TIK-8
- Krishnapriya Narayan
- Sep 5, 2023
- 6 min read
Updated: Mar 29
இதயம் - 8
“ரோட் ஆக்சிடென்டாம்?! ஒரு டிப்பர் லாரி மோதிடுச்சு” என தீபன் சொன்ன செய்தி என்னவென்று புரியவே சில நொடிகள் பிடித்தது மல்லிக்கு, “எ.. ன்.. ன.. டா! தீ.. பா! சொல்ற?” மூச்சு முட்டிக் குரலே வெளிவரவில்லை.
“ஒண்ணும் இல்லக்கா. பயப்படாத! அன்னைக்கு அந்த ஆள் உங்கிட்ட சண்டை போட்டாரே, அப்ப எனக்கு எவ்வளவு கோபம் வந்துது தெரியுமா? ஆனாலும் அவர் இப்படி செத்துப் போகணும்னுல்லாம் நினைக்கலக்கா. அந்தப் பொண்ண ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு போனாங்க. ரொம்ப அழுதுச்சுக்கா”
“ப்ச்... பாவமில்ல...டா” என வருந்தியவளிடம், “என்ன செய்ய முடியும், விடுக்கா. மத்தத, வீட்டுக்கு வா பேசிக்கலாம்” என்றான்.
“சரிடா பை” என்று அழைப்பைத் துண்டித்தாள் மல்லி.
அவளுடைய முகத்தில் தோன்றிய கலவரத்தையும் அவள் குரலில் ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவனித்த தேவா, “என்ன மல்லி, இப்படி ஷாக் ஆகற அளவுக்கு உன் தம்பி என்ன சொன்னான்?” என்று கேட்டான்.
ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், “அந்த வனிதாவோட அப்பா இறந்துட்டாராம்!” என்றாள்.
“ஐயோ எப்படி!?” என அதிர்ந்த தேவாவுக்கும் இது புதிய செய்திதான்.
“ஆக்சிடென்டாம்!” மல்லியின் பதிலில் மேலும் அதிர்ந்தான்.
முதல் நாள் இரவுதான் அவனை வகையாக கவனித்திருந்தான் தேவா. அம்முவின் செயின் மட்டுமின்றி, ‘ஆ’ என்ற எழுத்தின்மேல் வைரம் பதித்த, அவளுடைய ஒரு மோதிரமும், ஒரு ஜோடி வளையல்களும் கூட வனிதாவின் அப்பாவிடம் இருந்தன.
அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தன்னுடைய ஆட்களை வைத்து அவனை அடிப் பின்னியெடுத்து விட்டான். அப்பொழுதே அவனைக் கொன்று புதைக்கும் அளவிற்கு அவனுக்கு கோவம் வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அந்த அளவிற்குச் செல்ல அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனாலேயே அவனை விட்டுவிட்டான்.
‘உண்மையிலேயே விபத்துதானா? இல்லை!?’ அவனுடைய மரணம் தேவாவிற்குள்ளும் பல கேள்விகளை எழுப்பியது.
அம்முவைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது நினைத்து சோர்ந்துதான் போனாள் மல்லி.
“ப்சு... இப்ப என்ன ஆச்சு? அவனுக்கு அம்மு இருக்கற இடம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. அவன் அந்தச் செயின அவகிட்டயிருந்து திருடிக் கூட வெச்சிருக்கலாம்” என்றான் தேவா.
அவள் அதற்கும் தெளிவடையாமல் இருக்கவே, “இதோ பாரு, அம்மு அம்முன்னு இப்படியே இருந்தா, உன்னால எந்த வேலையையும் உருப்படியா செய்ய முடியாது. இதோ இந்த சில்க் சாரி டிசைன் செய்யற வேல பாதிலயே நிக்குதுல்ல, அது மாதிரி” என்று கடிந்து கொண்டான்.
“ப்சு, உங்களுக்குச் சொன்னா புரியாது தேவா?” என்றாள் மல்லி விரக்தியுடன்.
அம்முவின் நினைவிலேயே உழன்றுகொண்டு தன்னைச் சுற்றி நடக்கும் வேறு எதையும் கவனிக்காமல் இருக்கும் அவள் நிலை அவனுக்கு அச்சத்தைக் கொடுக்க, “என்ன புரியாது? நீதான் கொஞ்சம் ஓவரா ரியாக்ட்பண்ற. அப்படி என்ன அவ ஊரு உலகத்துல இல்லாத பெரிய ஃப்ரெண்ட், அவளை மறக்க முடியாத அளவுக்கு?” என ஆயாசமாகக் கேட்டான்.
கண்களில் நீர்த் திரள, “நானே மறக்கணும்னு நினைச்சா கூட, அவள மறக்க அவ என்ன விடமாட்டா” என்ற மல்லி, தனக்கு அடிக்கடி வரும் கனவுகளைப் பற்றி தேவாவிடம் சொன்னாள்.
“நான் எட்டாவது படிக்கும்போதே அம்முவப் பிரிஞ்சு வந்துட்டது உங்களுக்குத் தெரியும்தான? ஆனா, ப்ளஸ்-டூ முடிச்சு, எனக்கு ரிசல்ட் வந்த டூ டேஸ் கழிச்சு, சாமி கும்பிட, பூவரசந்தாங்கல்ல இருக்கற எங்க குலதெய்வ கோவிலுக்கு போனோம். அங்கயிருந்து திரும்ப வந்த அன்னைக்குதான் ஃபர்ஸ்ட் டைம் அம்மு என் கனவுல வந்தா. அது ஒரு பயங்கரமான கொடூர கனவு.
அவ ஒரு கையால என்ன கெட்டியா பிடிச்சிட்டு இருந்தா. அப்ப யாரோ அவள எங்கிட்ட இருந்து பலவந்தமா பிரிச்சி எங்கயோ இழுத்துட்டு போனாங்க.
அன்னைல இருந்து தொடர்ந்து இந்த மாதிரி கனவுங்க வந்துட்டே இருக்கு. சிலது நியாபகத்துல இருக்கும். பல கனவுகள் மறந்தே போயிடும்” என்று முடித்தாள் மல்லி.
அவளையே இறுகிய முகத்துடன், மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
“ப்ளீஸ் நம்புங்க, தேவா. அவ என்ன ஆனாளோ, எப்படி இருக்காளோன்ற பயத்துலதான் இப்படி கெட்ட கனவா வருதுன்னு நினைக்கறேன். அப்பாவுக்கு மருந்து மாத்தர வாங்கவே எக்கச்சக்கமா செலவாகுது. ஸோ... மெடிக்கல் ட்ரீட்மென்டெல்லாம் இப்ப நான் இருக்கற சூழ்நிலையில என்னால எடுக்க முடியாது.
அதனால, ஒரே ஒரு தடவ, அம்முவ நேர்ல பார்த்துட்டா போதும். அவ நல்லபடியா இருக்கான்னு என் மனசு நம்பிட்டா இந்தக் கனவெல்லாம் வரவே வராதில்ல. அதுக்காகவாவது நான் அவளப் பார்க்கணும்” என்று முடித்தாள் மல்லி.
ஏதோ யோசனையுடன், “உனக்கு கடைசியா, எப்ப கனவு வந்தது?” என்று கேட்டான் தேவா.
தீவிரமாக யோசித்தவள், “ம்... சரியா ஞாபகம் இல்ல! கொஞ்ச நாளா எனக்கு அந்தக் கனவு வரலன்னு நினைக்கறேன்!” என அதையுமே சந்தேகமாகத்தான் சொன்னாள் மல்லி வியப்புடன்.
அதே யோசனையுடன், அவனிடம் காண்பிக்கக் கொண்டுவந்திருந்த அந்த டிசைன்கள் அடங்கிய கோப்பை மேசையிலிருந்து அவள் எடுக்க, அதன் கீழே வைக்கப்பட்டிருந்த, காகிதத்தால் ஆன ஒரு உறை கீழே விழ, அதிலிருந்த ஒரு மோதிரம் தனியாக உருண்டது.
அவசரமாக அந்தக் கவரை தேவா எடுக்க, அந்த மோதிரத்தை எடுத்த மல்லி அதில் இருந்த 'ஆ' என்ற எழுத்தைப் பார்த்து அதிசயித்து, “அழகா இருக்கு. ‘ஆ’ன்னு போட்டிருக்கே, இது யாரோட மோதிரம்?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்து கண் சிமிட்டியவாறே, “ஆமாம் மல்லி, இப்பல்லாம் உன் கனவுல அம்மு வறதில்லன்னு சொன்னியே, அவளுக்குப் பதில் இப்பல்லாம் உன் கனவுல நான்தான வரேன்? உண்மைய சொல்லு” என்று கேட்டான்
அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத பெண்ணவள் வெட்கத்தில் முகம் சிவந்துத் தடுமாறிப் போனாள்.
அவளைத் திசை திருப்பும் அவனது நோக்கம் நன்றாகவே வேலை செய்தது. அதை பயன்படுத்திக்கொண்டு அவளே கவனிக்காதவாறு அவளிடமிருந்து அந்த மோதிரத்தை கவர்ந்து தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான்.
அதேநேரம், தன்னை சமாளித்தவாறு, “என்ன தேவா சார், நேர்ல என்னை மெரட்ரது போராதுன்னு கனவுல வேற வந்து மிரட்டணும்னு உங்களுக்கு ஆசையா?” என்று கேட்டாள் மல்லி.
“உண்மைல நான் உனக்கு பாஸா, இல்ல நீ எனக்கு பாஸான்னே எனக்கு சந்தேகம் வர அளவுக்கு நீதான என்னை மிரட்டிட்டு இருக்க! இதுல கனவுல வேற நான் உன்னை மிரட்டிட்டாலும்!” என்று சிரித்துக்கொண்டே சொன்னவன் மணியைப் பார்க்க நான்கு நாற்பது ஆகியிருந்தது.
அந்த நேரம் அவள் அந்த மோதிரத்தைப் பற்றி மறந்திருந்தாலும் மறுபடி எதாவது கேட்டுவைத்தால், அதுவும் அந்தச் செயின் தன்னிடம் இருப்பது அவளுக்குத் தெரிந்தால், வீண் சிக்கல்தான் வந்து சேரும் என்று எண்ணிய தேவா, “மல்லி! இந்த டிசைன்ஸ கம்பியூட்டர்லபோட்டு, ஒரு பென் டிரைவ்ல காப்பி பண்ணி வை. நான் அப்பறமா பார்க்கறேன். இப்ப எனக்குக கொஞ்சம் வெளியில போகணும்” என்று அவளை அங்கிருந்து அனுப்பினான். பிறகுதான் அவனால் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது. அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்பிச்சென்றான் தேவா.
அதன் பிறகு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவள் தீபனைத் தேட, அவன் சுமாயாவின் கணவர் விஜித்திடம் பாடத்தில் சந்தேகம் கேட்கச் சென்றிருந்தான். அவர்கள் அங்கே குடிவந்த பிறகு, அவருடன் தீபன் நெருக்கமாகியிருந்தான்.
ஜெகன் ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருக்க, பரிமளா இரவு உணவு தயாரித்துக்கொண்டிருந்தார்.
ரெப்பிரேஷ் செய்து உடைமாற்றி வந்த மல்லி அம்மாவுக்கு உதவியவாறே, தீபன் சொன்னச் செய்தியை சொல்ல, அதற்கு அவர், “தீபன் கூட சொன்னான்மா. என்ன செய்யறது, ஏதோ அந்தாளோட நேரம் சரியில்லை போல இருக்கு, பாவம்!” என்று முடித்துக்கொண்டார்.
தீபனும் வந்துவிட, அவனும் அந்தச் சம்பவத்தைப் பற்றி அதிகம் பேசவில்லை. அவன் பேச விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
மல்லிக்குத்தான் அன்று இரவு உறக்கம் பறிபோனது.
தேவாவின் ஆளைத் துளைக்கும் பார்வையும், அவனது புன்னகை முகமுமே அவள் கண் முன் வந்து அவளை இம்சித்துக் கொண்டிருந்தது. அவளுக்கே அவளை நினைத்து பயமாய் இருந்தது. இந்த உணர்வுக்குப் பெயர்தான் என்ன!?
அவனை விட்டு விலகத்தான் நினைக்கிறாள். ஆனால் அவனை நேரில் பார்க்கும் பொழுது அவளது எண்ணமெல்லாம் மாறிப்போய் விடுகிறது. அவளுக்கு யாரிடமும் கிடைக்காத ஒரு பாதுகாப்பை அவனிடம் உணர்கிறாளே, அதனால்தானோ?!
தூக்கமின்றி புரண்டு புரண்டு படுத்திருந்தவளின் கைப்பேசி தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்ப, அதை எடுத்துப் பார்த்தவள் குழம்பிப் போனாள்! தேவா அனுப்பியிருந்த ஒரே ஒரு ஸ்மைலியில்.
அதை அவள் பார்த்துவிட்டதை அறிந்துகொண்டான் போலும். அடுத்த நொடி, “என்ன, கனவுல நான் வந்துடுவேன்னு பயந்து தூங்காம இருக்கியா?” என்று அடுத்த மெசேஜ் வர, கோப முகத்தை பதிலாக அனுப்பியவள், கைப்பேசியை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு, அவள்தான் பயமும் குழப்பமும் கலந்த மோடிற்கு மாறிப்போனாள்.
அடுத்த நாள் அலுவலகம் வந்தவள் அந்தப் புடவையின் டிசைன்களை கணினியில் பதிவேற்றி, அவன் சொன்னதுபோல் அதை பென்ட்ரைவில் காப்பி செய்து முடித்தாள்.
ஆனால் தேவாதான் அன்று அலுவலகத்துக்கு வரவில்லை. மதியம் அவளை நோக்கி வந்த சுமாயா, “தேவா நம்ம இரண்டுபேரையும் கிளம்பி 'ராயல் அமிர்தாஸ்’ வரச்சொல்லிட்டார். உன்கிட்ட ஒரு பென்ட்ரைவ் கேட்டிருந்தாராமே, அதை எடுத்துட்டு வரச்சொன்னார்” என்றாள்.
“எனக்கு இங்கதான வேலை? நான் ஏன் அங்க வரணும்? ஹோட்டலுக்கெல்லாம் என்னால வர முடியாது!” என்று அவள் சுமாயாவிடம் சொல்லிவிட, அடுத்த சில நிமிடங்களில் அவளது கைப்பேசி ஒலித்தது.
தேவா அழைத்திருந்தான்.
“என்ன மல்லி இப்படி செய்யற?” குரலில் கொஞ்சம் கோபமும் தெரிந்தது.
இரவு முதலே அந்த வருடத்திற்கான கணக்குகளை தணிக்கை செய்யும் வேலையில் மூழ்கி இருந்தான் தேவா. அப்பொழுதுதான் அது முடிந்திருந்தது.
வெகு விரைவிலேயே அந்தப் புடவையை வடிவமைக்கத் திட்டமிட்டிருந்தான், ‘அவள் ஏன் புரிந்துகொள்ளாமல் படுத்துகிறாள்?’
“இல்ல தேவா, இப்படி ஹோட்டலுக்கெல்லாம் வரது எனக்குப் பிடிக்கல” என்றாள்.
“ப்ச்... இதுவும் நம்ம ஹோட்டல்தான், மல்லி. சுமாவோடதான வரப்போற, பேசாம வா! இல்லன்னா உன் வேலை கன்ஃபர்ம் ஆகாது” என்று மிரட்டுவது போல் அவன் சொல்ல, விருப்பமின்றி அங்கே சென்றாள், சுமாயாவுடன்.
நேரே அவர்கள் சென்றது அந்த நட்சத்திர ஹோட்டலின் கான்பரன்ஸ் ஹாலிற்கு.
அங்கே இருந்த பெரிய திரையில் ஒளிர்ந்த விபரங்களை கையில் வைத்திருந்த காகிதங்களுடன் சரிபார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
அவர்கள் உள்ளே நுழையவும் மல்லியைத் திரும்பியும் பார்க்காது, “சுமா, மல்லி இங்க இருக்கட்டும். நம்ம ஆடிட்டர்ஸ் சில கொய்ரிஸ் போட்ருக்காங்க. நீங்க அதுக்கு பதில் சொல்லிட்டு வாங்க” என்று கூற, அவளும் அங்கிருந்து சென்றாள்.
தேவா மல்லியிடம் அந்த பென்ட்ரைவை கேட்கவும், அதை அவனிடம் கொடுத்தவள், “நீங்க மறுபடியும் என் வேலய காரணம் காட்டி என்னை மிரட்டினா, எனக்கு இந்த வேலையே வேண்டாம்னு போயிட்டே இருப்பேன்” என்ற அவளது கோபமான வார்த்தையில் அவனுக்குப் புன்னகையே அரும்பியது.
“சரி, வேலயப் பாரு” என்று அங்கே இருந்தப் பெரிய திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த அவளது டிசைன்களை காட்டிச் சொன்னான் தேவா.
அதைப் பார்த்ததும் அவளது கோபம் மறைந்துவிட, அவள் தேவாவிடம் அந்தப் புடவையை வடிவமைப்பது பற்றி விளக்கத் தொடங்கினாள். அவள் பேசும் வார்த்தைக்கேற்ப அவளது கண்களும் நடனமாடிக்கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக அதில் தொலைந்து கொண்டிருந்தான் தேவா.
மடிக்கணினியை அவள் இயக்கிக் கொண்டிருக்க, அவனது மூச்சுக்காற்று அவளது கன்னத்தில் உரசக் குனிந்து அவளருகில் நின்றிருந்தவனை வேலையில் இருந்த ஈடுபாட்டினால் முதலில் கவனிக்காதவள், பின்பு அதை உணர அவசரமாக அங்கிருந்து எழுந்து நின்றாள்.
அதை உணர்ந்தவன், பிறகு அவள் மொத்தமும் விளக்கி முடிக்கும் வரை கொஞ்சம் தள்ளியே நின்றுகொண்டான்.
வந்த வேலையை முடித்துக்கொண்டு அவள் அங்கிருந்து கிளம்பவுமே, “மல்லி! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!” என்றான்.
அவனது குரலிலிருந்த குழைவிலும், கண்களில் வழிந்த தவிப்பிலும் அவளுடைய எச்சரிக்கை உணர்வு விழித்துக்கொள்ள, அவன் என்ன பேசுவானோ என அஞ்சியவள், “இல்ல, நான் கிளம்பணும்” என்று பரபரத்தாள்.
“இல்ல! இன்னைக்கு பேசியே ஆகணும்!” என்று தேவா பிடிவாதமாய் சொல்லவும், ‘என்ன?’ என்பது போல் அவனைக் கேள்வியாக நோக்கினாள்.
“இங்க, வேண்டாம், கொஞ்சம் என்கூட வா” என்று அவளது கையை இறுகப் பற்றியவாறு, அவளை வேறு பகுதிக்கு இழுத்துச் சென்றான். கலக்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து அதிர்ந்தாள்.

அன்று அவளைக் கலங்க வைத்த அந்த நீச்சல் குளத்தருகில் நின்றிருந்தனர் இருவரும், தனிமையில்!
தனது கையை அவனிடமிருந்து விடுவிக்க அவள் போராட, அதிரடியாக அவளது விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்து, அதன் பிறகே அவளை விட்டான் தேவா.
மிரட்சியுடன் அவள் அந்த மோதிரத்தைப் பார்க்க, அன்றைக்கு முந்தைய நாள் அவள் பார்த்த அந்த, ‘ஆ’ என்ற எழுத்தைத் தாங்கியிருந்த அதே மோதிரம்தான் அது.
“இது என் அம்மாவோட மோதரம்! அவங்க பேர் ஆதிலட்சுமி. இத, அம்மா உனக்குக் கொடுக்கச் சொல்லிட்டாங்க!” என்றான் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்.
“என்ன, எனக்கா? எனக்கு எதுக்கு கொடுக்கணும்!?” என்று அவள் அதிர்வுடன் கேள்விகளாய்க் கேட்க, “அவங்க மருமகளுக்குக் கொடுக்காம, வேற யாருக்குக் கொடுப்பாங்க?” என்று அவன் பதிலையும் கேள்வியாக்க, திகைத்தாள் பெண்ணவள்.
“இல்ல, அது ஒரு நாளும் நடக்காது!” என்றாள் மல்லி தீர்மானமாய்.
“கண்டிப்பா நடக்கும்” என்றான் அவனும் உறுதியாய்.
அவனுடைய வார்த்தையில் இருந்த பிடிவாதத்தை அவனது முகம் அப்பட்டமாகப் பிரதிபலித்தது.
அதை புறம் தள்ளியவள், “எனக்கு நிறைய ரெஸ்பான்சிபிலிட்டீஸ் இருக்கு. இப்ப இருக்கற நிலைமைல, என்னால காதலிக்கவும் முடியாது, கல்யாணம் செஞ்சுக்கவும் முடியாது, தயவு செஞ்சு புரிஞ்சிக்கோங்க” என்றாள் மல்லி தெளிவாக.
“நீ சொல்றது பொய். எனக்குத் தெரியும், நீ என்ன லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட! தென், உன் ரெஸ்பான்சிபிலிட்டீஸ நான் ஏத்துக்கறேன்! நீ சரின்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு போதும்!” என்றவனின் வார்த்தைகளில் உடைந்தவள், “என்னால முடியாது!” என்று திட்டவட்டமாக மறுதலித்தாள்.
அதில் பொறுமை இழந்தவனது கோபமான, “ஏன்?” என்ற வார்த்தையில், “ஏன்னா, அம்மு யாரைச் சொல்றாளோ அவனத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்ன்னு நான் அவளுக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன்!. அது உங்களுக்கும் தெரியும்” என்று கூறி விட்டு அங்கிருந்து அகல அவள் எத்தனித்தாள்.
“என்ன?” என்று ஒரு நொடி திகைத்தவன் பிறகு, “முட்டாளா நீ? ஒரு வேள மறுபடியும் அம்முவ நீ பார்க்க முடியாமலயே போயிட்டா, காலம் முழுக்க கல்யாணம் பண்ணிக்காமலேயே இருந்துடுவியா?” என்று எகத்தாளமாகக் கேட்டான்.
“நிச்சயமா!” என்று சொல்லிவிட்டு ஒரு நொடியும் நிற்காமல், வேகவேகமாக அந்த ஹோட்டலை விட்டு வெளியில் வந்த மல்லி, பதட்டத்துடன் அங்கிருந்த சாலையை கடக்க முயல, தன் கட்டுப்பாட்டை இழந்தது போல், லாரி ஒன்று அவள் மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்தது!
சில நொடிகளிலேயே அவளைத் பின்தொடர்ந்து ஓடி வந்திருந்த தேவாவின் கைகளுக்குள், செங்குருதி பெறுக மயங்கியிருந்தாள் மல்லி!
留言