top of page

Valasai Pogum Paravaikalaai - 14

14

கலங்கரை விளக்கம்


அஞ்சுவின் பின்னால் இறுக்கமாக அமர்ந்திருந்த சரண் வீடு வந்து சேரும் வரையில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.


வரும்பொழுது அவன் செய்த சேட்டைகளும் கண்ணில் படுவதைப்பற்றியெல்லாம் வாய் ஓயாமல் அவன் கேள்விக் கேட்டு அவளை உண்டு இல்லை என்று செய்ததும் நினைவில் தோன்றி மனதைச் சுட்டது.


வீட்டின் வாயிலிலேயே லக்ஷ்மி அவனுக்காகக் காத்திருக்க அவளுக்கு அருகில் படுத்திருந்தது டைகர்.


அடுத்த நொடி அனைத்தையும் மறந்தவனாகத் துள்ளிக்கொண்டு வாகனத்திலிருந்து குதித்து இறங்கியவன், “லச்சு வா... டாகிக்கு பொறை ஃபுட் போடலாம்” என்றபடி அதை எடுத்து வர வீட்டிற்குள் ஓடவும், அவளுக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.


பின்பு தெரு பிள்ளைகளும் சேர்ந்துகொள்ள ஏதேதோ விளையாடி ஓய்ந்தனர்.


“ப்ச்... ருக்கும்மா போய் இப்படியெல்லாம் பேசித் தொலைப்பாங்கன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல மாமா. தெரிஞ்சிருந்தா அவனைக் கூட்டிட்டே போயிருக்கமாட்டேன். பாவம் மாமா பிள்ள. நல்லவேள அவங்க பேசின எதையும் அவன் கேட்டு வைக்கல” என சீனுவின் காதில் ரத்தம் வரும் அளவுக்கு அஞ்சுதான் புலம்பித் தீர்த்தாள்.


“விடு அஞ்சு, பாவம் அவங்களுக்கு என்ன பிரச்சனையோ?” என அவன் தெரியாமல் வாயை விட்டுவிட, “அப்படின்னா... யார் என்னன்னு இல்லாம யாரை வேணா பேசுவாங்களா? அவங்களுக்கு குயிலியைப் பத்தி என்ன தெரியும்? இல்ல என்ன தெரியும்னு கேட்கறேன்! வேலை வெட்டி இல்லாம கண்ட கண்ட டிவி சீரியலெல்லாம் பார்த்துட்டுப் பொழுதைக் கழிச்சா இப்படிதான் புத்தி மழுங்கிப் போகும்” என குரலை உயர்த்தும் அளவுக்கு அவளது ஆத்திரம் இன்னும் அதிகம்தான் ஆனது.


மேகலா நேரத்துடன் கிளம்பிவிட, மாலை மயங்கி இருள் கவிழத் தொடங்கும் நேரம் அவனை அழைத்துப்போக அங்கே வந்தார் வசந்தகுமார்.


சரண் அறியாவண்ணம் நடந்ததைச் சொல்லி அஞ்சு அவரிடம் மன்னிப்பு வேண்ட, “விடும்மா... இங்க வந்ததுக்குப் பிறகு இதெல்லாம் எங்களுக்கு சகஜமா போச்சு” என்றார் விட்டேற்றியாய். ஆனாலும் ருக்மணி அம்மாள் பேசிய எதையும் அவள் அவரிடம் சொல்லவில்லை. அதைச் சொல்லக்கூட அருவருப்பாக இருந்தது. கணவருக்குக் கூட தெரிய வேண்டாம் என, மனதிற்குள்ளேயே பேசுவது போல அவர் பேசிய எதுவும் மற்றவருக்குத் தெரியாமலேயே போகட்டும் என விட்டுவிட்டாள்.


பேரனை அழைத்துக்கொண்டு அவர் சென்றதும் சூர்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. "அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லம்மா. கொஞ்சம் ஹெல்புக்கு வரமுடியுமா?" என்று அவன் கேட்க, ‘ஒரு சின்னக் குழந்தைன்னு கூட பார்க்காம பேசக் கூடாததை எல்லாம் பேசிட்டு இப்ப இவங்களுக்கு உடம்பு சரியில்லாம போச்சா?!’ எனச் சுள்ளெனக் கோபம் மூண்டாலும் மறுக்க மனமின்றி அங்கே சென்றாள்.


பெரியவர் மட்டும் வீட்டில் தனியாக அமர்ந்திருக்க, சூர்யா அம்மாவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தான்.


அவரது ஓய்ந்த கோலத்தைப் பார்த்து,“என்ன ஆச்சுப்பா?” என மனது கேட்காமல் கேட்டாள்.


“ப்ச்... பீப்பீ ரொம்ப அதிகமா ஆயிடுச்சும்மா” என்றார் மரத்த தொனியில்.


“அம்மா ஏதோ ஃபங்க்ஷனுக்கு போகணும்னு ரெடி ஆயிட்டு இருந்தாங்களே! திடீர்னு என்ன ஆச்சு” என அவள் திகைக்க, “என்னன்னு சொல்றதும்மா, எல்லாம் நாங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி” என வேதனையுற்றவர், “இன்னைக்கு உன் கூட வந்தான் இல்ல அந்தக் குட்டிப்பையன், அவன் சிங்கிள் பேரன்ட் சைல்ட்ன்னு சொன்னது அவளோட காயத்தைக் குத்தி ரணம் ஆக்கிடுச்சு. ப்ச்... விடு” எனச் சலித்தவர், “நைட்டுக்கு, சாதம் வெச்சு ஒரு ரசமும் பொரியலும் மட்டும் செஞ்சு வெச்சிட்டுப் போறியா” என்று பேச்சை மாற்ற, அடுக்களை நோக்கிப் போனாள்.


அவர் சொன்னது போலச் செய்து முடித்து அதையெல்லாம் உணவு மேசை மீது எடுத்து வந்து வைக்க, அழைப்பு மணி ஒலிக்கவும் போய் கதவைத் திறந்தாள்.


அம்மாவைக் கைத்தாங்கலாகப் பிடித்தபடி நின்றிருந்தான் சூர்யா. அதைப் பார்த்த மாத்திரம் அவளுடைய மனதிற்குள் குறுகுறுத்துக் கொண்டே இருத்தக் கோபம் அப்படியே தணிந்து போய் அவர் மீது ஒரு பச்சாதாபம் வந்து ஒட்டிக்கொண்டது.


அனிச்சையாகப் போய் மறுபுறமாக அவரைத் தாங்கிப் பிடித்தவள் மெதுவாக அழைத்து வந்து சோஃபாவில் அமர வைத்தாள். அவருக்கு அருகில் வந்து உட்கார்ந்த சிகாமணி, “இப்ப எப்படி இருக்கு ருக்கு” என்றபடி அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். வார்த்தைகள் வராமல், ‘பரவாயில்லை’ என்பதாகத் தலையை மட்டும் அசைத்தார் ருக்கு.


நிமிர்ந்து அவளுடைய முகத்தைக் கூட பார்க்காமல் நேராகப் போய் வாஷ் பேசினில் கைக் கழுவி வந்த சூர்யா சாப்பாட்டுத் தட்டைக் கையில் எடுத்தான்.


“இருங்க சார் நான் போடறேன்” என அந்தத் தட்டை அவனுடைய கையிலிருந்து அவள் பறிக்க, “இல்ல... சாப்பாடு கொடுத்துட்டு அம்மாவுக்கு மருந்து கொடுக்கணும்” என அவன் தயங்கவும், வேகமாக சாதத்தைப் போட்டு ரசம் ஊற்றிக் குழையப் பிசைந்து ஓரமாகப் பொரியலை வைத்து ஒரு ஸ்பூனுடன் எடுத்து வந்து அவருக்கு நேராக அவள் நீட்டவும், “நான் பிடிசிக்கறேன். நீ எடுத்து சாப்பிடு” என முந்திக்கொண்டு அதைக் கையில் வாங்கினர் சிகாமணி.


சூடான உணவு வயிற்றை நிரப்பவும் கொஞ்சம் தெளிந்தார் ருக்கு. சூர்யா மாத்திரைகளைக் கொண்டுவந்து அவரது கையில் கொடுக்க அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறந்து நீட்டினர் சிகாமணி.


அதற்குள் சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு வந்தவள், “நான் கிளம்பறேன்ப்பா. பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்கணும்” என சிகாமணியிடம் சொன்னவள், “உடம்பைப் பார்த்துக்கோங்கம்மா. நான் நாளைக்கு காலைல வரேன்” என்று அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அவளது கையைப் பற்றிக்கொண்டார் ருக்கு.


அவரது கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென வழிய, “எனக்கு ஒரு பொண்ணு இல்லாத குறைக்கு கடவுள் உன்னை இங்க அனுப்பியிருக்கார் போலிருக்கு. தேங்க்ஸ்மா” எனத் தழுதழுக்க சிகாமணியின் கண்கள்கூட லேசாகக் கலங்கியது.


அவருடைய ஆதங்கம் புரிய, குயிலியின் நினைவின் தாக்கத்தில் முகம் முழுவதும் சோகத்தை அப்பிக்கொண்டு நின்றிருந்தான் சூர்யா.


“அம்மா, என்ன இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க” என உரிமையுடன் அவரைக் கடிந்தவள், “நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. காலைல சீக்கிரமே வந்து டிஃபன் செஞ்சுக் கொடுக்கறேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள் அஞ்சு.


ஐந்து வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு தருணத்தில்தான், மற்றவர்களைப் போல ஒரு வாடிக்கையாளர் என இருந்த ஒரு எதார்த்தமான அறிமுகம் நெருங்கிய பிணைப்பாக மலர்ந்தது.


*********


சலவை செய்த துணிகளைக் கொடுக்க அஞ்சு இங்கே வந்த சமயம், இவர்களுடைய வீட்டிற்குள்ளிருந்து முகம் முழுவதும் கடுமையை பூசியபடி ஒரு பெண்மணி வேகவேகமாக வெளியேறிச் சென்றார். கதவு திறந்தே கிடக்க, சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்துபோய் ஒரு அரை மயக்க நிலையில் சோஃபாவில் சரிந்து கிடந்த ருக்மணி அம்மாவைப் பார்க்க நேர்ந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதும் தெரிந்தது.


வேகமாக உள்ளே வந்து அவரை சரியாகப் படுக்க வைத்தவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.


கொஞ்சம் நிதானமாக யோசிக்க, அதே பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவரின் நினைவு வர, அவருக்கும் இவள் துணி இஸ்திரி செய்து தருவதால் அவருடைய கைப்பேசி எண்ணும் அவளிடம் இருக்கவே, மேற்கொண்டு யோசிக்காமல் அவரை அழைத்தாள்.


சில நிமிடங்களில் அங்கே வந்து அவரை சோதித்தவர், நிறையச் சர்க்கரை சேர்த்து ஏதாவது பானம் கலந்துவந்து கொடுக்கச் சொல்லவும், வேகமாகப் போய் அங்கேயே இருக்கும் காஃப்டீரியாவில் பழரசம் வாங்கி எடுத்துவந்து அவரைப் பருக வைக்க, சற்றுத் தெளிந்தார் ருக்மணி.


அதன்பின் அவரே சூர்யாவின் எண்ணுக்கு அழைக்க, உடனே தந்தையும் மகனும் அங்கே வந்து சேர்ந்தனர். பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள்.


அடுத்த நாளே ருக்மிணியிடமிருந்து வீட்டிற்கு வருமாறு அவளுக்கு அழைப்பு வர, அங்கே வந்தாள்.


அப்பொழுதும் கூட முழுவதுமாக குணமாகாமல் சோர்வுடன் படுத்திருந்தவர் இவளைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தார்.


கழுத்திலும் காதிலும் தங்கமும் வைரமுமாகப் போட்டுக்கொண்டு ஒரு சுய நினைவில் இல்லாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவை எதுவுமே அவளது கண்களில் படவில்லையே! அவளை நினைத்து அப்படி ஒரு வியப்பு அவருக்கு. எந்த ஒரு பிரதிபலனும் எதிர்நோக்காமல் இப்படி ஒரு உதவியைச் செய்ததற்கு ஆயிரம் நன்றியைச் சொல்லிக்கொண்டார்.


அவருடன் சில வார்த்தைகள் பேசிவிட்டு அவள் கிளம்ப எத்தனிக்க, அவருக்கு ஒரு கஞ்சி தயாரிக்க அப்பாவும் மகனுமாக சமையற்கட்டில் போராடிக்கொண்டிருப்பதைக் காண நேரிட்டது.


“நான் வேணா காஞ்சி போட்டுக்கொடுக்கட்டுமா?” எனத் தயக்கத்துடன் அவள் அவர்களிடம் கேட்க, அப்படி ஒரு ஆசுவாசம் இருவருக்கும்.


இவ்வாறாக ஆரம்பித்தது, உரிமையான உறவுபோன்ற ஒரு நெருக்கத்தில் கொண்டுவந்துவிட்டது.


அனைத்தையும் யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தாள் அஞ்சு.


*********


அடுத்த நாள்...


சீக்கிரமே விழித்து, வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு சூர்யாவின் வீட்டிற்கு வந்துவிட்டாள் அஞ்சு.


தன் உடல்நிலையைக் கூட தள்ளி வைத்து தட்டுத்தடுமாறி காஃபியைத் தயாரித்து மகனுக்கும் கணவருக்கும் கொடுத்துவிட்டு தானும் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் ருக்மிணி.


“அடங்கவே மாட்டீங்கம்மா நீங்க” என அவரைக் கடிந்துகொண்டே சமையலறை நோக்கிப் போக அவளுக்குப் பின்னாலேயே வந்துவிட்டார் அவர்.


அங்கேயே இருக்கும் ஒரு ஸ்டூலில் அமர்ந்தவண்ணம் அதை அப்படிச் செய்! இதை இப்படிச் செய்யாதே! என அவர் இவளை ஆட்டிப் படைக்க அவளுக்குச் சிரிப்புதான் வந்தது.


‘ப்பா... இந்தப் பொம்பளைங்களுக்கு உலகமே அவங்களோட சமையல்கட்டுதான் போலிருக்கு. என்னவோ இதை அவங்களோட ஒரு சாம்ராஜ்ஜியமாவே நினைச்சிட்டு யரையும் நம்பி உள்ள விடமாட்டங்க. அப்படியே தப்பித்தவறி உள்ள விட்டாலும் அவங்களுக்குப் பக்கு பக்குன்னு அடிச்சுக்கும். ஒரு டப்பா இடம் மாறினாக்கூட அது தெய்வ குத்தம் ஆயிடும்!’ என மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.


அவர் சொல்வதைக் கேட்டு அப்படியே காலை உணவை செய்து முடித்தாள். அவர் குளிக்கச் சென்றுவிட, மதிய உணவுக்காக அவள் தயார் செய்துகொண்டிருந்த நேரம் அங்கே வந்தான் சூர்யா.


தயக்கத்துடன் அவன் அவளை ஏறிட, “என்ன சார்?!” என அவள் இயல்பாகக் கேட்கவும், “சாரிம்மா, நேத்து ஏதேதோ நடந்துபோச்சு” என்றான் குற்ற உணர்ச்சியுடன்.


அனேகமாகத் தான் பேசியதை ருக்மிணி மகனிடம் சொல்லியிருந்தாலும் சொல்லியிருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டாள்.


“அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார், ஃப்ரீயா விடுங்க. அவன் வீட்டுக்கு போன உடனேவே நார்மல் ஆயிட்டான்” என அவள் இயல்பாகச் சொல்ல, “எனக்கு அவனைப் பார்க்கணுமே” என்றான்


“யார?!”


“நேத்து வந்தானே அந்தக் குட்டிப் பையன் அவன”


“ஓஹ்... எதுக்கு சார்?!”


“என்னவோ அவன் கிட்ட பேசணும், சாரி கேட்கணும்னு தோனுது அஞ்சு. ப்ளீஸ் கூட்டிட்டு வாயேன்”


அவன் கெஞ்சலாகக் கேட்கவும் தயங்கினாள் அஞ்சு.


“சார், கொஞ்ச நாளாவது ஆகணும் சார். நேத்துதான் இப்படி நடந்தது. இன்னைக்கே நான் மறுபடியும் கூப்பிட முடியாது. அதுவும் அவனுக்கு ஸ்கூல் வேற இருக்கு”


“சரிம்மா, பரவாயில்ல! என்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தாலும் கூட்டிட்டு வா என்ன”


“சரிங்க சார்!”


இப்போதைக்கு இப்படி சொன்னாலும் அஞ்சுவுக்கு அவனை இங்கே அழைத்துவரும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.


ஆனால் இருவரின் சந்திப்பும் தானாகவே நிகழ்ந்தது.


*********


கொரோனா, ஆட்குறைப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் என இருந்து சில நாட்களாகதான் அலுவலகம் செல்லத் தொடங்கியிருந்தான் சூர்யா.


நீண்ட நாட்களாக இழுத்து இழுத்துச் செய்துகொண்டிருந்த ப்ராஜக்ட் ஒன்று நிறைவடைந்திருக்க, சூர்யா வேலை செய்யும் நிறுவனத்தின் சார்பில் அவனுடைய டீமில் இருப்பவர்களுடன் ஒரு விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது.


மிகப்பெரிய இடைவேளைக்குப் பிறகு வாய்த்த முதல் விருந்து என்பதால் அவனுடைய குழுவில் பணிபுரியும் ஊழியர்கள் பத்துபேருமே அவரவர் குடும்பம் குழந்தைக்குட்டியுடன் ஆஜராகியிருந்தனர்.


சரணாலயத்துக்கு வந்திருந்தான் சூர்யா, அது அவனுடைய முன்னாள் மனைவிக்குச் சொந்தமான விடுதி என்பது தெரியாமலேயே.


சைவம் அசைவம் என விதவிதமான உணவு வகைகள் பஃப்பே முறையில் அலங்காரமாக வரிசைகட்டி வைக்கப்பட்டிருக்க, அனைவரும் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தனர்.


அவனுடைய டீமில் எல்லோருமே குடும்பமாக இருக்க தான் மட்டுமே தனியாக இருப்பது போன்று சங்கடமாக இருந்தது சூர்யாவுக்கு. அவனுடைய பதவி காரணமாக எல்லோருமே ஒரு சிறு இடைவெளி விட்டே பழகுகிறார்கள் என்பதும் புரிந்தது. தட்டில் உணவுடன் வந்து உட்கார்ந்த அவனது கண்களில் பட்டது கண்ணாடி ஜன்னலுக்கு அந்தப் பக்கமாக இருந்த நீச்சல் குளம்.


பசுமையுடன் பூத்துக்குலுங்கும் மரம் செடி கொடிகளுக்கு நடுவே அந்த நீல நிற நீச்சல் குளம் பார்க்கவே ஒரு கவிதை போன்று ரம்மியமாக இருந்தது.


நீச்சல் அடிக்கும் போது அணியும் பிரத்தியேக குல்லாய் கண்ணாடி சகிதம் இரண்டு குழந்தைகள் தண்ணீரில் கும்மாளம் அடித்துக் கொண்டிருக்க அவர்களுடைய பாதுகாப்புக்காக அங்கே நின்றிருந்தார் நடுத்தர வயதிலிருந்த ஒருவர். ஓரமாகப் போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்திருந்தார் ஒரு வயதான பெண்மணி.


நீந்திக் கொண்டிருந்தப் பெண் குழந்தையை எங்கோ பார்த்தது போல் தோன்றவும் உற்று கவனித்தான். அஞ்சுவின் மகள் வசந்தலட்சுமி போல தோன்றியது.


அவளுக்கு அருகிலிருந்த சிறுவனைப் பார்க்க அன்று கண்ணீருடன் அவர்கள் வீட்டிலிருந்து ஓடியவனோ என்ற சந்தேகம் எழுந்தது. அடுத்த நொடி சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு அந்த நீச்சல் குளத்தை நோக்கிப் போனான் சூர்யா.


சுரீரெனச் சுட்டெரித்துக் கொண்டிருந்தான் பகலவன். ஏசியில் இருந்து அந்த வெயிலில் வரவே அதிகம் எரிச்சல் கொடுத்ததால் அங்கே இருந்த குல்மோகர் மரத்தடியில் போய் நின்று கொண்டு கண்களைச் சுருக்கி நீச்சல் குளத்திலிருந்தப் பிள்ளைகளைப் பார்த்தான். அது வசந்தலட்சுமியும் சரணும்தான் என்பது புரிய அவனிடம் பேசும் தருணத்திற்காக அவன் காத்திருக்க விளையாட்டு ஜோரில் இருந்ததால் பிள்ளைகள் அவனைக் கவனிக்கவில்லை.


ஆனால், அந்தக் குழந்தைகளுக்குக் காவல் இருந்தவர் அவன் வந்து நின்றதைப் பார்த்துவிட்டு அவனை நோக்கி வந்தார்.


"குட் டே சார், ஐ ஆம் விக்னேஷ்! இந்த ஸ்விம்மிங் ஃபூலோட‌ கேர்-டேக்கர்” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, "ஸ்விம் பண்ணப்போறீங்களா சார். ரூம் கெஸ்ட்ன்னா ஃப்ரீ. இல்லன்னா ரிசப்ஷன்ல பே பண்ணி டோக்கன் வாங்கிட்டு ஷவர் பண்ணிட்டு வந்துடுங்க. சேஞ்சிங் ரூம் அங்க இருக்கு" என ஒரு பக்கமாகச் சுட்டிக்காண்பித்தார்.


“நோ... நோ... ஜஸ்ட் ரெஸ்டாரன்ட்ல சாப்டுட்டு இருந்தேன். அங்க இருந்து பார்க்க இந்த இடம் ரொம்ப அழகா இருந்துது. அதான் வந்தேன்” என அவன் சமாளித்துக்கொண்டிருக்க, அங்கே மகனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் குயிலி.


அதை கவனித்து, “ஓகே சார்... ஸ்விம் பண்ணனும்னா சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு அவளை நோக்கி ஓடினார் விக்னேஷ்.


“சரண், போதும் வா, ரொம்ப நேரேம் தண்ணில இருந்தா நல்லதில்ல. இவளுக்கு இது ஃபர்ஸ்ட் டைம் வேற” என அவள் மகனை அதட்ட, “மா..ம்மா ப்ளீஸ் மா... இன்னும் ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்” என அவளிடம் கெஞ்சினான் அவன்.


“சொன்னா கேட்கவே மாட்டியா?” என சலித்தவள், “ஓகே... லாஸ்ட் சான்ஸ்... இனிமேல் அலோ பண்ணமாட்டேன். அண்ட் ஒரு அங்கிள் வந்திருகாங்க. உன் கூட லஞ்ச் சாப்பிட அவங்க வைட் பண்ணிட்டு இருகாங்க. ஸோ... சீக்கிரம் வந்துடு” என்று சொல்லிக்கொண்டிருக்க, எதிர்பாராமல் அவளை அங்கே பார்த்த நொடி சூர்யாவின் மூளை மரத்தே போனது.


அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப இயலவில்லை. ‘இவள் குயிலிதானா அல்லது வேறு யாரோவா?!” எனக் குழம்பி நின்றிருந்தான்.


“ஜோதிம்மா, நீங்க ஸ்ட்ரிக்டா சொன்னாதான் வருவாங்க. சீக்கிரம் கூட்டிட்டு வந்துடுங்க” என அவரைப் பணித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் குயிலி.


ஒரு இயல்பான நட்பு இருவருக்குள்ளும் மலர்ந்திருக்க, அந்த நீச்சல் குளத்தின் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டில் அவளுக்காகக் காத்து நின்றான் அன்று அவளை சந்திக்க அங்கே வந்திருந்த முகிலன். அவனுடைய பார்வை ஆர்வமாகப் பிள்ளைகளிடமே நிலைத்திருந்தது. பின் இருவருமாக அங்கிருந்து வெளியேற, ஸ்தம்பித்துப்போய் கால்கள் வேரூன்றியதுபோல அங்கேயே நின்றான் சூர்யா. விழிகள் மட்டும் அவனது மகனிடமே வெறித்திருந்தன.


சில நிமிடங்களில் கிட்டத்தட்ட அவர்களை இழுத்துக்கொண்டு ஜோதிம்மா அங்கிருந்து வெளியேறிவிட, அவனுக்கு உணர்வு வந்தது. நெஞ்சை நீவியபடியே, அங்கே உட்கார்ந்திருந்த விக்னேஷை நோக்கிப் போனவன், “கொஞ்சம் முன்னாடி இங்க வந்தாங்களே அவங்க யார்?” என்று கேட்க, “குயிலி மேடம் சார்! அவங்கதான் இந்த ஹோட்டலோட ஓனர்” என்ற அவரது பதிலில் சற்று ஆடிப்போனான்.


“அந்தக் குட்டிப் பையன்” என மூச்சை இழுத்துப்பிடித்தபடி அவன் கேட்க, “அவங்க சன்தான். லீவு நாள்னா இங்க வந்து ஸ்விம் பண்ணுவாரு சார்” என்றார் அவர் பெருமையாக.


மீண்டும் உணவகத்துக்குள் வந்தவன் பிரமைப் பிடித்தவன் போல ஏதோ ஒரு இருக்கையில் போய் அமர்ந்தான். “என்ன சூர்யா... சாப்பாட்டை அப்படியே வெச்சிட்டு எங்கப் போனீங்க?” என ஒரு இளம் பெண் அவனிடம் கேட்க அது அவன் மூளையையே எட்டவில்லை.


‘சரண் அவளோட பையனா?! அப்படின்னா அவளுக்கு மறுபடியும் கல்யாணம் ஆயிடுச்சா?! அங்க அவளுக்காகக் காத்துட்டு நின்னானே அவன்தான் அவளோட ஹஸ்பண்டா?!’ என்பதைப் போன்ற கேள்விகளே அவன் மண்டைக்குள் குடைந்தன.


வேறொரு வாழ்கையை அமைத்துக்கொண்டு அவள் சந்தோஷமாக வாழவேண்டும் என அவன் பிரார்த்தனை செய்யாத நாளே இல்லை. ஆனால் அப்படி ஒரு காட்சியை நேரில் காணும்பொழுது அது கொடுத்த வலி மிகக் கொடியதாக இருந்தது.


திடீரென அன்று சரண் தன்னை ‘சிங்கிள் பேரன்ட் சைல்ட்’ என்று சொல்லிக்கொண்டதாக அவனுடைய அம்மா சொன்னது நினைவில் வரவும், அவனது உடல் அதிர்ந்தது.


‘அப்படியென்றால் சரண் என் மகனா?!’


அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே சரிந்தான் சூர்யா. அங்கே இருந்தவர்கள் அனைவரும் அவனை நோக்கி ஓடி வர அந்த இடமே களேபரமானது.


உணவகப் பணியாளர்கள் சேர்ந்து அங்கே இருக்கும் மருத்துவ உதவி அறைக்கு அவனைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். ஆம்புலன்சுக்கு சொல்லிவிட்டு அவனுக்கு முதலுதவி கொடுக்கப்பட, கேள்விப்பட்டு தானும் அங்கே விரைந்தாள் குயிலி.


அரை மயக்க நிலையில் அங்கே இருக்கும் படுக்கையில் அவன் படுக்க வைக்கப்பட்டிருக்க, முகமறியாத யாரோ ஒருவன் என்ற எண்ணத்துடன் அருகே சென்று பார்த்தவளுக்கு அவன் சூர்யா என்பது புரியவே சில நிமிடங்கள் பிடித்தது.


அவளது புத்தியை மழுங்கடித்து அவனிடம் கிறங்கிக் கிடந்ததற்குக் காரணமான, இன்று வரை அவளது சிந்தையில் பதிந்துபோயிருந்த அவனது இளமையும் கம்பீரமும் முற்றிலும் தொலைந்து போய் காதின் ஓரத்தில் நரை முடிகள் எட்டிப்பார்க்க, வலியில் கன்றிப்போன முகத்துடன் முற்றிலும் வேறு யாரோ ஒருவனாகத் தோற்றமளித்தான்.


அவன் மமதியுடனான உறவைப் பற்றிச் சொன்ன பொழுது அடைத்த அதிர்ச்சியைக் காட்டிலும் அப்படி ஒரு பேரதிர்ச்சியில் அவளது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.


தன்னை சமாளித்தபடி, “சூர்யா!” என முணுமுணுத்தவாறு தயக்கத்துடன் அவனது கையைத் தனது கைக்குள் பொத்திக்கொள்ள, மெதுவாக விழி திறந்து பார்த்தவன் அவளை உணர்ந்தவனாக, அவள் கொடுத்தக் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.


கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்று அவனது வாழ்க்கையின் மீது அவள் வெளிச்சம் பாய்ச்சுவதுபோல சூர்யாவுக்குத் தோன்றியது.

Recent Posts

See All
Valasai Pogum Paravaikalaai - 30

30 - வானமே எல்லை! குடும்ப உறுப்பினர்கள், சீனு, லட்சுமி, கல்யாணி மேகலா, முகிலன், ஞானி என எல்லோரும் நேரத்துக்கு வந்துவிட, விருந்தினர்கள்...

 
 
 
Valasai Pogum Paravaikalaai - 29

29 - மறுமலர்ச்சி! பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பங்களாக்கள் மட்டுமே இருக்கும் தெரு அது. ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை, மூடியிருந்த...

 
 
 
Valasai Pogum Paravaikalaai - 28

28 - வெற்றியின் சுவை! வரவேற்பறை சோஃபாவில் எட்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தைப் பிரித்து வைத்தபடி உட்கார்ந்திருந்தான் சூர்யா. அவன்...

 
 
 

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Sumathi Siva
Sumathi Siva
Sep 03, 2022

Wow awesome

Like
Replying to

thank you

Like
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page