top of page
Writer's pictureKrishnapriya Narayan

TIK - 5

இதயம்-5

எதுவும் பேசாமல் மௌனமாகவே அவனுடன் பயணித்திருந்தாள் மல்லி. மனதில் அவனைப் பற்றியே ஓடிக் கொண்டிருந்தது. “இவனை எங்கே பார்த்திருக்கிறோம்?” என்ற கேள்வியே அவளைக் குடைந்தது. “என்ன யோசனையெல்லாம் பலமா இருக்கு?” என்று அங்கே இருந்த அமைதியைக் கலைத்தான் தேவா. “ம்ம் உங்களை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்திருக்கேன், ஆனா ஞாபகம் வரல. நீங்க யாரு?” மனதில் இருப்பதை அப்படியே கேட்டாள். “நீ என்ன இதுக்கு முன்னாடி பா…ர்த்திருக்கியா? குட் ஜோக்” என்றான் தேவா நக்கலாக. “ப்ச் இந்தக் கிண்டலெல்லாம் வேணாம், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க!” என்றாள் காட்டமாக. அவளது தவிப்பும் கோவமும் அவனுக்குச் சிரிப்பையே வரவழைக்க, “ஓகே நான் தேஏஏஏஏ..வா போதுமா?” என்றான் அவன். “தேவான்னா, நீங்க என்ன அந்த மியூசிக் டைரக்டர் தேவா வா… இல்ல நடனப்புயல் பிரபுதேவா வா… தமிழ்நாட்டுல எல்லாருக்கும் உங்களைத் தெரிஞ்சிருக்க…” நக்கலாக அவள் சொல்ல, “ஹேய் என்ன பத்தி உனக்குத் தெரியாது! ஐயா வேர்ல்ட் பேமஸ், யூ நோ?” என்று தன் சட்டையின் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான். “ஆமாமாம் சொன்னாங்க... பேஸ்புக், ட்விட்டர், இன்னும் இருக்கிற டீவி சானல்ல எல்லாம்!” என்று அவள் நொடித்துக் கொள்ள, “ஆமான்னு சொன்னா நீ நம்பவாப்போற!” என்று அவன் ஏட்டிக்குப் போட்டி பேசவும், “தேஏஏஏ வாஆஆஆ” என்றுப் பல்லைக் கடித்தவள், “ஜோக்ஸ் அபார்ட், ப்ளீஸ் இந்த கம்பெனில நீங்க யாரு? எல்லாரும் நீங்க சொல்றத அப்படியே கேக்கறாங்களே, ஏன்? சுமா கூட உங்களுக்காக என்னோட அம்மாகிட்ட பேசியிருக்கா!” என்று கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தாள் மல்லி. கூலாக, “ஏன்னா ஆதி என்னோட ப்ரெண்ட்!” என்றான் தேவா. “சசிகுமார் சார் கூடத்தான் ஆதி சாரோட ப்ரெண்ட். ஆனா அவரே நீங்க சொல்றதத்தான் செய்வார் போலிருக்கே” என்று கேட்டாள். “சசி ஆதியோட பெஸ்ட் ப்ரெண்ட்தான்... ஆனா நான் அதைவிட கொஞ்சம் கிளோஸ்... எப்படின்னா நான் வேற ஆதி வேற இல்லங்கற மாத்ரி!” என்றவனை தலையை சாய்த்து பார்த்தவாறே, “எப்படி இந்த அன்னியன் - ரெமோ மாதிரி நீங்க ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியா தேவாஆஆஆஆ?” என்றுக் கேட்டவளின் அந்த பாவனையில் சிரித்தேவிட்டான் தேவா. “ஆமாம் அப்படியே வச்சுக்கோ” என்றவனை வினோதமாகப் பார்த்தபடி, “அப்ப நீங்க அன்னியனா? ரெமோவா?” என்றவளை, ‘நம்மளே, ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கி வாசிச்சிட்டு இருக்கோம். இவ நம்மள ஒரு வழி ஆக்காம விட மாட்டா போலிருக்கே’ என்று நினைத்துக்கொண்டே, “நான்தான் ரெமோன்னே வச்சுக்கோ. நீ அந்த அன்னியன் ஆதியப் பார்த்தாக்க தாங்க மாட்ட. இந்தப் பேச்சை இதோட விடு” என்று முடிவாக அவன் சொல்லவே அவள் மறுபடியும் சைலன்ட் மோடுக்கு மாறிப்போனாள். அவளின் அந்த மௌனம் அவனைப் பாதிக்கவே அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு, “ஆமாம் உனக்கு என்ன அந்தப் சரீஸ பார்க்க அவ்வளவு க்யூரியாசிட்டி?” என்று தேவா கேட்க உற்சாகமானாள் மல்லி. “இல்ல, இப்பல்லாம் அசல் வெள்ளி சரிகை புடவைகள கைத்தறில நெசவு செய்யறது ரொம்பவே குறைஞ்சு போச்சே! அதனாலதான் அந்தப் புடவைகள பார்க்க ஆசை” என்றவள் தொடர்ந்து, “சின்ன வயசுல இருந்தே இந்தப் பட்டுப்புடைவைகளோடவே வளர்ந்ததனாலோ என்னவோ அந்தப் புடவைகளை கட்டிக்கணும்ங்கற ஆசையை விட வித விதமா புடவைகள நெசவு செய்யறதுல அப்படி ஒரு ஆசை எனக்கு. அப்பாவவிட என் தாத்தாதான் ஆர்வமா புடவை நெய்வார். ஒரு நோட்புக் நிறைய அதைப் பத்தின குறிப்புகளோட, நிறைய டிசைன்களும் வரஞ்சு வெச்சிருந்தார்” என்றாள் மல்லி. “அப்படியா!” என்று ஆச்சரியமாய் கேட்டவன் "அந்த நோட்புக்க பத்திரமா வச்சிருக்கியா மல்லி?” என்று கேட்க, “இல்ல அது இப்ப அம்மு கிட்ட இருக்கு!” என்றாள் மல்லி கவலைத் தோய்ந்த குரலில். அந்த நேரம் அவன் திடீர் என்று பிரேக்கை அழுத்தவே வண்டி ஒரு நொடி குலுங்கிச் சென்றது. “என்னாச்சு?” என்றவளிடம், “ஒண்ணுமில்ல ஒரு நாய் குட்டி குறுக்க வந்துடுச்சு” என்றான் தேவா. “ஐயோ! நல்லவேளை அதுக்கு ஒண்ணும் ஆகல!” என்று சொல்லிவிட்டு, ஏதோ நினைவு வந்தவளாக, “ஆமாம் எனக்கு இந்தப் புடவையெல்லாம் பாக்க ஆசைன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று மல்லி வியந்து கேட்க, “அது இருக்கட்டும், அம்மு யாரு? அவள உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் தேவா. அம்முவைப் பற்றி அவன் கேட்டதும் சொன்னாள் மல்லி, “அவ என்னுடைய பெஸ்ட் ப்ரென்ட்!”

சொன்னவளின் குரலில் பெருமிதம் நிரம்பி வழிந்தது. “அப்படி என்ன அவள் உனக்கு அவ்வளவு ஸ்பெஷல்” கேட்டான் தேவா. “ரொ..ம்ப ஸ்பெஷல்தான், உண்மையான அன்பு அக்கறை எல்லாம் அவளிடமிருதுதான் கத்துக்கணும். இங்கேயும் நான் பார்த்துட்டுதானே இருக்கேன் ஒருத்தி கூட அவளை மாதிரி இல்லை!” என்றாள் மல்லி. அதற்குள் அவர்கள் டீ-நகரில் உள்ள ஆதி டெக்ஸ்டைல்சின் அந்த மிகப் பெரிய ஷோரூமை அடைந்திருந்தனர். *** வாகன நெரிசல்வேறு அதிகமாய் இருக்கவே அவன் வண்டியை ஷோரூமின் வாயிலிலேயே நிறுத்தி கண்ணாடியை இறக்க அங்கே நின்றுகொண்டிருந்த செக்யூரிட்டி பணியில் இருக்கும் ஒருவன் அவனைக் கண்டு, “அண்ணா!” என்று அழைத்தவாறே ஓடிவந்து ஆச்சரியம் கலந்த குரலில், “என்ன..ணா இந்த வண்டில வந்திருக்கீங்க?” என்று கேட்க, காரிலிருந்து இறங்கியவன், “ம்.. பைக்கு ரிப்பேர், அதனாலதான் இந்த கார்ல வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே சாவியை அவனிடம் கொடுத்து, “பார்கிங்க்ல விட்டுடு மனோ! நான் திரும்ப ஒரு அரைமணி நேரத்துல கிளம்பனும். வண்டியோட ரெடியா இரு” என்று கூறி விட்டு தேவா உள்ளேச் சென்ற வேகத்தில், அவனைத் தொடர்ந்து மல்லி ஓட வேண்டியதாகத்தான் இருந்தது. கடையில் வேறு கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. “நீ பட்டுப் புடவை பிரிவிற்குப் போய் அங்கேயே இரு... நான் ஐந்து நிமிடத்தில் வந்துடறேன்” என்ற தேவா அங்கே இருந்த அலுவலக அறை நோக்கிப் போக அவள் எஸ்கலேட்டரை நோக்கிப் போனாள். அவள் பட்டுப்புடவை பிரிவினுள் நுழைய, அங்கே மிதமானக் கூட்டமே இருந்தது. வேலையில் இருந்த விற்பனைப் பெண் அவளிடம், “என்னப் பார்க்கப் போறீங்க மேடம்?” என்று மிகவும் மரியாதையுடன் கேட்க, அவள் தேவாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டே, “ஸ்வர்ணாதாரிணி சாரீஸ்!” என்க, அவள் மல்லியை அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த ஊழியர் சில புடவைகளை அவளுக்குக் காண்பிக்க, அத்தனையுமே டெக்ஸ்சரைஸ்ட் புடவைகள். அவற்றைத் தொட்டுப் பார்த்தவள், “இதெல்லாம் இல்லை ஒரிஜினல் சாரீஸ்” என்க, அவர் அவற்றிலேயே விலை அதிகமாக ரகங்களை காண்பிக்க, “அண்ணா இதுவும் இல்லை வெள்ளி சரிகை புடவை… ஒர்க் செஞ்சது!” என்றவளை ஒரு விசித்திரப் பார்வை பார்த்தவர், “அதை எல்லாருக்கும் காண்பிப்பதில்லை” என்று சொல்லும் போதே அவளுக்குப் பின்னால் அவளை முறைத்தவாறே வந்த தேவாவைப் பார்த்து அதிர்ந்தார்அந்த ஊழியர். “இங்க என்ன பண்ற? நான் உன்னை வெயிட் பண்ணதானே சொன்னேன்” என்றவன் அவளது கையைப்பிடித்து அங்கே இருந்த ஒரு தனிப்பட்ட அறைக்கு அவளை அழைத்துச் சென்றான். அவனது பின்னாலேயே அந்த ஊழியரும் ஓடி வந்தார். பிறகு அவன் சொல்லச் சொல்ல, ஒவ்வொரு புடவையாய் அவர் பிரித்து மல்லிக்குக் காண்பிக்க, அவள் அதை ஆசையுடன் மெதுவாக வருடிக் கொண்டே, “தேவா உங்களுக்கு இந்த புடவைகளைப் பற்றிய தகவல்களெல்லாம் தெரியுமா? என்று கேட்க, “நீ கேளு நான் தெரிந்ததை சொல்றேன்” என்ற தேவாவிடம், அந்தப் புடவைகளின் தயாரிப்பு பற்றிய தகவல்கள் சிலவற்றை அவள் கேட்க, அவனும் தெளிவாக பதில் சொல்லிக்கொண்டிருந்தான். அவர்களை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பல ஆண்டுகளாய் அங்கே வேலை செய்யும் அந்தப் பணியாளர். பிறகு அவளைத் தரை தளத்திலிருந்த அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றான் தேவா. அங்கே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன், தங்க பிரேமிட்ட கண்ணாடி அணிந்து கம்பீரமாக அமர்ந்திருந்தார் ஆதி டெக்ஸ்டையில்ஸின், ‘சேர்மேன்’ வரதராஜன். உள்ளே நுழைந்த மல்லி, அவரைக் கண்டவுடன் விதிர்விதிர்த்துப்போனாள்! அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்த தேவா அவளை நோக்கி, “சாரை உனக்குத் தெரியும் இல்லையா?” என்று கேட்க அவள் தலையை நன்றாக ஆட்டி வைத்தாள். அவரை சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறாள். அதனால், பார்த்தவுடன் அடையாளம் தெரிந்த்து. பின்பு அவரிடம், “இவங்கதான் சார் மரகதவல்லி. அந்த மயில் போட்டப் ட்ரஸ்... டிஸைன் பண்ணவங்க சார்!” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை அறிமுகம் செய்து வைத்தான் அவன். அவள் அவரை நோக்கி கை குவிக்க, அவர் தலை அசைத்தவாறே உட்காரும்மா என்றார். “பரவாயில்லை!” என்று சொல்லிவிட்டு, நின்றுகொண்டே இருந்தாள் மல்லி. “சரி நாங்க கிளம்பறோம்” என்ற தேவாவிடம், “வீட்டிலிருந்து அம்மா” என்று சொல்லி விட்டு, “ஆதியோட அம்மா காபி அனுப்பி இருக்காங்க சாப்பிட்டுட்டுப் போ” என்றார் வரதராஜன். உடனே, அங்கிருந்த பிளாஸ்கில் இருந்த காபியை கப்களில் ஊற்றப் போன தேவாவை தடுத்துத் தானே ஊற்றி, அவர்களிடம் கொடுத்தவள் தானும் ஒன்றை எடுத்துக்கொண்டாள். “உட்கார்ந்து சாப்பிடு மல்லி” என்றவனின் சொல்லைத் தட்ட முடியாமல் அந்த இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்தவளைப் பார்த்த தேவா, “பார்த்து விழுந்துடப் போற” என்று ரகசியமாகச் சொல்ல, அவனை முறைத்துவிட்டு காபியை பருகினாள் மல்லி. அவன் அந்த நொடிக்குள் வரதராஜனைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை தூக்கி ‘எப்படி?’ என்துபோல் கேட்க, அவர் புன்னகைத்துக் கொண்டார். அங்கிருந்து வெளியில் வரவும், அங்கே வேலை செய்யும் அனைவரும் இவளையே பார்ப்பது போல் தோன்றியது மல்லிக்கு. பிறகு அங்கிருந்து கிளம்பினர் இருவரும். *** ஜிஹெச் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது அவனது கார். அந்தப் பட்டுப்புடவைகளைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தாள் மல்லி. அவன் சொன்னது போல் உண்மையில் அவன் ஆதியினுடைய நண்பன் என்று நம்பினாள் மல்லி. இல்லையென்றால் எப்படி இவ்வளவு உரிமையாக அவனால் அந்தக் கடையில் செயல்பட முடியும்? வரதராஜன் சாரும் அவனை இவ்வளவு பிரியமாக நடத்துகிறாரே! அப்பொழுது திடீரென்று, “இப்ப சொல்லு” என்றான் தேவா. “இப்படி மொட்டையாக சொல்லுன்னா என்ன சொல்லணும்?” கேட்டாள் அவள். “அம்முவைப் பற்றி சொல்லு. உனக்கு அவளை எப்படித் தெரியும் சொல்லு. எப்படியும் இந்த ட்ராபிக்ல நாம ஜீஹெச் போக ஒரு மணி நேரம் ஆகும் அதுவரைக்கும் டைம் பாஸ் ஆகவேண்டாமா?” என்றவனிடம், “உங்களுக்கு டைம் பாஸ் ஆக நான் அம்முவைப் பற்றி சொல்லனுமா? முடியாது” என்று முதலில் மறுத்த மல்லி பின்பு தானாகவே, “எனக்கு இன்றைக்கு இந்த பட்டுப் புடவைலாம் காண்பிச்சதால வேணா சொல்றேன்” என்றாள். “எப்படியோ நீ சொன்னா ஓகேதான்” என்ற தேவாவிடம் அம்முவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள் மல்லி. **** “மல்லி கண்ணு அப்பா கிளம்பறேண்டா. பத்திரமா இருந்துக்கோ. ஏதாவது வேண்டுமானால் வார்டன் மேடம் கிட்ட சொல்லி போன் பண்ணு சரியா” என்று சொல்லிவிட்டு, அவளது உச்சியில் முத்தமிட்டுக் கண்களில் நீர் திரளக் கிளம்பிப்போனார் ஜெகன். கிராமத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மல்லியை அவளுக்குத் தரமான கல்வியைக் கொடுக்கும் பொருட்டு சேலத்தில் இருக்கும் விடுதி வசதியுடன் கூடிய ‘முல்லை’ என்னும் அந்தப் பள்ளியில் சேர்த்துவிட்டுப் போனார் அவர். பிறந்ததிலிருந்து பெற்றோர், தாத்தா, பாட்டி என்று வளர்ந்தவள் மல்லி. பரிமளாவின் பிறந்த வீடும் பக்கத்துக்கு ஊரிலேயே இருக்கவும், உற்றார் உறவினர் என எல்லோருமே அருகருகே இருக்க ஒரு பாசக்கரக் கூட்டத்தை விட்டு வந்ததே அவளுக்குப் பெரிய இழப்பாக இருந்தது. சமீபத்தில்தான் அவளது பாட்டி இறந்திருந்தார். அதில் இருந்தே இன்னும் மீளாதவளை இங்கே சேர்க்கவும் மிக வேதனையாகவே இருந்தது அவளுக்கு. அந்த விடுதியில் ஆறுபேர் பகிர்ந்து தங்கும் ஒரு அறையில், மல்லியும் தங்கவைக்கப்பட்டிருந்தாள். தனித்தனியாகக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. ஜெகன் அங்கே வந்து, அவளது பொருட்களை வைத்துவிட்டுத்தான் சென்றிருந்தார். அம்மா பாட்டி என இறகுகளுக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டவள் அவள். முதல் முதலில் எல்லோரையும் விட்டுத் தனியாக வந்ததாலும் புதிய அந்தச் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து அவளுக்கு அச்சத்தை விளைவித்தது. அதனால் தூக்கம் வராமல், கண்களில் கண்ணீர் வழிய அழுதுகொண்டே இருந்த மல்லியின் தலையை அப்பொழுது ஒரு பிஞ்சுக் கரம் இதமாய் வருடியது. அவளது அன்னையின் கரிசனத்தை அதில் கண்டாள் மல்லி. கண்களைத் திறந்து பார்க்க, மங்கலான அந்த இரவு விளக்கின் ஒளியில், கண்கள் மின்ன நின்றிருந்தாள் அந்தச் சிறுமி. ஒல்லியான உடல்வாகுடன் இருந்த அந்தச் சிறியப் பெண் மல்லியை மிகவும் அமைதி அடையச்செய்திருந்தாள், அவளது அந்த அன்பான செயலால். அவளது அழுகை மட்டுப்பட, எழுந்து உட்கார்ந்த மல்லியிடம், “இதே மாதிரி அழுதுட்டு இருந்தால் ஜுரம் தான் வரும். இனிமேல் இங்கேதானே இருக்கப்போறோம். அதனால இப்படி அழுவதை நிறுத்திட்டு, இதை பழகிக்கணும்” எனப் பெரிய மனுஷிபோல் சொன்னஅந்தப்பெண்ணிடம், “நீ ரொம்ப நாளா இங்கே இருக்கியா?” என்று மல்லி கேட்க, “இல்லை நானும் இன்றைக்குத்தான் இங்கே சேர்ந்தேன்” என்றாள் அந்தப் பெண். “உனக்கு அழுகை வரலியா?” என்று பாவமாய்க் கேட்டாள் மல்லி. “என்னோட அப்பா சொல்லுவாங்க அழுவது கோழைத்தனம். அது நம்ம பலவீனத்தின் அறிகுறின்னு, அதனால நான் அழ மாட்டேன்!” என்று சொன்னவள் “உன் பெயர் என்ன?” என்று கேட்க, கைகளால் தன் முகத்தைத் துடைத்துக்கொண்டே, “மரகதவல்லி! மல்லின்னு கூப்பிடுவாங்க” என்று மல்லி சொல்ல, அதற்கு அவள், “ஐ என் பேரும் உன் பேயர் மாதிரியேதான் இருக்கும்!” என்று குதூகலிக்க, அதற்கு, “அப்படியா! உன் பேர்என்ன?” என்று ஆவலுடன் கேட்டாள் மல்லி. அவள் சொன்னாள், “அமிர்தவல்லி! அம்மூ! அதுதான் என் பேர்!” என்று.

0 comments

Комментарии

Оценка: 0 из 5 звезд.
Еще нет оценок

Добавить рейтинг
© KPN NOVELS COPY PROTECT
bottom of page