top of page

Uyiri (Virus 143) Episode 13

காதல் அட்டாக் – 13


தந்தையின் நடவடிக்கைகள் ஒவ்வாமல் போக அவருடைய முகத்தில் விழிப்பதையும் விரும்பாமல் அவனுடைய அம்மாவின் கோழைத்தனத்தை வெறுத்தவனாகத்தான் மன அமைதியை நாடி விஸ்வா சந்நியாசம் என்ற பாதையைத் தேர்ந்தெடுத்ததே.


சொல்லப்போனால், நிர்மல் மற்றும் விஸ்வா இருவருமே அறியாத விஷயம் ஒன்று உண்டென்றால் அது, சந்திரமௌலி இருவருக்குமே ஒரு பொது எதிரி என்பதுதான்.


விஸ்வா காணாமல் போய் மறுபடியம் ஆசிரமத்திற்குத் திரும்பியவுடன், அடிபட்ட பாம்பாக வன்மம் முற்றிப்போன நிலையிலிருந்த நிர்மல், கிட்டத்தட்ட அவனை சிறைப் படுத்திவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.


சந்நியாச பாதையிலிருந்தாலும் ஊர் உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு சொகுசாகத் திரிந்தவனுக்கு மாதக்கணக்கிலான இந்த சிறைவாசம் கொஞ்சம் அதிகமாகவே எரிச்சலைக் கிளப்பிவிட்டிருந்தது.


இவ்வளவு நாட்களாக பலம் பொருந்திய ஒரு யானையை சிறு சங்கிலியால் கட்டி வைப்பதைப் போல துறவறம் என்கிற மெல்லிய நூலில் அவனைக் கட்டி வைத்திருந்தார் நிர்மலானந்தா.


அவருக்கு விளங்காத ஒரு விஷயம் உண்டென்றால் அது, அந்த யானை கட்டுப்பட்டிருப்பது அந்த சங்கிலிக்கு அல்ல, அது அந்த யானைக்கு பாகன் மேலுள்ள அன்பினால் என்று.


அந்த யானைக்கு இணை தேடும் பருவம் வந்தால் மதம் பிடிக்கும் என்பதும் அந்த மதத்திற்கு முதல் பலி, எதையெதையோ செய்து அந்த யானையைத் தான் சொல்வதையெல்லாம் கேட்டு அடிபணிய வைத்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த யானையின் பிரியத்திற்குரிய பாகன்தான் என்றும்.


ஆம் விஸ்வா என்கிற யானைக்கு மேனகாவின் மேல் ஏற்பட்டிருக்கும் காதலால் மதம்தான் பிடித்திருந்தது.


அன்று அவளை அந்த கடற்கரையில் கண்டதுமுதல், அவன் வசம் இழந்துதான் தவித்தான் அவன்.


உண்மையை சொல்லப்போனால் சந்திரமௌலியின் சென்னை இல்லத்தில் மட்டும் அவளை பார்த்திருந்தான் என்றால் அந்த ஆசிரமத்திற்கு அவன் திரும்ப வந்திருக்கவே மாட்டானோ என்னவோ.


அவன் ஆசிரமத்திற்குத் திரும்பியதும் கூட தேவையில்லாத சலனங்களுக்கு இடங்கொடுக்கக்கூடாது என்கிற அரைகுறை மனநிலையில்தான்.


ஆனால் அங்கே அவன் திரும்ப வந்தபிறகு நடந்ததென்னவோ வேறாக இருந்தது.


அதாவது எந்த குற்றமுமே செய்யாதவனுக்குக் கொடுமையான தண்டனை வழங்கப்பட்டதுபோல் அவனைத் தனிமை சிறைப்படுத்தி ஒரு பெரும் தவறை செய்துவிட்டார் நிர்மலானந்தா.


அந்த தனிமை மேனகாவின் நினைவை அதிகம் தூண்டிவிட்டு, அவனுடைய உள்ளத்தில் கனலாக மூண்டிருந்த காதலை, தண்ணீர் ஊற்றி அணைப்பதற்கு பதிலாக ஊதி ஊதி கொழுந்துவிட்டு எரியவே வைத்தது.


அதுவும் இதுபோன்ற ஒரு விஷயத்தில் அவன் கொஞ்சம் அதிகமாகவே தோற்றுப்போனவன், அதுவும் அவனுடைய தந்தையிடமே. மறுபடியும் ஒருமுறை அப்படி ஒரு படுதோல்வியைச் சகிக்க அவன் விரும்புவானா என்ன?


கொஞ்சம் கொஞ்சமாக மூண்ட அவனுடைய கோபம் மூன்று மாத காலத்தில் சுனாமியாக மாறி, அவனுடைய பாதுகாப்பிற்காக அருகிலிருந்தவர்களைச் சுழன்றடிக்க, அவனைத் தாக்குப்பிடிக்க இயலாமல் நிர்மலானந்தாவை கெஞ்சிக் கூத்தாடி அவன் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வரவழைத்தனர் நம்பிக்கைக்குரிய அந்த ஆசிரம சிஷ்யர்கள்.


அவரை நேரில் பார்த்ததும் முகம் மலர்ந்தவன், 'காயா... மாயா... சிவஸ்ய சாயா" என்றவாறு வழக்கமாகச் செய்வதுபோல் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான்.


அதில் அவர் அடைந்த மகிழ்ச்சியை சில நொடிகள் கூட நிலைக்க விடாமல், "இந்த சந்நியாச வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை வேணும் குருஜி" என்றான் அவன் கொஞ்சமும் சுற்றிவளைக்காமல்.


அப்பொழுதுதான் முதன்முதலாக நிர்மலானந்தாவின் கோபத்தை அவன் பார்த்ததே.



"என்ன விஷ்வா! புரிஞ்சுதான் பேசரியா? நம்ம ஆஸ்ரம ரூல்ஸ் எல்லாம் தெரிஞ்சுதான நீ தீக்ஷை வாங்கின? முதலில் சந்நியாசம் அதுக்கு அடுத்த கட்டம் மரணம்ங்கறதுதான் நம்ம கொள்கைன்னு உனக்கு நினைவிருக்கா இல்லையா? எனக்கு அடுத்த இடத்துல இருக்கறவன் நீ... உன்னை பார்த்து மத்தவனெல்லாம் கெட்டுபோகமாட்டானா? நம்ம ஆஸ்ரமத்தோட கட்டுக்கோப்பு என்ன ஆகறது" என அனகோண்டாவாக சீரியவர்,


"அது அப்ப இருந்த மனநிலை குருஜி" என அவன் அவசரமாக மறுத்ததையெல்லாம் காதில் வாங்காமல் "ஸ்திரமான புத்தி இருக்கனும் விஸ்வா" என ருத்ரதாண்டவம் ஆடி தீர்த்துவிட்டார் அந்த சாது சன்னியாசி வேடதாரி.


அவரால் விஸ்வாவின் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.


அவன் இல்லாமல் சந்திரமௌலி வடிக்கும் ரத்த கண்ணீரைப் பார்த்து எந்த அளவுக்கு அவர் உவகை அடைந்தார் என்று வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆனாலும் அது ஒரு சிறு துளிதான். இன்னும் அவர் சாதிக்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.


அவருடைய பழி வெறியைத் தீர்த்துக்கொள்ள அவருக்குக் கிடைத்திருந்த பகடைக் காய் அவன்.


அவ்வளவு சுலபமாக அவனை விட்டுவிடுவார் என்ன?


கிழக்கு கரீபிய கடலில் வெர்ஜின் தீவுகள் என அழைக்கப்படும் தீவு கூட்டங்களுக்கு நடுவிலுள்ள அவருக்குச் சொந்தமான ஒரு சிறு தீவில்தான் விஸ்வாவை சிறை வைத்திருந்தார் நிம்மி.


இதுவரை ஆசிரம சிஷ்யர்களின் மென்மையான கட்டுப்பாட்டில்தான் இருந்தான் அவன். ஆனால் இனி அது வேலைக்கே ஆகாது என்பதை உணர்ந்தவராக, அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குக் கனவில் கூட தலைதூக்கக் கூடாது என்கிற தீவிரத்துடன், ஏழு அடிகளுக்குமேல் வளர்ந்து மாமிச மலை போலத் தோற்றம் கொண்ட, நன்கு பயிற்சிபெற்ற பத்து நைஜீரிய ஆட்களை இரண்டாம் சுற்று காவலுக்கு நியமித்து, அவனது காவலை இன்னும் இறுக்கினார் அவர்.


இப்படி தன் விருப்பத்திற்கு ஆட்டிப்படைக்க விஸ்வா, அவர் கையிலாடும் பொம்மலாட்ட பொம்மையா என்ன? அவன் உயிரும் உணர்வும் உள்ள மனிதன்தானே? எல்லா தடைகளையும் உடைத்துத் தப்பிக்க சரியான சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் விஸ்வா என்ற அந்த மதம் பிடித்த யானை.


***


அந்த வனத்தில் புதிதாக ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஆஸ்ரமத்தை பார்வையிடுவதற்கென, நிர்மலானந்தா அங்கே வந்து இரண்டு தினங்களே கடந்திருந்தன.


மேனகா சொன்னதுபோல், இருபதுபேர் அடங்கிய அவர்களுடைய தொழில்நுட்ப குழுவினர் அன்று இரவே அங்கே வந்து இறங்கினர் சந்ரமௌலியின் திரைமறைவு செயலால்.


ஒருவழியாக அடுத்த நாளே அந்த வனாந்தர பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் வேலை கோலாகலமாகத் தொடங்கியது.


பரபரப்பாக சுறுசுறுப்புடன் அவர்கள் வேலை செய்த விதத்தைப் பார்த்து நிர்மலானந்தாவே அகமகிழ்ந்துதான்போனார். ஆனால் அரைமணியில் செய்ய வேண்டிய வேலைகளை இழுத்து இழுத்து அவர்கள் செய்து முடிக்க அரை நாள் ஆனது என்பதுதான் உண்மை.


பின்னே... ஓரிரு நாட்களுக்குள் ஒப்புக்காக அவர்கள் மேற்கொண்டு வந்த வேலையை முடித்துவிட்டார்கள் என்றால் விஸ்வாவை கண்டுபிடிக்கவேண்டுமென்ற உண்மையான வேலை எப்படி நடக்கும்? அதற்குப் பின் சந்துரு அவர்களை சும்மா விடுவாரா என்ன?


அவர்களுடைய அந்த ஆசிரமத்திலேயே தொழில்நுட்ப நுணுக்கங்கள் தெரிந்த சில சிஷ்யர்களும் இருக்கவே, இடக்கு மடக்காக அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சமாளிப்பாக பதில் சொல்லி மாளவில்லை மேனகாவுக்கு.


அதைப் பற்றி மேனகாவுக்கு ஆனா ஆவன்னா கூட தெரியாது எனும்பொழுது அவள் எந்த வேலையைச் செய்யக்கூடும். சந்துரு ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் தேர்ந்தவர்களாக இருந்ததால் கொஞ்சம் தப்பித்தாள்.


கொஞ்சம் என்றால் கொஞ்சம்தான் தப்பித்தாள். நம் நேசமணி சித்தப்புவை போல நிறைய அடியும் வாங்கினாள் என்பதுதான் உண்மை. காரணம் நாயகியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?


அங்கே வளைந்து நெளிந்து சிக்கிக் கிடந்த சில ஒயர்களை பார்த்துவிட்டு சும்மா போகாமல், "இது இன்னா இது... இப்புடி வேல செய்யறானுங்க இந்த ஆளுங்க. ஒரு ஒயர ஒளுங்கா சுருட்டி வெச்சிருக்கானுங்களா பாரு" என அருகிலிருந்த மேனகாவிடம் புகார் பத்திரம் வாசித்த நாயகி, மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் சிக்கலெடுக்கும் பொருட்டு அந்த ஒயர்களை கையிலெடுக்க, மின்சாரம் தாக்கியதுபோல் எனப் பல கதைகளில் நாம் படித்துத்தான் இருப்போம், உண்மையில் ஷாக் தான் அடித்தது நாயகிக்கு. உதறி சில அடிகள் உயர பறந்து தூர போய் விழுந்தாள் அவள். கூடவே மேனகாவையும் இழுத்துக்கொண்டு.


மேனகா முதலில் கீழே விழ, நன்கு வாகாக அவள் மேல் விழுந்தாள் நாயகி. 'ஷாக் ஆபிஸர்வர்'ஆக மேனகா அவளைத் தாங்கியதால் நாயகி எந்தவித சேதாரமும் இல்லாமல் எழுந்துகொள்ள, 'டோட்டல் டேமேஜ்' மேனகாவுக்கு மட்டுமே.


வலியில் கத்தி அழக்கூட முடியாமல் ஊமையாக அழுது துடித்தாள் மேனகா உடல் முழுதும் ஏற்பட்ட ஊமைக் காயங்களால்.


அந்த நிலையிலும் கூட, நாயகியை நன்றாக முறைத்துவிட்டு, எங்காவது தன் 'மேக்கப்' கலைந்துவிட்டதா என பயத்துடன் தன் டர்பனையும் ஒட்டு தாடியையும் தொட்டு ஆராய்ந்தவாறு, கோட்டை இழுத்துவிட்டுக்கொண்டு இடுப்பை பிடித்தவாறே தாங்கி தாங்கி அவள் நடந்துபோன அழகை பார்த்து அங்கே வேலை செய்துகொண்டிருந்த அனைவருமே வாயை மூடிக்கொண்டு சத்தம் வராமல் சிரித்துவைத்தனர்.


இரண்டு நாட்கள் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல், அந்த கொடுமையான உடை மற்றும் தாடியுடன் அவள் படுத்தே கிடந்ததும், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாயகி அவளை நன்றாக வைத்துச் செய்ததும் ஒரு தனி கிளைக் கதை.


அதன் பின் அவள் கொஞ்சம் இயல்பாக நடக்கத் தொடங்கவும், தன் குழுவுடன் சென்று, அந்த ஆசிரமத்தின் சந்து போந்து... ஒரு இண்டு இடுக்கு என ஒரு இடம் விடாமல் குடைந்து பார்த்தும் பயனில்லை. விஸ்வா அங்கே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்துபோனது.


கிட்டத்தட்ட இருப்பது நாட்களில் கேமரா பொருத்தும் வேலைகள் ஒரு எண்பது சதவிகிதம் முடிந்தது.


அப்பொழுதுதான் அங்கே முக்கியமாக அமைக்கப்பட்டிருந்த தியான மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை சரிபார்த்துக்கொண்டிருந்தனர் அந்த தொழில்நுட்ப பணியாளர்கள்.


அருகில் அவ்தார்சிங்காக நின்றிருந்த மேனகா, தன் சொறசொற தாடியால் அவளைச் சுரண்டியவாறு அவள் தோளில் முகத்தைப் பதித்து அவளுடைய உயிரை எடுத்துக்கொண்டிருந்த நாயகியின் இம்சை பொறுக்காமல், "ப்ச்... சு" என சலித்தவாறு, வெகு ஆர்வமாக அந்த காட்சிகள் விரியும் திரையையே வெறித்திருந்தாள்.


சரியாக அதே நேரம், ஒரு அலட்சிய நடையுடன், மிக மிக மிடுக்காக... அங்கே நுழைந்தான் விஸ்வா.


மேனகாவின் கண்கள் வியப்பில் விரிய, அவளது இதழ்கள் புன்னகையில் துடித்தது.


"காயா மாயா சிவஸ்ய சாயா!" என சொல்லிக்கொண்டே அந்த தியான மண்டபத்திற்குள் நுழைந்தவனை பார்த்ததும் நிர்மலானந்தாவின் கண்கள் இடுங்கியது.


'அவ்வளவு பெரிய பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி இவன் எப்படி இங்கே வந்தான்?' என்ற எண்ணம் தோன்ற கோபத்தில் அவருடைய முகம் ஜிவுஜிவு என சிவந்துபோனது. அந்த குளிர் பிரதேசத்திலும் அவருக்கு வியர்த்து வழிந்தது.


"ஹேய்... நீ... நீ... எப்படி இங்க வந்த?" என அவருடைய குரல் நடுங்கியது.


அவன் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்து சிலை போல நிற்க, அடுத்த நொடி கொஞ்சமும் யோசிக்காமல், தன்னுடைய சாட்டிலைட் போனை எடுத்தவர், "ஹேய்... ஹேய்... காக் விஸ்வா போப்பல் ஸ்யுதா?" அதாவது, 'விஸ்வா இங்கே எப்படி வந்தான்?' என ரஷிய மொழியில் கர்ஜித்தார் நிர்மலானந்தா.


"ந்யத்... ஸ்வாமிஜி... ஓன்...ன நாஷம் க்ரீப்ஸ்கொம் ஆஸ்த்ரேய" அதாவது... 'இல்லை ஸ்வாமிஜி... அவன் நம்ம கரீபியன் தீவுலதான் இருக்கான்" என பதில் வந்தது எதிர்முனையில்.


உடனே காணொலி மூலம், காஃபியை பருகியவாறு கடுப்புடன் உட்கார்ந்திருந்த விஸ்வாவை அவர்கள் காண்பிக்கவும் செய்தனர்.


இங்கேயோ, ஒரு ஆப்பிளை தூக்கிப்போட்டு பிடித்து அதைக் கடித்துக்கொண்டிருந்த விஸ்வாவை பார்க்கவும், 'அப்படினா இவன் யார்?" என தனக்கு தானே கேட்டுக்கொண்ட நிர்மலானந்தாவின் முகத்தில் குழப்ப ரேகைகள் படிய, "சக்கும்மா... சக்ஸஸ்!" என முணுமுணுத்தது அனைத்தையும் விழி அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்த மேனகாவின் இதழ்கள்.


Recent Posts

See All
Uyirie (Virus 143) - 20 (Final)

வைரஸ் அட்டாக் - 20 மில்லி அங்கே இருக்கிறது என்கிற தகவலைத் தவிர வேறெதையும் சொல்லவில்லை நாயகி. சொல்லப்போனால் அவளுக்கே வேறுதுவும் தெரியாது...

 
 
 
Uyirie (Virus 143) 19

வைரஸ் அட்டாக் – 19 சில மாதங்கள் கடந்திருந்த நிலையில்... இயல்பான ஒரு விடுமுறை நாள் அது. அப்பொழுதும் கூட தன் மடிக்கணினிக்கு...

 
 
 
Uyirie (virus 143) - 18

வைரஸ் அட்டாக் – 18 மேனகா விஸ்வாவின் சென்னை இல்லம்... மேனகா தனது வாழ்க்கையின் லட்சியமாக நினைத்திருக்கும் ஆராய்ச்சி கிட்டத்தட்ட...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page