top of page
Writer's pictureKrishnapriya Narayan

Valasai Pogum Paravaikalaai - 25

25 - நிர்ப்பந்தம்


“ஏன் சூர்யா, அந்த வார்த்தை அவ்வளவு ஹர்ட் பண்ணுதா உங்கள? அன்னைக்கு சொன்னீங்களே ‘ஷி இஸ் ப்ரெக்னன்ட் வித் மை சைல்ட்’ன்னு... என்ன ஒரு பயங்கரமான வார்த்தைகள் அது. கேட்கும்போதே எவ்வளவு நாரசமா இருந்திருக்கும் எனக்கு? சரண் என் மகன்னு தெரிஞ்சதும் அவனுக்கு அப்பா நீங்கதான்னு நம்பறீங்க இல்ல? அந்த நம்பிக்கை உங்க விஷயத்துல பொய்யா போன போது நான் எப்படி துடிச்சேன்னு உங்களுக்குத் தெரியுமா? நான் இங்க இருந்து கனடா கிளம்பறதுக்கு முன்னாடியே எனக்கு என் பிரக்னன்சி பத்தி ஒரு டௌட் இருந்துது. இங்கயே டெஸ்ட் பண்ணி பாசிடிவ்ன்னு வந்துட்டா எங்க உங்க கிட்ட வரவிடாம இங்க இருக்கறவங்க எல்லாரும் என்னைத் தடுத்துடப் போறாங்களோன்னு பயந்தே நான் அதை செய்யல.


அங்க வந்து டெஸ்ட் பண்ணி அது பாசிடிவ்ன்னு வரும்போது அந்த சந்தோஷத்தை அனுபவிக்க நீங்க என் பக்கத்துல இருக்கணும்னு கனவு கண்டேன். ஆனா அந்தக் கனவு கலைஞ்சு போச்சு. அவ பண்ண மாதிரி என் குழந்தையை வெச்சு கார்னர் பண்ணி உங்களை என் கூடத் தக்க வெச்சுக்க நான் விரும்பல! அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் அந்தக் குழந்தை எனக்கு மட்டும்தான்னு. என்னோட சம்பந்தமே இல்லாம உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கும்போது சரண் என் குழந்தைன்னு நான் சொல்றதுல என்ன தப்பு? ஒரு சின்னக் குழந்தைக் கைல அதுக்குப் பிடிச்ச ஒரு பொம்மையைக் கொடுத்துட்டு உடனே பிடுங்கற மாதிரி எனக்கு நடந்தது என் பிள்ளைக்கும் நடக்காதுன்னு என்ன நிச்சயம்” என முகம் சிவக்க, கண்களில் கண்ணீர் பளபளக்க, உதடுகள் துடிக்க வெறிப்பிடித்தவள் போல அவள் கேட்கவும் அவனுக்கு நெஞ்சை அடைத்தது. வேகமாகத் தண்ணீரை எடுத்துப் பருக அப்படியே புரை ஏறியது.


ஒரு நொடிக்குள் பதறிப்போனாள் குயிலி. வேகமாக எழுந்து வந்து அவனது தலையைத் தட்டி நெஞ்சை நீவி விட, அவளுடைய ஸ்பரிசமே அவனை ஆசுவாசப்படுத்தியது.


“இதுக்குதான், இதுக்குதான் அவனை உங்க கிட்ட இருந்து தள்ளி வைக்காம விட்டுக் கொடுத்துட்டுப் போயிட்டு இருக்கேன். அதை நீங்க யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க. பொதுவா அடுத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காம அடமென்ட்டா தான் நினைச்சதை சாதிச்சிட்டுப் போயிட்டே இருக்காங்க பாருங்க அவங்க நினைக்கறதெல்லாம் நினைக்கற மாதிரி அப்படியே ஸ்மூத்தா நடந்துடும்.


ஆனா என்னை மாதிரி டென்டர் ஹார்ட்டடா இருக்கறவங்கதான் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு விருப்பு வெறுப்புகளுக்கு நடுவுல மாட்டிட்டு அவதிப் படறோம். அதையே அட்வான்டேஜா எடுத்துட்டு அவங்க அவங்க இஷ்டத்துக்கு என்னை ஆப்பரேட் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க” என அவள் படபடக்க, “சாரி குயிலி, உன் விருப்பத்தை மீறி இங்க எதுவுமே நடக்காது. இது கூட எல்லாமே உன்னைக் கேட்டுட்டுதான” என்றவனை முடிக்கக் கூட விடவில்லை அவள்.


“என்ன உன்னைக் கேட்டுட்டுதான? ஃபங்க்ஷன் பண்றோம்னு கண்ணன் மாமா கேட்டதாதான் அப்பா சொன்னாங்க. நானும் உங்க கூட உட்கார்ந்து செய்யணும்னு அப்ப அவர் சொல்லவே இல்லை. அப்பறம் ஒவ்வொன்னா இழுத்து விடறீங்க” என அவள் பொரிய, “பெரியம்மாதான்... சாரி” என்றான் அவன்.


“இன்னும் எவ்வளவு சாரி சொல்லப் போறீங்க” என்று அவள் கேட்க, பதிலே சொல்ல இயலவில்லை அவனால்.


சில நிமிடங்கள் மௌனமாக இருந்தவன், “ப்ளீஸ், இந்த தடவ மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. இனிமேல் இப்படியெல்லாம் நடக்காம பார்த்துகறேன்” என்றவன், “என் டாட்டர் நிலா இருக்கா இல்ல” எனத் தன்னை மறந்து சொல்லிவிட்டவன், அவள் பார்த்த பார்வையில் அதை உணர்ந்து, மறுபடி “சாரி...” என்றான்.


ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு ‘சாரி’ சொல்கிறானே என மனதுக்குள் சலித்தபடி அவள் அமைதியாக கவனிக்க, “உண்மையைச் சொல்லணும்னா... அவளை என் டாட்டர்ன்னு சொல்லிக்கற உரிமை கூட எனக்கு கிடையாது. அவளுக்கு மூணு வயசு வரைக்கும் என் கைக்குள்ள வெச்சு நான்தான் அவளை வளர்த்தேன். ஆனா அதுக்குப் பிறகு எல்லாமே என் கை மீறிப் போயிடிச்சு. டைவர்ஸ், குழந்தை கஸ்டடி கேஸ்ன்னு வருஷக் கணக்கா கோர்டுக்கு அலைஞ்சேன். ஒரு ஸ்டேஜ்ல ஃப்ரஸ்ட்ரேட் ஆகி மொத்தமா விட்டுக்கொடுத்துத் தோத்துப்போய் புற முதுகு காட்டி ஓடி வந்தேன்” என அதிகம் உணர்ச்சிவசப்பட்டவன்,


“ஹை வேஸ்ல கார்ல லாங் டிரைவ் போகும்போது, சம் டைம்ஸ் நம்மள மீறி கண்ணு சொருகிடும் தெரியுமா? அந்த மாதிரி நேரத்துலதான் நிறைய அக்சிடென்ட்ஸ் நடக்கும்.


நம்ம கவனக்குறைவால நமக்கு ஏதாவது ஆனா கூட தப்பில்ல, ஆனா எதிர்ல வரவங்களுக்கு ஏதாவது டேமேஜ் ஆனா அது நம்மள குற்ற உணர்ச்சிக்குள்ள தள்ளிடும் இல்லையா.


அக்சிடென்ட் பண்ணிட்டு பயந்து போய், ஹிட் அண்ட் ரன்னுன்னு திரும்பிப் பார்க்காம தப்பிச்சு ஓடிக்கூட போயிடலாம். ஆனா அடிபட்டவனுக்குப் பெரிய இஞ்சுரி ஏற்பட்டாலோ ஏன் உயிரேக்கூட போயிட்டாலோ பாவின்னு சொல்லி இடிச்சிட்டுப் போனவன சபிக்க மாட்டாங்க.


நல்லவனா இருந்தா இதையெல்லாம் நினைச்சு காலத்துக்கும் அந்த விபத்து அவனைக் குற்ற உணர்ச்சியோடவேதான வெச்சிருக்கும்?


ஆனா நம்ம மனசாட்சி இடம் கொடுக்காம, குற்ற உணர்ச்சியைத் தூக்கிச் சுமக்க முடியாம, அதுக்கான பொறுப்பை ஏத்துட்டு முன்ன போய் நின்னா நல்லவன்னு மெடலா கொடுக்கப் போறாங்க? இல்லல்ல. அப்ப கூட தண்டனை, அபராதம் எல்லாம் உண்டுதான.


அதே நிலைமைதான் எனக்கும். நிறைய தண்டனையும் அனுபவிச்சுட்டேன். இன்னைக்கு வரைக்கும் அபராதமும் கட்டிட்டு இருக்கேன். ஆனா குற்ற உணர்ச்சியோடவும் இருக்கேன்.


இதுல எனக்கு இப்ப கிடைச்சிருக்கற சின்ன ஆறுதல் நீயும் சரணும்தான். மறுபடியும் என்னைத் தள்ளி வெச்சு எனக்கு தண்டனைக் கொடுத்துடாத குயிலி, ப்ளீஸ் ஐ பெக் யூ” எனத் தழுதழுத்தான் அவன்.


அவளுக்கு மிகவும் சங்கடமாகிப் போனது.


“உங்களுக்குச் சொன்னா புரியாது சூர்யா! எனக்கு விவரம் தெரிஞ்சு, ஒரு சின்ன கிராமத்துல ரொம்ப ரொம்ப சாதாரண மக்களுக்கு நடுவுல ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தவங்க நாங்க. இதோ இப்ப இருக்கேனே, இந்த மாதிரி பெரிய கார்... பங்களா... ஒரு ஹைஃபை லைஃப் ஸ்டைல்... பேரு... புகழ்... இதுக்கெல்லாம் பெருசா ஆசைப்பட்டதே கிடையாது.


உங்க சம்பாத்தியம் இல்லாம என்னால வாழ முடியாதுன்னோ, இல்ல நீங்க இல்லாம என் பிள்ளையை என்னால வளர்க்க முடியாதுன்னோ, சமூக அங்கீகாரத்துக்காகவோ, பாதுகாப்புக்காகவோ உங்க கூட சேர்ந்து வாழணும்னு பயந்திருந்தா நான் உங்களைப் பிரிஞ்சே வந்திருக்க மாட்டேன். எந்தளவுக்கு வேணாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு உங்க கூடவே வாழ்ந்துட்டு இருந்திருப்பேன்.


ஆனா நான் கனவு கண்டதெல்லாம் என்னோட அம்மா அப்பா வாழற மாதிரி ஒரு அன்னியோன்னியமான காதல் வாழ்க்கை. சூழ்நிலைய சரியா ஹேண்டில் பண்ண முடியத உங்க தடுமாற்றத்தால அடிப்படையே ஆட்டம் கண்டுபோச்சு.


என்னோட ஒரே லட்சியம் மொட்டுலையே கருகிப் போனதால என் வாழ்க்கை முறையையே இன் அண்ட் அவுட் கம்ப்ளீட்டா மாத்தி அமைச்சுகிட்டேன். கிடைக்காதத நினைச்சு, போலியா கனவு கண்டுட்டு அர்த்தமில்லாம வாழ நான் தயாராவே இல்ல. இப்ப கம்ப்ளீட்டா நான் வேற மாதிரி மாறியிருக்கும்போது என்ன பழைய வாழ்க்கைக்கு இழுக்கறீங்களே. அது எனக்கு எவ்வளவு தூரம் செட் ஆகும் சொல்லுங்க” என தன் ஆதங்கம் முழுவதையும் வெளிப்படையாகக் கொட்டினாள் அவள்.


“இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல குயிலிம்மா. ஆனா என்னால ஒண்ணு மட்டும் சொல்ல முடியும்! உன்னை மாதிரி எதார்த்தத்தை என்னால ஏத்துக்கவே முடியல. என்னைக்கு உன்னை முதன்முதலா ஃபோட்டோல பார்த்தேனோ அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் உன் கூடதான் வாழ்ந்துட்டு இருக்கேன். அந்தக் கற்பனைதான் என்னை உயிரோடவே வெச்சிருக்கு” என்றபடி அவளுடைய கையைப் பற்ற, தீப்பார்வை பார்த்தபடி பின்னால் இழுத்துக்கொண்டாள் அவள். அதைக் கண்டும் காணாதவன் போல விடாப்பிடியாக அவளது கரத்தை தன் நெஞ்சின் மீது வைத்து அழுத்தியபடி, “இந்த இடத்துல நீ மட்டும்தான் இருக்க. இதை உனக்கு எப்படி ப்ரூவ் பண்றதுன்னு எனக்குத் தெரியல. என்னோட தேவை உனக்கு இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு நீ வேணும். உன்னோட அன்பு வேணும். காதல் வேணும். ப்ளீஸ் என்கூடவே வந்துடு” என்றபடி அவனது பிடியைத் தளர்த்தப் பட்டென தன் கையை உருவிக் கொண்டவள்,


பலவீனப்பட்டுப் போயிருக்கும் அவனது இதயத்தின் மேல் அவளது கையை வைத்து இப்படி அழுத்துகிறானே என்கிற பதட்டமும் சேர்ந்துகொள்ள, “என்ன, நான் உங்க கூட வரணுமா” என்று முறைத்தாள்.


“இல்லல்ல வேண்டாம்... நீ என் கூட வர வேண்டாம். நான் வேணா உன் கூட இங்கயே வந்துடறேன். வீட்டோட மாப்பிள்ளையா” என்றான் பதட்டமாக.


அவனுடைய பாவனையில் லேசாகச் சிரிப்பு வர, அதை மறைத்துக்கொண்டு, “எப்பவுமே உங்களைப் பத்தி மட்டும்தான் யோசிப்பீங்களா. இந்த வயசான காலத்துல உங்க அப்பா அம்மாவைத் தனியா விட்டுட்டு இங்க வருவீங்களா நீங்க?” என்று எகிறினாள்.


“இல்லல்ல... அவங்களும் இங்கயே வந்துடுவாங்க, வீட்டோட மாமனார் மாமியாரா. அவங்களுக்கு நாம நல்லபடியா வாழ்ந்தா போதும். அதுக்காக என்ன வேணா செய்வாங்க” எனப் பரிதாபமாக அவளுக்கு விளக்கம் கொடுத்தான்.


அவள் ‘சரி’ என சம்மதம் சொல்லும் வரை ஓயாமல் இப்படிப் பேசியே பேச்சை வளர்த்துக் கொண்டே போவான் என்பது புரிய, “இதுக்கெல்லாம் இப்பவே இன்ஸ்டன்டா என்னால பதில் சொல்ல முடியாது. இப்போதைக்குப் பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க. மத்ததை அப்பறம் பார்த்துக்கலாம்” என எந்த முடிவையும் சொல்லாமல் தற்காலிகமாக அதைத் தள்ளிப்போட்டாள் குயிலி.


‘அன்று... மருண்ட பார்வையுடன் தன் முகத்தையே ஏறெடுத்துப் பார்க்கவும் தயங்கி, பின் பார்த்த விழிப் பார்த்தபடி மயக்கத்துடன் தன்னையே பார்த்திருந்த, அப்பாவித்தனம் நிரம்பிய குழந்தை முகத்துடன் விகற்பமில்லாமல் தன்னை நம்பி வந்த, தன்னைக் கொண்டாடிய, தான் கொண்டாடித் தீர்த்த குயிலி இல்லை இன்று தன் முன் இருப்பவள். இவள் வேறு!’ என்பது நன்றாகவே அவன் மனதிற்குப் புரிந்தது. ஆனாலும் கம்பீரம் நிறைந்த இந்தக் குயிலியை முன்பைக் காட்டிலும் அதிகம் பிடித்துத் தொலைத்தது.


மேற்கொண்டு அவளிடம் பேச்சை வளர்க்க வழி இல்லாமல் அவளைப் பரி’தாப’ப் பார்வை பார்த்தபடியே சாப்பிட்டு முடித்தவன் தான் கொண்டு வந்த பையை எடுத்துக் கட்டில் மேல் வைத்துவிட்டு, “உனக்காக வாங்கிட்டு வந்தேன். ப்ளீஸ் ஃபங்க்ஷன் அன்னைக்கு இதுல உனக்குப் பிடிச்சதைக் கட்டிக்கோ” என்று சொல்லிவிட்டு அவள் மறுத்து ஏதும் சொல்வதற்கு முன் அங்கிருந்து வேகமாக வெளியேறிச் சென்றுவிட்டான்.


‘என்ன மாதிரியான ஒரு செட் அப் இது. யாரை நான் இப்ப ப்ளீஸ் பண்ணனும், என்னோட அம்மாவையா, என் மகனையா, இல்ல இவனையா? செல்ஃப் சாட்டிஸ்ஃபிகேக்ஷன் எல்லாத்தையும் விட முக்கியம் இல்லையா? யாருமே வேண்டாம்ணு முடிவெடுத்துட்டா எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. ஆனா எனக்கு என் மகன் வேணும். அவனுக்கு அவனோட அப்பா வேணும். ஸோ, அவனுக்காக அவனோட அப்பாவை என் வாழ்க்கைக்குள்ள அனுமதிக்கணும். அவனோட அப்பாவுக்கு அவனைப் பெத்தவங்க வேணும். அதனால அவங்க எதிர்பார்ப்பையெல்லாம் நான் இப்ப சாட்டிஸ்ஃபை பண்ணனும். இந்த அழகுல இந்த மனுஷன் வேற அன்பு காதல்ன்னு பெனாத்திட்டு... சை’ எனச் சலிப்புடன் அந்தப் பையையே வெறித்தபடி அவள் அமர்ந்திருக்க, அவளுடைய அப்பா அங்கே வந்தார்.


அவளை நினைத்து கவலையின் ரேகை அவரது முகத்தில் படர்ந்திருக்க, “பிரச்சனை ஒண்ணும் இல்லையே கண்ணா?” என்று அவர் கேட்கவும், “நத்திங் பா... அவர் போயிட்டாரா” என்றாள் தன்னை இயல்பாகக் காண்பித்துக்கொண்டு.


“ம்ம்... எல்லாருக்கும் டிரஸ் வாங்கியிருக்கான்ம்மா. அதை கொடுக்க வந்ததா சொன்னான்” என அவர் மகளின் முகத்தைப் பார்க்க, “அதை நீங்க நம்பறீங்களாப்பா” என்று அவள் கேட்கவும், “என்னை என்ன சரண்னு நினைச்சியா?” என்று கேட்டுப் புன்னகைத்தார்.


“இங்கயே வந்துடறேன்னு சொல்றார்ப்பா” என்று அவள் கசந்த முறுவலுடன் சொல்ல, “நத்திங் ராங் மா. ஆளுக்கு ஒரு மூலைல இருக்கறத விட இது பெட்டர். இல்லன்னா அதுக்கும் நீதான் வருத்தப்பட வேண்டி வரும். நீ புத்திசாலி. சரியான டெசிஷன் மேக்கர். அதனால, யாரையும் ஹர்ட் பண்ணாம, நீயும் ஹர்ட் ஆகம இருக்கற மாதிரி ஒரு முடிவை நீதான் எடுக்கணும்” என்று சொல்லிவிட்டு, “ஏற்கனவே டயர்டா இருக்குன்னு சொன்ன. இப்பவே மணி பத்து ஆயிடுச்சு. உங்க அம்மாவையும் உன் பிள்ளையையும் வழி அனுப்ப நாலு மணிக்கே எழுந்துக்கணும். ஸோ எதையும் யோசிக்காம பேசாம படுத்து தூங்கு” என்று அங்கிருந்து அகன்றார் வசந்தன்.


கணவன் பிள்ளை என ஒரு இயல்பான வாழ்க்கையை தன் மகள் வாழ வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அவருக்குமே உள்ளுக்குள்ளே இருக்கிறது என்பது புரிந்தது குயிலிக்கு. அதே சமயம் அவளை அதற்கு அவர் நிர்ப்பந்திக்கவும் விரும்பவில்லை என்பதையும் உணர்ந்தாள்.


யோசனையுடன் அனிச்சைச் செயலாக அந்தப் பையைப் பிரிக்க அவளுக்குப் பிடித்த ஆகாய நீலத்தில் ஒன்றும் அவனுக்குப் பிடித்த துளிர் பச்சையில் ஒன்றுமாக இரண்டு பட்டுப்புடவைகள் அதிலிருந்தன.


அவளது கண்களிரண்டும் அப்படியே குளமானது!


திருமணத்தன்று உடுத்தியதுடன் சரி, அதன் பிறகு அவள் பட்டுப்புடவையே உடுத்துவதில்லை என்பதையெல்லாம் யார் போய் அவனிடம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்கள்?!

5 comments

5 комментариев

Оценка: 0 из 5 звезд.
Еще нет оценок

Добавить рейтинг
Sumathi Siva
Sumathi Siva
14 сент. 2022 г.

Wow awesome

Лайк

Vijaya Mahendar
14 сент. 2022 г.

Superji. சூர்யா ரொம்ப கோழையா மாறிட்டான். குயிலி bold

Лайк
Krishnapriya Narayan
Krishnapriya Narayan
14 сент. 2022 г.
Ответ пользователю

He is always like that only...😡

Лайк

Гость
14 сент. 2022 г.

bond and understanding between vasanth sir kuyili is awesome..great father

Лайк
Krishnapriya Narayan
Krishnapriya Narayan
14 сент. 2022 г.
Ответ пользователю

Everyone need such a caring person in life❤️

Лайк
© KPN NOVELS COPY PROTECT
bottom of page