Valasai Pogum Paravaikalaai - 30
- Krishnapriya Narayan
- Sep 17, 2022
- 4 min read
30 - வானமே எல்லை!
குடும்ப உறுப்பினர்கள், சீனு, லட்சுமி, கல்யாணி மேகலா, முகிலன், ஞானி என எல்லோரும் நேரத்துக்கு வந்துவிட, விருந்தினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர். குறித்த நேரத்துக்குச் சரியாக வந்து சேர்ந்தான் தேவாதிராஜன் மனைவி மரகதவல்லியுடன். (இதயத்தைத் திருடாதே படித்தவர்களுக்கு இவர்களைத் தெரிந்திருக்கும்)
ஒருபக்கம் வசந்தகுமார் மறுபக்கம் சூர்யா நின்றிருக்க நடுவில் நின்று எல்லோரையும் வரவேற்றாள் குயிலி. எல்லோரையும் உபசரிக்க அஞ்சு, தங்கம், பிரேம் மற்றும் அவர்கள் விடுதி பணியாளர்கள் எல்லோரும் பம்பரமாகச் சுழன்றுக் கொண்டிருந்தனர்.
ரிப்பன் வெட்டி அவன் புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்க உள்ளே சென்று தயாராக இருந்த குத்துவிளக்கை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தாள் மல்லி.
வரவேற்புரை, விவாதங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் விருந்து எனக் களைக்கட்டிய விழா நல்லபடியாக நடந்து முடிந்தது. வசந்தகுமார் தவிர்த்து அவளுடைய அம்மா, மாமனார், மாமியார், முகிலனின் அப்பா என மூத்த தலைமுறையினர் மட்டும் வீட்டுக்குக் கிளம்பிவிட, மற்றவர் மட்டும் அங்கே மீதமாக.
அதன் பிறகு அவர்கள் குழுமத்தில் வேலை செய்பவர்களுக்கான பார்ட்டி களைகட்ட நள்ளிரவு வரை அங்கே தடபுடல்பட்டது. பிள்ளைகள் நான்கு பேர் சேர்ந்து போட்ட ஆட்டத்தை யாராலும் அடக்க இயலவில்லை. எல்லாம் முடியும் தருவாயில் இருக்க மொத்தமாகக் களைத்துப் போயிருந்தனர் அனைவரும்.
அதற்கு மேல் துளிகூடத் தெம்பில்லாமல் பிள்ளைகள் நான்கு பேரும் போய் ஓரமாக அமர்ந்துவிட, அங்கே வந்து சற்றுத் தள்ளி அமர்ந்த முகிலன், மேகலாவை மட்டும் அருகில் வரும்படி ஜாடை செய்து அழைக்க, அக்கம்பக்கம் பார்த்தவள் பூனை போல அவனை நெருங்கிச் சென்றாள்.
“ஹேய் நூடுல்ஸ், உனக்கு ஒரு சீக்ரட் சொல்லட்டுமா” என்றான் கிசிகிசுப்பாக. “ஹான்... அப்படி என்ன சீக்ரட் சொல்ல போறீங்க... சொல்லுங்க... சொல்லுங்க” என ஆர்வமாக அவளும் கிசுகிசுக்க, “அப்பா எனக்கு இன்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்து சஜஸ்ட் பண்ணாங்க. நான் உடனே ஓகே சொல்லிட்டேன் தெரியுமா?” என்றான் அவளைத் திகைப்பில் ஆழ்த்தி.
“அடப்பாவிங்க முகிலா! இது எப்படி நடந்தது” என தன் வியப்பை அவள் வெளிப்படுத்த, “ஷ்.. ஷ்... கத்தாத. இப்போதைக்கு இது ஒரு சீக்ரட்” என அவன் சொல்லவும், “ஓகே... ஓகே...” என்றவள், “யாரு முகில்... அந்த கேரளா சாரி பொண்ணா! அந்தப் பொண்ணு போட்டிருந்த க்ரிஞ் மேக்கப்புக்கு உங்களுக்கு அவங்களைப் பிடிக்காதுன்னு நினைச்சேனே” எனக் கேட்டாள் ஒரு மாதிரியான குரலில்.
“யார் அது, அப்படி யார் ஃபோட்டோவையும் எங்க அப்பா எனக்கு காமிக்கலயே” என அவன் அப்பாவியாய் சொல்ல, “அப்படியா, அப்ப வேற யாரு?” என அவள் ஆவலாய் கேட்க, “வெயிட்... ஃபோட்டோவே காமிக்கறேன் பாரு?” என்றவன் தன் கைப்பேசியை இயக்கி அதை அவளது முகத்துக்கு நேராகக் காண்பித்தவாறு, “ரொம்ப நல்லப் பொண்ணு நூடுல்ஸ் இவங்க. இப்படி ஒரு பெண்ணை எங்கப்பா எனக்கு முதல்லையே பார்த்து செலக்ட் பண்ணியிருந்தா இப்ப எனக்கு உன்னை மாதிரி ஒரு மக இருந்திருப்பா. எந்த ஒரு காரணத்துக்காகவும் தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காம ஒரு கொள்கையோட வாழற பண்பான ஸ்ட்ராங் லேடி இவங்க” என்றான் சலனமே இல்லாமல். படத்தைப் பார்த்த நொடிக்குள் அவள் முகமே மாறிப் போனது, தொண்டை அடைக்க, எல்லோருக்கும் முன்பாக அழுதுவிடுவோமோ என்ற பதட்டத்தில் தடுமாறியவள், சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றி அன்னையைத் தேடினாள் அணைத்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள.
அதை உணர்ந்தவனாக, தயக்கத்துடன் முகிலன் தன் கரங்களை லேசாக விரிக்க, அனிச்சையாகப் போய் தஞ்சம் புகுந்தவள் அவன் மார்பில் முகம் புதைத்து கண்ணீரால் அவனை நனைத்தாள்.
“என்னால அப்பான்னு யாரையும் கூப்பிட முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு அசிங்கமான உறவு. நீங்க எப்பவுமே எனக்கு ஃப்ரெண்டா இருப்பீங்களா முகில்?!” என மேகலா தழுதழுக்க, “ஸ்யூர் மை டியர் பிரின்சஸ். அதுக்கு முன்னாடி உங்க அம்மா சம்மதம் நமக்கு வேணும்” என்று முடித்தான் முகிலன்.
“அதெல்லாம் நான் சம்மதிக்க வெச்சிடுவேன்” என்றாள் சிணுங்கலாக. என்ன என்று புரியாமல் போனாலும் மற்ற பிள்ளைகளெல்லாம் அவர்களை நோக்கி வந்து இருவரையும் சேர்த்து கட்டிக்கொண்டார்கள்.
அப்படியே ஒரு செல்ஃபீ எடுக்க அவன் தன் கைப்பேசியை அன்லாக் செய்ய கார்முகிலனின் கைப்பேசித் திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்தாள் தங்கமயில்.
*********
கவலையோ பயமோ பதட்டமோ எதுவுமே இல்லாமல் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்வதும், ஏதோ சிரிப்பதும், தலை கோதுவதும் என ஏதேதோ சேட்டைகள் செய்தபடி சென்னை பன்னாட்டு விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்தனர் பிள்ளைகள் நால்வரும்.
“ஏய் என்னடி இது, என்னவோ பிக்னிக் வந்த மாதிரி எதையாவது வாங்கித் தின்னுட்டு, செல்ஃபி எடுத்துட்டு சுத்திட்டு இருக்குங்க இந்தப் பிள்ளைங்க. இந்த மேகலா பொண்ணு வெளிநாடு போகுதேன்னு கொஞ்சமாவது வருத்தம் இருக்கா பாரு இதுங்களுக்கு” எனப் புலம்பினாள் அஞ்சு.
“லூசு, எதுக்குடி இவங்க வருத்தப் படணும்? யார் எங்க எப்படி இருக்காங்களோன்னு தெரிஞ்சுக்க முடியாம தவிக்க நம்ம காலம் மாதிரியா சொல்லு? எல்லாரும் எல்லா நேரத்துலயுமே கனக்டடா இருக்காங்க. நினைச்சா மெசேஜ் பண்ணிப்பாங்க, இல்லன்னா கால் பண்ணிப் பேசுவாங்க, தேவைபட்டா வீடியோ கால் போவாங்க. ஏன் அவளை நேர்ல பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டா அதைக் கூட செய்வாங்க. ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல துணையா ஆதரவா ஒன்னாவே இருப்பாங்க” என்றாள் குயிலி பெருமையுடன்.
“உண்மைதான்டீ குயிலு, நேத்து நைட் ஒரு மணிக்கு இதுங்க வாட்சப் க்ரூப்ல யாரோ மெசேஜ் போட்டிருக்காங்க. நல்லா தூங்கிட்டு இருந்த இந்த லச்சுப் பொண்ணு படக்குன்னு எழுந்து கண்ணைக் கசக்கிட்டு அந்த மெசேஜை படிச்சு, ஏதோ பதில் போட்டுட்டு மறுபடியும் படுத்துத் தூங்கிடுச்சு” என்று வியந்தாள் அஞ்சுகம்.
“ஆமாம் அதிருக்கட்டும், இவங்க ரெண்டு பேரும் இங்கதானடி இருந்தாங்க, அதுக்குள்ள எங்க ஆளக் காணும்” எனக் கேட்டாள் குயிலி சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றி.
“என்ன இருந்தாலும் நியூலி மெரிட் கப்பிள்ஸ் இல்லையா, கிடைக்கற கேப்ல கிடா வெட்றாங்க போலிருக்கு” என்ற அஞ்சு, குயிலியின் காதுக்குள் ஏதோ விரசமாகச் சொல்லி விஷமமாகச் சிரிக்க, பட்டென அவளுடைய தோளில் தட்டியவள், “எரும, வயசு கூடக் கூட உனக்கு விவஸ்தையே இல்லாம போயிட்டு இருக்கு” என்று முறைக்கவும், “என்னடி ஏதோ கிசு கிசுன்னு பேசிட்டு இருக்கீங்க” என்றபடி அங்கே வந்தாள் தங்கம், அருகில் முகிலன். அவன் கையில் வைத்திருந்த காஃபி குவளைகளை அவர்களிடம் ஆளுக்கொன்று கொடுக்க, ‘சொல்லட்டுமா’ என்பதுபோல் அஞ்சு தலையை அசைக்க, “என்ன அஞ்சு!” என அப்பாவியாக முகிலன் கேட்கவும் அஞ்சுவை அடக்கும் வழி தெரியாமல், “நத்திங் முகிலன், நீங்க காஃபி குடிச்சீங்களா?” எனப் பேச்சை மாற்றி குயிலிதான் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.
சரணாலயத்தில் திறப்பு விழா முடிந்த அடுத்த நாளே குயிலியும் அஞ்சுவும் நேரடியாக தங்கத்திடம் முகிலனைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டனர். முதலில் அதிர்ந்தாலும் மேகலாதான் இதற்கான ஆரம்பப் புள்ளி என்பதைச் சொல்லி அவர்கள் எடுத்துச் சொல்ல, இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டாள் தங்கம்.
அவளுக்கு நடந்த திருமணம் ஒன்றும் அவள் விரும்பி அவளது ஒப்புதலுடன் நடந்ததல்லவே! பலவந்தமாக அவள் மேல் திணிக்கப்பட்டதுதானே?! அதன் பின்னும் அவள் வாழ்ந்த வாழ்க்கையில் கணவன் என்றவன்மேல் வெறுப்பு என்ற ஒன்றைத் தவிர, காதலும் ஏற்படவில்லை, அன்பும் சுரக்கவில்லை. அவனை எண்ணி ஒரு தவ வாழ்க்கை வாழ அவளை நல்லபடியாக நடத்தினான் என்கிற விசுவாசமும் அவளுக்கில்லை. விதவை என்பது அவளுக்குக் கொடுக்கப்பட்ட உயரிய விருதா என்ன, அவள் அதை விரும்பி இன்பமாய் தூக்கிச் சுமக்க?!
அந்தந்த வயதுக்கே உரியக் கனவுகளும் ஆசைகளும் தேவைகளும் அவளுக்கும் இருக்கவே செய்தன. ஆனால் மகளுக்காக, இந்த சமுதாயத்துக்காக என தன் ஆசாபாசங்களை அடக்கி மரத்துப் போனவளாகதான் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். இரண்டு நாட்கள் யோசித்த பிறகு, தோழிகளிடம் வாய் வார்த்தைக்கு வேண்டாம் என்று சொல்லி பாசாங்கெல்லாம் செய்யவில்லை அவள். அதுவும் மகளே இதை முன்னெடுத்துச் செய்யவும், இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் என்ன என்ற ஆசைதான் அவளுக்குள் துளிர்விட்டிருந்தது. ஆனால் மேகலாவின் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் மட்டுமே அவளிடம் மேலோங்கியிருந்தது குறிப்பாக அவளது எதிர்கால திருமண வாழ்க்கைப் பற்றி.
எல்லோருமாக தைரியம் கொடுத்துதான் அவளைத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். சில தினங்களிலேயே, பெரியவர்கள் எல்லோருடைய ஆசியுடனும் இளைய தலைமுறையினரின் வாழ்த்துக்களுடனும் நல்லபடியாகத் திருமணமும் முடிந்து புகுந்த வீடு சென்றாள் தங்கம். அவள் பிறந்த குடும்பத்தில் யாருக்குமே இதுபற்றி தெரியப்படுத்திச் சிக்கலை இழுத்துவிட்டுக் கொள்ளவில்லை. மற்றபடி எப்பொழுதாவது தானாகவே அவர்கள் அறிந்துகொள்ளும்போது வருவது வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்தான்.
இதோ நல்லபடியாக மேகலாவும் ஜமாய்க்கா கிளம்புகிறாள்.
"மறந்துடாத கல்லிக்கா, நீ லாயர் ஆனவுடனே உன் முதல் கேஸே என்னோடதுதான். என் மாமனுங்க, சித்தப்பன் எல்லார் மேலயும் கேஸ் போட்டு சொத்துல எங்க அம்மாவுக்குச் சேர வேண்டிய பங்கை நீதான் வாங்கிக் கொடுக்கணும்" என அவள் தீவிரமாகச் சொல்ல, "ஓகே யுவர் ஹானர்! ஆனா அதுக்கு ஃபீசா, டாக்டர் ஆன உடனே இந்த லச்சுப் பொண்ணு வாயை நீ தைக்கணும் சரியா' எனக் கல்யாணி விளையாட்டாகப் பதில் கொடுக்க, "இதை கூட செய்யமாட்டேனா... டன்" என மேகலாவும், "மவளே கொன்றுவேன்' என லச்சுவும் ஒரே நேரத்தில் சொல்லிக்கொண்டிருக்க மேகலாவுக்கான அழைப்பு வந்தது.
அவள் போர்டிங் செய்யவேண்டிய நேரம் வரவும், பெரியவர்கள் இருக்கும் இடம் நோக்கி ஓடி வந்தனர் பிள்ளைகள். தோளில் மாட்டிய பையுடன், கண்களில் நீர் கோர்க்க எல்லோரையும் அணைத்து விடைப் பெற்று முன்னேறிச் சென்றாள் மேகலா.
எல்லோர் கண்களிலும் கண்ணீர் படலம்.
சில அடிகள் எடுத்துவைத்தவள் ஒரு நொடி நின்று திரும்பிப் பார்க்க, அவளுடைய அம்மாவைச் சுற்றி ஒரு அன்பான கூட்டம் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, உரிமையாக அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தபடி அவளது கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தான் முகிலன். அவள் பார்ப்பதை உணர்ந்து அனைவரும் கை அசைக்க, அந்தக் கவிதையானக் காட்சியில் மனம் நிறைந்து போக அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மேலும் முன்னேறிச்சென்றுக் கொண்டிருந்தாள் மேகலா.
அனைவரின் விழிகளும் அவளையே தொடர்ந்தன.
சில நிமிடங்களில் அவள் பயணம் செய்யும் விமானம் மெல்ல மெல்ல மேலே எழும்பி பின் உயர உயரப் பறக்கத்தொடங்கியது.
*********
எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும். நீ அந்தக் கழுகாக இரு!
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் மிக அற்புதமான விறுவிறுப்பான கதையை படித்தேன். கட்டுப்பாடு நிறைந்த கிராமத்தில் பிறந்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடைந்த பெண்களின் கதை சூர்யா இன்னும் கொஞ்சம் போல்ட் ஆக இருந்திருக்கலாம் ஒரு வேளை நிறைய பெண்களுடன் வளர்ந்ததால் உண்டான சாஃப்டோ என்னவோ.குயிலி அப்பா சான்ஸே இல்லை. ஒவ்வொரு பெண்களுக்கும் இப்படி ஒரு அப்பா இருந்தால் எல்லோரும் சாதனையாளர்களாக இருப்பார்கள்.மொத்தத்தில் ஒரு நிறைவான கதை படித்த திருப்தி.
Very nice story...good feel story
Wow excellent
Awesome story sis