காலிக் கூடு
- Krishnapriya Narayan
- Sep 25, 2024
- 4 min read
Updated: Dec 5, 2024
குழந்தைகள் வளர்ந்து, கல்வி அல்லது வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சில பெற்றோருக்கு ஏற்படும் தனிமை உணர்வும் மனத்தளர்ச்சியும் காலிக்கூடு சிண்ட்ரோம் எனப்படும். இது, வீட்டிலிருந்து முழு நேரமாக பிள்ளைகளை வளர்க்கும் அம்மாக்களையும், ஒற்றை பெற்றோராக இருக்கும் தந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது. |
காலிக் கூடு
"வேலையெல்லாம் முடிச்சிட்டேன், போயிட்டு வரேம்மா" என வேலை செய்யும் பெண் செல்வி கிளம்பிச் சென்றதும், போய் வாயிற்கதவைத் தாளிட்டு வந்தாள் வசந்தா.

சுந்தர் ரிட்டையர் ஆக இன்னும் சில ஆண்டுகள் இருந்தன. அவர் வேலைக்குச் செல்வதற்குள் காலை உணவு மதிய உணவு எல்லாமே செய்து முடித்தாகிவிட்டது.
செல்வி வீடு துடைத்துத் துணியை உலர்த்திவிட்டு வருவதற்குள் சமையலறையைச் சுத்தம் செய்து முடித்தாகிவிட்டது.
இனிமேல் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.
மகன் பணி நிமித்தம் வெளிநாடு சென்ற பிறகு, வேலைகள் மிகவும் குறைந்து போய்விட்டன.
வீடு துடைக்கக்கூட ஆள் தேவையில்லைதான். எலும்பு தேய்மானத்தால் கழுத்தில் வலி வர, இதையெல்லாம் செய்ய வேண்டாம் என அப்பாவும் பிள்ளையுமாகச் சேர்ந்து ஆள் ஏற்படு செய்துவிட்டனர்.
சில நாட்களாக வயிறு மந்தித்து அதிகம் பசி கூட எடுப்பதில்லை. அதைச் சொன்னால், உடனே 'வா' என மருத்துவரிடம் அழைத்துப்போய் விடுவார் சுந்தரம். அதனாலேயே அவருக்கு இதைத் தெரியப்படுத்தவில்லை.
பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ சாப்பிட்டு வைக்க வேண்டும். இரண்டு இட்டலிகளைத் தட்டில் போட்டு, சட்டினி ஊற்றி எடுத்துவந்து உணவுமேசையின் இணைவிருக்கையில் அமர்ந்தாள்.
ஒன்றரை இட்டலியைச் சாப்பிட்டு முடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.
உணவை வீணாக்க மனமில்லாமல் மெதுவாக மென்று விழுங்கினாள்.
வீட்டில் பிள்ளைகள் இருந்தவரை அவர்களுடைய பிடித்தத்துக்கு, மூன்று வேளையும் பார்த்துப் பார்த்துச் செய்வாள். இப்பொழுது வெறும் இரண்டு பேருக்குச் சமையல் செய்வதென்பது அவ்வளவு சலிப்பானக் காரியமாக இருக்கிறது.
பார்வை அனிச்சையாக ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த பல்லாங்குழியின் மீது விழுந்தது. மீன் வடிவப் பல்லாங்குழி.
அதை எடுத்து விளையாட ஆசை வந்தது. கூட விளையாட பூர்ணிமா இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மீண்டும் ஒருமுறைத் தோன்றியது.
சிறுவயதாக இருந்தபோது பூர்ணிமா அவளது பக்கத்து வீட்டில் குடியிருந்தாள். இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தனர்.
அவளுக்குத்தான் மீன் போன்ற வடிவத்தில் பல்லாங்குழி வாங்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது! அந்தக் காலகட்டத்தில் அது நிறைவேறாமலேயே போனது!
அவளைப் பற்றி நினைத்த அதே நேரம் அழைப்பு மணி ஒலிக்க, எழுந்துபோய் கதவைத் திறந்தாள்.
பூர்ணிமா வாயிலில் நின்றிருந்தாள்.
வசந்தாவுக்கு வியப்பாகிப் போனது.
"ஏய்... இப்பதான்டீ உன்ன நினைச்சேன்! உடனே நேர்ல வந்து நிக்கற! நூறாயிசுடி உனக்கு." எனக் கூவினாள்.
தலையைச் சாய்த்து இவளைக் கிண்டலான ஒரு பார்வை பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் பூர்ணிமா.
மீண்டும் கதவை அடைத்துவிட்டு அவளுடன் தோளுரச நடந்தபடி, "இட்டிலி இருக்கு சப்பட்றியா?" எனக் கேட்டாள்.
"வேண்டாம்" என அவள் தலையசைக்கவும், மீதம் இருந்த இட்டலியை அப்படியே வாயில் திணித்துக்கொண்டு, தட்டைக் கழுவி வைத்துவிட்டு வந்தவள் அவளது கரம் பிடித்து இழுத்து வந்து ஷோகேசைக் காண்பித்தாள்.
‘ஐ... மீன் மாதிரி பல்லாங்குழி’ என்று சொல்லாமல் சொன்னது பூர்ணிமாவின் பாவனை.
"ஹேய் பூர்ணிமா, பார்க்கும் போதே ஆசையா இருக்கில்ல, நாம ஒரு ஆட்டம் ஆடலாமா?"
‘ம்ம்... ம்ம்...’ என நன்றாகத் தலை அசைத்துத் தன் விருப்பத்தைத் தெரியப்படுத்தினாள் பூர்ணிமா.
ஷோகேசின் கண்ணடிக் கதவைத் திறந்து, மீன் வடிவிலிருந்த அந்தப் பல்லாங்குழியையும், சோழிகளையும் எடுத்துக் கீழே வைத்துவிட்டு, “வாடி!” என வசந்தா அவளை அழைக்க, அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தாள்.
“பூர்ணி, இந்தப் பல்லாங்குழிய ஆன்லைன்ல ஆர்டர் போட்டு வாங்கினேன். ‘மனசுல அப்படியே சின்னக் குழந்தைன்னு நினைப்பா’ன்னு அவர் கூட கிண்டல் பண்ணார் தெரியுமா?”
புன்னகைத்தாள் பூர்ணிமா.
“இது வந்து பத்து நாளாச்சு. அன்னைல இருந்து உன்னதான் நினைச்சிட்டே இருந்தேன்” என்று சொல்லிக்கொண்டே பன்னிரண்டு சோழிகளை எண்ணி முதல் குழிக்குள் போட்டாள்.
“உன்ன நினைச்சாலே மனசே பாரமா போயிடும்டீ! நல்ல வேள, உனக்குச் செஞ்ச மாதிரி படிப்ப பாதிலயே நிறுத்திக் கட்டிக் குடுக்காம, நல்லபடியா படிக்க வச்சாங்களேன்னு சந்தோஷப் படுவேன்”
நிமிர்ந்து அவளது முகத்தைக் கூடப் பார்க்காமல், மும்முரமாகச் சோழிகளை எண்ணி எண்ணிக் குழிகளில் நிரப்பியபடியே பேசிக்கொண்டிருந்தாள் வசந்தா.
“ஆனா என்ன பிரயோஜனம் சொல்லு, பீ.காம் படிச்சு மட்டும் என்னத்த கிழிச்சேன்? படிப்பை முடிச்சதும் முடிக்காததுமா, சல்லடப் போட்டுச் சலிச்சு மாப்பிளையத் தேடி, கட்டி வெச்சாங்க. அவர் பேரு சுந்தர்!”
”பெரிய படிப்பு! பெரிய வேல! கை நிறைய சம்பளம்! அம்மா அப்பா ரெண்டு பிள்ளைங்கன்னு சின்ன குடும்பம்! இவர்தான் சின்ன பிள்ள! கல்யாணம் ஆன உடனே தனிக்குடித்தனம்! எந்த ஒரு பிக்கல் பிடுங்கலும் இல்ல!”
”பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே, நீ வேலைக்கெல்லாம் போக வேண்டாம்! உன்ன நல்லா பார்த்துப்பேன்ன்னு சொல்லிட்டார்!”
”அப்பதான் நீ என்ன விட்டுட்டுப் போயிட்டியே, அதனால உனக்கு இதெல்லாம் தெரியாது!” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து தோழியைப் பாத்தாள்.
தீவிர பாவத்தில் இவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் பூர்ணிமா!
“தெரியுமா, பூர்ணி!? உண்மையாவே என்னை நல்லபடியா பார்த்துட்டார், ஒரு குழந்தை மாதிரி. நீ அனுவிச்ச மாதிரி, வரதட்சணக் கொடும, அடி, உதை, குடும்ப வன்முறைன்னு எந்த ஒரு கஷ்டத்தையும் என் வாழ்கைல நான் பார்க்கல தெரியுமா?”
”முதல்ல பொண்ணு பிறந்தா, அப்பறம் மூணு வருஷம் கழிச்சு பையன்! அவங்க ரெண்டு பேரையும் வளர்த்து ஆளாக்கறதுகுள்ள காலம் ஓடியே போயிடுச்சு”!
”பிள்ளைங்களும் நல்லா படிச்சாங்க! பொண்ண பீ.ஈ படிக்க வெச்சோம்! பிளேஸ்மென்ட் ஆச்சு! கூட வேல செய்யற பையன லவ் பண்றேன்...னு வந்து நின்னா! பொருத்தமா இருக்கவும், ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் பண்ணி வெச்சோம்! இப்ப கனடால இருக்கா! பிள்ளை உண்டானா, பிரசவம் பார்க்க அங்க போக வேண்டி வரும்!”
”பையனும் சாஃப்ட்வேர் என்ஜினியர்தான். படிப்பை முடிச்சிட்டு இப்ப அமெரிக்கால வேலைல இருக்கான்!”
”இதுக்கு நடுவுல, அம்மா, அப்பா, மாமனார் மாமியார்னு எல்லாரையும் பார்க்க வேண்டிய பொறுப்பும் இருந்ததால, ஏதோ ஒரு விதத்துல வாழ்கை பரபரப்பா இருந்துது.”
”அவங்க எல்லாரும் கூட இருந்த வரைக்கும், நான் பெருசா எதையும் யோசிக்கல!”
”ஆனா இப்ப, ஏதோ தப்பு செஞ்சிட்டோமோன்னு ஒரு மாதிரி என்னை நினைச்சு எனக்கே எரிச்சலா இருக்குடீ” எனத் தோழியை ஏறிட்டாள்.
அவள் வெற்றுப் பார்வை பார்த்துகொண்டிருக்க, “ஏன்டீ, மாஞ்சு மாஞ்சு நான் கதை சொல்லிட்டு இருக்கேன், ஏன்டீன்னு பாவீன்னு ஒரு வார்த்த கேட்க மாட்டியா?” என ஆதங்கப்பட்டாள் வசந்தா!
“சொல்லுடீ, ஏன்?”
“ஐயோ! அதிசயமா வாயத் திறந்து முத்த உதிர்த்துட்ட” எனக் கேலிப் பேசித் தொடர்ந்தாள்.
“அதில்லடீ, நம்ம குடும்ப உறவுகளைத் தாண்டி, மனசு விட்டுப் பேச நெருக்கமான ஒரு நட்பு வேணும், உன்னை மாதிரி! ஸ்கூல்ல காலேஜ்ல, கூட படிச்சவங்க யாரும் உன் அளவுக்கு கிளோசா இல்ல! எல்லாருக்கும் அவங்கவங்க சூழ்நில, வேற ஒண்ணும் இல்ல!
அதோட கூட நம்மக்கே நமக்குன்னு உருப்படியா ஏதாவது ஒரு விஷயத்த விடாம செஞ்சிட்டே இருந்திருக்கணும்னு, இப்பதான் தோணுது!
நம்ம ஸ்கூல் டேஸ்ல நான் நம்ம ஸ்கூல் வாலிபால் டீம்ல இருந்தேன் இல்ல!” என்று சொல்லிவிட்டு ஷோகேசைச் சுட்டிக்காண்பித்தாள்.
அப்பொழுது இவள் ஜெயித்து வாங்கிய கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் எல்லாம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
உனக்கு நியாபகம் இருக்கா பூர்ணி, ஒவ்வொரு தடவ விளையாடி முடிச்சதும் நம்ம பீடி மிஸ் என் கைய தடவிக் குடுத்துட்டே, ‘பாரு எப்படி செவந்து போயிடுச்சு! வீட்டுக்குப் போய் தேங்காஎண்ணை தடவு’ன்னு சொல்லுவாங்க. அவ்வளவு பெருமையா இருக்கும்!
தொடர்ந்து காலேஜ் டீம்ல கூட விளையாடிட்டு இருந்தேன்! அதுக்கப்பறம், எனக்கு அந்த விளையாட்டே மறந்து போச்சு! நான் விளயாடினேன்..னே எனக்கு மறந்து போச்சு!
இப்ப... வயசாயிடுச்சு! திடீர்னு போய் வாலி பால் விளையாட முடியுமா சொல்லு? என் கூட டீம்ல இருந்தாளே மீனா, அவ ஸ்டேட் டீம்ல விளையாடினா தெரியுமா? அத வெச்சு அவளுக்கு சென்ட்ரல் கவர்மென்ட்ல வேல கூட கிடைச்சுது! இப்ப பசங்களுக்கு கோச்சிங் குடுத்துட்டு இருக்கா!
இதே என்னைப் பாரு! நான் இப்ப, பல்லாங்குழி விளையாட... கூட ஒரு ஆளைத் தேடிட்டு இருக்கேன்” என்றபடி தோழியை நிமிர்ந்து பார்த்தாள்.
மேலே பேசவே தோன்றவில்லை. அவளது விழிகள் அசைவற்று பூர்ணிமாவையே பார்த்திருந்தன.
“எவ்வளவு அழகா இருக்கடி நீ! எப்படிடீ நீ மட்டும் இந்த மாதிரி இளமையோட இருக்க? ஒரு முடி கூட நரைக்கல!
எனக்கும் இப்படி நம்ம ஸ்கூல் யூனிபார்ம் பாவாட தாவணி போட்டு, ரெட்ட ஜடை போட ஆசையா இருக்கு. அப்படி மட்டும் செஞ்சேன்னா, என்ன பார்த்து எல்லாரும் சிரிக்க மாட்டாங்க?
பாரு என் தலமுடில பாதி வெள்ளை ஆயிடுச்சு! என்னதான் ஹேர் கலரிங் பண்ணாலும், ஒரே வாரத்துல பல்லை இளிக்குது! உனக்கு இந்தக் கவலையெல்லாம் இல்லல்ல?” என்று சொல்லிக்கொண்டிருந்தவள் அதிர்ந்து பேச்சை நிறுத்தினாள்.
அவளிடம் ஒரு ஆழ்ந்த திகைப்பு!
“உனக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லன்னு தோணுது பூர்ணி! உன் வாழ்க்க உன்னோட பதினெட்டாவது வயசோட முடிஞ்சு போச்சு! என் வாழ்க்க, என்னோட இருபத்தியோரவது வயசுலேயே நின்னுபோச்சு! அதுக்கப்பறம் நான் யாரா வாழ்ந்திருக்கேன்?” என்று கேள்வி கேட்டபடி கடைசிக் குழியை நிரப்பினாள்.
“ஐயோடா, பாரு உன்கூட பேசிட்டே ஏதோ குழியில நாலு சோழி அதிகமா போட்டுட்டேன். கடைசி குழிக்குக் குறையுது. இப்ப முதல்ல இருந்து மறுபடியும் எண்ணிப் போடணும்” என்று சொல்லிக்கொண்டே பல்லாங்குழியைத் தலைகீழாகக் கவிழ்த்தாள் வசந்தா!
மீண்டும் சோழிகளை எண்ணி ஒவ்வொரு குழியாக நிரப்பத் தொடங்கினாள்.
அழைப்பு மணியின் ஓசைக் கேட்டது.
பூர்ணிமா இவளைக் கலவரத்துடன் நோக்கினாள்.
“கவல படாத, பூர்ணி! கூரியர் பாயா இருக்கும். இந்த நேரத்துல வேற யாரும் வரமாட்டங்க!” என்று சொல்லிவிட்டு எழுந்து போய் கதவைத் திறந்தாள்.
அங்கே சுந்தரத்தைக் காணவும், அவளுக்குப் பதற்றம் உண்டானது.
“என்னங்க ஆச்சு? உடம்புக்கு முடியலியா?” என வினவினாள்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல! முக்கியமான வேலை எதுவும் இல்ல! அதான் லீவு சொல்லிட்டு வந்துட்டேன். அது இருக்கட்டும், பேச்சுக் குரல் கேட்டுது! பிள்ளைங்க கூட இந்த நேரத்துல கால் பண்ண மாட்டங்களே! யார் கூட பேசிட்டு இருந்த?” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டபடி உள்ளே நுழைந்தார் சுந்தரம்.
பதிலின்றி அவரைப் பின்தொடர்ந்து வந்தாள் வசந்தா!
உடை மாற்ற அவர் படுக்கையறைக்குள் நுழைந்து கொள்ள, கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டு அவர்கள் வீட்டு வரவேற்பறையை நோட்டமிட்டாள். அது வழக்கம் போல ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது.
அவளது உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.
***
Comments