top of page

Uyirie (Virus 143) - 20 (Final)

Updated: Sep 6, 2023

வைரஸ் அட்டாக் - 20


மில்லி அங்கே இருக்கிறது என்கிற தகவலைத் தவிர வேறெதையும் சொல்லவில்லை நாயகி. சொல்லப்போனால் அவளுக்கே வேறுதுவும் தெரியாது என்பதுதான் உண்மை.


மில்லி என்றாலே அப்படி ஒரு 'அலர்ஜி' நாயகிக்கு. ஆனால் அதற்கு நேர்மாறாக ‘மில்லி என்றால் நிர்மலுக்கு மிகவும் ஸ்பெஷல்' என்ற நிலையிலிருந்தது அந்த எலி.


எப்படியோ அவருடன் சண்டை பிடித்து அதை அவரிடமிருந்து பிரித்திருந்தாள் நாயகி. அவளுக்குப் பயந்துதான் மில்லியை அந்த தீவில் தீவிர பாதுகாப்புடன் வைத்துப் பராமரிக்கிறார் நிர்மல்.


அவ்வப்பொழுது நேரம் ஒதுக்கி அங்கே போய் அவர் மில்லியை கொஞ்சி விட்டு போவது வேறு கதை. அது நாயகிக்கும் கூட தெரியாத கதை.


அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பிறகு மில்லியை நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்று மனதிற்குள் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது மேனகாவுக்கு. ஆனால் உண்மையான காரணத்தைச் சொல்ல இயலாமல், நிர்மால்யாவை சுற்றிப் பார்க்க ஆசையாக இருப்பதாக விஸ்வாவிடம் கதை சொன்னாள் அவள்.


அவனை அடைத்து வைத்து துன்ப துயரில் மூழ்கடித்த இடம் என்பதாலோ அல்லது அவனது துறவு வாழ்க்கையை நினைவுபடுத்தியதாலோ என்னவோ நிர்மால்யாவுக்கு செல்ல கொஞ்சம் கூட பிடிக்கவில்லை விஸ்வாவுக்கு. மேனகா அங்கே செல்வதையும் விரும்பவில்லை அவன்.


ஆனாலும் விடாப்பிடாயாக சில நாட்கள் விஸ்வாவை நச்சரித்து, நிர்மால்யா தீவுக்கு வந்திருந்தாள் மேனகா. அவனுக்கு முக்கிய 'போர்ட் மீட்டிங்' ஒன்று இருப்பதாகக் கூறி, 'நீ எப்படியோ போய்த்தொலை' என்கிற ரீதியில் அவர்களுடைய பாதுகாவலர்கள் சகிதம் அவனுக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் அவளை அங்கே அனுப்பி வைத்தான் அவன். ஆனாலும் அரைமனதாகத்தான்.


முதலில் 'நிர்மலானந்த சிவ பீட ஆசிரமம்' என்ற பெயரில் இயங்கிவந்த அந்த ஆசிரமம், 'விஜிதேந்த்ரியானந்தா சக்தி பீட ஆசிரமம்' எனப் பெயர் மாற்றம் பெற்றிருப்பதையே அங்கே வந்த பிறகுதான் அறிந்தாள் மேனகா.


சில வருடங்களாகவே சற்று பிரபலமாகியிருந்த அந்த ஆசிரமத்தைப் பற்றி அவளும் கூட கேள்விப்பட்டிருக்கிறாள்தான். ஆனால் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தி யோசிக்கும் அளவுக்கு அவளுக்கு நேரம் இருந்ததில்லை.


அந்த ஆசிரமத்தின் உள்ளே செல்லவேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும் என்கிற காரணத்தால், அங்கே இருந்த முக்கிய அலுவலகத்துக்குள் நுழைந்தாள் மேனகா தன் புடை சூழ.


அவள் அங்கே நுழைந்த நொடி, அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்த காவி உடைகள் அனைவருமே ஸ்தம்பித்துப் போனார்கள். அவளைப் பார்த்தவாறு 'மாதாஜி' 'மாதாஜி' எனக் குறிப்பிட்டு ' மாதாஜி இந்த டிரஸ்ல எப்படி' என அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொள்ள, சில நிமிடங்கள் அங்கே கூச்சலும் குழப்பமுமாக இருக்க, அதை கேள்விப்பட்டு வேகமாக அங்கே வந்தார் தர்மானந்தா.


மேனகாவுக்கு அவரை நன்றாகவே அடையாளம் தெரியவும், "எப்படி இருக்கீங்க ஸ்வாமிஜி" என இயல்பாக அவரை பார்த்துப் புன்னகைத்தாள் அவள். அவரும் அவளை அடையாளம் கண்டுகொள்ள, பதிலுக்குப் பெரிதாகப் புன்னகைத்தவர், "நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க அவ...தாஆஆர் சிங்?!" என கிண்டலாகவே அவளை எதிர்கொண்டார் அவர்.


"ஐயோ... சூப்பர் ஸ்வாமிஜி நீங்க. இவ்வளவு வருஷத்துக்கு பிறகும் மறக்காம என்னை ஞாபகம் வெச்சிருக்கீங்க பாருங்க" என அவள் வியக்க, "மறக்க முடுயுமாம்மா அதையெல்லாம்... உன்னால பெரிய ஸ்வாமிஜி கிட்ட கொஞ்சம் நஞ்சமாவா வாங்கி கட்டிட்டேன்" என்றார் அவர் பரிதாபமாக.


பின் அங்கிருந்தவர்களை நோக்கி, "இவங்க நம்ம மாதாஜி இல்ல. யாரும் கன்ஃப்யூஸ் ஆகாதீங்க" என்று சொல்லிவிட்டு மேனகாவை தன்னுடன் அழைத்துச்சென்றார் தர்மானந்தா.


"ஏன் ஸ்வாமிஜி... எல்லாரும் என்னை அப்படி அதிர்ச்சியா பார்த்தாங்க? யாரந்த மாதாஜி" என அவள் வியப்புடன் கேட்க, "நாம இப்ப... இங்க இருக்கற தியான மண்டபத்துக்குத்தான் போறோம். அங்க வந்து பாரு. உனக்கே காரணம் புரியும்" என்றவாறே எக்கச்சக்க ஆர்வத்துடன் அவளை அங்கே அழைத்துவந்தார் அவர்.


எந்த ஆசிரமத்துக்குள் பெண்களுக்கு அனுமதியே இல்லையோ, அந்த ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தியான மண்டபம் காவி உடை அணிந்த பெண்களால் நிறைந்திருந்தது.


காவி புடவை, கழுத்துவரை மூடிய காவி ரவிக்கை, கழுத்து கைகள் என ருத்ராட்சத்தாலும் துளசி மணிகளாலும் ஆன ஆபரணங்கள் அணிந்து, தலைக்கு மேல் உயர்த்தி போடப்பட்டிருந்த கொண்டை என அங்கே நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த ஒரு பீடத்தில் இவளுக்கு முதுகு காண்பித்து உட்கார்ந்திருந்தார்(ள்) ஒரு பெண் துறவி.


அவளுடைய முகத்தைப் பார்க்கும் ஆவல் அதிகரித்துக்கொண்டே போக, வேகமாகப் போய் அவருக்கு முன் நின்றாள் மேனகா. கண்மூடி தியான நிலையிலிருந்த அந்த துறவியைப் பார்த்த அடுத்த நொடி மூர்ச்சையாகித்தான்போனாள் அவள். பாவம் தொடர்ச்சியாக இவ்வளவு அதிர்ச்சிகளை எப்படித் தாங்க முடியும் அவளாலும்?


சரியாக அதே நேரம், புயலென வேகமாக அங்கே நுழைந்த விஜித்தின் கரங்கள் கீழே விழாவண்ணம் அவளைத் தாங்கி பிடித்தன, அங்கே நிலவிய அமைதியை குலைக்காவண்ணம்.


***


மயக்கம் தெளிந்து அவள் கண் விழிக்கும்போது அவளுக்கு அருகில் அவளையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான் விஜித். கலவரம் பூசிய முகத்துடன்.


"அம்மாடி" என ஆசுவாச பெருமூச்சு விட்டார் அவனுக்கு அருகில் நின்றிருந்த தர்மானந்தா. காரணம், அவளுடைய பாதுகாவலர்களை உள்ளே வரவிடாமல் தடுத்துத்துவிட்டுதான் மேனகாவை தியான மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார் அவர். அவளுக்கு எதாவது ஒன்றென்றால் சும்மா விடுவானா விஸ்வா? மேனகாவை காட்டுக்குள் தனியாக கட்டி வைத்த ஒரே காரணத்திற்காக நிம்மிக்கு எதிராக அவன் ஆடிய ஆட்டத்தை முழுவதும் அறிந்தவராயிற்றே அவர்.


போதும் போதாததற்கு விஜித் வேறு அவரை வறுத்தெடுத்திருந்தான், மேனகா அங்கே வந்திருப்பதை அவனுக்குத் தெரியப்படுத்தாமல், அவளை நேரடியாக தியான மண்டபத்திற்கே அவர் அழைத்துச் சென்ற காரணத்தால்.


மயக்கம் தெளிந்த நிலையில், "இது என்ன இடம். நான் எங்க இருக்கேன்?" என்று கேட்டுக்கொண்டே திரு திருவென்று விழித்தவாறு இருவரையும் மாறி மாறி பார்த்தாள் மேனகா.


"இது நம்ம ஆஸ்ரமத்துல இருக்கற ஒரு வி.ஐ.பி சூட்தான்... பயப்படாத" என விஜித் பதில்கொடுக்க, அவனுடைய தற்போதைய தோற்றம் வேறு அச்சு அசல் சாமியார் விஸ்வாவை அவளுக்கு நினைவுபடுத்த அரண்டுபோனவள், ஒருவேளை கெட்ட கனவோ என நினைத்து கண்களைக் கசக்கிக்கொண்டு அவனை பார்க்க, அது உண்மை என்பதால் அவனது பிம்பம் மறையாமல் அப்படியே இருக்கவும் சுற்றும் முற்றும் தேடி அருகில் மேசை மேலிருந்த அவளது கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு மறுபடியும் அவள் அவனை உற்று நோக்கவும், "உன் முன்னால நிக்கறவன் உண்மைதான் மெனு இல்யூஷன்லாம் இல்ல!" என்றான் விஜித்.


அவன் அவளை அழைத்த விதத்திலேயே அவன் விஜித் என்பதை அவள் உணர, வியப்புடன், "அடப்பாவி விஜித்தாடா நீ..." என்றவள், "நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா?" என்றே கேட்டு விட்டாள் மேனகா.


உண்மையில் நிர்மலானந்தா அவனை விட்டுவைத்திருந்தாலும் கூட அவனது மரபணுக் கோளாறுகள் இவ்வளவு வருடங்கள் அவனை உயிருடன் விட்டு வைத்திருக்கும் எனக் கொஞ்சம் கூட எண்ணவில்லை மேனகா. அந்த கோளாறுகளை அவள் வெற்றிகொண்டதில் உண்மையாகவே மகிழ்ச்சியாக உணர்ந்தாள் அவள்.


"பின்ன... இந்த உலகத்துல சந்தோஷமா அனுபவிக்க எவ்ளோ விஷயம் இருக்கு? அதையெல்லாம் விட்டுட்டு நானாவது சாகறதாவது" என இயல்பாக பதில் கொடுத்தான் விஜித்... இல்லை... இல்லை... விஜிதேந்த்ரியானந்தா ஸ்வாமிஜி.


அப்பொழுது தியான மண்டபத்தில் பார்த்த சாமியாரினியின் நினைவு வரவும், "அடப்பாவிகளா! அப்படின்னா... உங்களோட அந்த மாதாஜியும் க்ளோனிங்கா" என ஆயாசமாகக் கேட்டாள் மேனகா.


"வேற வழி... என்னதான் நான் விஸ்வாவோட மோனோஸைக்கோடிக் க்ளோனிங்கா இருந்தாலும், எங்க ரெண்டு பேரோட நியூக்ளியை குள்ள ஒரே டி.என்.ஏ அண்ட் ஒரே ஜீன் இருந்தாலும், ஒரிஜினல் ஒரிஜினல தேடித்தான போகுது.


அதுக்காக காலம் முழுக்க உன்னையே நினைச்சு மெனு... மெனுன்னு ஏங்கிட்டே இருக்க முடியுமா சொல்லு?


ஸோ... எனக்கே எனக்குன்னு, நான் ஒரு மேனகாவ க்ளோனிங் செஞ்சு தரச் சொல்லி சக்கும்மாகிட்ட கேட்டேன்.


சில கோடிகளை வாங்கிட்டு அவங்க எனக்கு என் ரம்பாவை உருவாக்கி குடுத்தாங்க. இதுல என்ன தப்பிருக்கு?" என அவன் அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது அவளுக்கு.


'பார்த்தியா மேனகா... இந்த சக்கும்மாவ... எவ்வளவு செலிபிஷ் அண்ட் க்ரீடி இல்ல அவங்க! ச்ச... எல்லாத்தையும் சொன்னவங்க இதை பத்தி உன் கிட்ட ஒரு வார்த்தை கூட மூச்சுவிடல பாரு?' என மனம்நொந்தவள், "என் டி.என்.ஏ சாம்பிள்ல்ஸ்லாம் எனக்கே தெரியாம எப்படிடா எடுத்தீங்க?" என மேனகா கொதிக்க, "கூல் மெனு... உன் டெலிவரி டைம்ல, உன் ஸ்டெம் செல் டொனேட் செஞ்ச இல்ல... அதைத்தான் யூஸ் பண்ணோம்" என்றான் அவன் அலுங்காமல் நலுங்காமல்.


"அவ்வளவு பணம் உனக்கு ஏதுடா?" என தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவள் கேட்கவும், "என்னை பத்தி என்ன நினைச்ச? அய்யா யாருன்னு தெரியுமா? இப்ப இந்த ஆஸ்ரமம் மொத்தமும் என் கட்டுப்பாட்டுலதான் இருக்கு.


நிம்மி.. என்னை அந்த காட்டுல இருந்து பத்திரமா கூட்டிட்டு போனாரே, அதுக்கு என்ன காரணம்னு நினைக்கற?


உன் விஸ்வா அங்க இல்லனா நிறைய பிரச்சனை வரும். அதனால என்னை வெச்சு அட்ஜஸ்ட் பண்ணத்தான்.


அவர் ஜெயில்ல இருந்த சமயத்துல இங்க எவ்வளவு சமாளிச்சேன் தெரியுமா. அதனால அவர் மொத்தமா என்னை நம்ப ஆரம்பிச்சார். ஆஸ்ரமம் வேண்டாம்னு அவர் டிசைட் பண்ணாலும்... இதை அம்போன்னு விட அவர் இஷ்ட படல. ஸோ... மொத்தமா என் கிட்ட ஒப்படைச்சார். நான் பதிலுக்கு கேட்டது உன்னை மட்டும்தான். அதுக்குள்ள உனக்கு விஸ்வாவோட கல்யாணமே முடிஞ்சிடுச்சு. ஸோ... இப்படி ஒரு க்ளோனிக் செய்ய வேண்டியதா போச்சு" எனச் சொல்ல, இந்த முறை தலையில் அடித்தே கொண்டாள் மேனகா.


"இவ்வளவு விஷயம் நடந்திருக்கு. நீ சக்குமா கூட காண்டக்ட்ல இருக்க. அவங்கதான் சுயநலமா என் கிட்ட இருந்து எல்லாத்தையும் மறச்சிட்டாங்க. நீ கூடவா இப்படி? நீ ஏன்டா என்னை காண்டாக்ட் பண்ணவே இல்ல?" என அவள் வருந்த, 'என்ன பண்ண சொல்ற மெனு. என்னை பத்தி உனக்கு தெரிய வந்தா நிம்மி உயிரோட இருக்கற விஷயமும் கூடவே வெளியில வரும். அதுவும் உனக்கு விஸ்வாவோட மேரேஜ் ஆன நிலைமையில இதை நாங்க எப்படி உன்கிட்ட சொல்ல முடியும்" என அவன் அவளை கேள்வி கேட்க, அதற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை அவளுக்கு. கொதித்துக் கோபப்படவும் இயலவில்லை.


யாரிடமென்று கோபப்படுவாள் அவள்? இவ்வளவு வருடங்கள் கழித்து அவள் தன் மரபணுக்குள்ளேயே தேடி கண்டுபிடித்திருக்கும் அவளுடைய அம்மாவிடமா இல்லை அப்பாவிடமா? அல்லது அவளது உயிருக்கு உயிரான விஸ்வாவின்... பிரதியிடமா? வேறுவழியின்றி கோபத்தை அப்படியே விழுங்கினாள் மேனகா.


அவர்கள் பேச ஆரம்பிக்கும் பொழுதே அங்கிருந்து சென்றிருந்தார் தர்மானந்தா. பிறகு அங்கேயே உணவை வரவழைத்தது அவளைச் சாப்பிட வைத்தான் விஜித். வயிறு நிறையச் சாப்பிட்டு முடித்த பிறகு, அதுவும் அவன் மிகுந்த அக்கறையுடன் அவளைப் பார்த்துப் பார்த்து உபசரிக்கவும், அவளது கோபம் ஆதங்கம் அனைத்தும் கரைந்து காணாமல் போயிருந்தது.


ஆனாலும், அவன் கொஞ்சம் கலவரமாகவே அவளைப் பார்ப்பது போல் தோன்றவும், "ஹே விஜித்! ஏதோ ஒரு அதிர்ச்சில மயக்கம் வந்துருச்சு அவ்வளவுதான்... மத்தபடி எனக்கு என்னை மாதிரியே இருக்கற என்னோட கிளோனிங்க பாக்கணும்னு ஆசையாதான் இருக்கு. என்னை அவ கிட்ட கூட்டிட்டு போ" என்ன மேனகா இயல்பாகக் சொல்ல, அவனுடைய கலவரத்துக்கு பின்னிருந்த காரணமே அதுதானே!


"என்னாதூஊஊஊ... ஹேய்... என்ன விளையாடறியா? தர்மூதான் விவரம் இல்லாம உன்னை தியானமண்டபத்துக்கு கூட்டிட்டு போயிட்டாரு. அது தெரிஞ்சு, நான் எவ்ளோ பதறி அடிச்சிட்டு அங்க ஓடி வந்தேன் தெரியுமா? உன்னை அவ கண்ணுல படாம இங்க கொண்டுவரதுக்குள்ள என் உயிர் போய் உயிர் வந்துடுச்சு. சான்ஸே இல்ல!" என படபடத்தான் விஜித்.


“ஏன்... அவ என்னோட க்ளோனிங்... நான் அவளை பார்த்தால் என்ன?” என்று கேட்டு, அவள் அவனை பார்த்து உக்கிரமாக முறைக்கவும், "சரி... சரி... நீ அவள பார்கறதுல எனக்கு ஒரு பிரச்சனையுமில்ல மெனூ! ஆனா அவளுக்கு மட்டும் உன்னை பத்தி தெரிஞ்சுது என்னை சம்காரம் செஞ்சிடுவா! என் விஷயத்துல அந்த அளவுக்கு பொஸ்ஸிவ் அவ. ஏன்னா... நானும் இந்த தீவும்தான் அவளோட மொத்த உலகமே. அதனால உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன் தாயே... துர இருந்தே அவள பார்த்துட்டு... சைலண்டா கிளம்பிப் போயிடு… ப்ளீஸ்" என்றான் விஸ்வா கெஞ்சலாக.


அடப்பாவி, உன்னோட பொண்டாட்டிய பார்த்து இந்த பயம் பயப்படற" என அவள் கிண்டலாக கேட்க, "ஹேய்... இதை பயம்னு சொல்லாத. பதி பக்தின்னு சொல்லுவாங்க இல்ல. அது மாதிரி இது பத்தினி பக்தி" என அவன் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்லவும், உண்மையிலேயே வியப்பாக இருந்தது மேனகாவுக்கு. சாப்பாட்டை கொண்டுவந்து வாயில் ஊட்டி விடும் அளவுக்கு அக்கறையாக நடந்துகொண்டாலும் கூட தன் கெத்தை கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கமாட்டான் விஸ்வா. அவனை சரிக்கட்டி அவள் இங்கே வருவதற்குள் அவள் பட்ட பாட்டை அவள்தான் அறிவாள். அப்பொழுதும் கூட அவளுடன் இங்கே வராமல் தான் நினைத்ததைத்தான் சாதித்தான் அவன்.


இவ்வளவையும் எண்ணியவாறு, "பரவாயில்ல... நீ பிழைச்சுப்ப" என்று சொல்லி சிரித்தாள் மேனகா.


நடந்தபடியே பேசியவாறு, அவனுடைய மனைவி ரம்பாவை காண்பிக்க நிர்மால்யாவை ஒட்டி இருக்கும் கடற்கரைக்கு மேனகாவை அழைத்துவந்தான் விஜித்.


அங்கே ஒரு சிறிய குடில் அமைக்கப்பட்டிருக்க, அதில் போடப்பட்டிருந்த மேடையில் அமர்ந்திருந்தாள் ரம்பா.


விரித்து விடப்பட்ட கூந்தல், காற்றில் அலையலையாக மிதக்க, கண்களை மூடி தியான நிலையில் அவள் அமர்ந்திருக்க, சற்று தொலைவிலிருந்தே அச்சு அசல் மேனகாவை போன்றே இருக்கும் அவளைக் காண்பித்தான் விஸ்வா.


"அதோ பார் அவதான்... மாதா ரம்பா தேவி!" என்றவன், “என்ன... இவ உனக்கு மாதாவா?” என அவள் ஒரு மாதிரியாக அவனைப் பார்க்கவும், "மத்தவங்களுக்குத்தான்... எனக்கில்ல... எனக்கில்ல" என்றான் அவன் அவசரமாக.


அதில் அவளுக்குச் சிரிப்பு வந்துவிட, "அப்படினா உனக்கு" என அவள் கேட்க, "எனக்கு மட்டும் அவ மேனகா லைட்" என அவன் உல்லாசமாகச் சொல்லவும், "அது என்ன மேனகா லைட்" எனப் புரியாமல் கேட்டாள் அவள்.


"சொல்லுவேன்... ஆனா நீ என்னை அடிச்சாலும் அடிச்சிருவ தாயே!" என்றான் விஜித் பயப்படுபவன் போல் விஷம குரலில்.


அதில் கடுப்பானாலும், கூடவே அதன் பின் இருக்கும் காரணத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமும் உண்டாகவே, "பயப்படாத... அடிக்கல்லாம் மாட்டேன்... என்னன்னு சொல்லு" என அவள் பற்களைக் கடித்தபடி சொல்ல, "உன் அளவுக்கு அதி மேதாவியெல்லாம் இல்ல அவ. அதாவது எங்கேயோ புத்தியை வெச்சுட்டு மந்திரிச்சு விட்ட மாதிரி சுத்த மட்டா. லைஃப் டைம் கோல்னு பல வருஷத்த வேஸ்ட் பண்ண மாட்டா.


உன் ரிசர்ச்க்காக, சந்திரமௌலி சொன்னாருன்னு, விஸ்வாவை கிட்னாப் பண்ண கொஞ்சம் நஞ்சமா செஞ்ச நீ? ஒரு சேட்டனோட கார்ல விஸ்வாவை கடத்தி... சிங் வேஷம் போட்டு... எங்க ஆஸ்ரமத்துக்குள்ள நுழைஞ்சு" என அவன் சொல்லி முடிக்கவில்லை, "அட சோகத்த... என்ன சொன்ன... என்ன சொன்ன... உங்க ஆஸ்ரமமா?" என அவள் எகிற, "ஆமாம்... இந்த ஆஸ்ரமம்தான் எனக்கு எல்லாம்" என அழுத்தமாகச் சொன்னவன், "சொல்ல வந்தத சொல்ல விடு... அப்பறம் கன்டிநியூட்டி விட்டு போயிடும்" என அசராமல் சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்.


"ஆனா என் ரம்பா அப்படி இல்ல... அவ வெரி வெரி லைட்... என் பேச்சுக்கு மறுபேச்சு பேசாம, நான் என்ன சொன்னாலும் செய்வா. அதுக்கு மேல அதிகமா யோசிக்க மாட்டா. அப்படி பார்த்து பார்த்து அவ ப்ரெயின் செல்ஸ டிஸைன் செஞ்சாங்க சக்குமா" என அவன் முடிக்க, "விளங்கும்... நீ மட்டும் இல்ல உங்க ஆம்பள வர்க்கமே இப்படித்தான். பொண்ணுங்க தலையாட்டி பொம்மை மாதிரி நீங்க சொன்னதெல்லாம் கேக்கணும். அதனாலதான் எங்கப்பாவால சக்குமாவ அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியல. அவரை ஒர்ஷிப் பண்ற நாயகி கூட செட்டில் ஆகிட்டாரு" எனச் சொன்னவளுக்குக் கொஞ்சம் கூட கோபம் இல்லை. உண்மையில் மனம் நெகிழ்ந்துபோயிருந்தாள் மேனகா விஸ்வாவை நினைத்து. அவளை, அவளுடைய குறை நிறைகளுடன் அப்படியே மனதில் தாங்குபவன். அவளுக்காக தன் இயல்பை மாற்றிக்கொண்டது போல் வேஷம் போடாமல் அவனாகவே இருப்பவன்.


அவளுடைய அந்த அமைதி அவனை குழப்ப, "உண்மையை சொல்றேன்னு சொல்லி, உன்னை கழுவி கழுவி ஊத்திட்டு இருக்கேன், உனக்கு கோவமே வரலியா" என அவன் வியப்புடன் கேட்க, "நீ என்ன வேணா சொல்லிகோ. ஆனா இந்த ஃபெயிலியர் மாடலே போதும்னு ஒருத்தர் எனக்காக உருகிட்டு இருக்காரில்ல எனக்கு அதுவே போதும்" என அவள் இயல்பாக சொல்ல, "சாரி மெனு! நீ இண்டியாலேயே நம்பர் ஒன் சைன்டிஸ்ட். உன்னை யாரவது ஃபெயிலியர்னு சொல்லுவாங்களா. நீ கொஞ்சம் அட்வான்ஸ்ட் மடல். உன் விஸ்வா உன்னை தாங்குவாரு. ஆனா என்னால முடியாது" என தன் தோல்வியை ஒப்புக்கொண்டான் அவன்.


மறுபடியும் அவளுடைய கவனம் ரம்பாவிடம் சென்றது. சில நிமிடங்கள் பார்வையை அகற்றாமல் அவளையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவள், வியப்புடன் தன் முகத்தை கைகளால் தடவியவாறே, "பர்ஃபக்ட்... ஆயிரம் சொன்னாலும் சக்கும்மாவ அடிச்சுக்கவே முடியாதில்ல" என அவள் வியப்புடன் சொல்லிக்கொண்டிருக்க, அதையெல்லாம் காதில் வாங்காமல், சுற்றுப்புறம் மறந்தவனாக,


'அம்மம்மா சரணம் சரணம்


உன் பாதங்கள்... அப்பப்போ தரணும் தரணும்


என் தேவைகள்...


நான் பார்க்க... வரம் கேட்க... அருள் சேர்க்க வா ஈஸ்வரி... என்கிற ரீதியில் வைத்த கண் வாங்காமல். கண்களில் காதல் வழிய ரம்பாவை பார்த்துக்கொண்டிருந்தான் விஜித்.


"அடப்பாவி... பக்தி பழம் மாதிரி நீ போட்டுட்டு இருக்கற சாமியார் வேஷத்துக்கு... ஒரு பொண்ணை... இப்படி ஒரு காம பார்வை பார்த்துட்டு இருக்க... இது உனக்கே கேவலமா இல்ல” என மேனகா அவனை ஓட்ட, "முதல் பாயிண்ட் அவ யாரோ ஒரு பொண்ணு இல்ல... என் ஒய்ஃப். ரெண்டாவது பாயிண்ட் ... காமம்னு ஆபாசமா பேசக்கூடாது இது புனிதமான தெய்வீக காதல்... மூணாவது பாயிண்ட் பக்தியும் காதலும் ஒண்ணோட ஒண்ணு பின்னி பிணைஞ்ச விஷயம்... ஸோ ரெண்டையும் கன்ஃபியூஸ் பண்ணிக்கவே கூடாது..." எனத் தீவிரமாகச் சொன்னான் விஜித்.


"எப்படியோ போய் தோலை!" என்றவள், "இன்னும் ஒரே ஒரு டாஸ்க் மட்டும்தான் பெண்டிங்" என்று சொல்லிவிட்டு. "நான் இங்க வந்ததே என் மில்லிய தேடித்தான். ஆனா உன்னை இங்க பார்ப்பேன்னு நான் சத்தியமா நினைச்சு கூட பார்க்கல" என்றவள், "ரொம்ப ஹாப்பியா இருக்கு... மில்லிய மட்டும் பார்த்துட்டா நான் நிம்மதியா ஊர் போய் சேருவேன்" என்றாள் மேனகா.


"என்ன முதல்ல ரம்பா... இப்ப மில்லியா? அடங்கவே மாட்டியா நீ" எனக் கலவரமாகக் கேட்டவன், ஒரு நொடி திடுக்கிட்டு, "ஆமாம் மில்லி இங்கதான் இருக்குன்னு உனக்கு எப்படி தெரியும். யார் சொன்னாங்க?" என அவன் படபடக்க, "யாரோ சொன்னாங்க? இப்ப என்ன அதைப் பத்தி. எனக்கு உடனே மில்லியை பார்க்கணும் டாட்" என்றால் அவள் விடாப்பிடியாக.


"மில்லி இங்க ரொம்ப சேஃபா வெச்சிருக்கோம். ஆனா அதை நீ போய் பார்க்கறது உனக்குதான் அவ்வளவா சேஃப் இல்ல” என விஜித் சொல்ல அவள் அவனை ஒரு புரியாத பார்வை பார்க்கவும், "ஏன்னா மில்லி ஒரு ஸ்ட்ரேஞ் வைரசால அஃபெக்ட் ஆகியிருக்கு" என்றான் அவன்.


"அது என்ன எனக்கே தெரியாத அப்படி ஒரு ஸ்ட்ரேஞ் வைரஸ்... சொல்லு நானும் தெரிஞ்சுக்கறேன்" என அவள் ஒரு மரபியல் விஞ்ஞானியாக தன் கெத்தை காண்பிக்க, "உண்மையா மேனகா... அந்த வைரஸ் பத்தி யாருக்கும் இதுவரைக்கும் தெரியாது. அவ்வளவு சீக்ரட்டா மெயின்டைன் பண்ணிட்டு இருக்கோம். நிம்மிதான் அதுக்கு வைரஸ்-143ன்னு பேர் வெச்சார். அது கொஞ்சம் கொஞ்சம் ரேபிஸ் மாதிரி ஒரு நியூரோட்ரோபிக் வைரஸ். மில்லி யாரைவாவது கடிச்சா... கடிச்சா என்ன கடிச்சா, மில்லியோட சலைவா பட்டா கூட அந்த வைரஸ் மனுஷங்களுக்கு தொத்திக்கும். ஃபர்ஸ்ட் ஜுரம் வரும். தென் அது பிரைன்ல உண்டாக்கற மாற்றத்தால மனுஷங்களுக்குள்ள இருக்கற லவ் ஹார்மோன் தாறுமாறா வேலை செய்யும்.


அதுகிட்ட கடிவாங்கினத்தோட எபெக்ட்தான், பெண்கள்னாலே டு தி கோர் வெறுத்துட்டு, பொண்ணுங்கள இந்த அசிரமத்துக்குள்ள கூட விடமாட்டேன்னு சொல்லிட்டு இருந்த நிம்மி... நம்ம தொல்லைய கல்யாணம் செஞ்சுக்கற அளவுக்கு மாறிப்போனார்.


அவர் மட்டும் இல்ல சத்யானந்தானு ஒரு ஸ்வாமிஜி இருந்தார் இல்ல அவரும் அப்படிதான். அவரும் நம்ம மில்லி கிட்ட கடி வாங்கிட்டு... ஆஸ்ரமத்தை விட்டே ஓடி போயிட்டாரு.


ஒரு நார்மல் லைப் வாழ மில்லிதான் காரணம்னு, நிம்மிக்கு அத ரொம்ப பிடிச்சு போச்சு. ஆனா நாயகிக்கு அதை எப்பவுமே பிடிக்காது இல்ல. அதனால இங்க ஒரு லேப் ரெடி பண்ணி மில்லிய ரொம்ப பத்திரமா வெச்சு காப்பாத்திட்டு இருக்கார்" என அவன் நீண்ட விளக்கம் கொடுக்க,


"இருப்பதாயிரத்து தொள்ளயிரத்து தொன்னூத்தி ஒண்ணு" என்றாள் மேனகா ஆயாசத்துடன், "என்ன?" என அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க, "இதோட எனக்கு ஏற்பட்ட ஷாக்கோட எண்ணிக்கை" என்றவள், "இப்ப என்ன... என்னால அதை பார்க்க முடியுமா? இல்ல முடியாதா?' என அவள் கண்டிப்புடன் கேட்க, மறுக்க இயலாமல் அவன் குறிப்பிட்ட அந்த ஆராய்ச்சி கூடத்துக்கு அவளை அழைத்து வந்தான் விஜித்.


மிக மிகப் பாதுகாப்பாக, அதன் உள்ளே செல்வதற்காக சில பிரத்தியேக உடைகளை அணிந்து கொண்டு மில்லியை பத்திரமாக வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தனர் இருவரும்.


அங்கே இருந்த கண்ணடி கூண்டின் அருகில் அவளை அழைத்துச்சென்ற விஜித் மின்சாரம் தாக்கியதுபோல், "ஐயோ" என்று பதற, அந்த பதட்டம் மேனகாவையும் தொற்றிக்கொள்ள, "என்ன அச்சு விஜித்" என்றாள் அவள்.


"கூண்டுக்குள்ள மில்லி இல்ல. அது இங்கிருந்து எஸ்...

ஆயிடிச்சு? இனிமேல் இந்த வைரஸ் எங்க... எங்க... யார் யாருக்கெல்லாம் பரவப்போகுதோ?! காயா! மாயா! சிவஸ்ய சாயா!" என்றான் விஜித் உச்சபட்ச அதிர்ச்சியுடன்.


அதை சொல்லும் பொழுது குரலே வெளிவராமல் வெறும் காற்று மட்டுமே வெளிவந்தது அவனுடைய தொண்டையிலிருந்து.


மீண்டும் உண்டான அதிர்ச்சியில், உலகமே தட்டாமாலை சுற்ற அவன் மீதே மயங்கிச் சரிந்தாள் மேனகா.


(முற்றும்)


இது கதையோட 'செக

ண்ட் பார்ட்'க்கான 'லீட்' எல்லாம் இல்ல. முற்றும்னா உண்மையாகவே கதை முற்றும்தான்.


இந்த நேரத்தில் ஒரு குட்டி 'DISCLAIMER'


இந்த கதை சும்மா ஒரு 'ஜாலி'காக்க மட்டுமே எழுதப்பட்டது. இதில் லாஜிக்கெல்லாம் தயவு செய்து எதிர்ப்பார்க்காதீர்கள்.


பின் குறிப்பு:


மோனிஷா monishanovels.com தளம் ஆரம்பித்தபொழுதே அவர்களுடைய தளத்திற்காகத் தனிப்பட்ட முறையில் ஒரு கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.


இந்த கதையே அப்படி அமைந்துபோனது எனலாம்.


இந்த கொரோனா காலத்தில் கொஞ்சம் இலகுவாக நகைச்சுவை கலந்து இந்த கதையை எழுத முடிவு செய்தோம். திக்கித் திணறி ஒரு வழியாக முடித்துவிட்டோம் எனலாம்.


இந்த கதை பற்றிய உங்கள் விமர்சனங்களை எதிநோக்கி...


நட்புடன்,

மோனிஷா & KPN



Recent Posts

See All
Uyirie (Virus 143) 19

வைரஸ் அட்டாக் – 19 சில மாதங்கள் கடந்திருந்த நிலையில்... இயல்பான ஒரு விடுமுறை நாள் அது. அப்பொழுதும் கூட தன் மடிக்கணினிக்கு...

 
 
 
Uyirie (virus 143) - 18

வைரஸ் அட்டாக் – 18 மேனகா விஸ்வாவின் சென்னை இல்லம்... மேனகா தனது வாழ்க்கையின் லட்சியமாக நினைத்திருக்கும் ஆராய்ச்சி கிட்டத்தட்ட...

 
 
 
Uyirieye (Virus 143) 17

வைரஸ் அட்டாக்-17 நடு நாயகமாக அவரை உட்கார வைத்து சுற்றிலும் நின்றுகொண்டு, வளைத்து வளைத்து கேள்வி மேல் கேள்விகளாகக்...

 
 
 

Bình luận

Đã xếp hạng 0/5 sao.
Chưa có xếp hạng

Thêm điểm xếp hạng
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page