் மேல செம்ம லவ்.


வசு சொன்ன பிறகுதான் அது எனக்கு புரிஞ்சுது! எனக்கு அவளே போதும்!


இப்படி சுடுகாட்டுக்குள்ள எல்லாம் போய் ஆக்ஷன் சீக்வன்ஸ் செய்யற பொண்ணெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம்!


என்னால ட்ரைபல் வில்லேஜுக்கெல்லாம் போய் அவளோட குடும்பம் நடத்த முடியாது!'ன்னு எங்களுக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு பார்ட்டில திலீப் ஒரே புலம்பல்" என்று சிரித்துக்கொண்டே சொன்னவன், "அது மட்டுமில்லை மித்து! நம்ம நிச்சயதார்த்தம் முடிஞ்சதும், 'ஏய் எப்படிடா இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொன்ன'ன்னு என்கிட்ட கேட்டான்" என்றான் தீபன்.


"ஐயோ! நீங்க என்ன சொன்னீங்க!" என அவள் கேட்கவும், அதுவரையிலும் கூட அவளை நெருங்கியே நின்றிருத்தவன் "சொன்னா நீ திடீர் தாக்குதல் நடத்தினாலும் நடத்துவ தாயே!" என்றவாறு சற்று விலகிச்சென்று, "நீ வேண்டாம்னு சொல்லிட்டியாம்! உங்க டெர்ரர் பாரதிசித்தி எங்க அம்மாவை கூட சேர்த்துக்கிட்டு அந்த ஸ்ட்ரிக்ட் ஆபீசரை என் தலைல காட்றாங்க! நான் மறுத்தால் உனக்கு ப்ராப்ளம் ஆகலாம்; அதனால என்னால நோ சொல்ல முடியல! என்னோட உயிர் நண்பனுக்காக ஒரு சின்ன தியாகம்'ன்னு சொன்னேன்" என்று அவன் சொல்லவும், "என்ன! அப்படிலாம் நீங்க ஒண்ணும் எனக்காக தியாகம் பண்ண வேண்டாம்!" என்று அவள் முறுக்கிக்கொள்ள, அவளை வாகாக இழுத்து அணைத்தவன், "அப்படிலாம் இல்ல! கோவிச்சுக்காத செல்லம்! அவன் மறுபடியும் எதாவது குழப்பம் பண்ணாம இருக்கனும் இல்ல! அதனால அப்படிச் சொன்னேன்! மத்தபடி இந்த மித்ராதான் தீபனோட நிகழ்காலம் எதிர்காலம் எல்லாம்!" எனக் கொஞ்சலாகச் சொன்னான் தீபன்.


அவனுடைய கொஞ்சலான வார்த்தைகளுக்குள் புதைந்துபோனாள் மித்ரா!


கனவைப்போல நடந்துமுடிந்த அனைத்தையும் நினைத்துப்பார்த்தவளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைய,


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌவும் கங்கணபதியே


வரவரத ஸர்வ ஜனம்மே வசமிநய ஸ்வாஹா!


ஓங்கி ஒலித்த மந்திரம் 'இனி எல்லாம் நன்றாகவே நடக்கும்!" என அவளிடம் சொல்வதுபோல் தோன்றியது வசுமித்ராவுக்கு.


***


இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்கள், அரசியலில் பெரிய தலைகள், திரைத்துறை பிரபலங்கள், மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் அரசு அதிகாரிகள் போன்ற பலரால் மகாபலிபுரம் தாண்டி தீவு போல் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள அந்த நட்சத்திர விடுதியின் கருத்தரங்கு கூடம் நிரம்பி வழிந்தது.


குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் நாட்டின் அரசியல் அமைப்பை தங்களது கைக்குள் வைத்திருக்கும் கூட்டம் அது.


திலீப் அவனுடைய தந்தை பராசரனுடன் அங்கே வந்திருக்க தீபனும் அங்கேதான் இருந்தான்.


அவர்கள் அங்கே கூடி இருந்ததற்கான காரணம் டீ.பீ!


முந்தைய தினம் அங்கே வந்திருந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் டீ.பீயிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.


அதில் அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.


முதலாவதாக அரசாங்க நடவடிக்கைகளில் இதுவரை அவர்களால் இருந்துவரும் மறைமுக குறுக்கீடு இனிமேல் இருக்கவே கூடாது.


வரி ஏய்ப்பு என்பதே இனி அவர்கள் அகராதியில் இருக்கக்கூடாது.


பின் தங்கிய நிலையில் இருக்கும் அரசு பள்ளிகளை அவர்கள் தனிப்பட்ட முறையில் தத்தெடுத்து அதை மேம்படுத்த வேண்டும்.


இயற்கையைக் கெடுக்கும் எந்த ஒரு தொழிலிலும் அவர்கள் ஈடுபடக் கூடாது.


இவற்றுடன் அரசியல்வாதிகளுக்கென...


உடனடியாக; பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன ஆண்மை நீக்கம் செய்யும்படி தண்டனை சட்டம் கொண்டுவரவேண்டும்.


படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப் பட வேண்டும்.


போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட உச்சபட்ச தண்டனை அளிக்க ஏதுவாகச் சட்டம் இயற்றப்படவேண்டும்.


லஞ்சம் வாங்குபவர்களை குடும்பத்துடன் தண்டிக்க வழிவகை செய்யவேண்டும்!


போன்றவை அதில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.


அனைத்திற்கும் சிகரம் வைப்பதுபோல அவர்களுடைய பினாமிகள் பற்றிய தகவல்கள், அவர்களுடைய மொத்த சொத்து விவரங்கள், அவர்கள் கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருக்கும் வாங்கி கணக்கு பற்றிய தகவல்கள் அதன் மொத்த தொகையுடன் அதில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.


அவனுடைய இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் போனால் அனைத்தும் ஒரே நொடியில் காணாமல் போய்விடும் என்ற கட்டளையுடன் அந்த மின்னஞ்சல் செய்தி நிறைவு செய்யப்பட்டிருந்தது.


அதைப் பார்த்ததும் பீதியில் உறைந்துபோனவர்கள் டீ.பீயை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசிக்கவே இப்படி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.


அந்த டீ.பீ யார் என்பதைக் கண்டுபிடித்து அவனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருத்தது. அதுவே அங்கே வந்திருந்தவர்களின் பேச்சின் சாராம்சமாக இருத்தது.


அவர்கள் தேடும் டீ.பீயே தீபப்ரகாசனாக அவர்களுக்கு முன் கம்பீரமாக உட்கார்ந்திருப்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.


தீபன் மற்றும் சந்தோஷுடைய சொந்த கண்டுபிடிப்பான புதிய இயந்திரங்களை அவர்கள் இதற்கு உபயோகிப்பதால் ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த டீ.பீயை கண்டுபிடிக்கத் துளி அளவும் சாத்திய கூறுகள் இல்லை என்பதை அவர்கள் அறியும் வாய்ப்பும் இல்லை.


ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக டீ.பீயை ஒழித்துக்கட்ட யோசனைகளை சொல்லிக்கொண்டிருக்க எழுத்து நின்று உறுதியான குரலில், "சாரி டு ஸே திஸ் ஃப்ரெண்ட்ஸ்" எனத் தொடங்கிய தீபன் தன் பேச்சைத் தொடர்ந்தான், "நீங்க டீ.பீயை ரொம்ப அன்டெர் எஸ்டிமேட் பண்றீங்கன்னு நினைக்கறேன்!


உங்க உளறலையெல்லாம் கேட்டுட்டு நான் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் லூஸ் பண்ண நான் தயாரா இல்ல.


நான் டீ.பீ சொல்ற எல்லா கண்டிஷன்ஸையும் அக்செப்ட் பண்ணிக்க போறேன்!


அதில் முதல் கட்டமா ஈரோடு மாவட்டத்துல இருக்கற சில பள்ளிக்கூடங்களை நான் அடாப்ட் பண்ணறதா முடிவே செஞ்சுட்டேன்!


சம்பாதிச்சு வெச்சிருக்கிற பணத்தை மொத்தமா காவு கொடுக்க தயாரா இருக்கறவங்க விட்ருங்க.


மத்தபடி என்னை ஃபாலோ பண்ணி என் பின்னாடி வரவங்க வரலாம்" என்று அவன் சொல்ல,உடனே திலீப், பராசரனுடன் ஏதோ பேசிவிட்டு, "எஸ்! மிஸ்டர் தீபன் சொல்றதுதான் சரி! நான் அவருக்கு சப்போர்ட் பண்றேன்!" என்று சொல்ல, தீபனின் பார்வை அங்கே உட்கார்ந்திருந்த புஷ்பநாதனிடம் செல்ல, பதறியவாறு எழுந்து நின்றவர், "நானும் டீ.பீயை பகைச்சுக்க விரும்பல!


என் மூத்த மகனையாவது நல்ல படியா வெளிய கொண்டுவர எனக்கு இந்த பணம் வேணும்!


நானும் டீ.பீயை சப்போர்ட் பண்றேன்!" என்று சொல்ல, அங்கிருந்த 'மார்க்கர்' பேனாவை எடுத்தவன் அருகிலிருந்த கண்ணடி தடுப்பில் ஒரு கைப்பேசி எண்ணைப் பெரிய எழுத்துக்களாக எழுதிவிட்டு, "எல்லாருக்கு எதிர்லயும் சொல்ல பயப்படுறவங்க நைட் டுவல் குள்ள இந்த நம்பருக்கு உங்க பேரை மென்ஷன் பண்ணி 'ஐ அக்ரீ'ன்னு ஒரு டெக்ஸ்ட் பண்ணுங்க!


நாம டீ.பீ கிட்ட ஒரே நேரத்துல நம்ம சம்மதத்தை சொல்லலாம்!" என்று சொல்லிவிட்டுத் திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றான் தீபன்.


***


அங்கிருந்து நேராக அலுவலகம் சென்றவன் சில மணி நேரம் கடந்து வீட்டிற்கு வந்தான்.


எள் போட்டால் பொரிந்துவிடும் போன்று அவ்வளவு கடுகடுப்பு அவனது முகத்தில் தெரியவும் மருமகளைப் பார்த்து, 'என்ன?' என்பதுபோல் அருணா ஜாடை செய்ய, கணவனின் மனநிலை அவளுக்கும் புரியாமல் போகவும், "தெரியல அத்தை!" என உதட்டு அசைவால் பதில் சொன்னாள் மித்ரா.


நேராகச் சென்று குளித்துவிட்டு வந்தவன் பேச்சே இன்றி சாப்பிட்டுவிட்டு அவர்கள் அறைக்குள் வந்து படுத்துக்கொண்டான் தீபன்.


சரிகாவின் அறைக்குள் சென்றவள், "மித்தா அத்தை!" என்றவாறு அவளைக் கட்டிக்கொண்ட சாத்விகாவை தூக்கிக் கொஞ்சியவாறு, "சாகரிகா பாப்பா சமத்தா தூங்கிட்டா போலிருக்கே" என்று கொஞ்சலாகச் சொல்லிக்கொண்டே அங்கே சரிகாவின் அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவர்களது இரண்டாவது மழலையைப் பார்த்தாள் மித்ரா.


அவளுக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. அதுவரை அங்கேயே இருந்து குழந்தையைத் தொட்டிலில் போடும் வைபவம் முடிந்ததும் அமெரிக்கா சென்றுவிட்டன சந்தோஷ்.


தாய்வீட்டின் அரவணைப்பிலிருந்த சரிகாவிடம், "உங்களுக்குச் சாப்பிட எதாவது கொண்டுவரட்டுமா அண்ணி!" என மித்ரா கேட்க


"எனக்கு எதுவும் வேண்டாம் மித்து! சாதுவை கொஞ்சம் தூங்க வெச்சிரு ப்ளீஸ்!" என்று சரிகா சொல்ல சாத்விகாவின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியவாறு அவளைத் தூங்க வைக்கும் முயற்சியில் இறங்கினாள் மித்ரா!


ஒருவாறாக அவளை உறங்கவைத்துவிட்டு அவர்களது அறைக்குள் அவள் வர, அவன் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் அதுவரை மொத்தமாக மூன்று குறுஞ்செய்திகள் மட்டுமே வந்திருக்க அந்த ஏமாற்றத்தை விழுங்க முயன்றவாறு, தீவிர யோசனையுடன் உறக்கம் வராமல் கண் மூடி படுத்திருக்கும் தீபனை பார்த்தவள், "இவருக்கு தீபன்னு பேர் வெச்சதுக்கு பதிலா கோபன்னு பேர் வெச்சிருக்கலாம்!" என முணுமுணுத்தாள் மித்ரா,


"என்ன முணுமுணுப்பு எது சொல்றதுனாலும் தெளிவா சொல்லு!" என அவன் சீற, "ஐயோ! நான் முணுமுணுக்கல; சும்மா பாட்டு ஹம் பண்ணேன்!" என்றவள் 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்!" என மெல்லிய குரலில் பாட, "அடங்கவே மாட்டியா நீ! பேசாம தூங்கு! மீதி பாட்டை எல்லாம் நாளைக்கு பாடிக்கலாம்!" என்று அவன் சொல்லவும் கண்களை மூடி படுத்துகொண்டாள் அவள்!


திருமணம் முடித்து அழகான ஒரு இல்வாழ்க்கையை அவர்கள் தொடங்கி மாதங்கள் மூன்று முடிந்திருந்தது.


திருமணத்திற்குப் பின் மகளுடன் தங்க முற்றிலுமாக கலைவாணியும் ராகவனும் மறுத்துவிட, மேலும் நாமக்கல் வீட்டிலேயே அவர்கள் இருக்க விரும்பவும், அங்கே அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து, உதவிக்கு சில ஆட்களை ஏற்பாடு செய்து மாரியைத் துணையாக வைத்தான் தீபன் அவர்களுடைய எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து.


புதிதாக மணமானவர்களுக்கே உரித்தான காதல், தேடல், ஊடல், கூடல் எல்லாமே இருந்தாலும் அவனுடைய தொழில் சார்ந்த வேலைகளில் அவன் மூழ்கி இருக்க, பொதுத்தேர்வுகள் தொடர்பான வேலைகள், பரீட்சை தாள்களைத் திருத்துவது என மித்ராவும் பரபரப்பாகவே இருந்தாள்.


முந்தைய தினம்தான் அவளுக்கு விடுமுறை தொடங்கி இருந்தது.


அதற்குள்ளாகவே, "ஏன்டா கல்யாணம் முடிஞ்சு இவ்வளவு நாள் ஆகுது! ஸ்விச்சர் லேண்ட் இல்லனா மொரீஷியஸ்னு எங்கேயாவது என் மருமகளை அழைச்சிட்டு ஹனிமூன் போக கூடாது! இப்படி இருக்கியே!' என அருணா மகனை நச்சரிக்க, 'எல்லாம் உங்க பொண்ணு சொல்லிக்கொடுத்து பேசறீங்க இல்ல! இருக்கு அவளுக்கு!" எனக் கடிந்துகொண்டவன், "நீங்கதான் ஹனிமூனெல்லாம் போனதில்லையே! நான் வேணா உங்களுக்கு டிக்கட் புக் பண்ணி தரேன்; நீங்க அப்பாவோடபோயிட்டு வாங்க! என்னை விட்டுடுங்க!" என அவன் சொல்லவும் மகனுடைய பேச்சில் வாயடைத்துப்போனார் அருணா!


அதை எண்ணிச் சிரிப்பு வர, கூடவே அவளது கண்களை உறக்கம் தழுவ சற்று கண் அயர்ந்தாள் மித்ரா!


சமயத்தில் மின்சாரம் நின்றுபோனால் 'டிங்! டிங்! டிங்!' என தொடர்ந்து ஒலிக்கும் அவர்களது பள்ளியின் மணி ஓசை கேட்பதுபோல் தோன்றவும் பதறி எழுந்தவள் அது தீபனுடைய கைப்பேசியில் ஒலிக்கும் 'நோட்டிபிகேஷன்' ஒலி எனப் புரிய எழுத்து உட்கார்ந்து, "எங்க ஸ்கூல் கடைசி பெல் சத்தம்னு நினைச்சேன்! அது என்ன ஒரே நேரத்துல இவ்வளவு மெசேஜ்!" என உறக்கம் கலைந்த கடுப்புடன் அவள் கேட்க அவன் நேரத்தைப் பார்க்கவும் மணி பதினொன்று ஐம்பத்து ஒன்பது எனக் காண்பித்தது.


இன்னும்கூட 'டிங்! டிங்' எனச் சத்தம் வந்துகொண்டிருக்க கிட்டத்தட்ட அங்கே வந்திருந்த அனைவருமே அந்த குறுஞ்செய்தியை அனுப்பியிருப்பது புரிந்தது அவனுக்கு!


அதுவரை அவன் முகத்தில் தெரிந்த இறுக்கமெல்லாம் மறைந்து, "உண்மைதான் மித்து! லாஸ்ட் பெல் சவுண்ட் உன்னோட பிள்ளைகளுக்கு எவ்வளவு ரிலீஃப் பீல் கொடுக்கும்!


அப்படி ஒரு பீல் தான் எனக்கு இப்ப!" என்றவாறு விரிந்து மலர்ந்த புன்னகையுடன் அவளை இறுக அணைத்து உடனே விடுவித்தவன், "கமான் கெட் ரெடி! வா நாம ஒரு லாங் ட்ரைவ் போயிட்டு வரலாம்!" என தீபன் சொல்ல, அதில் அதிர்த்தவள்,


"என்ன இது பாதி ராத்திரி இப்படி ட்ரோல் பண்றீங்க!" என அவள் கேட்க, "நோ! ஐம் சீரியஸ்! கிளம்பு! பாஸ்ட்" என்றவாறு அவளுடைய கையை பற்றி அவன் இழுக்கவும், "ப்ச்! தீபன்! நான் நைட் ட்ரெஸ்ல இருக்கேன்! சேஞ் பண்ணிட்டு வரேன்!" என்றவாறு அவள் அவனை ஏற இறங்கப் பார்க்க அவன் வீட்டில் உடுத்தும் வெள்ளை வேட்டி மற்றும் டீஷர்ட்டில் இருக்கவும், அதை அவள் குறிப்பிடுவதை உணர்ந்து, "தீபன் இஸ் ஆல்வேஸ் தீபன்! வேட்டில இருந்தாலும் தீபன்தான்!" என்று அவன் சொல்ல, உதடு சுழித்தவள், "பட் நான் சேஞ் பண்ணிட்டு வரேன்!" என்றவாறு உடைமாற்றும் அறை நோக்கிச் சென்றாள் மித்ரா!


***


இரவு நேரம் என்பதினால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அவனது வாகனம் சீரான வேகத்தில் செல்ல, முதலில் கொஞ்ச நேரம் வரை அந்த பயணத்தை அனுபவித்தவள் வாகனம் செங்கல்பட்டை கடக்கவும்தான், "என்ன லாங் ட்ரைவ்னு சொல்லிட்டு எங்கேயோ போயிட்டு இருக்கீங்க?" என மித்ரா கலவரமாக கேட்கவும், "சர்ப்ரைஸ் பேபி! சர்ப்ரைஸ்! இப்ப எந்த கேள்வியும் கேக்காத!" என்றான் தீபன் கவனம் முழுவதையும் சாலையிலேயே வைத்து!


"என்ன ஹனி மூனா!" என அவள் ஒரு மாதிரியான குரலில் கேட்கவும், "ம்! இந்த ட்ரைவோட முடிவுல நீயே தெரிஞ்சிப்ப இது என்ன மாதிரியான ட்ரிப்ன்னு!" என அவன் சொல்ல, "வீட்டுல யார் க்கிட்டேயும் சொல்லலையே!" என அவள் அடுத்த கேள்வியை கேட்க, "சரிகா சொல்லிடுவா! நீ பேசாம வா!" என அவன் சொல்லவும், "டிரஸ் எதுவும் எடுத்துக்..." அவள் முடிப்பதற்குள் அவன் பார்த்த பார்வையில் அப்படியே மௌனமாகிப்போனாள் மித்ரா!


பொழுது புலர்ந்து பசி வயிற்றை கிள்ளவும், ஒரு உயர்தர உணவகத்தில் காலை உணவை உண்டுவிட்டு சிறிய ஓய்விற்குப்பிறகு அவர்களது பயணம் தொடர்ந்தது.


சில நிமிடங்களில் அப்படியே அவள் உறங்கிப்போக அவள் கண்விழிக்கும் நேரம் அவர்கள் இருந்தது எதோ ஒரு மலை கிராமம்!


சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு வீட்டின் முன் அவனது வாகனத்தை நிறுத்தி அவன் இறங்கவும் கூடவே இறங்கினாள் மித்ரா.


எளிமையான இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டிற்குள் இருவரும் செல்ல, அவர்களை வரவேற்றார் மத்திய வயதிலிருந்த ஒரு பெண்மணி.


"இவங்க ராசாத்தி! இங்க கேர் டேக்கர்!" என அவரை அறிமுகப்படுத்தியவன் அங்கே ஒரு அறைக்குள் செல்ல, அவனை பின் தொடர்ந்து வந்தவள் அவர்களுக்கான உடைகள் அங்கே தயாராக இருந்ததைப் பார்க்கவும் வியந்தே போனாள்.


குளித்து உடை மாற்றி வரவும் அவர்களுக்கான மதிய உணவு தயாராக இருத்தது.


உணவை ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டே, "இது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதி. அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி!


இந்த ஊருக்குப் பேர் மல்லியம்மன் துருக்கம்! சாப்பிட்டு முடிச்சிட்டு நாம ஒரு முக்கியமான இடத்துக்கு போறோம்!" என்றவன் சொன்னது போல அவளை அழைத்துச்சென்ற இடம் அந்த ஊரில் இருக்கும் நடுநிலைப் பள்ளி!


"இந்த ஸ்கூலோட சேர்த்து இந்த கிராமத்தையும் நாம தத்தெடுத்திருக்கோம் மித்து!


இதே மாதிரி இந்த சரௌண்டிங்ல இன்னும் கொஞ்சம் வில்லேஜசும் அடாப்ட் பண்ணியிருக்கோம்!" என அவளையும் சேர்த்துக்கொண்டே சொன்னவன், இங்க போதுமான டீச்சர்ஸ் கிடையாது!


முதல்ல டீச்சர்ஸ் அப்பாய்ண்ட் பண்ண ஏற்பாடு செய்திருக்கேன்!


தனிப்பட்ட முறைல இங்க இருந்து இதையெல்லாம் கவனிக்க இதே ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருத்தரை இன்சார்ஜா போட்டிருக்கேன்!


அந்த வீடு நாம இங்க வந்தா ஸ்டே பண்ண வசதியா இருக்கும்னு கட்டியிருக்கேன்!


நம்மால நிரந்தரமா இங்கயே தங்க முடியாது! ஸோ நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து கவனிச்சுக்கலாம்!" என அவன் சொல்லிக்கொண்டே போக உணர்ச்சியின் பிடியில் பேச்சற்று மித்ரா அவனை பார்த்துக்கொண்டே இருக்க, "என்ன இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கற!" என அவன் தீவிரமாகக் கேட்கவும், "என்னோட லட்சியம்னு சொன்னதுக்காகவா தீபு!" என்றாள் மித்ரா வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்குவதுபோல.


"நம்ம லட்சியத்துக்காக! ஏன்னா என்னோட லட்சியத்துக்குள்ள உன்னோட லட்சியமும் அடங்கியிருக்கு! ரெண்டும் தனித்தனி இல்ல!" என்றான் தீபன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.


அவனை அணைத்துக்கொள்ள துடிதுடித்த கரங்களைச் சுற்றுப்புறம் கருதி மிக முயன்று கட்டுப்படுத்தினாள் அவள்!


பின்பு ஓட்டுநருடன் அங்கே தயாராக இருந்த ஒரு ஜீப்பில் இருவரும் ஏறிக்கொள்ள, அந்த மலையின் மேலே அந்த வாகனம் சென்றது!


"இதெல்லாம் பழங்குடியினர் அதிகம் இருக்கும் கிராமம்! அவங்களோட முக்கிய வேலையே விவசாயம்தான்!


அவங்களோட விளை பொருட்களை தலையில சுமத்துட்டு கிட்டத்தட்ட எட்டு பத்து கிலோமீட்டர் நடத்தே போய் அதை வித்துட்டு வராங்க!


டிரான்ஸ்போர்ட் வசதி; கரண்ட் வசதி; மெடிக்கல் வசதி; எதுவுமே அவங்களுக்கு கிடைக்கறதில்ல!


நாம கொஞ்சம் கொஞ்சமா இதையெல்லாம் டெவெலப் செய்ய போறோம்!" அவன் சொல்லவும், பெருமையுடன் அவனது கரத்தை பிடித்துக்கொண்டு அவனது தோளில் சாய்ந்துகொண்டாள் மித்ரா.


குளிர் உடலை நடுங்கச்செய்ய, லேசாக இருள் பரவத்தொடங்கும் நேரம் அவர்களது வாகனம் ஒரு இடத்தில் நின்றுபோக, "நீங்க கிளம்புங்க! நாளைக்கு காலைல எட்டு மணிக்கு வந்தா போதும்" எனச் சொல்லி அந்த ஓட்டுநரை அனுப்பிவிட்டு, மித்ராவின் கரத்தை பிடித்து அவளை ஒரு மிகப்பெரிய மரத்தின் அடியில் அழைத்துவந்தான் தீபன்!


நிமிர்த்து மேலே பார்க்க, மிக அழகாக அவளை வரவேற்றது அந்த பரண் வீடு!


அருகே தொங்கிக்கொண்டிருந்த கயிற்றால் ஆன ஏணியில் ஏறி அவள் மேலே வர உதவினான் தீபன்!


சூரிய ஒளியில் இயங்கும் விளக்கின் மகிமையால் அழகாக ஒளிர்ந்தது அந்த மரவீடு!


சூடான உணவு அங்கே தயாராக இருக்க, அங்கே விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் போய் ஆயாசமாக உட்கார்ந்தவன், அவளை இழுத்து தன மீது சரித்து காது மடல்களில் முத்தமிட்டு ரகசிய குரலில், "இது நம்ம ஹனிமூனும் கூடத்தான் பேபி!


இதுக்கு நாம ஸ்விசர்லாண்ட் இல்லன்னா மொரீஷியஸ்தான் போகணுமா என்ன!


நம்ம ஊருக்குள்ளேயே இயற்கை அழகெல்லாம் கொட்டிக்கிடக்கே ரொமான்டிக்கா!" என்றவாறு அவளை அணைத்துக்கொள்ள, ஆமோதிப்பாக முகம் சிவக்க அவள் தலையை அசைக்கவும் அந்த மரத்திலிருந்த மிகப்பெரிய தேன்கூட்டின் தேனீக்களின் ரீங்காரத்துடனும் விண்ணில் மின்னிக்கொண்டிருக்கும் முழுநிலவின் ஒளியில் மூழ்கி கிரங்கிப்போயிருக்கும் காட்டு மலர்களின் கலவையான மணம் போதையை ஏற்ற, அவர்களது தேன் நிலவு ஆனந்தமாக அழகாக அங்கே தொடங்கியது.


இயற்கையோடு இயற்கையாக இரண்டற சங்கமித்தனர் இருவரும் மனநிறைவாக!


----நிறைவு---



Recent Posts

See All
Poovum Naanum Veru-35

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத்...

 
 
 
Poovum Naanum Veru-34

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான்...

 
 
 
Poovum Naanum Veru-33

இதழ்-33 கிழக்கு கடற்கரைச் சாலையில் காற்றைக் கிழித்து அபரிமிதமான வேகத்தில் பறந்துகொண்டிருந்தது தீபனின் வாகனம். அருகில் சந்தோஷ்! அவனது...

 
 
 

コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page