top of page

Valasai Pogum Paravaikalaai - 24

24 - கலக்கம்


ஏதோ ஒரு செய்தி சேனலில் காரசாரமான விவாத நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்க, வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தார் வசந்தன்.


வணக்கம் சார் என்றபடி உள்ளே நுழைந்த குயிலியின் ஓட்டுநர் அவளுடைய கோட் மற்றும் லேப்டாப் பேகைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனார்.


சில நிமிடங்கள் கழித்துக் கைப்பேசியில் பேசியபடியே உள்ளே நுழைந்தவள் அவளுடைய அப்பாவை அங்கே பார்த்ததும், “ஓகே முகில், செக் பண்ணிட்டு, கஸ்டமர் பேஜ்ல வேற ஏதாவது மாடிஃபிகேஷன்ஸ் வேணும்னா மார்னிங் சொல்றேன்’ என்றபடி அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு, “எங்க, பாட்டி-பேரன் ரெண்டு பேரையுமே ஆளைக் காணும்?” என்றபடி அவருக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.


“நாளைக்கு எர்லி மார்னிங் ஊருக்குக் கிளம்பறாங்க இல்ல, அதான் நேரத்தோட சாப்பிட்டுப் படுக்கப் போயிட்டாங்க” என்ற அவரது பதிலில் அவளுடைய முகம் சுண்டிப் போனது.


ஆதி காலம் தொட்டே சூர்யாவின் குடும்பத்துப் பெண்களுடன் அவளுடைய அம்மாவுக்கு ஒரு நெருக்கம் உண்டு. விட்ட இடத்திலிருந்து இப்பொழுது அதை அவர் தொடர்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.


“எங்க குலதெய்வ கோவிலுக்கு நீ கண்டிப்பா வரணும் பேபி!” என்று கமலக்கண்ணனின் மனைவி அழைப்பு விடுக்க மறுக்காமல் கிளம்பிவிட்டார். வசந்தன் மட்டும் மகளை விட்டுக்கொடுக்காமல் இங்கேயே இருந்துகொண்டார். அம்மாவும் உடன் வரவில்லை என்பது ஒரு குறையாக இருந்தாலும் சரணும், அவனுடைய அப்பா, தாத்தா, பாட்டி, அத்தைகள் என அனைவருடனும் சேர்ந்து செல்ல உற்சாகமாகவே தயாராகிவிட்டான்.


இப்பொழுதெல்லாம் மகன் தன்னைத் தேடுவதில்லையோ என்ற எண்ணம் தோன்றி நெஞ்சை அடைக்கச் சட்டெனத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ஓ” என்றாள் உள்ளே போன குரலில்.


உள்ளே என்ன நினைக்கிறாள் என்பதே பிடிபடாமல், “என்ன கண்ணா, வேலை அதிகமா? ரொம்ப டயர்டா தெரியற” என வசந்தன் கேட்க, “புது ப்ளாக் கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல நின்னுட்டு இருந்தேன் பா அதான்” என்றவள், “நம்ம வெப்சைட் டிராப்ட் ரெடியாயிடுச்சு. எப்படி இருக்குன்னு பார்க்கறீங்களா?” என்று கேட்க, “வேண்டாம்மா, நாளைக்கு ஃப்ரீதான! பார்த்துக்கறேன், நீ முதல்ல ரெஃப்ரெஷ் பண்ணிட்டு சாப்பிட வா” என்றார் பெரியவர்.


“சாப்டேன் பா... டயர்டா இருக்கு. ஸோ... பேசமா போய் படுக்கப் போறேன்” என்றாள் ஆயாசத்துடன். அவளை ஏற இறங்கப் பார்த்தவர், “ஏம்மா பொய் சொல்ற, நீ சாப்பிடலன்னு உன் முகத்துலயே எழுதி ஒட்டியிருக்கே. டய்ர்ட்ல சாப்பிடப் பிடிக்காது. முதல்ல போய் குளிச்சிட்டு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடு. ராணி கிட்ட ரூம்லயே சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கச் சொல்றேன்” என அவர் சொல்லவும், மௌனமாக மாடிப் படிகளை நோக்கிப் போனாள்.


குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவளுக்கு அவளுடைய அந்த அறையே சூனியமாகத் தெரிந்தது. ஆயாசமாகப் போய் அப்படியே படுக்கையில் சுருண்டவள் அவளுக்கு அருகில் சரண் படுக்கும் இடத்தை மென்மையாக வருடினான். தன் மகன் தன்னைவிட்டு வெகு தூரம் போய்விட்டதுபோல ஒரு உணர்வு ஏற்பட திடீரென வாழ்க்கையே வெறுமையாகி விட்டது போல் தோன்றியது. அவளுக்காக அவளுடைய அப்பாவைத் தவிர அருகில் வேறு யாருமே இல்லையோ என்று மனம் ஏங்கித் தவித்தது.


‘என் பிள்ளையையே, என்னைக் கடைசி வரைக்கும் வெச்சு கஞ்சி ஊத்தும்னு சுயநலமா நினைச்சு பெத்துக்கல தெரியுமாடி!’ என அன்று அஞ்சுவிடம் வீம்பாகச் சொன்னதுதான் அவளுடைய உண்மையான மனநிலை என்றாலும் நிதரிசனம் என்பது மிகப் பூதாகரமாகத் தோன்றி மிரட்டுகிறது. தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய வயதை அவன் இன்னும் எட்டவில்லை என்பது கூட காரணமாக இருக்கும் எனத் தன்னைத்தானே தேற்றிக்கொள்ள முயன்றாள்.


சூர்யாவுடனானப் பிரிவுக்குப் பின் தன் நினைவுக்குள்ளேயே கொண்டுவராத அவனோடான நாட்கள் சம்பந்தமே இல்லாமல் காட்சிகளாக விரிந்தது. அடி வயிற்றிலிருந்து ஏதோ ஒன்று கிளம்பி வந்து நெஞ்சை அடைக்க மூண்ட அழுகையைக் கட்டுப்படுத்த அவள் எடுத்த முயற்சிகளால் தொண்டைத் தசைகள் இறுகி அப்படி ஒரு வலியைக் கொடுத்தது. தலைவலி விண்ணென்று தெறிக்கக் கண்களை இறுக மூடிக்கொண்டாள். சில நிமிடங்கள் உறக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் அப்படியே கழிய, கதவு தட்டும் ஓசைக் கேட்டது. ராணி சாப்பாடு கொண்டு வந்திருக்கக்கூடும் என்கிற எண்ணத்தில், "கொண்டு வந்து வெச்சிட்டுப் போ ராணி" என்று குரல் கொடுத்தாள்.


ஆனால் அவளுடைய அப்பாதான் உள்ளே வந்தார். “என்னப்பா” என்றபடி அவள் எழுந்து உட்கார, “என்ன கண்ணா ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க” எனப் பதறினார் அவர்.


“ப்ச்... நத்திங் பா, தூக்கக் கலக்கம்” என அவள் பதில் கொடுக்க, நெற்றியில் கை வைத்துப் பார்த்தவர், தயக்கத்துடன் அவளை ஏறிட, “என்னப்பா, எனி ப்ராப்ளம்!” என அவள் மென்மையாகக் கேட்கவும், “சூர்யா வந்திருக்கான்ம்மா” என்றார்.


நேரத்தைப் பார்க்க, மணி எட்டைக் கடந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தன. “இந்த நேரத்துல என்னப்பா?” என்று கேட்டாள் சிறு அதிர்வுடன்.


“இல்ல... சரணுக்காக ஏதோ பர்சேஸ் செஞ்சிட்டு வந்திருப்பான் போலிருக்கு” என்றவர், “உன் கிட்ட பேசணும்னு சொல்றான்மா. முகத்துல அடிச்ச மாதிரி வேண்டாம்ணு சொல்ல முடியல” என்று சொல்ல, “இட்ஸ் ஓகே..ப்பா நானே வரேன்” என அவள் எழுந்து நிற்க, “இல்லம்மா ஹால்ல வேண்டாம். வேலை செய்யறவங்கல்லாம் இருக்காங்க. அவரை இங்கயே வரச் சொல்றேனே” என அவர் அனுமதியாகவே கேட்க அவளுக்கு மறுக்க வழி இல்லாமல் போனது.


அவர் அங்கிருந்து செல்லும்போது அறைக் கதவைத் திறந்து வைத்துவிட்டே சென்றார்.


அவனுடைய காலடி ஓசை நெருங்கி வர வர அவளது இதயம் தடதடவென அடித்துக்கொண்டது.


ஒரு பிரபல பட்டு ஜவுளிக் கடையின் பையைக் கையில் பிடித்தபடி உள்ளே நுழைந்தான் சூர்யா.


அவளிடம் பேசியே தீரவேண்டும் என்ற உந்துதலில் அவளுடைய படுக்கையறை வரை வந்துவிட்டானே ஒழிய என்ன பேசுவது? எப்படித் தொடங்குவது? அவள் எப்படி எதிர்வினையாற்றுவாளோ?! என்றெல்லாம் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தியபடி தயங்கி நின்றான்.


அவனால் இயல்பாகப் புன்னகைக்கக்கூட இயலவில்லை. அதுவும் அவளை விழிகளால் பார்த்த நொடி பேச்சே வராதோ என்பதுபோல உதடுகள் இரண்டும் வறண்டு ஒட்டிக்கொண்டன.


முயன்று தன்னைச் சமன்படுத்திக்கொண்டு, “எப்படி இருக்க குயிலி?” எனக் கேட்டான் வலிய வரவழைத்தப் புன்னகையுடன். அனிச்சையாக அவனது கை நெஞ்சை நீவிக் கொண்டது.


அவனளவுக்குக் கூட அவளால் புன்னகைக்க இயலவில்லை. அவனைத் தனிமையில் பார்த்த நொடி அவளுக்கு நெஞ்சைக் கசக்கிப் பிழிவதுபோல் இருந்தது.


முகத்தைத் திருப்பிக்கொள்ள இயலாமல், “நல்லா இருக்கேன், உங்க ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு” என அடிப்படை மனிதாபிமானத்துடன் கேட்டாள்.


"நவ் மச் பெட்டர். நார்மலா இருக்கேன்" என அவன் பதில் கொடுக்க, அங்கே இருந்த ஒரு இருக்கையை அருகில் இழுத்துப் போட்டு, “உட்காருங்க” என்றபடி கட்டிலில் போய் அமர்ந்தாள்.


அப்பொழுது உள்ளே வந்த ராணி அங்கே இருந்த சிறு உணவு மேசையை இருவருக்கும் பொதுவாக நகர்த்தி, கொண்டு வந்த உணவை வைத்துவிட்டுப் போனாள்.


போகிற போக்கில் அவள் கதவை சாத்திவிட்டுப் போய்விட இரண்டு பேருக்குமே சங்கடமாகிப் போனது.


என்ன பேசுவது என்கிற குழப்பத்தில், “எப்படி இருக்க?’ என்றான் மீண்டும்.


அதில் கடுப்பானவள், “இப்ப என்ன வேணும் உங்களுக்கு, அதான் நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டேனே? நாளைக்கு காலைல ஊருக்குப் போறீங்க இல்ல, நேரத்தோட தூங்கி ரெஸ்ட் எடுக்காம பர்சேஸ் அது இதுன்னு எதுக்கு இப்படி ஊரைச் சுத்திட்டு இருக்கீங்க. அப்படி என்ன உடனே பேசித் தீர்க்க வேண்டிய முக்கிய விஷயம்ன்னு இந்த நேரத்துல என்னைத் தேடிட்டு வந்திருக்கீங்க?” எனப் படபடவெனப் பொரிந்தாள் அவள்.


“இல்ல குயிலி மனசுல நிறைய விஷயங்கள போட்டு அழுத்தி வெச்சிட்டு ரொம்ப ஹெவியா இருக்கு! என்னால இந்த ஸ்ட்ரெஸ்ஸ ஹேண்டில் பண்ண முடியல” என்றான் பரிதாபமாக.


கைகளைக் கட்டியபடி வாட்டமாகச் சாய்ந்து அமர்ந்தவள், “அப்படின்னா சொல்ல வந்ததைச் சட்டுன்னு சொல்லுங்க” என்றாள் அலுப்புடன்.


“சாரி குயிலி” என்றவன் அவள் பார்த்த பார்வையில், “இல்லல்ல தேங்க்ஸ்” என்றான் அவசரமாக.


“எதுக்கு” என அவள் அவனை ஆழமாகப் பார்க்க, “சரண் கிட்ட என்னைப் பத்தி நல்ல விதமா சொல்லி வளர்த்திருக்க இல்ல, அதுக்குதான். நீ நினைச்சிருந்தா என்னைப் பத்தி அவன் கிட்ட ஒரு தப்பான இம்ப்ரஷன க்ரியேட் பண்ணியிருக்க முடியும். ஆனா அதை நீ செய்யல. தேங்க்ஸ்” என்றான்.


“உங்களுக்காக இல்ல! இதை நான் அவனுக்காக மட்டும்தான் செஞ்சேன். ஏன்னா ஒரு குழந்தை அதோட அம்மாவோட பார்வைலதான் இந்த உலகத்தைப் பார்க்க ஆரம்பிக்குது. அப்படி இருக்கும்போது நான் தப்பான ஒரு விஷ விதையை அவன் மனசுல விதைச்சா அவன் இந்த உலகத்தைப் பார்க்கற பார்வையே மாறிப்போகும். இன்னைக்கு தகப்பன் கெட்டவனா தெரிவான். நாளைக்கு இந்த உலகமே கெட்டதா தெரியும். எதுக்கு... அவனோட உலகம் அழகானதாகவே இருந்துட்டு போகட்டுமேன்னுதான் அந்தத் தப்பைச் செய்ய நான் விரும்பல.” என்றாள் வெடுக்கென்று.


‘வரமாகக் கையில் கிடைத்த இப்படிப்பட்டவளைப் போய் தொலைத்துவிட்டு நிற்கிறோமே!’ என்ற எண்ணத்தில் பார்வையை அகற்றாமல் அவள் முகத்தையே அவன் பார்த்திருக்க ‘என்ன?’ என்பதாக அவள் புருவம் உயர்த்தவும், அவளுக்குக் கொட்டாவி வேறு வர, “சாரி” என்றான் மறுபடியும்.


“இப்ப எதுக்கு இந்த சாரி?” என அவள் கூர்மையாகக் கேட்க, “இப்ப, இந்த லேட் ஹவர்ஸ்ல வந்து உன்னை டிஸ்டர்ப் பண்றதுக்கு! மத்தபடி வேற எதுக்கும் மன்னிப்பு கேட்கற அருகதை எனக்கு இல்ல” என்றான்.


“பரவாயில்லை விடுங்க” என்றவள், “சாப்டுட்டே பேசலாமா” என்று சொல்ல, ஒரு தட்டைக் கையில் எடுத்துக்கொண்டான். அதில் ஆம்லட், வேக வைத்த காய்கள், ஒரு கிண்ணத்தில் கஞ்சி மற்றும் குவளைகளில் பழரசமும் இருந்தன.


என்னவோ ஏதோ என்பதுபோல் அவன் அந்தக் கஞ்சியை ஒரு பார்வை பார்க்க, “இது புழுங்கல் அரிசி நொய், துவரம்பருப்பு, கேரட், பீன்ஸ், ஆனியன், பூண்டு, மிளகு சீரகம் இத்தோட தூதுவளை, முசுமுசுக்கை இலை எல்லாம் சேர்த்து செய்யற இம்யூனிட்டி கஞ்சி. என்னோட ஓன் ரெசிபி. நல்லாதான் இருக்கும் சாப்பிடுங்க” எனக் கட்டளையாகச் சொல்லிவிட்டு தானும் சாப்பிடத் தொடங்கினாள்.


ஸ்பூனின் நுனியில் அதை எடுத்து ருசி பார்த்தவனின் முகம் அப்படியே மலர்ந்தது.


“சூப்பர் டேஸ்ட்ல இருக்கு” என்றான்.


‘அதைதான் சொன்னேன்’ என்பது போல் அவள் ஒரு பார்வை பார்க்க, “ப்ளீஸ், நாளைக்கு நீயும் எங்க கூட வாயேன்” என்றான் கோரிக்கையாக. அவளுடைய மகனின் உடல் மொழி அவனிடம் அப்பட்டமாக வெளிப்பட அவளுடைய படபடப்பு கூடிப் போனது.


“நான் யார் உங்களுக்கு? நான் எதுக்கு உங்க குலதெய்வக் கோவிலுக்கு வரணும்? முடியாது” என்றாள் வெடுக்கென.


“நீ என் பொண்டாட்டின்னு உரிமையோட சொல்ற தகுதியை நான் இழந்துட்டேன் குயிலி! ஆனா நீ என் மகனோட அம்மா. உன் பிள்ளையோட குலதெய்வமும் அதுதான். அதனால நீ வரலாம்” என்றான் தயங்கியபடி.


இகழ்ச்சியுடன் அவளது உதடுகள் வளைந்தன.


“இந்த லாஜிக் எல்லாம் என் கிட்ட பேசாதீங்க என்ன! அவன் என்னோட மகன். எனக்கு மட்டும்தான் மகன். அதனால என் குலதெய்வம்தான் அவனுக்கும் குலதெய்வமா இருக்க முடியும்” என அவள் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, “ப்ளீஸ் குயிலி, அப்படி மட்டும் சொல்லாத!” எனப் பதறினான் சூர்யா.

Recent Posts

See All
Valasai Pogum Paravaikalaai - 30

30 - வானமே எல்லை! குடும்ப உறுப்பினர்கள், சீனு, லட்சுமி, கல்யாணி மேகலா, முகிலன், ஞானி என எல்லோரும் நேரத்துக்கு வந்துவிட, விருந்தினர்கள்...

 
 
 
Valasai Pogum Paravaikalaai - 29

29 - மறுமலர்ச்சி! பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பங்களாக்கள் மட்டுமே இருக்கும் தெரு அது. ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை, மூடியிருந்த...

 
 
 
Valasai Pogum Paravaikalaai - 28

28 - வெற்றியின் சுவை! வரவேற்பறை சோஃபாவில் எட்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தைப் பிரித்து வைத்தபடி உட்கார்ந்திருந்தான் சூர்யா. அவன்...

 
 
 

4 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Sumathi Siva
Sumathi Siva
Sep 14, 2022

Wow awesome

Like

Vijaya Mahendar
Sep 13, 2022

குயிலி correct. முகிலன் கூட ஜோடி சேருங்க ஜி

Like

Guest
Sep 13, 2022

kuyili in saravedi mode

Like
Replying to

ha ha... yes... yes... thank you for your comment


Like
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page