Valasai Pogum Paravaikalaai - 9
- Krishnapriya Narayan
- Aug 30, 2022
- 4 min read
9
அந்தரங்கம்

நேராகக் கடற்கரையை ஒட்டி இருக்கும் ஒரு நட்சத்திர விடுதிக்கு குயலியை அழைத்து வந்திருந்தான்.
வாலட் பார்க்கிங் என்பதால் வாகனத்தை அங்கிருந்த ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டு இருவருமாக உள்ளே நுழைய, அந்த விடுதியின் உள்ளலங்காரமும் நேர்த்தியும் அவனைக்கூட மறக்க வைத்துவிட்டது.
அங்குலம் அங்குலமாக ஒவ்வொன்றையும் பார்த்தபடி அவள் நின்றுவிட, ‘குக்கூ’ எனக் குயில் கூவுவதைப்போல மெல்லியதாகச் சீழ்க்கை அடித்து அவளை மீட்டவன், “இங்க சி வியூ டைனிங் நல்லா இருக்கும். அங்கப் போகலாமா?” என்றான் சன்னமான குரலில், சரி என்பதாக அவள் தலையசைக்க ‘நீ முன்னால் போ’ என்பது போல் கைக் காண்பித்தவன் அவளுடன் இணைத்து நடந்தான்.
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பை இரசித்தபடி உணவை ருசிக்க ஏதுவாக வட்ட வடிவிலான மூங்கில் குடில்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்க, அதிக கூட்டமில்லாமல் ஏகாந்தமாக இருந்தது அந்த உணவகம்.
இருவருமாக வந்து எதிரெதிராக அமர, மெனு கார்டை கொண்டு வந்து கொடுத்த பணியாளரிடம் இருவருக்குமாகப் பழரசம் ஆர்டர் செய்து எடுத்துவரச் சொன்னான்.
கருமமே கண்ணாக மெனு கார்டில் உள்ள ஒவ்வொரு ஐட்டதையும் அலசி ஆராய்ந்துகொண்டிருந்த குயிலி சில நிமிடங்கள் கடந்ததும் விசித்திரமாக ஏதோ ஒரு உணர்வு தாக்க அனிச்சைச் செயலாக நிமிர்ந்து அவளுக்கு முன்னால் அமர்ந்திருப்பவனைப் பார்த்தாள்.
கண்கள் முழுவதும் அவளுக்கான மயக்கம் நிரம்பி வழிய விழி அகலாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் பட்டெனத் தன்னை மீட்டுக்கொண்டு, “நீ ரொம்ப அழகா இருக்க” என்றான் ரசனையுடன்.
“நானா!?” என அவள் வியப்பு மேலிடக் கேட்க, “நீயேதான், அதுல உனக்கென்ன இவ்வளவு டவுட்” என்றான் சிறு புன்னகையுடன்.
“இல்ல, எங்க மீன்னாக்கா பொண்ணு மஞ்சு இருக்கா இல்ல, அவளை கம்பேர் பண்ணும்போது நான் ரோம்ப சுமார்தான்” என அவள் சொன்ன விதமே அவளுடைய தாழ்வு மனப்பான்மையின் அளவைக் கச்சிதமாகச் சொன்னது.
அதற்குள் ஒருவர் பழரசத்தைக் கொண்டு வந்து வைக்க, அதைக் கையிலெடுத்துக் கொண்டு கடற்கரை நோக்கி நடந்தவாறே, “யாரை சொல்ற, உன்னோட மாமா பேத்தியையா?” எனக் கேட்டான் லேசான எரிச்சலுடன். ஏனென்றால் அன்று இவளைப் பெண் பார்க்கச் சென்ற தினம் அங்கே வந்திருந்த அத்தனைப் பேரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப அவள் செய்த ஆர்ப்பாட்டங்கள் அப்படி.
அவள் தலை அசைக்கவும், “நான்சன்ஸ், இப்படிதான் உன்னை மத்தவங்களோட கம்பேர் பண்ணி லோவா ஃபீல் பண்ணுவியா? முதல்ல இந்த மைன்ட்செட்ட விடு. இந்த உலகத்துலேயே நம்ம மட்டும்தான் நமக்கு பெஸ்டானவங்களா இருக்கணும்” என்றான் ஒரு கட்டளை போல.
இதே வார்த்தைகளைதான் வேறு வேறு மாதிரியெல்லாம் அவளுடைய அப்பா பலமுறை சொல்லியிருக்கிறார். இவன் சொல்லும்போது அது ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இவ்வளவு வெளிப்படையாக நடந்து கொள்கிறோமே என்கிற அசூயைக் கூட காரணமாக இருக்கலாம். அவன் சொன்ன விதமோ இப்படிப்பட்ட சூழ்நிலையோ ஏதோ ஒன்று, இந்த வார்த்தைகள் அவள் மனதிற்குள் போய் எவ்வளவு ஆழமாகப் பதிந்தது என்பதை இந்த நொடி அவள் உணரவில்லை.
“அவளையெல்லாம் கணக்குலயே சேர்க்காத. உண்மையிலயே நீ ரொம்ப அழகு” என உணர்த்து சொன்னவன், “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா குயிலி, இப்போதைக்கு கல்யாணம் செஞ்சுக்கற மனநிலைல நான் இல்லவே இல்ல. உன்னைத்தவிர வேற யாரையாவது கொண்டு வந்து நிறுத்தியிருந்தா கொஞ்சம் கூட யோசிக்காம வேண்டாம்னு சொல்லியிருப்பேன். ஆனா உன்னை நேர்ல பார்த்ததும் என்னால நோ சொல்ல முடியல” என்றான் மனதை மறைக்காமல்.
முதன் முறையாக அவள் தன்னை உயர்வாக உணர்ந்த தருணம் அது. ஆர்வத்துடன் நிமிர்ந்து அவனுடைய முகத்தைப் பார்த்தாள். ‘ஏன் கல்யாணம் வேண்டாம் என்றிருந்தான்?!’ என அறியும் ஆர்வம் மேலோங்கினாலும் சட்டென ‘ஏன்?!’ என்று கேட்க ஒரு தடுமாற்றம் உண்டானது. ஆனாலும் அது அவளுடைய பார்வையில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
“எஸ் குயிலி, இந்த விஷயத்தை உன் கிட்ட சொல்லி உனக்கு புரிய வெச்சு அதுக்கு பிறகும் நீ முழு மனசோட சம்மதிச்சா நாம ப்ரொசீட் பண்ணலாம். இல்லன்னா இப்படியே டிராப் பண்ணிடலாம்” என்றான் தெளிவாக.
அவனுடைய முக மாறுதலும் கலக்கமும், நிச்சயம் அது காதல் தோல்விதான் என்ற புரிதலுக்கு அவளைக் கொண்டு வந்துவிட்டது. அதே மனநிலையுடன் அவன் சொல்ல வருவதை உள்வாங்கிக் கொண்டாள். அதனால்தானோ என்னவோ சுற்றி வளைக்காமல் நேரடியாக அவன் சொன்ன எதையும் நேரான அர்த்தத்துடன் அவளால் புரிந்துகொள்ள முடியாமல் போனது.
“பாஸ்ட் டூ இயர்ஸா எனக்கு கனடாலதான் ப்ராஜக்ட். அதுதான் உனக்கு தெரிஞ்சிருக்குமே” என அவன் கேட்க, தலையசைத்தாள்.
“அங்க ஒரு பார்ட்டில பழக்கமானவதான் மமதி. நல்ல பிரில்லியண்டானப் பொண்ணு. வேற ஒரு கம்பனில என்னோட சேம் டெஸிக்நேஷன்ல வேலைல இருக்கா. ரெண்டு பேரும் சேம் ஏஜ் க்ரூப். அவளும் தமிழ்ன்றதால ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் பில்ட் ஆச்சு. அந்த ஊரோட சூழ்நிலை அண்ட் தனிமை, ஒரு நாள் அது... வந்து” என எப்படிச் சொல்வது என்று தடுமாறியவன் “தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலைல அது ‘லவ் மேக்கிங்’ல கொண்டுபோய் விட்டுடுச்சு”என்று சொல்லி மேற்கொண்டு பேச இயலாமல் அவன் குற்ற உணர்ச்சியில் தலை குனிய, பாலியல் உறவு என்று நேரடியாகச் சொல்லாமல் ‘லவ் மேக்கிங்’ என இந்தச் சூழ்நிலையில் அவன் பயன்படுத்திய இடக்கரடக்கலெல்லாம், அவளுடைய அப்பாவின் கொள்கைக்கு உட்பட்டு பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியில் படித்த அந்தப் பெண்ணுக்கு சத்தியமாகப் புரியவில்லை. அவன் காதல் தோல்வியில் துவண்டுப் போயிருக்கிறான் என்று நினைத்து அவனுக்காக வருந்தத் தொடங்கிவிட்டாள்.
“அப்பறம் என்ன ஆச்சு? ஏன் பிரிஞ்சீங்க? அவங்கள கல்யாணம் பண்ணிக்க உங்க பாட்டி சம்மதிக்கலியா, இல்ல அவங்க வீட்டுல ஒத்துக்கலயா” என அவள் அப்பாவியாய் கேட்க, ‘என்ன கொஞ்சம் கூட ஷாக் ஆகாம இப்படி கேட்கறா’ என்று எண்ணியவன், “நான் சொன்ன விஷயம் உனக்கு புரிஞ்சதா?!” என ஒரு மாதிரியாகக் கேட்டான்.
“இது கூட புரியாம இருக்குமா? இந்தக் காலத்துல இதெல்லம் சகஜம்தானே! தைரியமா இவ்வளவு தூரம் வந்த பிறகு, கல்யாணம் பண்ணிக்காம இருப்பாங்களா? அதான் அப்படிக் கேட்டேன்” என அவள் தெளிவாக விளக்கம் கொடுக்க, உண்மையில் அவனுக்கு நிம்மதியாகதான் இருந்தது.
“ப்ச்... நீ வேற.. அவளே இப்படி ஒரு கல்யாணத்துக்கு ஒத்துக்கல. ஏன்னா அவ அதை ஒரு சீரியஸ் மேட்டராவே எடுத்துக்கல. அவங்க வீட்டுல பார்த்த ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா” என்றான் ஒரு ஆசுவாசப் பெருமூச்சுடன்.
“ஐ ஃபீல் ஸோ மச் கில்டி. இதே மைன்ட் செட்டோட என்னால ஒரு பெண்ணை, ப்ச்... நினைச்சுக்கூட பார்க்க முடியல. இந்த மனநிலைல இருந்து க்ளீனா வெளியில வந்தப் பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்த்தா... இப்பவே முப்பதாச்சுன்னு பாட்டி வேற நச்சரிக்கறாங்க.
நீ குட்டிப் பொண்ணா இருக்கும்போது சில சமயம் உன்னைப் பார்த்திருக்கேன். தென் ஒரு செவென் டு எயிட் இயர்ஸ் நோ காண்டாக்ட். டூ இயர்ஸா நான் இங்க இல்லாததால, எங்க வீட்டு பங்க்ஷன் ஃபோடோஸ்லாம் என் சிஸ்டர்ஸ் எனக்கு சுடச்சுட சென்ட் பண்ணுவாங்க. அதுல உன் ஃபோட்டோஸும் இருக்கும். அதுல உன்னைப் பார்க்கும்போதெல்லாம் மனசுக்குள்ள ஒரு பட்டாம்பூச்சி டப் டப் டப் டப்னு பறக்கும். யாருன்னு கேட்டப்ப நம்ம வசந்தன் மாமா பொண்ணுன்னு சொன்னாங்க. ஜஸ்ட் ஐ வாஸ் அமேஸ்ட். உன்னை நேர்ல பார்க்கற நாளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குள்ள ஒரு டாக்சிக் மொமென்ட்ல புத்திப் பேதலிச்சுப் போய் இந்த கருமமெல்லாம் நடந்து போச்சு.
நான் இப்ப இங்க வந்தது கூட ஏதோ ஒரு வகையில அதுல இருந்து மீண்டு வரதுக்காகதான். இங்க என்னடான்னா உன்னைக் கொண்டு வந்து நிறுத்தி கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேட்கறாங்க. என்னால எப்படி ‘நோ’ சொல்ல முடியும் சொல்லு? அதே சமயம் எதையும் மூடி மறைச்சு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவும் மனசு இடம் கொடுக்கல. அதுதான் எல்லாத்தையும் உள்ளது உள்ளபடி சொல்லிட்டேன். இப்ப முடிவு உன் கைலதான் இருக்கு” என்றான் அவன்.
“எனக்கு ஒரே ஒரு டௌட்தான், எப்படி உங்களால இப்படி சட்டுன்னு மனச மாத்திக்க முடிஞ்சுது” என அவள் தன் மனதைக் குடைந்த விஷயத்தை நேரடியாகவே கேட்டாள்.
“அது என்ன, மனசும் மனசும் இணைஞ்ச உண்மையான காதலா என்ன? நான் கிடந்தது உருக? இட் வாஸ் ஆன் அக்சிடென்ட்! உண்மையிலேயே இப்ப தப்பிச்சு வந்த ஒரு ஃபீலிங்தான் எனக்கு” என்றான் எரிச்சலுடன்.
பேசிக்கொண்டே நீண்ட தூரம் நடந்திருந்தனர். கையிலிருந்த பழரசமும் தீர்ந்திருந்தது. நடந்தது போதும் என அங்கே ஒரு மரத்தடியில் போடப்பட்டிருந்த லவுஞ்சில் போய் இருவரும் அமர்ந்தனர்.
“உடனே பதில் சொல்லணும்னு எந்த அவசரமும் இல்ல. நீ வீட்டுக்குப் போய் நல்லா யோசிச்சு சொல்லு போதும். உன்னால முழு மனசா என்னை அக்சப்ட் பண்ணிக்க முடியும்னா நாம ப்ரொசீட் பண்ணுவோம். இல்லனா நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு மனசைத் தேத்திட்டு மறுபடியும் கனடா போய் சேரறேன்” எனத் தீவிரமாகத் தொடங்கிக் கிண்டல் இழையோட முடித்தான்.
‘காதல்னு சொல்லிப் பழகிட்டு எப்படி இந்த மாதிரி ஒருத்தன கழட்டி விட முடியுது அவளால?’ என முகமறியா அந்தப் பெண்ணின் மேல் ஏனோ எரிச்சல் உண்டானது. நேர்மையான அவனது அணுகுமுறையால் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத அளவுக்கு அவனை அவ்வளவு பிடித்தது. ஆனாலும் உடனே சரி சொல்லவும் ஏதோ ஒன்று தடுக்கப் பேச்சற்று அமர்ந்திருந்தாள்.
அந்த சமயம் பார்த்து கடற்கரை ஓரமாகக் கைகோர்த்து நடந்து வந்த வெளிநாட்டு இணையர்கள் அவர்களது பார்வையில் விழுந்தனர். கடலில் நீந்தியிருப்பார்கள் போலும் அவர்கள் அணிந்திருந்த உடை ஈரம் சொட்டச் சொட்ட இருக்க, அவர்களுக்குச் சுற்றுப்புறத்தைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லை. இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கம். சட்டென நின்றவர்கள், நிதானமாக ஒரு இதழ் முத்தத்தை வேறு பரிமாறியபடி வெகு இயல்பாக மீண்டும் தங்கள் நடையைத் தொடர்ந்தனர்.
சில நொடிகளுக்குள் நடந்து முடிந்த இந்தக் கூத்தில் முகம் சூடாகிச் சிவந்துபோய் அவள் தலை கவிழ, மூண்ட சிரிப்பை அடக்கி, “இதெல்லாம் அவங்க கல்ச்சர்ல ரொம்ப ரொம்ப சகஜம், நம்ம ஊரே இப்ப மாறிட்டு இருக்கு, இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி?!” என்றான் வெகு இயல்பாக.
அவளுக்குதான் உதறல் எடுத்தது.
இவள்தான் இப்படி இருக்கிறாள் என்றால் தன்னைப் பொறுத்தவரைக்கும் நியாயவானாக நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாக இருக்கும் இந்த சூர்யாவாவது இப்படி இருப்பவள் அவன் சொன்னதை இவ்வளவு இயல்பாக எப்படி உள்வாங்கிக் கொண்டாள் எனக் கொஞ்சம் யோசித்திருக்கலாம்! நிதர்சனம் கண்களை மறைக்கும் அளவுக்கு மயக்கம்தான் இருவருக்குமே! வேறென்ன?
*********
Comentarios