top of page
Writer's pictureKrishnapriya Narayan

TIK - 3

இதயம் - 3


வியர்க்க விறுவிறுக்க, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து பட்டனை அழுத்திவிட்டு லிப்ட்டிற்காக காத்திருந்தாள் மல்லி.


அங்கே தெளிக்கப்பட்டிருந்த ரூம் பிரெஷ்னரின் நெடி வேறு அவளது நாசியில் எரிச்சலை உண்டாக்கித் தும்மலை வரவழைத்துக் கொண்டிருந்தது.


அப்பொழுதுதான் அவள் அருகில் வந்து நின்றான் அந்தப் புதியவன். அதற்குள் லிஃப்ட் கீழே வந்துவிட, மல்லியுடனேயே அதன் உள்ளே நுழைந்தான்.


லிஃப்ட்டிற்குள்ளும் அந்த ரூம் பிரெஷ்னர் மணம் அதிகமாக இருக்கவே, மல்லிக்கு அடுத்தடுத்து தும்மலாக வந்து கொண்டே இருக்க கண்களில் நீர் வடியத்தொடங்கியது. அவளது இதழிகளிலிருந்து, ‘சாரி’, ‘எக்ஸ்க்யூஸ் மீ’ இரண்டும் அனிச்சையாக, மீண்டும் மீண்டும் உதிர்ந்து கொண்டே இருந்தது.


தினமும் அங்கே உபயோகிக்கும் ஸ்பிரேதான் அது. ஏனோ அந்த மணம் அவளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். தினமும் கொஞ்சம் தும்மலுடன்தான் அலுவலகத்தின் உள்ளேயே நுழைவாள். அதுவும் இன்று அந்த ஸ்பிரேவும் அதிகம். அவளது தும்மலும் அதிகம்.


கண்களத் துடைத்துக்கொண்டு தனது துப்பட்டாவின் நுனியால் மூக்கை மூடிக்கொண்டாள். பிறகுதான் அவனைக் கவனித்தாள் அவள்.


ஆறடிக்குக் கொஞ்சமே கொஞ்சம் குறைவான உயரம். மாநிறத்திற்கும் கொஞ்சம் அதிகமான நிறம். சதுரமான முக அமைப்பு சுத்தமாக ஷேவ் செய்திருந்தான். அகலமான நெற்றி! கூர்மையானக் கண்கள்! அவனுடைய அழுத்தமான தாடைகள் அவன் பிடிவாதக்காரன்! என்பதைப் பறைசாற்றியது. அலை அலையான கருமையான கேசம், அடங்காமல் பறந்துகொண்டே இருக்க, அதை தன்னுடைய நீண்ட விரல்களால் கோதிக்கொண்டே இருந்தான்.


அவனது முகமும், அந்த வசீகரக் கண்களும் முன்பே எங்கேயோ பார்த்து நீண்ட காலம் பழகிய ஒரு உணர்வை தோற்றுவிக்க, அவனது முகத்தையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி.


‘என்ன?’ என்பதுபோல் அவன் தனது புருவத்தை ஏற்றி தலை அசைத்துக் கேட்க, ஒன்றுமில்லை என்பதாக அவளது தலை தானாகவே ஆடியது. அப்பொழுதுதான் தன்னை மறந்து அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்ததை அவள் உணர, முன்பே அதிகத் தும்மலினால் சிவந்து போயிருந்த அவளது முகம் மேலும் ரத்தமெனச் சிவந்து போனது.


மின் தூக்கி, அவள் இறங்க வேண்டிய இரண்டாவது தளத்தைத் தாண்டிவிட்டதையே பிறகுதான் உணர்ந்த மல்லி. அவள் அதற்கான பட்டனை அழுத்த மறந்ததை நினைத்து மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டாள்.


கடைசியாக இருந்த, ஐந்தாவது தளத்தில் அவன் இறங்க அவள் லிப்ட்டின் உள்ளேயே இருக்கவும், ஒரு அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் சென்றதை பார்த்தவள் நொந்தே போனாள்.


மணி, ஐஸ்வர்யா மற்றும் பயிற்சியிலிருக்கும் பெண்கள் மூவர் என்று இவர்கள் வேலை செய்வதற்கான காபின் ஒரு ஹால் போல் சற்று பெரியதாக இருக்கும். அதில் மணிக்கு என்று தனியாக ஒரு சிறு கேபின் இருக்கும். டிசைன்கள் செய்வதற்கான கணினிகள், வரைவு மேசை என வசதிகள் செய்யப்பட்டிருக்கும். தையல் வேலைகளுக்கான பிரிவு தனியே இருந்தது.


மல்லி ஒருவழியாக அங்கே வந்து சேர, அந்த இடமே பெரும் அமைதியாக இருந்தது. அங்கே ஒருவரையும் காணவில்லை. பிறகு ஓய்வறைக்குச் சென்று முகம் கழுவி வந்த மல்லி, வெளியில் இருக்கும் சுகுணா என்ற அட்டெண்டர் பெண்ணை அழைத்து, “அக்கா! எங்க யாரையும் காணும்?” என்று கேட்க,


“உனக்கு தெரியாதாம்மா? மேல ஏதோ மீட்டிங்காம் எல்லாம் அங்கதான் போயிருக்காங்க!” என்று அவள் பதிலளிக்கவும், மறுபடியும் மின் தூக்கியை நோக்கி ஓடினாள்.


இரண்டு நாட்களில் அவ்வளவு ஓய்ந்து போயிருந்தாள் மல்லி. யார் சுமதி என்று அறிய, கைப்பேசியில் மணிக்கும் ஐஷுவிற்கும் மறுபடி மறுபடி முயற்சித்துக் கொண்டே இருந்தாள். ஒரு முறை கூட அவளது அழைப்பு எடுக்கப்படவில்லை. வேறு வழியே இல்லாமல் திங்கள் அன்று நேரில் விசாரித்துக்கொள்ளாம் என்று முடிவு செய்தாள்.


ஆனால் திங்கள் காலையிலேயே தீபன் படிக்கும் பள்ளியிலிருந்து, அவனது வகுப்பு ஆசிரியரை வந்து சந்திக்குமாறு அழைத்திருந்தனர். பரிமளாவால் போகமுடியாத சூழல் ஏற்படவே மல்லி போகவேண்டியதாக ஆகிப்போனது. பிறகு மின்னஞ்சல் மூலம் அலுவலகத்தில் பதினோரு மணிவரை நேர அனுமதிபெற்று, அங்கே சென்றுவிட்டாள் மல்லி.


அவன் படிப்பதுஅரசுப்பள்ளி. அவளும் அங்குதான் படித்தாள். படிக்கும் காலத்தில் அத்தனை ஆசிரியருக்கும் செல்ல மாணவி அவள்.


தீபனும் நன்கு படிக்கக் கூடியவன் என்பதால் பெற்றோருக்குப் பதில் அவள் போனால் யாரும் மறுப்பு சொல்வதில்லை. பெரும்பாலும் தீபனுக்காக மல்லிதான் போவாள்.


பள்ளியில் எதிர்பார்த்ததை விடத் தாமதம் ஆகிவிட, பேருந்து பிடித்து அவள் அலுவலகம் வந்துசேரவே மணி பதினொன்றரையைத் தாண்டியிருந்தது. இன்னும் அவளது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நேரம் வரவில்லை போலும்.


அந்தப் புதியவனிடம் வாங்கிய பல்பு வேறு அவளை இம்சித்தது. அடுத்து இந்த திடீர் மீட்டிங் வேறு! அங்கே இன்னும் வேறு என்னவெல்லாம் காத்திருக்கிறதோ?


நம்ம ராசிக்கு, ‘இந்த நாள் இம்சையான நாள்!’ என்று இருக்குமோ, என்று தன்னை நொந்தவாறே ஐந்தாம் தளத்திலிருந்த அந்த மீட்டிங் ஹால் கதவை லேசாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைத்த மல்லி ஆடித்தான் போனாள்.


காஞ்சனாதான் எல்லோரையும் அழைத்திருப்பார் என நினைத்து அவள் அங்கே செல்ல, அங்கே காஞ்சனா இல்லை. ஆனால் சசிகுமார் இருந்தார். மற்ற எல்லோருமே அங்கே கூடியிருக்க இவள்தான் கடைசி.


அந்தப் புதியவன் வேறு அங்கிருக்க 'ஐயோ ' என்றுதான் இருந்தது அவளுக்கு!


மணி நன்றாகத் தன்னை கடிந்துகொள்ளப் போகிறான் என்று இவள் எண்ணிக்கொண்டிருக்க, அதற்கு மாறாக அவளைப் பார்த்து தயக்கத்துடன் புன்னகைத்தவாறே அமரும்படி சைகை மட்டும் செய்தான்.


அவளும் ஒன்றுமே நடக்காததுபோல் போய் சவீதாவின் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்துக கொண்டாள்.


சசிகுமார் புன்னகை முகமாக, “என்ன மணி! இப்ப மீட்டிங்க ஆரம்பிக்கலாமா? வரவேண்டியவங்க எல்லாரும் வந்துட்டாங்க இல்ல?” என்று கேட்க, “ஓகே சார்!” என்றான் மணி பணிவுடன்.


“மிஸ். காஞ்சனா சில சொந்தக் காரணங்களால் ரெசிக்னேஷன் கொடுத்திட்டாங்க!” என அனைவருக்கும் முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார் குமார்.


“இனிமேல் அவர்களுக்குப் பதில் அந்த இடத்தில்…” என்று நிறுத்தி, அனைவரின் இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்தவர், “மிஸ்டர். மணிகண்டன் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்!” என்று மகிழ்ச்சியாக முடித்தார்.


நன்றித் தெரிவிக்கும் விதமாக எழுந்துநின்றான் மணி.


கைகளைத் தட்டியவாறே மல்லி மகிழ்ச்சியுடன் மணியைப் பார்க்க அவன் முகம் துடைத்து வைத்தாற்போன்று சலனமின்றி இருந்தது.


‘நியாயத்திற்கு அவன் சந்தோஷமாத்தான இருக்கணும், ஏன் இப்படி இருக்கான்?’ என்று நினைத்தவளுக்குள், ‘ஐயோ! மணி இடத்துக்கு ஐஷுவ அப்பாயிண்ட் பண்ணா நம்ம நிலைமை அவ்ளோதான்!’ என்ற எண்ணம் தோன்ற அதிர்ந்தாள் மல்லி.


அவளது பயம் தேவை இல்லாதது என்பதைப்போல, “இனிமேல் மிஸ்டர். மணிகண்டனுக்கு பதிலா மிஸ்டர். தேவாவை அப்பாயின்ட் பண்ணியிருக்கோம்!” என்ற சசிகுமார் அந்த புதியவனை 'தேவா' என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.


'உஃப்' என்ற நிம்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது மல்லியிடம். ஐஸ்வர்யாவை வேறு ஒரு பிரிவிற்கு மாற்றி, அவளுக்குப் பதில் 'சுமாயா' எனும் ஒரு புதிய பெண்ணை நியமித்திருந்தனர்.


சட்டென அவளது பார்வை ஐஸ்வர்யாவிடம் செல்ல, அவளுடைய முகம் பேயறைந்தது போல் இருந்தது.


பிறகு பொதுவான சில விஷயங்களுடன் அந்த சந்திப்புக் கூட்டம் முடிய, அவர்களுக்கு உணவருந்த நேரமாகியிருந்தது. களைப்புடன் பசியும் சேர்ந்துகொள்ளவே அவள் கொண்டுவந்திருந்த லன்ச் பாக்சுடன் ஓய்வறைக்குள் சென்றாள் மல்லி.


அவளுக்கு முன்பாகவே அங்கே சவியும் மேகலாவும் அமர்ந்திருந்தனர், உடன் தேவாவும். பார்ட்டியில் நடந்ததுபற்றி கேட்கலாம் என்றால், அந்தப் புதியவனின் முன்பாக அதைப் பற்றி பேச அவளுக்குத் தயக்கமாக இருந்தது.


யோசித்தவாறே அவளது பாக்ஸை திறந்தாள் மல்லி. அதில் காஞ்சிபுரத்தின் சிறப்பு உணவான குடலை இட்லி பொடியுடன் இருந்தது.


அதைப்பார்த்த நொடி, சிறிதும் தயக்கமின்றி, “வாவ்! இதெல்லாம் உங்க வீட்ல செய்வாங்களா?” என்று ஆச்சர்யத்துடன் தேவா கேட்க, அவனது சகஜ பாவத்தில் வியந்து, “அடிக்கடி செய்வாங்க. உங்களுக்கும் இது பிடிக்குமா?” என இயல்பாக அவனுக்கு பதில் கொடுத்தாள் மல்லி. “ரொ ம்ப” என்றவன், “முன்னல்லாம் எங்க வீட்டுல அடிக்கடி செய்வாங்க. இத நான் எடுத்துக்கறேன்” என்றவன், அவளது அனுமதியைக்கூட கேட்காமல் அதை எடுத்துக்கொண்டு அவனுக்காக 'அமிர்தம்' உணவகத்திலிருந்து வாங்கிவந்திருந்த உணவை அப்படியே அவளிடம் கொடுத்துவிட்டான். அவளும் மறுக்கமுடியாமல் அதை உண்ணத்தொடங்கினாள்.


ஏனோ அந்த நேரம் அவளுக்கு அம்முவின் நினைவுதான் வந்தது. அவளுக்கும் காஞ்சீபுரம் இட்லி என்றால் ஒரு அதீத விருப்பம். ஒவ்வொரு சமயம் விடுமுறை முடிந்து விடுதிக்குத் திரும்பும்போதும் அம்மாவை செய்யச் சொல்லி இவள் அதை அம்முவிற்கு எடுத்துச் செல்வாள்.


அதில் மிளகு சுக்கு எல்லாம் கலந்து செய்யப்பட்டிருப்பதால் இங்கே யாருக்கும் அது பிடிப்பதில்லை. மணி மட்டும் எப்பொழுதாவது ஒரே ஒரு துண்டம் மட்டும் எடுத்துக்கொள்வான். தேவா இவ்வளவு விரும்பி அதை எடுத்துக்கொண்டது மல்லிக்கு சந்தோஷமாக இருந்தது.


“ஆள் பார்க்கத்தான் இவ்ளோ ஹான்ட்சம்மாக இருக்கான். போயும்போயும் இந்தக் கிராமத்து கிளிக்கிட்டபோய் இப்படி பொங்கிட்டு இருக்கனே” என்று கிசுகிசுப்பாக மேகாவிடம் சொல்லி விஷமமாகச் சிரித்தாள் சவீதா.


பின்பு அவனது பார்வையில் மல்லியை மட்டந்தட்டும் பொருட்டு, “பார்ட்டி” என்று அவள் எதோ கேட்க வர, அதற்குள், “மல்லி இதோட ரெசிபி உங்களுக்குத் தெரியுமா?” என்று அவளிடம் தேவா கேட்க, உற்சாகமாக அதை விளக்கத் தொடங்கியிருந்தாள் மல்லி. பிறகு சவிதாவிற்கு பேச வாய்ப்பே கிடைக்காமல் போனது.


வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பும் முன், அனுமதி பெற்று மணியைச் சந்திக்க அவனது கேபினுக்குள் சென்ற மல்லி, “வாழ்த்துக்கள் மணி சார்” என்று கூற,


“ஹேய் தேங்க்ஸ்! ஆனா என்ன சார் எல்லாம் பலமா இருக்கு” மணி கேட்க, “நீங்கதான் பெரிய ஆளாகிட்டீங்களே! அப்ப மரியாதையும் பெருசாத்தான இருக்கணும்!” என்ற மல்லி, “நீங்க ஏன் இன்னைக்கு எங்க கூட லஞ்ச் சாப்பிட வரல?” என்று கேட்க,


‘என்ன சொல்வது?’ என்று முதலில் யோசித்தவன், “இல்ல, வேல நிறைய இருந்துது அதனாலதான், சாப்ட்டுட்டே அதையும் செஞ்சு முடிச்சேன்.” என்று ஒருவாறு சமாளித்தவன், “ஆமா, அன்னைக்கு பார்ட்டில இருந்து ஏன் சொல்லாமல் போயிட்ட?” என்று கேட்க, அப்பொழுதுதான் அவளுக்குப் புரிந்தது அவள் அன்று மயங்கி விழுந்தது இங்கு யாருக்குமே தெரியவில்லை என்று.


“அத விடுங்க, நம்ம கம்பெனில சுமதின்னு யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று மல்லி கேட்க, “சுமதியா? யாரது? அப்படி யாரையும் எனக்குத் தெரியாதே?” என்றான் மணி யோசனையுடன்.


“இல்ல, சும்மாதான் கேட்டேன்... பை!” என்று சொல்லிவிட்டு விடை பெற்றுக் கிளம்பினாள் மல்லி.


மணி அதன்பின் ஒருநாள் கூட அவர்களுடன் உணவருந்த வரவில்லை.


சில தினங்களில் சுமாயாவும் அங்கே வேலையில் சேர்ந்திருந்தாள்.


கொஞ்சம் கொஞ்சமாக அங்கே ஏற்பட்டிருந்த புதிய மாற்றங்களுக்குப் பழகிக்கொண்டிருந்தாள் மல்லி. தேவாவுடன் வேலை செய்வதும் அவளுக்கு சுலபமாகவே இருந்தது. நாட்கள் நத்தை வேகத்தில் நகர, அவளுடைய பயிற்சி காலத்தின் ஐந்து மாதங்கள் முடிந்திருந்த நிலையில், ஒரு நாள் மாலை வேலை முடிந்து பேருந்தில் வந்து இறங்கி தீபனுக்காகக் காத்திருந்தாள் மல்லி.


அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மிக மெதுவாகவே ஊர்ந்து கொண்டிருந்தன.


அங்கே சற்று தள்ளியிருந்த ரோட்டோர கடையில் சாட் உணவுகளை நண்பர்களுடன் சேர்ந்து உண்டுகொண்டிருந்த வீரா, மல்லி தனியாக நிற்பதை பார்த்துவிட்டு, “என்ன உன்னோட பாடிகார்ட் இன்னும் வரலியா?” என்றவாறே தள்ளாடியபடி அவள் அருகில் வந்து நின்றான்.


அவனிடமிருந்து வந்த மதுவின் நாற்றத்தில் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வர, அவள் முகம் சுளித்தவாறே அங்கிருந்து செல்ல எத்தனிக்க, “என்னடி நான் பேசிக்கிட்டிருக்கும்போதே நீ பாட்டுக்கு தெனாவெட்டா போயிட்டே இருக்க” என்றவாறே அவன் அவளது கையை பிடிக்கவந்தான்.


அவனுடைய தொடுகையிலிருந்து தப்பும் பொருட்டு மல்லி வேகமாக நகரவும், அங்கே இருந்த கல்லில் தடுக்கி மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு உயர்ரக காரின்மேல் மோதி நின்றாள். அவளது முழங்கை அந்தக் காரில் நன்றாக இடித்துவிட வலி உயிர்போகது.


அந்த காரின் ஓட்டுநர் வேறு கடுப்புடன் அவளைப் பார்த்து வைக்க, அசூயையாக உணர்ந்தவள், வீராவை திரும்பி முறைத்தபடி, “இதோ பாரு, இந்த மாதிரி எல்லாம் கலாட்டா செஞ்சன்னு வை, இப்படியே நேரா போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் செஞ்சிடுவேன் ஜாக்கிரத!” என்று சீற.


“நீ எங்க வேணா போய் சொல்லு. உன்னால ஒண்ணும் பண்ண முடியாது. நான் யாருன்னு உனக்குத் தெரியுமில்ல?” என்று அடங்காமல் அவன் சவால் விட, உள்ளுக்குள்ளே குளிரெடுத்தாலும் அதை வெளிக்காண்பிக்காமல், “நீ ஒரு வெத்துவேட்டுன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவனுக்கு பதில்கொடுத்துவிட்டு அந்த சாலையைக் கடந்து எதிர்புறம் சென்றாள் மல்லி.


அதே நேரம் அங்கே தீபன் வந்துவிட வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தாள் மல்லி.


“அக்கா உனக்கு ரோடு கிராஸ் பண்ண பயம்தான? ஏன்கா வந்த, நான்தான் அங்கயே வந்திருப்பனே” என்று தீபன் பரிவுடன் கேட்கவும், அவனைக் காய்ச்சி எடுக்கும் வேகத்தில்தான் இருந்தாள், ஆனால் சோர்ந்து களைத்த அவனது முகத்தை பார்த்ததும் அவள் கோபம் தணிந்து போனது.


அவனும் இரவுபகல் பாராமல் பரிட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறான். அக்கறையுடன் அவளை அழைத்துப்போக வருகிறான். அவனிடம் அவளால் கோபம் கொள்ள முடியவில்லை.


“அங்க ஒரு வெறி நாய் இருந்துதுடா தீபா” என பதில் கொடுக்க, பட்டென, “நாயைப் பார்த்து ஒரு பேயே பயப்படுகிறதே ஆச்சரியக்குறி!” என கிண்டலடித்தவனின் முதுகில் இரண்டு அடியைக் கொடுத்து,


“சீக்கிரம் வீட்டுக்குப் போடா, கை முட்டில அடி பட்டுடுச்சு, ரொம்ப வலிக்குது.” என்றவளை ஏதும் கேட்காமல் வீட்டிற்கு அழைத்து வந்தவன், வலி நிவாரணியை எடுத்துவந்து அவள் கையில் தடவியவாறே, “என்னாச்சு கா” என்று கரிசனையுடன் கேட்க, “ஒண்ணும் இல்லடா, ரோடு கிராஸ் பண்ணும்போது ஒரு கார்ல இடிச்சிகிட்டேன்” என்று மட்டும் சொன்னாள். அதை கவனித்த பரிமளாவும், “பார்த்து வரக்கூடாதா?” என்று கடிந்துகொண்டார்.


***


அடுத்தநாள் வலியுடனேயே அலுவலகம் வந்திருந்தாள் மல்லி. மல்லியை சில டிசைன்களை பற்றி விவாதிக்க அவனது கேபினுக்கு அழைத்திருந்தான் தேவா. கை வலி காரணமாக அவன் சொன்ன குறிப்புகளை எல்லாம் மெதுவாக நிறுத்தி எழுதிக்கொண்டிருந்தவளைப் பார்த்தவன், “என்னாச்சு மல்லி கைல ஏதாவது அடிப் பட்டிருக்கா?” என்றவாறே அவளது கையை பிடிக்க வர,


கையில் வைத்திருந்த நோட் பேடினால் அவனை தடுத்தவள், “ஒண்ணுமில்லை நாம வேலையை மட்டும் பார்க்கலாம்...” என்று காரமாக சொல்லிவிட, அதற்குமேல் அவளிடம் ஏதும் கேட்கவில்லை, ஆனால் அவனுடைய அடக்கப்பட்ட கோவம் அவளுக்குப் புரிந்தது. வெடுக்கன அவளிடமிருந்து குறிப்பேட்டைப் பிடுங்கித் தானே எழுதிக்கொடுத்து அனுப்பி விட்டான்.


பிறகு அவள், அவளுக்கான இடத்தில் வந்து அமர, அங்கே ஒரு வலி நிவாரணி ஸ்பிரே அவளுக்காக தயாராக காத்திருந்தது.


***


அன்று மாலை மல்லிக்காகப் பேருந்து நிறுத்தத்திலையே காத்திருந்தான் வீரா. அவனுடைய வலது கையில் எலும்பு முறிவிற்கான கட்டு போடப்பட்டிருக்க, கண்களில் அப்பட்டமான பயம் குடியேறியிருந்தது.


அவள் பேருந்திலிருந்து இறங்கிய அடுத்த நொடி, “மேடம் தெரியாம உங்ககிட்ட தப்பா நடந்துட்டேன். இனிமே நீங்க இருக்கற திசைக்கே வரமாட்டேன். அதைச் சொல்லத்தான் வந்தேன், தயவு சொஞ்சு என்ன மன்னிச்சிடுங்க!” என்றவாறு அங்கிருந்து ஓடியே போனான் அவன்.


அதில் அதிர்ச்சியுற்று, அவனுக்கு என்ன ஆனது என்று கேட்க எண்ணி, “ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ!” என்று அவனை அழைத்த மல்லியின் குரல் காற்றில் கரைந்து காணாமலேயே போனது.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page